Skip to Content

07.4 + 8 = 3,00,000

"அன்னை இலக்கியம்"

4 + 8 = 3,00,000

                                                                                                                  சமர்ப்பணன்

குளிருக்குப் பயந்து சூரியன் வெளிவரத் தயங்கிக்கொண்டிருந்த இருள் பிரியாத அதிகாலை நேரத்தில் அழைப்புமணி ஒலித்தது.

பேப்பர் போடும் பையனை எதிர்பார்த்து கதவைத் திறந்த எனக்கு பகீரென்றது.

வாயாவி வள்ளியப்பன் வாயெல்லாம் பல்லாக நின்றுகொண்டிருந்தார். இவர் என் மனைவியின் ஒன்றுவிட்ட சித்தப்பா. ஆனால், எல்லோரும் இவரை வாயாவிமாமா என்றுதான் அழைப்பார்கள்.

வலுக்கட்டாயமாக வரவழைத்துக்கொண்ட சிரிப்புடன், "வாருங்கள் மாமா''என்று வரவேற்றேன்.

"சௌக்கியம் தானே, சந்துரு தம்பி?''என்று நலம் விசாரித்தவாறு மூட்டை முடிச்சுகளோடு வீட்டினுள் நுழைந்தார் வாயாவி மாமா.

அதென்ன வாயாவி மாமா என்ற வித்தியாசமான பெயர் என்று கேட்கிறீர்களா? எத்தனையோ வகையான சிரமங்களை மேற்கொண்டு, விதவிதமான பணிவிடைகளை குருவிற்குப் பல வருடங்கள் செய்து, மந்திரஜால, இந்திரஜால, யந்திரஜால வித்தைகளைக் கற்று கொண்டவரை மாயாவி என்பார்கள். மாமா வள்ளியப்பனோ இந்த இரகசியக் கலைகளின் அரிச்சுவடிகூட அறியாமல், எப்பேர்ப்பட்ட மாயாவியையும் தம் வாய் ஜாலத்தாலேயே தவிடு பொடியாக்கி, தலைகுனிய வைத்துவிடுவார். அதனால், இவருக்கு வாயாவி மாமா என்ற காரணப் பெயர் ஏற்பட்டுவிட்டது.

எனவே, நவீன நாரதரான வாயாவிமாமா வீட்டுக்கு வந்ததில் எனக்குப் பெரிய அதிர்ச்சி உண்டானதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

என் மனைவி சுதாவிற்கு உற்சாகம் கரைபுரண்டோடியது. மின்னல் வேகத்தில் நறுமணம் வீசும் டிகாக்ஷன் காபியை தயார்செய்து, வீட்டில் இருந்ததிலேயே மிகப்பெரிய தம்ளரில் விளிம்புவரை தளும்பக் கொண்டு வந்து வாயாவிமாமாவிற்கு அன்புடன் கொடுத்தாள்.

அது என்ன மாயமோ தெரியவில்லை, என் உறவினர்கள் வந்தால் மட்டும் காபி சிறிது நீராகவும், சர்க்கரை சற்றுக் குறைவாகவும், தம்ளர் சின்னதாகவும் மாறிவிடும். இதுபோன்ற விஷயங்களைப் பற்றி பேச்செடுத்தால், நாட்டில் விலைவாசி உயர்வைப்பற்றியும், அதை ஈடுகட்ட முடியாத என் வளராத வருமானம்பற்றியும் சுதாவின் விரிவுரைகளைக் கேட்க நேரிடும்என்பதால், வாய் திறவாமல் வாழக் கற்றுக்கொண்டு விட்டேன்.

காபி தம்ளரை வாங்கிக்கொண்ட வாயாவிமாமா, அதைத் துளித்துளியாக இரசித்து, ருசித்து, சுவைத்துக் குடித்தார்.

"ஏனம்மா சுதா, நீ தம்ளரைத் தரும்போது, உன் கைகளை கவனித்தேன். தங்கவளையல்களில் பளபளப்பு குறைவாக இருக்கிறதே!''என்றார்.

"என்ன செய்வது மாமா? புதிதாக வாங்கி இருந்தால் பளபளப்பாக இருக்கும். அப்பா போட்ட வளையல்களுக்கு வயதாகிவிட்டதல்லவா?''என்றாள் சுதா.

"நீ என்ன சொல்கிறாய்? சந்துரு தம்பி உனக்கு புது நகைகள் எதுவுமே வாங்கித் தந்ததில்லையா?''என்று அதிர்ச்சியுடன் கேட்டார் வாயாவி மாமா.

"அப்பா தந்த நகைகளை இவர் அடகுவைக்காமல் இருப்பதே எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்''என்று இலேசாக கண்கலங்கினாள் சுதா.

