Skip to Content

03.பூலோகச் சுவர்க்கம்

"அன்னை இலக்கியம்"

பூலோகச் சுவர்க்கம்

                                                          (சென்ற இதழின் தொடர்ச்சி.... )          இல. சுந்தரி

முன்பு வந்தவரைப் போலவே வேறொருவர் வந்திருந்தார். கையில் அதே சீட்டு. எனக்கு ஒன்றும் புரியவில்லை. சொர்க்கத்திலிருந்து எல்லோரும் பூலோகம் வரப் போகிறார்களோ? அங்கு ஏது பூகம்பமும், சுனாமியும்?

"இது அன்னையன்பர் வீடுதானே?'' என்றார் வந்தவர்.

"ஆமாம். நீங்கள் யார்?'' என்றேன்.

"நான் சொர்க்கத்திலிருந்து வருகிறேன்'' என்றார்.

"சரிதான். பூலோகத்திலுள்ளவர்கள்தாம் சொர்க்கலோகம் போவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போதெல்லாம் சொர்க்கத்திலிருந்து பூலோகம் வருகிறார்களா?'' என்றேன்.

"இப்போதெல்லாம் யாரும் சொர்க்கம் வரப் பிரியப்படுவதில்லையாம்''என்றார் அவர்.

"! அப்படியென்றால், நரகத்தில்தான் கூட்டம் அதிகமோ?'' என்றேன்.

"அங்கேயும் இப்போது நெருக்கடியே இல்லை'' என்றார்.

"சொர்க்கத்திற்கும், நரகத்திற்கும் போகாமல் பூவுலகவாசிகள் எங்குதான் போகிறார்கள்?'' என்றேன் வேடிக்கையாக.

"அதனால்தான் நாங்கள் இங்குவரப் பிரியப்படுகிறோம்'' என்றார்.

"ஒன்றும் புரியவில்லை எனக்கு'' என்றேன்.

"உள்ளே அழைத்து, உட்காரவைத்துப் பேசமாட்டீர்களா?'' என்றார்.

உட்குவிந்து, "அன்னையே! வந்திருப்பவர் யாரென அறியேன். என்ன செய்யட்டும்?' என்றேன்.

"உள்ளே அழைத்துப் பேசு' என்று தெளிவாய் கட்டளை வந்தது.மகிழ்ச்சியுடன், "உள்ளே வாருங்கள்'' என்றேன்.

"யாருடைய உத்தரவிற்கோ காத்திருப்பதுபோல் தயங்கினீர்களே'' என்றார்.

"ஆம், இந்த வீட்டுச் சொந்தக்காரரிடம் பேசினேன்'' என்றேன்.

"வீட்டின் சொந்தக்காரர் எங்கேயிருக்கிறார்? நீங்கள் அவரோடு பேசியதே தெரியவில்லையே'' என்றார்.

"அவர் எனக்குள்ளேயே இருக்கிறார். அதனால் உங்களுக்குத் தெரிய- வில்லை'' என்றேன்.

"! பூவுலகம் இப்படியெல்லாம் வளர்கிறதா? அதனால்தான் அங்கே (சுவர்க்கத்தில்) வரவு குறைகிறது'' என்றார்.

"சரி, நீங்கள் வந்த விஷயம் இன்னும் சொல்லவில்லையே'' என்றேன்.

"சொர்க்கம், சொர்க்கம் என்று ஆசைப்பட்டு அங்கு போனதெல்லாம் உண்மை தான். ஆனால், அங்கு எனக்குப் பிடிப்பேயில்லாது போய்விட்டது.அதுவுமில்லாமல் பூவுலகின்மீது சொல்ல முடியாத ஒரு ஈர்ப்பு உண்டாகிறது. இங்கே ஏதோ மாற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பதாகச் செய்தியும் வந்தபடி இருக்கிறது. அதனால்தான் அதை அறிந்துபோக இங்கே வந்தேன்'' என்றார்.

