Skip to Content

04.ஐம்பது இலட்சம்

 

 

"அன்னை இலக்கியம்"

ஐம்பது இலட்சம்

                                                                                    சமர்ப்பணன்

மழை பலமாகப் பெய்துகொண்டிருந்தது. நேரமாக, நேரமாக கனத்தது.கண்ணைப் பறிக்கும் மின்னல்களும், காதைக் கிழிக்கும் இடிகளும் மழைக்குத் துணை சேர்த்தன.

உயரமான மரங்களின் ஈரமான கிளைகளிலே, பயந்துபோன பறவைகள் குளிர்காற்றில் விறைத்துப்போன இறகுகளுடன் அசைவின்றிப் படுத்திருந்தன.

அந்த அசாதாரணமான அதிகாலைப் பொழுதில் நான் விழித்துக்கொண்டிருந்தேன். தூங்கினால்தானே விழிப்பது பற்றிய கேள்வி. நான் தூங்கிப் பல நாட்களாகிவிட்டன.

பூலோகமே சொர்க்கமாக மாறிய அந்த அற்புதமான நேரத்திலே எனக்கொரு பெரிய பிரச்சினை.

என்னிடம் பணமில்லை என்பதே அந்தப் பிரச்சினை.

பணமில்லாத காரணத்தால், என் வியாபாரம் கடலைக் காண முடியாத நதியைப்போல தடுமாறிக்கொண்டிருந்தது.

சரித்திரப் பேராசிரியர்களும், பேரறிஞர்களும் மனித வரலாற்றை கி.மு., கி.பி., - அதாவது கிறிஸ்துவிற்கு முன், கிறிஸ்துவிற்குப் பின் - என இரண்டாகப் பிரித்திருக்கிறார்கள். நான் என் வாழ்க்கையை க.மு., .பி., - அதாவது, கடனுக்கு முன், கடனுக்குப் பின் - என்று பிரித்திருக்கிறேன்.

*******

என் கம்ப்யூட்டர் கடை ஓரளவு நன்றாகத்தான் ஓடிக்கொண்டு இருந்தது. விற்பனை நன்றாக இருந்தாலும் இலாபம் மிகக் குறைவுதான். காரணம் வேறென்ன? கழுத்தை அறுக்கும் கடும் போட்டிதான்.

போன மாதம்வரை அரை நிஜார் போட்டுக்கொண்டு நடுத்தெருவில் கிரிக்கெட் விளையாடிய சின்னப்பயல்களெல்லாம்கூட போட்டிக் கடை ஆரம்பித்துவிடுகிறார்கள். போதாக்குறைக்குப் பெரிய கம்பெனிகள் வேறு "-காமர்ஸ் செய்கிறோம்' என்று இன்டெர்நெட்டில் பாதி விலைக்குப் பொருட்களை விற்கிறார்கள்.

என்னைப்போன்ற சிறு வியாபாரிகள் விதியை நொந்து கொள்வதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?

நான் தனிக்கட்டை. சின்ன அழகான வாடகை அபார்ட்மெண்டில் குடியிருந்தேன். ஒன்பது வயதான வெள்ளை நிற மாருதி கார் எனக்குச் சொந்தம்.

பளபளக்கும் புத்தம் புதிய ஓபல் ஆஸ்ட்ரா கார், போயஸ்கார்டனில் ஒரு வீடு, ஐஸ்வர்யாராய் போன்ற மனைவியோடு வாழ்க்கை - இவையெல்லாம் என் வாழ்வில் நடக்குமா என்று தெரியவில்லை.

நான் உழைப்புக்கு அஞ்சியவனில்லை. எப்படி வியாபாரத்தை விரிவுபடுத்தலாம் என்ற திட்டங்களோடுதான் கண் விழிப்பேன். எப்படி நிறைய சம்பாதிக்கலாம் என்ற கனவுகளோடுதான் தூங்குவேன்.

ஆனால், "இனிமேல் கையில் இருக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்கள்கூட நிலைக்குமா?' என்ற பெரிய சந்தேகம் இப்போது வந்துவிட்டது.

என் பிரச்சினைக்கு நான் காரணமில்லை. எல்லாம் என் வாடிக்கையாளரால் வந்த வினை.

ஸ்டார்டெக் என்ற பெரிய கம்பெனிக்கு நான் அவ்வப்போது கம்ப்யூட்டர்கள் விற்பேன். இந்தக் கம்பெனியிலிருந்து போன மாதம் பதினைந்து இலட்ச ரூபாய்க்குப் பெரிய ஆர்டர் கிடைத்தது. வேறு சில வாடிக்கையாளர்கள்மூலம் இருபது இலட்சம் ரூபாய்க்குப் புதிய ஆர்டர்கள் வரும் போலிருந்தது.

எனக்குத் தலைகால் புரியவில்லை.

சொன்ன தேதியில், சொன்னபடி ஸ்டார்டெக்கிற்குப் புதிய கம்ப்யூட்டர்களைக் கொடுத்துவிட்டேன். அன்றிலிருந்து பதினைந்தாவது நாள் ஸ்டார்டெக் எனக்குப் பணம் தந்துவிடுவதாகப் பேச்சு.

என் வாடிக்கையாளர் பணம் தந்ததும், நான் மொத்த வியாபாரிகளுக்குப் பணம் கொடுத்துவிடுவேன். அதுதான் வியாபார வழக்கம்.

அந்த வழக்கத்திற்கு ஸ்டார்டெக் வெடி வைத்தது. பதினைந்தாம் நாள் ஒரு சின்ன பிரச்சினை பற்றிப் பேச ஸ்டார்டெக் முதலாளி கண்ணபிரான் என்னை அழைத்தார்.

சின்ன பிரச்சினை!

அவரது வங்கி இன்னும் இரண்டு மாதங்கள் கழித்துதான் கடன் தர முடியும் என்று சொல்லிவிட்டதாம். அதனால் எனக்கு இரண்டு மாதம் கழித்துதான் பணம் தர முடியும் என்றும், அது எனக்குச் சரி வாராது என்றால் கம்ப்யூட்டர்களைத் திரும்ப எடுத்துகொள்ளுமாறும் கூறினார்.

பிறர் உபயோகித்த கம்ப்யூட்டர்களை வைத்துக்கொண்டு நான் என்ன செய்ய முடியும்? வேறு வழியில்லாமல் "பொறுத்தார் பூமி ஆள்வார்' என்று இரண்டு மாதங்களுக்கு ஒப்புக்கொண்டேன்.

அன்று முதல் விதி கோரத் தாண்டவமாடியது.

நான் மொத்த வியாபாரிகளுக்குக் கொடுத்த செக்குகள் பணமின்றி திரும்பின. "இன்னொரு தடவை இதுபோல் நடந்தால் கணக்கை முடிக்க வேண்டியதுதான்' என்று என் வங்கியிலிருந்து பதிவுத் தபால் வந்தது.

வெற்றியைப் பிறரிடம் சொல்லாமல் மறைக்கலாம். தோல்வியை மறைக்க நினைப்பது பேதமை.

பரந்த விரிந்த சென்னை மாநகரிலிருந்த ஒரு கோடி பேருக்கும் என் பிரச்சினை பற்றித் தெரிந்துவிட்டதுபோலவும், அவர்கள் வேறு எந்த வேலையும் இல்லாமல் என்னைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பது போலவும் பிரமை. மிகவும் அவமானமாக இருந்தது. ஒருவரையும் நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை. நண்பர்கள், உற்றார், உறவினர்கள் என்று எவரையும் பார்க்கப் பிடிக்கவில்லை.

மூலப் பொருட்கள் வாங்க முடியாததால் முன்பணம் கொடுத்த வாடிக்கையாளர்களுக்குச் சொன்னபடி, சொன்ன தேதியில் என்னால் கம்ப்யூட்டர்களைத் தர முடியவில்லை. அப்போதுதான் தமிழில் எத்தனை வகையான வசவுகள் உண்டு என்று தெரிந்தது.

வட்டிக்குப் பணம் தந்தவர்கள், உடனே பணத்தைத் திரும்பக் கேட்டார்கள். ஒரு சிலர், "வட்டிகூட வேண்டாம். அசலை மட்டும் கொடுத்துவிடுங்கள்' என்று பெருந்தன்மை காட்டினார்கள்.

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் உருட்டல், புரட்டலை ஆரம்பித்தேன். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், அறிந்தவர்கள், அறியாதவர்கள் என்று அனைவரிடமும் கடன் கேட்டேன். பெரும்பாலும் கிடைக்கவில்லை.

என் பிரச்சினையைப் பற்றித் தெரியாத "நல்ல உள்ளம்' கொண்டவர்கள் மாதம் மூன்று வட்டிக்கும், நான்கு வட்டிக்கும் கடன் தந்தார்கள்.

வட்டி என்ன பெரிய வட்டி? பணம் இன்று வரும், நாளை போகும். கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டாமா?

யாரும் கடன் தாராதபோது உருட்டல் நின்றது. புரட்டலும் தானே நின்றது. பின் எவற்றையெல்லாம் விற்க முடியுமோ, அவற்றையெல்லாம் விற்றேன். ஒரு மேஜை, சில நாற்காலிகள், கட்டில், பழைய கார் - இவைதான் மிஞ்சின. இவற்றையும் எப்படியாவது விற்றுவிடலாம் என்றுதான் முயன்றேன். என்ன செய்வது? வாங்க ஆளில்லையே!

அதற்கடுத்த வாரம், எனக்கு மிகவும் வேண்டிய மொத்த வியாபாரி ஒரு பெரிய வேனையும், மூன்று குண்டர்களையும் என் கடைக்கு அனுப்பி வைத்தார். எல்லாவற்றையும் என் கண்ணெதிரே அள்ளிச் சென்றனர். குண்டர்களானாலும் நல்ல தன்மைகொண்ட மனிதர்கள். "கவலைப்படாதே தலைவா, எல்லாப் பணத்தையும் கொடுத்தவுடன், நாங்களே இந்தப் பொருட்களைத் திரும்பவும் கொண்டு வந்து நன்றாக அடுக்கி விடுவோம்'' என்று உறுதி கூறி, விடை பெற்றனர்.

காலியான கடைக்குச் செல்வது வீண் வேலை என்பதால் நான் வீட்டிலேயே உட்கார்ந்து கவலைப்படுவதில் நேரத்தை செலவிட்டேன். நேரத்தைத் தவிர வேறு எதை என்னால் செலவு செய்ய முடியும்!

எண்ணி பதினைந்தே நாட்களில் பரதேசி ஆனேன். பெருநோயாளியாக, காட்டு விலங்காக, தீண்டத்தகாதவனாக என் உலகம் என்னைப் பார்த்தது.

தொலைபேசி தொல்லைபேசி ஆனது. சில சமயம் குரலை மாற்றிப் பேசி, "இது ராங் கால்' என்று சாதித்தேன்.

அழைப்பு மணி ஆபத்து மணி ஆனது. விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு வீட்டுக்குள் யாருமில்லாததுபோல் உட்கார்ந்திருந்தாலும் கடன் கொடுத்தவர்கள் மிகவும் விவரமானவர்களாக இருந்தார்கள். "எப்படி வியாபாரம் செய்வது? நேர்மை என்றால் என்ன?' என்பது பற்றி சின்னச் சின்ன சொற்பொழிவுகள் தந்தார்கள்.

