Skip to Content

04.அமெரிக்காவுக்கு நிகராக இந்தியா

அமெரிக்காவுக்கு நிகராக இந்தியா

என். அசோகன்

மேலைநாடுகள் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியிலும் தொழில்ரீதியாக முன்னேறிய பொழுது இந்தியா அடிமை நாடாக முடங்கிக்கிடந்ததுஇப்பொழுது சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் போதிய முன்னேற்றம் வரவில்லை. இந்தியர்கள் திறமையற்றவர்களா? முன்னேற்றமென்பது முடியாத காரியமா? ஆப்பிரிக்க நாடுகளில்கூட சில நாடுகள், தனி நபருடைய ஆண்டு வருமானமாக 3000 டாலர்களை எட்டியிருக்கும் பொழுது ஏன் இந்தியாவில் மட்டும் அதை சாதிக்க முடியாது? இதற்கு மக்கள்தொகைப் பெருக்கந்தான் காரணமா? அப்படியென்றால் கம்யூனிச ஆட்சி நடக்கும் சீனா இந்தியாவைவிட முன்னேறியுள்ளதே! இந்தக் கேள்விகளுக்கெல்லாம் என்னுடைய பதில் என்னவென்றால் நம் நாட்டிலுள்ள பொருளாதார வாய்ப்புகளை நாமே உணராமலுள்ளோம் என்பதுதான்.

'அமெரிக்காவிலிருந்து கோடிக்கணக்காக நிதியுதவி வந்தால்தான் இந்தியாவை முன்னேற்ற முடியும்' என்று நம்புகின்றவர்கள் நிறைய பேருள்ளார்கள். இந்நம்பிக்கை இவர்களுக்கு உண்மையாகத் தெரியலாம்.இருந்தாலும் இதில் உண்மையில்லை. எந்த நாடாவது மற்றொரு நாட்டை மேம்படுத்தியுள்ளதா? இல்லையென்னும்பொழுது நம் நாட்டு விஷயத்தில் மட்டும் இதெப்படி உண்மையாகும்? இந்தியா முன்னேற வேண்டுமென்றால் அதை இந்தியர்களால்தாம் நிகழ்த்த முடியும். இந்தியாவிற்கு மட்டுந்தான் இது உண்மையென்றில்லை. எந்நாடு முன்னேற விரும்பினாலும் இது தான் உண்மை. இந்தியாவை இங்கிலாந்து ஆட்சி செய்த காலத்தில் நெடுஞ்சாலைகள், பாலங்கள் மற்றும் ரயில்வே தடங்களை நிறுவியதென்றால் தன்னுடைய ஆதாயத்திற்காக அவற்றைச் செய்ததேயொழிய நம்முடைய நலனுக்காக இல்லை.

நம்முடைய சொந்த முயற்சியைக் கொண்டு நம் நாட்டை முன்னேற்ற வேண்டுமென்ற கருத்தைத் திட்டக்கமிஷன் வல்லுநர்கள் பல்வேறு கோணங்களிலிருந்து பார்க்க வேண்டும். இரண்டு கருத்துகளை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

(1) இருபது வருடங்களிலேயே நடுத்தர வருமானமுள்ள நாடுகளின் நிலைக்கு இந்தியாவால் உயர முடியும்; (2) அவ்வுயர்வை நம்முடைய பொருளாதாரப் பலத்தைக்கொண்டு நாம்தான் சாதிக்கவேண்டும். எவ்வளவு பெரிய திட்டமானாலும் அதற்குத் தேவையான நிதிவசதி நம்மிடமே உள்ளது. விவசாய வளர்ச்சிக்குப் பின்னர்தான் தொழில் வளர்ச்சி வருமென்ற அவசியம் இந்தியாவிற்கு இல்லை. சர்வீஸ் துறையின்மூலம் இந்தியா நேரடியாகப் பொருளாதார முன்னேற்றத்தை அடையலாம். அயல்நாட்டிலிருந்து நிதியுதவி பெறுவது பற்றி நம் சிந்தனை முதலில் தெளிவாக இருக்கவேண்டும். பரோபகாரம் வேறெங்கும் பலிக்கவில்லை என்பதுபோல நம் நாட்டிலும் பலிக்காது. தொழில் நுட்பத்தை நாம் தெரிந்துகொள்ளலாம். அன்னிய முதலீட்டையும் அனுமதிக்கலாம். ஆனால் நிதியுதவியை நன்கொடையாக நாடக்கூடாது. நன்கொடை பெற்ற நாடுகளில் அதன் விளைவாகக் கிடைத்த பலன்களைவிட விளைந்த தீமைகள்தாம் அதிகம்.

