Skip to Content

08.அமெரிக்காவின் முன்னேற்றத்திலிருந்து இந்தியர்களாகிய நாம் அறிந்துகொள்ள வேண்டியது

அமெரிக்காவின் முன்னேற்றத்திலிருந்து இந்தியர்களாகிய நாம் அறிந்துகொள்ள வேண்டியது

                                    (சென்ற இதழின் தொடர்ச்சி....)             N.. அசோகன்

      இப்பொழுது அமெரிக்காவின் வளர்ச்சியை விரைவுபடுத்திய சில வளர்ச்சி விதிமுறைகளை (Development principles) பற்றிப் பார்ப்போம்வளர்ச்சி விதிமுறைகள் நிறையவிருந்தாலும் இங்கே நான் எடுத்துக் கொள்ளப்போவது குறிப்பாக 10 விதிமுறைகள்தாம். அவை பின்வருமாறு:

1.முன்னேற்றம் என்பது முன்னோடிகளால்தான் வருகிறது. சமூகத்தின் அடிமனதில் மறைந்துள்ள அறிவை முன்னோடிகள் மேலே கொண்டு வந்து வெளிப்படுத்தி சமூகத்தை அடுத்த உயர்ந்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறார்கள்.

2.பணம் மற்றும் டெக்னாலஜியைவிட முன்னேற்றத்திற்கு ஆர்கனைஷேஷன் முக்கியம். முன்னேற்றத்தை விரைவு படுத்துவதே ஆர்கனைஷேஷன் தான்.

3.முன்னேற்றத்திற்குச் சுதந்திரமான சூழல் அவசியம் தேவைசுதந்திரமான  சூழலில்தான் முன்னேற்றம் நீடிக்கும்; நிலைத்து நிற்கும்.

4.முன்னேற்றத்தை விரைவுபடுத்த வேண்டுமென்றால், அதற்கு ஒத்துவாராத பழைய விஷயங்களைக் கைவிட வேண்டும்.

5.முன்னேற்றத்திற்குத் தனித்தன்மை (individuality) நிறைந்த பர்சனாலிட்டி வேண்டும்Value based functioning அதாவது பண்புகளைக் கடைப்பிடித்தல் முன்னேற்றத்தைப் பல மடங்கு அபிவிருத்தி செய்யும்.

6.மனிதனுடைய அறிவாற்றல் தான் அவனுக்குள்ள சிறந்த resources.  அதை வைத்துக் கொண்டு அவன் வரம்பிற்குட்பட்ட விஷயங்களையும் மாற்றி வரம்பற்ற வளர்ச்சியைக் கொண்டு வரலாம்.

7.மனிதனுக்கு வரக்கூடிய நெருக்கடிகளும், சவால்களும் (challenges) அவன் முன்னேற்றத்தை விரைவுபடுத்துகின்றன.

8. தோற்றத்தைவிட உள்ளிருக்கும் சாரம் முக்கியம். சாரத்தைக் கருதுபவன் விரைவில் முன்னேறுவான். தோற்றத்தைக் கருதுபவன் முன்னேறுவதற்குப் பதிலாகப் பின்தங்குவான்.

9.வெளிக்கட்டுப்பாடுகளைவிட சுயக்கட்டுப்பாடுதான் மனிதனை முன்னேற வைக்கும்.

10. வாழ்க்கையில் முன்னேற புதுமையை நாடும் மனோபாவம் தேவை. புதுமையை நாடுவதற்கு curiosity தேவை.  Curiosity, கண்டுபிடிப்புமுன்னேற்றம் இவை மூன்றும் நெருங்கிய தொடர்பு உடையவை.

      மேற்சொன்ன விதிமுறைகள் எல்லாம் அமெரிக்காவின் முன்னேற்றத்திற்கு எந்த அளவிற்கு உதவியுள்ளன என்று இப்பொழுது பார்ப்போம்.

