Skip to Content

08.அஜெண்டா

"Agenda"

People prefer misery to luminous joy.

சந்தோஷத்தை விட, கவலை மனிதனுக்கு உகந்தது.

. அன்னை மேற்சொன்னபடி சொல்வது நமக்கு விளங்காது; ஏற்பது சிரமம்;முரண்பாடாகத் தோன்றும்.

. அனுபவம் அதிகமாக உள்ளவர் நுட்பமாகச் சிந்திப்பவரானால், இதை அறிவார். ஏனெனில், கவலை தரும் சந்தர்ப்பம் ஒரு சிறு சௌகரியத்துடன் சேர்ந்திருக்கும். அதை விட மனமில்லாமல் மக்கள் அத்துடன் உள்ள கவலையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருப்பார்கள்.

. 40 வயதானவர்; படிப்பில்லை; தொழில்லை; அதுவரை 100 ரூபாய் முழுவதும் சம்பாதித்ததில்லை. அண்ணன் மகன் உதவியாலும், அக்கா மகன் உதவியாலும் அதுவரை குடும்பம் நடத்திவிட்டார். 5 ஏக்கர் நல்ல நிலமிருக்கிறது. சரி வரப் பயிரிடாததால் சாப்பாட்டிற்கே போதுமான நெல் வருவதில்லை. பழைய பெரிய வீடு. இரு பிள்ளைகள்;15, 10 வயதில் படிக்கிறார்கள். இவர் மைத்துனன் இவருக்குள்ள கடன் பாரம், நிலம் பயிரிட பணமில்லாத நிலைக்குரிய காரணம், இனி வரப் போகும் செலவுகளை உத்தேசித்து இவர் வாழ்வை செப்பனிட முயன்றான். இவரால் பயிர் செலவுக்கு 100 ரூபாய் வாங்க முடியாத நிலை. நில அடமான பாங்கில் 2000 ரூபாய் கடன் (1965இல்).கடன் அழிந்து நிலம் சரிவரப் பயிரானால் அன்றைய நிலவரப்படி ஆண்டிற்கு ரூ.2000த்திற்கு மேல் வரும். அது ஒரு மாதத்திற்கு ரூ.160வரும். அன்று அது ஒரு தாசில்தார் வருமானம். இவருடைய குடும்பம் இவருக்கு சிறு உதவி செய்கிறது. நிரந்தர உதவி செய்யும் நிலையோ,மனமோ அவருக்கில்லை. மைத்துனன் அவருக்குக் கீழ்க்கண்டபடி கூறினான்:

. "உங்கள் நிலத்தை நன்கு பயிரிடத் தேவையான பணம் தயார் செய்து, நிலத்தை முறையாகப் பயிரிட்டு, பாங்க் கடனை சிறிது,சிறிதாக அடைத்துவிட்டு, அது முடிந்தபின் அடுத்த ஆண்டிற்குரிய செலவுடன் நிலத்தை உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதன்பிறகு நல்ல வருமானம் வரும்" என்றான்.

. அந்த நிர்வாகப் பொறுப்பைத் தான் ஏற்றுக் கொள்வதாகவும் கூறினான். அவர் "சரி" என்றார். "உங்கள் பங்குக்கு நீங்கள் உங்கள் நிலத்தின் மீது அத்தொகையைக் கடனாக எழுப்ப எனக்கு அனுமதி தரவேண்டும்" என்றான். "நீயே உன் பொறுப்பில் கடனை வாங்கு. என் நிலத்தின் மீது வேண்டாம்" என்றார்.

. உறவு எதுவானாலும் உரிய உதவி தர முன்வருபவர் குறைவு.

. தான் முன்னேறத் தனக்குக் கிடைக்காத உதவி தேடி வரும் பொழுது பொறுப் பேற்க மனம் வருவதில்லை.

. அவர் மேலும் கேட்டார்: "அதன்பிறகு இன்று நீ தரும் உதவியைத் தருவாயா?" என்றார். மைத்துனன் "எனக்குச் சிறு உத்தியோகம்.சிரமப்பட்டு உதவுகிறேன். நான் இதிலிருந்து விடுதலை பெறவே இவ்வளவு பொறுப்பை ஏற்கிறேன்" என்றான். "என் நிலத்தின் மீதும் கடன் வாங்க வேண்டாம். உன் உதவியையும் நிறுத்த வேண்டாம்.இவையெல்லாம் எனக்குச் சம்மதமில்லை" என்று மாமா கூறினார்.

. தன் நிலை பரிதாபம். வறுமையிலிருந்து வெளிவந்தால் சுதந்திரமாக வாழலாம். இன்று பெறும் சிறு உதவியை விடவோ, முன்னேறும் பொறுப்பை ஏற்கவோ அவர் முன் வரவில்லை. இதுபோன்ற நிலைமைகள் ஏராளம்.

. கவலைக்கிடமான வறுமை, சந்தோஷம் தரும் பொறுப்பை விட மனத்திற்கு இதமாக உள்ளது என்பதை அன்னை வலியுறுத்திக் கூறுவார்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

தனி மனிதனின் சாதனைகள் தனித்தே நிற்கும். அவை உலகத்தின் சாதனைகளாக மாற, அவன் மனம் விரிந்து உலகத்தைத் தன்னுள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

விரிந்த மனம் தனி மனிதன் சாதனையை

உலகத்தின் சாதனையாக மாற்றும்.


 


 


 


 


 



book | by Dr. Radut