Skip to Content

09.மனமாற்றம்

"அன்னை இலக்கியம்"

மனமாற்றம்                           

                                                                                     இல. சுந்தரி

அருளப்பர் மேனிலைப்பள்ளி. பதினோராம் வகுப்பு '' பிரிவு. காலைநேர நான்காம் பிரிவேளை. கணித வகுப்புத் தொடங்கும் நேரம். கலாவதி மிஸ் இன்னும் வரவில்லை.

பிரியா தன் புதிய கால்குலேட்டரைப் பையிலிருந்து வெளியே எடுத்தாள். எல்லா மாணவிகளும் அவளையே பார்த்தனர். ஆவலாக அவள் அதில் எண்களைப் பெருக்கியும், கூட்டியும் விரைவாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தாள். எல்லா மாணவிகளும் அவளிடத்தில் கூடி அதை வாங்கிப் பார்த்தனர். பிரியா இயல்பான ஆர்வத்துடன், "புதிய கால்குலேட்டர். நேற்றுதான் அப்பா இதை எனக்குப் பரிசாகத் தந்தார். நல்லாயிருக்கா?'' என்று ஆர்வம்பொங்கக் கேட்டாள். சிலர் நன்றாயிருக்கிறது என இரசித்தனர். வகுப்புத்தலைவி ஆஷா கையில் வாங்கி இப்படியும், அப்படியும் திருப்பிப் பார்த்தாள். பிரியாவுக்கு ஏக்கம் - ஆஷா என்ன சொல்வாளோ என்ற பயம். ஆஷா தான் நன்றாய்ப் படிக்கும் மாணவி என்பதாலும், வகுப்புத்தலைவி என்பதாலும் கர்வமாய் நடந்துக்கொள்வாள். அதிலும் பிரியா மென்மையானவள் என்பதால் அவளைச் சீண்டி, வேடிக்கையும் பார்ப்பாள்.

"ஆஷா, நல்லாயிருக்கா?'' என்றாள் பிரியா.

"நல்லாத்தானிருக்கு. ஆனால் இது விலை கொடுத்து வாங்கியதா, அன்பளிப்பா?'' என்றாள், ஏளனமாய். பிரியாவின் மனம் சுருங்கியது. மேற்கொண்டு எதுவும் பேசுமுன், கலாவதி மிஸ் வந்துவிட்டார். மாணவிகள் விரைவாகத் தத்தம் இடத்தில் சென்று நின்றவண்ணம் ஆசிரியருக்கு வணக்கம் கூறினர்.

வகுப்பு முடிந்ததும், மதிய இடைவேளை ஆதலால், மிஸ் வெளியேறியதும் நோட்டுப்புத்தகங்களை மூடிவைத்துவிட்டு சாப்பாட்டு டப்பாக்களுடன் அவரவர் தோழியர் கூட்டத்துடன் வழக்கமான இடங்களுக்குச் செல்லத் தொடங்கினர்.

மாதவி மட்டும் இன்னும் போட்டுக்கொண்டிருந்த கணக்கைப் போட்டு முடித்தபிறகே நிமிர்ந்தாள். பக்கத்தில் பிரியா பொறுமையுடன் நின்றுக்கொண்டிருந்தாள்.

"சாரி பிரியா. இந்தக் கணக்கை முடிக்கவேண்டும்என்ற ஆர்வத்தில் நேரம் போனதே தெரியவில்லை'' என்று கூறியவண்ணம் புத்தகங்களை அழகாக அடுக்கி டேபிளுக்குக் கீழுள்ள இடத்தில் வைத்துவிட்டுச் சாப்பாட்டு டப்பியுடன் எழுந்தாள்.

"பரவாயில்லை மாதவி. நீ இப்படிக் கண்ணுங் கருத்துமாய்ப் படிப்பது எனக்குப் பெருமையாய் இருக்கிறது. உன்போல என்னால் முடியவில்லை என்றாலும், உன் செயல்களில் நான் பெருமைப்படுகிறேன்'' என்றாள். இருவரும் வழக்கமான மரத்தடிக்குச் சென்றனர்.

