Skip to Content

08.எங்கள் குடும்பம் II

எங்கள் குடும்பம் II

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

ஓரிரு மாதங்களில் கேட்காமல் டெப்பாசிட் நாம் வசூல் செய்ய நினைத்ததற்கு அதிகமாக வந்துவிட்டது... பார்ட்னரும், கணவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்:

. பணம், சொத்து, அந்தஸ்து, நாணயம் ஆகியவை தொடர்புள்ளவை. சொத்துள்ளவனுக்குக் கடன் தர எவரும் பிரியப்படுவர். அந்தஸ்து அடுத்த உயர்ந்த கட்டம். நாணயம் முடிவான கட்டம். நம் அனுபவத்தில் பணமும், சொத்தும் உள்ளவனுக்கு நாணயம் அதிக மரியாதை தரும். அன்னைவாழ்வில் பணமும், சொத்தும் இல்லாவிட்டாலும் வெறும்நாணயம்மட்டும் சொத்திற்குள்ள மரியாதையைத் தருகிறது.

. The Life Divineஇல் 1039ஆம் பக்கத்தில் ஆன்மா ஜடத்தை ஆளும் என பகவான் கூறுவதை வாழ்வில் நாம் காண்பது நாணயத்திற்கு டெப்பாசிட் வருவது.

. காளிதாசனுக்குக் கவி எதிலிருந்து வந்தது? அவன் ஆடு மேய்த்தவன்.

. சீனுவாசராமானுஜத்தின் கணிதமேதைக்கு உற்பத்தி ஸ்தானம் எது?

. நாம் வாழ்வில் கண்டு கொள்ள வேண்டியது, கடைப்பிடிக்க வேண்டியது இது.

. பொருள், திறமை, ஞானம், சொத்து, ராஜ்யம், பிரபலம், வெற்றி, ஆகியவை நாட்டில் நாம் உழைத்துப் பெறுபவை என நாம் நினைப்பது சிறிய உண்மை.

அவை ஆன்மாவில் அளவுகடந்திருப்பதை அகத்தில் பெற்று, புறத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்பது பெரிய உண்மை.

நாம் சம்பாதிப்பது ஆயிரக்கணக்கில் என்றால் ஆன்மாவில் புதைந்துள்ளது ஆயிரம் கோடிகள் என்பதை நம் மனம் ஏற்பதே அன்னையை நாம் வாழ்வில் ஏற்பதாகும்.

. டெப்பாசிட் சேகரம் செய்ய சட்டம் உண்டு; தகுதியுண்டு. விளம்பரம் ஏராளமாகப் போடவேண்டும். அதன்பின் வீடு வீடாக நாம் சென்று வசூல் செய்யவேண்டும்.

. தானே வருவது,

. கேட்காமல் பெறுவது,

. விளம்பரமில்லாமல் சேகரமாவது,

. கேட்பதற்குமுன் வருவது எல்லாம் வாழ்விலில்லை.

. இது அருள்.

. பேரருள்.

. இக்குடும்பத்திற்கு இல்லாத அருள், தாயாரின் பக்தியால் வருவது.

தாயார் - ...பாண்டி எல்லையை விட்டுப் போய் மீண்டும் வரும்வரை அவர் ஆன்மா திணறியது (suffocation); அவருக்குத் தாங்கவில்லை:

. மீன் தண்ணீரை விட்டு வெளியே உயிரோடிருக்காது; திணறும்; உயிர் போகும்.

. அன்னை பக்தர் வெளிநாடு போனவர், அங்குள்ள அளவுகடந்த சுத்தம், சத்தமேயில்லாத அமைதி, மக்களுடைய ஒழுங்கான நடைமுறை, கண்கவரும் கடைகள், அனைத்தையும் ஆச்சரியமாக விவரித்தவர், "நம் நாட்டில் உள்ள மனநிம்மதி, வளமான சூழல் அங்கில்லை; வறண்டிருக்கிறது. நம்மால் அங்கு மூச்சுவிட முடியவில்லை"என்றார். பிரியமான குடும்பங்களில் வளர்ந்தவர், உணர்வற்ற, வறண்ட, வசதியுள்ள குடும்பங்களில் வாழ நேர்ந்தால் அப்படி உணர்வார்கள்.

. இந்திய மண்ணுக்கு அந்த ஆன்மீகச் செழிப்புண்டு.

. அன்னைச் சூழல் அச்செழிப்பை உச்சத்திற்குக் கொண்டுபோகும்.

. இந்த மாறுதல் மனிதனுக்குத் தாங்காது என்பதால் தீண்டாமை முதலில் ஏற்பட்டது.

. அன்னை இச்சிரமத்தை அறிந்தாலும், ஏற்கிறார். அவர் "நாம் வாழ்வை ஏற்கவேண்டும்"என்ற பொழுது, நாம் மற்றவருடன் அவர் போல வாழ்ந்து உறவாட வேண்டும் என்று கூறவில்லை. துறவி மனத்தால் வாழ்வைத் துறந்தார். நாம் மனத்தால் வாழ்வை ஏற்க வேண்டும் என்றார் அன்னை. வாழ்வை விலக்கக்கூடாது என்ற தத்துவத்தை மாற்றி, வாழ்வை நாம் ஏற்கவேண்டும்என்பதை நடைமுறையில் எப்படிப் பின்பற்றுவது?

. குடும்பத்தைவிட்டு வெளியேறி காட்டுக்குப் போவதில்லை.

. குடும்பக் கடமைகளைக் குடிமகனாகச் செய்வதற்குப் பதிலாக அன்பராக நிறைவேற்றவேண்டும்.

