Skip to Content

09.அன்னையின் துணை

அன்னையின் துணை

இல. சுந்தரி

      வேலை முடிந்ததுஎன்று தன் எஜமானியிடம் வீட்டிற்குச் செல்ல உத்தரவு கேட்டாள் புதிதாக வேலைக்கு வந்த வேலம்மாமணி சரியாக மாலை ஐந்து. மூன்று மணிக்குப் பிற்பகல் வந்தால் 5 மணிக்குள் வேலை முடித்துவிடுவாள். காலை 9 மணிக்கு வந்து 11 மணிக்கு வேலை முடித்துவிடுவாள்.

         "வேலம்மா! இன்று நீ போகலாம். ஆனால் நாளை மாலை 5மணிக்குத் தேசிய கீதம் பாடிவிடாதேமாலை 6 மணிக்கு நம் வீட்டு மாடியில் ஒரு விசேஷம் உண்டு. அதனால் அங்குச் சுத்தம் செய்யும் பணியை நீ செய்தால் நன்றாக இருக்கும்அது மட்டுமில்லை, நீயும் அந்த விசேஷத்தை இருந்து பார்உன் முக்கிய பிரச்சினையைக் கடவுளிடம் சொன்னால், உனக்கு ஒரு நல்ல வழி பிறக்கும்'' என்று  இதமாய்க் கூறினாள் பவானி.  "சரிம்மா. எப்படியோ எம் புருஷன் குடியை விட்டாப் போதும். அதுதான் என் கஷ்டம்'' என்றாள்.

     "நீயும்தான் கோவில் கோவிலாய்ப் போய் உம் புருஷன் திருந்த வேணும்னு வேண்டிக் கொள்கிறாய். நாளை மேலே நடக்கப் போகின்ற அன்னையின் தியானக் கூடலுக்கு உன் பணியை மனமாரச் செய்.அவரே உனக்கு வழி சொல்வார்''.

"சரிம்மா. நிச்சயமா என்னால முடிஞ்சத செய்யுறேம்மா''.

"செய்தால் மட்டும் போதாது. இருந்து என்ன நடக்கிறது என்று பார்.  தியானத்தில் கலந்துகொள்வீட்டிற்குப் போக நேரமாகும். உன் புருஷனிடம் சொல்லிவிட்டு வா''.

     "அதாலதான் தெனமும் அடி வாங்குறேனேநாளைக்கு எதுவானாலும் கவலப்படாம வந்திடப் போறேன்'' என்றாள் வேலம்மா.

     வேலம்மா நடுத்தர வயதுப் பெண்மணிபிள்ளைகள் இல்லாதவள்.அவள் கணவன் நிரந்தர வேலை ஏதுமில்லாதவன்நல்லவன், என்றாலும் எப்படியோ அவனிடம் வந்துவிட்ட குடிப்பழக்கத்தை விடமுடியாமல் தவிப்பவன்வேறு கவலை ஏதுமில்லாத வேலம்மாவுக்கு இது பெரிய கவலையாய் இருந்தது. அம்மனநிலை அவளை நோயாளி ஆக்கிவிடுமோ என்றிருந்தது.  பகலில்  வேலை தேடுவான்கிடைக்கவில்லை என்றால் கவலைப்படுவான்அவன் வேலைக்குப் போகவில்லையென்றாலும் தன்னுழைப்பால் அவனுக்கும் சோறு போட்டுவிடுவாள் வேலம்மாஆனால் அவன் குடிப்பழக்கத்திற்குத் தீனி போட முடியாமல் துன்பப்பட்டாள்.

     அவன் குடித்துக் குடல் கெட்டுப் போகாதிருந்தால் அவளுக்கு அதுவே போதும். ஆனால் அவன் திருந்தவில்லைஅதனால் அவளால் தொடர்ந்து வேலை செய்யமுடியாமல் பல வீடுகளில் வேலையை விட்டுவிட்டாள்அவள் செய்யும் வீட்டு வேலைகளில் ஒழுங்கும், சுத்தமும் சிறப்பாக வெளிப்படும்சொல்லிக்கொடுத்தால் சரியாகப் பிடித்துக்கொள்வாள். இந்த அவள் உழைப்பின் திறமைகளெல்லாம் வீணாகிக் கொண்டிருந்த போதுதான் பவானியம்மா வீட்டிற்கு யார்மூலமோ வேலை கேட்டு வந்தாள். அவள் வந்த நேரம் இந்த வீட்டு மாடியில் ஒரு பொது தியானக் கூடல்.  மையத்தில் சீரமைப்புப் பணி நடைபெற்று வருவதால் அன்னை பக்தரான பவானியம்மாள் வீட்டில் கூடல் ஏற்பாடாகியிருந்ததுஒருவேளை வேலம்மாவை அன்னை தேடி வந்தாரோ?  "நாம் அன்னையிடம் வந்ததை விட அவர் நம்மைத் தேடி வந்ததுதான் அதிகம்' என்ற வாக்கு மெய்தான்.