சற்றுத்தொலைவில் ஆஷாவின் தலைமையில் 11ஏ வகுப்பில் பெரும்பகுதி கூடியிருந்தது. சாப்பிட்டுக் கொண்டே போவோர், வருவோரை விமர்சனம்செய்து மகிழ்ந்து கொண்டிருந்தது. அப்போது மாதவியும், பிரியாவும் சேர்ந்து செல்வதைப்பார்த்து தமக்குள் பேசிச் சிரித்துக் கொண்டதைத் தற்செயலாகப் பிரியாவும் பார்த்துவிட்டாள்.

பிரியா ஒவ்வொரு முறையும் புதிதாகப் பேனா, வாட்ச், டிரஸ் என்று எதை அறிமுகப்படுத்தினாலும் ஆஷாவும், அவள் தோழியர் கூட்டமும் அவளை ஏளனமாய்ப் பார்ப்பார்கள். இந்தப் பார்வை பட்டுப்பட்டு பிரியாவின் மனம் புண்ணாகிவிடும். வகுப்பில் சிறந்த மாணவி மாதவி. இவ்வாண்டு புதிதாகச் சேர்ந்தவள். வகுப்பில் ஆசிரியர் மேடைக்கு எதிராக நடுவில் இடைவெளிவிட்டு இரண்டு பக்கங்களிலும் நான்கு, நான்கு டேபிள்களும், பெஞ்சுகளும் ஒன்றன்பின் ஒன்றாகப் போடப்பட்டிருக்கும். முன்வரிசையில் இடைவெளியை ஒட்டிய முதலிடத்தில் வகுப்புத்தலைவி, முதல்மதிப்பெண் பெறும் மாணவிகள் உட்காருவர். ஒருபக்க முன்வரிசை முதலிடம் ஆஷாவுக்கு. அவள் வகுப்புத்தலைவி; படிப்பிலும் முதலிடம்; ஆனால் கர்வம், குறும்பு யாவும் உண்டு. மறுபக்க முதலிடம் மாதவிக்கு. குமாரி மிஸ் அவளை அங்கே உட்காரவைத்தார். வந்த முதல்நாளே அவள் முதலிடம் பெற்றது, ஆசிரியர்களின் கவனத்தைக் கவர்ந்தது, யாவும் ஆஷாவை மிகவும் பாதித்தது. கடந்த ஐந்து ஆண்டுகளிலும் அவளே தலைவி. தனக்குப் போட்டியாக மாதவி வந்துவிட்டாளோஎன்ற எண்ணம் உள்ளூர அவளை மிகவும் பாதித்தது. பிரியா, பெரிய இடத்துப்பெண்என்றாலும், மென்மையானவள்என்பதால் அவளை மாதவியின் பக்கத்துச் சீட்டில் குமாரி மிஸ் உட்காரவைத்தார்.

மாதவியின் நட்பு பிரியாவுக்கு இதமாக இருந்தது. யாரையும் அவள் கேலி செய்வதில்லை. அவளை யாரேனும் கேலியாகவோ, பாராட்டாகவோ எது சொன்னாலும் மாதவி அதைப் பொருட்படுத்தமாட்டாள். மிக எளிமையாக, தன் படிப்பிலேயே கவனமாக இருப்பாள். ஆஷாவிற்கு இவள் இப்படி இருப்பது எரிச்சலாக இருக்கும்.

"மாதவி! ஆஷாவையும், அவள் தோழிகளையும் கவனித்தாயா? நாம் வரும்போது என்னைப் பார்த்துவிட்டு அவள் ஏதோ சொல்லிச் சிரிக்கிறாள். அவள் கூட்டம் என்னைக் கேலி செய்கிறது'' என்றாள் பிரியா வருத்தமாக.

"போகட்டும் விடு, பிரியா. அவள் என்ன பேசுகிறாள் என்று தெரியாதபோது, உன்னைப்பற்றிப் பேசுவதாக நீயே ஏன் நினைத்துக்கொள்கிறாய்?'' என்றாள் ஆறுதலாக.

