Skip to Content

03.எங்கள் குடும்பம்

எங்கள் குடும்பம்

                                                                   (சென்ற இதழின் தொடர்ச்சி....)

தாயார் : நம் செயல் பிறர் செயலில் பிரதிபலிக்கிறது என்பது சட்டம். எந்தப் பிரச்சினைக்கும் இதேபோல் தீர்வு காணலாம்.

முதலாளி : எனக்குத் தொழிலாளிகளிடம் 15 அல்லது 20 வகைகளில் பிரச்சினைகளுண்டு.

தாயார் : 20 வகையான தொடர்புகள் பிரச்சினைகளைத் தீர்க்கும்.

முதலாளி : கண்ணால் பார்த்தபின்னும் நம்பமுடியவில்லை.

தாயார் : நம்பிக்கை புறத்திலிருந்து எழுவதில்லை, அகத்திற்குரியது.முதலாளி போனபின் குடும்பம் சந்தித்துப் பேசியது. பெண் தன் அனுபவத்தைக் கூறினாள்.

பெண் : கணவனும் மனைவியும் ஸ்கூட்டரில் போகும்பொழுது மனைவியின் காலில் லாரி அடிபட்டு ஆஸ்பத்திரிக்குப் போனபொழுது, "இனி எலும்பு கூடாது. பல இலட்சம் செலவாகும். பல மாதங்களாகும். நடப்பது என்பது இனியில்லை'' என்றனர். அவள் உறவினர் அனைவரும் கூடிப் பிரார்த்தனை செய்தனர். 1½ மணி நேரப் பிரார்த்தனை உலகை உலுக்கியது. பூவரசம் பூவை ஒவ்வொருவரும் கொண்டு வந்து சமர்ப்பித்தனர். ஹாஸ்பிடல் பாஷை மாறியது. கூடாதது என்றது கூடியது, பல மாதங்கள் ஒரு வாரமாயிற்று, பல இலட்சமில்லை சிறு செலவு, மீண்டும் இயல்பாக நடக்கிறார்கள்.

தாயார் : நம்பவேண்டும் என்பதற்கு வேறு உதாரணம் தேவையில்லை.

கணவர் : எனக்கு இந்த நம்பிக்கையில்லை.

பெரியவன் : எப்படிம்மா நம்பிக்கை வரும்?

சிறியவன் : நல்லவனாக இருந்தால், நம்பிக்கை வரும்.

பெண் : இந்த நிகழ்ச்சி என்னை ஓர் ஆட்டு ஆட்டிவிட்டது.

பார்ட்னர் மீண்டும் அடிக்கடி வர ஆரம்பித்தார். பேச்சில்லை, மௌனம் மந்தகாசமாக முகத்தில் மலர்ந்தது. எல்லா விஷயங்களையும் ஊன்றிக் கவனித்தார். ஆழ்ந்த சிந்தனை அவரை ஆட்கொள்வது தெரிகிறது. எதைச் சிந்திக்கின்றார் எனத் தெரியவில்லை. கம்பெனியில் சுத்தம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. எல்லாத் துறைகளிலும் அன்னையைப் பெரும்பாடுபட்டு வெளிப்படுத்துகிறார். கணவர் இம்மாற்றத்தால் நல்ல முறையில் பாதிக்கப்பட்டுள்ளார். பார்ட்னர் கம்பெனியிலும் பேசுவதில்லை. கணக்கு அன்றாடம் கச்சிதமாக முடிந்தது. காசு கொடுத்தது மறந்து போய்விட்டது. காரியங்கள் தாமாக தங்களை அமைத்துக் கொள்கின்றன. ஓரிடத்தில் நண்பராலும், அடுத்த இடத்தில் நல்லவராலும், மற்ற இடத்தில் சந்தர்ப்பத்தாலும், மீதியிடங்களில் காரணம் புரியாமலும், காசில்லாமல் காரியங்கள் நடைபெறுகின்றன. வீட்டில் பிள்ளைகள் நடைமுறை முழுவதும் மாறியிருக்கிறது. மேலெழுந்த மாற்றமானாலும், பார்வைக்குப் பூரண மாற்றமாகத் தெரிகிறது. அதற்குரிய பலன் தெரிகிறது. பக்குவம் வந்ததைப்போல் நடக்கின்றனர். கார் வந்துவிட்டது. ஆனால் அனைவரும் பழையபடியே இருக்கின்றனர். தேவைக்கு மட்டுமே கார் பயன்படுகிறது. எல்லார் மனங்களிலும் இருந்த கார், இப்பொழுது கார் வந்தபின் எவர் மனத்திலும் இல்லை. அஸ்திவாரத்தில் அமைதி சேர்கின்றது. ஒரு நாள் பார்ட்னர் கணவரிடம் சொல்லியனுப்பிவிட்டு வந்தார். பிள்ளைகள் வீட்டிலில்லாத நேரமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பார்ட்னர் : அதிர்ஷ்டம் என்பது அன்னையின் ஓர் துளி என என்னால் அறிய முடிந்தது.

