Skip to Content

03.எங்கள் குடும்பம்

எங்கள் குடும்பம் II

 (சென்ற இதழின் தொடர்ச்சி.....)

சமர்ப்பணம் 7 வகையான அஞ்ஞானங்களைக் கடக்கவல்லது:

  • ஒரு முறையும், ஒரு செயலும் சமர்ப்பணமாகாதது ஏனெனில், சமர்ப்பணம் முழுமையுள்ளது.
  • முழுமை என்பது பிரம்மத்தின் முழுமை.
  • ஒரு செயலில் சமர்ப்பணம் பலிப்பது அதில் பிரம்மம் வெளிப்படுவது.
  • சமர்ப்பணம் பலிக்காத நேரத்திலும், காரியம் கூடிவருவது இக்காரணத்தால்தான்.
  • என்ன செய்வது எனத் தெரியாதது practical ignorance நடைமுறை அஞ்ஞானம்.
  • அந்த நேரம் சமர்ப்பணம் செய்தால், நிலைமை மாறி நாம் செய்ய முடியாதது தானே நடக்கும்.
  • பெரியவனை அடியாட்கள் தேடியபொழுது கணவருக்கு என்ன செய்வது எனத் தெரியாது திகைத்தபொழுது அடியாள் தலைவனே வந்து மன்னிப்புக் கேட்டான்.
  • இரண்டாம் அறியாமை constitutional ignorance உணர்வை அறிவு ஏற்கமுடியாதது.
  • ஜாதிபுத்தியைப் பற்றிப் பெரியவன் ஆத்திரப்பட்டபொழுது, அவனோ, கணவரோ அறிவோடு நடக்க முடியவில்லை. சமர்ப்பணம் - அரைகுறையான சமர்ப்பணம் - நிலைமையை மாற்றியது.
  • Psychological ignorance சூட்சுமலோகங்களின் அறியாமை என்பது அடுத்தது.
  • நம் செயலைக் கடந்து நம் கண்ணுக்குத் தெரியாத லோகங்களின் செயல் - எதிர்ப்பை - இது குறிக்கும்.
  • பெரியவன் பேசாதது அவன் பேசியதாகப் போய் பிரச்சினை எழுந்தது அதுபோன்றது.
  • நம் சொல்லுக்கும், செயலுக்கும் பின்னால் மனமிருப்பதைப்போல் உலக நிகழ்ச்சிகளின் பின்னால் சூட்சுமலோகங்களுண்டு. ஆகர்ஷண சக்தி நம் கண்ணுக்குத் தெரியாமல் செயல்படுவது போன்றது.
  • சமர்ப்பணம் அதையும் கட்டுப்படுத்துவதைக் காண்கிறோம்.
  • காலத்தின் அறியாமை அடுத்தது. காலத்தைச் சுருக்கவல்லது அது.
  • கம்பெனியில் 6 மாத வேலை 3 மாதங்களாகச் சுருங்கியது சமர்ப்பணம் காலத்தில் செயல்படுவது.
  • அகந்தையின் அறியாமை 5ஆம் அறியாமை.
  • கோயம்புத்தூருக்குக் காரில் போவது அகந்தையை வலியுறுத்துவது.
  • நண்பனுடைய போன்கால் அதை மாற்றியது.
  • பிரபஞ்ச அறியாமை அடுத்த அறியாமை.
  • இது நமக்கில்லாத வாய்ப்பைக் கடவுளின் அனுக்கிரகமாகத் தரவல்லது.
  • ந்தக் குடும்பத்திற்கு வந்த வாய்ப்புகளெல்லாம் அப்படி வந்தவையே.
  • முடிவான அறியாமை ஆதியின் அறியாமை.
  • இது சிருஷ்டித்திறனுடையது, தவறியதை மீட்கவல்லது.
  • கம்பெனி தவறியபின் மீண்டும் வந்தது, ஆதியின் அறியாமையை மீறி நடந்த செயல்.
  • சமர்ப்பணம் முழுமையானது.
  • பிரம்மத்தை அடையவல்லது.
  • அக்காரணத்தால் சமர்ப்பணம் எளிதன்று.
  • 7 வகை அஞ்ஞானங்களையும் மீறிச் செயல்படவல்லது சமர்ப்பணம்.
  • பிரச்சினை 3ஆம் நிலை, 4ஆம் நிலையிலிருந்தாலும், சமர்ப்பணம் 7ஆம் நிலையில் செயல்படுவது என்பதால், அது அரைகுறையானாலும் பலிக்கிறது.

தம்பியிடம் சொல்லியதால் பார்ட்னர்ஷிப் முதலில் தவறியது:

  • இரகஸ்யம் சாதனைக்குரியது.
  • எந்தச் செயலுக்கும் ஒரு சக்தி (energy) உண்டு.
  • அந்தச் சக்தி நம்முள் திரண்டபின்னால் நம்மால் அந்தச் செயலைச் செய்ய முடியும்.
  • நாம் வழக்கமாகச் செய்யும் செயல்கட்கு வேண்டிய சக்தியைவிட நம் சக்தி அதிகமானது.
  • அக்காரியங்களைப் பேசுவதால் - எதிர்வீட்டுக்குப் போவது - நமது சக்தி குறையாது. அக்காரியம் கெடாது.
  • நம் சக்திக்கு மீறிய காரியங்கள் நம்முள் எழமுடியாது. எழுவது வழக்கமில்லை.
  • அப்படி எழுந்தால் அவற்றை அடுத்தவரிடம் கூறுவதால் காரியம் முடிவதற்குரிய சக்தி குறைந்து காரியம் கெடும்.
  • பிறரிடம் சொல்வதற்குண்டான அதே பலன் நாம் அடிக்கடி நினைப்பதற்கும் இருக்கும்.
  • அதனால் பெரிய காரியங்கள் முடியும்வரை வெளியில் பேசப்படக்கூடாது என்பது சூட்சுமச் சட்டம்.
  • தாயார் கம்பெனி விஷயம் - பார்ட்னர்ஷிப் - வந்ததும் தம்பியிடம் சொல்லவேண்டிய அவசியமில்லை.
  • சொல்லத் துடிப்பது இயல்பு.
  • இயல்பு எனில் அகந்தைக்குரிய இயல்பு.
  • அகந்தை எந்த நேரமும் தன்னை வளர்க்க முடியும்.
  • வளரும் திறனில்லாவிட்டால், வளர்வதாகப் பிறர் நினைக்கும்படிச் செயல்படும்.
  • தம்பியிடம் சொல்வது அத்தகைய துடிப்பு.
  • சொல்வதற்கு ஓரளவு சக்தி வேண்டும்.
  • பார்ட்னர்ஷிப்புக்குரிய சக்தி மட்டும் நம்மிடமிருந்தால், சொல்வதால் அதற்குரிய சக்தி செலவாகுவதால் காரியம் கூடிவாராது.
  • கேட்பவர் நல்லெண்ணமுடையவரானால் - அது அரிது - அவர் நல்லெண்ணத்தால் நம் எண்ணம் உறுதிப்பட்டு காரியம் சீக்கிரம் கூடிவரும்.
  • சொல்லியதால் கெட்டுப்போய்விட்டதுஎன்று அறிந்து சொல்லியதைச் சமர்ப்பணம் செய்தபொழுது தவறியது பலிக்கிறது.
  • சமர்ப்பணம் முழுமையானதால், முழுமைக்குரிய சக்தியைத் தருவதால், கெட்டது மீண்டும் கூடிவருகிறது.
  • இவ்வளவும் சிந்தனையற்ற மனத்தின் செயலாவது சிறப்பு.
  • சிந்தனை சமர்ப்பணத்திற்கு அதனளவில் எதிரி.
  • சிந்தனை மனத்திற்கு உயிர்.
  • ஜீவனுக்கு உயிர் (motive) நோக்கம்.
  • சிந்தனை உயர்ந்து மாறி motive ஆனால், அந்த motive சமர்ப்பணமானால், மனிதன் அன்பனாகி, செயல் யோகமாக மாறும். இது சமர்ப்பணத்தின் பாதை.
  • கதை முழுவதும் தாயார் இப்பாதைக்குத் தன்னைக் கொண்டுவரும் முயற்சியை விவரிக்கிறது.

பெண் என்பதால் என் பேச்சு எடுபடாது:

  • எந்தப் புதிய புரட்சியும் ஏற்கனவே இருப்பதன்மூலமே வரவேண்டும்.
  • அதனால் ஏற்கனவே உள்ளது தன் பிடியைத் தன் ஆதாயத்திற்காகவே விட்டுக்கொடுக்கும்.
  • புதியதை பழையதின் சௌகரியத்திற்காக மட்டும் செய்வது என்பது புதியது கூடிவரப் போதாது.
  • பழையதை மீறி புதியது செயல்பட்டு ஜெயிப்பது கடினம்.
  • இந்த முரண்பாடு உடன்பாடாவது உலகம் உய்யும் சூத்திரம்.
  • புதியது, புதியதற்காக மட்டும் செயல்படுவது அவசியம்.
  • பழையதைப் புதியது எதிர்க்கவேண்டும், அனுசரிக்கவேண்டும்.
  • இது போகாத உலகுக்கு வழி கேட்பதாகத் தோன்றும்.
  • இங்குத் தத்துவத்தில் ஒரு சூட்சுமம் உண்டு. ஏனெனில், ஆரம்பத்தில் அறிவே அறியாமையாக மாறியிருப்பதால், இப்பொழுது அறியாமை மீண்டும் அறிவாக மாறவேண்டும்.
  • தாயார் பெண். கணவர் அவரை அன்னையை வணங்க அனுமதிக்கிறார். தன் அதிகாரத்திற்குக் குந்தகமில்லாத அளவுக்கே அனுமதிப்பார். அவர் அதிகாரத்தை அவர் விட்டுக்கொடுக்கமாட்டார்.
  • குடும்ப நலனுக்காக என்றாலும், அதுவும் கணவர் அதிகாரத்திற்காக மட்டுமே கணவர் அனுமதிப்பார்.
  • அருள் அதிகாரத்தை அழிப்பது.
  • அதிகாரம் தானே அன்பாக மாறினால் அன்னை செயல்படுவார்.
  • இது கணவருக்கு மட்டுமன்று.
  • கணவர் அன்பராயிருந்தால், மனைவி தனக்குரிய உரிமை - தவறாக அதிகாரம் - பாதிக்கப்படாத அளவே அருளை அனுமதிப்பார்.
  • கணவர் மறுப்பு உத்தரவாக எழும். மனைவி மறுப்பு மனதால் ஒத்துழையாமை இயக்கமாகும்.
  • இரண்டிற்கும் சட்டம் ஒன்றே.
  • அதிகாரம், உரிமை, நல்லது, சரி என்பனவெல்லாம் அகந்தை தன் இராஜ்யத்திற்கு இடும் பெயர்.
  • உரிமையை விட்டுக்கொடுப்பதால், நம் உரிமை போகிறதேதவிர, காரியம் நடக்கும்.
  • காரியம் நடப்பதால், நம் உரிமை வளரும்.
  • தாயாருக்கு இக்குடும்பத்தில் கிடைத்த உரிமையெல்லாம் அவர் தம் உரிமையை விட்டுக்கொடுத்ததால் வந்ததே.
  • உரிமையை முழுவதும் விட்டுக்கொடுப்பது சமர்ப்பணம்.
  • தாயார் உரிமையை விட்டுக்கொடுத்ததால், எவருக்குக் கணவர் அடங்கியுள்ளாரோ, அவர் தாயார் பேச்சை எடுத்துக்கொள்கிறார்.
  • முழுவதும் எல்லா உரிமைகளையும் உடனே ஒரே சமயத்தில் சந்தோஷமாக பிரம்மத்திற்கு விட்டுக்கொடுப்பது சரணாகதி.
  • மனிதன் இதுவரை தான் கற்றவற்றையெல்லாம் அப்படி விட்டுக் கொடுத்தால் சத்தியஜீவனாவான்.
  • குடும்பத்தில் ஒருவர் அதைச் செய்வது குடும்பம் உயர வழிசெய்யும்.
  • பெண், தனக்கு இன்றுள்ள சமூக அந்தஸ்தை ஏற்பது, தாயார் கணவருக்கு அடங்கி வேலை செய்வதாகும்.
  • யாருக்குக் கீழே நாம் இருக்கிறோமோ அவரையே அன்னையாக நடத்துவது பூரணச்சமர்ப்பணம்.