"என்ன மாப்பிள்ளை, குழந்தையை இப்படி அழவைக்கிறீங்களே!''என்று வருத்தப்பட்டார் மாமா.

சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்துவிட்டு மாமா இப்படிப் பேசியது எனக்குச் சுருக்கென்றது. பெரியவர்களை எதிர்த்துப் பேசிப் பழக்கம் இல்லாததால், மாமாவை மனதிற்குள் திட்டினாலும், வெளியே மௌனமாக இருந்தேன்.

"சுதா, நீ அழாதேம்மா. இது சாதாரண விஷயம். நான் சொல்கிறபடி செய்தால் நீ கூடிய சீக்கிரம் புதிய வைர வளையல்களே போடலாம்''என்றார் வாயாவிமாமா.

சுதாவின் முகம் மலர்ந்தது. கண்களில் ஒரு புதிய ஒளி. "எதுவானாலும் சொல்லுங்கள் மாமா. இவரை உடனே செய்ய வைக்கிறேன்''என்றாள் சுதா.

சரிதான்!

"பெண்களுக்குப் புன்னகையே பொன்னகை''என்று சொன்னேன்.

"அதெல்லாம் நன்றாக நிறைய சம்பாதித்து, மனைவிக்கு நகை வாங்கித் தாராத கணவர்கள் சொல்லும் வெறும் சாக்கு''என்றாள் சுதா.

"சரியாகச் சொன்னாய்''என்று சுதாவை பாராட்டினார் வாயாவிமாமா.

எனக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை.

"மாமா, போன வாரம் கீதாவின் கல்யாணத்திற்குப் போயிருந்தேன்.அங்கே அவள் போட்டிருந்த அழகான வைரசெட்டைப் பார்த்ததிலிருந்து எனக்கும் வைரநகை ஏதேனும் வாங்க வேண்டும்என்று தோன்றிவிட்டது. நான் அதைப் பற்றியே தான் நான்கைந்து நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். நேற்று இவரிடம்கூட அதைப்பற்றிச் சொன்னேன்''என்றாள் சுதா.

"ஆமாம், நான்கூட நம் நிலைக்கு அதெல்லாம் சரி வாராது என்று சொன்னேன். நீங்களும் சுதாவுக்கு எடுத்துச் சொல்லுங்கள்''என்று வாயாவி மாமாவைக் கேட்டுக்கொண்டேன்.

"சரி மாமா, வைரசெட்டை விட்டுவிடுங்கள். வைர வளையல்களுக்குக் கூடவா எனக்குத் தகுதி இல்லாமல் போய்விட்டது?''என்று கேட்டாள் சுதா.

"உனக்குப் பிடித்த கடையில், பிடித்த டிசைனில் வைரவளையல்கள் வாங்க வேண்டுமென்றால் நிறைய பணம் வேண்டும்''என்றார் வாயாவி மாமா.

"அப்படிச் சொல்லுங்கள் மாமா, யாரிடம் இருக்கிறது பணம்?''என்று சொன்னேன். வாயாவி மாமாவின் மீது இலேசாகப் பிரியம் வந்தது போலிருந்தது.

"பணத்திற்கு ஒரு குணம் இருக்கிறது. நாம் பிறருக்குத் தரவேண்டிய பணம் ஏதேனும் பாக்கியாக இருந்தால், ஒரு பைசா பாக்கி இல்லாமல் திருப்பித் தந்துவிடவேண்டும். அப்படிச் செய்தால், பணம் நம்மைத் தேடி எங்கிருந்தோ வரும்''என்றார் வாயாவிமாமா.

சற்றுமுன் வாயாவி மாமாவின் மீது வந்த பிரியம் விடைபெற்றுக் கொண்டது.

"மாமா, கடன் பிரச்சினை இங்கே எப்போதுமே வாராது. இவரை நம்பி யார் கடன் தரப்போகிறார்கள்? கடன் கிடைத்தால் தானே திருப்பித் தருவது என்ற கேள்வியே வரும்''என்று திருவாய் மலர்ந்தருளினாள் என் தர்மபத்தினி.

"என்ன தம்பி, கடன் வாங்கக்கூட சாமர்த்தியமில்லாமல் இருக்கிறீர்களே''என்று என்னைப் பார்த்து அனுதாபப்பட்டார் வாயாவி மாமா.