ணவர் : நான் அடியோடு மாறிவிட்டேன்.

தாயார் : மாறியவர் சொல்லமாட்டார்கள், மாற முயல்பவர்கள் சொல்வார்கள்.

கணவர் : இதைக் கடந்த மாறுதலுண்டா?

பார்ட்னர் : நான் மாற ஆரம்பித்துள்ளேன் என நினைக்கிறேன்.

கணவர் : உங்களை அடையாளமே தெரிந்துகொள்ள முடியவில்லையே

பார்ட்னர் : பாங்க் சேர்மனைச் சந்தித்ததாகச் சொன்னேன். வெளிநாட்டுப் பணம் ஏராளமாக வருகிறது. ஏற்றுப் பயனடையும் கம்பனிகளில்லை என்பதால் வெளிநாட்டு மூலதனம் நம் நாட்டில் நாணயமான நல்லவர்களைத் தேடியிருக்கிறார்கள். நம் பாங்க், நம் கம்பெனியைக் குறிப்பிட்டபின் அவர்கள் ஆராய்ச்சியில் நாம் தேறினோம். நமக்கு நாணயத்துடன், திறமையும் இருப்பதாகக் கணித்துள்ளனர். அவர்கள் முடிவு,

. நமது திறமைக்கேற்ப எது செய்தாலும், எந்த அளவில் செய்தாலும் பாங்க் சட்டங்களை ஒதுக்கிவிட்டு நமக்குப் போதுமான மூலதனத்தை முழுமையாகத் தர விரும்புகிறார்கள்.

. நமது இன்றைய நாணயம் என்றும் திறமையாக இருக்க வேண்டும்.அவர்கட்கு நம்மீதுள்ள திருப்தி, நமக்கு நம்மீது ஏற்பட வேண்டும்.

கணவர் : அப்படியானால் நம் கம்பெனி இந்தியா முழுவதும் பரவிவிடும்.

பார்ட்னர் : அதற்குரிய தகுதி நம் நாணயம், நம் ஜீவன் முழுவதும் பரவவேண்டும்.

தாயார் தம் கனவிற்குரிய அர்த்தத்தை உணர்ந்தார். இதுவரை ஏற்பட்ட மாறுதல்கள் நல்லவை. ஆனால் போதுமானவையில்லை. தம் சமர்ப்பணத்தை மேலும் தொடர முடியாமல் தவிப்பதை உணர்ந்தார்.

பார்ட்னர் : என் நண்பர் ஒருவர் அடிக்கடி என்னைச் சந்திப்பதுண்டு. அவர் பேராசிரியர். நான் அன்னையை ஏற்றதிலிருந்து அவர் அடிக்கடி வர ஆரம்பித்தார். அன்னையைப் பற்றிப் பேசினால் ஆர்வமாகக் கேட்பார். கேட்பதுடன் சரி. நேற்று வந்தார். தமக்கு V.C. பதவி வந்துள்ளதாகவும், தம் சர்வீஸுக்கும், வயதிற்கும் அது இல்லை எனவும், அத்தனையும் என்னால்தான் எனவும் கூறினார். ஏன் அது நடந்தது என எனக்குப் புரிகிறது. அவர் அன்னைச் சூழலின் தொடர்பைப் பெற்றதால் வருகிறது. சூழலுக்கு இந்த சக்தியிருந்தால் சக்திக்கு அதிகமாக இருக்குமல்லவா?

கணவர் : எனக்கு அவரைத் தெரியும். ஆச்சரியமான விஷயம்.

பார்ட்னர் : நமக்கு என்ன வந்துள்ளது எனப் புரிய நாளாகும்.

