Skip to Content

03.அக வாழ்வு

அக வாழ்வு

கர்மயோகி

.மனிதனுடைய வாழ்வு, உலகில் அதாவது புற உலகில் உள்ளது. மனித வாழ்வு செயல்களாலானது. எனவே அது புறத்தில் உள்ளது.

.செயல் வெளியிலிருந்தாலும், செயல் எண்ணத்தில் எழுவதால், எண்ணம் மனத்திற்குடையது என்பதால் மனவாழ்வு - அகவாழ்வு - புறவாழ்வுக்கு அடிப்படை.

.புறவாழ்வு காலத்திற்கும், கர்மத்திற்கும் கட்டுப்பட்டது.

.மனிதன் புறத்தினின்று அகத்திற்கு வந்தால் வாழ்வு யோகமாகும்.

.அகம் புறத்தை ஆரம்பிக்கிறது. அதனால் அகம், புறத்தைவிடப் பலமானது.

.எண்ணம் செயலை ஆரம்பிப்பதால், எண்ணம் செயலை நிர்ணயிக்கும். எனவே எண்ணம் செயலைவிட வலுவானது.

.நினைத்தவுடன் செயல்படுபவன் எளிய மனிதன். நினைவைப் பாராட்டி, அதில் ஆழ்ந்து, ஆராய்ந்து, செயல்படுபவன் உயர்ந்த மனிதன்.

.அனுபவம் குறைவான பொழுது செயலை மனிதன் பாராட்டுவான். அனுபவம் நிறைந்தபொழுது மனிதன் எண்ணத்தைப் பாராட்டுவான்.

.இவை அகம், புறத்திற்குரிய லட்சணங்கள்.

இவற்றைக் கடந்த நிலையுண்டு.

அது புறத்தை தன்னுட்கொண்ட அகம்.

அது அகத்தின் ஆழத்திலுள்ளது.

அங்குள்ள நினைவு, ஆழ்ந்த எண்ணம்.

அந்த ஆழத்தில் எழும் எண்ணம், புறத்தால் கட்டுப்படாது, புறத்தைக்  கட்டுப்படுத்தும்; தவறாது தன்னைப் பூர்த்தி செய்துகொள்ளும். அது புறத்தைப் பிரதிபலிக்கும் அகமன்று; புறத்தை உட்கொண்ட அகம்.

.மனிதன் புறத்தை அறிவான். புறத்தை மட்டும் அறிவான்.

புறம் புளகாங்கிதம் தருவது மனித வாழ்வு.

அகம் உண்டெனினும், அவனுக்கு அகம் நினைவு வாராது.

கண்ணிலும், கருத்திலும் படுவது புறம்.

மனிதர்கள், செயல்கள், கடை, பொருள் புறம்.

நினைவு, உணர்வு, நெகிழ்வு அகம்.

அகம் நினைவு வாராது. வந்தால் மனத்தைத் தொடாது.

.ஒருவரைக் கண்டவுடன் அவர் அந்தஸ்து நினைவு வருவது போல், அவர் குணம், தன்மை, சுபாவம், ஆத்மா நினைவுக்கு வருவதேயில்லை.

புறம் பூரணம், அகம் நமக்கு அப்பாற்பட்டது.

.புறத்தினின்று அகத்திற்குப் போவது ஆழ்ந்த நிலை.

ஆழ்ந்த நிலையும் அகமாகாது.

அகத்தின் ஆழ்ந்த நிலையே அகமாகும்.

அவ்வாழத்தில் நிலைப்பதே அகவாழ்வு.za

அந்த அகவாழ்வுக்கு உலகமும், பிரபஞ்சமும் கட்டுப்படும்.

மனிதன் அதையடைவது சத்தியஜீவியம் பிறப்பது.

அந்நிலை ஆத்மா, ஜடத்தை ஆட்சி செய்வது.

அது பூரணத்தை மனிதன் தெரிந்து, பெற்று, சித்தியடைவதாகும்.

.அவ்வாழத்தை நாம் எட்ட வேண்டும், எட்ட முடியுமா?

முடியும் என்றால், எப்படி எட்டுவது?

எட்டியது எப்படி நிலைப்பது? எப்படி நிலைத்து சித்திப்பது?

என்றும் போல் இந்த நிலையையும் யோகத்திற்காகக் கருதாமல், யோக வாழ்வுக்காகக் கருதுவோம்.

யோகம் ஒரு மனிதன் உலகத்தை உய்விப்பது.

யோகவாழ்வு அவ்வுயர்ந்த சக்தியால் ஒருவன் தன் வாழ்க்கை நிலையை மனித நிலையினின்று, அன்னை நிலைக்கு உயர்த்துவது.

.இதை எங்கு ஆரம்பிப்பது? எப்படி ஆரம்பிப்பது? எப்படித் தொடர்வது?

எந்த அளவுக்குத் தொடர்வது?

அதற்குரிய ஆழம் எது? யோகத்திற்குரிய ஆழத்திற்கும், யோகவாழ்வுக்குரிய ஆழத்திற்கும் வித்தியாசமில்லையா? யோகத்திற்குரிய ஆழத்தை அன்பன் எட்ட முடியுமா?

1.இங்கு, இப்பொழுது, நம் செயலுக்கு முன்னுள்ள எண்ணத்திலும்,அதன் முன்      உள்ள உணர்விலும், அதையும் கடந்த சூட்சும உணர்விலும் (Subtle impulse) ஆரம்பிக்க வேண்டும்.

2.தீர்க்கமான முடிவால் ஆரம்பிக்க வேண்டும்.

3. தாய் குழந்தையை வளர்ப்பதைப் போல் தொடர வேண்டும்.