"நீங்கள் கூறுவது சரி என்றாலும், குறிப்பாக என்னைத் தேடி வந்து கேட்பது எனக்கு மிகவும் வியப்பாயிருக்கிறது. பெரிய மகான்களையோ,அறிவாளிகளையோ, விஞ்ஞானிகளையோ கேட்டிருந்தால் பொருத்தமாய் இருக்கும். நான் மிகவும் சாதாரணமானவள். எனக்கென்ன தெரியும்?''என்றேன்.

இப்பொழுது மகான்களையெல்லாம் யாரும் தேடிப் போவதில்லையாமே. அறிவாளிகள், விஞ்ஞானிகள் யாவரும் பின்னடையும் வண்ணம் சாமான்யர்களுக்குத் தான் மகிமை என்கிறார்களே'' என்றார்.

"அப்படியா? எனக்கு அதைப்பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது'' என்றேன்.

"அதுதான் உங்கள் தகுதி'' என்றார் மேலும்.எனக்கு மிகவும் வெட்கமாயிற்று. ஒன்றும் தெரியாது என்பது ஒரு தகுதியா? இவர் ஏதோ என்னைக் கேலிசெய்கிறார் போலும். பரவாயில்லை என்று சமாதானப்பட்டேன்.

"பூவுலகில் சலிப்பில்லை என்று எழுதியிருந்தீர்களே. அது எப்படி?''

"எதற்குச் சலிப்படையவேண்டும்? எனக்கு அமைதியும், ஆனந்தமும் தரும் சூழல் இருக்கும்போது சலிப்பு ஏற்பட வாய்ப்பேது?''

"இங்கு எப்போதும் அமைதியில்லை, ஆனந்தமில்லை என்பதுதானே மனிதவியல்பு''.

"ஆம், சில காலம் முன்பு அப்படித்தானிருந்தது. ஆனால் தற்போதெல்லாம் அப்படியில்லை''.

"உலகம் என்பதில் ஆன்மா பிறவி எடுத்து, உடலையும், உயிரையும் ஏற்று, பல ஆயிரம் முறைகள் பிறந்து, பிறவிச் சூழல் கனிந்து, கர்மம் கரைந்து, ஆன்மா விடுதலையடைகிறது. இந்தச் சுழற்சியில் அது களைத்து, சலித்து, "பிறவாமை வேண்டும்' என்றல்லவோ பிரார்த்திக்கிறது. ஆன்மா விடுதலையடைந்து இறைவனை அடைவதையல்லவா விரும்புகிறது?''

"ஆம். இதுவரை அப்படித்தான் பேசப்பட்டது. ஆனால் தற்போது நிலைமை அடியோடு மாறிவிட்டது''.

"மாற்றியவர் யார்? "காயம் பொய், வாழ்க்கை பேய்' என்று பேசிய பூவுலகப் பரம்பரையை மாற்றியவர் யார்?''

"எங்கள் பிரபு ஸ்ரீ அரவிந்தர் அவதரித்து சில உண்மைகளைக் கூறியுள்ளார்'' என்றேன் நன்றியுணர்வுடன்.

"அப்படி என்ன உண்மையைக் கூறினார் அவர்?'' இலேசாகச் சினம் தொனித்தது கேட்டவர் குரல்.

"சொர்க்கம் பூவுலகிற்கு உரியது என்று கூறியுள்ளார். அது மேலுலக சொர்க்கத்தைவிட ஆனந்தமானது. அதை நாடியே இறைவன் உலகைப் படைத்தான். அவன் நாடிவரும் சொர்க்கம் பூமியில் இருக்கும்பொழுது நாம் அதை விட்டு மேலுலகம் ஏன் போக வேண்டும்'' என்கிறார்.

"என்ன சொல்கிறீர்கள்?''