கணவர் சுயநலமி, எதையும் தமக்குச் சாதகமாக எடுத்துக்கொள்வார். அன்னையையும் அப்படியே எடுத்துக்கொள்வார்:

  • இது பொதுவான மனித சுபாவம். இக்கதையில் இதன் விசேஷம் நமக்குரியது.
  • இம்மனப்போக்கு அன்னையின் பெரும்பலன்களை அடியோடு விலக்குவதாகும். கல்லூரியில் சேர்வது, ஹாஸ்டலில் சாப்பிட என நினைப்பது போலாகும்.
  • நாம் நம் நாட்டிலிருக்கும்பொழுது நம் நிறம் நமக்கு நினைவுவருவதில்லை என்பதுபோல் மனிதனுக்கு தான் சுயநலம் என்பது நினைவே வருவதில்லை. நினைவு வருவது முன்னேற்றம்.
  • கடை, கல்லூரி, பீச், எக்ஸிபிஷன்போல் அன்னையை நினைப்பது பாவம். அப்படி மட்டுமே நினைப்பது மனிதனுக்குப் பழக்கம்.
  • அன்னை மின்சாரம்போல் ஆயிரம் காரியங்களைச் செய்வார். சரியாகப் பயன்படுத்தத் தெரியாவிட்டால் பலனிருக்காது, ஷாக் அடிக்கும்.
  • தாயார் மனைவி என்ற இடத்திலிருப்பதால், மனைவி அன்பராக மாறுவது அவசியம். "மனைவியை" மீறி அன்பர் எழவேண்டும். அது முதல் விடுதலை.
  • கணவர் அதிகாரம் செய்வது ஒரு பக்கம். மனைவி தானே கணவனுக்குப் பணிவது அடுத்தது. பணிவின் உயர்வை மனைவியாகச் செலுத்தாமல், அன்பராகச் செலுத்தவேண்டும்.
  • இந்தக் கணவருக்குப் பணிவது சுயநலத்திற்கும், "சொத்தை மனிதனுக்கும்" பணிவதாகும்.
  • தம்மை மனைவி ஸ்தானத்திலிருந்து பிரித்து, அன்பராகக் கருதுவதுபோல், கணவரை அவருடைய சுயநலத்திலும், இதர குணங்களினின்றும் பிரித்துப்பார்ப்பது அவசியம்.
  • தாயாருக்குக் குடும்பத்தில் அக்குறையிருப்பதால், அன்னை பார்ட்னர்மூலம் தாயாரின் பக்திக்குப் பலனளிக்கிறார்.
  • குடும்பம் தாயாரிடமிருந்து என்ன பெற்றாலும், வயிற்றுவலி குமாஸ்தாவுக்குக் கணவர் செய்யும் கொடுமை அதைச் சரிகட்டிவிடும்.
  • கணவருக்கு அருள் தெரியவில்லை என்பதுபோல் தாம் செய்யும் கொடுமையும் தெரியாது.
  • தாயார் குடும்பத்திற்குத் தரும் அருள் குமாஸ்தாவுக்கு விடுதலை தரப் பயன்படும்.
  • மனைவியின் அந்தஸ்து எவ்வளவு உயர்ந்தாலும், அவ்வுயர்வு தமக்குக் கட்டுப்படவேண்டும் என்பது கணவர் மனம். அதுவே அவருக்கு அன்னையிடம் உள்ள நோக்கம்.
  • கணவர் எதிர்பார்ப்பது ஒரு பக்கம். மனைவி அதை மனத்தால் ஏற்றுக்கொண்டால், தம் பக்தியும், அன்னை அருளும் குடும்பத்திலிருந்து விலகும்.
  • கணவரின் இம்மனநிலைக்குரிய corresponding மனநிலை தம்மிடமுள்ளதை விலக்குவதைவிட இதற்கு வேறு வழியில்லை.
  • கணவர் பெரிய மனிதர் விருந்தில் அசம்பாவிதமாகப் பேசினால், அவர்கள் பொருட்படுத்தவில்லை. வாழ்வு அதற்குரிய பலனைச் சிறியவனுடைய விளையாட்டிலும், பெரியவன் பேசாத சொற்களுக்குப் பலனாகவும் தவறாது அளிப்பதை தாயாரே முழுவதும் அறியார்.
  • குடும்பத்தில் நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியையும் வீட்டிலுள்ள ஒவ்வொருவருடைய குணங்கள்மூலம் விமர்சனம் செய்தால் Life Response சட்டங்கள் குடும்பத்தில் செயல்படுவது தெரியும்.

உலகம் உஷாராக இருக்கிறது ( Life is sensitive in the subtle plane):

  • கிராமத்தில் பிறந்த திறமைசாலிகள், "இந்த ஊரில் உள்ளவரை நான் முன்னுக்கு வரமுடியாது" என்று முடிவுசெய்து வெளியேறுவார்கள்.
  • நகரம் அதுபோல் செயல்படாது. ஆனால் உறவினர்களும், நண்பர்களும் எவரையும் முன்னுக்குவரக்கூடாதுஎன உஷாராக இருப்பார்கள்.
  • அவர்கள் கண்ணில்படாமல் வேலை செய்யவேண்டும், அவர்களைக் கடந்துவரும் திறமை வேண்டும்.
  • அதையும் கடந்தவர்க்கு எதிரி வீட்டிற்குள்ளிருப்பான், மனத்தினுள் உறைவான்.
  • கிராமமானாலும், நகரமானாலும், உறவினர், நண்பர், வீடு, சொந்த மனம் என்றாலும் பொய் எதிரி, மெய் ஆதரவு தரும் என்பது உண்மை.
  • வீடு இடம் கொடுக்காமல் ஊர் தொந்தரவு செய்ய முடியாது.
  • நம் மனம் பொய்யை நாடாமல், வீடு, ஊர், உலகம் தொந்தரவு செய்ய முடியாது.
  • இந்தக் குடும்பத்திற்குக் கிராமம், ஊர் எதிரியில்லை, வீடே எதிரி.
  • பொய்யும், மெய்யும் போரிடும் அரங்கம் வாழ்வு.
  • அவை நம்முள் சந்திக்குமிடம் வாழ்வின் சூட்சுமம், முடிச்சு, சிக்கல் உள்ள இடம்.
  • அங்கு மனம் மெய்யை நாடினால், மழையோ, புயலோ, பூகம்பமோ நம்மை அசைக்காது.
  • ஒரு கம்பெனியில் பெரியவனைப் பார்ட்னராக எடுக்க அருள் செயல்படும்பொழுது, அருளுக்கு எதிரான இருள் - பொய் - அதே சமயம் உஷாராகச் செயல்படுகிறது. ஊரார் எதிர்ப்புமூலமாக அது வரவில்லை. பெரியவனுக்கு உறவினர், நண்பர்மூலமும் எதிர்ப்பு எழவில்லை. அவனுள்ளிருந்து பொய்யின் தீவிரம் எழுகிறது. அது கேலியாக எழுகிறது. சிறியவனை அழவைக்கிறது.
  • கம்பெனி பார்ட்னர்ஷிப்பும், கேலியும் சூட்சுமத்தில் எதிரெதிரான சமமான சக்திகள்.
  • பெரியவனுக்குக் கேலி செய்ய உற்சாகம் வருவது பார்ட்னர்ஷிப்பைக் கான்சல் செய்யும் சக்தி.
  • அதையறிந்து அவன் அதிலிருந்து விலகவேண்டும்.
  • தன்னை பார்ட்னர்ஷிப்புக்குத் தரவேண்டும் - அர்ப்பணம் செய்யவேண்டும். கேலிக்கு அர்ப்பணம் செய்யக்கூடாது.
  • அதுவும் அருளைக் கேலி செய்யக்கூடாது.
  • வீடு பண்பானதானால் எதிர்ப்பு வெளியிலிருந்து வரும்.
  • பார்ட்னர் நம்மைப் பார்க்கவருகிறார் என்றவுடன், நம்மை அறிந்தவர்கள் உஷாராகிவிடுவார்கள். "என்னவோ நடக்கிறதுஎனக் கண்ணைத் துடைத்துக்கொண்டு துருவிப்பார்ப்பார்கள்". நமக்கு வருவதைக் காப்பாற்ற நமக்கு அதே உஷாரான போக்கு வேண்டும்.
  • நாம் உஷாராக இல்லாவிட்டால் பொய் வெல்லும்; பார்ட்னர்ஷிப் கெடும்.

