Skip to Content

09.அன்பர் உரை

 

அன்னை அன்பர்கட்குச் சுதந்திரமும் தேவை, கட்டுப்பாடும் தேவை

(சென்னை - மாம்பலம் -தியான மையத்தில், 21-2-2001 அன்று, திரு. N. அசோகன் நிகழ்த்திய உரை)

 

     ஆனந்தம், அனந்தம் என்ற இரு கருத்துகளை நாம் அறிவோம். ஆனந்தம் என்பதற்கு விளக்கம் தேவையில்லை. அந்தம் என்றால் முடிவு, முடிவற்றது, அனந்தம் Infinity. ஆனந்தம் என்ற அகம், அனந்தம் என்ற புறமாகிறது. காலத்தை அகமாகவும், புறத்தை இடமாகவும் தத்துவம் கூறுகிறது. மனத்தால் நினைப்பது கற்பனை. அது அகம். கையால் செய்வது செயல். அது புறம்.

     வலி என்பது சுதந்திரமில்லாத நிலை. செயலுக்குத் தடை ஏற்படுவது வலிக்கு ஆரம்பம்.  எந்தவிதமான தடையுமில்லாவிட்டால், அது சுதந்திரமான நிலை. எல்லா வகைச் சுதந்திரமிருந்தால் அங்கு வலிக்கு வேலையில்லை. வலிபோனபின் எழுவது ஆனந்தம்தடையற்ற நிலை, முடிவற்றிருக்குமானால் அது அனந்தம். அதுவே ஆனந்தத்தின் புறநிலை.

     கட்டுப்பாடு என்பது புறத்திலும், அகத்திலுமுள்ளது. குடும்பக் கட்டுப்பாடு, சமூகக் கட்டுப்பாடு, சர்க்கார் சட்டம் ஆகியவை புறக்கட்டுப்பாடுகள். வெட்கம், மானம், மரியாதை, கௌரவம், தன்மானம், பண்பு ஆகியவற்றைக் கட்டிக் காப்பது அகக்கட்டுப்பாடு.

புறக்கட்டுப்பாட்டிற்குட்படுபவன் நல்ல குடிமகனாக இருப்பான்.

அகக்கட்டுப்பாடுள்ளவன் பண்பாளனாகவோ, திறமைசாலியாகவோ இருப்பான்.

அன்னை அன்பனுக்குப் புறக் கட்டுப்பாடு, அகக்கட்டுப்பாட்டிலிருந்து எழ வேண்டும்.

ஆராய்ச்சியைத் தொடர்ந்தால் பிரம்மம் சுதந்திரமானது, அடிப்படையில் நாமே பிரம்மம், நமக்குப் பிரம்ம ஞானம், பிரம்மச் சுதந்திரம் உண்டு. பிரம்மம் இவ்வுலகைச் சிருஷ்டித்தது. அது ஆனந்தத்தை நாடுகிறது. ஆனந்தம் தவிர உலகில் வேறெதையும் பிரம்மம் சிருஷ்டிக்கவில்லை. உலகம், அதன் குறைகள், குற்றங்கள், நல்லது, தீமை உட்பட பிரம்மத்திற்கு அற்புதக் காட்சி. நமக்குப் பிரம்ம ஞானம் வந்த பொழுது உலகம் பிரம்மாற்புதமாகத் தெரியும். பிரம்மம் பெற்றுள்ள சுதந்திரம் முடிவான சுதந்திரம். அதே சுதந்திரம் நமக்குண்டு. ஆனால் இன்று நாம் மேல் மனத்தால் உலகில் செயல்படுகிறோம்நடைமுறையில் பிரம்மத்தின் சுதந்திரத்தை உள்ளே அனுபவிப்பவனுக்கு உலகத்திற்குரிய கட்டுப்பாடுண்டு.

 

அன்பன்மனதில் பிரம்மத்தின் பூரணச் சுதந்திரம்நிலவும்பொழுது,கட்டுப்பாட்டுடன் அவன் நடக்கவேண்டும் என்ற சட்டம், பிறருக்குச் சுதந்திரம் எனக்குக் கட்டுப்பாடு

 

என்று நடைமுறைச் சட்டமாக மாறும். இந்நிலையில் மனம் இயல்பாகச் சந்தோஷப்படுவது அன்பருக்குரிய ஆன்மீக மனநிலை.