"ஆம். இறைவன் ஆன்மாக்களைப் படைத்தது உலகில் அவை வாழ்விலும், ஜடத்திலும் இறைவனைக் கண்டு நிறைவு பெறுவதற்காகவே அன்றி, அவசரமாக மோட்சத்தை நாடி திரும்பி வருவதற்கில்லை என்கிறார். வாழ்வு விலக்கப்பட வேண்டியதன்று. ஏற்று வாழ்ந்து, ஆன்மாவால் பூர்த்தி செய்யப்பட வேண்டியது என்ற புதிய தத்துவத்தை ஸ்ரீ அரவிந்தர் கூறியுள்ளார்''.

"இவையெல்லாம் தத்துவங்கள். ஆனால், கொலையும், கொள்ளையும் பெருகுவதாக வேறு ஒரு செய்தியுண்டு. அப்படியிருக்க எப்படி அமைதியும், ஆனந்தமும் கிடைக்கிறது என்கிறீர்கள்?''

"! அதுவா? இறைவன் தீமையைப் படைக்கவில்லை என்ற உண்மை தெரிந்து விட்டதால் தான்''.

"என்ன சொல்கிறீர்கள்?'' என்றார் அதிர்ச்சியாக.

"ஆம் ஐயா. சிருஷ்டியை லீலை என்று கூறியவர்கள், இதுவரை லீலைக்கு விளக்கமளிக்கவில்லை. அதை எங்கள் ஸ்ரீ அரவிந்தர் கூறிவிட்டார். அந்த இரகசியம் தெரிந்துவிட்டதால் தீமையும், தீமையால் வரும் துன்பமும் இல்லையென்றாகிவிட்டது''.

"மேலும், மேலும் பெரிய விஷயங்கள் சொல்கிறீர்கள். லீலைக்கு என்ன விளக்கம் கூறியுள்ளார் என்பதைக் கூறமுடியுமா?'' என்றார்.

"ஆனந்தமயமான பிரம்மம் தானே சிருஷ்டியாய் மாறியுள்ளது என்பதால் தீமையே இருக்க வாய்ப்பில்லையல்லவா?''

"ஏன் மாறியது? எப்படி மாறியது? என்றாலும் பதில் சொல்வீர்கள் போலிருக்கிறதே''.

"நிச்சயம் சொல்வேன். அதைத்தான் ஸ்ரீ அரவிந்தர் விளக்கமாய்ச் சொல்லிவிட்டாரே. அதாவது ஓர் இன்பத்தை நாடி உலகை இறைவன் படைத்தான். இன்பம் என்பது பல வகைகளானது. அந்த இன்பங்களுள் அதிக இன்பம் தருவது மறைந்துள்ளதைத் தேடிக் கண்டுபிடிப்பதுதான்.அதனால் இறைவன் தன் லீலைக்கு அதைத் தேர்வு செய்தான். அந்த இன்பத்தையும் மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு போவதற்கு, நாம் பிறரையோ, பிற பொருள்களையோ தேடுவதற்குப்பதிலாக நம்மை நாமே தேடுவது பொருத்தமானது. தேடவேண்டுமானால் ஒளிந்துகொள்ள வேண்டும். அதாவது நாம் நம்மை நமக்கே தெரியாமல் மறைக்க வேண்டும். அப்படி மறைத்துவிட்டு சிரமப்பட்டுத் தேடிக் கண்டுபிடித்தால் அதிக இன்பம் அதிலுள்ளது என்று ஸ்ரீ அரவிந்தர் கூறியுள்ளார். எனவே, இறைவன் ஞானமான தன்னை மறந்து, அறியாமையாகி, தன்னை இழந்தான். இப்படித் தன்னை இழந்த இறைவன் வெளிவந்து ஞானமாகத் தன்னைக் காணவேண்டும். அதை மனிதன் வாயிலாகச் செய்வதால் மனிதனுக்கு மட்டுமே துன்பம். துன்பமே இன்பம் என்பது பரிணாம உண்மை என்பதால் இன்பம் ஒன்றே இருப்பது எனத் தெரிந்துவிட்டது. அதனால் அமைதி; ஆனந்தம்''.