அன்னை அருள் விஷயத்தில் ஆர்வமான விழிப்பு தேவை:

  • பிரச்சினையைத் தவிர்க்க உஷாராக இருப்பதுபோல் அதிர்ஷ்டத்தைப் பெற ஆர்வமாக, விழிப்பாக இருக்கவேண்டும்.
  • உஷாராக இருப்பது பொய்யை அழிக்க; ஆர்வமாக இருப்பது மெய்யை ஆதரிக்க.
  • நம்மை அழிக்க மற்றவரின் பொய் உஷாராக இருப்பதுபோல், நம்மை ஆதரிக்க அன்னையின் அருள் அதிர்ஷ்டமாக, ஆர்வமாகக் காத்திருக்கிறது.
  • எதிரி அழிக்கத் தயாராக இருப்பதுபோல், நாம் அதிர்ஷ்டம் உள்ளேவர ஆர்வமாக, விழிப்பாக இருந்தால் அன்னை செயல்பட முடியும்.
  • தாயாருக்கு பக்தி, நம்பிக்கை வளர்ந்தவுடன், உண்மையுள்ள பார்ட்னர் கணவரை நெருங்கிவருவதை வீட்டார் அனைவரும் கண்விழிப்பாகக் காணவேண்டும். அப்படிக் கண்டுகொள்ளவில்லை.
  • கணவருக்கு பார்ட்னர் நண்பராகத் தெரிந்தாரே தவிர, அவர் அன்னையின் அருளைத் தாங்கிவரும் கருவியாகத் தெரியவில்லை.
  • பார்ட்னர் கணவருக்கு விசேஷ கவனம் செலுத்தியதும் குடும்பம் அறியவில்லை.
  • கணவர் பார்ட்னர்ஷிப்பைப் பற்றிப் பேசியபின்னும், வீடு எதிராக இருந்துவந்ததை இழந்ததேதவிர, அருளுக்கு வரவேற்பு அளிக்கவில்லை.
  • அருள் வரும் நேரம், சுபாவம் எழும்; ஆர்வமாக எழுந்தால் பலிக்கும்; அகங்காரமாக எழுந்தால் தவறும்.
  • ஒரு முறை வந்து தவறியது தாயார் அறிந்தது; குடும்பம் அறியாதது.
  • தாயார் பிரச்சினையை எழுப்பியபொழுது கணவர் பலிக்கவில்லையே எனப் பேசினார்.
  • தாயார் சமர்ப்பணத்தை நாடி, அது பலித்தபொழுது பார்ட்னர் வந்தார், பார்ட்னர்ஷிப் கூடிவந்தது.
  • வந்த பின்னும், வந்தது தெரிந்ததே தவிர வீட்டார் அதற்கேற்ப நடக்கவேண்டும் என நினைக்கவில்லை.
  • தாயாருக்குச் சமர்ப்பணம் முதலில் பலித்தது அப்பொழுது. அதன்பிறகு சமர்ப்பணம் பலிக்கவில்லை. அவருடைய முயற்சி தொடர்ந்ததால் பம்பாய் கம்பெனி, பவர் பிராஜெக்ட்எனத் தொடர்ந்த வாய்ப்புகள் டெய்வான் பேங்க்வரை வந்தது.
  • ஆர்வமான விழிப்பு தேவைஎனில் ஆர்வமோ, விழிப்போ இல்லை.
  • அவையிருந்தாலும் அவற்றிற்குரிய பழக்கம், பக்குவமில்லை எனத் தெரியவுமில்லை.
  • தாயாரின் தொடர்ந்த முயற்சி, வீட்டாரின் லேசான ஒத்துழைப்புக்கு, சம்பளத்திற்கு வேலை செய்தவருக்குக் கோடிக்கணக்கில் வியாபாரமும், இலாபமும் தேடிவருகிறது.
  • வீட்டாருக்கு அந்தஸ்து கம்பெனியைவிட முக்கியமாகத் தெரிகிறது.

தவறுகிறது என்றால் அதுவே அதிகபட்சமன்றோ!

  • என்னுடைய நிலைக்குமேல் பல நிலைகளுக்கு நான் வந்தபொழுது ஏதாவது ஒரு கட்டத்தில் மேற்கொண்டு வருவது தவறுவது சகஜமில்லையா? அது தவறு என்று கூறமுடியுமா?
  • அப்படித் தவறாவிட்டால், முடிவற்றுத் தொடர்ந்து வளரமுடியுமா?
  • இரண்டுமில்லாத நிலையுண்டு.
  • உதாரணமாக மனிதவளர்ச்சி, உயரம், எடையில் முடிவில்லாமல் வளராது. அறிவிலும், பண்பிலும் வளர முடிவில்லை.
  • தொடர்ந்த வளர்ச்சிக்குத் தடை வாராமலிருக்க, வளர்ச்சியின் தரம் உயரவேண்டும்.
  • உயர்தரம் வளர வழியில்லாவிட்டால் மேலும் உள்ளே வரும் சக்தி விரயமாவதை நாம் தவறுவதாகக் காண்கிறோம்.
  • ஒரு நல்ல குணம் உயருவதற்கும் அல்லது கெட்ட குணம் நல்ல குணமாக மாறுவதற்கும் தேவைப்பட்ட சக்தி, ஒரு கம்பெனியை இரண்டு மடங்காக்கும் சக்திக்குச் சமம்.
  • தவறுவது அதிகபட்சமில்லை. உள்ளே மேலும் வளரும் வழிகளெல்லாம் தடையிருப்பதைக் காட்டுகிறது.
  • 100 ஏக்கர் நில வருமானம் ஒரு பையனை அமெரிக்காவில் படிக்கவைக்கப் போதுமானதுஎன நாம் அறிவோம்.
  • 100 ஏக்கர் நிலமுள்ளவர் வளரும்பொழுது நிலத்தை மேற்கொண்டு வாங்கிக்கொண்டுபோனால், அதை நிர்வாகம் செய்ய முடியாது என்பதால் அதற்கு அளவுண்டு.
  • அதே குடும்பம் உயர் படிப்பை நாடினால் எந்த அளவு ளர்ச்சியையும் அது ஏற்றுக்கொள்ளும்.
  • அது விளங்குவதுபோல் குணநலன் உயரும்பொழுது குடும்பவளர்ச்சி தடைபடாதுஎன்பது உண்மையானாலும், விளக்குவது கடினம்.
  • குணநலன்கள் வளர முடிவில்லை. முடிவேயிருந்தாலும், அடுத்த கட்டம் ஆன்மவிழிப்பு.
  • ஆன்மவிழிப்புக்கு ஏராளமான சக்தி தேவை.
  • அது சாதாரணமாகக் குடும்பவளர்ச்சியால் நடக்காது.
  • அதற்கும் அடுத்த கட்டமும் உண்டு. அது வளரும் ஆன்மாவின் வளர்ச்சி.
  • வளரப் பிரியப்படவில்லை என்றால் தவறும்.
  • தவறுகிறது எனப் பார்த்தவுடன் குடும்பம் வளரப் பிரியப்படவில்லைஎன அறிவது ஆன்மீக விவேகம்.
  • அதிகபட்சம் என்பது ஆன்மாவிற்கு - அனந்தமான ஆன்மாவிற்கு - இல்லை என்பது ஆன்மீக உண்மை.

அன்னையை அறிவதால், நினைப்பவை பல நடப்பதால், அதை முழுவதும் நடத்திக்கொள்ளலாம்:

  • பல நடப்பதால், அனைத்தையும் நடத்திக்கொள்ள முடியாது.
  • வெளியில் நமக்கு நடக்காதது, வீட்டில் நடப்பதால், வீட்டில் நாம் எதிர்பார்ப்பவையெல்லாம் நடத்திக்கொள்ள முடியாது. அது வீட்டுக்குள்ள லிமிட்.
  • வீட்டிற்குத் தர லிமிட் இருப்பதுபோல், பெற நமக்கும் லிமிட் உண்டு என்பது மேற்சொன்ன உண்மையின் மறுபுறம்.
  • லிமிட் என்றால் என்ன?
  • பள்ளிக்கூடத்தில் சேர்ந்தால் முடிவில்லாமல் படிக்கலாம் என்பது உண்மையானாலும், வருஷா, வருஷம் பாஸ் செய்தால்தான் அப்படிப் படிக்க முடியும்.
  • எந்த வருஷம் பாஸ் செய்யவில்லையோ, அந்த வகுப்பு பாஸ் செய்யும்வரை மேலே போக முடியாது.
  • பள்ளியில் இருப்பதால், தொடர்ந்து மேலே போகமுடியும் என்பது உண்மையில்லை.
  • அன்னையிடமிருந்து தொடர்ந்து பலன்பெற ஒவ்வொரு கட்டம் முடிந்தவுடன், அதை நாம் தாண்டவேண்டும்.
  • கம்பெனியில் பங்கு வந்தவுடன், அதற்கு நாம் மனத்தால் உரியவரானால் அது பலிக்கும், நீடிக்கும். பாராமுகமாக இருந்தால் வந்தது போய்விடும்.
  • பார்ட்னர் வந்தவுடன் கணவர் மனைவி போல் மாறியிருந்தால், பார்ட்னர் கணவருடனேயே எல்லா விஷயங்களையும் முடித்துக் கொள்வார். கணவர் இருந்தது போலவேயிருப்பதால் பார்ட்னர் மனைவியிடம் எதையும் கலக்கவேண்டியிருக்கிறது.
  • பெரியவனைப் பார்ட்னராக எடுத்தபின் அவன் சிறுபிள்ளைத்தனமாகவும், அன்னையை அறியாதவனாகவும் இருப்பதால், கம்பெனியில் அவனுக்கு வேலைமட்டும் வருகிறது; பொறுப்பு வருவதில்லை.
  • கம்பெனி வந்தபின் கணவரும், பெரியவனும் மனத்தால் நாணயமாக மாறியிருக்கலாம். அவர்கள் அப்படி மாறவில்லை. பாங்க் சேர்மன் பார்ட்னருடன் தம் தொடர்பை நிறுத்திக்கொண்டார்.
  • வேலைக்காரியின் கணவனுக்குத் தோப்பு வாங்கும் வாய்ப்பு வருகிறது எனில் குடும்பத்திற்கு வந்தது வளரும் என்று தெரிகிறது. வேலைக்காரிக்கு வந்த சௌகரியம் அவள் கணவனுடைய முதலாளி மூலம் வந்தது. குடும்பத்தால் வரவில்லை. குடும்பத்தால் வந்திருந்தால் குடும்பம் வளர அளவில்லை. டெய்வானுக்குப் பெரியவனை அழைப்பார்கள்.
  • நடப்பவை சிறியவை; பெரியவை நடக்கும் எனவும் குடும்பம் அறியாது.
  • சிறியவை நடப்பதே அதிகம் என்பது மனநிலை. அதனால் பெரியதும் நடக்கும்என மனம் எதிர்பார்க்கும். வாழ்வு அதற்கு இடம் கொடுக்காது.