. மற்றவர் பொய்யை, இலஞ்சத்தை, தவற்றை ஏற்பதால் நாமும் அவற்றை ஏற்காமல், நாம் மெய்யை மட்டும் ஏற்று அவர்கள் வாழும் வாழ்வை வாழவேண்டும். அப்படி வாழும்பொழுது அன்னையை ஏற்காதவருடன் உள்ள தொடர்பைக் குறைத்து அன்னையை ஏற்றவரை நம் உலகமாக்கிக் கொள்ள வேண்டும். நாம் பின்பற்றும் இலட்சியத்தைக் கைவிடாமல் இருப்பதே முக்கியம். வாழ்வை ஏற்பதுஎனில் வாழ்வின் இலட்சியத்தை ஏற்று இலட்சியமாக வாழ்வது எனப் பொருள். நாம் இப்பொழுதும் அப்படியே வாழ்கிறோம் என்பது கவனிக்கத் தக்கது. நாம் வாழ்விலிருப்பதால் பிச்சைக்காரனைப் போல் பிச்சை எடுப்பதில்லை, திருடனைப்போல் திருடுவதில்லை. சந்திரனுக்குப் போவது போல் நாமும் போவதில்லை. பலர் கோடீஸ்வரனாவது போல் நாமும் ஆவதில்லை. இன்றைய வாழ்வின் இலட்சியத்தை முடிந்தவரை ஏற்று, மேல்நோக்கிப் போக - கீழ்நோக்கிப் போகக் கூடாதுஎன்று - முடிவுசெய்து வாழ்கிறோம். அன்பரானபின் இலட்சியம் உயர்கிறது. வாழ்வைத் துறப்பதில்லை. நம்மால் முடிந்ததைச் செய்கிறோம். முடியாததை நாம் செய்து நஷ்டப்படுவதில்லை.

தாயார் - ...அறிவில்லாத, அந்தஸ்தில்லாத பெண் தம்மை மெச்ச விரும்பியதால், அறிவும் திறமையுமுள்ள அவர் அறிவில்லாத காரியத்தைச் செய்து அத்தனையையும் இழந்தார்:

. துரோகம், எதிர்ப்பை மீறி அன்னை செயல்படுவதுண்டு; அது அன்பர் வாழ்வில் அடிக்கடிக் காணப்படும்; அதை நாம் வலிந்து விரும்பி சட்டமாகப் பின்பற்ற முடியாது; அப்படிச் செய்தால், அவரை விட்டு விலகிய தரித்திரம் நம்மைப் பிடித்துக்கொள்ளும். அவருக்கு நம்மைப் பழிவாங்கும் எண்ணம் எழுந்தால், நம் செயல் அதற்குத் துணை செய்யும். நமக்குள்ள கடமை, திறமை, சந்தர்ப்பம், மனச்சாட்சியை ஒட்டி நாம் செயல்படவேண்டும்.

. மேற்சொன்னவர் அவருடைய துரோகத்திற்கு அடியோடு அழிந்திருப்பார். எவருக்குத் துரோகம் செய்தாரோ, அவரே முன்னின்று, இவரை முன்னுக்குக் கொண்டுவந்தார்.

. இதிலும் சச்சிதானந்த தத்துவம் உண்டு.

. ஒரு மரம் முளைக்க ஒரு விதை ஏற்படுவதில்லை. நூறு விதை அழிந்து ஒன்று முளைக்கிறது. ஒரு விதை முளைக்க இயற்கை ஆயிரம் விதையை உற்பத்தி செய்கிறது.

. கவி ஒரு செய்யுள் எழுத ஆயிரம் செய்யுள் அவன் மனத்தில் எழுந்து மறைகிறது. அவை விரயமன்று. ஒன்றை உற்பத்தி செய்யும் பெருமுயற்சி.

. போரில் ஒருவன் தலைவனாக ஆயிரம் பேர் இருதரத்திலும் உயிரை விடுகின்றனர்.

. ஒரு மலைச்சிகரம் ஏற்பட பெரிய அடிவாரம் வேண்டும்.

. மனிதனைப் படைக்கும்முன் இறைவனுக்கு எத்தனையோ ரூபங்கள் அளிக்கப்பட்டன. இறைவன் அவற்றை ஏற்கவில்லை முடிவாக மனிதனை ஏற்றான் என்பது வழக்கு.

. குழந்தை ஒரு சொல் பேச முயலும்பொழுது பலமுறை, பலநூறு முறை சொல்லைச் சொல்லிப் பார்க்கிறது. பல ஆயிரம் முறை காதால் அச்சொல்லைக் கேட்கிறது.

. சிருஷ்டிக்க, தொடர்ந்தமுயற்சி வேண்டும். பலன் முடிவில் வரும். முதல்முயற்சியே பலிக்காது. முதல்மூச்சில் மண் எடுக்க முடியாது என்பது வழக்கு. செய்த முயற்சிகளெல்லாம் பலனைக் கொடுத்தன. எதுவும் வீண் போகாது.

. ஒன்றைச் சாதிக்க ஓராயிரம் முறை முயல்வது சிருஷ்டியின் அடிப்படை, இயற்கையின் அடிப்படை, வாழ்வின் அடிப்படை.

. பலன் தரும் வரைப் பயிலவேண்டும்.

. ஒரு பலன் எழ நெடிய, நீண்டகாலப் பயிற்சி தேவை.

. பயிற்சி விரயமன்று; பயிற்சியின் முடிவு பலன்.

தாயார் - நம்மனத்தின் உண்மை, ஆழத்தில் உண்மையாய் இருந்தால் – sincerity – தீயசக்திக்கு இடமில்லை:

. தீயசக்தி என்பது முதல் சிருஷ்டியில் 4 அசுரர்கள் உற்பத்தியானது. இறைவன் 4 கடவுள்களை - சத்தியம், ஜோதி, அமரத்துவம், ஆனந்தம் - சிருஷ்டித்தார். அவர்கள் இறைவனுக்கு எதிராக மாறி பொய், இருள், மரணம், துன்பம் ஆகிய தெய்வங்களாயினர். அவருள் பொய், மரணம் ஆகிய இருஅசுரர்கள் இறந்துவிட்டதாக அன்னை கூறுகிறார்.