தாயார் : அது புரிவதும், அன்னையைப் புரிவதும் ஒன்றே. வீட்டை முழுவதும் வெள்ளையடித்துச் சுத்தம் செய்தார்கள். தொலைந்துபோன சாமான்கள் எல்லாம் கிடைத்தன. வீட்டில் உள்ள எல்லாச் சிறிய பிரச்சினைகளும் தீர்ந்தன. பழைய சச்சரவுகளில்லை. எல்லோர் முகத்திலும் புன்சிரிப்பு ஓரளவு கூடியிருந்தது. ஏதோ பெரிய காரியத்தைச் சாதித்த உணர்வு பெற்றது குடும்பம். தாயார் தூரத்து உறவில் ஒருவருக்கிருந்த நல்ல பெரிய வேலை போய்விட்டதாகச் செய்தி வந்தது. குடும்பம் அதைப் பற்றிப் பேசியது.

கணவர் : இவரை எனக்கு நன்றாகத் தெரியுமே. நல்லவராயிற்றே. நாமெல்லாம் அவருக்காக ஒரு நாள் பிரார்த்தனை செய்வோம்.

சிறியவன் : நம் பிரார்த்தனை அவருக்குப் பலிக்குமா?

பெரியவன் : ஒரு வேளை நம் வேலை போகுமா?

பெண் : மதர் விஷயம் எப்படிப் போனாலும் பயமாயிருக்கிறது.

தாயார் : பயப்பட ஒன்றுமில்லை. நமக்குள்ள தொடர்புக்குட்பட்ட நல்லெண்ணம் பலிக்கும். அதற்குமேல் போனால் பாதிக்கும். நாம் சுயநலமாக, பராமுகமாக இருக்கலாம், எல்லாம் நம்மைப் பொருத்தது.

கணவர் : பிரார்த்தனை செய்யலாமா?

தாயார் : ஒரு வாரம் பொறுக்கலாம்.

கணவர் : ஏன்?

தாயார் : நம்மிடம் செய்தி வந்ததால், என்ன பலன் ஏற்பட்டது, ஏற்படவில்லையா எனத் தெரியும். அதன்பிறகு முடிவு செய்யலாம்.

பெரியவன் : மாமாவுக்குப் போன் செய்து விசாரிக்கட்டுமா?

தாயார் : நாமே செய்யக்கூடாது.

சிறியவன் : எதையும் செய்யக்கூடாது என்றால், எதைத்தான் செய்யலாம்?

மாமாவிடமிருந்து போன் வந்து கணவர் பேசினார். அவர் வேறு விஷயங்கள் பேசினார். வேலை போனதைக் குறிப்பிடவில்லை.கணவரே கேட்டார். "அது உடனே கான்சலாகி மீண்டும் வேலைக்குப் போகிறார்'' எனப் பதில் வந்தது. கணவர் இதைத் தெரிவித்தார்.

பெண் : மதர் விஷயம் எப்படிப் போனாலும் நல்லதாக முடியும் போலிருக்கிறதே.

சிறியவன் : Cleaning செய்வது இது.

கணவர் : மாமா அதைப் பற்றிப் பேசவில்லை.

தாயார் : அவர்கள் பொருட்படுத்தாததை நாம் பொருட்படுத்தினால் தவறு வரும்.

பெரியவன் : நமக்குத் தொந்தரவில்லாமலிருக்கும் வழியைக் கூறுமா?

தாயார் : நாமாக எதையும் செய்யாவிட்டால் தொந்தரவில்லை.

பெரியவன் : மனிதன் என்றால் ஏதாவது செய்யவேண்டுமே.

தாயார் : எதைச் செய்வது என முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

கணவர் : இவருக்கு எப்படி மீண்டும் வேலை கிடைத்தது?

பெரியவன் : நமக்குச் செய்தி வந்ததால் கிடைத்தது.

கணவர் : அவருக்கு வேலை கிடைத்தபின் நமக்குச் செய்தி வந்தது.

சிறியவன் : நமக்கு வருமுன் அவர் விஷயம் சரியாகிவிட்டது.

தாயார் : அன்னை அன்று செய்தது, இன்று அன்னைச் சூழல் செய்கிறது.

பெண் : அப்படியெனில்....

தாயார் : இன்றைய சூழலில் அன்னை அன்றிருந்தது போலிருக்கிôர்.

கணவர் : அன்னை அன்பர்கட்குக் கிடைத்தது, இன்று அன்பர் உறவுக்கும், நட்புக்கும் கிடைக்கிறதா?

தாயார் : அதுவே சரி.

ஒரு சமயம் கணவரும், மனைவியும் பிள்ளைகளைக் கண்டிப்பதைப் பற்றிப் பேசினர்.

கணவர் : கண்டிக்காமல் வளர்க்க முடியுமா? அன்னையா நாமெல்லாம்?