"அது சரி. பொழுது போகவில்லை என்றல்லவா பூலோகவாசிகள் கூறுவார்கள்? நீங்கள் பொழுது போதவில்லை என்று எழுதித் தந்தீர்களே,அது எப்படி?''

"ஆம். இறைவன் லீலையைப் பூர்த்தி செய்வதற்காக அவனை வாழ்வில் ஏற்று வாழும் வாழ்வில் ஓய்வேது? இது இறைவனாகும் யோகம். அதனால் பொழுது போகவில்லை என்பது தவறு. பொழுது போதவில்லை என்பதே சரி''.

"அப்படியென்றால் என்னதான் செய்வீர்கள்?''

"முன்பெல்லாம் மனத்தை மட்டும் தூய்மை செய்து, அதன்மூலம் ஆன்ம விடுதலை பெற்றார்கள். ஆனால் இங்கு ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகத்தில் உடல், உணர்வு, அறிவு, ஆன்மா என்ற எல்லாப் பகுதிகளும்,அதாவது முழு ஜீவனும் தூய்மை செய்யப்பட வேண்டியுள்ளது. அவற்றை அவிப்பதோ, அழிப்பதோ கூடாது. அவற்றைத் திருவுருமாற்றம் செய்துவிட வேண்டும்''.

"திருவுருமாற்றமா?''

"ஆம். திருவுருமாற்றம் தான். புலன்களைத் தூய்மைப்படுத்துவது. எல்லாக் குணங்களையும் அவற்றிற்கெதிரான நல்ல குணங்களாக மாற்றுவது.பூரணச் சுயநலம், அடிப்படை துரோகம், பொய் சொல்வது, சோம்பேறித்தனம் என்று எல்லாவற்றையும் அவற்றிற்கெதிரான நல்ல குணங்களாக மாற்றவேண்டும்''.

"இது கடினமான வேலைதான் இதைச் செய்ய நேரம் போதாது என்பது சரியான பதில்தான். இவற்றையெல்லாம் செய்து, பிறகு சுலபமாகச் சுவர்க்கத்திற்கு வந்துவிடுவீர்களா?''

"இல்லையில்லை. எங்களுக்கு சுவர்க்கமோ, மோட்சமோ குறிக்கோள் இல்லை. குணங்களைத் தூய்மைப்படுத்தினால் குணங்களால் ஆன வாழ்வு தூய்மையாகிறது. தூய்மையான வாழ்வு அதன் ஆன்மாவிற்கு விடுதலை அளிக்கிறது. இந்த உயிரின் ஆன்மா வெளிவருவது வாழ்வில் என்பதால் அது மேலுலகம் போகாது. உயிர் வாழும் உலகத்திலேயே இருக்கும். ஆன்மா வாழ்வில் வெளிப்படுவதால் வாழ்வு சுவர்க்கமாகும்''.

"! அதுதானா யாவரும் கூறும் பூலோகச் சுவர்க்கம்? இது இறைவனின் லீலையைப் பூர்த்தி செய்வது என்பது எப்படி?''

"அறியாமையுள் மூழ்கியுள்ள வாழ்வில் ஞானமான சைத்தியப்புருஷன் வெளிவருதலாகும். வாழ்வின் ஆன்மா வெளிவருதல் ஸ்ரீ அரவிந்தரின் கூற்றுப்படி லீலையை ஆண்டவன் நிறைவு செய்வதாகும். இறைவனின் அதிகபட்சக் குறிக்கோளை நிறைவேற்றும் முறை என்பதால் வாழ்வில் ஆன்மா வெளிவருதல் பூலோகத்தைச் சுவர்க்கமாக்குகிறது''.

