Skip to Content

13.மலரும் மணமும்

"அன்னை இலக்கியம்"

மலரும் மணமும்

                                                   (மே இதழின் தொடர்ச்சி....)         மகேஸ்வரி

தைரியம்:

அவசரமாகக் கீழிறங்கிக்கொண்டிருந்தான் சுரேஷ். கஜினி முகம்மது முன் பிறவியில் தனக்குச் சகோதரனாக இருந்திருப்பானோஇல்லை பல பிறவிகளுக்கு முன் தானே கஜினியாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எப்பொழுதுமே அவனுக்கு உண்டு. ஏனெனில் B.E.Electronics முடித்து ஐந்து வருடங்கள் ஆகி இத்துடன் நூற்றுக்கும் மேலான நேர்முகத் தேர்வில் கலந்துக் கொண்டாலும், அவன் சொந்தக்காலில் நிற்க முடியவில்லை. தனக்குச் சொந்தக்காலே இல்லையோ என்ற பயம் அவன் மனதில் மேலோங்கி நின்றது. ஒவ்வொரு முறையும் அப்பாவிடம் பணம் கேட்கும் பொழுது, எதுவும் சொல்லவில்லையென்றாலும் அவன் கேட்பதற்கு 75% பணம்தான் கொடுப்பார். முக்கால் மனதுடன் கொடுக்கிறார் என்று சுரேஷுக்குத் தெரிந்தாலும், முழுமனதுடன் அவன் வேலை தேடினாலும், வேலை கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தது. படிக்கும்பொழுது இன்னும் கொஞ்சம் கவனம் காட்டி இருக்கலாமோ என்ற எண்ணத்திற்கு உயிர் கொடுக்க மனம் வரவில்லை. என்னைவிடக் குறைவாக மார்க் வாங்கி உள்ளவர்களுக்கு எல்லாம் வேலை கிடைத்துள்ளதே என்று அம்மாவிடம் புலம்புவான்.

இன்றும் வேலைக்காக இல்லை, வேலைக்கான நேர்முகத் தேர்விற்குத் தான் சென்றுகொண்டிருக்கிறான். மனம் எதை, எதையோ நினைத்துக் கொண்டிருக்க, இறங்கியவன் முன்னால் பூக்கூடையொன்று தெரிந்தது. 'இதுவென்ன பிள்ளையார் பூவை கூடையில் வைத்திருக்கிறார்களே? இன்றைக்கு பிள்ளையார் சதுர்த்தியா?' என்று நினைத்துக்கொண்டிருந்தவன், கதவைத் திறக்கும் சத்தம் கேட்டதும், உடனே பயத்தினால், கூடையிலிருந்த பூவை எடுத்தவன், ஒரு கொத்தை அப்படியே சர்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டான்.

****

"அந்திமல்லி, அந்திமல்லி...'' சந்திரன் கூப்பிட்டுக்கொண்டே படியேறினான்.

"என்ன யோசித்துக்கொண்டிருக்கிறாய்?''

"இன்றைக்கும் நம் வீட்டு பால்கனியில் குப்பை போட்டிருக்கிறார்கள். பார்த்தால் முட்டை ஓடுகள். என்ன செய்வதென்றே தெரியவில்லை. பார்க்கும்பொழுது நன்றாகப் பேசுகின்றார்கள். வாடகையும் நாம் ஒழுங்காகக் கொடுக்கின்றோம். தண்ணீர் மோட்டார் போடமாட்டேன் என்கிறார்கள். கேட்டால் குப்பையைக் கொட்டுகிறார்கள்''.

"நான் முன்பே சொன்னேன், நம் கதையைப் பற்றிச் சொல்லாதேயென்று! நீதான் மனிதர்கள் வேண்டும் என்றாய்; இப்பொழுது அனுபவிக்கிறாய்'' என்றான் சந்திரன்.

"சரி, நாம் வேறு வீடு பார்க்கலாம்''.

"கடல் போன்ற வீட்டிலிருந்து வந்தவள் நீ. புறாக்கூண்டு வீடு உனக்கு கிடையாது என்கிறது வாழ்க்கை. வீடு சொந்தமாக வாங்கலாம்; ஆனால் என்ன, நாம் இருவருமே வேலைக்குச் சேர்ந்து ஆறு மாதங்கள்தான் ஆகின்றது. இன்னும் ஒரு வருடம் பொறுத்துக்கொள், ஒரு வீட்டிற்கு மகாராணி ஆக்கிவிடுகின்றேன்''.

"நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்....'' என்று இழுத்தாள் அந்திமல்லி.

"நினைவுதானே வாழ்க்கை. நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும்''என்று சந்திரன் முடித்தான். "என் ஆபீசில் சொல்லி வைக்கின்றேன். நீயும் பார்'' என்றான்.