தாயார் : நாம் கண்டித்த விஷயத்தில் பிள்ளைகள் மறைப்பதையும், கண்டிக்காத விஷயத்தில் திருந்துவதையும் நீங்கள் பார்க்கவில்லையா?

கணவர் : ஏன் கண்டிக்கக் கூடாது?

தாயார் : "இந்தப் பையனைப்போல சண்டியை நான் பார்த்ததே இல்லை'' எனத் தம் பேரனை ஹாஸ்டலில் கொண்டுவந்து விட்ட தாத்தாவைத் தெரியுமில்லையா?

கணவர் : கொஞ்சம் தெரியும், சொல்லு.

தாயார் : பையன், தாத்தா, பெற்றோரிடம் நொந்து போனான். ஹாஸ்டலில் முழுச் சுதந்திரம் உண்டு.

கணவர் : சுதந்திரம் கொடுத்தால் பிள்ளைகள் கெட்டுவிடும்.

தாயார் : சுதந்திரத்தால் இந்த 8 பிள்ளைகள் மாறியது உண்மை. ஒரு பையன் ஆசிரியர் சைக்கிளில் ஆணியால் குத்தினான். அவனைத் தலைமை ஆசிரியரிடம் அனுப்பினார்கள். "நீ என்ன செய்தாய்?'' எனக் கேட்டார். செய்ததைப் பையன் ஒப்புக் கொண்டான். தண்டிக்கவில்லை என்பதால் மனம் மாறியதாகத் தோன்றியது. ஓர் ஆரஞ்சு கொடுத்தார், அனுப்பிவிட்டார். அடுத்த முறை வேறொரு பையன் அதையே செய்ய முயன்றான். வகுப்பு முழுவதும் அவனைத் தடுத்தது. இவனே தலைமையாக நின்றான்.

கணவர் : கண்டிக்காவிட்டால் சைக்கிளே திருடு போகும்.

தாயார் : அதுபோல் 7, 8 குழந்தைகள் 2 ஆண்டுகளில் முழுவதும் திருந்தி சந்தோஷமாகிவிட்டார்கள். இப்பொழுது அந்தத் தாத்தா தன் பேரனைப்போல நல்ல பிள்ளையைப் பார்த்ததில்லை என்கிறார்.

கணவர் : என்ன விவரம்?

தாயார் : பெற்றோர் குழந்தைகளைக் கடுமைப்படுத்தினால் அவர்கள் இறுகிப்போய் கெட்டுவிடுகிறார்கள். கண்டிக்காவிட்டால்,கடுமைப்படுத்தாவிட்டால் மலர்கிறார்கள்.

கணவர் : இந்த ஹாஸ்டலில் என்ன செய்தார்கள்?

தாயார் : கண்டிப்பதில்லை, புத்திமதி சொல்வார்கள். சொந்தமாகக் குழந்தைகளை முடிவெடுக்கச் சொல்வார்கள். தாத்தாவைப் போய்ப் பார்ப்பதும், பார்க்காததும் உன் இஷ்டம் என்றவுடன் அவன் போகவில்லை. தாத்தா வந்து பார்க்கிறார். சொந்தமாகப் புரிவது நெடுநாள்வரைக்கும் நிலைக்கும். நம் குழந்தைகள் அன்னையை சொந்தமாக அறிய நாம் உதவி செய்ய வேண்டும்.

கணவர் : நாம் பின்பற்றினால் அவர்களும் பின்பற்றுவார்கள்.

தாயார் : அவனுக்கு அன்னை யார், அன்னை என்பதென்ன என்று தனக்கே மனத்தில் படவேண்டும்.

கணவர் : நம் குடும்பத்தை அதுபோல் செய்ய முடியுமா?

தாயார் : செய்யலாம்.

கணவர் : அளவுகடந்த பொறுமை வேண்டும்.

