Skip to Content

01. யோக வாழ்க்கை விளக்கம் IV

 

649) பிராணனை அதன் ஆர்வம் தீர்ந்தபின் வற்புறுத்தினால், அதற்கு அளவுகடந்த கோபம் வரும். முதலில் அது சோர்ந்துவிடும். அல்லது சூழ்நிலை பலனற்றதாகவோ, எதிராகவோ அமையும். கோபம் அதிகமானால், பிராணன் வேலையைக் கெடுக்கும். அல்லது நோயை உற்பத்தி செய்யும்.

பிராணனும் வற்புறுத்த அனுமதிக்காது.

பிராணன் (vital) என்பது உயிர். உணர்வுக்கு உறைவிடமானது. இதன் சூட்சுமச் சக்கரம் நாபியில் மையமாக இருக்கிறது. உடல் முழுவதும் உணர்வாகப் பரவும் தன்மையுடையது. சக்தியை உடலுக்கு இதுவே தருகிறது. சக்தி மனத்திலோ, உடலிலோ இல்லை. பிராணனில்தானிருக்கிறது. க்ஷத்திரியனுக்கு வீரம் அளிப்பது பிராணன். தைரியம், வீரம், ஆவேசம் ஆகியவற்றையுடையது இது. எரிச்சல், பொறாமை, போட்டி மனப்பான்மை, தீவிரம், வேகம் ஆகியவற்றிற்கு இதுவே உறைவிடமாகும். நரம்பு இதன் அஸ்திவாரம். பிராணனுடைய உணர்வை (vital consciousness) ஜீவியம் எனவும், அதன் (substance) உறைவிடமான பொருளை நரம்பு எனவும் நாம் அறிய வேண்டும்.

Adventure of Consciousness ஜீவியத்தின் தீரம் என்ற பொருள்பட அன்னை சத்பிரேம் என்றவரை ஒரு புத்தகம் எழுதச் சொன்னார். இதை 15, 20 மொழிகளில் பெயர்த்துப் பிரசுரித்துள்ளனர். ஆசிரமத்தை வெளியுலகுக்குத் தெரிய வைத்த புத்தகம் இது. வெளிநாட்டிலிருந்து வருபவரிடம் எப்படி ஆசிரமத்தை அறிவீர்கள் என்றால், இப்புத்தகத்தைப் படித்ததால் என்பார்கள். இதில் மனமும், பிராணனும் வேறானவை என்பதைப் படித்த வெளிநாட்டார் அனைவரும் ஞானோதயம் பெற்றதுபோல் நினைத்தார்கள். நாம் மனம் என்று பிராணனை நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவை வேறானவை என்பது முதலில் அறியப்பட வேண்டியதாகும். யோகத்தில் ஏற்படும் தெளிவு வாழ்வில் உள்ள மேதைகட்கும் பெரியதாகத் தெரியும்.

பிராணனைக் கட்டுக்கடங்காத பிடாரி என அன்னை வர்ணிக்கிறார். அதற்கும் நியாயம், பகுத்தறிவு, முறை என்பவற்றிற்கும் தூரம் அதிகம். கோபம் அதன் கருவி பிறப்புரிமை. அது சோர்ந்தபின் அதை வற்புறுத்த முடியாது. வற்புறுத்தினால் அதிகமாகச் சோர்ந்துவிடும், அல்லது நேர் எதிராகச் செயல்பட விழைந்து கோபப்படும். இது சூட்சுமமானதால், சூழலுடன் எளிதில் கலந்து கொண்டு சூழலையே நமக்கு எதிராக வேலை செய்யும்படித் தூண்டும். சூழல் உடனே பலனற்றதாகிவிடும் அல்லது எதிர்க்கும். எதுவும் முடியாவிட்டால் பிராணன் ஸ்டிரைக் செய்ய உடலைத் துணைக்கு அழைத்து இல்லாத வியாதி இருப்பதாக நடிக்கும். திடீரென வாந்தி வரும், உடன் பல பகுதிகளில் கொப்புளம் எழும்.சூட்சுமமானவர்கள் இப்படிப்பட்டவர்களைப் பார்த்து 'அத்தனையும் வேஷம்' என்பர். அது உண்மையாகும்.

....

650) உடலை வற்புறுத்தவே முடியாது. அது கல்லாகச் சமைந்து நிமிஷத்தை மணியாக மாற்றும். நமக்கு வெற்றியை உடன் ஜீவியம் கொடுத்தாலும், உடன் பொருள் substance அறவே மறுக்கும்.

உடலை வற்புறுத்தினால் நிமிஷம் மணியாகும்.