"மாமா, அப்படியே நான் கடன் வாங்கியிருந்தாலும், பணமில்லாத போது எப்படித் திருப்பித்தருவது? நீங்கள் சொல்லும் யோசனை ஏற்கனவே கஷ்டப்படுபவனுக்கு எப்படிப் பயன்படும்?''என்று மாமாவைக் கேட்டேன். மாமாவின் வாயை மூட புத்திசாலித்தனமாக ஒரு கேள்வி கிடைத்ததில் எனக்குப் பரமசந்தோஷம்.

"குதர்க்கம் பேசாமல் மாமா பேசுவதைக் கவனமாகக் கேளுங்கள்''என்று என்னை முறைத்த சுதா, "மாமா, இவருக்குத் தானாக எதுவும் தெரியாது. அடுத்தவர்கள் எடுத்துச்சொன்னாலும் புரியாது''என்றாள்.

"தம்பியின் கேள்விக்குப் பதில் சொல்வது சுலபம். அது மனநிலை சம்பந்தப்பட்டது. அதைப்பற்றி அப்புறம் பேசிக்கொள்ளலாம். நமக்குப் புதிய நகைகள் வாங்கவேண்டும். இப்போது அதுதான் முக்கியம்''என்றார் மாமா.

"ஆமாம், ஆமாம்''என்று ஒத்து ஊதினாள் சுதா.

"நமக்கு வரவேண்டிய பணம் ஏதேனும் விட்டுப்போயிருந்தால், ஒரு பைசாவானாலும், கவனமாக அதை வாங்கி விட வேண்டும். அப்படிச் செய்தால் பணம் பெருகும்''என்றார் மாமா.

சுதாவின் கண்களில் ஏமாற்றம் தெரிந்தது.

"இவர் கொடுக்கல், வாங்கல் யாரிடமும் வைத்துக் கொள்ளமாட்டார். அதனால், வரவேண்டிய பணம் என்று எதுவுமில்லை''என்றாள் சுதா.

"அப்படிச் சொல்லாதே. ஏதாவது நிச்சயம் இருக்கும். யோசித்தால் ஏதாவது பழைய வங்கிக்கணக்கு, பலசரக்குக் கணக்கு என்று ஞாபகம் வரும்''என்றார் வாயாவி மாமா.

"ஏங்க, மாமா சொல்வதைக் கேட்டீர்களா? யோசனை செய்து பாருங்களேன்''என்றாள் சுதா.

சுதாவைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருந்தது. படித்த பெண்ணாக இருந்துகொண்டு, எவ்வளவு பாமரத்தனமாக இருக்கிறாள். இவளைப்போல நான்குபேர் கிடைத்தால், வாயாவி மாமா போன்ற ஆசாமிகளுக்குக் கொண்டாட்டம் தான்.

மாமா எப்படியோ போகட்டும். என்னை நம்பி வாழும் என் மனைவியை திருப்தி செய்ய வேண்டும். எனக்கு அதுதான் முக்கியம். சிறிது யோசித்துவிட்டு, "பத்து வருடங்களுக்கு முன்னால் ஒரு சேமிப்பு கணக்கு வைத்திருந்தேன். அதை உபயோகித்து ஆறு வருடங்களாகி விட்டன''என்றேன்.

"அதில் எவ்வளவு மீதி இருக்கும்?''என்று கேட்டார் வாயாவி மாமா.

"நான்கு ரூபாய்கள் இருக்கும். அதில் எப்படி வைரவளையல் வாங்க முடியும்?''என்று சிரித்தேன்.

"நான் வைரநகை வாங்க நினைப்பது உங்களுக்குக் கேலியாக இருக்கிறதா?''என்றாள் சுதா.

"கோபப்படாதே சுதா, காரியம் கெட்டுவிடும்''என்ற மாமா, "சந்துரு தம்பி, கங்கை நதி பொங்கும் போது பார்த்திருக்கிறீர்களா?''என்று கேட்டார்.

"பிரம்மாண்டமாக இருக்கும். கங்கை கடலா, நதியா என்ற சந்தேகம் வந்துவிடும்''என்றேன்.

"கங்கை உருவாகும் இடத்தைப் பார்த்திருக்கிறீர்களா?''என்று கேட்டார்.

"ஒரு சின்ன துவாரத்தில் இருந்து ஊற்றாக நீர் பீரிட்டுவரும்'' என்றேன்.

"எல்லா விஷயமும் அப்படித்தான். ஆரம்பத்தில் பார்ப்பதற்கு ஒரு சின்ன நீரூற்றுபோலிருக்கும். அதைத் தொடர்ந்து சென்றால் கங்கைபோல் விரியும்''என்றார் வாயாவி மாமா.

"பணத்தையும், கங்கையையும் ஒப்பிடுவது சரி வாராது''என்றேன்.