     தினசரி தியானத்திற்கான ஏற்பாடுகளையும், சுத்தம் செய்யும் பணியையும் பவானி தானே செய்வது வழக்கம்மேலும் சூழல் கெட்டுவிடக் கூடாதேஎன்று வலிய யாரையும் அழைத்துக் காட்டுவது இல்லை. அன்னையை ஏற்று நம்பிக்கையுடன் வருபவர்கள் மட்டும் தாமே வருவதுண்டு. இந்நிலையில் வேலம்மாவுக்குத் தரிசனம் தர அன்னை மேற்கொண்டார்போலும்.

      மறுநாள் வேலம்மா தன்னையறியாமல் தியானக் கூடல் பணிகளில் அதிகம் ஈடுபட்டாள்காலையிலிருந்தே அன்பர்கள் தங்கள் திருத்தொண்டினை ஆரம்பித்துவிட்டனர். பொங்கலுக்குப் பொங்கல்தான் ஒட்டடை அடித்துச் சுத்தம் செய்வார்கள் நம்மவர்கள்ஆனால் அன்னைக்கு அன்றாடம் சுத்தம் முக்கியம். அன்பர்கள் பார்த்துப் பார்த்துச் செய்வதை வேலம்மா தானும் பின்பற்றினாள். ஒருவருக்கொருவர் தொணதொணவென்று பேசிக் கொள்ளாமலும், தடால், தடால் என்று பொருட்களை உருட்டாமலும் கவனமாய், பணிவாய் வேலைகளைச் செய்ததுபெரும்பதவியிலிருந்தவர், இருப்பவர் யாவரும் எவ்வித அகம்பாவமுமின்றி எந்த வேலையையும் எடுத்துச் செய்தது யாவுமே வேலம்மாவுக்கு வியப்பூட்டியது. வேலைக்காரியான தான் இப்பணிகளுக்கு இன்றியமையாதவள் என்று எஜமானி தன்னிடம் வேலையை ஒப்படைப்பதாக நேற்று நினைத்துக்கொண்டது வெட்கக்கேடு என்று உணர்ந்தாள்.  அன்னைக்குச் செய்ய எனக்கும் பாக்கியம் உண்டா என்ற நிலையில் அங்கு வேலைகள் நடைபெற்றன.

     சிறு ஆணி அடித்தாலும் பதற்றம் அடையும் பவானியம்மாள் இதில் எனக்குச் சம்பந்தமில்லை என்பதுபோல் (உடைமைகள் எதுவும் இல்லாமலிருப்பதால் வரும் களிப்பும், விடுதலையுணர்வும் என்று ஸ்ரீ அன்னை கூறுவது போன்ற) சலனமின்றி இருப்பதும் வியப்பளித்தது.தொண்டு செய்யும் அன்பர்களைக் கடவுளாகவே மதித்து, அவர்களுக்குச் சிற்றுண்டியும், தேநீரும் பணிவுடன் பரிமாறியதும் கண்கொள்ளாக் காட்சிசுத்தம் செய்யும் பணி முடிந்து, ஸ்ரீ அன்னை பகவான் (தியான மையத் திருவுருவப் படங்கள்) எழுந்தருளல் முடிந்து, புஷ்பங்களை அழகுற தட்டுகளிலும், பூச்சாடிகளிலும் விதம்விதமான முறைகளில் சமர்ப்பித்தும், ஸ்ரீ அன்னை பகவானின் திருச்சின்னங்களைப் பூக்களால் அலங்கரித்தும் அன்பர்கள் தங்கள் பக்தியைக் கூடலுக்குக் காணிக்கையாக்கினர்.

     சரியாக ஆறு மணிக்கு முன் எல்லாம் நிறைவுற்று, கூடலுக்குத் தயாராகிவிட்டனர்.