சிவராத்திரி, ஏகாதசிக்கு நாம் கண் விழிக்கின்றோம்,உபவாசமிருக்கிறோம். விரதம் என்றால் சாப்பிடாமலிருப்பது, தூங்காமலிருப்பது எனப் பொருள்.14 வருஷம் சாப்பிடாமலும் தூங்காமலுமிருப்பவனே சாதிக்கக் கூடியதுண்டு என்றால் அதை ஏற்க வருபவரைப் பெரிய ஆத்மா என்பதெல்லாம் நாம் பரம்பரையாகக் கேட்டதுண்டு. உடலின் அடிப்படை இயல்பின்படி அதை வற்புறுத்த முடியாது. வற்புறுத்தலுக்கு அது இசைந்தால், பிறகு தன் இச்சையைப் பூர்த்தி செய்யவல்லது என்கிறார் பகவான். உண்ணாவிரதம் என்றவுடன் முதல் நாளே உடல் அதிகம் சாப்பிடும், விரதம் முடிந்தவுடன், மீதியைச் சேர்த்து சாப்பிட்டுவிடும் தன்மையுடையது உடல். 3 மாதம் கண்விழித்து வேலை செய்ய உடல் இசைந்தால், அடுத்த 3 மாதம் அதைச் சேர்த்துத் தூங்கிவிடக்கூடியது உடல் என்பது பகவான் விளக்கம்.

மனம் உடலைத் தன் இஷ்டத்திற்குப் பேரளவுக்குக் கொண்டு வந்துள்ளது என்பது உண்மை. உடல் பணிந்து ஏற்றுக் கொண்டாலும், முடிவாக ஏற்றுக் கொள்ளவில்லை. உடலை மாற்ற வேண்டுமானால், அதன் பழக்கங்கள் மாற வேண்டும். உடல் திருவுருமாற்றமடைய வேண்டுமெனில் நோய்வாய்ப்பட வேண்டும். உடல் அதன் போக்கிலேயே போகும். எளிதில் மாற இசையாது. வற்புறுத்தினால் அப்படியே கல்லாய்ச் சமைந்துவிடும்.

உடலின் இருளைப் போக்கி ஒளியாக மாற்றுவதே திருவுருமாற்றம். அதைச் சாதிக்க வேண்டுமானால், உதாரணமாக நாம் சாப்பிடுவதை உடல் பழக்கமாக ஏற்றுக்கொண்டுள்ளது. முதலில் உடல் சாப்பிடும் பழக்கத்தை மறக்க வேண்டும். பிறகு சாப்பிட புதியதாகக் கற்றுக் கொள்ளவேண்டும். இருளாலான உடலின் பழக்கம் இருளில் அமைந்தது. தானாக உடல் இம்மாற்றத்தை ஏற்காது. ஒளியால் உடலை நிரப்பினால், இருள் கரைந்து ஒளியாக மாறும் பொழுது, இம்மாற்றம் நடைபெற உடல் இப்பொழுதுள்ள structure அமைப்பை விட்டு மாற, அது நோய்வாய்ப்படுகிறது. நோயால் உடன் structure அமைப்பு பாதிக்கப்பட்டு, ஒளியை அமைப்பு ஏற்று, பழைய அமைப்பைக் கரைத்து, புதிய ஒளியால் புதிய அமைப்பு ஏற்படுகிறது. புதிய அமைப்பு புதியதாகச் சாப்பிடக் கற்றுக் கொள்ளவேண்டும். அன்னைக்கு வந்த அனைத்து நோயும் திருவுருமாற்றத்திற்காக அன்னை ஏற்றுக்கொண்டவையே தவிர நோயன்று.

110 வோல்ட்டில் வேலை செய்யும் மோட்டார் 220 வோல்டில் வேலை செய்ய வேண்டுமானால் அதனுள் உள்ள பல சாமான்களை மாற்ற வேண்டும். அதேபோல் உடலில் உள்ள உறுப்புகள் மாற வேண்டும். உறுப்புகளை அகற்றி வேறு வைக்க முடியாது என்பதால், அவற்றின் அமைப்பை மாற்றி பழைய வேலையை, புது முறையில் செய்ய அவற்றைப் பயிற்றுவிக்கவேண்டும்.

உடலை வற்புறுத்தினால் அது ஸ்டிரைக் செய்யும். அன்னை உடலின் ஜீவியத்தைத் திருவுருமாற்றம் செய்தபின் அதன் அஸ்திவாரமான உடலின் பொருள் மாற மறுத்ததால், அவருக்கு அளவுகடந்த வேதனை ஏற்பட்டது.

....