இவர்கள் நம் உண்மையைச் (sincerity) சோதிக்க இருக்கிறார்கள் என்கிறார் அன்னை.

இந்த 4 அசுரர்கட்கு 4000 சிறு தேவதைகள் உண்டு. அது பொறாமை, தில்லுமுல்லு, ஏமாற்றம் போன்ற குணங்களாக வெளிப்படுகின்றன.

. எவர்மூலம் எந்த தீயசக்தி நம்மைத் தாக்கினாலும்,

. நம்மிடம் அதற்குரிய குறையில்லாமல் அத்தாக்குதல் நடைபெறாது.

. குறை என்பது குறையாக மட்டும் இருக்காது. நிறைவுக்குரியவராக இல்லாவிட்டால் வாய்ப்பு வரும்பொழுது அது குறையாகும்.

. எல்லா நிலைகட்குரிய நிறைவுகள் உண்டு. அதேபோல் குறைவும் உண்டு.

. தீய சக்திகள் இறைவனுக்காகப் பெரிய சேவை செய்கிறார்கள் என அன்னை கூறுகிறார்.

. நாம் நாலுபேர் போல் வாழ விரும்புகிறோம்.

. ஒருவர் பையன் அமெரிக்கா போனால், நம் பையனும் போக விரும்புகிறோம்.

. அதுபோன்ற போட்டியில்லாத இடங்களில் வாழ்க்கை எளியதாய் இருப்பதைக் காண்கிறோம்.

. மனிதன் தன்னை அறிந்தவனில்லை.

. தன்னை அறிந்தவனுக்கும் ஒருகட்டத்தில் தன்னையறிய முடியாத நிலையுண்டு.

.தன்னை அறிய முடியாதவனுக்குத் தன்னை அறிவிப்பது,

. சமூகப் போட்டி,

. முன்னோடிகள்,

. தீயசக்திகள்,

. பெற்றோர்,

. திருடன் போன்ற குற்றவாளிகள்,

. இயற்கையின் அட்டகாசமான புயல், பூகம்பம்,

. உடனுள்ளவர்கள்,

. கயமை,

. தியானம், சித்தி,

. மகாபுருஷர்கள்,

. சந்தர்ப்பம்.

தாயார் - அன்னையிடம் தவறுபவர்கள் அனைவரும் உயர்ந்தவர்களே:

. உயர்ந்தவரே அன்னையிடம் வருகிறார்கள்.

எவர் அன்னையிடம் வந்தாலும் உயர்ந்தவராகிவிடுவார்கள்.

தாம் உயர்ந்தவர் என்ற எண்ணம் எழுந்தால் தாழ்ந்தவராகி விடுவார்கள். அது அவர்களைத் தவறவைக்கும்.

. ஏன் அன்பர்கள் தவறுகிறார்கள்?

திறமை, பக்திபோன்ற ஓர் அம்சமிருப்பதால் அன்னையிடம் வருகிறார்கள். அந்த அம்சம் அளவுகடந்து பெருகுகிறது. அதற்கேற்ப அடுத்த அம்சங்களையும் உயர்த்திக்கொண்டால் தவறு வாராது. இல்லை யெனில் imbalance நிலைகொள்ளாது. நிலைகொள்ளாத நேரம் எப்படிப் பழகுவது எனத் தெரியாது. தவறு எழும்.

ஒரு மாணவன் கணிதத்தில் 100 மார்க் வாங்கி முதல்வனாக வந்தால், தனக்குத் திறமையிருப்பதை அறிந்து மற்ற பாடங்களிலும் அதிகமார்க் வாங்க முனைவது நல்லது. தான் 100மார்க் வாங்கினேன் எனக் கர்வம் கொண்டால் வகுப்பு அவனுக்கு எதிரியாகும். அந்த 100 மார்க் அடுத்த பரீட்சையில் வாராது.

. மார்க் திறமையால் வருகிறது.

. பழக்கம் பர்சனாலிட்டியால் வருகிறது.

. மனிதனை நிர்ணயிப்பது திறமையில்லை, பழக்கம்.

. ஏன் அன்னை அந்த நிதானத்தையும் தரக்கூடாது என்பது வழக்கமான கேள்வி.

. பர்சனாலிட்டி அன்னையை ஏற்றால் அன்னை அதையும் தருவார்.

. "நாம்"என்பது பர்சனாலிட்டி.

. போனில் பேசவேண்டும் என்றபொழுது டயல் செய்கிறோம். "நல்ல பதில் வரவேண்டும்"எனப் பிரார்த்திக்கிறோம்.

. நாம் பதிலை அன்னைக்குட் படுத்துகிறோம்.

. பேச வேண்டும் என்று தோன்றியவுடன் தோன்றியதை அன்னைக்குச் சமர்ப்பணம் செய்வது பர்சனாலிட்டியில் அன்னையை ஏற்பதாகும்.

. அன்னையால் நம் வசதிகள் வளர்ந்தபின், பிறர்மீதும், குறிப்பாக அன்னை மீதும் நமக்குக் கோபம் வருகிறது.

"என் மீது கோபப்படாதவர் இங்கு எவருமில்லை"என அன்னை கூறியிருக்கிறார்.

. மனிதர்கள் மீது கோபப்படாமலிருக்கலாம். அன்னைமீது குறைபடாமல், கோபப்படாமலிருக்க Mother's Sincerity வேண்டும்.

தாயார் - நல்ல குணமிருப்பதாலேயே எதிரான குணமிருக்கும்:

. இதன் தத்துவத்தை அறிந்தால் விளக்கமாகப் புரியும்.