ஏதேனும் பூகம்பம் வந்து, எல்லாக் கடன்காரர்களும் இறந்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

எல்லாக் கடன்களையும் திருப்பிக்கொடுத்தபின், என்னை அவமானப்படுத்தியவர்கள் அனைவரையும் பார்த்து நாக்கைப் பிடுங்கிக்கொள்ளுமாறு நான்கு கேள்விகளாவது நறுக்கென்று கேட்க வேண்டும். அப்போதுதான் மனம் ஆறும்.

எந்த தெய்வ நம்பிக்கையும் இல்லாத நான், "எதற்கும் இருக்கட்டும்' என்று முக்கியமான கோவில்களுக்கு வேண்டுதல்கள் செய்துவைத்தேன். அந்தச் சமயத்தில் மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப்பட்ட தெய்வத்திடம் "பிரச்சினையைத் தீர்த்துவைத்தால், இனி வரும் வருமானத்தில் கால் பங்கை கொடுக்கிறேன்' என்று வேண்டிக்கொண்டேன். கோவிலை விட்டு வெளியே வரும்போது கால் பங்கு சற்று அதிகம்போல் தோன்றியது.'பரவாயில்லை, பிரச்சினை தீரட்டும். பின்னர் பார்த்துக்கொள்ளலாம்' என்று முடிவு செய்துகொண்டேன்.

சாமியார் ஒருவர் மிகவும் சக்திவாய்ந்தவர் என்றும், அவர் கையால் பிரசாதம் பெற்றுவிட்டால் ஒரே நாளில் பிரச்சினைகள் மறைந்துவிடும் என்றும் வீடு கூட்டும் பெண் கூறியதன்பேரில், தெரிந்தவர்களிடம் கெஞ்சி, சிபாரிசு பெற்று, அவரை விசேஷ தரிசனம் செய்து, காணிக்கை தந்து, பிரசாதம் வாங்கினேன். மறுநாள், செய்திகளை முந்தி தரும் தினசரிப் பத்திரிக்கையில், அவருடைய வண்ணப்படத்தை முதல் பக்கத்தில் பெரியதாகப் போட்டு, பலே சாமியாரின் சரச சல்லாப உல்லாச ராசலீலா வினோதங்களை விலாவாரியாக, பத்தி, பத்தியாக விவரித்திருந்தார்கள். அத்தோடு, எல்லாச் சாமியார்களுக்கும் பெரிய கும்பிடு போட்டுவிட்டேன்.

எண் கணித நிபுணர்களோ, என் வியாபாரப் பெயரில் எந்த வில்லங்கமும் இல்லை, இயற்பெயரில்தான் பிரச்சினை என்றும், பெயர், பிறந்த தேதிக்கு பொருத்தமாக இல்லாததே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்றும் சொன்னார்கள். அதனால், என் பெயருக்குச் சம்பந்தமே இல்லாத பல ஆங்கில எழுத்துக்களைப் பெயரில் புகுத்தி, சுத்தமாகக் குளித்து, பால் சாம்பிராணி போட்டு, பதினான்கு நாட்களுக்கு, தினமும் குறைந்தது ஐம்பது முறை புதிய பெயரை விடாமல் எழுதச் சொன்னார்கள். பால் சாம்பிராணிப் புகையில் மூச்சு முட்டியதும், வெள்ளைத் தாளும், பேனா மையும், நேரமும் வீணானதுமே நான் கண்ட பலன்.

ஆயிரம் வருடங்களுக்கு முன்பே முக்காலத்தையும் துல்லியமாக ஒரு மாமுனிவர் ஓலைச் சுவடிகளில் எழுதி வைத்திருப்பதாகவும், ஐநூறே ரூபாயில் வாழ்வின் அனைத்து இரகசியங்களையும் சுலபமாக அறிந்துகொள்ளலாம் என்றும் கேள்விப்பட்டேன். விஷயத்தைச் சொன்னவர் சரியான விலாசத்தைச் சொல்லாததால், அலைந்து, திரிந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு அருகே அந்த நாடி சோதிடரின் வீட்டைக் கண்டுபிடித்தேன். என் கட்டைவிரல் ரேகையை பரிசோதித்த சோதிடர், "உன் பெயருக்கு ஓலைச் சுவடியே இல்லை' என்று கையை விரித்துவிட்டார். அகத்திய முனிவருக்கே என் அந்தரங்கத்தைப் பற்றி எழுதப் பிடிக்கவில்லைபோல் இருக்கிறது.

விவரம் தெரிந்த நாளிலிருந்து, சோதிடத்தைக் கேலி செய்து வந்து நான், என்னென்ன வகையான சோதிடங்கள் உண்டோ, அனைத்தையும் பார்த்துவிட்டேன்.

கடைசியாகப் பார்த்த மலையாள சோதிடர், 'ஆறாம் இடத்தில் கெட்ட கிரகங்கள் இருப்பதால்தான் வாழ்க்கை இப்படிப் பாடாய்ப் படுத்துகிறது' என்று இருநூறு ரூபாய் தட்சணை வாங்கிக்கொண்டு, சோழி போட்டுப் பார்த்து, கண்டுபிடித்துச் சொன்னார். அதற்குப் பரிகாரமாக, செவ்வாய்கிழமைதோறும் ராகு காலத்தில் அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றி, பிரதி சனிக்கிழமைதோறும் விரதமிருந்து, காகத்திற்கு சாதம் தந்து, சனிபகவானுக்கு எள் தானமும் செய்யச் சொன்னார். விரைவாகத் துன்பம் விலகி, பெரிய அதிர்ஷ்டம் என்னைத் தேடி வர, வரிசையாகப் பல வகையான பரிகாரங்களைச் செய்யச் சொன்னார்.

வீட்டிலே மனைவி, அம்மா, அக்கா, தங்கை என்று பெண்கள் இருந்தால் எனக்காக அவர்களை விரதம், நோன்பு, பரிகாரம் ஆகியவற்றைப் பண்ணச் சொல்லலாம். எனக்குதான் அந்தக் கொடுப்பினை இல்லையே. ஆண்பிள்ளையான எனக்கு ஆயிரம் வேலை இருக்கும். இவற்றையெல்லாம் என்னால் எப்படிச் செய்ய முடியும்?

என் நேரமும், பணமும் வீணாகி, மனமும், உடலும் தளர்ந்தது மட்டும்தான் இந்த சோதிடத்தாலும், பரிகாரத்தாலும் அடியேன் கண்ட பலன். எனவே, இனிமேல் பகுத்தறிவோடு செயல்பட்டு, என்னை நானே காப்பாற்றிக்கொள்வதென்று உறுதியாக முடிவு செய்தேன்.

என்னைக் காப்பாற்றிக்கொள்ள இரவு, பகலாகப் பல்வேறு கணக்குகளைப் போட்டேன். அவற்றைப் பார்த்தால் பாவம், கணித மேதை இராமனுஜரே குழம்பிப்போயிருப்பார். என் சிற்றறிவுக்கு எட்டியக் கடைசி கணக்கின்படி, கையில் பத்து இலட்சம் ஒரு வாரத்திற்குள் கிடைத்தால் மீண்டும் கடையை ஆரம்பித்துவிடலாம், புதிய ஆர்டர்களையும் எடுத்துவிடலாம், விரைவில் வியாபாரம் சரியாகிவிடும். காலப்போக்கில் எல்லாக் காயங்களும் ஆறிவிடும்.

ஒரு வாரத்தில் பத்து இலட்சம் கிடைக்க இரண்டு வழிகள்தாம் இருந்தன. தண்ணீர் வாராத குழாயிலிருந்து பணம் கொட்ட வேண்டும். அல்லது தலைக்கு மேலிருந்து திடீரென மழைபோல் பணம் கொட்ட வேண்டும்.

இரண்டுமே நடக்கப் போவதில்லை.

இப்படியாக மனச்சுமையுடனும், மன வேதனையுடனும் அந்த அற்புதமான அதிகாலை வேளையில் வரதனாகிய நான் கண் விழித்திருந்தேன்.

*******

தொலைபேசி சிணுங்கியது. எடுக்கலாமா, வேண்டாமா என்ற தயக்கம். பூவா, தலையா போட்டுப் பார்க்கலாம் என்றால் கையில் காசில்லை. மனதைத் திடப்படுத்திக்கொண்டு ரிசீவரை எடுத்தேன்.

மறுமுனையில் மணிவாசகம் பேசினார். "மனிதர் என்ன சொல்லப் போகிறாரோ' என்று மனம் துணுக்குற்றது.

"வரதன், எப்படி இருக்கிறீர்கள்?'' என்றார் மணிவாசகம்.

"ஏதோ வாழ்க்கை ஓடுகிறது. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?'' என்று கேட்டேன்.

"எனக்கு ஒரு சின்னப் பிரச்சினை'' என்று மன்னிப்புக் கேட்கும்பாவனையில் சொன்னார் மணிவாசகம்.

பரவாயில்லையே, "பரந்த உலகில் எனக்கு மட்டும்தான் பிரச்சினை' என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

"என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள் மணி'' என்று ஆதரவான குரலில் சொன்னேன்.

"என் மனைவியோடு அவசரமாக மருத்துவமனைக்குப் போகவேண்டியுள்ளது. எங்கள் குடும்ப நண்பர் ஏழு மணிக்கு பாரிஸ் செல்லும் விமானத்தைப் பிடிக்க வேண்டும். டாக்ஸியில் அனுப்பினால் மரியாதையாக இருக்காது. நீங்கள் அவரை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடியுமா?'' தயக்கத்தோடு கேட்டார் மணிவாசகம்.

இந்தக் கொட்டும் மழையிலும், குளிரிலும் ஒரு மணி நேரம் கார் ஓட்டவேண்டும் என்ற நினைப்பே சிரமத்தைத் தந்தது. ஆனால், என்னால் மறுக்க முடியவில்லை. நான் மணிவாசகத்திற்கு அறுபதாயிரம் ரூபாய் தர வேண்டும்.

"இன்னும் கால் மணி நேரத்திற்குள் உங்கள் வீட்டில் இருப்பேன்'' என்றேன்.

"நன்றி, வரதன். நீங்கள் சமயசஞ்சீவி. நண்பரை வீட்டு வராண்டாவில் காத்திருக்கச் சொல்கிறேன். நானும், என் மனைவியும் வீட்டைப் பூட்டிவிட்டுப் போகிறோம்'' என்று கூறி தொலைபேசியை வைத்தார் மணிவாசகம்.

கிளம்புமுன் அலமாரியை உருட்டியதில் ஒரே ஒரு நூறு ரூபாய் தாள் கிடைத்தது. இன்று சுபயோக சுபதினம்தான்.

நான் மணிவாசகத்தின் வீட்டை அடைந்தபோது, ஒரு வெளிநாட்டுக்காரர் வீட்டு வராண்டாவில் ஒரு பெரிய பை மீது உட்கார்ந்திருந்தார். "அவர்தான் மணிவாசகத்தின் நண்பர்' என்று ஊகித்தேன்.

வீட்டுக் கதவு இழுத்துப் பூட்டி இருந்தது. மணிவாசகம் தம் மனைவியோடு மருத்துவமனைக்குக் கிளம்பிப் போய்விட்டிருந்தார்.

"வணக்கம். என் பெயர் வரதன்'' என்று ஆங்கிலத்தில் என் திறமையைக் காட்டினேன்.