      தம்பிக்கு முக்கியமானவர் நண்பர். அவர் செல்வர்,செல்வாக்குள்ளவர்அடிக்கடி தம்பி அவரைச் சந்திப்பான். அண்ணனுக்கு அதனால் தம்பி மீது பிரியம், மரியாதை, தம்பிக்கு வந்த மரியாதை தனக்கு வந்ததாகக் கருதுவான். முக்கியஸ்தர் போனில் தம்பியிடம் பேசுவதும் உண்டு. ஒரு நாள் தம்பி போனில் பேசும்பொழுது லைன் பல முறை கட் ஆனதை அண்ணன் கண்டு வருந்தினான். பின்னர் ஓரிரு சமயம் இதைக் கவனித்துள்ளான். போனில் தடையில்லாமல் தம்பி பேசவேண்டும் என்று அண்ணன் கருதுகிறான். ஆனால் போனில் தடை எழுகிறது. பக்தனானதால் எல்லாக் கோணங்களிலும் ஆராய்ச்சி செய்து பலனில்லை என்ற பின், தன் மனத்தைச் சோதனை செய்தான். மனம் பிரியமாக இருப்பது தெரிகிறது. மனம் பிரியமாக இருந்தாலும், அதன் கீழே தடையிருப்பதாக வைத்துக் கொண்டே பார்ப்போம் என முடிவு செய்தான். அதன் பிறகு போன் பேசுவது தடைப்படுவதில்லை.

 • தம்பி மீது பிரியம் உண்மை.

முக்கியஸ்தர் விஷயத்தில் மனம் நேராக இருக்கிறது.

அவற்றைக் கடந்து மனம் ஆழத்தில் தடையை ஏற்படுத்துகிறது.

     அகக்கட்டுப்பாடு முழுமையாக வேண்டுமானால் மனம் அந்தரங்கத்தில் சுத்தமாக இருக்க வேண்டும். அண்ணனுக்கு அந்த அளவு சுத்தம் தேவையானால், தம்பிக்கும் அதே அளவு சுத்தம் ஆழத்தில் தேவை.

 

     கட்டுப்பாடு வேலை கற்றுக் கொள்ளத் தேவை. (Skill) இது உடலுக்குரிய பயிற்சி. நல்ல நோக்கம் பெற கட்டுப்பாடு தேவை (attitude). இது மனத்திற்குரிய விரதம். பண்புகளைப் பெற கட்டுப்பாடு தேவை. இது ஆத்மா போற்றும் கட்டுப்பாடு. தியானம் செய்ய மனம் கட்டுப்பட வேண்டும், இது யோகக் கட்டுப்பாடு.

புறக்கட்டுப்பாடு சமூகம் அதிகபட்சம் தருவதைப் பெற உதவும்.

சமூகத்தின் அதிகபட்சம் ஆன்மாவின் குறைந்தபட்சம்.

அன்பருக்கு ஆன்மாவின் அதிகபட்சம் வரம் உண்டு.

அதற்குரிய கட்டுப்பாடு நிதானம்.

இயல்பான சந்தோஷம் இறைவனை நாடும்.

நிதானம், இயல்பான சந்தோஷம் தரும்.

நிதானமாக, இயல்பாகச் சந்தோஷப்பட அன்பன் நாட வேண்டியது அகம்.

அகம், புறத்தை ஆளுவது ஸ்ரீ அரவிந்தம்.

புறத்தை ஆளும் அகத்திற்கு ஆன்மீக வலிமை தேவை.

     பக்தனுக்கு இனிய நண்பன். கட்டுப்பாட்டின் சிகரமாக இனிமை பெற்றவன். சூட்சுமமான அறிவையுடையவன். பக்தனுக்குள்ள அறிவு பலருக்கும் தெரிவதை விட நண்பனுக்கு அதிகமாகத் தெரியும்.பேச்சு பெரிய கட்டுப்பாட்டுக்குட்பட்டது. மனம் ஆழத்தில் பொறுக்கவில்லை, சொல் கட்டுப்பட்டதானதால் மனத்தை நேரடியாகச் சொல் வெளிப்படுத்தத் தயங்கியதுகேலியாக நண்பனை

      “நீ எதிர் காலத்தில் பெரிய மனிதனாக வருவாய்

     உன் கடிதங்களை நான் பொக்கிஷமாகச் சேர்த்து

     வைத்து, பின்னால் உலகுக்கு அறிவிக்கிறேன்,” 

என்று கூறி நகைப்பது வழக்கம். பக்தனுக்கு அவன் அத்தை தனக்குப் பிள்ளையில்லாததால், தம் சொத்தைத் தர விரும்பினார்பக்தன் அதில் அக்கறை காட்டவில்லை. வலியுறுத்தியபொழுது, மறுத்துவிட்டான். நண்பன் சொத்து விபரம் அறிந்தவன்.

      “உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என என் தாயார் கூறுகிறார்,”

என்று நண்பனைக் கடிந்தான். நண்பன் நல்லவன், இனியவன். மனம் நன்றாக இருந்தாலும், மனித சுபாவம், சுபாவமாகவேயுள்ளது என்பது நாளாவட்டத்தில் தெரிய ஆரம்பித்தது. பக்தனுக்கு வருமானம் பெருகுவது நண்பன் கண்ணிலும், மனதிலும் பட்டது. பட்டதாகவே நண்பன் பொருட்படுத்தவில்லை. பக்தனிடம் காண்பிக்கவில்லை. பக்தன் நிலை உயர ஆரம்பித்தது. நண்பர் பார்வையில் அதிகமாக உயர்ந்தது. சந்திப்பதை நிறுத்திவிட்டான். கடிதம் எழுதுவதையும் தவிர்த்தான். பக்தனுக்கு வந்த உயர்வு, இவன் வீட்டாரில் சிலருக்கும் வந்தது. நண்பன் காலமானான்.