மனம் பகுக்கும் கருவி. நாம் ஒருபகுதியை வெட்டி எடுத்தால் மீதி இருக்குமன்றோ!

நாம் மரத்தில் பழம் பறிக்கும் பொழுது, பழம்மட்டும் கண்ணில்படும்;மீதிபடாது.

நம்மனதில் பட்டாலும், படாவிட்டாலும், மீதி மரம் கிளை, இலை, தளிர், துளிர், பூ, மொக்கு அங்குண்டு.

பழம் ஒருபகுதி; மீதி அடுத்தபகுதி.

இவ்விரு பகுதிகளில்லாமல் நாம் செயல்பட முடியாது.

வாழ்வில் இருபகுதிகள் இல்லை. நாம் ஒருபகுதியை முடிவாகக் கருதுவதால் அடுத்தபகுதி ஏற்படுகிறது.

எனவே இருபகுதிகள் - இரட்டை - ஏற்படுகின்றன.

. மீண்டும் கூறினால், மனம் ஒன்றான முழுமையை இரு பகுதிகள் ஆக்குகின்றது. அவற்றை எதிரெதிராகக் காண்கிறது.

. மனிதனுக்குக் குணம் உண்டு. அது ஒன்றே.

நாம் குணத்தில் நல்ல பகுதியை மட்டும் ஏற்கிறோம்.

எனவே மீதி, அடுத்த பகுதியாகிறது.

அடுத்ததை நல்லதன்று என்கிறோம்.

நல்லதன்று என்பது கெட்டதாகிறது.

எனவே நல்லகுணம் ஏற்பட்டால், அங்கு கெட்டகுணமிருக்கும்.

நாம் வாழ்வில் எதிரானவற்றைக் காண்கிறோம்.

. அப்படி ஏற்பட்டவை,
 

சத்

- அசத்;

ஜீவியம்

- ஜடம்;

ஆனந்தம்

- வலி;

முழுமை

- பகுதி;

இருள்

- ஒளி;

அறிவு

- அறியாமை;

நல்லது

- கெட்டது;

சத்தியம்

- பொய்;

உயர்வு

- தாழ்வு;

நியாயம்

- அநியாயம்;

வலிமை

- எளிமை;

மௌனம்

- சப்தம்;

திருப்தி

- ஏமாற்றம்;

கூடிவருவது

- கெட்டுப்போவது;

சந்தோஷம்

- வருத்தம்;

குதூகலம், சந்தோஷம்

- சோகம்;

வெற்றி

- தோல்வி;

நிறைவு

- குறைவு;

நினைவு

- மறதி;

சரி

- தவறு;

தாயார் - உறவினர் சம்பிரதாயத்தை ஏற்றவர். நாம் சம்பிரதாயத்தை விட்டவர்கள். ஒத்துவாராது. சம்பிரதாயம், பொய், சூது, குடி ஆகியவை நம்மைச் சமமாகப் பாதிக்கும்:

. சம்பிரதாயம், பொய்யைப்போல் பாதிக்கும் என்பதன் தத்துவம் என்ன?

. குடியும், சூதும் பாதிக்கும் என்று நாம் அறிவதுபோல் பொய் பாதிக்கும் என நாம் நடைமுறையில் நம்புவதில்லை.

. பொய் பாதிக்கவில்லையே, நான் நன்றாகத்தானே இருக்கிறேன் என்று நினைக்கிறோம்.

.இந்தக் குடும்பம் கம்பனி பெற்றதும், அதன்பிறகு power project பெற்றதும், பொய்யை விடாமலிருந்தால் நடந்திருக்காது. அவை வாராவிட்டால் குடும்பம் அவற்றை இழந்ததை அறியாது.

. மனிதன் unconscious. தான் பெற்றதை அறியான். இழந்ததையும் அறியான்.

. சம்பிரதாயம் என்பது என்ன? ஏன் அது நம்மைப் பாதிக்கவேண்டும்?

. மனிதன் vital உணர்வால் வாழும் வாழ்விற்குப் பாதுகாப்புத் தருவது சம்பிரதாயம். ஆத்மாவால் வாழும் மனிதனை அது பாதிக்கும். விசேஷங்களில் மேளதாளம் உண்டு. அது விசேஷங்களை விசேஷமாக்கும். தியானத்தில் மேளவாத்தியம் வைக்க முடியுமா?

. ஸ்ரீ அரவிந்தம் மனத்திற்கு முழுமை தருகிறது. மனத்திற்கு முழுமையில்லை. முழுமையை இழந்தமனம் உணர்வுக்குக் கட்டுப்பட்டு அஞ்ஞான வாழ்வை வாழும்பொழுது சம்பிரதாயம் வருகிறது. உணர்வை விட்டு உயர்ந்து, மனத்தை அடைந்து, மனத்தில் முழுமை பெற்றபின் உணர்வுக்குரிய சம்பிரதாயம் பாதிப்பது இயற்கை.

. அர்த்தமற்றதற்கு அர்த்தம் தருவது சம்பிரதாயம்.

. அர்த்தமற்றதைத் திருவுருமாற்றத்தால் அர்த்தமுள்ளதாகச் செய்வது ஸ்ரீ அரவிந்தம்.

. அர்த்தமற்றதை அர்த்தமுள்ளதாக ஏற்பது சம்பிரதாயம்.

. கல்லை விக்ரஹமாக்கி தெய்வமாக வழிபட நாம் அர்ச்சனை என்ற சம்பிரதாயத்தை ஏற்கிறோம். ஒருவருக்கு இறைவன் தியானத்தில் சித்தித்த பின் கோவிலுக்குப்போய் அர்ச்சனை செய்தால், அதன்பிறகு தியானமே வாராது. இறைவன் தரிசனம் கிடைக்காது. தரிசனத்தையும், தியானத்தையும் இழந்தவர் அதை அறியாவிட்டால் அது துர்அதிர்ஷ்டம்.