"வணக்கம். இவர் பெயர் புனித்'' என்று தூய தமிழில் பதில் சொன்னார்.

"புனித்தா? இந்தியப் பெயரைப்போல் இருக்கிறதே!'' என்று தமிழில் வியந்தேன்.

"பிறப்பால் பிரான்ஸ் என்றாலும், உணர்வால் இந்தியர். அதனால், இவர் தம் பெயரை புனித் என்று மாற்றிக்கொண்டுவிட்டார்'' என்றார் புனித்.

நான், என் என்ற வார்த்தைகளின்றி புனித் பேசுவதை கவனித்தேன். ஒவ்வொரு வரியையும் சிறிது தயக்கத்திற்குபின் பேசினார். "வேடிக்கை மனிதர்கள் உலாவும் உலகமடா இது' என்று தோன்றியது. இருவரும் கை குலுக்கினோம்.

புனித்திற்கு அறுபது வயதிருக்கும். உயரமான மனிதர். கனவு கண்களில் அமைதி தவழ்ந்தது. கண்கள் ஒளியுடன் பளபளத்தன. "ஏதோ விசேஷமான வெளிநாட்டு கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கிறார் போலிருக்கிறது' என நினைத்துக்கொண்டேன்.

"போகலாமா?'' என்று கேட்டு அவரது பெரிய பையைத் தூக்க முடியாமல் தூக்கி, தொப்பென்று பின் சீட்டில் போட்டேன். காருக்குள் ஏறி படாரென்று கதவை மூடினேன்.

"நன்றி'' என்ற புனித் தன் சிறு கைப்பையை எடுத்துக்கொண்டு காரில் ஏறினார். முன் சீட்டில் அமர்ந்துகொண்டு, மெதுவாக ஆனால் உறுதியாக கதவை மூடினார். கதவுக்கு வலிக்கும் என்று கவலைப்பட்டாரோ என்னவோ!

காரை மெதுவாக, கவனமாக ஓட்ட ஆரம்பித்தேன். சற்று நேரம் பொறுத்து புனித், "உங்கள் காரில் புகை பிடிக்கலாமா?'' என்று கேட்டார்.

"தாராளமாக'' என்று கூறிவிட்டு, அவர் பக்கத்து ஜன்னல் கதவை இறக்கிவிட்டேன். மழைச்சாரல் காருக்குள் வருமே என்று பதட்டமாக இருந்தது.

பெரிய சுருட்டு ஒன்றை பற்ற வைத்தார் புனித். மிகவும் ரசித்து சுருள் சுருளாக புகை விட்டார்.

"இந்தக் காலத்தில் நல்ல சுருட்டு கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது'' என்று அங்கலாய்த்தார்.

சுருட்டின் கடுமையான நெடி எனக்குக் குமட்டியது. ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, "நான் புகைப் பிடிப்பதில்லை. எனக்கு சுருட்டு பற்றி எதுவும் தெரியாது'' என்றேன்.

என் குரலில் இருந்த எரிச்சலைக் கவனித்த புனித், உடனே சுருட்டை ஆஷ்டிரேயில் போட்டார்.

"சில சமயங்களில் புனித் கவனக்குறைவாக இருந்துவிடுகிறார். அவரை மன்னியுங்கள்'' என்று சாந்தமான குரலில் சொன்னார்.

"புனித் புரிந்துகொண்டதற்கு வரதனின் நன்றி'' என்று விளையாட்டாகச் சொன்னேன்.

விரைவாக ஜன்னல் கதவுகளை மூடினேன். மனம் ஏதோ கொஞ்சம் நிம்மதி அடைந்தது.

புனித் புன்னகைத்தார். எனக்கு அவரை மெல்லப் பிடிக்க ஆரம்பித்தது.

"நீங்கள் இந்தியா வருவது இதுதான் முதல் முறையா?'' என்று கேட்டேன்.

"இல்லை. புனித் வருடா வருடம் இந்தியா வருவார்'' என்றார் புனித்.

அடுத்த முறை வரும்போது இவரை டிஜிட்டல் கேமிரா வாங்கிவரச் சொல்லவேண்டும். ஆசை யாரை விட்டது?

"சுற்றுப்பயணம் பிடிக்குமோ?'' என்று கேட்டேன்.

"இல்லை. புனித்திற்குப் பயணம் செய்யப் பிடிக்காது. பாரிஸில் தம் அறையில் அமர்ந்து, மௌனமாக வேலை செய்யத்தான் பிடிக்கும்'' என்றார் புனித்.

"போயும், போயும் இந்தியாவிற்கு ஏன் வருடா, வருடம் வருகிறீர்கள்?'' என்று கேட்டேன்.

"புனித்தின் நண்பர்கள் ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் கான்ப்ரன்ஸ் நடத்துவார்கள். அவர்களுக்கு உதவ இவர் வருவார்'' என்றார் புனித்.

"! நீங்கள் பேச்சாளரா?'' என்றேன்

"இல்லை. வியாபாரிகள் தொழில், வருமானம், கடன், தொழிற்சாலை போன்ற விஷயங்களில் உள்ள சிக்கல்கள் பற்றியும், தங்கள் சொந்த பிரச்சினைகள் பற்றியும் கேள்விகள் கேட்பார்கள். புனித்தின் நண்பர்கள் அவற்றை எப்படித் தீர்க்கலாம் என்று பதில் சொல்வார்கள். வில்லங்கமான கேள்விகளுக்கு புனித் விவரமாகப் பதில் சொல்வார்'' என்றார் புனித்.

கெட்டிக்காரர்கள் தாம்.

"புரிகிறது. ஆர்டர் பிடிப்பது, கடன் ஏற்பாடு செய்வது போன்றவற்றைச் செய்தால் நல்ல கமிஷன் கிடைக்கும்'' என்றேன்.

புன்னகைத்தார் புனித்.

"என்ன செய்வது! பலர் இப்படித்தான் தவறாக நினைத்துக்கொள்கிறார்கள். பிரச்சினைக்கான இந்தத் தீர்வுகள் வேறு வகையானவை. புனித்தின் நண்பர்கள் சில புதிய கருத்துகளைப் பற்றிக் கூட்டத்தில் விளக்குவார்கள். பின் கேள்விகளும், பதில்களும் அவற்றை ஒட்டியே இருக்கும். அவரவர் பிரச்சினைகளை அவரவர்தாம் தீர்க்க முடியும்'' என்றார் புனித்.

இதுபோன்ற எத்தனை, எத்தனையோ விளம்பரங்களைப் பார்த்தாகிவிட்டது. உலக பிரச்சினைகள் ஒவ்வொன்றிற்கும் ஓர் அறிவாளி மர்மமான மந்திரத் தீர்வு சொல்கிறார். "கேட்பவன் ஏமாளி என்றால் கழுதை கப்பலோட்டியது' என்றுதான் சொல்வார்கள்.

சரி, சரி. அடுத்தவர் விவகாரத்தில் நாம் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்? எவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன? நம் பிரச்சினையே பெரிய பிரச்சினை.

"கூட்டத்திற்கு நிறைய பேர் வருவார்களா?'' என்று கேட்டேன்.

அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல், "நீங்கள் என்ன செய்கிறீர்கள்?'' என்று கேட்டார் புனித்.

மனம் சுருங்கியது. பதில் சொல்லப் பிடிக்கவில்லை. "கம்ப்யூட்டர் கடை வைத்திருக்கிறேன்'' என்று கூறிவிட்டு கார் ஓட்டுவதில் கவனமானேன்.

"உங்களுக்கு கான்ப்ரன்ஸ் மிகவும் பயன்படும்'' என்றார் புனித்.

"ஆமாம், ஆமாம்'' என்று ஒத்து ஊதிவிட்டு, "இலவச பாஸ் கொடுத்தால் கான்பரன்சுக்குப் போகலாம்' என்று நினைத்துக்கொண்டேன்.

மேற்கொண்டு ஏதேனும் பேசுவார் என்று நினைத்தேன். ஆனால் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தார். ஏனோ, அவருடன் மேலும் பேச வேண்டும் என்று தோன்றியது.

அவர் கைப்பையில் பெரிய புத்தகங்கள் இருந்ததை கவனித்தேன்.

"நிறைய வாசிப்பீர்கள் போலிருக்கிறது'' என்றேன்.

"ஆம். இவர் நிறைய வாசிப்பார்'' என்றார் புனித்.

"என்ன மாதிரியான புத்தகங்கள் உங்களுக்குப் பிடிக்கும்?'' என்றுகேட்டேன்.

"ஆன்மீகப் புத்தகங்கள் என்றால் அலாதிப் பிரியம்'' என்றார் புனித்.

சரிதான். வயதாகிவிட்டதல்லவா? போகிற வழி நல்லதாக இருக்கட்டும்.

"நான் பதினாறு வயதிலேயே கீதை படித்திருக்கிறேன்'' என்று பெருமை அடித்துக்கொண்டேன்.

"அப்படியா!'' என்று வியந்தார் புனித். "இவர் நாற்பது வயதில்தான் கீதையைப் படித்தார்'' என்றார்.

அவர் வியப்பைப் பார்த்து எனக்கு மிகவும் உற்சாகமாகவும், பெருமையாகவும் இருந்தது.

"ஆனாலும் எனக்கு, கிருஷ்ணர் பண்ணிய காரியம் கொஞ்சமும் பிடிக்கவில்லை'' என்றேன்.

"ஏன்?'' என்றார் புனித்.

"பகையாளி அர்ஜுனனே "சண்டை வேண்டாம், சமாதானமாகப் போகலாம்' என்று நினைத்தபோது கிருஷ்ணர் இவ்வளவு விளக்கமாக உபதேசம் செய்து மகாபாரதப் போர் நடத்தியது சரிதானா?'' என்றேன்.

"அதில் என்ன தவறு?'' என்றார் புனித்.

"என்ன தவறா? கடவுள் அன்புமயமானவர்'' என்றேன்.

"அப்படி யார் சொன்னது?'' என்று கேட்டார் புனித்.

"இவர் என்ன சரியான விவகாரம் பிடித்த மனிதர் போலிருக்கிறதே'' என்று தோன்றியது.

"நான் படித்த ஆன்மீகப் புத்தகங்களில் அப்படித்தான் எழுதியிருக்கிறது'' என்று உறுதியாகச் சொன்னேன்.

"அந்தப் புத்தகங்களை எழுதியது மனிதனா? கடவுளா?'' என்று கேட்டார் புனித்.

என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. சிறிது நேரம் பேசாமலிருந்தேன். தத்துவ விசாரம் செய்யும் நேரமா அது? தெய்வமே, அதிகாலையில் ஏன் எனக்கு இந்த அனாவசியமான சோதனை?

ஆனால், மனிதர் என் மன வேதனையைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

"உங்களுக்கு ஏதாவது பணப் பிரச்சினை வந்தால் என்ன செய்வீர்கள்?'' என்று கேட்டார்.

"என்னைப் பற்றி ஏதேனும் அரசல், புரசலாகத் தெரிந்திருக்குமோ' என்று கூச்சமாக இருந்தது.

"முதலில் கவலைப்படுவேன். அப்புறம், சொத்து, கடன், வரவு, செலவு எல்லாவற்றையும் அலசி ஒரு தெளிவான முடிவுக்கு வருவேன். வருமானத்தைக் கூட்டவோ, மேற்கொண்டு பணம் புரட்டவோ வழி தேடுவேன்'' என்றேன்.