     வேலம்மாவுக்கு இது முற்றிலும் புதிதுசூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து, மணியடித்து இறைவனை அழைக்கும் வழிபாடுதான் அவளறிந்ததுசுத்தம் செய்து, சூழல் உருவாகி, கடவுட்சக்தி செயல்படும் முறை அவளறியாததுஇந்தச் சூட்சுமம் ஏதும் அறியாதபோதும் சூழன் கனம் அவளுள் இறங்கியதுஏதோவொரு விடுதலையுணர்வு எழுந்து,உள்ளே சந்தோஷம் பிறப்பதுமட்டும் புரிகிறது. அது இந்தச் சூழலின் மகிமை என்பதும் அவளறியாள்.

     அன்பர்கள் அமைதியாக வருகை தந்தனர். பட்டுப்புடவை முதல் பவுன்காசு வரை பேசும் பேச்சுப் பரிமாற்றம் எதுவும் அங்கு நிகழவில்லைஇளையவர், முதியவர், செல்வர், ஏழை என்ற எந்தப் பாகுபாடுமின்றி  "அன்னையே எங்கள் இலட்சியம்' என்று பணிவும், பக்தியுமாய் ஒரு கூட்டம் உலகில் உருவாகும் அற்புதம் அவளறியாதது.

     என்ன விந்தை! எல்லோரும் ஒரு புன்னகையால் அடுத்தவர்க்கு வணக்கம் சொல்லி, ரிசையாய் அமரும் பாங்கு கண்கொள்ளாக் காட்சியாய் இருந்தது.

      ஊருலகில் இப்படிப்பட்ட பூக்களும் உண்டு என்றறியும்வண்ணம் அவரவர் கொண்டு வரும் புதிய பூக்கள். மணம், நிறம் என்று அழகழகாய் மலர்க்கூட்டம்.

 ஒருவர் சாம்பிராணி புகை போடுகிறார். எல்லாமே மௌன நாடகம் போல் நடைபெறுகிறது. எஜமானியம்மாள் "இது என் வீடல்ல' என்பது போல் அமர்ந்திருக்க, புதிய, புதிய நபர்கள் "இவை எங்கள் பொறுப்பு'என்று நடந்துகொள்ள, என்ன அழகு!

சிறிய இடத்திற்குச் சண்டையிட்டு, சொந்தம் கொண்டாடி, ஒருவரை ஒருவர் வெட்டி மாயும் காட்சிகளைக் கண்டு கலங்கிப் போயிருக்கும் அவள் மனதிற்கு இங்கு இதமான காட்சிகள்.

ஹாலின் மைய கடிகாரம் ஆறு முறை இன்னிசை எழுப்பி ஓய்ந்தது.எப்போதும் இரைச்சடும் மனங்கள்கூட ஓய்ந்து, அமைதியைக் கடைப்பிடிக்க, அத்தனைப் பெரிய கூட்டத்தில் இவ்வளவு அமைதியா என்னும்படிப் பேரமைதி நிலவியது.

     முதலில் மூன்று புத்தகங்களிலிருந்து (ஸ்ரீ அன்னையின் பிரார்த்தனைகளும் தியானங்களும், பகவானின் The Life Divine, சாவித்ரி)  சில சில பகுதிகள் படிக்கப்பட்டனஅவளுக்கு ஒன்றும் புரியவில்லைஒரு தமிழ்க் கட்டுரை படிக்கப்பட்டதுஇப்படி "நம் வாழ்வின் சின்னஞ்சிறு நிகழ்ச்சிகளைக்கூட படம்பிடித்துக்காட்டுவதுபோல நம் அர்த்தமற்ற செயல்கள் எப்படி மாற்றப்பட வேண்டும்' என்ற தோரணையில் அமைந்த கட்டுரையதுமிக நன்றாகவே புரிந்தது. கடந்தகால அறியாமைகள் வெட்கப்படச் செய்தன.