மணி 9.50 ஆகிவிட்டிருந்தது. கையிலுள்ள கடிகாரத்தை திருப்பித் திருப்பி பார்த்தாள் அந்திமல்லி. வீட்டைப் பற்றி நினைத்துக்கொண்டு இருந்ததில் நேரம் வேகமாக போய்விட்டதோ, இல்லை உண்மையிலேயே கடிகாரம் வேகமாக போகின்றதா? அவளுக்குப் புரியவில்லை. எப்பொழுதும் சந்திரன் அவளை ஆபீசில் கொண்டு விடுவான். இன்றைக்கு அவன் சீக்கிரமாகப் போகவேண்டி இருந்ததால் ஆட்டோவில் போகச் சொன்னான். ஆட்டோ திடீரென்று ஸ்ட்ரைக். அதனால் பஸ்ஸை எதிர்பார்த்து காத்திருந்தாள்.

பஸ் மிதந்துகொண்டு வந்தது காலை வெள்ளத்தில். எள் போடக் கூட இடமில்லை. ஒரு பஸ் அல்ல, மூன்று பஸ்ஸை விட்டாள். அவளுக்கு சென்னை பஸ் வெள்ளத்தில் மூழ்கி கரையேறத் தெரியவில்லை. பார்த்துப் பார்த்து ஒதுங்கிபோய் நின்றுக்கொண்டாள்.

ஆபீசுக்குப் போன் செய்து சொல்லிவிடலாம் என்றால் அதுவும் முடியாது. இன்றைக்கு 11.30 மணிக்குத் துறை அமைச்சரைப் போய் பார்க்கவேண்டும். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தாள்.

இன்றைக்குக் காலையிலிருந்தே எல்லாமே ஏறுக்குமாறாக நடக்கிறது போல் பட்டது. தலைவலி 'இதோ, நான் வந்துகொண்டிருக்கிறேன்' என்று கட்டியம் கூறியது.

ஏதோ ஒரு வேகத்தில் தன் கட்டைவிரலை நீட்டினாள். வேகமாகப் போய்க் கொண்டிருந்த கிரிஸ் நிதானமாக நின்றது. ஹெல்மெட்டால் முகத்தை மறைத்துக்கொண்டிருந்தவளின் கண்கள் எங்கே போகவேண்டும் என்று கேட்க, "சேப்பாக்கம், திருவல்லிக்கேணி அல்லது அண்ணாசாலை முனையில் இறக்கினால்கூட....'' என்று அந்திமல்லி இழுக்க,

"உட்காருடி'' என்று குரல் அதட்ட,

"இது உரிமை குரலா, இல்லை அதட்டலா?' என்று புரியாமல் விழிக்க,

"சந்திரனின் மல்லியே, சூரியனை கண்டு சோர்ந்திருக்கக் காரணம் என்ன? வாராய், நீ வாராய்'' என்ற குரலின் சொந்தக்காரி தன் ஹெல்மெட்டை எடுக்க,

"ஏய், மல்லிகை, நீயா!''

"ஆமாம், நீ எங்கே இங்கே? சென்னையில் உனக்கென்ன வேலை?சந்திரன் என்ன செய்கிறார்? எங்கேயிருக்கிறார்? அப்பா, அம்மா சௌக்கியமா? முந்திரிகொத்து கிடைக்குமா? எப்பொழுது இங்கே வந்தாய்? என்னை மறந்துவிட்டாயா?'' கேள்விக்கணைகளை அள்ளி வீச,

அந்திமல்லியோ வண்டியில் ஏறினாள்.

"உன் கேள்விகளுக்கெல்லாம் இப்பொழுது பதிலில்லை. நீ மாறவே இல்லை''.

"ஆனால் நீ மாறிவிட்டாய்; மறந்தும்விட்டாய்'' என்று மல்லிகை வசனம் பேசினாள்.

"எனக்கு பயமாய் இருக்கிறது மல்லிகை!''

"நான் வண்டியை ஒழுங்காக ஓட்டுவேன், பயப்படாதே. உன்னை பத்திரமாக நீ போகவேண்டிய இடத்தில் முழுதாக இறக்கிவிடுகிறேன்''.

****

ரத்னா கபேயில் காபி சாப்பிட்டுக்கொண்டிருந்த மல்லிகை, மசாலா தோசையை பிய்த்துக்கொண்டிருந்த அந்திமல்லியைப் பார்த்து,

"என்னாயிற்று உனக்கு? முகமெல்லாம் வாடி! அன்றலர்ந்த அந்திமல்லியே! இந்த அந்திவேளையிலும் மலரவில்லையே! உனக்கு நினைவிருக்கிறதா, நீ தான் தமிழில் முதல்; பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு அனல் கக்குவாய்! இப்பொழுதென்னவோ நீ FCIயில் ஆபீசர். நானோ ராணிமேரிக் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவி. தலைகீழ் மாற்றமடி! நான் நினைக்கக்கூடவில்லை, திருநெல்வேலி தமிழ் சைவப்பிள்ளை தமிழை விட்டதோடு மட்டுமல்லாமல், சந்திரனை - அதுவும் வானுலக சந்திரனை - மணந்திருக்கிறாய்; ஆனால், பயமென்கிறாய்? ஆனால் செய்திருப்பது தைரியசாலிகள்கூட யோசனை செய்யக்கூடியது! காதலின் சக்தி மகத்தானது! என் வாழ்த்துகள்!!''