என்ன செய்ய முடிந்தாலும், முடிவில் அது அவரவர் பாணியிலேயே முடியும்:

  • சுபாவத்தை அழிக்கவேண்டும் என்ற பகவான் ஸ்ரீ அரவிந்தர், சுபாவத்தை ஒட்டியே அதை அழிக்கவேண்டும் என்றார்.
  • சுபாவம் என்பது என்ன? ஏன் அதை அழிக்கவேண்டும்?
  • சுயரூபம், ஒரு சுபாவம் பெறுகிறது.
  • சிருஷ்டியின் நோக்கம், perfect சிறப்பான ரூபத்தை சக்தியில் சிருஷ்டிப்பது.
  • சிறப்பை ரூபம் எட்டும்வரை பல படிகள் உண்டு.
  • ஒவ்வொரு ரூபத்திற்கும் உரிய பாவம் உண்டு. அதை சுபாவம் என்கிறோம்.
  • எல்லாப் படிகளையும் கடக்க நேரமாகும்.
  • எந்தப் படியையும் தவிர்க்க முடியாது; விரைவாகக் கடக்கலாம்.
  • தவிர்க்க முடியாது என்பதால் சுபாவத்தை ஒட்டியே செய்கிறோம்.
  • தாயாருக்கு அபரிமிதமான செல்வம் மனத்திலிருப்பதால், கம்பெனி 10 மடங்கு பெருகுவதுடன் பவர் பிராஜெக்ட் வருகிறது.
  • தாயாருக்கு அன்னையைவிட குடும்பம் முக்கியம்.
  • அதனால் குடும்பம் ஏற்கும் வகையில் வாய்ப்புகள் வந்து பலிக்கின்றன.
  • செல்வத்தை விட அந்தஸ்து முக்கியம் என்பதாலும், அந்தஸ்து வாராமல் செல்வம் வரமுடியாது என்பதாலும் அந்தஸ்திற்கு குடும்பம் அப்படி வரவேற்பளிக்கிறது.
  • அன்னை முதலில் மனத்தில் அந்தஸ்தைக் கொடுத்துவிடுகிறார். அதை உலகம் ஏற்கிறது.
  • அதற்கேற்ப ஒருவர் நடக்க முடியுமானால், அதற்குரிய செல்வம் சுமுகமாக வரும்.
  • உள்ளே அந்தஸ்தைப் - உயர்ஜீவியத்தை - பெற்றபின் வெளியே அதை முறையே வெளிப்படுத்த சுபாவம் இடம் தாராது.
  • பழைய சுபாவம் நிலைக்கும்.
  • சுபாவம் substance பொருளுக்குரியது.
  • அன்னையின் உயர்ந்த ஜீவியம் ஜீவியத்திற்குரியது என்பதால் சுபாவம் வலுவாக இருக்கும்.
  • புதிய அன்னை ஜீவியம் substanceஇல் சேர்ந்து நிலைக்கும்வரை பழைய சுபாவம் இடையூறு செய்யும்.
  • அந்த சுபாவத்தை அழிக்க முடியாது; அழிக்கக்கூடாது.
  • மனிதன் சுபாவத்தைவிட்டு சந்தோஷமாக விலகினால், சுபாவம் வழிவிடும்.
  • மனிதன் பழைய சுபாவத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்வதால், அன்னை அவன் பிடிப்பை ஏற்கிறார்.
  • பிரம்மம் தேடும் ஆனந்தம் பிடியை விடுவதிலிருக்கிறது.
  • அப்பிடியைத் தானே விடுவதில் ஆனந்தம் எழும்.
  • வலுக்கட்டாயமாகப் பிடியை அன்னை எடுத்தால் ஆனந்தம் வலியாக மாறும்.
  • அவரவர் பாணியில் காரியம் முடிவதற்கு சுபாவம் மாறாதது காரணமாகும்.
  • கதையில் எந்த நல்ல விஷயம் நடந்தாலும் அது குடும்பத்தினர் மனம் (பழைய பாணியில்) பூரிப்படைவதாகும். அதைக் கதை நிகழ்ச்சிகளில் காணலாம்.

எல்லைக்கோடு:

  • வாழ்வில் எல்லைகள் கோடிட்டுக்காட்டப்படுகின்றன.
  • அவை இயற்கையில் ஏற்பட்டதாகவும், மீறமுடியாததாகவும் கருதப்படுகின்றன.
  • கீதையும், ஸ்ரீ அரவிந்தமும், யதார்த்தமும் அவை நாமே ஏற்படுத்துபவை எனக் கூறுகின்றன.
  • இக்குடும்பத்தில் தாயார் அதை நடைமுறையில் அறிய மனத்துள் போராட்டத்தை ஏற்கிறார்.
  • எல்லையைக் கடந்ததை நம்பமுடியுமானால், எல்லையில்லை என்பது தத்துவம், நடைமுறை.
  • எதை நம்புவது என்பது மனிதனுக்கு choice முன்னுள்ள பிரச்சினை.
  • தானே தேர்ந்தெடுத்ததை விதி, கர்மம் என மனிதன் கூறுவது மனித வாழ்வு.
  • டெய்வானில் பாங்க் consultancy வந்திருக்கிறது. டெய்வான் பார்ட்னர் தாமே முன்வந்து அதை ஏற்பாடு செய்ய முனைகிறார். இது நம் அனுபவத்திலில்லாதது; அருள் செய்வது. அதை ஏற்றுச் சென்னையில் கம்பெனி வேலைகளைக் கணவரும், பெரியவனும் ஏற்றால், ஏற்றதற்குரிய உயர்ந்த பழக்கங்களை மேற்கொண்டால் அருள் செயல்படும். அது நம் choice பாராமுகமாக இருந்தாலும், பார்ட்னரில்லாவிட்டால் இங்கு எதுவும் நடக்காதுஎன நினைத்தாலும், சோம்பேறியானாலும், தம் பழைய பழக்கங்களைக் கைவிட முன்வாராவிட்டாலும், அதுவும் நம் choice.
  • நாமே தேர்ந்தெடுத்ததைத் தலைவிதி என்பது நம் பழக்கம்.
  • பெண்ணின் சிநேகிதி வீட்டில் திருமணத் தகராறு வந்த நேரம் பெண்ணின் மனம் அன்னையை நாடியதால், அது தீர்ந்தது. ஓடிப்போனவளின் வாழ்வும் அப்படியே.

நம் மனம் நாடுவது எல்லையை நிர்ணயிக்கும்.

  • கதையின் ஆரம்பத்திலிருந்து முடிவுவரை ஒவ்வொரு தத்துவத்தின் நோக்கில் விஷயங்களை விமர்சனம் செய்தால், தத்துவம் நடைமுறையாகப் புரியும்.
  • தத்துவம் நடைமுறையாகும்பொழுது வறுமை செல்வமாகிறது; பெரியது சிறியதினின்று வெளிவருகிறது.
  • தத்துவம் நடைமுறையாவதுஎனில்,
  • உலகில் பற்றாக்குறையில்லை.
  • வளரும் ஆன்மா வாழ்வில் வெளிப்படும்.
  • வாழ்வில் வலியில்லை.
  • உலகில் தீமை படைக்கப்படவில்லை.
  • உடலுக்கு நோயென்பதில்லை.
  • Practical concept of infinity ஜடவாழ்வில் அனந்தத்தின் அபரிமிதம் அளவுகடந்து வெளிப்படும்.
  • செயலில் தோல்வியில்லை.
  • நமக்கு நம்மைத்தவிர தடை ஏதுமில்லைஎனப் புரியும்.
  • ஒவ்வொருவரும் எல்லைக்கோட்டை வெவ்வேறு அளவில் நிர்ணயிக்கின்றனர். உண்மையில் எல்லை என்பது இல்லை.
  • ல்லைக்கோட்டை நிகழ்ச்சிகளில் கண்டு, விலக்குவது எல்லையற்றவனை அறிவதாகும்.

வாழ்வும், மற்றவர்களும் ஒருவரை முன்னேறவிடமாட்டார்கள்:

  • வாழ்வு பொய்யாலானது; பொய்யால் வாழ்வது; பொய்யை இரசித்து ருசிப்பது.
  • அன்னை வாழ்வு மெய்யாலானது; மெய்யால் வாழ்வது; மெய்யைப் போற்றிப் பாராட்டுவது.
  • காலன் உயிருக்கு எதிரிபோல் பொய் மெய்யுக்கு எதிரி; பரம எதிரி.
  • மெய் மயிரிழை வளர முயன்றால், வளர்ந்தால், வளர நினைத்தால், பொய்யின் சக்திகள் அனைத்தும் உஷாராகிவிடும்; மெய்யை கவனிக்கும்; இழை நகரவிடாது. இதை மனிதர்கள் செய்வதைக் கண்டால் அவர்களுடைய தீட்சண்யம் நமக்கு ஆச்சரியம் விளைவிக்கும். மடசாம்பிராணிக்கும் இது விஷயத்தில் மேதையின் தீட்சண்யம் உண்டு என்று காணலாம். அதே தீவிரம் ஆயிரம் மடங்கு அன்னைச் சூழலுக்கும், சக்திக்கும் உண்டு என்று கண்ணால் காண்பது அன்னையை அறிவது. வாழ்வு பொய்-மெய் போராட்ட அரங்கு. நம் வாழ்வில் அதன் முடிவு நம் கையில் உள்ளது என்பது ஞானம்.
  • தாயாருக்குச் சமர்ப்பணம் பலித்த நேரம், தவறிய பார்ட்னர்ஷிப் திரும்பிவருவதைக் கண்டோம்.
  • பெரியவன் "நாம் உயர்ந்துவிட்டோம்" என்று நினைத்தவுடன், வக்கீல் அடியாளிடம் பொய்ச் செய்தியைக் கூறி, ஆபத்தை வருவித்ததைக் கண்டோம்.
  • கணவர் வயிற்றுவலி குமாஸ்தாவை அலட்சியம் செய்தபொழுது, வந்த அதிர்ஷ்டம் குடும்பத்தை அலட்சியம் செய்வதைக் காண்கிறோம்.
  • பகவான் ஸ்ரீ அரவிந்தர் நூற்றாண்டு விழாத் தியானத்திற்கு பக்தர் வரக்கூடாது என குரு சாமர்த்தியமாக அவரை வேறு வேலைக்கு அனுப்புகிறார். போன இடத்தில் பக்தருக்கு டிரைவர் வரவில்லை எனக் கோபம் வந்து, பெரிய வேலை கெடுகிறது. இது மனிதன் முயன்று செய்யும் கொடுமை. குருவின் கொடுமைக்கு பக்தனின் கோபம் ஆதரவு.
  • அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு 70 கோடித் திட்டத்துடன் வந்தவர் சென்னையில் அது 200 கோடிஎன அறிகிறார். டெல்லியில் ஓய்வுபெற்ற கவர்னர்மூலம் மத்திய சர்க்காரை அணுகினால் அது 800 கோடி எனத் தெரிகிறது. சென்னையிலிருந்து சமாதிக்கு வந்து டெல்லிக்குப் போனால் பலிக்கும். 70 கோடி, 200 கோடியானவுடன் மனம் டெல்லிக்குப் போக நினைக்கிறது; சமாதி நினைவில்லை. முழுத்திட்டமும் முழுமையாக ஏற்கப்பட்டபின், பலிக்காமல் போகிறது. சென்னையிலிருந்து முதலில் சமாதிக்குப் போவதா, டெல்லிக்குப் போவதா என்ற சிறு விஷயம் பெரிய விஷயத்தை நிர்ணயித்து விட்டது.
  • டெய்வானில் பெரிய வாய்ப்பு உருவாகிறது என்ற அதே சமயம் யார் வாயால் எந்தச் சொல் வருகிறது என்பது வாய்ப்பின் போக்கை நிர்ணயிக்கும்.