     "இறைவன் எங்கோ மேலுலகில் இருக்கிறார். அவர் நம்மால் எட்ட முடியாதவர். தவம் செய்பவர்க்கே அவர் கிடைப்பார். விரதம் இருப்பது, நோன்பு எடுப்பது, மேலும் பல கடும் முறைகள் மேற்கொண்டால்தான் கடவுளைப் பார்க்கலாம். நம்மால் அது முடியாதுஎனவே, நம் தலைவிதியை நாமே அனுபவிக்க வேண்டும். கர்மம் கரைக்க முடியாதது' என்றுதான் இதுநாள்வரை அவள் பிறர் சொல்லக் கேள்விப்பட்டிருந்தாள்பயந்து, பயந்து விரதம் கிடந்தும், நோன்புகள் எடுத்தும் புருஷன் திருந்தியபாடில்லைஆனால் இங்கே இவர்கள் சொல்வனவெல்லாம் புதியன; அவளறியாதனகர்மத்தையே கரைக்கலாம் என்று அதற்கு விளக்கமும் சொல்லப்பட்டது.

    "குணத்தால் வாழும் மனிதன், கர்மத்திற்குக் கட்டுப்படுகிறான்.  கர்ம வினையை அனுபவிக்கிறான்நாம் அன்னையிடம் நம் தவற்றை உணர்ந்து, ஒப்புக்கொண்டு, அத்தவற்றிற்குக் காரணமான நம் குணத்தை மாற்றிக்கொள்ள முன்வரும்பொழுது குணம் அழிகிறது.பொய்யிலிருந்து மெய்க்கு வரும்போது அன்னையின் சக்திக்குள் வருகிறோம்கர்மம் கரைந்துவிடுகிறது. அதாவது குணத்தைச் சார்ந்து கர்மம் நிற்கிறது. குணமே கரைந்தபின் கர்மத்திற்கு வழியில்லை''.

     வேலம்மா இங்குக் கேட்டதை எப்படி ஏற்றுக் கொண்டிருக்கிறாள் என்பதை ஒரு சிறிது அவள் வாய்மொழியில் கேட்போமே:

       "கடவுள் இங்கதான் பூமியில இருக்குறாராம். அதுவும் நமக்குள்ள தான் மறைஞ்சிருக்காராம்விரதமும், நோன்பும் வேண்டாத வேலையாம்.   நாம் விடமுடியாத பழக்கத்தை விட்டுவிட மனப்பூர்வமாய் சம்மதித்தால் கர்மம் கரைஞ்சிடுமாம்கடவுளையே நாம பார்க்க முடியுமாம்கடவுளப் பாக்குறது அப்பாலே இருக்கட்டும்இப்போது மொதல்ல கஷ்டங்களில் இருந்து தப்பிக்க முடியுமாம்இதெல்லாம் பெரிய விஷயம். எனக்குப் புரியுறமாதிரி ஒண்ணு சொன்னாங்கஅது புருஷன், பொஞ்சாதிக்குள்ள எதுனாச்சும் பிரச்சினை இருந்துச்சினா, அத அன்னைய நம்பி ஏத்துக்கிட்டு, அவங்க சொன்னாப்புல நடந்தா, பிரச்சினை தீந்திடும்னு சொன்னாங்கஇன்னும் சொல்லப்போனா எம் பிரச்சினைக்கே தீர்ப்பு (தீர்வு) சொன்னாங்கமொதல்ல அதைப் பொறுமையா புரிஞ்சுக்கணும்னு சொன்னாங்கஇப்ப புருஷங்காரரு குடிக்கறவரா இருந்தா அதுக்குக் கவலப்படறதுக்குப் பதிலா அன்னையப் பத்தித் நாமே தெரிஞ்சிக்க இத ஒரு வாய்ப்பா செஞ்சு பார்க்கலாம்னு சொன்னாங்க''.

      (இதற்கு மேல் வேலம்மாவின் வாய்மொழியால் விளக்க இயலாததால் சொற்பொழிவாளர் கூறிய கருத்துகளை கதாசிரியர் வழியாய் அறிவோம்).