"பணத்தை கங்கையைப்போல் நீங்கள் பார்க்காததால் இப்படிப் பேசுகிறீர்கள். ஒவ்வொரு ரூபாயிற்கும் பின்னால் பிரம்மாண்டமான பண வெள்ளம் இருக்கிறது என்பதை அந்த ஒரு ரூபாயைப் பார்க்கும்போது மனதில் ஏற்றுக் கொள்ள வேண்டும்''என்றார் வாயாவி மாமா.

"அப்படி ஏற்றுக்கொண்டால் நகை வந்துவிடுமா?''என்று அடக்கமாட்டாத ஆர்வத்துடன் கேட்டாள் சுதா.

"முதலில் நமக்கும் பணம் வரும் என்று நம்பவேண்டும். அளவில் சிறியதின் பின்னே அளவற்ற பெரியது எப்போதும் உண்டு என்பதை மனமார ஏற்றுக்கொள்ளவேண்டும். ஏற்றுக்கொண்டதை உணர்வாலும்,செயலாலும் நிறைவு செய்ய வேண்டும்''என்றார் வாயாவிமாமா.

"அதை எப்படிச் செய்வது?''என்று கேட்டாள் சுதா.

"பெரிய தொகை என்றால் ஆர்வத்துடன் முயற்சி எடுப்போம். சிறிய தொகை என்றால் அலட்சியம் செய்வோம். சிறிய ஊற்றே கங்கை என்பதை ஏற்பதுபோல, சிறியதொகையே பெரிய தொகை என்பதை ஏற்றுக்கொண்டு, அந்தச் சிறிய தொகையைத் திருப்பி வாங்க எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும். அவ்வளவுதான் நீ செய்யவேண்டியது''என்றார் வாயாவிமாமா.

"இது மிகவும் சுலபமாக இருக்கிறதே''என்றாள் சுதா. எனக்குக் கோபம் வந்தது. "உனக்குச் சுலபம்தான் சுதா. ஏனென்றால் செய்யப்போவது நானல்லவா?''என்றேன்.

"இதிலென்ன சிரமம்?''என்று கேட்டாள் சுதா.

"நான் சென்னையில் பெரிய கம்பெனியில் மானேஜராக இருக்கிறேன். பழைய பாங்க் கணக்கு திண்டிவனத்தில் இருக்கிறது. ஆபீசுக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு, இருநூறு ரூபாய்கள் செலவுசெய்து, நான்கு ரூபாய்களை வசூலிக்கவேண்டும். இது முட்டாள்தனமாகத் தெரியவில்லையா?''என்றேன்.

"இருநூறுதானே! செய்துதான் பார்ப்போமே''என்று உற்சாகமாகச் சொன்னாள் சுதா.

"செலவுகூட பெரிய விஷயமில்லை. வெட்கமில்லாமல் நான்கு ரூபாய்களுக்காக பாங்க்கில் வரிசையில் நின்றால் மானம்போகும்''என்றேன்.

கேஷியர் நமுட்டுச்சிரிப்புடன் நான்கு ரூபாய்கள் தருவதுபோலவும், பிற வாடிக்கையாளர்கள் என்னைக் கேலியாகப் பார்ப்பது போலவும் மனக்கண்ணில் காட்சி தோன்றியது. பாங்க்கில் படப்போகும் அவமானம் எனக்கு இப்போதே வந்துவிட்டது.

"இதோ பாருங்கள், வறட்டு கௌரவம் பார்த்து இதுவரை என்ன சாதித்தோம்? உங்களுக்குச் சிரமமாக இருந்தால் எனக்கு அனுமதி கடிதம் கொடுங்கள். நான் திண்டிவனம் போய் நான்கு ரூபாய்களை வாங்கி வருகிறேன்''என்று படபடத்தாள் சுதா.

"சந்துரு தம்பி, செலவுசெய்யும் தொகையோ, வரவேண்டிய தொகையோ முக்கியம் இல்லை. நம் மனநிலையில்தான் இரகசியமே இருக்கின்றது. மனநிலை மாறிவிட்டால்போதும்''என்றார் வாயாவிமாமா.

"எனக்கு பணநிலை மாறினால்போதும். சுதா ஆசைப்படுவதால் நான்கு ரூபாய்களை வாங்க முயற்சிசெய்கிறேன்''என்று வேண்டா வெறுப்பாகச் சொன்னேன்.

"மாமா, அவரை விடுங்கள். நான் என் மனநிலையை மாற்றிக் கொள்கிறேன். இனிமேல் ஒரு ரூபாயானாலும் கவனமாக இருப்பேன். சிறு துரும்பையும் அலட்சியம் செய்யமாட்டேன். வீண்கௌரவம் பார்க்க மாட்டேன்''என்று சூளுரைத்தாள் சுதா.

