Skip to Content

04.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

அன்னையின் மகிமையே மகிமை!

என்னுடன் வேலை செய்யும் நண்பர்மூலமாக அன்னையை அறிந்துகொண்டேன். என் நாத்தனார்மூலம் அன்னையின் திருஉருவப் படம் கிடைக்கப்பெற்றேன்.

1994-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டிரான்ஸ்பரில் என் கணவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாஸ்பெட் என்ற ஊரில் வங்கிக்கிளை அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுச் சென்றார். 2000-ஆம் ஆண்டுவரை சென்னைக்கு மறுபடியும் டிரான்ஸ்பரில் வர இயலாமல் போனது. 30.03.2000 அன்று என் தாய், தந்தை, மகளுடன் முதன்முறையாகப் பாண்டிக்குச் சென்று அன்னையிடம் மனமுருகப் பிரார்த்தித்துவிட்டு வந்தேன். வழக்கமாக 31.3.2000 மார்ச் மாதம் இறுதியில் என் கணவர் வங்கியில் டிரான்ஸ்பர் லிஸ்ட் வெளிவந்துவிடும். ஆனால் அந்த வருடம் மட்டும் அன்று வாராமல் ஏப்ரல் 2-ஆம் தேதி வெளிவந்தது. அதிசயம்! அற்புதம்! என் கணவர் பெயர் லிஸ்ட்டில் இருந்து சென்னைக்கே மாற்றலாகி வரமுடிந்தது.

என் மகள் +2 தேர்வு எழுதிவிட்டு பாண்டிக்குச் சென்றோம். அவள் நினைத்தபடியே மார்க் வரவேண்டும்என்று பிரார்த்தனை செய்தோம். 94% மதிப்பெண் பெற்று அவள் விரும்பிய கல்லூரியிலேயே பொறியியல் பட்டப்படிப்பில் அன்னையின் ஆசியால் சேர்ந்தாள்.

நாங்கள் இருந்த வீடு சிங்கிள் பெட்ரூம். அதை விற்றுவிட்டு நாங்கள் வசித்துக்கொண்டிருக்கும் இடமான கே.கே.நகரிலேயே எங்கள் தேவைக்கேற்ப வீடு தேடிக்கொண்டிருந்தோம். என்னுடைய வீட்டை வாங்கிக்கொள்ள வந்தவரும் அன்னையின் பக்தரே! ஆனால் எனக்கு உடனடியாக நினைத்தபடி வீடு அமையவில்லை. மிகுந்த மனக்குழப்பத்துடன் பாண்டிச்சேரி சென்று அன்னையிடம் பிரார்த்தனை செய்தோம். அடுத்த நாளே தொலைபேசிமூலம் நான் வீடு வேண்டும் என்று கொடுத்த விளம்பரத்தைக்கண்டு, வீட்டை விற்க நினைத்த ஓர் அன்பர் தொடர்புகொண்டார். நேரில் சென்று வீட்டைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். எல்லா விதத்திலும் நன்றாக அமைந்து மிகவும் குறுகிய காலத்திலேயே வீடு ரெஜிஸ்ட்ரேஷன் முடிந்து, நாங்கள் புதிய வீட்டிற்குக் குடிவந்தோம். எனக்கு வீட்டை விற்றவரும் அன்னையின் பக்தர்.

அடுத்ததாக என் மகள் தற்போது நான்காம் வருட முதல் செமஸ்டரில் படித்துக்கொண்டு இருக்கிறாள். செமஸ்டர் ஆரம்பத்திலேயே டைபாய்டு ஜுரமும், மஞ்சள் காமாலையும் ஒன்றாக வந்து உடல் அசதியால் கல்லூரி செல்ல முடியாமல் 15 நாட்கள் விடுப்பில் இருந்தாள்.அப்போது கேம்பஸ் இன்டர்வியூ செலக்ஷனுக்காகப் பல கம்பெனிகள் மாணவ மாணவிகளைத் தேர்வு செய்துகொண்டு இருந்தனர். தன்னால் எழுத முடியவில்லையேஎன்று மனம் சோர்வு அடைந்து இருந்தாள். உடல்நலம் தேறி கல்லூரிக்குச் சென்று 6 கம்பெனிகளுக்கு தேர்வு எழுதியும் அவளுக்கு பிளேஸ்மெண்ட் கிடைக்கவில்லை. அன்னையிடமே நம் துயரத்தை முறையிடலாம்என்று நினைத்து, நந்தனத்தில் உள்ள 'சுந்தரம்' ஆஸ்ரமத்திற்குச் சென்று மனம் உருக பிரார்த்தனை செய்தோம்.அதிசயம்! ஆனால், உண்மை! மிகவும் நல்ல ஒரு MNC Companyஇல் அவள் நினைத்த மாதிரியே அன்னை பிளேஸ்மெண்ட் வாங்கிக்கொடுத்து எங்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினார்கள்.

நெஞ்சாரப் பிரார்த்தனை செய்துவிட்டு "அன்னையே! நீயே கதி! சரணம்!" என்று முழுமையான நம்பிக்கையுடன் அன்னையிடம் சென்றால் அன்னை நிச்சயமாக நமக்கு உதவி செய்வார்கள் என்பது என் வாழ்க்கையில் நான் கண்ட நிதர்சனமான உண்மை!


****



book | by Dr. Radut