தாயாருக்குக் கனவிலும், மனத்திலும், கண்ணில்படும் செய்திகளிலும், காதில் விழுவனவற்றிலும் கம்பெனிக்கு பெரும் பணம் வருவது தெரிகிறது. இதைத் தாமே கணவரிடமும், பார்ட்னரிடமும் கூற அபிப்பிராயம். கணவர் விவரம் தெரியாதவர். ஏதாவது இடக்காக ஒரு சொல் வந்தால் எல்லாம் தவறாகப் போகும். நேரம் வரக் காத்திருந்தார். கணவரும், பார்ட்னரும் ஒரு நாள் வந்தபொழுது பார்ட்னர் ஆடிட்டரைச் சந்தித்ததாகவும், அவர் நம் கம்பெனியைப் பற்றி நல்ல அபிப்பிராயம் நாளுக்கு நாள் அதிகமாவதால் டெபாசிட் பெற நல்ல நேரம் இது என்றாராம். தற்சமயம் நமக்குப் போதுமான பணமிருப்பதாலும், வெளிநாட்டு மூலதனம் வருவதாலும் பணத்தட்டுப்பாடு இல்லை. மேலும் டெப்பாசிட் வேண்டுமானால் கம்பெனியை அளவுகடந்து விரிவுபடுத்த வேண்டியிருக்கும் என்றார். தானே வருவதைத் தவிர்க்கக் கூடாது என்பது சட்டம். டெப்பாசிட் பெறும் வேலைகள் செய்ய நாளாகும். டெப்பாசிட்டை ஏற்கவேண்டும் என்ற முடிவை எடுத்துவிடவேண்டும் எனத் தாயார் நினைத்தார். மற்ற இருவரும் ஆமோதித்தனர். இரு மாதங்கள் சென்றன. பலரும் பார்ட்னரை அணுகி டெப்பாசிட் ஏற்குமாறு கேட்டனர். முன்பணமாகக் கொடுக்க விரும்பினர்.ஆடிட்டரைக் கேட்காமல் செய்யக்கூடியவையல்ல. ஓரிரு மாதங்களில் கேட்காமல் டெப்பாசிட் நாம் வசூல் செய்ய நினைத்ததற்கு அதிகமாக வந்துவிட்டது. டெப்பாசிட் சேமிக்க சட்டமுண்டு, விளம்பரம் செய்ய வேண்டும். அவை முக்கியமானவை. பார்ட்னரும், கணவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர். மூவரும் கலந்து பேசும்பொழுது டெப்பாசிட் தானே வருவதும், மூலதனம் தேடி வருவதும் அருள், பேரருள். நாம் செய்யவேண்டியது அளவுகடந்துள்ளது. பார்ட்னர் முழுமூச்சுடன் செய்கிறார். அது ஆரம்பம். கணவர் முழுவதும் செய்யப் பிரியப்படுகிறார். ஆனால் அவர் சுபாவம் ஒத்துவரவில்லை.பிள்ளைகளுக்கு வாழ்க்கை நன்றாக இருந்தாலும், பெற்றோர் கட்டுப்படுத்தாவிட்டாலும், எவரும் கண்டிக்காவிட்டாலும்,முன்னேறவேண்டும் என முழுவதும் முயலும்பொழுது பேச்சு பொருத்தமாக இல்லை, நினைவு சரியில்லை, அவையெல்லாம் சரியில்லை எனத் தெரிகிறது. அதுவே முன்னேற்றம், மாற்றம். சற்று வெட்கப்பட ஆரம்பிக்கின்றனர். குடும்பம் தாயாரிடமிருந்து அன்னையைப் பற்றிக் கேட்க விரும்பியது.

பெண் : நாங்கள் எவ்வளவு அன்னையை ஏற்றாலும், உங்களுக்குத் திருப்தியில்லை.

தாயார் : அன்னையை ஸ்பர்சிக்கவில்லையே இன்னும், அது அமுத ஸ்பர்சமாயிற்றே!

பெரியவன் : அது என்ன?

தாயார் : குடும்பத்துடன் ஆசிரமத்தில் சேர்ந்த பக்தர் M.A. இலக்கியம் படித்தவர். இடைவிடாது குறை கூறிக்கொண்டிருப்பார். தம்மை அன்னை கவனிக்கவில்லை என உள்ளூறக் குறை. "நல்லதாக ஆசிரமத்தைப் பற்றிப் பேச முடியாவிட்டால் பேசாதே'' என்று அன்னை கூறியதைப் புறக்கணித்தவர், அன்னையைப் பிறந்த நாளன்று தரிசித்துவிட்டு வரும்பொழுதும் கேலியாகப் பேசுவார். இவருக்குக் கண்பார்வை மங்கியது.

பெரியவன் : ஏன்?