. எந்த உயர்ந்த செயலிலும் இறைவன் பங்கு இருக்கும். அதை நாம் பெரும்பாலும் அறிவதில்லை. இறைவன் ஸ்பர்சமில்லாமல் எந்த நல்ல காரியமும் நிறைவேறாது. எலக்ஷனில், திருமணத்தில், பெருவிழாவில்,அவை முடிந்தபிறகு முக்கியஸ்தர்கள் கூடிப் பேசும்பொழுது "நல்ல வேளை கடைசி நேரத்தில் இது நடந்தது. இல்லையென்றால் எல்லாம் கெட்டுப்போயிருக்கும்"என்று கூறுவார்கள். சம்பிரதாயம், அந்த சந்தர்ப்பத்தை அழித்துவிடும்.

. 1947இல் 1 கோடி அகதிகளை சர்க்கார் சமாளிக்க முடியாத பொழுது மௌண்ட்பேட்டன் சமாளித்தார்.

. இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் சிப்பாய்கள் சேர்ந்துள்ள இடத்தை ஹிட்லர் பாம் போட முடிவுசெய்தான். அது நடந்து இருந்தால் போரை உலகம் இழந்திருக்கும். மூடுபனி வந்து அதைத் தடுத்துப் போரை வென்றது.

. IASபோன்ற பெரிய உத்தியோகத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள், "ஏனோ இன்டர்வியூவில் எனக்குத் திடீரென நல்ல பதில்கள் தோன்றின"என்பார்கள்.

. வரன் முடிந்தபின், "நாங்கள் எதிர்பார்க்கவில்லை. சம்பந்திகள் மனதில் நல்லெண்ணம் தோன்றியதால் விஷயம் முடிந்தது"என்று பேசுவதுண்டு.

. யோகி இறைவன் ஸ்பர்சத்தை எல்லாச் செயல்களிலும் காண்கிறார், அதனால் அவரால் யோகம் செய்ய முடிகிறது. நாம் ஒரு விஷயத்திலாவது அதைக் காணவேண்டும். சம்பிரதாயம் அந்த வாய்ப்பை அழித்துவிடும்.

கணவர் - நீ சொல்வதிலெல்லாம் சமர்ப்பணம் சுலபமாகத் தெரிகிறது;

தாயார் - சுலபம் என்று ஒன்றை நாடினால், பலன் பெரியதாக இருக்காது. சமர்ப்பணம் மிகவும் கடினம்:

. சுலபமானது வேண்டும் என்ற மனப்பான்மைக்கு எதுவும் கடினம். தோற்றத்திற்குச் சுலபம் உண்மையில் சுலபமன்று.

. சமர்ப்பணத்தை நன்கு அறிய நாம் பிரம்மத்தை நினைவுபடுத்துவது பயன்தரும்.

. ஜடம் முதல் சத்வரை எட்டு நிலைகள். பிரம்மம் அவற்றைக் கடந்தது.

. ஜடஉலகில் எளிய காரியங்களே நடைபெறும். 10,000 ஆண்டுகட்குமுன் மனிதன் ஜடமாக வாழ்ந்தான்.

. vital living உயிரால் வாழ்ந்த மனிதனை எகிப்து, இந்தியா, தென் அமெரிக்காவில் 1000 ஆண்டுகட்குமுன் காண்கிறோம்.

. ஐரோப்பா, அமெரிக்காவில் விஞ்ஞானம் வகுத்தவாழ்வை மனத்தால் வாழும் மனிதன் வாழ்கிறான்.

. ஜடமானநிலையில் மிகக்குறைவாகவும், உயிரான நிலையில் அதிகமாகவும், மனத்தால் வாழும்பொழுது ஏராளமாகவும் மனிதன் சாதித்திருக்கிறான்.

. ஜடத்திற்குரிய திடம் வாழ்வுக்கில்லை. வாழ்வுக்குரிய சக்தி மனத்திற்கில்லை.

. சக்தி (குணம், ரூபம்) குறையக் குறைய சாதிப்பது அதிகமாகிறது.

. சத்தியஜீவியம், ஆனந்தம், ஜீவியம், சத்என்ற நிலைகளை அடையும்பொழுது குணமும், ரூபமும் மேலும் குறைகின்றன. அதனால் அவற்றால் அதிகமாகச் சாதிக்கமுடியும்.

. சத்தைக் கடந்து பிரம்மத்தில் போனால் எந்தவிதமான சக்தியோ, குணமோ, ரூபமோ, எதுவுமேயில்லை. எதுவுமேயில்லை என்ற காரணத்தால், பிரம்மம் பிரபஞ்சத்தை, எல்லாவற்றையும் சிருஷ்டித்தது.

குறையக் குறைய சிருஷ்டிக்கும் திறன் அதிகமாகும்.

. பிரார்த்தனை முதல் கட்டம். அது ஓரளவு சாதிக்கிறது.

. மனமாற்றம் அடுத்த கட்டம். அது அதிகமாகச் சாதிக்கிறது.

. மேல்மனத்தின் காலம், சிந்தனை அழிந்தால் மேலும் அதிகமாகச் சாதிக்கும்.

. பிரார்த்தனையில் கேட்பதைவிட மனமாற்றத்திலும், காலத்தைக் கடப்பதிலும் நாம் குறைவாகக் கேட்பதால், அதிகமாகக் கிடைக்கிறது.

. சமர்ப்பணத்தில் எதையும் கேட்பதில்லை. மேலும் அதிகமாகப் பெறுகிறோம்.

. சரணாகதியில் கேட்கவேண்டும், கேட்கவேண்டாம் என்ற எண்ணமே அழிவதால் பிரம்மம் சித்திக்கிறது.

