Skip to Content

07.யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V

                                                    (சென்ற இதழின் தொடர்ச்சி..)                  கர்மயோகி

875) பெரும் மாறுதல், திடீரென எழும் வளர்ச்சி, அடிக்கடி அருள் செயல்படுதல் ஆகிய நிலையிலுள்ளவர்க்கு அடிக்கடி பரிசுகள் கிடைக்கும். எதிர்பாராத பெரும்பலன் வரும். அவர்கள் மனநிலையின் பக்குவத்திற்கேற்பவே அவை அமையும். சூழ்நிலையால் அவை நிர்ணயிக்கப்படா. உண்மையில் அவை சூழலைச் சுட்டிக்காட்டுபவை. சூழல் அவர்கட்கு அனுப்பும் அழைப்பாகவும் அமையும்.

அதிக ஆர்வம் அனைவரையும் ஈர்க்கும். மேலும் உயர்வது தனிமையைத் தரும்.

. வாழ்வில் அனைவரும் போற்றுவது, பாராட்டுவது, நாடுவது, துடியாகச் செயல்படுவது அதிக வருமானம் பெற.

. வருமானத்தைவிட எல்லோர் மனத்தையும் கவர்வது பிரபலம், நல்ல பெயர்.

. அதையும் கடந்தது அந்தஸ்து, செல்வாக்கு.

. அந்தஸ்தும், செல்வாக்கும் பெற்றபின் பரிசுகள் கிடைக்க ஆரம்பிக்கும்.அடிக்கடியும் கிடைக்கும். பல்வேறு பரிசுகளும் கிடைக்கும்.

. வரும் பரிசும் பெறுபவர் மனநிலையைப் பொருத்தது; அந்தஸ்தைப் பொருத்தது.

. ஒரே தகுதியுள்ள இருவர்க்கு மனநிலை பரந்து விரிந்தும், சாதாரணமாகவுமிருந்தால் ஒருவர்க்குப் பல்கலைக்கழகம் D.Sc. பட்டத்தை கௌரவப் பட்டமாகக் கொடுக்கிறது. மனநிலை பரந்து, உயர்ந்து இருப்பவர்க்கு அதே தகுதிக்கு ஆசிய நோபல் பரிசு எனும் மாக்ஸேஸே விருது வருகிறது.

. அதுவே ஒரு பள்ளி ஆசிரியருக்கு கல்லூரியில் ஆசிரியராக வேலை கிடைப்பது பரிசு. மனப்பக்குவம் வேறு வகையில் உயர்ந்திருப்பதால் அதே தகுதியுள்ள அடுத்தவர்க்குப் பல நூல்கள் வெளியிட வாய்ப்பு எழுகிறது.

. ஒரே தகுதியுள்ள இருவர்க்கு ஒரே ஸ்தாபனத்தில் ஒருவருக்கு ஏராளமாகத் திருட வாய்ப்பும், அடுத்தவர்க்கு அபரிமிதமாக விரயம் செய்யும் வாய்ப்பும் எழுகிறது.

. அன்னை வந்தபின் அனைத்தும் உள்ளிருந்து வெளியே வரும்.

. அன்னை வந்தபின் நாம் பெறும் பட்டம், அமெரிக்கப் பட்டமாக மாறும்.

. அன்னை வந்தபின் சூழல் நம்மைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக,சூழல் நமக்குக் கட்டுப்படும்.

. அன்னை வந்தபின் ஆக்ரா பயணம் அமெரிக்காவில் நயாகராவைப் பார்க்கும் பயணமாக மாறும்.

. அன்னை வந்தபின் நாம் தேடிப் போன அனைவரும், நம்மை நாடி வருவார்கள்.

. உள்ளூரில் மேடையில் பேச சந்தர்ப்பமில்லாதவர்க்கு உலக மேடை கிடைக்கும்.

. சிருஷ்டி ஆண்டவனின் இச்சைப்படி நடக்கிறது.

. மனிதவாழ்வு என்பது அவனே நிர்ணயிப்பது.

. சமூகம் தன்வாழ்வைத் தானே நிர்ணயித்துக் கொள்கிறது.

. அகம் புறத்தை நிர்ணயிக்கிறது.

. புறம் ஒருபொழுதும் அகத்தை நிர்ணயிக்காது.

. புறம் அகத்தைப் பிரதிபலிக்கும்.

. ஒருவர் வாழ்வில் பெரும் மாறுதல் ஏற்பட்டபொழுது நாம் அப்பொழுது சூழலில் இருந்த சந்தர்ப்பத்தைப் பார்த்து, அதனால் நடந்தது என அறிகிறோம்.