     "உதாரணமாகக் கணவன் குடிகாரன் என்றால் மனைவிக்கு அது பெரும் தலைவலி .  குடிகாரனைத் திருத்துவது மிகக்கடினம் என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் அன்னையிடம் இதற்கும் வழியுண்டு.  கணவன் என்பவன் மனைவியின் அடுத்த பக்கம் போன்றவன்நாமே நம்மைப் பார்த்துக் கொள்ள கண்ணாடியில் பார்க்கிறோம்கண்ணாடியில் நம் முகத்திலுள்ள களங்கம் தெரிகிறது என்றால் என்ன செய்வோம்? கண்ணாடியையா கோபித்துக் கொள்வோம்நமக்குத் தெரியாத நம் முகக் குறைபாட்டை நமக்கு எடுத்துக்காட்டி, நம் குறையைப் போக்க உதவிய கண்ணாடியைப் பயனுள்ளதாகத்தான் கருதுவோம்அகமே, புறம் என்ற அன்னையின் கோட்பாட்டின்படி நம்மிடம் உள்ள ஏதோவொன்று அவனிடம் அப்படி வெளிப்பட்டதாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதற்குப் பொறுமையும், அடக்கமும் வேண்டும்.  "அவன் அப்படி இருந்தால் அதற்கு நானென்ன செய்வது. நான் குடிக்கிறேனா?' என்று கேட்கத் தோன்றும்கேட்டால் அது நம் அகந்தையின் தலையீடு என்று புரிந்து கொள்ள வேண்டும். கணவன் என்பவன் தன்னைப் பிரதிபலிப்பவன் என்ற அடக்கம் எழுந்தால் முயற்சியைத் தொடர முடியும்.அவனிடம் வெளிப்படும் அந்தச் (குடிப்பழக்கத்திற்கு) செயலுக்கு ஆதரவாய் தன்னுள் ஒரு விடமுடியாத பழக்கம் இருப்பதை உணர்ந்து, ஏற்க வேண்டும். தன்னிடமுள்ள விடமுடியாத ஒரு பழக்கம் எது என்று தன்னை உண்மையாக உணர வேண்டும். அதைக் கண்டுபிடித்து, அதை விட்டுவிட மனப்பூர்வமாய்ச் சம்மதிக்க வேண்டும்அப்படிச் செய்யும் போது கணவன் விடமுடியாத தன் கெட்ட பழக்கத்தை விட்டு விடுவான்.  அப்படி நிகழ்ந்தபின் அவன் விட்டுவிட்டதற்கு மகிழ்வதற்குப் பதிலாக, "அவனை நான் திருத்திவிட்டேன்' என்று மகிழ்வதற்கு, பெருமை எழுவதற்குப் பதிலாக "கணவன் தன் குடிப்பழக்கத்தால் என்னுள் இருந்த பிடிவாத குணத்தை நான் உணரச் செய்தான்' என்றும், "அவனே தனக்குக் கிடைத்த வரப்பிரசாதம்' என்றும் உணர வேண்டும்மேலும் "தன் கணவனுக்குள் அந்த அன்னையே வந்து தன்னை மாற்றினார்' என்று உணர வேண்டும்அவனுக்குள் அன்னை தரிசனம் காண வேண்டும்'' என்றார். "இதைச் செய்ய மிகுந்த பொறுமை வேண்டும்'' என்றும் கூறினார். "எந்தவொரு பரிசையும் பெற அதற்கு உரிய தகுதியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமல்லவா? கணவன் திருந்தினான் என்பதைவிட, இதன்மூலம் அன்னையே தரிசனம் தந்தார் என்ற உணர்வு மேலிட வேண்டும்'' என்றார். "குடித்துவிட்டு வரும் கணவனைப் பார்த்தவுடன் கோபம் வரும்வந்தால் அன்னை தரிசனம் பெறுவது இல்லை. முதலில் கோபத்தை வெல்ல வேண்டும்''.

     "தன்னால் விடமுடியாத தன் பிடிவாத குணமே இவனிடத்தில் குடிப்பழக்கமாய் வெளிப்படுகிறது என்பதை மனைவியின் மனம் (அறிவு) ஏற்க வேண்டும். பிறகு உணர்வு தன் பிடிவாதத்தை எண்ணி வெட்கப்பட வேண்டும்அப்போது கணவன் தன் குடிப்பழக்கத்திற்கு வெட்கப் படுவதைக் கண்கூடாய்க் காணலாம். வெட்கப்பட்டால் மட்டும் போதாது. "என் பழக்கத்தை விடமுடியாத பிடிவாதக்காரியான நான் இவரை எப்படிக் கண்டிக்க முடியும்? அதற்கு எனக்குத் தகுதியில்லை' என்று உணர்ந்து, பணிவாய் நடந்தால், கணவன் தன் குடிப்பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்று சொல்லத் தொடங்குவான்.  "அந்தக் கணவன் கிடைத்தது என் தலைவிதி' என்று நொந்தது போய், "தான் தன்னை உணரக் கிடைத்த வரப்பிரசாதம்' என்றுணர வேண்டும்அப்போது அவன் குடிக்காமல் இருக்க முயல்வான்.  "அன்னையே! நீரல்லவோ இவராக என் வாழ்வில் வந்திருக்கிறீர்இவர் என் கண்களுக்கு அன்னையாகவே காட்சி தருகிறார்' என்ற பக்குவம் வந்துவிட்டால்,அக்கணவன் குடிப்பதை அறவே விட்டுவிடுவான்'' என்று கூறினார்.