மனம் அடங்கி, உடல் வணங்குவது

காரியம் பூர்த்தியாவதை முடிவு செய்யும்.

  • மனிதர்களைப் போலவே நிகழ்ச்சிகள் இவ்விஷயத்தில் உயிருடன் செயல்படுவதைக் காணலாம்.
  • நாலு இலட்சம் சம்பாதிக்கும் சந்தர்ப்பம் 40 இலட்சமாக மாறியவுடன் 40,000 ரூபாய் இலாபம் தரும் சந்தர்ப்பம் "அது வேண்டாம்; என்னைக் கவனி" எனக் கூப்பிடுகிறது.
  • மெய் வளர நினைத்தால், அந்த ஒரு நினைவுக்கு எதிரொலியாக 50பேர் பொய்யை வலியுறுத்தும் வகையில் நினைப்பது, பேசுவது, நடப்பது நம் கண்ணில்படுவது நாம் உஷாராக இருப்பதைக் காட்டும்.
  • இது அதிர்ஷ்ட ஞானம்.
  • அதை ஏற்பது அதிர்ஷ்டம்.

எதுவானாலும் நானே காரணமென்பதால், என்னை மட்டும் திருத்துவதே முறை:

  • ஒரு சட்டத்தை அப்படியே (literally) பின்பற்ற முடியாது. அதற்குரிய மாற்றங்களை அறியவேண்டும்.
  • கெட்டதை விலக்கவேண்டும், நல்லதைச் சேர்க்கவேண்டும் என்பது கடைசிவரை விலக்கில்லாமல் பின்பற்ற முடியாது. கெட்டதைச் சேர்க்கும் நேரம் உண்டு; நல்லதை விலக்கும் நேரமும் உண்டு. சேர்க்கும் மனப்பான்மை, விலக்கும் மனப்பான்மை முக்கியம்.
  • தாயாருக்கு இந்தச் சட்டம் எந்த அளவில் பொருந்தும், எங்கு மாறிக்கொள்ள வேண்டும்?
  • பெரியவன் கேலிசெய்தாலும், பெண்ணின் தோழி ஓடிவிட்டாலும், அடியாள் தேடிவந்தாலும், டெய்வான் வாய்ப்பு வந்தாலும், கணவர் அசம்பாவிதமாகப் பேசினாலும் தாயார் தம்மைமட்டுமே திருத்திக்கொள்ளவேண்டும், எவரையும் குறைகூறக்கூடாது என்பது முடிவான சட்டமன்று (is not an absolute rule). பெரியவன் கேட்டுக் கொள்வான் எனில் புத்திமதி கூறலாம். தாயார் மனம் குறை கூறாமல் தம்மைத் திருத்திய பின் பெரியவனுக்குப் புத்தி சொல்லலாம். தவறுபெரியவனுடையது என நினைத்துத் தாயார் அவனைத் திருத்த முயல்வது, அதுவும் முதலில் தம் மனத்தைச் சோதனை செய்யாமல் திருத்த முயல்வது பயன் தாராது.
  • தன்னைத் திருத்துவது முதற் கடமை.
  • தான் திருந்தியபின் பிறரை அவர் விரும்பும் அளவில் திருத்துவது அடுத்தது.
  • தாம் திருந்தியபின் பிறரைத் திருத்த முயலாமலிருந்தால் அது பெரியது.
  • அது உண்மையானால், பிறர் தாமே திருந்துவர் அல்லது தாமே வந்து புத்திமதி கேட்பார்கள்.
  • தாம் திருந்தாமல் பிறரைத் திருத்துவது பலன் தாராது; எதிரான பலனும் வரும்.
  • இந்த நேரம் நடக்கும் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும், நம் மனத்தையும், பிறர் மனத்தையும் தெளிவாகக் காட்டும்.
  • கதையில் நிகழ்ச்சிகளை அப்படி ஆராய்வது The Life Divine புரிய உதவும்.
  • தாயார் பெண்ணென்பதால் கணவன் அவரைச் சுலபத்தில் ஏற்கமாட்டார் என்பதுடன், பிள்ளைகளும் தாயார் பெண் என்பதால், அவர்கள் படிப்புக்கும், அனுபவத்திற்கும் உரிய முழுமரியாதை தரமாட்டார்கள். அதைத் தாயார் அறியவேண்டும். அதனால் சுருங்கக்கூடாது. சுருக்கம், வருத்தம் எதிராகச் செயல்படும். பெண்ணுக்கு ஒரு மரியாதையில்லை என்பது பெண்ணுக்கு மட்டுமன்று, கீழே வேலை செய்பவருடைய அறிவுரையை மேலேயுள்ளவர்கள் எடுத்துக்கொள்ளமாட்டார்கள். எடுத்துக்கொண்டால் பூரணமாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள். 30 வயது முதலாளி சொல்வது அசரீரியானாலும், 50 வயது வேலைக்காரன் அதை முக்கால்வாசித்தான் எடுத்துக்கொள்வான். "என்ன இருந்தாலும் வயசில்லையே" என்பான். தாயார் அதை உணரவேண்டும். அதற்குக் கட்டுப்படக்கூடாது.
  • டெய்வான் கன்சல்டன்சி வாய்ப்பாக வந்தாலும் தாயார் அதைத் தம் நோக்கிலும், குடும்ப நோக்கிலும், கம்பெனி நோக்கிலும் கலந்து ஆலோசித்து முடிவுக்கு வரவேண்டும். அதைவிட அவ்வாய்ப்பை சமர்ப்பணம் செய்தால் தம் ஆலோசனையைவிட சிறப்பாக விஷயம் நடக்கும். பெண் என்பது உண்மை. தம்மை மட்டும் திருத்தவேண்டும் என்பதும் உண்மை. அனைத்தையும் கலந்து ஆலோசிக்கவேண்டும் என்பதும் உண்மை. சமர்ப்பணம் சிறந்தது என்பதும் உண்மை ஆனாலும், எந்தச் சட்டமும் முடிவானதன்று. நம் முடிவு எந்தப் பக்கம் - நம் பக்கமா, அன்னை பக்கமா - என்பதும், அம்முடிவு சமர்ப்பணமானதா என்பதும், சமர்ப்பணம் முழுமையானதா என்பதும் முக்கியம்.

கவனித்தால் வளரும்; கவனிக்கவில்லை என்றால் வளரும்; கவனித்தால் சுருங்கும்:

  • தாயாருக்கு இவை தெரியும்; கவனிப்பது நம் கையிலில்லைஎனவும் தெரியும்.
  • நாம் அக்கரையாக ஒருவரை - ஒரு விஷயத்தை - கவனித்தால் அது பெருகும். ஆனால் அப்பெருக்கம் 2 மடங்கு, 3 மடங்கு இருக்குமே தவிர 20 மடங்கு, 300 மடங்கு ஆகாது.
  • 300, 400 மடங்கு வளரும்படியான கவனிப்பு நம் கையிலில்லை.
  • கவனத்தால் காரியம் கெட்டுப்போகும். அது அவசரத்துடன் கவனிப்பதாகும்.
  • நம் கையிலில்லாத கவனிப்பு ஆத்மாவின் கவனிப்பு.
  • வியாதி, பிரச்சினை நம் கவனத்தால் வளரும்.
  • குடும்பம் 3ஆம் நிலையினின்று 15ஆம் நிலைக்கு வந்ததும், பிறகு கம்பெனி, பவர் பிராஜெக்ட், டெய்வான் வந்ததும் மனம் கவனிக்காமல் ஆத்மாவின் கவனமிருந்ததால் வந்தவை.
  • குடும்பம் அன்னையை ஏற்காதது அவர்களுடைய தாழ்ந்த ஜீவியத்தால் என்றாலும், தாயாருக்கு அவர்கள் அன்னையை ஏற்கவேண்டும் என்ற ஆதங்கம் - மனம் கவனிப்பதால் - இருப்பதால் என்பது தாயாருக்குத் தெரியுமென்றாலும், அவர் மனம் இவ்விஷயத்தில் அவர் கட்டுப்பாட்டில் இல்லை.
  • குடும்பம் முதலில் 3 முதல் 15ஆம் நிலைக்கு வந்தது தாயாருடைய மனம் செலுத்திய கவனத்தால் என்பது அவருக்குத் தெரியும்; மற்றவர் அறியார்.
  • பெரியவனுக்குக் கம்பெனி வந்துவிட்டது; இவன் அன்னையை ஏற்க வேண்டும் என்ற தாயாரின் அவசரம், அவன் கெட்ட குணங்களை மேலே கொண்டுவந்து, ஓர் ஆபத்து வீடுவரை வந்துபோயிற்று. இவை தாயார் தெளிவாக அறியாத இடங்கள்.
  • பெரிய இடம், ராஜ்பவன் ஆகிய இடங்களிலிருந்து அழைப்பு வரக்கூடும் என்பதே எவரும் அறியாதது என்பதால் - கவனிக்காமல் இருந்ததால் - அவை வந்தன.
  • எதைக் கவனிக்கலாம், எதனால் - மனம், ஆத்மா, வளரும் ஆத்மா - கவனிக்கலாம் என்று தெரிவது புரிய உதவும். அது தெரிவதால், பின்பற்ற முடியாது. பின்பற்ற inner discipline மனம் கட்டுப்பாட்டை உள்ளே ஏற்கவேண்டும்.
  • தாயாருக்கு அக்கட்டுப்பாட்டின் பெருமை தெரியும். அதற்கு தனக்குள்ள உரிமை தெரியாது. அவ்வளவு பெரியது நமக்கில்லை என்பது அவர் கருத்து. அது எல்லோருக்கும் உரியது எனத் தாயார் அறியார். போன் வந்த புதிதில் எந்த வீட்டிலும் வேலைக்காரர்களை போனில் பேச அனுமதிக்கமாட்டார்கள். வேலைக்காரர்களே போன் தமக்கு இல்லை என நினைத்த காலம் அது. ஆன்மீகம் 1956க்குப்பின் முன்னேறியதால் இன்று நம்போன்ற எளியவர்க்கும் பெரிய கட்டுப்பாட்டிற்கு உரிமையுண்டு என்பதைப் பரம்பரையாக வளர்ந்த நம் மனம் ஏற்கச் சிரமப்படுகிறது. 10,000 ரூபாய் சம்பளம் பெற்றவர்க்கு பவர் பிராஜெக்ட்டில் 150 கோடி கமிஷனில் பங்கு வருகிறது என்பது நடந்தபின்னும், பெரிய அகக்கட்டுப்பாடு தமக்கில்லைஎன மனம் தாயாருக்குக் கூறுகிறது.
  • இரகஸ்யம் மனத்தைக் கடந்து ஆத்மாவுக்கும், ஆத்மாவைக் கடந்து வளரும் ஆத்மாவுக்கும் நாம் செல்வதில் உள்ளது.