. அனைத்தையும் பெறுவது சமர்ப்பணம்.

. எதையும் கேட்கமுடியாத மனநிலையிருப்பதால் எல்லாம் கிடைக்கிறது.

. பலன் பிரம்மாண்டமானதால், செய்வது கடினம்.

. அன்னையை முழுமையாக ஏற்றால், அதுவும் கடினமில்லை.

தாயார் - நாம் மனத்தாலான மனிதன் என்றாலும், செயலளவில், நடைமுறையில் உடலால் வாழ்கிறோம். தாகம் எடுத்தால் தண்ணீர் குடிப்பதைப்போல், மேலே ஏதாவது விழுந்தால் உதறுவதுபோல், உடல் செயல்படத் தயாராகக் காத்துள்ளது:

. உடல் எந்த நிமிஷமும் தன்னையறியாதது போல் உஷாராக இருப்பதால் தாகம், உதறுவது, அதை அறியாமல் நடக்கிறது. சமர்ப்பணம் அங்கு ஆரம்பிக்கவேண்டும். உண்மையில் அதையும் கடந்து சமர்ப்பண மையம் உள்ளது.

. ஜன்னி வந்த நேரம், மந்திரத்தால் மயக்கம் வந்தபொழுது, சந்தோஷத்தால் பரவசப்பட்டபொழுது, பீதியால் உடல் தன்னைப் பாதுகாக்க முயலும்பொழுது அந்த ஆழத்தைத் தொடுகிறது. அதுவே சமர்ப்பணத்திற்குரிய நிலை.

. நாம் மனம், உயிர், உடலைக் கடந்து, அவற்றின் மையமான பிரகிருதியைக் கடந்து, புருஷனையடைந்து, அதையும்கடந்த சைத்தியப் புருஷனில் இருந்தால் சமர்ப்பணம் பலிக்கும்.

. அந்நிலை ஒருக்ஷணமாவது இல்லாமல் சமர்ப்பணம் முடியாது.

. அந்நிலையில் கடந்தகாலமும், எதிர்காலமும், நிகழ்காலத்திற்குள் வருவதால் நம் சமர்ப்பணம், செயல் - கல்லூரி அட்மிஷனை உதாரணமாகக் கூறலாம் - எதிர்காலத்தில் என்ன செய்யும் எனக் காட்டும். நாம் எந்த வேலைக்குப் படிப்பை முடித்து போகின்றோமோ அந்த ஆபீஸ் கண்முன் தெரியும்.

. இந்த அட்மிஷனுக்குக் காரணம் உள்ளூர் M.P..என நாம் அறிவோம் என்றால், உண்மையில் அவர் தகப்பனார் நம் பெரியப்பாவின் உதவி பெற்றவரானால், அட்மிஷன் சமர்ப்பணமாகும் பொழுது பெரியப்பா கண்முன் வருவார். அன்று பெரியப்பாவின் உதவி செய்யும் மனப்பான்மை இன்று அவர் மகன்மூலம் நமக்கு அட்மிஷனாக வருகிறதுஎன அக்காட்சி சொல்லும்.

. உடலும், உயிரும் அந்நிலையில் உலகோடு ஒன்றியிருப்பதால் நம்முள் தொடர்பு கொண்டு, இப்பொழுது நம் செயலால் அட்மிஷன் பெறுபவர் பலர் மனத்தில் நினைவாகவோ, கண்ணில் காட்சியாகவோ வருவார்.

. அது அகந்தை கரையும் நேரம் என்பதால் உடல் காற்றில் பறப்பது போலிருக்கும்.

. நம்மையறியாமல் சொல் நம் வாயால் வரும். அச்சொற்கட்கு அர்த்தம் அப்பொழுது புரியாது. எதிர்காலத்தில் பலிக்கும்பொழுது புரியும். அக்கல்லூரி ஹாஸ்டலில் A 13என்ற ரூம் ஹாஸ்டல் செக்ரடரிக்குடையது என்றால், நமக்கு A 13 வேண்டும் என வாய் சொல்லும். செக்ரடரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபின் அச்சொல் ஏன் வாயில் வந்தது என விளக்கும். இவை மறந்துபோவதும் உண்டு.

. எந்த அளவுக்கு விழிப்புள்ளதோ, அந்த அளவுக்கு எதிர்காலம் தெரியும்.

. அவசரம், படபடப்புப் போய் அகண்ட அமைதி எழும்.

கணவர் - பிரம்மம் அற்புதமாகச் சித்திக்கவில்லையா?

. பிரம்மம் சத்தாகி - சத் அசத்தாகி - சத் 5 வகைகளாக வெளிப்படுவதில் ஆன்மா ஒன்று. ஆன்மாவின் 12 அம்சங்களில் ஒன்று மூலமாக ஆன்மாவை அடையலாம். சத் ஆன்மாவைக் கடந்தது. பிரம்மம் சத்தைக் கடந்தது.

. "நாழி முகவாது நானாழி"என்பதுபோல் பிரம்மத்தை எந்தக் கருவியால் நாம் அடைகிறோமோ அதற்கேற்ப பிரம்மம் தன்னை வெளிப்படுத்தும்.

. ரிஷிகள் மனத்தால் தவம் செய்தனர். அவர்கள் அக்ஷரப்பிரம்மம் வரை சென்று அதையே பிரம்மம் எனக் கருதினர்.

. அக்ஷரப்பிரம்மம், க்ஷரப்பிரம்மம் இரண்டும் பிரம்மத்தின் பகுதிகள்.

. அந்த "முழுமை"யான பிரம்மமே மனத்தால் காண்பதால் முழுபிரம்மமில்லை.

. ஏனெனில், அது மௌனப்பிரம்மம். அடுத்த பகுதி சலனப் பிரம்மம்.

