Skip to Content

10.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

நான் ஒரு ஓய்வு பெற்ற அரசு ஊழியன். வயது 75. ஜனனம் பாண்டி அருகிலுள்ள வில்லியனூர். வருடம் 1932. 1937இல் தாயாரின் மரணத்தால் சகோதரன், சகோதரியுடன் திருவண்ணாமலைக்குத் தகப்பனாருடன் குடியேறினேன். பிரென்ச் பிரஜையானாலும் 17.11.04 வரை, அதாவது 74வயது வரை அன்னையைப் பற்றிய ஞானம் எனக்கு இல்லை. 17.11.04ஆம் தேதி என் உறவினரின் சடங்கு ஒன்றில் கலந்து கொள்ள வில்லியனூர் சென்றேன். உடன் என் சகோதரியும் வந்தாள். வயது 79. அப்போது என் உறவினர், ஸ்ரீ அன்னை மற்றும் ஸ்ரீ அரவிந்தர் பெருமைகளைக் கூறி,இன்று அன்னை அவர்கள் நினைவு தினம் என்றும், தரிசனம் செய்ய ஏற்ற நாள் என்றும் கூறினார்.நேராக அன்னை தியான மையத்திற்குச் சென்றேன். மனம் உருகி தியானம் செய்தேன். தியானத்தில் அன்னையின்பால் அன்பு அதிகரித்ததை உணர்ந்தேன். அன்னையின் புகைப்படம் ஒன்றினை வாங்கிக் கொண்டு அம்பத்தூர் திரும்பினேன். என்னுள் ஏதோ ஒரு இனமறியாத மன அமைதியினை உணர்ந்தேன். 18.11.04 முதல் இன்று வரையில் அன்னை படத்திற்கு மலர்கள் வைத்து, ஊதுவத்தி ஏற்றி வைத்து என்னை அன்னைக்கு தியானம் மூலம் அர்ப்பணம் செய்துகொள்வேன்.மனிதர்களிடம் நேரில் பேசுவதுபோல் அன்னையின் படத்துடன் பேசுவேன். அடிக்கடி பிறர் வாழ பிரார்த்தனை செய்வேன். ஆழமான, அசைக்க முடியாத என் சமர்ப்பணத்தால் மன அமைதி கிடைத்தது. என் தேவைகள் அனைத்தும் அன்னை நிறைவேற்றி வைத்தார்கள். என் அயராத பிரார்த்தனையாலும், அன்னைபால் வைத்துள்ள நம்பிக்கையினாலும் கீழ்க்- காணும் நல்ல காரியங்களை அன்னை எனக்கு வாழ்க்கையில் அளித்து, வளம் பெறச் செய்தார். எனது குடும்பம் அடைந்த பலன்கள் வருமாறு:

1) அம்பத்தூரில் ரூ.7 இலட்சத்தில் ஒரு பிளாட் வாங்கியது.

2) எனது சொந்த வீடு (வாலாஜாபேட்டையில் உள்ளது) ரூ.7.75 இலட்சத்துக்கு விற்கப்பட்டது.

3) 1989இல் நான் ஓய்வு பெறும்போது தவறுதலாக நிர்ணயிக்கப்பட்ட ஓய்வு ஊதியம் அன்னையின் அருளால் எனது வேண்டுகோள்படி அரசால் பென்ஷன் மீண்டும் திருத்தி அமைக்கப்பட்டதன் விளைவாக ரூ.56,000/- நிலுவைத் தொகையாகப் பெற்றேன்.

4) என் மனைவியின் பூர்வீகச் சொத்து விற்றதில் ரூ.1,00,000/- கிடைத்தது.

5) முதுகு வலியால் மிகவும் துன்புற்றான் என் மகன். எந்த வித சிகிச்சையும் இல்லாமல் அன்னையின் அருளால் வலி போய்விட்டது.

6) அன்னை 24.8.05 அன்று ஒரு பெரிய அதிர்ச்சியை எனக்கு தந்தார்.அதாவது என் மனைவி பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்பிற்கு சென்ற நிலையிலும் மனம் தளராமல் அன்னையிடம் வேண்டினேன். நோயின் தாக்குதலால் வலக் கால், வலக் கை செயல் இழந்தது. வாய் பேச்சும் வரவில்லை. இந்த நிலையிலும் அன்னையின் பாதங்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு மன்றாடியதால், தற்சமயம் வீட்டோடு நடக்கிறாள்; சற்று பேச்சும் வருகிறது. இது அன்னையின் சோதனை என்று எண்ணி அன்னையினை வெறுக்காது பிரார்த்தனை செய்தேன்.

எனவே உள் உணர்வோடு அன்னையிடம் நமக்காக இல்லாது, பிறர் துன்பங்கள் போக பிரார்த்தனை செய்தால் நம் குடும்பம் நல்ல முறையில் முன்னேறுவதை நான் அனுபவிக்கிறேன்; கண்கூடாக, நிதர்சனமாக உணர்கிறேன்.

மழை வேண்டி 2004ஆம் ஆண்டு கீழ்க்காணும் வாசகத்தினை என் உறவினர்கள், நண்பர்கள்மூலம் சுமார் 100 தொடர் கடிதங்களை எழுத ஏற்பாடு செய்தேன். மழையும் வந்தது.

மழைக்கான அன்னை தோத்திரம்:

அன்னையே! சரணம்!

அன்னையே! சமர்ப்பணம்!

அன்னையே! அன்பின் இருப்பிடம்!

அன்னையே! ஆறுதல் அளிப்பவர்!

அன்னையே! அனைத்தும்!

அன்னையே! உன்னையே எப்போதும் நினைத்தாலே! வளமையே

உண்டாகும் வான்மழையாலே!

முடிவாக, இறுதியாக, அன்னையிடம் நாம் நம்பிக்கையுடன் சரணடைந்தால் கட்டாயம் கைதூக்கிவிடுவார்.

****


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

கடமையை உணர்ந்து நடைமுறையில் பூர்த்தி செய்வது ஆன்மாவின் ஆர்வம்.ஒரு வேலையை அதிகாரத்திற்குப் பணிந்து அல்லது கடமைக்காகச் செய்வது தவறாது பலனைத் தரும். அதே வேலையை அதன் ஆன்மீக முக்கியத்துவத்தை உணர்ந்து, தன் அந்தராத்மாவின் முன்னேற்றத்திற்காகச் செய்தால், ஆன்மா மலரும்.பிரார்த்தனையின் பலனுக்காக அன்னையை நம்பி வணங்கினால் பலன் தவறாது கிடைக்கும்.பலனைத் தரும் அன்னையின் ஆன்மீக உயர்வை நம் ஆன்மாவில் உணர்ந்து நெஞ்சம் பூரித்தால், பலன் பெறுவதுடன் வாழ்வு சிறந்து,ஜீவன் ஆன்மீகப் பெருவெளியில் அனந்தனின் அற்புதம் என மலரும்.

வாழ்வு சிறந்து ஜீவன் ஆன்மீகப் பெருவெளியில்

அனந்தனின் அற்புதம் என மலரும்.


 



book | by Dr. Radut