     பக்தன் சிக்கலில் மாட்டிக்கொண்டபொழுது சேவையும், பக்தியும், உடலையும், உடமையையும், உரிமையையும் காப்பாற்றின. ஊரார் பொறாமை நிறைந்த பேச்சை நிறுத்த முடியவில்லை. எதுவும் பக்தன் காதிற்கு வரவில்லை. சிறந்த சேவையை, தன்னலமற்ற சேவையை, தியாகத்தை, பொறாமை சுயநலமாக, அநியாயமாகப் பேசுகிறது. பக்தன் வீட்டிற்குப் புடவை விற்பவன் வந்தான். பக்தனை நோக்கி, உங்களுக்கேன் ஊரார் சொத்துமேல் ஆசை என்று கேட்டான். புடவைக்காரன் பெயரும் நண்பரின் பெயரும் ஒன்றே. நண்பரின் சொல் கட்டுப்பட்டது. மனம் கட்டுப்படவில்லை. அவர் கருத்து அவர் பெயருள்ள புடவைக்காரன் மூலம் வெளிவந்தது. அகம் கட்டுப்பட அதிக பக்குவம் தேவை.

     மனித வாழ்க்கை எப்படி அமைந்திருக்கிறதென்றால், அவனுக்கு கிடைக்கின்ற நல்ல விஷயங்களைக் கூட அவன் அளவோடு அனுபவித்தால்தான் அவை அவனுக்கு நல்லது செய்கின்றன என்ற விதத்தில் அமைந்துள்ளது. நல்லதைக் கூட அவன் அளவிற்கு மீறி அனுபவித்தால் அந்த நல்லதே அவனுக்குக் கெட்டதாக மாறிவிடும் வகையில் வாழ்க்கை செயல்படுகிறதுஅளவை மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்ற பழமொழி மேற்கண்ட உண்மையை நன்றாக விளக்குகிறது. அப்பழமொழி காரணமில்லாமல் உருவாகவில்லை. நல்ல காரணத்துடன்தான் உருவாகியிருக்கிறது.

     நம்முடைய மனித சுபாவம் முழுச் சுதந்திரம் வேண்டுமென்று தான் கேட்கிறதேயொழிய எந்த வகையான கட்டுப்பாட்டையும் நம் சுபாவம் விரும்புவதில்லை.  சுதந்திரம் நல்லது அதைத்தான் நம் மனம் நாடுகிறதென்றாலும், பரிபூரணச் சுதந்திரத்தை நல்லபடியாகப் பயன்படுத்திக் கொள்ளும் பக்குவம் நமக்கில்லாத நிலையில் அந்தச் சுதந்திரத்தை ஓரளவிற்குக் கட்டுப்படுத்தி அது தவறாகப் பயன்படக்கூடிய இடங்களிலெல்லாம் கட்டுப்பாடுகள் என்ற தடுப்புகளை நாம் போட்டே ஆகவேண்டுமென்றாகிறது.

     எந்தவிதக் கட்டுப்பாடுமில்லாமல் பரிபூரணச் சுதந்திரம் நமக்குக் கிடைத்தால் நாம் என்ன செய்வோம் என்பதைச் சற்று சிந்தித்து பார்த்தால், கட்டுப்பாட்டின் அவசியம் நமக்குப் புரியும். முதலில் பள்ளிக்குப் போகும் வயதிலுள்ள சிறுவர் சிறுமிகள் பள்ளிக்கு ஒழுங்காகப் போகவே மாட்டார்கள்எந்நேரமும் விளையாடிக்கொண்டு தானிருப்பார்கள். படிப்பதென்பது மறந்தே போய்விடும். வேலைக்குப் போக வேண்டியவர்களும் ஒழுங்காக வேலைக்குப் போகமாட்டார்கள். காலையில் தாமதமாகச் சென்று மாலையில் சீக்கிரமாகத் திரும்புவார்கள். இஷ்டத்திற்கு லீவு எடுப்பார்கள், செய்யாத வேலைக்குச் சம்பளம் கேட்பார்கள். எந்த அலுவலகத்திலும் எந்த வேலையும் நடக்காது. நாடே இயங்க முடியாமல் ஸ்தம்பித்துப் போய்விடும். Trafficஐக் கட்டுப்படுத்துவதற்காக இருக்கக்கூடிய traffic police VIP security மற்றும் அரசியல் மாநாடுகளை கண்காணிப்பதற்காகத் திசை திருப்பிவிடப்படும் பொழுது, traffic signalகளை யாரும் மதிக்காமல் அவரவரும் இஷ்டத்திற்கு வாகனத்தை ஓட்டி traffic ruleகளை மீறும்பொழுது, சாலையில் எப்படி மோசமான traffic jam உருவாகிறது என்பதை நாம் பார்க்கிறோம்.