. இரண்டும் சேர்ந்தது பிரம்மத்தின் முழுமை.

. அது மனத்திற்குப் புலப்படாது. சத்தியஜீவியத்திற்குப் புலப்படும்.

. அதை உலகில் முதலில் கண்டவர் பகவான் ஸ்ரீ அரவிந்தர். அடுத்தபடியாகக் கண்டு, சித்தித்தவர் அன்னை.

. அது பிரம்மம் அற்புதமாக சித்திப்பது.

. அது ஒளியைவிட வேகமானது.

. அந்த பிரம்மம் புறத்திற்கோ, அகத்திற்கோ உரியதன்று. புறத்தைத் தன்னுட்கொண்ட அகத்திற்குரியது.

. அந்த முழுமையான, அற்புதமான பிரம்மம் யுகத்தை க்ஷணமாக்கும்.

. அன்னை சிதம்பரம் போனபொழுது காரிலிருந்து இறங்குவதை பலரும் கூடிப் பார்த்தபொழுது, சிலம்பம் கற்றுக்கொண்ட ஒருவரும் அன்னையைக் கண்டார். அவர் ஆத்மா விழிப்பானது. அன்னையை தரிசித்ததில் மேலும் விழிப்புற்றது. அவருடைய எல்லாப் பிள்ளைகளும் அன்பராயினர். அவர் 1973 நவம்பர் 17ஆம் தேதி அன்னை சமாதியடைந்த நாளில் காலமானார். அவர் சைத்தியப்புருஷன் விழிப்பானதால், அவர் பிறர் இனிக்கப் பழகுவார். காப்பிக் கடை நடத்தினார். அவர் கையால் காப்பி சாப்பிட்டவர், வேறு காப்பி சாப்பிடப் பிரியப்படமாட்டார்கள். அவர் கடைக்கு வந்து டிபன் சாப்பிட்டவர், அவரில்லை என்றால், அவர் வரும்வரை காத்திருந்து காப்பியை அவர் கையால் சாப்பிடுவர்.

. சைத்தியப்புருஷன் சற்று வெளிப்படுவது காப்பிக்கு ருசி அளிக்கிறது.

. சைத்தியப்புருஷன் வெளிப்பட்டால் வாழ்வு இனிக்கும்.

. மனிதவாழ்வு சைத்திய ஸ்பர்சத்தால் இனிக்கிறது.

. தெய்வீக வாழ்வென்பது பிரம்மமே சைத்தியப்புருஷனாகி வாழ்வாக வெளிப்படுவதாகும்.

. கடலினின்று நீர் மேகமாகி மழையாகப் பெய்து வாழ்வை வளமாக்குகிறது. பிரம்மம் கடல். கடல் உப்பு நீரானதால் உபயோகப்படாது. கடலே அமிர்தமாகி பாற்கடலானதாகப் புராணம் கூறுவது நம்வாழ்வில் பலிப்பது தெய்வீக வாழ்வாகும்.

கணவர் - சப்தம் உள்ளிருந்து எழவேண்டும். உள்ளிருந்து ஒரு கதிர் எழுந்து உலகில் உலவி அனைவரையும், இந்தக் கருவிகள் - தொடுவது, மணியடிப்பது - இல்லாமல் தொட வேண்டும்:

. தொடுவதால் பரவுவது உணர்வு (vital sensation). பிரம்மத்தின் கதிர்கள் கருவியில்லாமல் பரவும். கருவிமூலம் பரவும் பிரம்மத்தின் கதிர்கள் பிரம்மம் உணர்வில் வெளிப்படும் கதிர்களாகும்.

. பிராணயாமம் செய்பவர்கள் உடல் சக்தியால் நிரம்பியிருக்கும். அவர்கள் கைபட்டால் பிறர்வியாதி குணமாகும். அது உணர்வின் சக்தி. பிரம்மம் சித்தித்தவர் பார்வைக்கு தீட்சை தரும் தகுதியுண்டு.

. பூரணயோகத்தில் தீட்சை என்ற ஒரு சாங்கியமில்லை.

. பூரணயோகத்தில் சித்திப்பது முழுப்பிரம்மம்.

. அது சாங்கியங்களைக் கடந்தது.

. அன்னையின் பார்வை தீட்சையாகும்.

. பிரம்மரிஷியின் வாக்கு, பார்வை சக்திவாய்ந்ததானாலும், அது முழுப்பிரம்மமில்லைஎன்பதால், தீட்சைக்கு மந்திரம், சாங்கியம் உண்டு.

. முழுப்பிரம்மம் என்பது மூன்றாம் நிலை காலத்திற்குரியது, பிரம்ம ஜனனத்திற்குரியது. அது எங்கும், எந்நேரமும் தவழ்வது. அதற்குச் சூழலே போதும். பார்வை தீட்சையாகும்.

. IAS ஆபீசர்கட்கு 18 மாதப் பயிற்சியுண்டு.

. எந்த நிர்வாக அனுபவமுமற்ற அரசியல்வாதி மந்திரியானாலும், பயிற்சி தருவதில்லை.

. அரசியல், நிர்வாகத்தைக் கடந்த நிலையில் உள்ளது. அரசியலுக்குள்ள முழுமை, நிர்வாகத்திற்கில்லை.

. அம்முழுமை புறத்திலில்லை என்பதால் ஒலி, சொல் தேவையில்லை.

. அது அகத்திற்குரியதுஎன்பதால், சப்தம் உள்ளிருந்து எழவேண்டும்.

. பகவான் ஸ்ரீ அரவிந்தர், "உலக சக்திகள் என் எண்ணங்களைப் பூர்த்தி செய்துள்ளன. சீக்கிரமாக இல்லாவிட்டாலும், அவை பூர்த்தி அடைந்துள்ளன"எனக் கூறுகிறார்.