தாயார் : மனம் குருடாக இருப்பதால், கண், பார்வையை இழக்கிறது. 1960, 1970இல் U.P.இல் சித்தாப்பூர் கண் ஆஸ்பத்திரி பிரபலமாக இருந்தது. அங்கு போய் ஆப்பரேஷன் செய்துகொண்டார். பாண்டி எல்லையை விட்டுப் போய் மீண்டும் வரும்வரை (suffocation) அவர் ஆன்மா திணறியது அவருக்குத் தாங்கவில்லை. ஆத்மா ஸ்பர்சத்தை உணர்ந்தாலும் மனம் குதர்க்கமாக இருந்தது. நமக்கெல்லாம் அந்த ஸ்பர்சமில்லை.

கணவர் : நாம் எங்குப் போனாலும் எதுவும் தெரிவதில்லை.

தாயார் : திறமை சாதிப்பதை நோக்கம் நிர்ணயிக்கும்.

கணவர் : புரியவில்லை.

தாயார் : அபாரத் திறமைசாலி, கர்மவினையால் தன் உழைப்பின் பலன் பிறருக்குப் போகும் என்று தெரியாததைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். அவர் தமக்கு என ஒரு இலட்சியத்தை ஏற்படுத்திக் கொண்டார். அது, "என் மனைவி என்னைப் பணக்காரன் எனப் போற்ற வேண்டும்''. அப்படி எதிர்பார்த்தால், எதிரான பலன் வரும் என அவருக்குத் தெரியாது. அதுவும் அவர் மனைவி கூலிக்காரன் மகள். கூலிவேலை செய்து பெரும்பணம் சம்பாதித்தவர் மாமனார். முதல் தலைமுறை, படிக்காதவர்களுடைய பணம், வேகமாக இருக்கும். அதற்கும் பணத்திற்கும் தொடர்புண்டு. இலட்சியம் அதனுடன் சேராது. 50 ஆண்டுகட்குமுன் அவர் பையிலிருந்த பணம் 1 இலட்சம்; பெரும் தொகை. ஆனால் அவருடைய பிதிராஜ்யம் 5 இலட்சத்திற்கும் அதிகமானது. அறிவில்லாத, அந்தஸ்தில்லாத பெண் தம்மை மெச்ச விரும்பியதால், அறிவும், திறமையும் உள்ள அவர் அறிவில்லாத காரியத்தைச் செய்து அத்தனையையும் இழந்தார்.அவருக்கு அது தெரியவில்லை. இழந்ததை 9 மடங்குகளாக அன்னை மீட்டுக் கொடுத்தார். மனம் பணத்திற்கு அடிமையானதால், பணக்காரனுக்கு அப்பலன் போயிற்று. அவருக்குப் பலனில்லை. முதலில் கிடைத்தது. மீண்டும் அறிவற்ற செயலால் அதையும் இழக்க நேரிட்டது. அருள் காப்பாற்றிப் பெற்றது. பெற்றது பெருகி 18 மடங்குகளானவுடன் அவருக்கு விபரீதமான எண்ணம் தோன்றியது. மனைவியிடம் நல்ல பெயர் எடுக்க முயன்றவர், அன்னை இலட்சியத்திற்கு எதிரானவரிடம் நல்ல பெயர் எடுக்க முயன்றார். அனைத்தையும் இழந்தார்.

கணவர் : முடிவாக என்ன ஆனார்?

தாயார் : அவர் அன்னைக்குச் செய்தது முழுத் துரோகம். அதை மீறி அன்னை அவர் இழந்ததைப் பெற உதவினார். ஓரளவு பெற்றார். இப்பொழுது வருஷ வருமானம் 10 முதல் 15 இலட்சத்திலிருக்கிறார்.

பெரியவன் : ஒன்றும் புரியவில்லையே அம்மா.

கணவர் : திறமைக்கும், நேர்மைக்கும் வரும் பலனை நிர்ணயிப்பது நோக்கம். இவர் திறமை பெரியது, நோக்கம் சிறியது.

சிறியவன் : நமக்கெல்லாம் நோக்கமிருப்பதாகவே தெரியவில்லையே.

பெரியவன் : இனி ஒரு நோக்கத்தை ஏற்கவேண்டும்.

தாயார் : நல்ல நோக்கத்தின் பெயரால் தீயசக்தி வேலை செய்யும்.

கணவர் : அது நமக்கு எப்படித் தெரியும்?

தாயார் : நம் மனத்தின் உண்மை, ஆழத்தில் உண்மையாய் இருந்தால் - sincerity இருந்தால் - தீயசக்திக்கு இடமில்லை.

கணவர் : இவருக்கு என்ன குறை?

தாயார் : அவருக்குக் குறை என்று இல்லை. நிறைவுக்குரியவர் அல்லர். இரண்டிற்கும் போட்டி வந்தால் குறையை நாடும் மனம் உடையவர் இவர்.