நான் சொல்வதை ஒரு பிள்ளை கேட்டால், அதைப் பூர்த்திசெய்ய மற்றவர்கள் ஒத்துவருவதில்லை:

  • வேலை தெரியாதவனுக்குப் பிரமோஷன் வந்தாலும் மரியாதை இருக்காது.
  • தாயார் சொல்லை இக்குடும்பத்தில் வழக்கமான வேலைகளில் பிள்ளைகள் கேட்பது அரிது.
  • தாயார் சொல்வனவெல்லாம் அன்னைக்குரியவை; மௌனமாக இரு,பொறுமையாக இரு என்பனபோன்றவை. பொதுவாக அவை எவருக்கும் ஒத்துவாராது. இந்தப் பிள்ளைகட்கு ஒத்தே வாராது. அவற்றை மீறி ஒரு பிள்ளை கேட்பது அதிசயம். மற்றவர் எப்படி ஒத்துழைப்பார்கள்? அவர்கள் நிலைமைக்கு மீறிய அந்தஸ்தை அருள் கொடுப்பதால், அதற்கேற்ப நடக்கக் குடும்பம் ஒத்துழைக்காதது இயல்பு.
  • அக்குறைகளைத் தாயார் மட்டுமே அறிவார். அவர் மட்டுமே நிறைவு செய்யவேண்டும். அது மனித யத்தனத்திலில்லை. அன்னையே அருளாகத் தாயார் வாழ்வில் உதயமானால் அது நடக்கும். அது நடக்கத் தாயார் தம்மைத் தாயார், மனைவி ஸ்தானங்களிலிருந்து பிரித்தெடுத்து அன்பராகவேண்டும். அவ்வெண்ணமே தாயாருக்கு உதயமாகவில்லை.
  • எல்லாப் பிள்ளைகளும் ஒரு பிள்ளை கேட்பதைப் பூர்த்திசெய்ய ஒத்துழைக்கவேண்டுமானால், அதற்கு யோக வழியில் தீர்வுண்டு. அந்தத் தாயாருக்கு அது தேவையில்லை.
  • ஆத்மா விழித்து அதற்கு மனம், உயிர், உடல் அடங்கினால் அவர் சொல்வதை அடுத்தவர்கள் ஏற்பார்கள்.
  • தாயாருக்கு மனதிலுள்ளது குடும்பம்; அன்னையில்லை. அவர் மனமே அவருடைய கட்டுப்பாட்டில் இல்லை. அவர் கூறுவதை அவருடைய மனம், உணர்வு, உடல் ஏற்றால், பிள்ளைகள் ஏற்பார்கள்; ஒத்துழைப்பார்கள்.
  • தாம் செய்யவேண்டியதைச் செய்யாமல், குழந்தைகள் ஒத்துழைக்க வேண்டும் என எதிர்பார்ப்பது வீண். குடிக்கும் தகப்பனார் மகனைக் குடிக்காதே எனக் கூறலாம்; அது எடுபடாது.
  • தாயார் சொல்வதைப் பெண் ஓரளவு கேட்டுக்கொள்வாள். ஏதாவது ஒரு காரியத்தை எடுத்துப் பூர்த்திசெய்ய பெண்ணுடன் பிள்ளைகளோ, தகப்பனாரோ, ஒத்துழைக்கமாட்டார்கள். அதனால் நடந்தவரை நடக்கட்டும், நாமாக எதையும் ஆரம்பிக்க வேண்டாம் எனத் தாயார் பேசாமலிருக்கிறார்.
  • வேலைக்காரிக்கு வந்த அதிர்ஷ்டம் தானே வந்து, வளர்ந்து, தன்னைப் பூர்த்திசெய்துகொண்டது. தாயார் வேலைக்காரிக்கு அன்னையைப் பற்றிச் சொல்லி, வணங்கச் சொல்லியிருந்தால் நல்லது நடந்திருக்கும். இந்த அளவு வந்திருக்காது. யார் எதிர்த்துப் பேசியிருப்பார் எனச் சொல்லமுடியாது.
  • பெருமளவு தாயார் தம் யோசனைகளைக் கேட்டாலன்றி தாமே சொல்வதில்லை. அதனால் குறைந்தபட்சமே சாதிக்க முடிகிறது. அனைவரும் ஒத்துழைப்பதானால் நாம் பல காரியங்களை ஆரம்பித்து, நல்லபடியாக முடிக்கலாம். இன்று தாயார் அந்த நிலையிலில்லை.

பூரணச்சரணாகதியை ஒரு நாள் முழுவதும் ஏற்கும் சோதனை:

  • பூரணச்சரணாகதி எனில் பூரணமான ஜீவன் சரணம் செய்வது.
  • 407ஆம் பக்கத்தில் ஜீவன் 9 நிலைகளிலுள்ளது என்பது விளக்கப்பட்டுள்ளது.
  • சமர்ப்பணத்தை முதல் நிலையில் பூரணமாகச் செய்வது பூரணச்சரணாகதியின் ஆரம்பம்.
  • ஒவ்வொரு நிலையாக இந்த 9 நிலையிலும் சரணாகதியைப் பூரணமாக்குவது யோகம்; அது முடியாது.
  • அதையே ஏதாவது ஒரு காரியத்தில் செய்ய முடியும். அதை நாம் இங்கு பூரணச்சரணாகதி எனக் கொள்ளலாம்.
  • சரணாகதி நம்பிக்கையில் ஆரம்பித்து, செயலில் முடிகிறது.
  • தாயார் அதைச் செய்ய முடியும். சிரமம் என்றாலும் கம்பெனி - ஒரு விஷயம் - விஷயத்தில் மட்டும் செய்யலாம்.
  • கம்பெனியில் கணவரும், பெரியவனுமிருப்பதால், அவர்களுடைய நம்பிக்கையின்மை தாயாரின் சமர்ப்பணத்தைப் பாதிக்கும்.
  • அவர்கள் ஒத்துழைக்கும் விஷயத்தில் - கம்பெனியின் பல காரியங்களில் ஒன்று - தாயார் பூரணச்சரணாகதியைத் தற்காலிகமாகச் செய்யலாம்.
  • அப்படிச் செய்து அக்காரியம் - இலஞ்சம், குடிசையைக் காலி செய்வது போன்றவை - கூடிவந்தால், அதன் வழி கணவரோ, பெரியவனோ அன்னையை நோக்கித் திரும்பினால், திரும்பும் அளவுக்குத் தாயார் பூரணச்சரணாகதிச் சோதனையைச் செய்யலாம். அதுவே லிமிட்.
  • தாயார் இச்சோதனையைத் தனக்குத் திருப்தியாகச் செய்ய எவரும் சம்பந்தப்படாத இடங்களில் செய்யவேண்டும். அதுவே இவ்வளவு வாய்ப்புகள் வரக் காரணம்.
  • தம்மளவில் இச்சோதனையைச் செய்து, அதற்குத் தாமே ஒத்துழைக்க முன்வருபவர்களைச் சேர்த்து செய்வதே அதிகபட்சம்.
  • 9 நிலைகளில் முதல் நிலையில் பூரணச்சமர்ப்பணம் பலித்தால், 100 வாய்ப்புகள் எழும். அவற்றைச் சமாளிக்க முடியாது.
  • வாய்ப்புகள் புதிய பிராஜெக்ட்டாகவோ, புது இடத்தில் வீட்டார் ஒத்துழைப்பாகவோ வரும்.
  • அதுபோன்ற ஒரு சமயம் பெரியவன், "நீங்க சொல்லுங்கம்மா, நான் செய்கிறேன்" என்றான்.
  • மற்றொரு சமயம் பெண் அன்னையைத் தாயாரைப்போல் ஏற்க விரும்பினாள்.
  • கணவர் ஒரு முறை "இனி அன்னையை முழுவதும் ஏற்கவேண்டும்" எனப் பேசினார்.
  • பம்பாய் கம்பெனி எல்லாச் சரக்குகளையும் வாங்க முடிவு செய்தது அது போன்ற வாய்ப்பு.
  • பவர் பிராஜெக்ட்டும் அது போன்றதே.
  • டெய்வான் விஷயமும் அதுபோன்றதே.
  • தாயார் தவிர வேறு எவரும் எதையும் தெளிவாக ஏற்கவில்லை.
  • தாயாருக்கே தெளிவு போதாது.
  • அளவுக்கு மீறி அருள் செயல்பட்டதை ஏற்கத் தாயார் சிரமப்படும் நேரமானாலும், இந்த நேரமும் அடுத்த கட்டம் போகலாம் என்பது தத்துவம்.

நடப்பதாக இருந்தால், இவ்வளவு நாள் நடந்திருக்க வேண்டாமா?