"சரி. உங்களுக்குப் பிடித்ததை மட்டும் செய்துவிட்டு பிறவற்றைக் கவனிக்காமல் விட்டால் என்ன ஆகும்?'' என்றார்.

"முதலில் குழப்பம், முடிவில் திவால்'' என்றேன்.

"பெரும்பாலான ஆன்மீகப் புத்தகங்கள் இறைவனின் ஒரே ஒரு பகுதியைப் பற்றி மட்டும் பேசுகின்றன. அது தவறுக்கு வழி செய்கிறது'' என்றார்.

"அப்படியானால் அவை சொல்வது எல்லாம் பொய் என்கிறீர்களா?'' என்று கேட்டேன்.

"ஒரு விஷயத்தைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால் எல்லாப் பகுதிகளையும் ஆராயவேண்டும். முரண்பாடுகளைப் புரிந்து சரி செய்துகொண்டு, அதன்பின் அனைத்துப் பகுதிகளையும் ஒன்று சேர்த்து, எது உண்மை என்று அறியவேண்டும். அப்போதுதான் அந்த விஷயத்தின் முழுமை பிடிபடும்'' என்றார் புனித்.

எனக்கு "வேறு ஏதேனும் பேசலாம்' என்று தோன்றியது.

"நீங்கள் பிரான்ஸில் என்ன செய்கிறீர்கள்?'' என்று கேட்டேன்.

"படிப்பது, எழுதுவது, மௌனமாக உள் வேலை செய்து வருவது -இவையே இவரது வாழ்க்கை'' என்றார் புனித்.

"வெளிநாட்டில் ஏதேதோ புதுமையான வேலைகள் இருக்கின்றன. அதில் உள் வேலையும் ஒன்று போலிருக்கிறது' என்று நினைத்தேன்.

"உள் வேலையா? அது என்ன புது வகைத் தொழிலாக இருக்கிறதே'' என்றேன்.

"அது தொழிலன்று, வாழும் முறை'' என்றார் புனித்.

"அப்படி என்ன விசேஷமான வாழ்க்கை முறை?'' என்று ஆர்வத்துடன் கேட்டேன்.

"உள் வேலை என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ள, புதிய ஜீவியம் பற்றித் தெரிய வேண்டும்'' என்றார் புனித்.

"அது என்ன புதிய ஜீவியம்?'' என்று கேட்டேன்.

"ஜீவியம் என்றால் என்ன?'' என்று என்னைத் திருப்பிக் கேட்டார் புனித்.

ஒரு விநாடி குழம்பினேன். அதுதானே, ஜீவியம் என்றால் என்ன? ஒரு வேளை, ஜீவிப்பது பற்றி பேசுகிறாரோ?

"ஜீவிப்பது என்றால் உண்பது, நினைப்பது, வாழ்வது. இறந்து போனால் ஜீவனில்லை'' என்றேன்.

"புனித் குறிப்பிடும் ஜீவியம் வேறு வகையானது. அது அனைத்தும் அறிந்தது. மனிதன் அதனோடு பேசலாம், பழகலாம், உறவாடலாம். அது பூமிக்கு வந்து ஒரு சில வருடங்கள்தான் ஆகின்றன'' என்றார் புனித்.

"ஓஹோ! வேற்று கிரகத்து உயிரினமா? நான் பல ஆங்கிலப் படங்களில் பார்த்திருக்கிறேன்'' என்றேன்.

"அதில்லை இது'' என்றார் புனித்.

"அதற்கு, பூமியில் என்ன வேலை?'' என்று கேட்டேன்.

"மனித பரிணாமத்தைத் துரிதப்படுத்துவதுதான் அதன் வேலை'' என்றார் புனித்.

இவர் என்ன விசித்திரமான ஆசாமியாக இருக்கிறார்! 'என்ன பேசுகிறோம்' என்று புரிந்துதான் இவர் பேசுகிறாரா? "பொழுது போக வேண்டுமே' என்று பேச்சுக் கொடுத்தால் ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறாரே!

"மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது'' என்று கூசாமல் பொய் சொன்னேன்.

"இது மிகவும் சுவாரஸ்யமான விஷயம்தான். மிக, மிக அற்புதமான எதிர்கால உலகம் ஒன்றை மனிதர்களுக்குத் தெரியாமல் இந்த ஜீவியம் உருவாக்கிக்கொண்டிருக்கிறது. நீங்களும் விரும்பினால் அதனோடு சேர்ந்து புதிய உலகை உருவாக்கலாம்'' என்றார் புனித்.

எனக்கு திக்கென்றது. மிகவும் அபாயமான ஆள் இவர். ஓரக்கண்ணால் அவரைப் பார்த்தேன். எப்போது என்ன செய்வாரோ? "இனிமேல் இவரிடம் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் பேச வேண்டும், பழக வேண்டும்' என்று முடிவு செய்துகொண்டேன்.

"நீங்கள் அந்த ஜீவியத்தைப் பார்த்திருக்கிறீர்களா?'' என்று கேட்டேன். பின் என்னை அறியாமலே திடீரென சொன்னேன், "எனக்கு அதைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது''.

ஒரு கணம் தயங்கிய புனித், "உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை உண்டா?'' என்று கேட்டார்.

"ஏன் கேட்கிறீர்கள்? மனிதனாகப் பிறந்தால் பிரச்சினை இல்லாமலிருக்குமா?'' என்றேன்.

"இந்த ஜீவியத்தை அணுக ஆயிரம் வழிகள் உண்டு. ஆனால் ஏதேனும் பிரச்சினை இருந்தால், இந்த ஜீவியத்தின் சக்தியை உடனே அறிய முடியும். உள் வேலை என்ன என்பதை புரிந்துகொள்ள முடியும். மனிதனால் தீர்க்க முடியாத எல்லாப் பிரச்சினைகளையும் இதனால் தீர்க்க முடியும்'' என்றார் புனித்.

"மனிதனால் தீர்க்க முடியாத பிரச்சினையே இல்லை'' என்று குறுக்கே பேசினேன்.

"உண்மையைச் சொல்லுங்கள். உங்களது முக்கியமான பிரச்சினைக்கு உங்களிடம் தீர்வு உண்டா?'' என்று கேட்டார் புனித்.

சிறிது நேரம் அமைதியாக இருந்தேன். பின், "ஒரு சிலபிரச்சினைகளுக்குத் தீர்வில்லை என்பது உண்மைதான். ஆனால் காலமே மருந்து'' என்றேன்.

"காலம், நேரமென்று உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்கிறீர்கள். புதிய ஜீவியம் செயல்பட்டால் எதுவும் உடனே நடக்கும்'' என்றார் புனித்.

"பேசுவதற்கு எல்லாம் நன்றாகத்தான் இருக்கும். நடைமுறைதான் சிக்கல் நிறைந்தது'' என்றேன்.

"உங்களுக்கு என்ன பிரச்சினை?'' மென்மையான குரலில் ஆதரவாகக் கேட்டார் புனித்.

அரை மணிகூட பழகாதவருடன் என் பிரச்சினை பற்றிப் பேச விரும்பவில்லை. அதே சமயம் அவருடன் நன்றாகப் பழகிக்கொள்ள முடிவு செய்தேன். வெளிநாட்டுக்காரர். நிறைய பணம் வைத்திருப்பார். ஏன், இவரேகூட எனக்கு உதவலாம். எனவே, "எனக்குப் புதிய ஜீவியம் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்'' என்றேன்.

"வார்த்தைகளால் அதை வர்ணிக்க முடியாது. மனதிற்கு அப்பாற்பட்ட விஷயத்தை மனதைக்கொண்டு அறிய முடியாது. சொந்த அனுபவமே தெளிவான விளக்கம் தரும்'' என்ற புனித் சிறிது நேரம் கண்களை மூடித் திறந்தார். "புதிய ஜீவியத்தை நீங்கள் அழைத்தீர்கள். அது உங்களுக்கு உதவத் தயாராக உள்ளது'' என்றார்.

"நான் எப்போது அழைத்தேன்?'' என்று திடுக்கிட்டுக் கேட்டேன்.

"அதைப் பார்க்க வேண்டுமென்று சொன்னீர்கள் அல்லவா? மனதில் ஆர்வத்துடன் நினைத்தாலே போதும், உடனே செயல்படக்கூடிய பெரிய சக்தி அது'' என்ற புனித், மேலும் சொன்னார், "ஆனால் உங்கள் பிரச்சினை தீர அதன் உதவியை நீங்களே கேட்க வேண்டும்''.

எனக்கு தர்மசங்கடமாகிவிட்டது. என் பிரச்சினை பற்றி புனித்திடம் பேச மனமில்லை. "பேசினால் தீர்வு கிடைக்கும்' என்றும் தோன்றியது. பத்து இலட்சம் புரட்டாவிட்டால் ஆட்டம் முடிந்துவிடும். ஒரு பெரிய மனப்போராட்டத்திற்குப் பிறகு கடைசியாக, அவரிடம் சொல்வது என்று முடிவெடுத்தேன். மான, அவமானம் பார்த்தால் காரியம் நடக்காது.

"எனக்கு ஒரு பயங்கரமான பிரச்சினை. இன்னும் ஒரு வாரத்திற்குள் பத்து இலட்சம் ரூபாய் வேண்டும். எனக்கு உதவ எதுவுமில்லை, யாருமில்லை'' என்று மிகுந்த கவலையுடன் சொன்னேன்.

'மூன்றாம் மனிதரிடம் இப்படிப் பேச வேண்டியுள்ளதே' என்ற வெட்கமும், அவமானமும் என்னைப் பிடுங்கித் தின்றன. குரல் தடுமாறியது. கண்கள் கலங்கின.

"உங்கள் பிரச்சினை மிகவும் சாதாரணமானது'' என்று அணுகுண்டு போட்டார் புனித்.

"என் பிரச்சினையின் அளவு தெரியாமல் பேசுகிறீர்கள். என்னிடம் விற்க சொத்தோ, உதவ உற்றாரோ, உறவினரோ இல்லை'' என்று கலங்கிய குரலில் கூறினேன்.

"உங்கள் பிரச்சினை உங்களுக்குப் பெரியது. அருளுக்கு மிகவும் சிறியது'' என்றார் புனித்.

"அது உண்மைதான்'' மிகவும் உற்சாகமானேன். "அருள் சென்னையிலேயே பெரிய வைர வியாபாரி. அவருக்கு பத்து இலட்சம் சிறியதுதான். அருளை உங்களுக்குத் தெரியுமா?'' என்று ஆர்வத்துடன் கேட்டேன்.

புன்னகைத்தார் புனித். "அடடா, இவர் குறிப்பிட்டது புதிய ஜீவியத்தின் அருளை அல்லவா!'' என்றார்.

"அவ்வளவுதானா?'' எனக்கு சப்பென்றானது.

"உங்கள் பிரச்சினைக்கானத் தீர்வு உங்களிடம்தான் உள்ளது'' என்றார் புனித்.

"எப்படிச் சொல்கிறீர்கள்?'' என்று கேட்டேன்.

"உங்கள் பிரச்சினையை நீங்கள்தான் தீர்க்க முடியும் என்று நம்புகிறீர்கள். அது தவறு'' என்றார் புனித்.

"அது எப்படித் தவறு? வியாபார ஆலோசகர்களையோ, சட்ட நிபுணர்களையோ பணம் கொடுத்து ஆலோசனை கேட்கக்கூடிய நிலையில் நானில்லை'' என்றேன்.