1. உலகம் முன்னோடிகளால்தான் முன்னேறுகிறதுஎன்று சொன்னேன்அந்த முன்னோடிகள் தனி நபர்களாகவோ, ஒரு குடும்பமாகவோ, ஒரு கம்யூனிட்டியாகவோ மற்றும் ஒரு தேசமாகவோகூட இருக்கலாம். அவர்களுடைய செயல்பாடு புதுமையாகவும், சமூகத்தை அடுத்த உயர்நிலைக்குக் கொண்டு போவதாகவுமிருந்தால், அவர்கள் முன்னோடிகள்என்ற சிறப்பிற்குத் தகுதியுடையவர்களாகிறார்கள். சராசரி மனிதனுக்கும் சரி, பொதுமக்களுக்கும் சரி, புதுமையான சிந்தனைகளோ, புரட்சிகரமான எண்ணங்களோ தோன்றுவதில்லை. தலைவர்கள் தோன்றி புது வழி காட்டினால், அத்தலைவர்கள்மேல் நம்பிக்கை வைத்து அவர்கள் காட்டிய வழியில் நடந்து இவர்களும் முன்னேறுவார்கள். தலைவர்களுடைய புரட்சிகரமான சிந்தனைகளும், செயல்பாடுகளும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருந்தாலோ, அல்லது பிடிக்காமல் போனாலோ முன்னோடிகளை  எதிர்த்து அழிக்கவும் செய்வார்கள்சமூகத்தின் எதிர்ப்பை முறியடித்து, அவர்களையும் தன் வழிக்குக் கொண்டு வரக்கூடியவர்கள் வெற்றிகரமான முன்னோடிகளாக அமைகின்றனர்.

      முன்னோடிகள் எல்லாத் துறைகளிலும் தோன்றுகிறார்கள். ஆன்மீகம், அரசியல், விஞ்ஞானம், டெக்னாலஜி, கல்வி மற்றும் இலக்கியம், கலைகள் என்று எல்லாத் துறைகளிலும் முன்னோடிகள் உண்டுஅன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் ஆன்மீகத்தில் முன்னோடிகள்.  பரிணாமத்தின் இறுதிக் கட்டம் மனிதன் இல்லை; மனிதனைத் தாண்டி சத்தியஜீவிய மனிதன் உருவாகப் போகிறான் என்றவொரு புதிய விஷயத்தை நமக்குத் தெரிவித்தார்கள்ஏசுநாதர் மதவழிபாட்டில் முன்னோடியாக விளங்கினார்ஆண்டவன் கடுமையும் அதிகாரமும் நிறைந்தவர் என்று நம்பிய யூதமக்களிடம் அவர் ஆண்டவன் கருணையே வடிவானவன் என்றொரு புதிய கருத்தை வெளியிட்டார்யூத குருமார்கள் அவரை எதிர்த்தார்கள். அவர்கள் எதிர்ப்பிற்கு அவர் பலியானார்.  ஆனால் அவர் வெளியிட்ட கருத்து பரவி, புதிய மதமே தோன்றியது.

      காந்தியடிகள் அரசியலில் முன்னோடியாக விளங்கினார். போரையும், வன்முறையையும் தவிர்த்து, அஹிம்சையையும், சத்தியாக்கிரஹத்தையும் மட்டும் கடைப்பிடித்துச் சுதந்திரத்தைப் பெறலாம் என்றொரு புரட்சிகரமான கருத்தை வெளியிட்டார்மக்களிடையே அதற்கு நல்ல வரவேற்பிருந்தது; ஆதரவு திரண்டது; அரசியல் தலைவரானார்; நாட்டிற்கு விடுதலையும் வாங்கித் தந்தார். ஆல்பர்ட் என்ஸ்டைன் விஞ்ஞானத்தில் முன்னோடியாக விளங்கினார்Matter மற்றும் எனர்ஜியைப் பற்றிப் புரட்சிகரமான கருத்துகளை வெளியிட்டு, matter, எனர்ஜி இரண்டும் தொடர்புடையவைஇரண்டும் ஒரே விஷயத்தின் இரு வேறு வடிவங்கள்என்று காட்டினார். அவருடைய சிந்தனையை உலகம் ஏற்றது. விஞ்ஞான ஆராய்ச்சியே திசை மாறியது. டெக்னாலஜியில் அமெரிக்கத் தொழிலதிபர் Henry Ford முன்னோடியாக விளங்கினார். கார் உற்பத்தியில் assembly-line mass production என்ற புதிய முறையைக் கொண்டு வந்தார்.  இதனால் கார்களின் உற்பத்தி எண்ணிக்கை பல மடங்கு பெருகியதுஉழைப்பாளி வர்க்கத்தை சேர்ந்தவர்களும் வாங்கக்கூடிய அளவிற்கு காரின் விலை குறைந்தது. அமெரிக்காவை கார் மயமாக்கியவரே அவர்தாம்என்ற பெயர் வாங்கினார்.