கி.பி.2050இல் இந்தியாவின் தனிநபர் வருமானம் 17,000 டாலர் அளவிற்கு இருக்குமென்று ஓர் ஆராய்ச்சியில் கணிக்கப்பட்டுள்ளது. மற்றோர் ஆராய்ச்சி கி.பி. 2025லேயே இந்தியாவின் தனிநபர் வருமானம் அமெரிக்காவிற்கு நிகராக வருமென்று கணித்துள்ளது. யூனிலீவர் கம்பெனியின் சேர்மன் அண்மையில் "இந்தியாவிற்கு தன்னம்பிக்கை பிறந்துவிட்டதால் அதன் முன்னேற்றத்தை இனி யாராலும் தடுத்து நிறுத்த முடியாது'' என்று பாராட்டிப் பேசியுள்ளார். அண்மையில் சென்னையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பொருளாதார நிபுணர்கள் கூட்டாகச் சேர்ந்து தயாரித்த அறிக்கையில் பொருளாதார முன்னேற்றத்தைக் கணக்கிடும் பொழுது சமூக நலன்களையும் (social benefits) கருதவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இந்நாள்வரையிலும் மக்கள் தொகைப் பெருக்கத்தை ஒரு பலவீனமாகவே கருதி நம் நாட்டு தலைவர்கள் பேசக் கேட்டிருக்கிறோம். Business weekly என்ற அமெரிக்கப் பத்திரிகை, "தன்னுடைய அறிவு பலத்தைப் பயன்படுத்த இந்தியா தெரிந்து கொண்டது என்றால், விரைவில் அமெரிக்காவிற்கு இந்தியா பொருளாதாரத்தில் பங்குதாரராக மாறலாம்'' என்று அறிவித்துள்ளது.

ஒரு நாட்டை உருவாக்குவது மனிதனேயொழிய பணமோ, தொழில் நுட்பமோ இல்லை என்பதை நாம் உணரவேண்டும். இவை இரண்டுமே மனிதன் உண்டுபண்ணிய கருவிகளேயொழிய இவை மனிதனை நிர்ணயிக்கவில்லை. சுவாமி விவேகானந்தர் கூறியதுபோல நம் நாட்டில் விழிப்புணர்வு வந்து, திட்டமிட்டுச் செயல்பட நம்மால் முடிந்தால் தேச நிர்மாணம் என்பது ஓர் இன்பகரமான அனுபவமாக இருக்கும்.

****

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

பொறுப்பற்றதாகத் தெரியும் அளவுக்கு பற்றற்றிருப்பது எதையும் ஆரம்பிக்க மறுக்கும் சர்வாரம்பப் பரித்தியாகியின் நிலை.

பற்றற்ற நிலை பொறுப்பற்றதாகத் தெரியும்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

உடல், உணர்வு, மனம், ஆன்மா என்று நான்கு பகுதிகளாகப் பிரிந்து ஜீவன் செயல்படுவதாலும், அவற்றிற்குள் தொடர்பு முழுமையாக இல்லாததாலும், முழுமையான வாழ்வுக்கும், முழுஜீவனுக்கும் பிரச்சினைகளும் சிக்கல்களும் எழுகின்றன.

தொடர்பு குறைந்தால் சிக்கல் எழும்.


 



book | by Dr. Radut