4. அந்த எண்ணம் ஆழத்தில் நின்று நிலைக்கும் வரைத் தொடர வேண்டும்.

5.அதற்குரிய ஆழம்: மனத்தின் சத்தியம் அன்னையை உண்மையாக நெகிழ்ந்து விழைவது ( Inner sincerity of intense Truth) .

6. யோகமும், வாழ்வும் தரத்தில் ஒன்றே, அளவில் வேறு. அந்தஸ்து உயராமல் பிரதமரைச் சந்திக்க முடியாது.வாழ்வு பிரதமரை நாம் சந்திப்பதுபோல; யோகம் நாமே பிரதமர் ஆவதாகும்.

7.இது மனிதனால் எட்ட முடியாத ஆழம். அன்னையை நம்பிக்கையுடன் அழைத்தால் அருள் இதைச் சாதிக்கும்.

முதற்படி:

மனம் அன்னையை நினைந்து, நாடி, நெகிழ்ந்து, "நாம் அவருக்கு -ரியவர்; நம் செயலும், பொருளும், வாழ்வும், ஆத்மாவும் அவருக்கு மட்டுமுரியன' என உணரும் பொழுது பரவயப்படுவது.

.அந்த நேரம் எடுக்கும் முடிவு ஆழமான முடிவு.முடிவு: "அன்னை மட்டும் வேண்டும்" என்பது முடிவு.

முடிவு மனம் விசாலமாக உதவினால் சரியான முடிவு.முடிவு ஆனந்தம் கொடுப்பது அன்னைக்குகந்த முடிவு.அப்படி எடுக்கும் முடிவு ஆழத்தில் எடுப்பது, நின்று நிலை பெறும்.

.அதே உணர்வோடு அனுதினமும் அம்முடிவைச் செயல்படுத்த வேண்டும்.

.மனம் பொய்யை விட்டு அகல வேண்டும்.

பொய் வாய்வரை வந்தும் போகக் கூடாது.

பொய் உள்ளிருந்து எழக்கூடாது.

மெய், ஒளியாக உள்ளிருந்து எழ வேண்டும்.

மெய்யின் சத்தியம், உடல் பெற்ற சத்தியம்.

"காயமே இது பொய்யடா" என்பது காயம் எனும் மெய், மெய்யாகும்.

அன்னையை நாடுவது ஆழத்திலிருந்து நாட வேண்டும்.

உறவு, நட்பு, பொருள், புகழைவிட அன்னை மனத்திற்கு இதமாக இருக்க வேண்டும்.

மனம் தானே எந்த நேரமும் அன்னையை ஆனந்தமாக நாட வேண்டும்.

.இதை நாம் செய்கிறோம் என்ற நினைவுள்ளவரை ஆரம்பிக்க முடியாது; ஆரம்பித்தால் நீடிக்காது.

செய்வது நாமில்லை; சக்தி. நம்முள் சக்தி செயல்படுகிறது என்பதை அறிவதும், உணர்வதும், உணர்ந்து பூரிப்பதும் செய்ய உதவும்.

.நம்மீதுள்ள நம்பிக்கை போய், அன்னை மீது நம்பிக்கை எழுவது,நம்பிக்கையாகும்.

அந்த நம்பிக்கைக்குப் பக்தியுண்டு, ஆர்வமும் உண்டு. அதுவே நம் பங்கு.

.பிரார்த்தனை பலித்தவுடன் பலன் தெரிகிறது. பலனை அளித்தது அன்னை என்பதால் மனம் பலனை விட்டகன்று அன்னையை நாடி, அன்னையில் நிலைப்பது சரி.

பலனை நினைத்தால், அன்னை மறந்து போகும்.

அன்னையை நினைத்தால், பலன் அன்னையுள் அமிர்தமாக ஆழத்தில் உறையும்.

பலனுக்கு நாம் வரக்கூடாது.

அன்னை நம் நினைவை அவரே பலனை நினைக்கச் செய்ய வேண்டும்.

.நினைவு உணர்வாவது உத்தமம்.

உணர்வு பூரிப்பது அருள்.

பூரித்த உணர்வு சரணாகதியில் பூரணமாகும்.

அந்தச் சரணாகதிக்கு முன் 8 நிலைகள் உள்ளன.

1) நம்பிக்கை

2) பணிவு

3) துதி

4) உருக்கம்

5) அர்ப்பணம்

6) ஆனந்தம்

7) அன்பு

8) பூரிப்பு

9) சரணாகதி

நம்பிக்கை பூரணமாகி பணிவு துதி பாட விழைவது முதல் 3 நிலைகள்.

உடல் உருகி, உள்ளம் தன்னை அர்ப்பணித்து, ஆனந்தம் பெறுவது அடுத்த 3 நிலைகள்.

ஆனந்தம் ஆத்மாவில் அன்பாகி, அன்பு ஜீவனை நிரப்புவதால் பூரித்து, பூரிப்பு பரிணாமத்தால் பிரம்மத்தை நினைவுகூறுவது பிரம்மஜனனம். அதற்குரிய பாங்கு சரணாகதி.

சமர்ப்பணம் சரணாகதியில் முழுமை பெறும்.

சரணாகதி யோகத்தை முழுமைபெறச் செய்யும்.

 

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

அன்பு, அனுதாபம், பிறர் மீது நம்பிக்கை ஆகியவை உயர்ந்த குணங்கள். ஆனால் நீடிக்கும்தன்மை பெற்றவையல்ல அவை.

உயர்ந்த குணங்களும் குணங்கள் என்பதால் நீடிக்கா.

 



book | by Dr. Radut