"இல்லை மாதவி. என் கற்பனையில்லை இது. எப்போதும், ஏதாவது புதிதாய் ஒன்று கொண்டுவந்தால், ஆஷா ஒருமாதிரிப் பார்க்கிறாள். பிறகு, தன் தோழிகளுடன் என்னைப் பார்த்து, பார்த்துப் பேசுகிறாள்'' என்று முறையிட்டாள் பிரியா.

"இல்லை பிரியா. இது உன் எண்ணம். நீ அப்படி நினைத்துக் கொள்கிறாய். நாம் நிரபராதியாக இருந்தும் கொடுமைக்கு ஆளாகும்போது பூரண உதாசீனத்துடன் இருக்கவேண்டும் என்பது ஒரு தெய்வவாக்கு'' என்றாள் மாதவி.

பிரியாவின் தந்தை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் அதிகாரியின் அந்தரங்கக்காரியதரிசியாக இருப்பவர். அவர்கள் வீடு, முக்கியமான வீதியிலுள்ள பங்களாவீடு. சகலவசதிகளுடன் பார்க்கப் பகட்டாய் இருக்கும்.

அவள் தந்தை பார்வைக்குச் சாதாரணமானவராய்த் தானிருப்பார். மூத்தபெண்ணுக்கு ஊரையேகூட்டி ஆரவாரமாய்த் திருமணம் செய்திருந்தார். அவர் மனைவி அலங்காரபூஷிதையாய்க் காணப்படுவாள். அவர் பையன் பள்ளிக்கூட வகுப்புகளைப் படித்துக் கடக்காமல் தந்தையின் பார்வையால் கடந்தவன். கல்லூரிப் படிப்புக்குத் தகுதியில்லாத இவனை இவன் தந்தை இலட்சக்கணக்கில் பணம் செலவுசெய்து கல்லூரியில் சேர்த்துவிட்டார். படிப்பு ஏறாத இவன் அலங்கார அணிவகுப்புகளுடன் அடங்காமல் திரிந்தான். இச்சூழலில் சேற்றில் செந்தாமரையாய் பிரியாமட்டும் வித்யாசமானவளாய் இருந்தாள். நன்றாய்ப் படித்தாள். யாரேனும் சிறிது ஏளனமாய்ப்பார்த்தாலும் துவண்டுவிடுவாள். வீட்டுச்சூழலுக்கேற்ப ஆடையணிகள் அணிந்தாலும் அன்பாயும், உண்மையாயும் நடப்பாள். மாதவியின் நட்பு அவளுக்கு இதமாயிருந்தது.

வகுப்பில் ஒரு கட்டுரைப்போட்டி நடந்தது. பாரதியார் விழாவின்பொருட்டு ஆண்டுதோறும் எல்லா வகுப்புகளுக்கும் நடக்கும் போட்டி இது. அதில் மாதவி முதல்பரிசுக்குத் தகுதி பெற்றுவிட்டாள். இதுவரை ஆஷா பெற்றுவரும் அப்பரிசை இவ்வாண்டு மாதவி வென்றுவிட்டாள். உள்ளுக்குள் தோல்வியில் துவண்டுபோன ஆஷா, வெளியில் அகம்பாவமாய் நடந்துகொண்டாள்.

அன்று வழிபாட்டுக் கூடல் முடிந்தவுடன் பிரின்சிபால் பரிசு வென்ற மாணவிகளின் பெயர்களை அறிவித்தார். மாணவிகள் கைதட்டித் தம் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

அன்று வகுப்பிற்கு வந்த ஒவ்வோர் ஆசிரியரும் மாதவியைப் பாராட்டினர். வகுப்புத்தோழிகளும் பாராட்டினர். ஆஷாமட்டும் வழக்கம்போல், "உனக்கென்ன மாதவி, நீ அதிர்ஷ்டக்காரி. எந்தப் போட்டியிலும் வென்றுவிடுவாய்'' என்று மனத்தாங்கலுடன் கூறினாள். பிரியாவுக்குக் கோபம் வந்தது.