     Traffic ஒழுங்காக போவதற்கு traffic control எவ்வளவு அவசியமோ அதே அளவிற்கு நம் வாழ்க்கை ஒழுங்காக நடப்பதற்கும், நமக்கிருக்கும் சுதந்திரம் நம்மையே பாதிக்காமல் இருப்பதற்கும் நம் வாழ்க்கையில் கட்டுப்பாடுகள் தேவையாகின்றன. அதே சமயத்தில் சுதந்திரமே இல்லாமல் முழுக்கக் கட்டுப்பாடுகளாலேயே நிரம்பிய வாழ்க்கையும் பயனில்லாத சந்தோஷமில்லாத வாழ்க்கையாக மாறிவிடும். முழுக் கட்டுப்பாடு என்பது வண்டியே நகர முடியாத அளவிற்கு brake tightஆக வைப்பதற்குச் சமமாகிவிடும். வேகமாகப் போகின்ற வண்டியை நிறுத்துவதற்காகத்தான் இருக்கிறதேயொழிய, வண்டியை நகரவே விடாமல் தடுப்பதென்பது brake தன்னுடைய வேலையைத் தவறாகச் செய்வதாகிவிடும்.

     அம்மாதிரியே சுதந்திரமென்ற சக்கரங்கள் இயங்கினால்தான் வாழ்க்கை என்ற வண்டியே நகரும். அதே சமயத்தில் கட்டுப்பாடென்ற brakeஉம் இருந்தால்தான் சுதந்திரம் அளவிற்கு மீறிப் போவதால் வரும் விபரீதங்களையும் தடுக்க முடியும்.

     க நம் வாழ்க்கையில் இரண்டுமே அவசியமென்றாகிறது. எந்த அளவிற்குச் சுதந்திரம் வேண்டும், எந்த அளவிற்குக் கட்டுப்பாடு வேண்டும் என்று நாம் சரியாக நிர்ணயிப்பது கடினம். Combination எப்படியிருக்க வேண்டுமென்பது அவரவருடைய மனநிலை மற்றும் வாழ்க்கைச் சூழ்நிலைகளைப் பொருத்தமையும். பொதுப்படையாகச் சொன்னால் இரண்டும் சரிசமமாக 50:50 இருப்பது நல்லதென்று வைத்துக் கொள்ளலாம்மனப்பக்குவம் நிறைந்தவர்களுக்குச் சுதந்திரம் அதிகமாகவும், கட்டுப்பாடு குறைவாகவும் இருந்தாலும் அவர்கள் வாழ்க்கையை அவர்கள் நல்லபடியாகவே அமைத்துக் கொள்வார்கள். ஏனென்றால் வெளிக்கட்டுப்பாடு குறைந்தாலும் அவர்கள் அதற்குப் பதிலாக தம்மைச் சுயக்கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வார்கள்.

     மனப்பக்குவமில்லாதவர்களுக்குக் கட்டுப்பாடு அதிகமாகவும் சுதந்திரம் குறைவாகவுமிருந்தால்தான் அவர்கள் வாழ்க்கை நல்லபடியாக நடக்கும் என்றாகிறதுமேலும் சுதந்திரமும் கட்டுப்பாடும் என்ன விகிதத்தில் combine ஆகவேண்டுமென்பதை விட, யாருக்கு எந்த விஷயத்தில் சுதந்திரம் வேண்டும், எந்த விஷயத்தில் கட்டுப்பாடு வேண்டுமென்பதை நிர்ணயிப்பது முக்கியம். கட்டுப்படுத்த வேண்டிய விஷயத்தில் கட்டுப்பாட்டைக் கொண்டு வந்தால், வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுவிடும்.

     சிறுவர் சிறுமியர்கள் எத்தனை மணி நேரம் விளையாடலாம், எத்தனை மணி நேரம் T.V. பார்க்கலாமென்பதை பெரும்பாலான பெற்றோர்கள் ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்நேரத்தை கட்டுப்படுத்துவது சரியென்றாலும், என்ன விளையாட்டு விளையாடலாம் என்பதையாவது சுதந்திரமாக அவர்களே முடிவு செய்யவிடலாம்.அதையும் கட்டுப்படுத்த விரும்பும் பெற்றோர்களும் இருக்கிறார்கள்.ஆனால் அத்தகைய கட்டுப்பாடு அவசியமில்லை என்று நினைக்கிறேன். வெளிநாடுகளில் 18 வயதிற்கு மேல் பிள்ளைகளின் வாழ்க்கையில் பெற்றோர்கள் தலையிடுவதில்லை. அவர்களுடைய இஷ்டத்திற்கு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள உரிமை அளித்துவிடுகிறார்கள். வயது வந்த பிள்ளைகள் என்ன course படிக்கிறார்கள், என்ன வேலையில் சேர்கிறார்கள், யாரைத் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதில் அவர்களுக்கு நிறைய சுதந்திரம் இருக்கிறது. ஆனால் இங்கே அப்படியில்லை. பிள்ளைகள் major ஆன பிறகும் பெற்றோர்கள் இவ்விஷயங்களில் கூட தலையிடுகிறார்கள், தம்முடைய அதிகாரம் இவற்றிலும் செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

