Skip to Content

10.பிரச்சினை வாய்ப்பாக மாறும்

"அன்னை சுபிட்சம்"

பிரச்சினை வாய்ப்பாக மாறும்

 N. அசோகன்

அன்னையின் அருட்சக்தி சத்தியஜீவிய சக்தியைத் தாங்கிவருவதால் விசேஷ சக்தி கொண்டு செயல்படுகிறது. இவ்விசேஷ சக்தியின் காரணமாக நம்மை நாடிவரும் பிரச்சினைகளை அன்னையின் அருள் நன்மை தரக்கூடிய வாய்ப்புகளாக மாற்றித்தரவல்லது. சாதாரணமாக வாழ்க்கையில் சிரமமோ அல்லது ஆபத்தோ வந்துவிட்டால் அவற்றிலிருந்து விடுபடுவதே கடினம். ஏதோ ஒரு சமயம் அரிபொருளாக பிரச்சினையாக வந்தது வாய்ப்பாக மாறுவதுண்டு. ஆனால் அன்னை அன்பர்களுக்கு இது மிகவும் சகஜமாக நடக்கிறது.

சுமார் 25 வருடங்களுக்கு முன்பு ஒரு தொழிலதிபர் தொழில்ரீதியாக இருந்த சட்டங்களை மீறினார். இதன் விளைவாக அவருக்கு அரெஸ்ட் வாரண்ட் வந்தது. அப்பொழுதிருந்த அரசியல் சூழ்நிலையில் அவருக்கிருந்த அரசியல் செல்வாக்கு கைகொடுக்கவில்லை. தொழிலதிபருக்கு வந்திருந்த ஆபத்திலிருந்து தப்பிக்க முடியும் என்ற நம்பிக்கை குறையத் தொடங்கியது. ஆனால் தொழிலதிபரின் பார்ட்னர் அன்னை அன்பராக இருந்தார். அவர் தொழிலதிபரிடம், "இனிமேல் இத்தகைய தவறுகளைச் செய்யவேமாட்டேன் என்று அன்னையிடம் உறுதியளித்தால் அன்னை உங்களைக் காப்பாற்றுவார். உங்களால் அந்த உறுதியை அளிக்க முடியுமா?'' என்று கேட்டார். தொழிலதிபரும் சம்மதித்து அத்தகைய உறுதியை எடுத்துக்கொண்டு, அதை அமுல்படுத்த பெருமுயற்சி எடுத்தார். அன்பரும் தொழிலதிபருக்காக அன்னையிடம் தீவிரமாகப் பிரார்த்தனை செய்தார். தொழிலதிபர் வெளிப்படுத்திய சின்சியரிட்டியின் காரணமாக வந்த பேராபத்து விலகி பெரிய வாய்ப்பாக மாறி, தொழிலதிபரை மேலும் பலமடங்கு உயர்த்தியது.

திருவுருமாற்றம் என்றால் என்ன? நம் கண்ணிற்குக் கெடுதலாகத் தெரிவதை நாம் கெட்டது என்கிறோம். ஆனால் ஆன்மீகத்தின் கண்ணோட்டமே வேறு. உயர்ந்த நல்லது ஊனக்கண்ணிற்குக் கெட்டதாகத் தெரிகிறது. நாம் வெண்மையை ஒளிமயமானது எனவும், கறுப்பை இருட்டு எனவும் சொல்கிறோம். ஒரு பொருளின் மேல் விழுகின்ற ஒளியெல்லாம் பிரதிபலிக்கப்படும் பொழுது அப்பொருள் வெண்மையாகத் தெரிகிறது. அதே சமயத்தில் இன்னொரு பொருளின்மேல் விழும் ஒளியையெல்லாம் அப்பொருள் வாங்கிக்கொள்ளும் பொழுது அது கறுப்பாகத் தெரிகிறது. அதாவது விஞ்ஞானரீதியாகப் பார்த்தால் வெண்மையாகத் தெரியும் பொருள் ஒளியற்றதாகவும், கறுமையாகத் தெரியும் பொருள் ஒளி நிறைந்ததாகவும் இருக்கிறது என்பதுதான் உண்மை.