"நீ மாறினால் உனக்கு நடந்துவிடும். உன் ஆதரவால் சந்துரு தம்பிக்கும் நல்லது நடக்கும்''என்றார் மாமா.

"எனக்குப் பெரிய கப்பல் வாங்க ஆசையாக இருக்கிறது. என் ஆசை நிறைவேறுமா?''என்று அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டேன்.

"நாம் உண்மையாக, மனமார எதை விரும்புகிறோமோ, அது நமக்கு நிச்சயமாகக் கிடைத்துவிடும்''என்றார் மாமா.

எனக்கு ஒரே கசப்பாக இருந்தது. அபத்தமாகப் பேசுவதற்கும் ஓர் அளவுவேண்டாமா?நல்ல வேளையாகத் தொலைபேசி மணி ஒலித்தது. சீனியர்மானேஜர் பேசினார்.

"சந்துரு, உளுந்தூர்பேட்டைக் கிளையில் இன்று மாலை ஆண்டுவிழா. எனக்கு வேறு வேலை வந்துவிட்டது. தயவுசெய்து நீங்கள் தான் எனக்கு பதிலாகப் போய் தலைமை ஏற்கவேண்டும். என் காரையும், டிரைவரையும் உபயோகித்துக்கொள்ளுங்கள். கூட என் உதவியாளரும் வருவார்''என்று பணிவுடன் உத்தரவிட்டார்.

விஷயத்தைக் கேள்விப்பட்ட வாயாவிமாமாவிற்கு ஒரே சிரிப்பு. "சந்துரு தம்பி, இது நல்லசகுனம். உளுந்தூர்பேட்டை போகும் வழியில்தான் திண்டிவனம் இருக்கிறது. மறக்காமல் நான்கு ரூபாய்களை வாங்கிவாருங்கள்''என்று கூறினார்.

உளுந்தூர்பேட்டைக் கிளை விழாவிற்குத் தலைமை ஏற்பதால், ஏதோ நான் இந்தியாவிற்கே பிரதமமந்திரி ஆகிவிட்டதுபோல சுதாவிற்கு ஒரே பெருமை. கணவருக்கோ, குழந்தைகளுக்கோ ஓர் உயர்வு வந்துவிட்டால், பெண்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.

எனக்கு மாமாமீது கோபம் பொத்துக்கொண்டு வந்தாலும், இவர் தொந்தரவிலிருந்து ஒரு நாள் தப்பித்துக்கொள்ள உளுந்தூர்பேட்டைப் பயணம் உதவியாக இருக்கும் என்று தோன்றியது.

காரில் திண்டிவனம் போய்ச்சேரும்வரை மனதிற்குள் ஒரே குழப்பம். உதவியாளருக்குத் தெரியாமல் எப்படி பாங்க்கில் பணம் வாங்குவது? நான் நான்கு ரூபாய்களை வசூலித்தது உதவியாளருக்குத் தெரிந்தால், அலுவலகம் முழுவதும் செய்தி பரவிவிடும். அப்புறம் மானம், மரியாதை எல்லாம் கடலில் கலந்த உப்பாகிவிடும். இருந்தாலும் சுதாவை திருப்தி செய்யவேண்டுமே!

"டிரைவர், அதோ அந்த பாங்க்கில் ஒரு சின்னவேலை இருக்கிறது. கொஞ்சம் நிறுத்துங்கள்''என்றேன்.

உதவியாளர், "சார், பக்கத்துத் தெருவில் என் மைத்துனர் இருக்கிறார். நீங்கள் அனுமதித்தால் பார்த்துவிட்டு அரைமணி நேரத்தில் வந்துவிடுகிறேன்''என்று கெஞ்சும் குரலில் அனுமதி கேட்டார்.

எப்பேர்ப்பட்ட அதிர்ஷ்டசாலிநான்! சந்தோஷமாகத் தலையசைத்து விட்டு, பாங்க்கிற்குள் நுழைந்தேன். பாங்க் அதிகாரியிடம் என் பழைய பாஸ் புக்கைத் தயக்கத்துடன் தந்தேன்.

"சார், நான் ஆறு வருடங்களாக இந்தக் கணக்கை உபயோகிக்கவில்லை. எவ்வளவு கணக்கில் இருக்கிறது என்று தெரியவில்லை''என்றேன்.

கம்ப்யூட்டரில் கணக்கைப் பார்த்த பாங்க் அதிகாரி, "உங்கள் கணக்கில் நான்கு ரூபாய்கள் இருக்கின்றன''என்றார்.