     ஆனால் மேல்நாட்டு கலாச்சாரம் நாளுக்கு நாள் இங்கேயும் அதிகரித்துக் கொண்டு வருவதைப் பார்க்கும்பொழுது,இந்திய இளைஞர்களின் சுதந்திர வேட்கையும் அதற்கேற்றபடி பெருகிக் கொண்டுதான் வருகிறது. இதை வைத்துப் பார்க்கும் பொழுது இந்நாட்டிலும் கூட பெற்றோர்கள் major ஆன பிள்ளைகளின் வாழ்க்கையைக் கட்டுப்படுத்த முயலாமல், படிப்பு, உத்யோகம், திருமணம் போன்ற விஷயங்களில் சுதந்திரத்தை அளித்துவிடுவது நல்லதென்றே எனக்குப் படுகிறது. இவ்விஷயங்களில் பெற்றோர் கட்டாயப்படுத்தும்பொழுது வீட்டில் பெரும்பாலும் சுமுகம்தான் கெட்டுப்போகிறது. பிள்ளைகளாக முன்வந்து படிப்பு, உத்யோகம், திருமணம் போன்ற விஷயங்களில் பெற்றோரின் அதிகாரத்திற்கு கட்டுப்பட முன்வந்தால், அப்பொழுது இவர்கள் தலையீட்டால் சுமுகம் கெடாமல் காரியம் நடக்கும்.

      பெரும்பாலான அன்னை அன்பர்களின் குடும்பங்களில் பெற்றோர் அன்னையை ஏற்றுக் கொள்ளும்பொழுது பிள்ளைகளும் automatic ஆக அன்னையை ஏற்றுக் கொள்கிறார்கள். கணவன் மனைவியிடையே கூட ஒருவர் அன்னையை ஏற்றால் மற்றவரும் அன்னையை ஏற்பதையும் பார்க்கிறோம். ஆனால் விதிவிலக்காகவும் நிறைய குடும்பங்களுள்ளன. மனைவி அன்னை பக்தையான பின்னும் கணவர் அன்னை பக்கம் திரும்பாமல் இருப்பதுண்டு. அவரைப் பலவந்தமாக அன்னை பக்கம் திருப்பாமல் இவ்விஷயத்தில் அவருடைய சுதந்திரத்தை மதிப்பது மனைவிக்கு நல்லது. அவரையும் தன் பக்கம் அழைத்துக் கொள்ளவேண்டுமென்று அன்னை முடிவு செய்தால் அன்னையின் அழைப்பை ஏற்று அவரே தாமாக அன்னையை நாடுவார். அதுவரையில் மனைவி தன்னுடைய ஆர்வத்தை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது மனைவிக்கு நல்லது.

     அன்னை அன்பர்கள் அன்னை விரும்பும் முன்னேற்றத்தை தம்முடைய வாழ்க்கையில் காண விரும்பினால், தாமாகத் தம்மை ஒரு சுயக்கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வது நல்லது. பூரண யோகப்பாதையில் முன்னேற விரும்புகின்றவர்களுக்கு இந்த சுயக்கட்டுப்பாடு மிகவும் அவசியம்.பூஜை புனஸ்காரங்கள்,மற்றும் சடங்கு சம்பிரதாயங்களிலிருந்து அன்னை ஆசிரமவாசிகளுக்குப் பெரிய விடுதலை அளித்துள்ளார்வெளிக்கட்டுப்பாடென்று அவர் வலியுறுத்தியது நான்கு விஷயங்கள்தாம். ஆசிரம வாசிகள் உடலுறவு வைத்துக் கொள்ளக் கூடாது, மதுபானம் மற்றும் புகை பிடித்தல் ஆகியவற்றிலும் ஈடுபடக்கூடாதென்பதில் அவர் மிகவும் கண்டிப்பாகவிருந்தார். ஆசிரமவாசிகளுக்கு அரசியல் ஈடுபாடும் கூடாதென்றும் ஒரு கட்டுப்பாட்டை விதித்திருந்தார்.

     இந்த அடிப்படைக் கட்டுப்பாடுகளில் அவர் உறுதியாக இருந்தாரேயொழிய அவரவருடைய ஆன்மிக முன்னேற்றத்தை அவரவருடைய ஆர்வத்திற்கு ஏற்றாற்போல அமைத்துக் கொள்ளும் உரிமையையும் சுதந்திரத்தையும் அவர்களுக்கு நிறையவே கொடுத்திருந்தார். ஆசிரமவாசிகளாக இருந்தாலும் தினமும் எட்டு மணி நேரம் வேலை செய்வது நல்லது என்று சொல்லியிருந்தார். ஆனால் அதற்குக் கட்டுப்படாதவர்களை அவர் கண்டித்தாகத் தெரியவில்லை.