ஆன்மீகம் இந்த ஆழ்ந்த உண்மையை ஏற்றுக்கொள்ளும். ஆனால் நம்முடைய சாதாரண அறிவு இதை ஏற்றுக்கொள்ளாது. நாம் ஏற்றுக்கொள்கிறோமோ இல்லையோ, வாழ்க்கையில் இவ்வுண்மையை நிலைநாட்டும்படியான நிகழ்ச்சிகள் நடக்கத்தான் செய்கின்றன. அதாவது பிரச்சினைக்குப் பின்னால் அதிர்ஷ்டம் மறைந்துள்ளது என்ற ஆழ்ந்த உண்மையை வாழ்க்கைச் சம்பவங்களும் நிலைநாட்டுகின்றன.

சுமார் 40 வருடங்களுக்குமுன்பு அகில இந்திய ஸ்தாபனமொன்றில் உயர்மட்ட அதிகாரிகள் 12 பேரிருந்தனர். அவருளொருவர் ஓய்வு பெற்றபொழுது, 13ஆம் நிலையிலிருந்த வரை அந்த உயர்மட்டக் குழுவில் ஒருவராக உயர்த்தினர். புதிதாகப் பதவி உயர்வு பெற்றவர் அன்னை அன்பராகவும், நேர்மையானவராகவும் விளங்கினார். ஊழலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மற்ற பதினொரு பேருக்கும் இவருடைய நேர்மை இடையூறாக இருந்தது. மொரார்ஜி தேசாய் அவர்களுக்கு இந்த பதினொருவரும் சேர்ந்து பன்னிரண்டாமவரைப் பற்றி ஊழல் புகார் அனுப்பி நடவடிக்கை எடுக்கும்படிக் கேட்டுக்கொண்டனர்.

அவர் CBI துறைக்குப் புகாரை அனுப்பி விசாரிக்கும் படி உத்தரவிட்டார். விசாரணையின் இறுதியில் "புகாருக்கு ஆளானவர் மட்டும்தான் நேர்மையானவர்; மற்றவர்களெல்லாம் ஊழல் பேர்வழிகள்" என்று CBI Report கொடுத்தது. அதன் பின்னர் தான் மொரார்ஜி அவர்களுக்கு உண்மை புரிந்தது. அச்சமயம் பார்த்து ஸ்தாபனச் சேர்மன் ஓய்வுபெற்றார். மொரார்ஜி புதியவரைச் சேர்மனாக்கினார்.

வந்தது ஆபத்து. ஆனால் இறுதியில் கிடைத்தது உச்சக்கட்டப் பதவி உயர்வு. இதற்குக் காரணம் அவர் வாழ்க்கையில் அந்நேரம் அன்னையின் அருள் செயல்பட்டது தான். வந்தது பொய்யான ஒரு புகார். ஆனால் அன்னையின் சத்தியஜீவிய சக்தி அந்தப் பொய்யை விலக்கி, அதற்குப் பின்னால் மறைந்திருந்த ஒரு பெரிய உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து அன்பருக்குப் பெரிய பதவி உயர்வை வாங்கிக்கொடுத்தது. ஆகவே அன்னை அன்பர்களைப் பொருத்தவரை பிரச்சினை என்பது தலைகீழான வாய்ப்பு என்பதுதானுண்மை.

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்

நல்லவனாக இருப்பது அகந்தையற்ற நிலை.

நல்லவன் என பெயரெடுக்க விரும்புவது அகந்தை.

நல்லவனுக்கு அகந்தையில்லை.

*****   

Comments

10.பிரச்சினை வாய்ப்பாக

10.பிரச்சினை வாய்ப்பாக மாறும்
 
 Para  5  -  Line  4  -  ஊழல்                                 -    ஊழலில்
 Para  5  -  Line  5  -  இவருடையநேர்மை   -   இவருடைய நேர்மை
 Para  6  -  Line  3  -  பேர்வழிகள்'என்று      -   பேர்வழிகள்" என்று
 Para  6  -  Line  3  -  Reportகொடுத்தது         -   Report கொடுத்தது



book | by Dr. Radut