"உங்கள் பிரச்சினை பணம் சம்பந்தப்பட்டதன்று, மனம் சம்பந்தப்பட்டது'' என்றார் புனித்.

இது என்ன, கிணறு வெட்ட பூதம் கிளம்புகிறது!

"ஒருவேளை என்னை மனோதத்துவ டாக்டரிடம் போகச் சொல்கிறீர்களா?'' என்று ஆதங்கத்துடன் கேட்டேன்.

"இல்லை, இல்லை. மனிதர்களால் உங்களுக்கு உதவ முடியாது'' என்று கூறி சிரித்த புனித் தொடர்ந்து கூறினார். "மனம் உருவாக்கிய பிரச்சினையை மனத்தைக்கொண்டு தீர்க்க முயல்வது, தன் வலக்கையால், தன் இடக்கையோடு சண்டை போடுவதுபோன்றது''.

நான் யார் என்று தெரியாமல் என்னைக் குறைத்து மதிப்பிடுகிறார் போலிருக்கிறது. என் கௌரவத்தை நிலைநாட்ட முடிவு செய்தேன்.

"மனம்தான் பிரச்சினை என்கிறீர்கள். எனக்குக் கடன் இருப்பதால் என் அறிவை குறைத்து மதிப்பிடுகிறீர்கள்'' என்று சொன்னேன்.

"உங்கள் அறிவின் விளைவுகளைத்தானே இன்று நீங்கள் அனுபவிக்கிறீர்கள்'' என்ற புனித் தொடர்ந்து, "மனத்தால் உங்கள் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. அதை முதலில் நம்புங்கள்'' என்றார்.

"மனதின்மேல் உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்?'' என்று கேட்டேன்.

"கோபமில்லை. மனம் நல்ல கருவிதான். ஆனால் எல்லாக் கருவிகளுக்கும் ஏதேனும் பிரச்சினை இருப்பதுபோல, மனதிற்கும் பல பிரச்சினைகள் உண்டு. தனக்குத் தெரிந்ததைக்கொண்டு மட்டுமே செயல்படும் தன்மைகொண்ட மனம் முழுமையை எப்போதும் காண முடியாது. மனம் எல்லாவற்றையும் பிரித்துப் பார்க்கும் தன்மை கொண்டது. அதனால்தான் அதை நம்ப வேண்டாம் என்றேன்'' என்றார் புனித்.

"மனதை நம்பாதே. அறிவை நம்பாதே. மனிதனை நம்பாதே. மிகவும் நல்லது. அப்புறம் நான் என்னதான் செய்வது?'' என்று கேட்டேன்.

"கடந்தகாலத்தை மாற்றினால் நல்லது. கடந்தகாலத்தின் கனத்த சுமையோடு, எதிர்காலத்தை நோக்கி நடக்க முடியாது'' என்றார் புனித்.

"கடந்தகாலம் முடிந்துவிட்டது. அதைப் பற்றிப் பேசி என்ன பயன்?'' என்று விரக்தியுடன் சொன்னேன்.

"நீங்கள் கடந்தகாலத்தைப் பற்றி நினைக்கிறீர்கள். நிகழ்காலத்தில் செயல்படுகிறீர்கள். எதிர்காலத்தைப் பற்றி கற்பனை செய்கிறீர்கள். காலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறீர்கள். ஆனால், புதிய ஜீவியம் முக்காலத்தையும் கடந்தது. காலத்தால் அதைக் கட்டுப்படுத்த முடியாது என்பதால், புதிய ஜீவியத்தால் கடந்தகாலத்தை இன்று மாற்ற முடியும். எதிர்காலத்தை இன்றே அதனால் கொண்டுவர முடியும்'' என்றார் புனித்.

"என்னால் நம்ப முடியவில்லையே'' என்றேன்.

"இதுதான் மனதின் தன்மை. கடந்தகாலத்தை மாற்ற முடியாது என்பது தவறான எண்ணம். ஒளியால் அதை மாற்ற முடியும் என்று உறுதியாக நம்பினால், ஒளியின் வேலை எளிதாகிவிடும்'' என்றார் புனித்.

"சரி. என்னை என்னதான் செய்யச் சொல்கிறீர்கள்?'' என்று கேட்டேன்.

"சமர்ப்பணம்'' சுருக்கமாகச் சொன்னார் புனித்.

"என்ன சொல்கிறீர்கள்? இன்னும் சிறிது விளக்கமாக, புரியும்படி பேசுங்களேன்'' என்றேன்.

"நீங்கள் உங்கள் பிரச்சினைக்கானக் காரணத்தை உணர வேண்டிய அளவில் உணர்ந்து மாறிவிட்டால் பிரச்சினைத் தீர்ந்துவிடும். இதற்குச் சமர்ப்பணம் மட்டுமே கருவி'' என்றார் புனித்.

சரிதான். சமர்ப்பணத்தை 'சர்வரோக நிவாரணி' என்று சொன்னாலும் சொல்லுவார்.

"எப்படி சமர்ப்பணம் செய்ய வேண்டும்?'' என்றேன்.

"புதிய ஜீவியத்தின் ஒரு துளி ஒவ்வொரு மனிதனிடமும் உள்ளது'' என்றார் புனித்.

"அப்படியா?'' எனக்குச் சிரிப்பு வந்தது.

"உண்மையைத்தான் சொல்கிறேன். அது உங்கள் நெஞ்சின் நடுவில் உள்ளது'' என்றார் புனித்.

நான் குனிந்து என் நெஞ்சைப் பார்த்தேன். பின் புன்னகையுடன் விஷமமாகச் சொன்னேன். "எனக்கு என் சட்டை பித்தான்கள்தான் தெரிகின்றன''.

என் குதர்க்கம் அவரை பாதிக்கவில்லை.

"உங்கள் கண்களுக்குத் தெரியாவிட்டாலும் அது அங்கே நிச்சயம் இருக்கிறது'' என்றார் புனித்.

"நான் அதை எப்படி அடையாளம் கண்டுகொள்வது? மொட்டைத் தலை, சுருட்டை வால் என்று ஏதேனும் நல்ல அடையாளம் சொல்லுங்களேன்'' என்றேன்.

புனித் தன் கட்டைவிரலை உயர்த்திக் காட்டினார். "அது கட்டைவிரல் உயரமிருக்கும் அக்னி ஜ்வாலை. உண்மையை வாழவைக்கும் வெண்சுடர்'' என்றார் புனித்.

"நான் எப்படி அதைப் பார்ப்பது?'' என்றேன்.

"நீங்கள் அதைப் பார்த்தாலும், பார்க்காவிட்டாலும், நம்பினாலும், நம்பாவிட்டாலும் அது நெஞ்சுக்குள் நிச்சயமாக இருக்கிறது'' என்றவர், "உண்மையாகவே உங்கள் பிரச்சினை தீர விரும்புகிறீர்களா?'' என்று கேட்டார்.

"ஆமாம். உங்களுக்குச் சந்தேகமே வேண்டாம். உங்கள் மனதில் 'நான் என்ன செய்யவேண்டும்' என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதை உள்ளபடி சொல்லுங்கள்'' என்றேன்.

அப்படியானால் சரி. நீங்கள் தனியாக இருக்கும்போது, கண்களை மூடி ஒரு சிறிய வெண்சுடரை, வெண்ணிறத் தீம்பிழம்பை உங்கள் நெஞ்சின் நடுவே மனதால் பார்க்க முயலுங்கள். அது முடியாவிட்டால், வெறுமனே கற்பனையாவது செய்யுங்கள். தேவையில்லாத எண்ணங்களையும், உணர்வுகளையும் விலக்கிவிட்டு இந்த முயற்சியைச் செய்ய வேண்டும்'' என்று கூறி நிறுத்தினார் புனித்.

"நான் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன்'' என்று உறுதி கூறினேன்.

"மனம் சிறிது அமைதி அடைந்ததும், உங்களுடைய பிரச்சினையின் வரலாற்றை அந்த ஒளியிடம் மானசீகமாகச் சொல்ல வேண்டும். பிரச்சினையின் எல்லாக் கூறுகளையும் முடிந்தவரை சொல்ல வேண்டும். சிறியவை, பெரியவை என்று எதையும் ஒதுக்காமல், எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகச் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லிவரும்போது, எதைப் பற்றியும் உணர்ச்சிவசப்படாமல், மனதில் குழப்பமில்லாமல் இருக்க வேண்டும்'' என்றார் புனித்.

"எளிமையாக இருக்கிறதே!'' என்று ஆச்சரியப்பட்டேன்.

"கேட்கும்போது அப்படித்தான் இருக்கும். செய்வது மிகவும் சிரமம். பிரச்சினைகளை நிதானமாக ஆராயும்போதுதான் உங்களிடம் உள்ள பல்வேறு வகையான குறைகளும், இந்தப் பிரச்சினை உருவாக நீங்கள் காரணமாக இருந்தீர்கள் என்ற உண்மையும் விளங்கும்'' என்ற புனித் தொடர்ந்து, "அந்தக் குறைகளை எல்லாம் இப்போது சரி செய்துகொள்ள வேண்டும். அவற்றை ஒளிக்குத் தர வேண்டும்'' என்றார்.

"மேலே சொல்லுங்கள்'' என்றேன்.

"இரயில் இஞ்சின் டிரைவர் நிலக்கரியை பெரிய கரண்டி கொண்டு தோண்டி எடுக்கிறார். இஞ்சின் பாய்லரில் உள்ள நெருப்புக்குக் கொடுக்கிறார். வண்டி ஓடுகிறது. அதேபோல, நம்முள்ளே ஆழமாகப் போய், பிரச்சினையின் கூறுகளை எடுத்து, அவற்றை உள்ளொளிக்குக் கொடுக்க வேண்டும். அப்போது பிரச்சினை நகர ஆரம்பிக்கும். இதை நிதானமாக, தொடர்ந்து செய்ய வேண்டும். பிரச்சினையின் எல்லாக் கூறுகளையும் எடுத்து, உள்ளொளிக்குக் கொடுக்க வேண்டும்'' என்றார் புனித்.

"எடு, கொடு என்கிறீர்கள்'' என்றேன்.

"ஆமாம். இதைத்தான் சமர்ப்பணம் என்று சொல்வார்கள். எல்லாம் தெரிந்த ஒளியை அழைத்து, பிரச்சினையை அதற்குச் சமர்ப்பணம் செய்ய வேண்டும்'' என்றார் புனித்.

"எல்லாம் தெரிந்த ஒளிக்கு எதற்காக பிரச்சினையின் வரலாற்றை விளக்கமாகச் சொல்ல வேண்டும்? அதற்குத்தான் எல்லாம் தெரியுமே'' என்று சந்தேகம் கேட்டேன்.

"மனிதன் தன்னைத் தானே அறிய வேண்டும் என்பது ஒளியின் நோக்கம். தன்னைத் தானே அறிய சமர்ப்பணத்தை விட்டால் வேறு வழியில்லை'' என்றார் புனித்.

"சமர்ப்பணம் செய்தால் எப்படிப்பட்ட பிரச்சினையும் தீர்ந்துவிடுமா?'' என்று கேட்டேன்.