     பூரண யோகத்தில் வருகின்ற முன்னேற்றம் அவரவருடைய இறையார்வம், சமர்ப்பணம், சரணாகதி ஆகியவற்றை பொருத்ததாகும்இவற்றை எந்த அளவிற்கு எவ்வளவு வேகமாக ஓர் அன்னை பக்தர் வளர்த்துக் கொள்கிறாரென்பது அவருடைய இஷ்டத்தை பொருத்ததாகும். அடுத்தவருடைய அதிகாரம் மற்றும் கட்டுப்பாட்டிற்குக் கட்டுப்படக் கூடிய விஷயங்கள் இல்லை இவை. ஆகவே இவ்விஷயத்தில் அன்னை ஆசிரமவாசிகளுக்குப் பூரண சுதந்திரமளித்துவிட்டார்.

      மேலும் சுதந்திரமான சூழலில்தான் ஆன்மா உண்மையாக வளர்ச்சியடைகிறது என்பதை வைத்துப் பார்க்கும்பொழுது இதைத் தவிர வேறு சிறந்த வழியில்லை என்பதும் தெரிகிறது. நாம் நாடுவது ஆன்மிக முன்னேற்றமாகவிருந்தால், அதை நாம் பொறுமையாக, நம்முடைய பக்குவத்திற்கேற்றபடி பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அன்னையினுடைய அருளைத் துணையாக வைத்துக்கொண்டு நம்முடைய வாழ்க்கையின் தரத்தையும் பொருளாதார நிலையையும் உடனே உயர்த்திக் கொள்ள விரும்புகிறோமென்றால், அந்த அவசரத்திற்கேற்றபடி நம்மை நாம் ஒரு சுயக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தே ஆகவேண்டும்.

     அன்னை விதித்துள்ள கட்டுப்பாடுகளை அவர்கள் மதித்து நடக்கும்பொழுது அந்த அளவிற்கு அவர்கள் வாழ்க்கையில் பெரும் முன்னேற்றங்கள் வந்திருக்கின்றன.

     நேரடியாக அன்னையுடைய கண்காணிப்பில் இல்லை என்றாலும், அன்னையின் அருளால் வாழ்க்கையில் முன்னேற விரும்புகின்றவர்களுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள் தேவை என்பதை அவர் தம்முடைய புத்தகங்களில் நிறையவே எழுதியிருக்கிறார்அவற்றைப் பின்பற்றினாலே அன்பருக்கு வேண்டிய முன்னேற்றம் விரைவில் கிடைத்துவிடும்.

       அன்னை வழியில் வாழ்க்கை முன்னேற்றம் என்பதுதான் நம்முடைய குறிக்கோளாகவிருந்தால், நம்முடைய செயல்பாடு, மனோபாவம், சிந்தனை, பேச்சு என்றெல்லாமே இவற்றிற்கு ஒத்துழைக்கும் வகையில் இருக்கவேண்டும். ஒரு வாய்க்கால் வழியாக வயலுக்கு நீர் பாய்ச்சுகிறோமென்றால், அந்த வயலுக்குப் போகாமல் மற்றவிடங்களுக்கு உடைப்பு வழியாக நீர் போனதென்றால் அந்த தண்ணீர் விரயமாவதாகத்தான் அர்த்தமாகிறதுஅம்மாதிரியே முன்னேற்றந்தான் நம் நோக்கமென்றால், நம்முடைய time மற்றும் எனர்ஜியை அதற்கு ஒத்துவராத காரியங்களில் செலவிட்டால், அந்த அளவிற்கு அவை விரயமாவதாகத்தான் அர்த்தமாகிறது.

       அரட்டை அடிப்பது, வம்பு பேசுவது, மணிக்கணக்காக T.V. பார்ப்பது போன்றவை நம்முடைய எனர்ஜி விரயமாகும் வழிகளாகும். இத்தகைய காரியங்களில் ஈடுபடாத அளவிற்கு நம்மை ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும். Punctual ஆகவிருக்கும் பொழுதுதான் நம்முடைய time அதிகபட்ச பயனுள்ளதாகச் செலவாகிறது. Punctuality இல்லையென்றால் நம்முடைய time மற்றும் மற்றவர் time இரண்டும் விரயமாகிறது. நம்முடைய நேரத்தை நாம் சிறப்பாக manage பண்ண விரும்பினால் அதற்குச் சில கட்டுப்பாடுகள் தேவை. அவற்றை நாம் பின்பற்றியே ஆக வேண்டும். காலையில் 8.30 மணிக்கு வீட்டைவிட்டு தினமும் வெளியேறினால் தான் அலுவலகத்திற்கு punctual ஆகப் போய்ச் சேர முடியுமென்றால் எத்தனை மணிக்கு காலையில் எழுந்தால், இது சாத்தியமாகுமென்று கணக்கிட்டு அத்தனை மணிக்கு correct ஆக எழுந்திருக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். Business செய்பவர்கள் அவர்களுக்கு வருகின்ற ஆர்டர்களைச் சொன்ன நேரத்தில் execute பண்ணுகிற efficiency இல்லையென்றால் அவர்களுக்கு வருகிற orders குறைந்து போகும்.