  • இது தானே என்ன நடக்கிறது என்று பார்ப்பவர்களுடைய சொல்.
  • காரியம் என்பது நாமே முனைந்து செய்வது; தானே நடப்பது என்பது மழை போன்றது. பயிரிடுவதும், படிப்பதும் நாமே செய்து பலன் பெற வேண்டியது.
  • தானே நடப்பதால் பலன் பெறவேண்டுமானால், இருப்பது போதும் என்பது. அப்படி உடல் வளரும். தானே வீடு கட்டிக்கொள்ளாது, படிப்பு வாராது.
  • அன்னை என்பது என்ன என்பது நமக்கு இடையறாத கேள்வி.
  • இதுவரை உலகில் ஆன்மாவுக்கில்லாததை ஆன்மா வளர்வதால் மனம், உயிர், உடலுக்குத் தருவது அன்னை. அது எப்படி நடக்கிறது?
  • நல்ல போஷாக்கு இருந்தால் உடல் நோய் நொடியின்றி வாழும், வளரும். It is because of an equilibrium of physical energies. உடல் சக்தி உபரியான சுமுகம் பெறுவதால் உடல் நலமாக இருக்கிறது. Survival..
  • உயிரின் சக்தி உபரியாகி சுமுகமானால் மனக்குறையின்றி சந்தோஷமாக வாழலாம். Growth.
  • மனத்தில் சக்தி உபரியானால் மற்றவர் பெறாததை நாம் பெற்று, உயரலாம். Development..
  • மனத்தைக் கடந்து ஆத்மாவுக்குப் போனால் மோட்சம் பெறுகிறார்கள். Non-evolving soul..
  • ஆன்மா வளர ஆரம்பித்து, அது மனத்தையும், உயிரையும், உடலையும் இதுவரை இல்லாததுபோல் (evolution) வளர்த்தால், அதைப் பரிணாமம் என்கிறோம். அதுவே அன்னை செய்வது.
  • இந்தக் குடும்பம் 5 முதல் 10 ஆயிரம் வருமானமுள்ளது. அதைக் காப்பாற்றுவது survival.
  • அது 30,000 ரூபாய் வருமானம் பெறுவது growth, வளர்ச்சி.
  • சம்பளக்காரன் சொந்தமாகத் தொழில் செய்வது development, அடுத்தகட்ட வளர்ச்சி.
  • இதுவரை இல்லாததுபோல் நாணயத்திற்கு அந்தஸ்து வருவது, நாட்டைக் கடந்து தொழில் பெருகுவது, உலகிலில்லாத கன்சல்டன்சியை டெய்வான் ஏற்க முன்வருவது பரிணாமம், evolution.
  • இவை அன்னையை ஏற்பதால் வந்தது. அவை தாமே நடந்தவை. தாமே நடந்தவை எனில் தாயார்தவிர மற்றவர்க்குத் தாமே நடந்தவை. தாயார் அன்னையை ஏற்றதால் நடந்தவை. தாயாரைப் பொருத்தவரை தானே நடக்கவில்லை.
  • நடந்தது நீடிக்க வேண்டுமானால், தாயார் அடுத்த, அடுத்த கட்டங்களில் அன்னையை ஏற்கவேண்டும். அது மட்டும் நடந்தால், அதற்குரிய பார்ட்னருக்கும், டெய்வான் பார்ட்னருக்கும், பிரெஞ்சு முதலாளிக்கும் பலன் போகும்; குடும்பத்திற்கு வாராது.
  • குடும்பத்திற்கு அப்பலன் வர குடும்பம் தாயார்போல் அன்னையை ஏற்கவேண்டும்.
  • கம்பெனி வந்தபின், பவர் பிராஜெக்ட் வந்தபின், குடும்பம் அன்னையை நாடுகிறது. அதற்குரிய பலன் வரும்.
  • அது குறைந்தபட்சப் பலன். அன்னையை அன்னைக்காக நாடினால் அதிகபட்சப் பலன் வரும்.
  • வேலைக்காரி கணவனுக்குத் தோப்பு வருவது,
  1. குடும்பம் உபரியாகப் பெறுவதை அல்லது
  2. குடும்பம் வருவதை ஏற்காததைக் காட்டும்.
  • இரண்டும் உண்டு எனவும் காட்டும். எதைக் காட்டுகிறது என்பதைக் குடும்பத்தினர் மனம், செயல் அந்த நேரம் நடப்பவை காட்டும். காட்டியவை பெரிய அறிகுறிகள் அல்ல. முதல் நிலையைப் பெரும்பாலும் காட்டும். இதுபோன்ற விமர்சனம் விளக்கம் தரும்.

எவ்வளவுமுயன்றாலும் அது என் அகந்தையின் சாதனைதானே?

  • முயற்சி நம்முடையது, நம் அகந்தையினுடையதுஎன்று முடிவாகக் கொண்டால், இது சரி.
  • அகந்தையோடு மனிதன் முடிவடையவில்லை. அதைக்கடந்து அவன் ஆத்மாவாகவுமிருக்கிறான்; வளரும் ஆத்மாவாகவுமிருக்கலாம்.
  • சரணாகதி உள்பட அகந்தை எதையும் தானே ஏற்று, தன்னை வளர்த்துக் கொள்ளவல்லது. அங்கு நாம் அகந்தையிடம் ஏமாந்து போகிறோம்.
  • மனம் செய்யும் தவறு இரண்டு. அவற்றைத் தவறு எனலாம், குறை எனவும் கூறலாம்.
  1. குழப்பம்
  2. தன்னை அகந்தையுடன் இணைத்து, அகந்தையைத் தானென ஏற்பது.
  • படிப்பு மனத்திற்குத் தெளிவு தரும். ஆனால் படிப்பால் பெறாத தெளிவும் (mental clarity) மனத்திற்குண்டு.
  • படிப்பு படித்த விஷயங்களைத் தெளிவுபடுத்தும். வாழ்க்கைக்கு உரியவற்றை படிப்பு நேரடியாகத் தெளிவுபடுத்தும் திறனுடையதன்று.
  • அகந்தை எதையும் ஆக்ரமித்துக்கொள்ளும் என்ற கருத்தில் ஏற்படும் குழப்பம், நம்மை ஆன்மாவை மறக்கச்செய்யும். தாயாருக்கு அத்தெளிவு இல்லை.
  • தாயாருக்கு அத்தெளிவு இல்லாவிட்டாலும், பக்தியும், நம்பிக்கையும் இருப்பதால் சூழல் உபரியாகக் கனத்து, அபரிமிதமான வாய்ப்புகள் வந்தன.
  • தாயாருக்கு mental clarity அத்தெளிவு இருந்தால், கன்சல்டன்சி போன்றது, அவரே செய்யக்கூடியது, அவரை நாடிவரும். இப்பொழுது பார்ட்னருக்கு கன்சல்டன்சியும், பணமும், அவர்மூலம் தாயாருக்கும் வருகிறது.
  • நான் முயலவேண்டும், எல்லோரும் முயற்சி எடுக்கவேண்டும் என்பது சாதாரண vital opinion மனநிலை. அதனால் தாயார் மேற்கூறியபடி நினைக்கிறார். மேதைகள் பெறும் பலன் அவர்கள் மேதையாக இருப்பதால், உடல் உழைப்புக்கன்று. மேதையாக இருப்பதற்கு மனம் உழைக்கவேண்டும். அன்பர், அன்பராக இருப்பது அவர் ஆன்மா அன்னையை ஏற்றது என்பதால். ஏற்றது அன்னைக்கு ஏற்பு உடையதானால், அவரருள் ஏராளமாகத் தரும். அன்பர் பெற்றதைக் காப்பாற்ற வேண்டியதே அவர் பொறுப்பு.
  • அன்பர் உழைக்கவேண்டும் என்பது சோம்பேறி அன்னையை ஏற்றால் அவருக்குக் கூறுவது. மனம் மாறவேண்டும்என்பது தாழ்ந்த மனமுடையவர்க்குக் கூறுவது. பொதுவாக மனிதன் சுறுசுறுப்பாக, உயர்ந்த மனப்பான்மையுடையவனாக இருந்தால், அவனுக்கு அவற்றைக் கூறவேண்டிய அவசியமில்லை.
  • தன்னை ஏற்கத் தகுதியற்றவரும் ஏதோ காரணத்தால் ஏற்றால், அவர்கள் தமக்கில்லாத தகுதியைப் பெறவேண்டும்என்று கூறவேண்டும்.
  • இக்கேள்வி எழுந்தால் தாம் அகந்தையில்லை, ஆன்மா என்ற தெளிவு பெறவேண்டும். அத்தெளிவு பெற்றதற்கு அடையாளம் மனம் அளவுகடந்த நிம்மதியைப் பெறுவது.

சரணாகதி உயர்ந்ததென்றாலும், என் சரணாகதிக்கு ஓர் எல்லையுண்டு அல்லவா?

  • வீடு, ஊர், உலகம், வாழ்வு, ஆண்டவன் எது கொடுத்தாலும், எவ்வளவு கொடுத்தாலும், நமக்கு பலிப்பது நம் ஜாதகத்தைப் பொருத்தது, கர்மத்தைப் பொருத்தது, தலைவிதியைப் பொருத்தது, என்னைப் பொருத்தது என்பது நம் நாட்டு மரபு.
  • சரணாகதியை உலகுக்கு பகவான் ஸ்ரீ அரவிந்தர் அளித்தபொழுதும், நாம் நம் அளவில் நம்மைக் குறுக்குவதுபோல், சரணாகதியையும் குறுக்கிவிடுகிறோம்.
  • நாமே ஏற்படுத்தாத லிமிட் நமக்கில்லை என்பது ஸ்ரீ அரவிந்தம்.
  • இந்தக் குடும்பம் இப்படி நினைத்திருந்தால் பவர் பிராஜெக்ட் வந்திருக்காது. அது வந்தபின் அந்த லிமிட் இல்லை என்பது நடைமுறையில் நிதர்சனமாகப் புரியவேண்டும். அதுவும் நடந்தபின் "என் சரணாகதிக்கு எல்லையுண்டன்றோ?" எனப் பேசுவது வந்த அருளை மறுக்கும் மனநிலை. இது தவறு.
  • தாயாரே வலிய வந்த அருளினின்று விலகும் மனப்பான்மை இது. அவருக்கே இது வந்தபொழுது மற்றவர் இதைப் பிரதிபலிப்பது சரியன்றோ?
  • சரணாகதிபோன்ற பெரிய விஷயங்களில் இது தெளிவாகப் புரியாது. எளிய காரியங்களில் - TV பார்ப்பது போன்றவை - லிமிட் இல்லை என்பது தெளிவுபடும். ஒருவர் TV பார்க்க விரும்பினால், அடுத்தவர் வேறொன்று பார்க்க விரும்பும் வீட்டில், "மனம் லிமிட்டை உற்பத்திச் செய்கிறது. இன்று என் மனம் லிமிட்டை உற்பத்திச் செய்யாது" என்று TV க்குப் போனால், அனைவரும் நாம் பார்க்க விரும்புவதைப் பார்க்க நினைப்பார்கள். அந்தச் செய்தியில் நம் தொழிலுக்குத் தேவையான பெரிய கருத்து இருக்கும். அதைத் தொழில் ஏற்றால் தொழில் பெருகும். இது மனநிலைக்குரியது.
  • பூரணச்சரணாகதியை 9 லெவல் மூலம் ஏற்கனவே பார்த்தோம். வேறு வகையாகவும் பூரணச்சரணாகதிச் சோதனையைச் செய்யலாம்.
  • பம்பாய் கம்பெனி "உங்கள் உற்பத்தியை முழுவதும் நாங்கள் வாங்கிக்கொள்கிறோம்" என்றால், நமக்கு "மார்க்கட் பிரச்சினை தீர்ந்தது" என்று தோன்றுகிறது. அது relief, நிம்மதி, வேலை குறைவு என்ற சந்தோஷம். "எப்படி இதுபோன்ற வாய்ப்பு நமக்கு வந்தது" என்று தோன்றுவது நல்லது. எவருக்குமில்லாதது எனக்கு எப்படி வந்தது என யோசனை செய்தால், பெரும்பாலும் யோசனை புரியாது. எவருக்குமில்லாதது எனக்கென்ன இருக்கிறது என்று நினைத்துப்பார்த்தால், யாருக்குமில்லாத அன்னை பக்தி எனக்கிருக்கிறது என்று தோன்றினால், அதனால் நான் அன்னை பக்தியின் சிறப்பைப் பாராட்டினால், அது பெரியது. சரணாகதி இரண்டையும் விடப் பெரியது. நிம்மதியை மனம் தேடாமல், ஆராய்ச்சியை நாடாமல், பம்பாய்க் கம்பெனி சொல்லியதைச் சமர்ப்பணம் செய்ய முயன்றால், அது சமர்ப்பணமாகி, உயர்ந்து சரணாகதியானால் உடல் புல்லரிக்கும். பலன் தொழிலினின்று வருவதற்குப்பதிலாக அன்னையிடமிருந்து வரும்.