"எந்தப் பிரச்சினைக்கும் சில மூல காரணங்கள் இருக்கும். எண்ணம், உணர்வு, செயல், மனோபாவம் - எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். மூல காரணம் தெரிந்துவிட்டால், அதை மீண்டும், மீண்டும் சமர்ப்பணம் செய்தால், ஒளி எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் கரைத்துவிடும்'' என்றார் புனித்.

"மூல காரணம் தெரியாவிட்டால் என்ன செய்வது?'' என்று கவலையுடன் கேட்டேன்.

"அதற்காகத்தான் பிரச்சினையின் வரலாற்றை ஒளியிடம் சொல்ல வேண்டும். அப்போது மூல காரணம் தெரிந்துவிடும். சில சமயங்களில் மூல காரணம் என்று தவறான காரணத்தை நினைத்துக்கொண்டு இருப்போம். அதையும் ஒளி சரி செய்துவிடும்'' என்றார் புனித்.

"பிரச்சினை எவ்வளவு பெரியதாக இருந்தாலும் இந்த ஒளியால் தீர்க்க முடியுமா?'' என்று கேட்டேன்.

"நிச்சயம் முடியும்'' என்றார் புனித்.

"என்னைப் பொறுத்தவரை என் பிரச்சினை எனக்கு மிகவும் பெரியது. அதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' என்று புனித்திடம் கேட்டுக்கொண்டேன்.

"ஒரு வேளைக்கு நீங்கள் சுமாராக எத்தனை இட்லிகள் சாப்பிடுவீர்கள்?'' என்று சம்பந்தமில்லாமல் கேட்டார் புனித்.

"பசியோடு இருந்தால் ஆறு. இல்லாவிட்டால் நான்கு. தொட்டுக்கொள்ளும் சட்னியைப் பொறுத்து ஒன்றிரண்டு கூடலாம் அல்லது குறையலாம்'' என்று புரியாமல் பதில் சொன்னேன்.

"குழந்தை எத்தனை சாப்பிடும்?'' என்று புனித் கேட்டார்.

"ஒன்று அல்லது இரண்டு'' என்று சொன்னேன். "பெரிய குஸ்தி பயில்வான் எத்தனை சாப்பிடுவார்?'' என்று புனித் கேட்டார்.

"குறைந்தது பத்தாவது சாப்பிடுவார்'' என்று கூறினேன்.

ஏதேது, திடீரென்று வகைதொகை இல்லாமல் பேசிக்கொண்டு இருக்கிறார். அடுத்தபடியாக, "கொழுக்கு, மொழுக்கு என்றிருக்கும் நடிகை ஜோதிகா தினசரி எத்தனை இட்லிகள் சாப்பிடுவார்?' என்று கேட்டாலும் கேட்பார் போலிருக்கிறது! நல்ல வேளையாக, புனித் அப்படி எதுவும் என்னைக் கேட்கவில்லை.

"அவரவர் அளவுக்கு உட்பட்டுத்தான் பிரச்சினைகள் வரும். நீங்களே மனதார விரும்பினாலும் நாற்பது இட்லிகளை உங்களால் சாப்பிட முடியாது. உங்களுக்கு ஒரு பிரச்சினை வந்திருக்கிறது என்றால், அதனை உங்களால் சமர்ப்பணத்தின்மூலம் நிச்சயம் தீர்க்க முடியும் என்பதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். அளவுகள் மனிதனுக்குத்தான் உண்டு. அவை உள்ளொளிக்கு இல்லை'' என்று விளக்கினார் புனித்.

"எனக்கு ஏதோ புரிந்தது போலவும் இருக்கிறது. ஆனால், எதுவுமே புரியாதது போலவும் இருக்கிறது'' என்றேன்.

"மனதை ஒருமைப்படுத்தி புரிந்ததை நம்பிக்கையோடு செய்துவிட்டால், புரியாதவை தாமே புரியும். புதிய ஜீவியம் எதைச் செய்ய வேண்டுமோ, அதைத் தவறாமல் செய்யும்'' என்றார் புனித்.

"என் மனம் எப்போதும் ஒரு நிலையில் இருக்காது. கடன் தொல்லை வந்தபிறகு எதிலும் கவனம் இருப்பதில்லை. கவலைகளும், குழப்பங்களும் மட்டும்தான் இருக்கின்றன'' என்றேன்.

"கவலைகளையும், குழப்பங்களையும் ஒவ்வொன்றாக, நிதானமாக ஒளியிடம் எடுத்துச்சொன்னால், அவை நிச்சயமாகக் கரையும்'' என்றார் புனித்.

"ஒளியால் அப்படிச் செய்ய முடியுமா? இதெல்லாம் நடக்குமா?'' என்று கேட்டேன்.

"நம்பினார் கெடுவதில்லை'' என்றார் புனித்.

அவர் குரலில் இருந்த உறுதியும், கண்களில் தெரிந்த உண்மையும் புனித்தின் வார்த்தைகள் மீது சிறிது நம்பிக்கை உண்டாக்கின. இருந்தாலும், "சமர்ப்பணம் செய்தால் என்ன நடக்கும்'' என்று தெரிந்துகொள்ள ஆர்வம் பொங்கியது.

"எப்போது பிரச்சினை தீரும்?'' என்று கேட்டேன்.

"அது ஒளிக்குத்தான் தெரியும். இவருக்குத் தெரியாது'' என்றார் புனித்.

"யார்மூலம் தீர்வு வரும்?'' என்று கேட்டேன்.

"அது ஒளிக்குத்தான் தெரியும். இவருக்குத் தெரியாது'' என்றார் புனித்.

"எங்கிருந்து உதவி கிடைக்கும்?'' என்று கேட்டேன்.

"அது ஒளிக்குத்தான் தெரியும். இவருக்குத் தெரியாது'' என்றார் புனித்.

"தீர்வு எப்படிப்பட்டதாக இருக்கும்?'' என்று கேட்டேன்.

"அது ஒளிக்குத்தான் தெரியும். இவருக்குத் தெரியாது'' என்றார் புனித்.

எனக்கு ஒரே ஆயாசமாக இருந்தது. திடீரென "ஒளி, சமர்ப்பணம் என்பனவெல்லாம் வெறும் மனப்பிரமையோ' என்று தோன்றியது.

பகுத்தறிவால் எத்தனையோ விஞ்ஞான வித்தைகள் நிகழும் இந்தக் காலத்தில் இவற்றை நம்புவது நல்லதுதானா?

"என்னவோ போங்கள். எனக்கு நம்பிக்கை குறைவது போலிருக்கிறது'' என்று வெளிப்படையாகச் சொன்னேன்.

என்னை ஆழமாக உற்றுப்பார்த்து, மிகவும் நிதானமாக, அழுத்தமாக, உத்தரவிடும் குரலில் புனித் சொன்னார், "புனித் சொல்வது சத்தியம். அவர் வார்த்தையை நீங்கள் நம்பலாம்''.

திடீரென மீண்டும் நம்பிக்கை பிறந்தது.

"எனக்கு, பத்து இலட்ச ரூபாய் ஒரு வாரத்தில் கிடைத்தால் எல்லாப் பிரச்சினைகளும் உடனே தீர்ந்துவிடும். 'சமர்ப்பணம் செய்தால் அது நடந்துவிடும்' என்கிறீர்கள்'' என்று நான் அவர் வாயைக் கிளறப் பார்த்தேன்.

"உங்களுக்கு நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும். அது பத்து இலட்ச ரூபாய் கிடைப்பதாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்'' என்றார் புனித்.

"நான் என்னதான் செய்ய வேண்டும்? தெளிவாகச் சொல்லுங்கள்'' என்றேன்.

"சமர்ப்பணம். அதுவே முதல், அதுவே முடிவு'' என்று அழுத்தமாகச் சொன்னார் புனித்.

"எதைச் செய்யக்கூடாது? அதையாவது விளக்கமாகச் சொல்லுங்கள்'' என்று கேட்டேன்.

"எதிர்பார்க்கக்கூடாது'' என்றார் புனித்.

"அது எப்படி? மிகவும் சிரமப்பட்டு என் பிரச்சினையை சமர்ப்பணம் செய்யும்போது, 'பலனை எதிர்பார்க்காதே' என்றால் நன்றாகவா இருக்கிறது? நீங்களே நியாயத்தைச் சொல்லுங்கள்'' என்றேன்.

"எதிர்பார்ப்புகளே உங்கள் ஏமாற்றங்களுக்குக் காரணம். உங்களிடமிருந்து எதிர்பார்ப்பின் கடைசித் துளி கரையும்போது, எங்கிருந்தோ தீர்வு வரும்'' என்றார் புனித்.

"எதிர்பார்க்காமல் இருப்பது பெரிய சிரமம்'' என்றேன்.

"புரிகிறது. என்ன செய்வது? அது மிக முக்கியமான நிபந்தனை'' என்றார் புனித்.

"நீங்கள் தவணை முறையில் தகவல் தருகிறீர்கள். வேறு நிபந்தனைகள் உண்டா? அவற்றையும் சொல்லிவிடுங்கள்'' என்றேன்.

"ஏன் இல்லாமல்? நம்பிக்கையும், விடாமுயற்சியும் வேண்டும். உண்மையான நம்பிக்கையுடன் ஒளியிடம் சமர்ப்பணம் செய்ய வேண்டும். முதல் முறையில் சமர்ப்பணம் முடியவில்லை என்றால் வருத்தப்பட்டு விட்டுவிடக்கூடாது. மீண்டும், மீண்டும் முயலவேண்டும். முதல் நாள் முடியவில்லை என்றால் அடுத்த நாள், அதற்கடுத்த நாள் என்று தொடர வேண்டும். முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்'' என்றார் புனித்.

"என்னால் சமர்ப்பணம் செய்ய முடியாவிட்டால் என்ன செய்வது?'' என்று கேட்டேன்.

பிரச்சினைகள் தீர விருப்பம் இருக்கிறதா, இல்லையா, என்பதே கேள்வி. உண்மையில் விருப்பம் உண்டு என்றால் சமர்ப்பணம் நிச்சயம் முடியும். செய்து பாருங்கள் தெரியும்'' என்றார் புனித்.

"கேலி செய்யாதீர்கள். 'பிரச்சினைகள் தீர வேண்டும்' என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள்'' என்றேன்.

"மனிதர்களின் உள்மனம் பற்றி உங்களுக்குச் சரியாகத் தெரியவில்லை'' என்ற புனித், "இன்னொரு விஷயம். பிரச்சினை தீர வேண்டும் என்பது வேறு. பிரச்சினை இப்படித்தான் தீர வேண்டும் என்று வீண் பிடிவாதம் செய்வது வேறு. பிடித்தவையும், பிடிக்காதவையும் சமர்ப்பணத்தின் எதிரிகள்'' என்றார்.

"சரிதான், சரிதான்'' என்று அலுப்புடன் சொல்லிவிட்டு, "என் சமர்ப்பணம் நிறைவேறியது என்று எப்படித் தெரியும்?'' என்று கேட்டேன்.

"பல அறிகுறிகள் உண்டு. அவை அனுபவத்தில்தான் புரியும். பொதுவாக ஒன்றைச் சொல்லலாம். நெஞ்சிலிருந்து ஒரு பெரிய பாரம் விலகியது போன்ற உணர்வு ஏற்பட்டால் சமர்ப்பணம் செய்ய முடிந்தது என்று எடுத்துக்கொள்ளலாம்'' என்று விளக்கினார் புனித்.