"வாழ்த்துவது இருக்கட்டும், முதலில் எனக்கொரு வீடு பார்த்துக் கொடு. ஒரே ஒரு கண்டிஷன்! வீட்டுக்காரர் பக்கத்தில், எதிரில், கீழே,மேலே இருக்கக்கூடாது''.

"என் அபார்ட்மெண்டில் ஒரு வீடு இருக்கிறது. அவர்கள் கிராமத்திற்கு போகப்போகின்றார்கள். இப்போதைக்கு நீ வா; நீயே வாங்கிவிடலாம்''.

"மல்லிகை, உன்னைப் பார்த்து பேசியபிறகுதான் என் பயம் குறைந்து இருக்கிறது. எதைப் பார்த்தாலும், யாரைப் பார்த்தாலும், நினைத்தாலும் உடல் தூக்கிப்போடுகின்றது''.

"நீ செய்திருப்பதற்கு உன் உடம்பே.....'' என்று ஆரம்பித்த மல்லிகை நிறுத்திவிட்டாள்.

****

"அக்கா! அன்னைக்கு ஜோசியம் தெரியும் போலிருக்கிறது''.

"சத்-சித் சக்தியில் பிறந்த அன்னைக்கு எல்லாமும் தெரியும்''.

"இல்லையக்கா! இன்றைக்கு பயத்தில் மூழ்கியிருந்த என் தோழியைப் பார்த்தேன். இங்கு வந்தால், வாசலில் 'எருக்கம்பூ' தைரியமாக என்னை விழித்துப் பார்க்கிறது''.

"உன் தோழிக்குக் கொண்டுபோய் கொடு!''

"அவளே இங்கு வரப்போகின்றாள், அவள் கணவனுடன்! நம் லோகநாதன் சார் வீட்டிற்கு கேட்டிருக்கின்றேன். சமூகத்தை எதிர்த்து திருமணம் செய்திருக்கின்றாள்; தைரியசாலிதான். இப்பொழுது காரணமே இல்லாமல் பயப்படுகின்றாள். அன்னையைப் பற்றிச் சொல்ல தயக்கமாக இருக்கிறது. ஆனால், அவளை இன்று பார்த்தவுடன் அவளில் என்னைத்தான் பார்த்தேன். ஏனென்றால், சிறுவயதிலிருந்தே எனக்கு எதற்கெடுத்தாலும் பயமாக இருக்கும். இருட்டைக் கண்டால் பயம், வெளிச்சத்தில் போக பயம், புதிதாக ஒருவரிடம் பேச பயம், டீச்சர் கேள்வி கேட்டால் பயம் என்று பயங்கலந்த மரியாதையுடன்தான் எல்லோரிடமும் பேசுவேன். ஆனால் அந்திமல்லி எனக்கு எதிர்! நேர்கொண்ட பார்வையும், நிமிர்ந்த நன்னடையும், தமிழ் கொடுத்த தைரியமும் துணைகொண்டு காலேஜை 'ஒரு கை' பார்ப்பாள்! இன்று அவளுக்கு நான் தைரியம் கொடுக்கின்றேன்! அன்னை எதற்காக அவளை இன்று என்னை பார்க்கவைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அன்னை ஏதோ பெரிய நல்லதை அந்திமல்லிக்கு செய்ய இருக்கிறார்கள். அதற்கு நீங்களும் நானும் கருவிகள் ஆகப் போகின்றோம். ஆனால், நிச்சயமாக நல்லதுமட்டுமே நடக்கும் ''.

"அப்பா, அம்மா சம்மதத்துடன் நடந்த திருமணமா?''

"இல்லையக்கா, இரு பக்கத்திலும் சம்மதம் தரவில்லை. அந்திமல்லி சைவப்பிள்ளைமார்; சந்திரனோ சமூகத்தின் மூத்த குடிமகனைச் சார்ந்தவன். ஜாதி பெரிய தடை. ஆனால் மனம் ஒத்துப்போயிற்று''.

"சம்மதம் வாங்கி, திருமணம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்''என்றாள் ரோஜா!

"ஆறு வருடங்களாகக் காத்திருந்து, ஆறு மாதங்களுக்குமுன் தான் திருமணம் செய்திருக்கிறார்கள் - அதுவும் இருவருக்கும் வேலை கிடைத்த காரணத்தினால் - இனியும் விட்டால், வேறு ஒருவருக்குத் திருமணம் செய்து விடுவார்களோ என்ற பயத்தினால்தான்''.

"பயத்தில் ஆரம்பித்த வாழ்க்கை.....''

தொடரும்....

****

 


 


 



book | by Dr. Radut