     17ஆம் நூற்றாண்டில் 1620ஆமாண்டு முதன்முதலாக அமெரிக்க மண்ணில் குடியேறும் நோக்கத்துடன் காலடி எடுத்து வைத்து 102 இங்கிலாந்து நாட்டுக் குடிமக்களும் முன்னோடிகள் என்ற பெயர் பெறக் கூடிய தகுதி படைத்தவர்களென்று சொல்லலாம். தங்களுடைய மத நம்பிக்கைகளைச் சுதந்திரமாகக் கடைப்பிடிக்க ஒரு புதிய இடத்தைத் தேடி அவர்கள் அங்கு வந்தார்கள்இன்று அமெரிக்காவில் குடியேறும் உரிமை கேட்டு லட்சகணக்கானோர் அமெரிக்கத் தூதரகங்களில் உலகம் முழுவதும் விசா கேட்டு விண்ணப்பம் செய்து கொண்டிருக்கின்றனர்.  அமெரிக்காவில் குடியேறும் உரிமை சுலபமாகக் கிடைக்கும் என்று தெரிந்தால், இன்று லட்சகணக்கான இந்தியர்கள் வீடு, நிலம்,உடைமைகள் எல்லாவற்றையும் விற்று, டிக்கெட் வாங்கிக் கொண்டு, விமானமேறி அமெரிக்காவிற்குச் சென்று, செட்டிலாகிவிடுவர்.

       இன்று அந்நாட்டில் எல்லா நவீன வசதிகளும் இருக்கின்றனநல்ல வேலை வாய்ப்புமிருக்கின்றது. ஆகவே மக்கள் அங்குச் செல்ல ஆர்வமாக உள்ளனர் என்றால் அதில் எந்தவித ஆச்சர்யமுமில்லைஆனால் பதினேழாம் நூற்றாண்டில் எந்தவித வசதியுமில்லாத வெறுங்காடாக இருந்த நாட்டிற்குக் குடியேறும் நோக்கத்துடன் செல்வதற்கு எவ்வளவு தைரியமும், துணிச்சலும் வேண்டுமென்பதை நாமெண்ணிப் பார்க்க வேண்டும்: காட்டைத் திருத்தி, விளைநிலமாக்க வேண்டும்; மரங்களை வெட்டி, அவற்றை வைத்து வீடு கட்டிக் கொள்ள வேண்டும்; செவ்விந்தியர்களின் தாக்குதலையும், வனவிலங்குகளின் தொந்தரவையும் சமாளிக்க வேண்டும்; மருத்துவர்களே இல்லாத இடத்தில் வியாதி வந்தால், சிகிச்சை செய்துகொள்ள வேண்டும்; குளிர்காலத்தைச் சமாளிக்க வேண்டும்; உதவிக்கு ஆள் தேடாமல் தன் வேலையைத் தானே செய்துகொள்ள வேண்டும்என்று எத்தனையோ பிரச்சினைகள் அவர்களை எதிர்நோக்கி இருந்த பொழுது, தைரியமாக அவற்றைச் சமாளிப்போம் என்று தீர்மானித்து, அங்குச் சென்ற அந்த 102 பேர்களை நாம் முன்னோடிகள் என்றால், அது அவர்களுக்கு மிகவும் பொருந்தும்.

     அவர்கள் வெற்றிகரமாகக் காலனி அமைத்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்றசெய்தி தெரிந்த பின்னர்தான் படிப்படியாக மற்றவர்கள் போக ஆரம்பித்தார்கள்; அமெரிக்காவில் நாகரிகம் வளர ஆரம்பித்ததுஅப்படி முன்னோடியாகச் சென்றவர்கள் வெளிப்படுத்திய தைரியம், தன்னம்பிக்கை, கடினவுழைப்பு, அபாரத் திறமை, கடவுள் நம்பிக்கை, self-reliance, சுதந்திர வேட்கை போன்ற பல நல்ல குண விசேஷங்களை இன்றும் அமெரிக்கர்களிடையே நாம் பொதுவாகக் காணலாம்.

