Skip to Content

11.நாய் விற்ற காசு குலைக்கும்

நாய் விற்ற காசு குலைக்கும்

பணம், பொருள்கள், இடம், காலம், மனிதர்களுக்குக் குணம் உண்டு.அவர்கள் போகுமிடங்களில் அவர்கள் குணம் தொடரும். கடிதம் எழுதிப் பழக்கமில்லாதவர், அவருக்குக் கடிதம் என்று வருவதில்லை. திருமணப் பத்திரிகை போன்றதே வரும். அவர் புதுவீடு குடி போனார். அது போஸ்ட்மாஸ்டர் வீடு. அவருக்கு அடிக்கடி கடிதங்கள் வர ஆரம்பித்தன. அவரும் கடிதங்கள் எழுத ஆரம்பித்தார். அது போஸ்ட்மாஸ்டர் வீட்டு இராசி. கடன் வாங்கியவன் திருப்பிக் கொடுக்கும் பொழுது தான் திருடிய பணத்தைக் கொடுத்தான். அப்படி பலருக்குக் கொடுத்தான். ஒருவர் வீட்டில் திருடு போயிற்று. அடுத்தவர் மீது திருட்டுக் குற்றச்சாட்டு எழுந்தது. மூன்றாவது நபருக்குத் திருடத் தோன்றி திருடினார். திருடனுடைய பணத்திற்குத் திருட்டுக் குணம் உண்டு.

ஒரு பாங்க் சேர்மன். அளவுகடந்து குடிப்பார். இவருக்கு சாராயக் கம்பனியில் கூட்டு உண்டு. இவர் நண்பர்கள் குடிகாரர்கள். குடியில் உள்ள இரகங்களை அலசிப் பேசுவது இவர்கள் பொழுதுபோக்கு. "இவர் ஒரு வாரம் குடிக்காமலிருந்ததில்லை' என்று ஒருவர் கூறிய பொழுது, அடுத்தவர் "இவர் ஒரு வேளை குடிக்காமலிருந்ததில்லை' என மாற்றிக் கூறினார். இவர் ஒரு அன்பருக்குப் பெரிய கடன் தொகை கொடுத்தார். அதன்பின் 3 மாதங்கள் குடிக்காமலிருந்தார். அது அவரில் அவரறியாமல் நடந்த அன்னையின் திருவுருமாற்றம். அன்பர் ஒரு விஷயத்தைக் கவனிக்கலாம். தங்கள் மூலமாக நடமாடும் பணம், பொருள்கள், செயல்கள் எப்படி மாறுகின்றன எனக் கவனித்தால் கருமியிடம் பெற்ற காசு தாராளமானச் செலவுக்கு உதவுவதையும், சில சமயங்களில் சிக்கனமாகச் செலவாவதையும் காணலாம்.

எந்த அளவுக்கு ஒரு செயல் நம் வழியாகப் போகும்பொழுது திருவுருமாறுகிறதோ, அந்த அளவுக்கு நம் மனம் அன்னையின் திருவுருமாற்றத்தை ஏற்றுக்கொண்டிருப்பதைக் காட்டும்.

1970இல் வட்டிக் கடைக்காரர் மூலதனம் கொடுத்துச் செய்த தொழில் மூலம் 65 பேருக்கு பாங்க் கடன் கொடுத்தபொழுது, "அந்தப் பணம் வாராது' என சவால் எழுந்தது. "ஒருவரும் திருப்பிக் கொடுக்க மாட்டார்' எனவும் அபிப்பிராயம் தெரிவித்தனர். 65 பேரும் தேதி தவறாமல் கடனைத் திருப்பித் தந்தனர். அதற்கு ஒரு காரணம் இந்த வட்டிக் கடைக்காரர் பரம்பரையில் 1 ரூபாய்கூட வசூலிக்காமல் விட்டதில்லை.

****


 



book | by Dr. Radut