அன்னை நம் சரணாகதியை ஏற்பார்.

அன்னை நம்மை ஏற்பார்.

அன்னை நம் சரணாகதியையும், அதன்மூலம் நம்மையும் ஏற்றபின் தேடுவதற்கு உலகில் எதுவுமில்லை.

  • பூரணச்சரணாகதிச் சோதனையை எத்தனையோ மார்க்கங்களில் செய்துபார்க்கலாம். சரணாகதி பூரணமானதுஎன்பதால், மார்க்கங்கள் ஏராளம்; முடிவற்றவை. ஒவ்வொரு பாதைமூலமும் இக்குடும்ப நிகழ்ச்சிகளைக் கருதமுடியும். ஆனால் ஒன்றே போதும்.

இன்று நான் காண்பதே அதிகபட்சமன்றோ?

  • கீதையும், ஸ்ரீ அரவிந்தமும் கூறுவது, "வேண்டியது கிடைக்கும், வேண்டாதது கிடைக்காது ".
  • வேண்டுமா, வேண்டாமாஎன்ற கேள்வி எழாத இடமில்லை.
  • நமக்குப் பலித்தனவெல்லாம், நாம் விரும்பித் தேடியவை.
  • நமக்குப் பலிக்காதவை அதுபோல் - உள்ளபடி - நாம் தேடாதவை.
  • நமக்கு மனத்தின் ஆழத்தில் வேண்டாத ஒரு விஷயத்தை, வேறு ஏதோ ஒரு காரணத்திற்காகத் தேடினால், எது நடந்தாலும், நடக்காவிட்டாலும், முடிவில் நமக்கு அது கிடைக்காது.
  • அப்படி ஆழத்தில் வேண்டாம் என்பதற்கு மனிதன் கற்பிக்கும் காரணங்களில் ஒன்று "இதுவே அதிகபட்சமன்றோ" என்பது.
    • இப்படி ஓர் எண்ணம் தோன்றினால், அதற்குப்பதிலாக நாம் செய்யக்கூடியது உண்டா?
    • நமக்குத் தோன்றவேண்டிய எண்ணம், "அதிகபட்சத்தை நான் நிர்ணயிக்கக்கூடாது", "அதிகபட்சம் என நான் அறிவது அன்னைக்குக் குறைந்தபட்சமாயிருக்காதா?", "என் அறிவுக்கு அதிகபட்சம், ஆத்மாவுக்கும் அதிகபட்சமாகுமா?"
    • எண்ணம் இருவகைகளாக இருக்கும். இது positiveஆனதா? negativeஆனதா?
    • எண்ணம்எனத் தோன்றியவுடன் அது சமர்ப்பணத்திற்குரியது அன்றோ!
    • இது அதிகபட்சம் என்பதுபோல் கம்பெனி வந்ததே அதிகபட்சம் என்று தோன்றியிருக்கலாமன்றோ!
    • எனக்குத் தெரிந்தவரை உயர்ந்த எண்ணத்தை நாடுவது நல்லது. அதையும் சமர்ப்பணம் செய்வது நன்று.
    • முடிவு என்பது அன்னையிடமில்லை என்பதால், அன்னையே முடிவு செய்கிறவரை நான் எந்த முடிவுக்கும் வரக்கூடாது.
    • இந்த இடத்தில் என்ன நினைக்கவேண்டும்என அன்னை கூறியுள்ளார்என நினைப்பது சரி.
    • எது எனக்கு அதிகபட்சம் அல்லது குறைந்தபட்சம் என எனக்குத் தெரிய முடியுமா?
    • நான் அதிகபட்சம்என்று இன்று நினைப்பதைப்போல் குடும்பத்தினர் அதிகபட்சம் என நினைப்பதை நான் ஏற்றுக் கொள்ள முடியுமா? ஏற்றுக்கொண்டால் முன்னேற்றமில்லை.
    • கடந்த 100 ஆண்டுகளாக உலகம் காணும் ஒவ்வொரு முன்னேற்றத்தையும் "இது அதிகம்" என விலக்கியிருக்கலாம் அன்றோ!
    • குறைந்தபட்சத்தை நாடுபவன் survival பிழைத்தால்போதும் என நினைப்பவன்.

அதிகபட்சம் வேண்டும் என்பவன் பேராசைக்காரன்.

குறைந்தபட்சத்தை அதிகபட்சமாக நினைப்பவரும் உண்டு.

அதிகபட்சத்தைக் குறைந்தபட்சமாக நினைப்பவரும் உண்டு.

இத்தனையும் மனத்திற்குரிய எண்ணங்கள்.

மனத்தைக் கடக்கும் அன்பனுக்கு மனம் உதவாது.

இவ்வளவும் என் எண்ணங்கள், அன்னை கூறும் அசரீரி, வாணியில்லை.

பகவான் ஸ்ரீ அரவிந்தர் இவற்றை taste of ignorance அறியாமையின் ருசி என்கிறார்.

நான் இப்படி ஆரம்பத்தில் நினைத்திருந்தால் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது.

நான் மனத்தைக்கடந்த ஆத்மாவையும் தேடவில்லை.

அதையும் கடந்த வளரும் ஆத்மாவை நாடுகிறேன்.

எனக்குத் தேவைப்பட்டது சிந்தனையில்லை, சமர்ப்பணம்.

சமர்ப்பணமும், பூர்த்தியாகும் சரணாகதியும் எனக்குரியது.

நான் சமர்ப்பணத்தையும், சரணாகதியையும் நாடினால் நான் பரவசமாகி, மெய்மறந்து, என்னை அன்னையிடம் விட்டிருப்பேன். நான் தேடவேண்டியது அந்நிலை; அதிகபட்சமும், குறைந்த பட்சமும் எனக்கில்லை.

மனித முயற்சி என்று ஒன்றில்லையா?

  • மனிதனாகவே இருக்கப் பிரியப்பட்டால், மனித முயற்சி அவசியம்.
  • சமர்ப்பணத்தை ஏற்கும் நேரம் மனிதன் தெய்வ நிலையை எய்துகிறான். பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தால், பஸ்ஸில் இருக்கும்வரை நமது வேகம் பஸ்ஸின் வேகம் என்பதுபோல சமர்ப்பணத்துள் உள்ள வரை நமது சக்தி, அன்னை சக்தி.
  • அதை அனுபவித்தவர், அதையே நிரந்தரமாகத் தேடினால், மனித முயற்சி தேவை எனத் தோன்றாது.
  • அதைஅனுபவித்தபின்னும்,அனுபவித்துக்கொண்டிருக்கும்பொழுதும்,மனித முயற்சியின் அவசியம் தோன்றுகிறது எனில், மனம் மனித முயற்சியில் ஈடுபட்டுள்ளதுஎன்று தெரிகிறது.
  • ஆண்டவனைத் தரிசனம் செய்தபின், அவர் அருளைப் பெற்றுக்கொண்டு அனுபவிக்கும்பொழுது ஆண்டவன் மீது நம்பிக்கை எளிதில் எழாது. இக்குடும்பம் பெற்றது பெரியது, மிகப் பெரியது எனவும் கூறலாம். அதைப் பெற்றபின் அனைவரும் அன்னையை விரைந்து முழுமையாக ஏற்றால் நாம் ஆச்சரியப்படமாட்டோம். அப்படிக் குடும்பம் அன்னையை ஏற்கவில்லை என்பதற்கு (1) பரம்பரையில் இருந்தும், (2) தத்துவமாகவும், (3) நாட்டு நடப்பிலிருந்தும், (4) மனோதத்துவரீதியாகவும், (5) ஆன்மீகரீதியாகவும், (6) ஜாதகப்படியும் காரணங்களைக் கூறமுடியும். ஒரு முக்கியக் காரணம் தாயார் மனித முயற்சிக்கு இடமில்லையாஎன நினைப்பது.
  • "விருதுபட்டிக்குப் போகிற சனியனை வீடுவரை வந்துவிட்டுப் போ" என்று கூறுவது மனித சுபாவம். அதன் சாயல் இக்கூற்று.
  • தாயார் இதைக் கருதினால், கணவர், "எனக்கென்று ஓர் இடம் இல்லையா?" என்பார்.
  • பிள்ளைகள், "நாங்களெல்லாம் யோகமா செய்கிறோம், குடும்பம் நடத்தவேண்டாமா?" என்பர்.
  • "மனிதனே தெய்வம்" என அறிவது சமர்ப்பணம். சமர்ப்பணத்தை ஏற்றபின் மனித முயற்சியைப் பற்றி நினைப்பானேன்?
  • அன்னை வேண்டாம் என்பதை வேறு வகையாக இப்படி மனம் கூறுகிறது.
  • அன்னையை ஏற்றவர்க்கு மட்டும் மனித முயற்சியில்லை என்பதில்லை. இரயிலில் ஏறி உட்கார்ந்தவர்க்கும், கட்சியில் சேர்ந்து வேலை செய்பவர்க்கும், கல்லூரியில் படிக்கும் மாணவனுக்கும், ஒரு தொழிலை ஏற்று நடத்துபவனுக்கும், அவனுக்குஎனத் தனியே ஒன்று இல்லை. ஓரளவு தன்னை இழக்காமல் எங்கும் மனிதன் சிறப்பாகச் செயல்பட முடியாது. சமர்ப்பணத்தை ஏற்றபின் தான்என்பதோ, மனித முயற்சியோ இல்லை என்பது அடிப்படை.

 

தொடரும்.....   

******

Comments

03.எங்கள்

03.எங்கள் குடும்பம்

Sub-Heading -  தவறுகிறது என்றால் அதுவே அதிகபட்சமன்றோ!

Point 8 - Line 1 - வழி-களெல்லாம்     -   வழி-களெல்லாம்
 
Sub-Heading - அன்னையை அறிவதால், நினைப்பவை பல நடப்பதால், அதை முழுவதும் நடத்திக்கொள்ளலாம்:
Point 11 - Line 1 - சிறுபிள்ளைத்- தனமாகவும்  -   சிறுபிள்ளைத்தனமாகவும்
 
 Sub-Heading - பூரணச்சரணாகதியை ஒரு நாள் முழுவதும் ஏற்கும் சோதனை
 Point  1  -  Line 1 - ஜீவன்   -  407ஆம் பக்கத்தில் ஜீவன்



book | by Dr. Radut