. காரணம், காரியத்தில் முடிகிறது.

. எது முதல் என்பது கேள்வி.

. காரணத்தால் காரியம் நடந்தது எனப் புரிந்து கொள்வது அறிவு வளர உதவாது.

.C..சுப்ரமணியத்தை நேரு ஆவடி காங்கிரஸில் கண்டு, டெல்லிக்கு அழைத்துப் போனார்; இந்திரா நேருவின் மகள் என்பதால் பிரதமர் ஆனார்; காமராஜை நேருவுக்குப் பிடித்துவிட்டது - இவை அதிர்ஷ்டம் என நாம் புரிந்துகொள்கிறோம். இது தலைகீழேயிருப்பதால் அறிவு வளர உதவாது.

. சுப்ரமணியம், இந்திரா, காமராஜ் ஆகியவர்க்கு மனம் பக்குவம் அடைந்துவிட்டதால் நேரு கண்ணில் பட்டார். நேருவுக்குப் பிடித்து விட்டது என்றால் நாம் மேலும் அவர்களைப் புரிந்துகொள்ளவும், அதன் மூலம் மற்றவற்றைப் புரிந்துகொள்ளவும் உதவும்.

. அனைத்திற்கும் ஆர்வம் ஆத்மாவில்.

. அனைத்திற்கும் ஆர்வம் அகத்தில்.

. சமுதாயமோ, புறச்சூழலோ மனிதனை நிர்ணயிக்கவில்லை என்பது ஸ்ரீ அரவிந்தம்.

. அதிர்ஷ்டம் என்பது ஆத்மாவின் அனுபவம்.

. ஆத்மா வளர்வது ஆன்மீகம்.

. ஆன்மா வாழ்வில் வெளிப்படுவது அதிர்ஷ்டம்.

. ஆன்மா வாழ்வை நடத்துவது அருள்.

. வாழ்வு ஆன்மாவுக்குக் கட்டுப்பட விழைவது பேரருள்.

. இவற்றை நிர்ணயிப்பது human choice நமது பிரியம்.

. மனிதன் பிரியப்பட்டால் அதிர்ஷ்டம் வரும்.

. நம் அதிர்ஷ்டம் நம் கையில்.

. நாம் தரித்திரத்தை நாடுவது நம் பழக்கம்.

. இறைவன் அதைத் தடுப்பதில்லை.

****

876) ஆர்வம் அதிகப்பட்ட நாட்களில் அநேகர் உங்களை நாடி வருவதைக் காணலாம். மேலும் ஆர்வம் உயர்ந்தால் வருபவர்கள் குறைந்து மறைவதுடன், வீட்டிலுள்ளவரும் போய் உங்களைத் தனியே விடுவதைக் காணலாம்.

ஆர்வ மிகுதியால் வரும் தனிமை.

மரம் பழுத்தால் வௌவால்கள் தானே மரத்தைத் தேடி வரும்.ஆர்வம் என்பது நாம் இறைவனை நோக்கிப் போவது. உடனே அதே ஆர்வமுள்ள அனைவரும் நம்மை நோக்கி வருவார்கள். மகாபாரதக் கதை சொல்லும் பிரசங்கத்திற்கு ஏராளமாகக் கூட்டம் வரும். அதன் உயர்ந்த பகுதியான கீதைப் பிரசங்கத்திற்குக் கொஞ்சம் பேரே வருவார்கள்.

. அனைவரும் ஆண்டவன் மீது ஆர்வம் உள்ளவர்கள்.

. அதனால் நாம் அவனை நோக்கிப் போகும் பொழுது உடன் வருவார்கள்.

. ஆண்டவனை வணங்குவதால் தவம் செய்யவோ, யோகத்தை மேற்-கொள்ளவோ எவரும் விரும்பமாட்டார்கள்.

. துறவி நாடுவது தனிமை. துறவியை நாடி எவரும் வரப் பிரியப்பட மாட்டார்கள்.

. கதை சொன்னால் பெரிய கூட்டம் சேரும். பாடம் படிக்க கூட்டம் வாராது.

. ஆர்வம் என்றால் என்ன?

. நாம் என்பது ஜீவாத்மா.

. உலகில் உள்ள அனைவரும் ஜீவாத்மாக்கள்.

. பரமாத்மா ஆயிரமாயிரம் ஜீவாத்மாக்களாகப் பிரிந்தது.

. ஜீவன் ஜீவனோடு தொடர்புகொண்டு விளையாடுவதும், ஜீவியம் ஜீவியத்துடன் தொடர்புகொண்டு விளையாடுவதும், ஆனந்தம் ஆனந்தத்துடன் தொடர்புகொண்டு விளையாடுவதும் லீலை.