கணவர் : அவரிடத்தில் நாம் என்ன செய்திருக்கலாம்? அவரே எப்படி நடந்திருக்கலாம்?

தாயார் : மனைவியிடம் பெரிய பொய்களைப் பெருமைக்காகச் சொல்லியிருக்க வேண்டாம். அவற்றை வெளிப்படையாக ஒத்துக்கொண்டு நிலைமையைச் சீர் செய்திருக்க முடியும்.

கணவர் : அது கஷ்டமான காரியம்.

தாயார் : அது கடமை. அதற்குக் குறைவாகப் பலன் தரும்படிச் செயல்பட முடியாது.

கணவர் : இன்று அவர் அதைச் செய்தாலும் பலனிருக்குமா?

தாயார் : நிச்சயமாக இருக்கும். சொந்தப் பிள்ளையைக் காணவில்லை என்றபின் 1000 ரூபாய் காணிக்கை கொடுக்க மனமில்லாத தகப்பனார். பணம் அவ்வளவு முக்கியம்.

கணவர் :நமக்கு அவர்கள் முக்கியமில்லை. நாம் என்ன செய்யக்கூடாது? என்ன செய்யவேண்டும்? என்பதே முக்கியம். பிள்ளைகளை எப்படி வளர்க்கவேண்டும்.

தாயார் : பொதுவாகப் பிள்ளைகள் தாயாரை அனுசரித்து வளரும். ஏதோ ஒரு சமயம் தகப்பனாரை அனுசரிப்பதும் உண்டு. தகப்பனாரும், தாயாரும் கட்சி கட்டினால் குழந்தைகளைத் தங்கள் கட்சியில் சேர்த்தால், பிள்ளைகள் வீணாகிவிடும்.

கணவர் : நம் வீட்டில் கட்சியில்லையே.

தாயார் : அன்னை கட்சியில் அனைவரும் இருப்பது நல்லது. யார் கட்சி சேர்க்கிறார்களோ, பிள்ளைகள் அவருக்கு எதிராக முடியும். தகப்பனார் மடியிலேயே வளர்ந்த பையன் தகப்பனாருக்கு எதிரானான்.

கணவர் : அது சமர்ப்பணத்திற்குக் கட்டுப்படாதா?

தாயார் : சமர்ப்பணத்திற்கும், இவர்கட்கும் காத தூரம். அது என்ன என்றே தெரியாது.

கணவர் : எதிரியான மகன் மனம் மாற தகப்பனார் என்ன செய்யலாம்?

தாயார் : பிள்ளையைத் தம் வயப்படுத்தியது தவறு என உணரவேண்டும்.

கணவர் : கணவன், மனைவிக்குள் தகராறா?

தாயார் : எந்தப் பிரச்சினையுமில்லாத குடும்பம். தாயாருக்குப் பாசமில்லை. பெண்ணும், பிள்ளையும் தகப்பனாரிடம் நெருங்கிவிட்டனர். தகப்பனாருக்குக் குழந்தைகள் என்றால் பொதுவாக உயிர்.

கணவர் : அவர்மீது தவறிருப்பதாகத் தெரியவில்லையே.

தாயார் : அமெரிக்காவில் வசதி அதிகம். அனைவரும் தேவைக்கு மேல் 1½ மடங்கு, இரண்டு மடங்கு என சாப்பிட்டு பூதாகாரமாக இருக்கிறார்கள். அதற்குரிய வியாதிகள் எல்லாம் வருகின்றன.

கணவர் : நம் நாட்டில் பணம் உள்ள இடத்திலும் அப்படியிருக்கிறது.

தாயார் : தகப்பனாருக்குப் பாசம் அதிகம். அது அளவுமீறிப் போனால் - எது அளவுமீறிப் போனாலும் - பிரச்சினை ஆகும்.

கணவர் : தகப்பனார் என்ன செய்திருக்கலாம்?

தாயார் : தம் பற்றைப் பாசமாக்கியிருக்கலாம், பாசத்தை அன்பாக மாற்றியிருக்கலாம்.

கணவர் : அவரால் முடியுமா?

தாயார் : அவருக்கு பிரச்சினை வந்தபிறகு பிரச்சினை தெரிகிறது. வேறு எதுவும் தெரியவில்லை. He is unconscious.

கணவர் : நாம் என்ன செய்யலாம்?