"ஏன் ஆஷா, இப்படிப் பேசுகிறாய்? அவள் மிகுந்த சிரத்தையுடன் படித்து, கட்டுரை தயாரித்து, அழகாக எழுதி, பரிசு பெற்றிருக்கிறாள். வாழ்த்துக் கூறுவதற்குப்பதில் இப்படிப் பேசுகிறாயே, உனக்குப் பொறாமையா?'' என்றாள்.

"எனக்கென்ன பொறாமை. நீ வாங்கவில்லை என்று உனக்குத்தான் பொறாமையாய் இருக்கும்'' என்றாள் ஆஷா.

"பார், மாதவி. உன்னைப்பார்த்து நான் பொறாமைப்படுவேனா?'' என்று வருத்தப்பட ஆரம்பித்தாள்.

"சரி, சரி பிரியா. எதற்கெடுத்தாலும் சீரியஸ் ஆகாதே. நீ பொறாமைப்படமாட்டாய் என்று ஆஷாவிற்குத் தெரியும். எனக்குக் கர்வம் ஏற்படாதிருக்க அவள் கூறியதை நான் சந்தோஷமாய் எடுத்துக்கொண்டு விட்டேன். நீ ஏன் அவளிடம் தர்க்கம் செய்கிறாய்? வா, போகலாம்'' என்று வழக்கமாய் உட்காரும் மரத்தடிக்கு அவளை அழைத்துப்போய் உட்கார்ந்தாள். பிரியாவுக்கு வருத்தம் மாறவில்லை. 'உம்'மென்றிருந்தாள்.

"பிரியா! ஏன் என்னவோபோல் இருக்கிறாய்? நோட்டைப் பிரி. அந்தப் புதுக் கணக்கைப் போட்டுப்பார்க்கலாம்'' என்றாள் மாதவி.

"போ, மாதவி. உனக்குச் சொரணையே இல்லையா? அவள் உன்னைக் குத்தலாகப் பேசிப் போகிறாள். அது தாங்காமல் நான் பதில் சொல்லப்போய், அவள் என்னைப் பொறாமைக்காரி என்கிறாள்'' என்றாள் வருத்தமாக.

"நீ என்னைப் பார்த்துப் பொறாமைப்பட மாட்டாய் என்று எனக்குத் தெரியும் பிரியா. உனக்கு ஓர் உபாயம் சொல்கிறேன், கேள். நம்மை யாரேனும் ஒரு குறை கூறினால், அக்குறை நம்மிடம் இருந்தால் மாற்றிக்கொள்ளவேண்டும். அது நம்மிடம் இல்லையென்றால், குறை சொன்னவர் பேச்சைப் புறக்கணிக்கவேண்டும். இப்படிச் செய்தால் பிரச்சினையே வாராது என்றாள் மாதவி.

"எப்படி மாதவி உன்னால் இப்படியெல்லாம் இருக்க முடிகிறது?'' என்றாள் பிரியா வியப்புடன். எல்லாவற்றிற்கும் ஒரு புன்னகைதான் மாதவியின் பதில்.

மறுநாள் பிரியா வரவில்லை. ஆஷாவுக்கு அது இயல்பான லீவாகத் தோன்றவில்லை. பிரியா தொட்டாற் சுருங்கிபோல. ஐந்து ஆண்டுகளாக பிரியாவும், ஆஷாவும் இதே பள்ளியில்தான் படிக்கிறார்கள். ஆஷா அவளைச் சீண்டுவதும், அவள் வாடிப்போவதும் அடிக்கடி நிகழ்வதுதான்.

மாதவி இந்த ஆண்டு இந்தப் பள்ளியில் புதிதாகச் சேர்ந்த மாணவி. அவள் அம்மாவுக்கு இவ்வூரில் பணிமாற்றல் வந்ததால் அவள் இவ்வூரில் படிப்பைத் தொடர நேர்ந்தது. இப்பள்ளி அவளைத் தேர்வுகள் வைத்துத்தான் சேர்த்துக்கொண்டது.


 

தொடரும்.......

*******


 


 


 


 


 book | by Dr. Radut