"ஏ அப்பா! இவ்வளவு பெரிய, பெரிய விஷயங்களையெல்லாம் தெரிந்து கொண்டு சாதாரணமானவர் என்று உங்களைப்பற்றிச் சொன்னீர்களே.அது பொய்யில்லையா?''

"இல்லை. அது பொய்யில்லை. இத்தனை விஷயங்களையும் நான் என் மெய்ஞ்ஞானத்தால் கூறவில்லை. ஸ்ரீ அரவிந்தரை தம் ஞானத்தால் உணர்ந்த ஒரு மெய்யன்பரின் எழுத்தில் படித்துச் சொல்கிறேன். என்னைப் பொருத்தவரை இவற்றையெல்லாம் படித்தறியவே நேரம் போதவில்லை.புரிந்து செயல்பட மேலும் காலம் தேவைப்படுகிறது. இந்நிலையில் பொழுது போகவில்லை என்பது தவறல்லவா?''

"! மானுடர்கள் கவனம் இப்போது இதில் ஈடுபட்டதால் தான் நரகத்திலும், சுவர்க்கத்திலும் மானுடரின் வருகை நின்று போயிற்றா?நாங்கள் இறைவனைத் துதித்தபடி இருக்கிறோம். நீங்கள் இறைவனாகப் போவதாகக் கூறுகிறீர்கள். அப்படி நாங்கள் மாறமுடியுமா?'' (என்று ஆர்வத்துடன் கேட்டார்).

"முடியாது'' (என்று தயங்கியபடி கூறினேன்).

"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?''

"உங்களுக்கு எங்களைப் போன்ற உடம்பு இல்லையே (தேவர்களுக்கு ஒளியுடம்பு என்பது மரபு). இந்த யோகம் பூரணயோகம். இதைச் செய்ய உடல், உணர்வு, அறிவு, ஆன்மா என்ற நான்கும் கொண்ட முழுஜீவன் வேண்டும்''.

"அப்படியானால் நாங்கள் இதைச் செய்யவே முடியாதா?'' (என்றார் ஏமாற்றத்துடன்).

"ஏன் முடியாது? பூமியில் வந்து மானுடராய்ப் பிறந்துவிட்டால் முடியும்''.

"தவம் செய்து மேலே போனோம். ஆனால் இங்கே நீங்கள் தவமேதும் செய்யாமலேயே இறைவனைச் சந்திக்கிறீர்கள். நானும் மனிதனாக ஆக ஆர்வப்படுகிறேன்''.

"நீங்கள் சுவர்க்கம் போகத் தவம் செய்த காலம் வேறு. இப்போது இங்கு பூமியில் மானுடராகப் பிறக்கத்தான் நீங்கள் தவம் செய்ய வேண்டும் என்பதை மறவாதீர்''.

"அது புரிகிறது. யாரை நோக்கித் தவம் செய்வது என்று தான் தெரியவில்லை''.

"அதுவும் சரிதான். நீங்கள் மேல்மனக் கடவுளர்களை நோக்கித் தவம் செய்து பயனில்லை. பராசக்தியாம் ஸ்ரீ அன்னையை நோக்கித் தவம் செய்தால் மட்டுமே அது சாத்தியம்'' என்றேன்.

"நன்றியம்மா. நானும் இந்த யோகத்தைச் செய்ய தவம் செய்து, உடம்பு பெற்று, மானிடனாய் வருகிறேன்'' என்றார்.

"உடம்பை, பொய்யென்றும், பேயென்றும் உதறித் தள்ளியது போக,உடம்புபெற தவம் செய்ய வேண்டிய நிலை உருவாகிவிட்டது. இந்த உடம்பிற்கு வந்த வாழ்வைப் பார்த்தாயா?' என்று வியந்தவண்ணம் சென்றார்.


 

முற்றும்.

****


 


 



book | by Dr. Radut