"இவ்வளவுதானா! பெரியதொகையாக இருந்தால் எடுக்கலாம்என்று தான் சென்னையிலிருந்து வந்தேன். இது யாருக்கு வேண்டும்?''என்றேன். மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு சிறிய பொய் சொல்வதில் தவறில்லை.

"எதுவானாலும் உங்கள் பணம்தானே! கணக்கை முடித்துக் கொண்டால் நான்கு ரூபாய்களைத் திருப்பித் தந்துவிடுகிறேன்''என்றார் பாங்க் அதிகாரி.

"இது வந்து என்ன ஆகப்போகிறது? பரவாயில்லை, கணக்கை முடித்துவிடுங்கள்!''என்றேன்.

கையெழுத்து வாங்கிக்கொண்டு நான்கு ரூபாய்களைத் தந்தார் பாங்க் அதிகாரி. கூடவே, ஏதோ ஒரு பழைய செக்கையும் நீட்டினார்.

"சார், நீங்கள் ஆறு வருடங்களுக்கு முன்பு போட்ட டிவிடெண்ட் செக் தேதி தள்ளிப் போனதால் திரும்பி வந்துவிட்டது. இதை அந்தக் கம்பெனிக்கு நீங்கள் திருப்பி அனுப்பினால், அவர்கள் புதுசெக் தருவார்கள்''என்றார் பாங்க் அதிகாரி.

அது என்ன செக் என்று எனக்கு ஞாபகமே இல்லை. செக்கை ஆர்வத்துடன் பார்த்தேன்.

எட்டு ரூபாய்கள்! எட்டே எட்டு ரூபாய்கள்! எட்டாயிரமாக இருந்திருக்கக்கூடாதா?

ஏமாற்றமாக இருந்தது.

எப்படியோ சாமர்த்தியமாகப் பேசி மானம் போகாமல் தப்பிவிட்டேன். அதுவே பெரியநிம்மதி.

பாங்க்கை விட்டு வெளியே வரும்போது செல்போன் ஒலித்தது. சீனியர்மானேஜர் பேசினார். "சந்துரு, என் அவசர வேலை முடிந்து விட்டது. நானே விழாவிற்குப் போகிறேன். உதவியாளரைக் காரில் உளுந்தூர்பேட்டை போகச்சொல்லுங்கள். நீங்கள் சென்னைக்கு பஸ்ஸில் திரும்பிவிடுங்கள்''என்றார்.

சீனியர்மானேஜர் என்னை விடவும் பெரியஅதிகாரி. அவர் எது சொன்னாலும் எனக்கு ஒன்றுமில்லை. ஆனால், உதவியாளரும், மாமாவும் கேலியாக நினைப்பார்களே என்ற எண்ணம் என்னை வருத்தியது.

நான் நந்தகுரலில் உதவியாளரிடம் விஷயத்தைச் சொன்னதும், "உங்களைப் பேருந்துநிலையத்தில் இறக்கிவிடுகிறேன். காரில் ஏறுங்கள்''என்றார்.

சுதாவிற்கு ஒருபுறம் நான் நான்கு ரூபாய்களை திரும்பவாங்கியதில் மகிழ்ச்சி, மறுபுறம் சீனியர்மானேஜர் என்னை விழாவிற்கு வரவேண்டாம் என்று சொல்லிபஸ்ஸில் திரும்ப வரவழைத்ததில் வருத்தம்.

"சந்துரு தம்பி, நாம் முக்கியமான காரியங்கள் செய்யும்போது,தெரிந்தோ தெரியாமலோ ஏதேனும் தவறு செய்தால் காரியம் கெட்டுப் போகும். யோசித்து பார்த்தால் காரில் போன நீங்கள் பஸ்ஸில் ஏன் திரும்பினீர்கள் என்று விளங்கிவிடும்''என்றார் வாயாவி மாமா.

"சீனியர்மானேஜர் காரில் போகச்சொன்னார், போனேன். பஸ்ஸில் திரும்பச் சொன்னார், திரும்பினேன். இதில் யோசிக்க என்ன இருக்கிறது?''என்று எரிச்சலுடன் சொன்னேன். ஏற்கனவே அவமானப் பட்டிருக்கும் எனக்கு மாமாவின் வார்த்தைகள் எரிச்சலூட்டின.

"சந்துரு தம்பி, நிகழ்ச்சிகளுக்கும், நமக்கும் உள்ள தொடர்பை புரிந்துகொண்டால், பிரச்சினைகளைத் தீர்க்கும் சக்தி நமக்கு வந்துவிடும். அதற்காகத்தான் சொன்னேன்''என்றார் வாயாவிமாமா.