      1980ஆமாண்டுவாக்கில் கர்மயோகி அவர்கள் இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் ஓர் அமெரிக்கக் குடும்பத்தைக் குடிவைத்தால், அக்கிராமம் 10 வருடங்களில் முன்னேற்றம் பெற்றுவிடும் என்று சொல்வதுண்டுஅவர் கூற்றிலோர் உண்மை இருக்கிறதுஆரோவில்ல் அமெரிக்கர்களும், பிரெஞ்சு நாட்டவர்களும், ஜெர்மனிய நாட்டவரும் பலர் குடியேறியுள்ளனர். ஆரோவில்லைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் இவர்களுடன் உறவாடுகின்றனர்அதன் பலனாக இக்கிராமங்களில் சிறுதொழில்கள் பெருகியுள்ளன; படிப்பறிவு உயர்ந்து உள்ளது; பாலைவனம் போன்று காட்சியளித்த இவ்விடங்களில் ஏராளமான மரம், செடி, கொடிகள் வளர்க்கப்பட்டு இவ்விடங்களில் நல்ல ஒரு பசுமை இப்பொழுது நிலவுகிறது.

அமெரிக்காவிற்குச் சென்று சில வருடங்கள் தங்கி வேலை செய்து விட்டுத் திரும்புகின்ற இந்தியர்களுடைய செயல்பாடு மற்றும் மனோபாவத்திலேயே நாம் பல மாற்றங்களைக் காணலாம்போவதற்கு முன்பு இருந்ததைவிட இப்பொழுது கண்டிப்பாக தன்னம்பிக்கை அவர்களிடம் அதிகரித்திருக்கும். I. T. கம்பெனிகளில் employee ஆகப் பணியாற்றச் சென்ற பல பேர் திரும்பி வந்து, இங்கே சொந்தமாக I.T. கம்பெனி ஆரம்பிக்கின்றார்கள்அது பற்றி விசாரித்தால், "employeeஆகப் போனது உண்மைதான்ஆனால் அங்கே பலர் சொந்தமாகத் தொழில் செய்கின்றார்கள்Sense of enterprise அங்கே அதிகம் காணப்படுகிறது. அதைப் பார்த்தவுடன் எனக்கும் சொந்தமாகத் தொழில் செய்யும் தைரியம் வந்துவிட்டது'' என்கிறார்கள்.

அமெரிக்காவிற்கு ஆரம்பத்தில் சென்றவர்கள்தாம் முன்னோடிகளாகச் செயல்பட்டார்கள்என்று சொல்ல முடியாதுஅக்குணம் அவர்களுடைய பர்சனாலிட்டியில் நன்கு வேரூன்றி 17ஆம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை அந்நாடு முன்னோடிகளை உற்பத்தி செய்து கொண்டேவுள்ளதுஅமெரிக்காவை, கார் மயமாக்குவதில் Henry Ford என்ற தொழிலதிபர் முன்னோடியாக விளங்கினார்என்று சொன்னேன். தாமஸ் ஆல்வா எடிசன் என்ற விஞ்ஞானி எலக்ட்ரிக் பல்ப், கிராமபோன் என்று எண்ணற்ற கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். பள்ளிக்கே செல்லாதவர்கள் கூட பெரிய விஞ்ஞானிகளாகத் தலையெடுக்கலாம் என்பதற்கு அவரொரு நல்ல முன்னோடியாக விளங்கினார். 1929ஆம் ஆண்டு அமெரிக்காவில் stock marketஇல் crash வந்து, அதனால் பொருளாதாரம் சரிந்து, மந்த நிலை ஏற்பட்டதுஅப்பொழுது அதிபராகவிருந்த F.D. ரூஸ்வெல்ட் என்பவர் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டால், அதைச் சரி செய்வது அரசாங்கத்தின் கடமை என்று சொல்லி தைரியமாகப் பொருளாதார விஷயங்களில் தலையிட்டார். அதுவரையிலும் பொருளாதார விஷயங்களில் அரசு தலையிடுவதில்லை என்ற நிலைதான் நிலவியது. வேலை இழந்தவர்களுக்கு வேலை கொடுப்பது; ஓய்வு பெற்றவர்களுக்கும், விதவைகளுக்கும் ஓய்வூதியம் மற்றும் நிதியுதவி வழங்குவது; தொழிற்சாலைகளில் வேலைசெய்யும் நேரத்தை (working hours) நிர்ணயிப்பது; வங்கியில் டெபாசிட் போட்டவர்களுக்கு அந்த டெபாசிட்டிற்கு insurance வழங்குவது;விவசாயிகளுக்கு மான்யம் வழங்குவது; என்ற புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தினார். அவையெல்லாம் அக்காலத்தில் மிகவும் புரட்சிகரமாக அமைந்தன. சோஷலிஸக் கொள்கைகளையும், நடவடிக்கைகளையும் அமெரிக்காவில் முதன்முறையாகக் கொண்டுவந்த இடத்தில் அவரொரு முன்னோடியாகவே விளங்கினார். அவர் துவக்கி வைத்த பின்தான் மற்ற மேலைநாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளும் அரசாங்கத்திற்கு ஒரு social responsibility உண்டு என்ற கருத்தை ஏற்றுக்கொண்டு செயல்பட ஆரம்பித்தன.இன்று மக்கள் நலன் கருதி அரசாங்கம் பொருளாதாரத்தில் தலையிடுவது என்பது மிகவும் சகஜமாகிவிட்டது. இந்திய அரசாங்கத்தின் சலுகைகளும், மான்யங்களும் இப்பொழுது நமக்குப் பழகிவிட்டன.  ஆனால் 1932இல் அரசாங்கத்தினுடைய social responsibility என்ற புரட்சிகரமான கருத்திற்கு வித்திட்டவரே அமெரிக்க அதிபரான F.D.. ரூஸ்வெல்ட் தான்.