"நான் வெளியே சொல்ல முடியாத எத்தனையோ பல இரகசியங்கள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் ஒளியிடம் சொல்லத்தான் வேண்டுமா?'' என்று சிறிது வெட்கத்துடன் கேட்டேன்.

"இதில் வெட்கப்பட ஒன்றுமே இல்லை. ஒவ்வொருவர் மனமும் சந்தைக்கடையாக, சாலையோரச் சாக்கடையாகத்தான் இருக்கிறது. ஒரு தவற்றை உணர்ந்துவிட்டால் அதை மீண்டும் செய்யக்கூடாது. அதுதான் முக்கியம்'' என்றார் புனித்.

"மீண்டும் தவறு செய்தால் என்ன நடக்கும்?'' என்றேன்.

"தமக்குத் தாமே சமாதி கட்டிக்கொள்பவரின் கையைப் பிடித்தா தடுக்க முடியும்?'' என்று கேட்டார் புனித்.

நான் பதில் சொல்லவில்லை.

"ஒரு வேளை கடுமையாகப் பேசிவிட்டோமோ' என்று புனித் நினைத்தார் போலிருந்தது. சாந்தமான குரலில், "சரியான மனோபாவத்துடன் நீங்கள் ஒளியை அழைத்தால், ஒருபோதும் இதுபோன்ற கேள்விகள் எழாது'' என்றார் புனித்.

"எது சரியான மனோபாவம்?'' என்று கேட்டேன்.

"ஒளியைச் சரணடைய வேண்டும் என்பதே சரியான மனோபாவம்'' என்றார் புனித்.

சிறிது நேரம் மௌனமாக இருந்தோம்.

"யாராவது சமர்ப்பணம்மூலம் பிரச்சினைகளைத் தீர்த்து இருக்கிறார்களா?'' என்று கேட்டேன்.

"எத்தனையோ அற்புதங்கள் நடந்திருக்கின்றன. இவரது அனுபவங்களில் எதைச் சொல்வது? எதை விடுவது?'' என்றார் புனித்.

"உங்களைப் போன்ற அனுபவசாலிகளை விடுங்கள். என்னைப் போன்ற பாமரனுக்குச் சமர்ப்பணம் பலிக்குமா?'' என்று கேட்டேன்.

"புனித்திற்குத் தெரிந்தவர்கள் பலர் சமர்ப்பணம் செய்ய முயல்கிறார்கள்'' என்றார் புனித்.

"அவர்களது முக்கியமான அனுபவங்களைப் பற்றி ஏதாவது சொல்லுங்களேன்'' என்றேன்.

"அவர்களால் ஒரு சில பிரச்சினைகளை, சமர்ப்பணம் செய்ய முடிகிறது. பல பிரச்சினைகளை, சமர்ப்பணம் செய்ய முடிவதில்லை'' என்றார் புனித்.

"அது ஏன்?'' என்று கேட்டேன்.

சமர்ப்பணம் பலிக்க எண்ணம், சொல், செயல் என்ற அனைத்தையும் மாற்றத் தயாராக வேண்டும். அப்படி மாற விரும்பாததுதான் காரணம்'' என்றார் புனித்.

"மாற்றம் எப்போதுமே சிரமமானது. வேறு ஏதேனும் சுருக்கு வழி இருக்கிறதா? என்று கேட்டேன்.

"மாற்றமில்லாமல் முன்னேற்றமில்லை. சமர்ப்பணம் செய்யும்போது பலர் தங்கள் விருப்பு வெறுப்புகளின்படி ஒளி செய்ய வேண்டும் என்று இரகசியமாக ஆசைப்படுகிறார்கள். அது நடக்காது. எவராலும் ஒளியை ஏமாற்ற முடியாது. மனத்தின் உண்மைக்குத்தான் மதிப்பு. உள்ளொளியை ஒருபோதும் ஏமாற்ற முடியாது'' என்றார் புனித்.

"என்னுடைய எண்ணம், சொல், செயல் எல்லாம் எப்போதுமே கொஞ்சம் கோணலாகத்தான் இருக்கும். இவை சரியாக இருக்கின்றன என்பதை நான் எப்படித் தெரிந்துகொள்வது?'' என்று கேட்டேன்.

"உங்களைச் சுற்றி நடப்பவற்றைக் கவனித்துப் பார்த்தால் புரிந்துவிடும். ஒரு தவறான எண்ணம் தோன்றினால், எண்ணத்தைப் பொறுத்து, தவறான நிகழ்ச்சிகள் நடப்பதை அனுபவத்தில் பார்க்கலாம்'' என்றார் புனித்.

"நீங்கள் சொல்வனவெல்லாம் உண்மைகள் என்றால் எல்லாப் பிரச்சினைகளையும் சமர்ப்பணத்தின்மூலம் தீர்க்கலாம் போலிருக்கிறது. ஆனால், இன்னும் சிறிது நேரத்தில் நீங்கள் பிரான்சுக்குப் போய்விடுவீர்கள். சமர்ப்பணத்தைப் பற்றிச் சந்தேகம் வந்தால் நான் என்ன செய்வது?'' என்று கேட்டேன்.

"உள்ளொளியை நம்புங்கள். அது மட்டுமே தவறில்லாத வழியைக் காட்டும். தெளிவைத் தரும்'' என்றார் புனித்.

விமான நிலையத்தை அடைந்தோம். நான் காரை நிறுத்திவிட்டு வருவதற்குள் புனித் எங்கிருந்தோ ஒரு டிராலியை சம்பாதித்துக்கொண்டு வந்தார்.

"உங்களோடு பேசியபின் எனக்குக் கொஞ்சம் நம்பிக்கை உண்டாகி இருக்கிறது. உங்கள் கான்ப்ரன்ஸில் இந்தப் புதிய ஜீவியம் பற்றி பேசுவீர்களா?

"இல்லை. புனித் கான்ப்ரன்ஸில் வேறு மாதிரி பேசுவார். பொதுவாகவே இவர் பிறருடன் இந்த ஜீவியம் பற்றி எதுவும் பேசுவதில்லை. அது இவருக்கு ஒத்து வருவதில்லை. ஆனால், உங்கள் தொடர்பால் இவர் சூழல் பாதிக்கப்படவில்லை. அதனால்தான் உங்களிடம் புதிய ஜீவியம் பற்றிப் பேசினார்'' என்றார் புனித்.

புனித் என்ன சொன்னார் என்று சரியாகப் புரியவில்லை. இருந்தாலும், புரிந்துகொண்டதாகத் தலையைச் சற்று பலமாகவே அசைத்து வைத்தேன். "நீங்கள் வித்தியாசமான மனிதர். உங்களோடு தொடர்ந்த நட்பை விரும்புகிறேன்'' என்று கூறி என் விசிட்டிங் கார்டை அவரிடம் நீட்டினேன்.

அதை வாங்கிக்கொண்ட புனித், "இவரிடம் விசிட்டிங் கார்ட் இல்லை'' என்று கூறினார். பின் தம் கைப்பையிலிருந்து ஒரு சிறு காகிதத்தை எடுத்தார். ஒரு கணம் தயங்கிவிட்டு தம் விலாசத்தை எழுதித் தந்தார். அச்சடித்தது போன்ற அழகான கையெழுத்து.

"என் போன்ற பிரச்சினையில் இருப்பவனுக்கு விலாசம் தரலாமா என்று யோசித்தீர்கள் போலிருக்கிறது'' என்று என் ஆதங்கத்தை வெளியிட்டேன்.

"தயக்கம் ஒன்றுமில்லை. எந்தச் சிறு செயலானாலும் சமர்ப்பணம் செய்துவிட்டுத்தான் இவர் செயல்படுவார். அப்போதுதான் அந்தச் செயல் ஜீவனுள்ளதாக மாறும்'' என்றார் புனித்.

"அப்படியா விஷயம்?'' என்ற நான் சிறு நெகிழ்ச்சியுடன், "உங்கள் அறிவுரைக்கு மிகவும் நன்றி. கடைசியாக ஒரு கேள்வி கேட்கலாமா?'' என்று கேட்டேன்.

"கேளுங்கள்'' என்ற புனித் தம் பைகளை டிராலியில் அடுக்கலானார்.

"நீங்கள் பள்ளிக்கூடம் போனதுண்டா?'' என்று மெல்ல அவரிடம் கேட்டேன்.

"போயிருக்கிறார். என்ன விஷயம்?'' என்று வியப்புடன் கேட்டார் புனித்.

"உங்கள் ஆசிரியர் உங்களுக்கு 'நான், எனது' என்ற வார்த்தைகளைச் சொல்லிக் கொடுத்தாரா, இல்லையா?'' என்று புன்னகையுடன் கேட்டேன்.

குபீரென்று வாய்விட்டு சிரித்துவிட்டார் புனித். தம் வலக்கையை உற்சாகமாக உயர்த்தி அசைத்துவிட்டு, ஒரு வார்த்தையும் பேசாமல் டிராலியைத் தள்ளிக்கொண்டு பயணிகள் பகுதியினுள் விரைவாக நுழைந்தார், மறைந்தார்.

உற்சாகமாக உணர்ந்தேன். மனம் சிறிது மலர்ந்தது போலிருந்தது.

என்னோடு யாரோ இருப்பது போலவும், என் தனிமை மறைந்தது போலவும் உணர்ந்தேன்.

விமான நிலைய உணவு விடுதியில், 'மசால்தோசை கிடைக்கும்' என்று எழுதியிருந்தது. 'அட, இதுகூட இங்கு கிடைக்கிறதே' என்று சிறிது ஆச்சரியமாக இருந்தது. அதைப் பார்த்ததும் கொஞ்சம் பசிப்பதுபோல் இருந்தது. வரியோடு சேர்த்து நாற்பது ரூபாய் முப்பது பைசா கொடுத்து ஒரே ஒரு மசால்தோசை சாப்பிட்டேன். இதையே வெளியே சாப்பிட்டால் பதினெட்டு ரூபாய்தான். சரியான பகல் கொள்ளை - இல்லை, இல்லை - அதிகாலைக் கொள்ளை!

புனித்திற்குப் பிரச்சினை இல்லை. விமானத்தில் வகை, வகையாக உணவு தருவார்கள். திருப்தியாகச் சாப்பிடுவார்.

விமான நிலையத்தைவிட்டு வெளியே வரும்போது எதிரே விமானப் பணிப்பெண்கள் சிலர் வந்தனர். என் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.

அழகான பெண்களைப் பார்த்தால் எனக்கு, சின்ன வயது முதலே இப்படித்தான் ஆகிவிடுகிறது. முப்பத்தாறு வயதான பின்னும்அப்படியேதான் இருக்கிறேன். 'நான் மட்டும்தான் இப்படியா, இல்லை, எல்லா ஆண்களும் இப்படித்தானா?' என்று விசாரிக்க வேண்டும்.

அந்தப் பெண்கள் என்னைக் கடந்து செல்லும்போது ஒரு பெண்ணின் கைப்பை கீழே விழுந்தது. அழகாகக் குனிந்து அதை எடுத்த வண்ணமயில் ஒயிலாக நடந்து மறைந்தது.

எங்கோ ஓர் ஒலிபெருக்கியில், 'உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது' என்று சீர்காழி கோவிந்தராஜன் மிகவும் உருக்கமாகப் பாடிக்கொண்டிருந்தார்.