"கொஞ்சம் விட்டால் தொண்டை கமறலுக்கும், செருமலுக்கும் கூட அர்த்தமுண்டு என்று சொல்வீர்கள் போலிருக்கிறதே'' என்றேன்.

"ஒரு காரியத்தைப் பற்றிப் பேசும்போது, செருமலோ, இருமலோ வந்தால், நிதானிக்கவேண்டும். கேட்பவரிடமோ, விஷயத்திலோ, சூழலிலோ, நம்மிடமோ ஏதோ தடை இருக்கிறது என்று புரிந்துகொண்டு, செயல்படவேண்டும்''என்றார் வாயாவி மாமா.

இவரிடம் பேசிப் பயனில்லை என்று புரிந்தது.

"சுதா, நீ சொன்னபடி செய்துவிட்டேன், ஆளைவிடு''என்றேன்.

"அதெப்படி தம்பி விடமுடியும்? இப்போதுதானே விஷயமே ஆரம்பமாகி இருக்கிறது. இந்த எட்டு ரூபாய்களை வாங்கவேண்டாமா? நாளை முதல் காரியமாக இந்தக் கம்பெனிக்குப் போய் வேறு செக் வாங்கி விடுங்கள்''என்றார் வாயாவிமாமா.

நான் எதுவும் சொல்வதற்குமுன், தன் கண்களால் எனக்கு உத்தரவிட்டாள் என் இல்லத்தரசி. நம் முன்னோர்கள் 'கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்' என்ற பழமொழியை ஓர் உயர்ந்த கருத்தைப் புரியவைப்பதற்காகச் சொன்னார்கள். தமிழ்நாட்டுப் பெண்களோ இந்தப் பழமொழியை விபரீதமாகப் புரிந்துகொண்டு, கணவனை கல்லாகவும், புல்லாகவும் நடத்துகிறார்கள். இந்தக் குறையை எந்த மனுநீதிச் சோழனிடம் சொல்வது?

"தம்பி, நான் இன்று இரவு மும்பாய் போக வேண்டும். என் அண்ணன் பெண்ணுக்குப் பெரிய வரன் வந்திருப்பதாக இன்று தகவல் கிடைத்தது. அதை விசாரிக்கவேண்டும். வேறு வேலைகளும் இருக்கின்றன. ஒரு மாதம்கழித்து மீண்டும் வருகிறேன்''என்றார் வாயாவி மாமா. விட்டது தொல்லை!

மறுநாள் முதல்காரியமாக எட்டு ரூபாய் கம்பெனிக்குச் சென்றேன். சுதாவிடம் இருந்து தப்பமுடியுமா?

மிகவும் பணக்காரக் கம்பெனி போலிருக்கிறது. அங்கிருந்த காவலாளி போட்டிருந்த உடை, நான் முக்கியமான விசேஷங்களுக்குப் போடும் உடையைவிடச் சிறப்பாக இருந்தது.

தயக்கத்துடன் வரவேற்பு மேஜையை அணுகினேன்.

என் நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது. வரவேற்பாளர் ஓர் ஆண்பிள்ளையாக இருக்கக்கூடாதா? அழகான இளம்பெண்ணாகவா இருக்கவேண்டும்!

கடவுளே, என்ன சோதனை இது! ஒரு இளம்பெண்ணிடம் எனக்கு எட்டு ரூபாய்கள் வேண்டும் என்று எப்படிச் சொல்வது?

எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்ற தடுமாற்றத்துடன், அப்பெண்ணிடம் பழைய செக்கை நீட்டினேன். ஏதேனும் அற்புதம் நிகழ்ந்து, நான் அந்த இடத்திலிருந்து மறைந்துவிட்டால் தேவலை போலிருந்தது.

வரவேற்புப் பெண் நன்றாகப் பயிற்சிபெற்றவள்போலும். நட்புடன் புன்னகைத்து, "கொஞ்சம் காத்திருங்கள். நான் மேலதிகாரியிடம் கேட்டுவிட்டு உங்களுக்குச் சொல்கிறேன்''என்று கூறினாள்.

வரவேற்பறையிலிருந்த வசதியான இருக்கையில் கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்துகொண்டேன். அந்தப் பெண்ணின் கண்களைப் பார்க்க வெட்கமாக இருந்தது. எட்டு ரூபாய்களை வாங்க வந்த என்னைப்பற்றி எவ்வளவு மட்டமாக நினைக்கிறாளோ?

பத்து நிமிடங்கள்கழித்து வரவேற்புப்பெண் என்னைப் புன்னகையுடன் அழைத்தாள்.

"சார், நீங்கள் வீடு மாற்றியபோது புதிய விலாசம் தரவில்லையா?'' என்று கேட்டாள்.