     காசு, பணம் செலவில்லாத ஒன்று; அடுத்தவர் தயவின்றித் தானே செய்ய வேண்டியதுஎன்று வேலம்மாவுக்குப் புரிந்ததுஆம். இதை எப்படியாவது செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் எழுந்தது.

      தியானத்தில் அவள் இதையே பிரார்த்தித்தாள்இம்முறையை மேற்கொண்டு தான் அன்னையின் தரிசனம் பெற வேண்டும் எனப் பிரார்த்தித்தாள்.

      வீட்டிற்குப் போனதும் கணவன் இன்னும் வரவில்லை எனக் கண்டாள். "எந்த நிலையில் வருவானோ?' என்றெழுந்த எண்ணம், வழக்கமாக வரும் கோபம், யாவும் தலைகாட்டுமுன் போராடி, "மனமே அடங்கு' என்று அடக்க முயன்று, இயலாதுஎனக் கண்டதும், சொற்பொழிவில் சொன்னதுபோல் "அன்னையே! அன்னையே!' என்று அன்னையைத் துணைக்கழைத்தாள். தன் பிடிவாத குணம், தன்னால் விடமுடியாத பழக்கம் எதுஎனக் கண்டறிய முயன்றாள்.

      இவள் வேலை செய்யும் வீட்டு எஜமானியம்மாள் மகள் மிகவும் படித்த பெண்; படிப்பதும், சுத்தம் செய்வதும் அடிக்கடி செய்வாள்; யாவரிடமும் பிரியமாய்ப் பழகுவாள்; நயமாகப் பேசுவாள்ஒரு முறை இவள் அப்பெண்ணிற்கு உதவியாகச் சுத்தம் செய்யும் பணியில் (பீரோ, அலமாரிகளில் பொருட்களை எடுத்து, துடைத்து வைப்பதில்) ஈடுபட்ட போது சிறிது தனியிடத்தில் வந்து இடுப்பில் செருகிய வெற்றிலைப் பாக்கு வைத்திருக்கும் சுருக்குப்பையைப் பிரித்து வெற்றிலை போட்டாள்.  அப்போது அந்தப் பெண், "வேலம்மா, இங்கே பாதி வேலையில் அப்படியே போட்டுவிட்டு எங்கே போய்விட்டாய்?'' என்று உற்ற தோழியின் உரிமையுடன் குரல் கொடுத்தாள்.

     "ஒரு வாய் வெத்திலை போடப் போனேம்மாதப்புத்தான். இனிமே பாதியிலே வெத்திலை போடப் போகமாட்டேம்மா'' என்று பணிவாய்க் கூறினாள்.

     "போயும் போயும் வெற்றிலை போடவா போனாய்?'' என்றாள் அந்தப் பெண்.

    "ஆமாம்மா. எனக்கு இதுவொரு பழக்கம்சின்னபுள்ளையா இருந்தப்பவே என் பாட்டன், பாட்டியைப் பார்த்து பழகின பழக்கம். விட முடியல'' என்றாள் வேலம்மா.

     "உனக்கு ஒன்று தெரியுமா வேலம்மாஉண்மையில் விடமுடியாது என்று ஒன்றுமில்லை. நமக்கு விட்டுவிடப் பிரியமில்லை என்பதுதான் உண்மை'' என்றாள் அந்தப் பெண்.

    "அது என்னவோ தாயிதிடீர்ன்னு வெத்திலை போடுற நெனப்பு வந்திச்சினா என்னால அடக்கவே முடியறதில்ல'' என்றாள் வேலம்மா.

அடுத்த இதழில் முடியும்.....

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

உடலாலும், மனத்தாலும் ஒரு மனிதனுடைய உலகம் குறுகியது. உள்ளத்தால் அது சில முக்கிய உணர்வுகளாலும், நபர்களாலுமானது.


 


 



book | by Dr. Radut