651) தீவிரமான ஆசை தீவிரத்தையும், ஆசையின் திறனையும் இழந்தபின் உயிரற்ற ஜடமான வாழ்வாகிறது. ஆனால் அது வாழ்வை முழுவதும் ஆக்கிரமித்துக் கொள்கிறது. நம் போக்கை நிர்ணயிக்கும் திறனுள்ளது. "உன் திருவுள்ளம் நிறைவேறட்டும்" என்ற மந்திரம் நம்மை அதன் பிடியிலிருந்து விடுவித்து, ஆனந்தத்தை உற்பத்தி செய்கிறது. ஜடத்தைத் திருவுருமாற்றம் செய்ய (ஜடத்தின் ஜீவியமன்று) அன்னை எடுத்த முயற்சிக்கு "உன் திருவுள்ளம் நிறைவேறட்டும்" என்ற மந்திரத்தைப் பயன்படுத்திய விவரங்களை அஜெண்டா 12, 13இல் விளக்குகிறார்.

உயிரற்ற ஜடம் மாறுவது திருவுள்ளம்.

மனிதன் இலட்சியத்தால் வாழ்பவனில்லை. பெரும்பாலானவர் வாழ்வு 40க்கு முன் முடிந்துவிடும். அதற்கு முன்னும் முடிவதுண்டு. அதுவரை வாழ்வு என்பது அவர்களுக்குக் கடமை, இலட்சியம், அற்புதம், உன்னதம், ஆச்சரியமன்று. அதுவரை ஆசை உயிரோடிருக்கும். ஆசையை அனுபவிப்பதை வாழ்வு எனக் கொண்டவர்கள் இவர்கள். வயதால் ஆசை திறனையும், தீவிரத்தையும் இழந்தால் இவர்கள் நடைப்பிணமாகிவிடுவார்கள். உயிரற்ற ஆசை, மரம் போன்ற மண்டை, சக்தியற்ற உடலுடன் வாழ்வைப் பாரமாக்கி நாளை எண்ணிக்கொண்டு இருப்பார்கள். ஆசை செயலற்றுப் போனாலும், வாழ்வு முழுவதையும் ஜீவனற்ற ஆசை ஆக்கிரமித்துக் கொள்ளும். அதுவே மனிதன் எனப்படுவது. எந்த நல்ல காரியத்தையும் இவர்கள், "ஏம்பா, இதெல்லாம் எதற்கு, சும்மா இருக்கக் கூடாதா?" என்று எதிர்ப்பார்கள். இவர்களை நினைத்து ஏற்பட்ட பழமொழி நாற்பதிற்கு மேல் நாய்க்குணம். மிகவும் பொருத்தமாக இவர்களை வர்ணிக்கும் பழமொழி இது. இந்த நாய்க்குணம் ஓரளவு எல்லோரிடமும் இருக்கும். அதுவே நம் தவமுயற்சிக்கு எதிரி. எதிர்க்கும். ஆங்கிலத்தில் அதை preoccupation, occupation என்கிறார்கள். மனதை நிரப்பிக் கொண்டுள்ள ஜடமான வாழ்வு எனப் பொருள்படும்.

தியானம் செய்தால் இது தூங்க ஆரம்பிக்கும். நல்லதைப் பேசினால் எதிர்க்கும், சும்மா இருந்தால் அசை போடும். இதை மீற முடியாதவருக்கு வாழ்வில் எந்த நல்லதுமில்லை. இதை மீறுவது எளிதன்று. மௌனம் கரைக்கும். ஆனால் இதுவே மௌனத்தைக் தடுக்கும். நாம் என்பது இதுவாகும். முயன்று இதிலிருந்து நம்மை விடுவித்துக் கொண்டு, "உன் திருவுள்ளம் நிறைவேறட்டும்" என்றால் மயிரிழை ஜீவன் வருவது தெரியும். இதைச் சொல்ல ஆரம்பித்தால் 3, 4 நிமிஷங்களுக்கு மேல் தொடர முடியாது. நிதானமாக, விடா முயற்சியுடன் இழை இழையாக இதை வெல்ல முயன்றால் ஆனந்தம் எழுவது தெரியும்.

ஜடம் பொருளாலும் ஜீவியத்தாலும் ஆனது. ஜடத்தின் ஜீவியத்தையும் திருவுருமாற்றம் செய்வதை பகவான் மேற்கொள்ளவில்லை. அன்னை அதை முடித்துவிட்டார். அதற்கடுத்தாற்போல் ஜடத்தின் பொருள் கல்லாக, பாறையாக எதிர்த்தபொழுது "உன் திருவுள்ளம் நிறைவேறட்டும்" என்ற மந்திரம் பூவுலக இருட்டைக் கரைக்க உதவியதை அன்னை விளக்கமாக எழுதியிருக்கிறார்கள். தீராத எந்தப் பிரச்சினையும் இம்மந்திரத்தால் தீரும். இது பலிக்க நாம் ஜடம் என மனம் முதல் ஏற்றுக்கொண்டு, பின்னர் அதிலிருந்து விலகி, சொல்ல ஆரம்பிக்க வேண்டும், அவையிரண்டும் பூர்த்தியான பின்னர் சொல்லும் மந்திரமே பலிக்கும்.

தொடரும்...



book | by Dr. Radut