     Time managementக்கு எப்படியொரு கட்டுப்பாடு தேவையோ அதே அளவிற்கு financial managementற்கும் ஒரு கட்டுப்பாடு தேவை.நமக்கென்ன வருமானமோ அதற்குள்தான் நம்முடைய செலவுகளையும் பார்த்துக் கொள்ளவேண்டுமென்றால் அதற்கொரு financial discipline இருந்தால்தான் முடியும். ஒருவருடைய மாத வருமானம் 7000 ரூபாய் என்னும்பொழுது, அவர் தம்முடைய மாதாந்திர செலவுகள் 10,000 ரூபாய் அளவிற்கு இருப்பதாகச் சொல்லிக் கொண்டு, மாதம்தோறும் 3000 கடன் வாங்கியாவது அச்செலவுகளைச் சமாளிக்க முயல்கிறார் என்றால் அவருக்கு financial discipline சுத்தமாகவில்லை என்றர்த்தம்.

     ஒருவருக்கு வருடாந்திர வருமானம் 1,00,000 ரூபாயென்றால், அவர் மிகவும் efficient ஆகச் செலவு செய்தால்கூட அதிகபட்சமாக வருடத்திற்கு 20,000 ரூபாய் அளவிற்குத்தான் savings செய்ய முடியும். அதாவது வருடாந்திர வருமானத்தில் 20% தான் அதிகபட்சமாக savings செய்ய முடியுமென்றாகிறது.கடனைத் திருப்பிக் கொடுக்க விரும்புகின்றவர்கள் savingsஇல் இருந்துதான் திருப்பிக் கொடுக்க முடியுமென்னும்பொழுது, லட்சம் ரூபாய் வருடாந்திர வருமானமுள்ளவர்கள் வருடத்திற்கு 20,000 ரூபாய்க்கு மேல் கடன் வாங்கக் கூடாதென்றாகிறது. அப்படி 20,000ற்கும் மேல் கடன் வாங்குகின்றவர்களுக்கு financial discipline சுத்தமாகவில்லை என்று தெளிவாகச் சொல்லிவிடலாம்.

     வருமானம் குறைவாகவுள்ளது, ஆனால் செலவு அதிகமாகவுள்ளதென்பவர்கள், செலவிற்கேற்றபடிதம் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள கர்மயோகி அவர்கள் எழுதிய வருமானம், தொழில்வளம் மற்றும் அதிர்ஷ்டம் போன்ற கட்டுரைகளையும், புத்தகங்களையும் படித்து அவற்றிலுள்ள விஷயங்களைக் கடைப்பிடித்தால் அவர்களுடைய வருமானம் உயர்வதைப் பார்க்கலாம்.அப்படி வருமானம் உயரும்வரையிலும் அவர்கள் பொறுமையாகச் செலவுகளையெல்லாம் ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு financial disciplineகடைப்பிடித்தே ஆகவேண்டும்.

     அப்படி discipline கடைபிடிக்காமல் எதிர்காலத்தில் வருமானம் வருமென்று நம்பி தற்பொழுது நிறைய கடன் வாங்கிச் செலவு செய்தால், அத்தகைய கட்டுப்பாடற்ற மனநிலைமையே வருமானம் அதிகரிப்பதைத் தள்ளிப்போகச் செய்யும். கையிலுள்ள வருமானத்தை முழுமையாகச் செலவு செய்தால் மேற்கொண்டு அதிகமாக வரும் என்று அன்னை கூறியிருப்பது உண்மைஆனால் வருமானத்தைத்தான் அவர் தாராளமாகச் செலவு செய்யச் சொல்லியிருக்கிறாரேயொழிய, கடன் வாங்கி அதிகமாகச் செலவு செய்தாலும் மேற்கொண்டு அதிக வருமானம் வருமென்று அவர் சொல்லவே இல்லை.

     Time management மற்றும் finance managementஇல் எப்படிக் கட்டுப்பாட்டைக் கொண்டு வரவேண்டுமென்று நானிதுவரையிலும் சொன்னேன். இப்பொழுது மனநிலையில் எத்தகைய கட்டுப்பாட்டைக் கொண்டு வரவேண்டுமென்று விளக்க விரும்புகிறேன்.