"இல்லை, மறந்துவிட்டேன்''என்று அசடுவழிந்தேன்.

"நாங்கள் ஏழெட்டு முறைகள் உங்களுக்குக் கடிதங்கள் அனுப்பினோம். எல்லாமே திரும்பி வந்து விட்டன''என்றாள்.

என்ன முட்டாள் தனம் இது! எட்டு ரூபாய்களுக்காக ஏழெட்டு தடவைகள் கடிதம் போடுவார்களா? இப்படியா கம்பெனியை நடத்துவது?

என் எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொண்ட வரவேற்புப்பெண், "எங்கள் கம்பெனியில் பிறருக்குத் தரவேண்டிய தொகை எவ்வளவு சிறியதாக இருந்தாலும், தேடிக்கொண்டுபோய் கொடுத்துவிடுவோம்''என்றாள்.

ஒருவேளை அதனால்தான் இந்தக் கம்பெனி செல்வ செழிப்புடன் இருக்கிறதோ?

இந்த விஷயத்தை சுதாவிடமும், மாமாவிடமும் சொல்லக்கூடாது. சொன்னால் மாமாவுக்கு வெற்றி கிடைத்தது போலாகிவிடும்.

"அது நல்லபழக்கம். அதை விடாமல் தொடர்ந்து கடைப்பிடியுங்கள்''என்று உபசாரமாகச் சொன்னேன். நாம் செய்யாததைப் பிறரிடம் செய்யச் சொல்வதில் கிடைக்கும் இன்பம் அலாதியானது.

"ஆறு வருடங்களுக்கு முன் நீங்கள் வைத்திருந்த நூறு ஷேர்களுக்கு, இருநூறு போனஸ் ஷேர்கள் தந்தோம். உங்கள் சரியான விலாசம் எங்களிடம் இல்லாததால், உங்களுக்குத் தகவல் சொல்லவில்லை.போனஸ் ஷேர்கள் உங்கள் பெயரில் இருப்பது உங்களுக்குத் தெரியாததால், அவற்றை நீங்கள் விற்கவில்லை''என்றாள் வரவேற்புப்பெண்.

"இருநூறு போனஸ் ஷேர்கள் என் பெயரில் இருக்கின்றனவா?''என்று சந்தேகமாகக் கேட்டேன்.

"இந்த ஆறு வருடங்களில் இரண்டு முறை போனஸ் ஷேர்கள் தந்திருக்கிறோம். இப்போது மொத்தமாக உங்கள் பெயரில் அறு நூறு ஷேர்கள் இருக்கின்றன''என்றாள் வரவேற்புப்பெண்.

திடீரென்று எனக்குப் புதிய பலம் வந்துவிட்டது. வரவேற்புப் பெண்ணை தைரியமாக ஏறிட்டுப்பார்த்தேன்.

"உங்கள் கம்பெனி ஷேரை இப்போது எவ்வளவு விலைக்கு பங்கு மார்க்கெட்டில் விற்கமுடியும்?''என்று கேட்டேன்.

"அதென்ன உங்கள் கம்பெனி என்கிறீர்கள்? நீங்களும் பங்கு வைத்திருக்கிறீர்களே! நம் கம்பெனி என்று சொல்லுங்கள். ஒரு ஷேர் ஐநூறு ரூபாய்க்கு மேல் விற்கிறது. எல்லா ஷேர்களையும் விற்றால் உங்களுக்கு மூன்று இலட்சங்கள் வரும்''என்றாள் வரவேற்புப்பெண். அடுத்த மாதம் வாயாவி மாமா வீட்டிற்கு வந்தபோது, சுதா வழக்கம் போல் மின்னல் வேகத்தில் நறுமணம் வீசும் டிகாக்ஷன் காபியை தயார் செய்து வீட்டில் இருந்ததிலேயே மிகப்பெரிய தம்ளரில் விளிம்புவரை தளும்ப கொண்டு வந்து வாயாவி மாமாவிற்கு அன்புடன் கொடுத்தாள்.

ஒரு சின்னவித்தியாசம். சுதாவின் கைகளில் பழைய தங்க வளையல்கள் இல்லை. புதிய வைரவளையல்கள் மின்னின!

முற்றும்.


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

உயர்ந்த கருத்து அறிவை விசாலப்படுத்தும். ஆழ்ந்த உணர்வு ஜீவியத்தை மாற்றும். நிதானமான உணர்வு உடலையும் மாற்றும். தான் மாற விரும்பும் மனிதனால் பிறரை மாற்ற முடியும்.

மனிதன் தன்னைமட்டுமே மாற்றவேண்டும்.


 


 


 


 



book | by Dr. Radut