     அண்மைக்காலத்தில் முன்னோடிகளாகச் செயல்பட்ட அமெரிக்கர்கள் உண்டா என்றுகேட்டால், உண்டு என்று சொல்லலாம்கம்ப்யூட்டர்களை user-friendlyஆகவாக்கிய பெருமை இரண்டு அமெரிக்க கம்பெனிகளுக்கு உரித்தாகும்.  Godrej பீரோ அளவிற்குப் பெரிதாகவிருந்த கம்ப்யூட்டரை டேபிள் மேல் வைக்கக்கூடிய சிறிய பெட்டியாக மாற்றிய பெருமை Apple Computerக்கு உண்டு. Computerருடைய Operating systemகளை எளிமைப்படுத்தி computer science படித்தவர்கள் மட்டுமின்றி சாதாரண மக்களும் சுலபமாக கம்ப்யூட்டரைப் பயன்படுத்துமளவிற்கு Windows என்ற Operating systemஐக் கொண்டுவந்து, கோடிக்கணக்கான மக்கள் வீட்டிற்கு கம்ப்யூட்டரை அன்றாடம் பயன்படுத்தும் சாதனமாகக் கொண்டுவந்த பெருமை Microsoft Companyக்கும், அதன் சேர்மன் Bill Gates  அவர்களுக்கும் உரித்தாகும்.

Windowsஐக் கண்டுபிடித்து உலகத்திற்கு வழங்கியதால் இன்று Bill Gates பெரும்பணக்காரராகிவிட்டார்இந்த 2005ஆம் வருடத்தில் அவருடைய சொத்தின் மதிப்பு 51 பில்லியன் டாலர்களாகும்ஒரு பில்லியன் என்றால் ரூ.4,500/- கோடி. ஆகவே 51 பில்லியன் என்றால் 2,29,500/- கோடி ரூபாயாகும். இத்தொகையை நாம் கற்பனைகூடச் செய்ய முடியாது. உலகத்திற்குத் தேவையான விஷயத்தில் முன்னோடியாகச் செயல்படுகின்றவரைத் தேடி அதிர்ஷ்டம் இப்படி வருகிறது என்றால், இந்தியாவிற்குத் தேவையான விஷயங்களில் நாம் முன்னோடியாகச் செயல்பட்டால் நம்மைத் தேடி அதிர்ஷ்டம் எந்த அளவிற்கு வருமென்பதை நாம் கற்பனை பண்ணிப் பார்க்க வேண்டும்.

தொடரும்.....

****

 


 


 



book | by Dr. Radut