     நமக்கு வருகின்ற அன்னையின் அருளும் அதிர்ஷ்டமும் பெருமளவில் நம்முடைய மனநிலையைப் பொருத்ததாகும் என்பது மிகத் தெளிவான ஓருண்மை. அருளுக்கும் அதிர்ஷ்டத்திற்கும் புறம்பான விஷயங்கள் நம் செயல்பாட்டில் வெளிப்படாமலிருக்க வேண்டுமென்றால், மனநிலையை நாமொரு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தால் அது சாத்தியமாகும். குறிப்பாக எரிச்சல், கோபம், பொறாமை, கெட்டெண்ணம் போன்ற உணர்வுகள் நம் மனநிலையை பாதிக்காமலிருக்க வேண்டும். இவை நம் மனநிலையை ஆக்கிரமித்துக் கொண்டு நம் செயல்பாட்டிலும் வெளிப்பட ஆரம்பித்துவிட்டால், அந்த அளவிற்கு அருளும் அதிர்ஷ்டமும் நம்மை விட்டு விலகிப் போய்விடும்.

     செயல்பாட்டில் இவை வெளிப்படாமலிருப்பதற்கே நமக்கு நிறைய மனவுறுதியும் கட்டுப்பாடும் வேண்டும். மனநிலையிலும்கூட இவை நுழையாமல் மனதில் சஞ்சலம் ஏற்படாமலிருக்க வேண்டுமென்றால் அது மேலும் கடினமாகும். ஆன்மிக நிதானமும் சமநிலையும் (equality) உள்ளவர்களுக்குத்தான் மேற்கண்ட நிலை சாத்தியமாகும். மற்றவர்கள் எரிச்சல், கோபம், பொறாமை போன்ற உணர்வுகள் அவர்களுடைய செயல்பாட்டில் வெளிப்படாதவாறு ஒரு கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தாலே போதும்.

     நம்மை நோக்கி அன்னையின் அருளும் அதிர்ஷ்டமும் அதிகமாக வரவேண்டுமென்றால், அதற்கேற்றபடி நம்முடைய concentration மற்றும் receptivityம் அதிகரிக்க வேண்டும். எரிச்சல், கோபம் போன்றவை நம்முடைய concentrationஐ சிதறடிக்கின்றன. பொறாமை நம் மனநிலையை சுருங்க வைப்பதால், நமக்குண்டான opening குறைந்து போய், நம்முடைய receptivityம் குறைந்து போகிறது.

     நம்முடைய கோபத்திற்கும் எரிச்சலுக்குள்ளாகின்றவர்கள் நம்மைவிட நிதானமும் concentration-ம் அதிகமாக உள்ளவர்களாக இருந்தால், நம்மைத் தேடி வரும் அதிர்ஷ்டம் நம்மைத் தாண்டி அவர்களுக்குப் போய்விடுகின்றது. இதனால்தான் கோபத்திற்கு உள்ளாகின்றவர்கள், தம்முடைய அதிர்ஷ்டத்தை இழக்கின்றார்கள்.

    பொறாமைவுணர்ச்சியை வளர்த்துக் கொள்பவர்கள் அதனால் தமக்கு என்ன நஷ்டம் வருகிறதென்று தெரிந்தால் பொறாமை உணர்வை அண்டவே விடமாட்டார்கள்நம்மைவிட ஒருவர் சிறப்பாகவிருப்பதாகத் தெரிவதால்தான் நமக்கு அவர்கள் மேல் பொறாமையே வருகிறது. ஆனால் இதற்கு முன் அவர்கள் நமக்குக் கீழேயும் கூடவிருந்திருக்கலாம்.

     இன்று நம்மைவிடச் சிறப்பாகவிருப்பவரை நாம் பாராட்டினோமென்றால் இன்று அவருக்குள்ள சிறப்புகள் நம்மை நாடி வரும். பாராட்டுவதற்குப் பதிலாகப் பொறாமைப்பட்டால் அவரிடம் முன்னாலிருந்த வேண்டாத விஷயங்களெல்லாம் நம்மை இன்று நாடி வரும். அவை கடன், திவால், வறுமை, அவமானம், உடல்நலக்குறைவு என்று பல்வேறு ரூபங்களில் வரலாம். இந்த உண்மை தெரிய வரும்பொழுது நாம் பொறாமையுணர்வை நம்மை அண்டவே விடமாட்டோமென்று நினைக்கிறேன்.

     இறுதியாகச் சொன்னால், அன்னையை அதிகமாக நெருங்குவதற்கு உதவக்கூடிய இறையார்வம், சின்சியரிட்டி, நிதானம், நல்லெண்ணம், சேவை மனப்பான்மை, நேர்மை போன்றவற்றை வளர்த்துக் கொள்ள நமக்குச் சுதந்திரமும், அருளும் அதிர்ஷ்டமும் நம்மைவிட்டு விலகுவதற்குக் காரணமாக இருக்கக்கூடிய வேண்டாத விஷயங்களான சோம்பல், விரயம், கோபம், பொறாமை போன்றவற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கு மனநிலையிலும், செயல்பாட்டிலும் கட்டுப்பாடும் தேவை என்று சொல்லி முடித்துக் கொள்கிறேன்.

 

.******

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

      



book | by Dr. Radut