தாயார் : நமக்குப் பிரச்சினையேயில்லையே. பாசம், பற்று இருந்தால்தான் பிரச்சினை. அது இல்லை

கணவர் : நாம் அதை வளர்க்க முடியாதா?

தாயார் : செய்யலாம். வளர்ந்த பிள்ளைகளாகிவிட்டபடியால் முறையாக நடக்கலாம்.

கணவர் : நான் என்ன செய்ய வேண்டும்.?

தாயார் : அன்னையைப் பின்பற்றவேண்டும்.

கணவர் : பார்ட்னர் சொற்படி நடக்கலாமா?

தாயார் : அது போதும்.

கணவர் : பிள்ளைகள்?

தாயார் : முறையாகப் பழகவேண்டும்.

கணவர் : நீ சொல்பவர்கள் அனைவரும் உயர்ந்தவராகத் தெரிகிறது. அவர்கள் எல்லோரும் முறையாகப் பழகவில்லை?

தாயார் : அன்னையிடம் தவறுபவர்கள் அனைவரும் உயர்ந்தவர்களே.

கணவர் : முரணாகப்படுகிறது.

தாயார் : ஏதோ ஒரு வகையில் உயர்ந்தவர்களே அன்னையிடம் வருகிறார்கள். அவர்கட்குச் சில சமயங்களில் பல நல்ல குணங்களிருக்கும். ஓரிரு எதிரானவையாய் இருக்கும். நல்ல குணமிருப்பதாலேயே எதிரான குணமிருக்கும்.

கணவர் : மீண்டும் எதிர்மறையாக இருக்கின்றது.

தாயார் : நல்ல குணம் இயல்பாக இல்லாமல், முயன்று பெற்றால் personalityஇல் ஏற்படும் குறை எதிரான குணத்தைத் தரும்.

கணவர் : உதாரணத்தின்மூலம் சொல்.

தாயார் : வருமானம் ஏராளமாக இருந்து பெரிய வீடு கட்டினால், பெரிய திருமணம் செய்தால், பெரிய விருந்து நடத்தினால் பாதிக்காது. நம் நிலைமைக்கு நாம் செய்வது மீறியதானால், அன்றாட வாழ்வு பாதிக்கப்படும்.

கணவர் : புரிகிறது.

தாயார் : இந்தப் பெரிய மனிதர்கள் எல்லாம் அன்னையை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள். அன்னையிடம் வந்தவர்கள், ஏற்றுக்கொண்டிருந்தால் குறை நிறைவாகும்.

பெரியவன் : நன்றாக விளக்கிச் சொல்லுங்கள்.

தாயார் : அன்னையிடம் வருவதும், ஏற்றுக்கொள்வதும் வேறு.

பெரியவன் : சரி.

தாயார் : அன்னையிடம் வந்தபின் நாம் கருமாதி செய்வது தவறு என அறிகிறோம். செய்தால் ஆவிக்கு சாந்தி செய்வதாகும். நாம் ஆவிக்கு உட்படுகிறோம். நெருங்கிய உறவினர் காலமாகி கருமாதி செய்தால் போவதா, இல்லையா என்ற பிரச்சினை எழும்.

கணவர் : போகாமலிருப்பது அன்னையை ஏற்பதாகும்.

பெரியவன் : அன்னையை ஏற்றுக்கொண்டால், உறவினர்களை விட்டுவிட வேண்டுமா?

தாயார் : மாடு மேய்த்தவன் கலெக்டரானபின் பழைய நண்பர்களை விடாமலிருந்தால்.....

கணவர் : அது சரி வாராது. அவர்களே நாம் விடும்படி நடந்துகொள்வார்கள்.

தாயார் : உறவினர்கள் சம்பிரதாயத்தை ஏற்றவர்கள். நாம் சம்பிரதாயத்தை விட்டுவிட்டவர்கள். ஒத்து வாராது. சம்பிரதாயம், பொய், குடி, சூது, ஆகியவை நம்மைச் சமமாகப் பாதிக்கும்.

கணவர் : எப்படி உலகில் பழகுவது?

தாயார் : நாம் யாரையும் விட முயலவில்லை என்றாலும், மெய்யைக் கடைப்பிடித்தால் அனைவரும் தாமே விலகிவிடுவர். எந்த உறவிலும் முறை என்று ஒன்றுள்ளதன்றோ? சமூகம் அம்முறையைக் கடந்து சௌகரியம் தேடும். முறையை சமூகம் ஏற்காது.

தொடரும்....

*******


 


 



book | by Dr. Radut