. ஜீவாத்மா பரமாத்மாவை நோக்கிப் போவது ஆர்வம்.

. ஒரு ஜீவாத்மா அடுத்த ஜீவாத்மாவை நோக்கி வருவதும், அது பரமாத்மாவை நோக்கிப் போவதாகும்.

. அதனால் ஒரு ஜீவாத்மா பரமாத்மாவை நோக்கிப் போகும் பொழுது ஏனைய ஜீவாத்மாக்கள் அதை நோக்கி வருவது இயல்பு. இது உலக வாழ்வு.

. ஜீவாத்மா பரமாத்மாவை நோக்கிப் போவது தவம், சன்னியாசம்,துறவறம், யோகம். அது மற்ற ஜீவாத்மாக்களுக்கு ஒத்து வாராது. அதனால் அது தனிமையில் விடப்படும்.

. கோவில்களில் கூட்டமிருக்கும்.

. ஆசிரமங்களில் கூட்டமிருக்காது.

. ஏற்றத்தாழ்வு வாழ்வின் சட்டம்.

. ஏற்றமும், தாழ்வும் இணைந்தது தொடர்ந்த ஏற்றம்.

. அலை என்பது அது போன்றது. அலை நகரும்பொழுது ஏற்றத் தாழ்வைக் காண்கிறோம்.

. வியாபாரம் பெருகுவதற்கும், மழை பொழிவதற்கும், மனித வாழ்விற்கும்,தெய்வ பக்திக்கும் - எந்தச் செயலுக்கும் - அடிப்படையான சட்டம் ஒன்றே.

. மனம் அன்னையை நாடினால் நம்மை நோக்கி இருவர், மூவர், பலர் வருவார்கள்.

. அவர்கள் நம்மிடம் பேசலாம், பேசாமலிருக்கலாம்.

. அந்த ஆர்வம் குறைந்த அதே நேரம் அவர்கள் விலகிப் போவார்கள்.

. அந்த ஆர்வம் அவர்களைக் காந்தம் போழுக்கும்.

. நமக்கு ஆர்வம் எந்த அளவிருக்கிறதோ, அந்த ஆர்வத்திற்குரியவர் நம்மை நோக்கி வருவார்.

. ஆர்வம் குறைவதற்குப் பதிலாக அதிகப்படலாம்.

. அதே நேரம் உடனிருந்தவர் விலகுவர்.

. உயர்ந்த ஆர்வத்திற்குரியவர் வருவர்.

. வருபவர் எண்ணிக்கையும், தரமும் நம் ஆர்வத்தைப் பொருத்தது.

. ஆர்வம் அதிகமாகிக் கொண்டேயிருந்தால், உடனிருப்பவர் போவதும்,புதியவர் வருவதும் தெரியும்.

. தொடர்ந்த ஆர்வமிருப்பது அரிது.

. அதிகமாக உயர்ந்தபொழுது, ஆர்வம் சரிவதுண்டு.

. சரிவது கொஞ்ச நாட்களுக்கிருக்கும்.

. அக்கொஞ்ச நாட்களில் இப்புதிய நிலைக்கேற்றவர் வருவர்.

. அப்படி வருபவர் ஏற்கனவே விலகியவராக இருக்கும். அல்லது அப்பொழுதுள்ள தாழ்ந்த ஆர்வத்திற்குரிய புதியவராகவுமிருக்கும்.

. ஆர்வத்தின் கட்டம் பக்தனுடைய நிலையிலிருந்து சாதகனுடைய நிலைக்கும், யோகியின் நிலைக்கும் போக வாய்ப்புண்டு.

. தொடர்ந்த முன்னேற்றமிருந்தால் அனைவரும் விலகி முழுத்தனிமை ஏற்படும்.

. அத்தனிமை தனிமையாக இருக்க வேண்டுமா, பலரைச் சந்திக்க வேண்டுமா என்பது அவருக்கு உள்ளுணர்வால் ஏற்பட்ட கடமை நிர்ணயிக்கும்.

தொடரும்.....

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

தனக்குரியனவெல்லாம் தன் அகந்தையின் உரிமையாகக் கருதுகிறான் மனிதன். அகந்தை இழந்தபின் அவனையும்,அவன் உடைமைகளையும் இறைவன் ஆட்கொள்வான்.

மனம் விழையும் சரணாகதியை ஜீவன் ஏற்றுக்கொள்ளும் தருணம்

ஆன்மா மலரும் அற்புத நேரமாகும்.

ஜீவிய மணி

அன்பை அறிந்தவர்க்கு வாழ்வு தென்றல்.


 


 


 


 


 



book | by Dr. Radut