. இந்திய விடுதலை, ஆசிய விடுதலை அவருடைய இரு இலட்சியங்கள்.

. "ஐரோப்பியநாடுகள் இணையும்"என்று பகவான் கூறியது 60 ஆண்டுகட்குப் பின் நிறைவேறிற்று.

. பாகிஸ்தான் 25 ஆண்டுகளில் உடையும் என பகவான் கூறியபடி பங்களாதேஷ் 25ஆம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து பிரிந்தது.

. லியனார்டோவாக ஸ்ரீ அரவிந்தர் அவதரித்து எழுதியவை ஸ்ரீ அரவிந்தர் பிறந்த பின் பூர்த்தியாயின.

. 1930இல் அன்னை, நேரு இந்நாட்டிற்குத் தலைவராவார் என்றதும் நிறைவேறியது. கருவியின்றி பூர்த்தியாகும் கருத்து ஸ்ரீ அரவிந்தம்.

அனைவரும் நடப்பனவற்றையெல்லாம் கூர்ந்து கவனித்து அன்னை கோணத்தில் புரிந்துகொள்ள முயன்றனர்:

. கூர்ந்து கவனித்தால் உலகமே புரியும். உள்ளே போனால் பிரபஞ்சமும் புரியும். அத்துடன் எதுவும் செய்ய தைரியம் வாராது.

. உடல் நலமாக இருக்கும் வரை சரி. ஏதாவது வியாதி வந்தால் மருந்து சாப்பிடுகிறோம், சரியாகிறது. டாக்டருடனிருந்தாலும், மெடிகல் கல்லூரியில் படித்தாலும், கிருமிகள், வைரஸ், தொத்துவியாதி, வரக் கூடிய வியாதிகள், கான்சர் எப்படியெல்லாம் வரும் என அறிந்தால் பீதி எழும். எதையும் சாப்பிட தைரியமிருக்காது. இந்தக் கலவரத்தால் பல வியாதிகள் வரும்.

. நமது நம்பிக்கை மூடநம்பிக்கை. எதுவும் தெரியாமலிருப்பதால் வரும் தைரியம்; எல்லாம் தெரிந்தால் பயம் வரும். எல்லாம் தெரிந்தபின், எதுவும் தெரியாத பொழுதுள்ள தைரியம் வருவது அன்னை மீதுள்ள நம்பிக்கை. அது நமக்கில்லை.

அனைத்தையும் அறிந்து, அன்னை அதற்கும்மேலானவர்என அறிவது

அன்னைமீதுள்ள நம்பிக்கை.

. கணவர் கம்பனிப் பணத்தைக் கணக்கில் காட்டாமல் செலவு செய்யலாம் என நினைத்ததும், பணம் அதிகமாக வரும்பொழுது அம்மாவிடமிருந்து தெரியாமல் பணம் எடுத்துப் போகலாம் என சிறியவன் நினைத்ததும், எதிரொலித்து அவனைப் போலீஸ் சந்தேகப்பட்டதால், எந்த அளவு மனம் தூய்மையாக இருக்கவேண்டும் என நாம் அறிகிறோம்.

. இதற்கு நேர் எதிராக,

. திருடுவதே இலட்சியமாகக்கொண்ட அரசியல்வாதிகளுக்குத் திறமையால் பெருஞ்செல்வம் சேர்வதையும்,

. முதலாளியை சாமர்த்தியமாக ஏமாற்றி இலட்சக்கணக்காகத் திருடிய கணக்குப்பிள்ளைக்கு மகசூல் சாமர்த்தியத்தால் நெம்பர் 1ஆகக் கூடிவருவதும், பிள்ளைகள் பெரிய பட்டம் எடுப்பதும், பெருஞ்சொத்து சேர்வதும் காண்கிறோம். அத்துடன் தீராத வியாதி, அகால மரணத்தையும் தருகிறது.

. அன்னை உத்தரவை நேரடியாக மீறியவர் செய்த காரியம் நாடெங்கும் பிரபலமாகிறது, அவர் வாழ்வில் துக்கம் வருவதும் காண்கிறோம்.

. எதை ஏற்பது, எப்படிப் புரிந்துகொள்வது?

. திறமைக்கும், உழைப்புக்கும் துரோகத்தை மீறி ஜெயிக்கும் திறனுண்டு. எந்த அளவு திறமையும் துரோகத்திற்கு ஈடுசெய்ய முடியாது.

. நடப்பனவற்றைக் காண்பவர் நல்லதைத் தேர்ந்தெடுப்பார் எனக் கூற முடியாது.

. காரியம் கூடிவருவதால் மனம் சுத்தம் எனக் கூற முடியாது.

. காரியம் கூடிவாராமல் மனம் செயலில் சுத்தமாக இருக்கமுடியாது.

. காரியம் கூடிவரவேண்டும், மனம் செயலில் சுத்தமாக இருக்கவேண்டும்

என்பது அதிகபட்சமில்லை, அன்பருக்குக் குறைந்தபட்சமாகும்.

தொடரும்.....

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

தர்க்கமும், குதர்க்கமும் மனிதனுக்கு இன்றியமையாதவை. இடைவிடாமல் தன்னை அடுத்தவருடன் ஒப்பிட்டுப்பார்ப்பது அவன் உணர்வுக்குரிய பழக்கம். அதனால் அவனால் அவர்களுடைய நிலையைவிட உயரமுடிவதில்லை. உடலால் வாழ்பவன் எதையாவது செய்தபடி இருக்கிறான். மனமும், உணர்வும், உடலும் இதுபோல் தங்கள் வாழ்வைக் காப்பாற்றிக் கொள்கின்றன.

ஒப்பிட்டுப்பார்த்தால் உயரமுடியாது.


 


 


 


 


 


 


 book | by Dr. Radut