பக்கத்திலேயே இன்னொரு ஒலிபெருக்கியில், 'மன்மத ராசா, மன்மத ராசா, கன்னி மனசைக் கிள்ளாதே' என்று கட்டையான பெண் குரல் பாடிக்கொண்டிருந்தது.

ஏதேதோ நினைத்துக்கொண்டு காரை கிளப்பி மிக நிதானமாக ஓட்டினேன். மழையில் எப்போதுமே கவனமாக ஓட்ட வேண்டும்.

புனித்தின் புன்சிரிப்பும், வசீகரிக்கும் கண்களும் மீண்டும், மீண்டும் மனக்கண்ணில் தோன்றின. இந்த மனிதர் எப்படி இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்? வங்கியில் நிறைய பணம் வைத்திருப்பார் போலிருக்கிறது.

"சமர்ப்பணம், மாற்றம், பரிணாமம் போன்ற பெரிய வார்த்தைகளை வேலை வெட்டி இல்லாதவர்கள்தாம் பேசித் திரிவார்கள். வியாபார நடைமுறைச் சிக்கல்கள் பற்றி இவர்களுக்கு எதுவும் புரியாது. நாம்தாம் சாமர்த்தியமாக நடந்து, கடனைத் தீர்க்க வேண்டும். ஒளி, கிளி என்று நம்பி மோசம் போய்விடக்கூடாது' என்ற எண்ணம் தோன்றியது.

திடீரென, எதிர்பாராமல் ஒரு வழிப்பாதையில் தவறாக ஒரு ஸ்கூட்டர்காரர் வேகமாக வந்தார். நல்ல வேளையாக, சட்டென காரை நான் குலுக்கலுடன் நிறுத்திவிட்டதால் விபத்து ஏற்படவில்லை. ஸ்கூட்டர்காரர் ஏதோ நான்தான் தவறு செய்துவிட்டதுபோல் கோபத்துடன் என்னைப் பார்த்து கடுமையாக இரண்டு வார்த்தைகள் சொல்லிவிட்டு, மீண்டும் தவறான வழியில் தொடர்ந்து சென்றார். தமிழர் என்றோர் இனமுண்டு, தனியே அவருக்கோர் குணமுண்டு!

மீண்டும் காரை ஓட்டலானேன்.

'ஒருவேளை, புனித் சொன்னதுபோல் சற்று நேரத்திற்குமுன் தோன்றிய தவறான எண்ணம்தான் இந்த இடைஞ்சலுக்கு காரணமாக இருக்குமோ' என்று தோன்றியது. 'இருந்தாலும், இருக்கும். இனிமேல் எண்ணம், சொல், செயல், எல்லாவற்றிலும் கவனமாக இருக்க வேண்டும். தவற்றை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது' என்று தீர்மானம் செய்துகொண்டேன்.

மழை பலமாகப் பெய்துகொண்டிருந்தது.

                                                                   *******

என் தீப்பெட்டி வீட்டிற்குள் நான் நுழைந்தபோது சுவர்க் கடிகாரம் ஏழு முறை அடித்துவிட்டு ஓய்ந்தது.

செய்வதற்கு வேலை ஒன்றும் இல்லாததால், என்ன செய்வது என்று தெரியாமல் நாற்காலியில் உட்கார்ந்தேன்.

புனித் சொல்லியவற்றைப் பற்றி யோசித்துப் பார்த்தேன். எதையும் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. விசித்திரமான குழப்பம்.

இதயத்தின் அந்தரங்கத்திலிருந்து பிறர் கேட்கமுடியாத இரகசியக் குரல் ஒன்று கிசுகிசுத்தது. 'எடு, கொடு; எடு, கொடு; எடு, கொடு' என்ற அக்குரல் என்னை விடுவதாயில்லை.

'இது என்ன பெரிய தொந்தரவாகப் போய்விட்டதே' என நினைத்தேன். நேரமாக, நேரமாக அக்குரல் வலுத்தது.

ஒரு நல்ல முடிவுக்கு வந்தேன். 'சமர்ப்பணம் செய்தால் என்னதான் நடக்கும்? அதையும் பார்த்துவிடலாம்' என்று நினைத்தேன்.

தெளிவான முடிவு. புதிய சக்தி கிடைத்தது போலிருந்தது.

நாற்காலியிலிருந்து எழுந்து சிறிது நேரம் உலாவினேன். பின் சாய்வு நாற்காலியில் வசதியாக சாய்ந்து அமர்ந்தேன். உணர்வுகளையும், உடலையும் தளர்த்தி கண்களை மெதுவாக மூடினேன். முதலில் மனதை அமைதியாக்க வேண்டும்.

எண்ணங்களைக் கவனிக்கலானேன்.

முதல் எண்ணம் முளைத்தது. விமான நிலையத்தில் மசால்தோசை ஆறிப்போயிருந்தது. பெரிய தவறு செய்துவிட்டேன். இவ்வளவு விலை கொடுத்ததற்கு, புதிய தோசை சூடாகக் கேட்டிருக்க வேண்டும்.

மேலே யோசிக்காமல் அந்த எண்ணத்தை நிராகரித்தேன்.

அடுத்த விநாடி, நடிகர் கமலஹாசன் நினைவுக்கு வந்தார். விருமாண்டி வெற்றி படமா? கோடி, கோடியாய் வருமானம் வந்திருக்கும். இவ்வளவு பணத்தை வைத்துக்கொண்டு என்னதான் செய்வார்? ஒரே கவலையாக இருந்தது.

அத்துடன் அந்த எண்ணத்திற்கு விடை கொடுத்தேன்.

சிறிது நேரம் ஒன்றுமில்லாத வெறுமை.

பாம்புபோல மெதுவாக விமானப் பணிப்பெண்ணின் நினைவு ஊர்ந்து வந்தது. கீழே தவற விட்ட கைப்பையை எடுக்கக் குனிந்தபோது அவளது சீருடை சற்றே விலகியது. வெளேரென்ற தொடை பளிச்சென தெரிந்து மறைந்தது. அந்தக் காட்சி மீண்டும், மீண்டும் மனக்கண்ணில் தோன்றியது. இந்த இன்பமான எண்ணத்தை விலக்க எனக்கு விருப்பமில்லை.

உணர்வு கிளர்ந்தது. சமர்ப்பணம் செய்யும் முடிவு மெல்ல, மெல்லத் தளர்ந்தது.

திடீரென என்ன நடக்கிறது என்பதை உணர்ந்தேன். உலுக்கி விழுந்தேன். 'எதற்கு முக்கியத்துவம் தருகிறேன்' என்ற விழிப்புணர்வு வெட்கத்தைத் தந்தது.கண்களைத் திறந்தேன்.

மீண்டும் கண்களை மூடினால், அழகுராணியின் அபாயகரமான உடல் வளைவுகள் என்னை நிச்சயம் தொந்தரவு செய்யும் என்று தோன்றியது. இதை எப்படி விலக்குவது?

மின்னலென புதிய ஜீவியத்தின் நினைவு வந்தது. அந்தக் கணமே என் வாழ்வில் இறைவன் வந்த தருணம்.

கட்டை விரலளவு வெண்ணிற அக்னி ஜ்வாலையை என் நெஞ்சத்தின் நடுவே கற்பனை செய்தேன்.

முதலில் முடியவில்லை. ஒரே இருட்டாக இருந்தது. முயன்றேன். மீண்டும், மீண்டும் முயன்றேன். சிறிது நேரத்தில் மங்கலாக ஏதோ தெரிவதுபோல் இருந்தது. அது உண்மையா, கற்பனையா என்பதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

"புனித் சொன்ன ஒளியே, புதிய ஜீவியமே, எனக்கு ஒன்றும் புரியவில்லை. நீங்கள் யாரென்று எனக்குத் தெரியாது. ஆனால், உங்களால் என்னைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை ஏனோ வருகிறது. இந்தச் சமர்ப்பண முயற்சியை உங்களிடம் சமர்ப்பணம் செய்கிறேன்.

என் பிரச்சினையை உங்களிடம் சமர்ப்பணம் செய்ய ஆர்வமாக உள்ளேன். என் பிரச்சினையின் கூறுகளை உங்கள் ஒளிக்குத் தருகிறேன். என்னால் எதுவும் முடியாது. ஆனால் உங்களால் எல்லாம் முடியும் என்று நம்புகிறேன். எது சரியோ, அதைச் செய்யுங்கள்'' என்று மனமுருகிச் சொன்னேன்.

அதன்பின், கண்களை மூடினேன். எண்ணங்களோடு அடுத்த யுத்தத்திற்கு தயாரானேன்.

என்ன விந்தை!

சஞ்சலமூட்டும் அர்த்தமற்ற எண்ணங்களைக் காணோம். என் பிரச்சினைகள் பற்றிய எண்ணங்கள் மட்டுமே உலா வர ஆரம்பித்தன.

என் கம்பெனியைப் பற்றி நினைத்தேன். அதன் பெயரை கற்பனை செய்து மங்கலான ஒளியிடம் கொடுத்தேன்.

எனக்கு, பத்து இலட்சம் தேவை. எனவே, ஒளியிடம் சொன்னேன், "எனக்கு பத்து இலட்சம் தேவைப்படுகிறது. என் தேவையை உங்களிடம் சமர்ப்பணம் செய்கிறேன்''.

நான் கட்ட வேண்டிய பில்களைப் பற்றி நினைத்தேன். ஒவ்வொரு பில்லாக உள்ளொளிக்குச் சமர்ப்பித்தேன்.

என் பொருட்கள், சிப்பந்திகள், வங்கி, விற்பவர்கள், வாங்குபவர்கள் என்று என் நிறுவனம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் ஒளிக்குச் சமர்ப்பித்தேன். வெண்சுடர் சற்றே வளர்ந்தது. ஒளி தெளிவாகத் தெரிந்தது.

சற்று நேரம் எதுவுமில்லை.

விமானப் பணிப்பெண் விஷமமாகச் சிரித்துக்கொண்டு, 'கைப்பையை குனிந்து எடுக்கட்டுமா?' என்று கேலியாகக் கேட்டாள். அந்த எண்ணத்தை ஒளியிடம் தந்தேன். மோகினி மாயமாக மறைந்தாள்.

உள்ளொளியை ஊன்றிக் கவனித்தேன். என் வியாபாரம் தொடங்கியதிலிருந்து நடந்தவற்றை ஒவ்வொன்றாக நினைவுகூர்ந்தேன். அவற்றைச்சமர்ப்பணம் செய்தேன்.

திடீரென நிகழ்ச்சிகள் நிழற்படங்களாக, காட்சிகளாகத் தோன்றின. அந்த நிமிடம் முதல் எதையும் நானாக நினைத்து, யோசித்து சமர்ப்பணம் செய்ய வேண்டிய அவசியமே இருக்கவில்லை. என் வியாபார வாழ்க்கை அடுத்தடுத்து பல வண்ணப்படங்களாகத் தோன்ற ஆரம்பித்தன.

தொலைக்காட்சியில் தொடர் நிகழ்ச்சி ஆரம்பமானது. விருப்பு, வெறுப்பின்றி நாடகத்தைக் கவனித்தேன்.

சிறிய விஷயங்கள் வெளிவந்தன. பெரிய விஷயங்கள் வெளிவந்தன.

சிறியவை, பெரியவை, உயர்ந்தவை, தாழ்ந்தவை, நல்லவை, கெட்டவை, அனைத்தும் வந்தன. அனைத்தையும் சமர்ப்பணம் செய்தேன். ஒவ்வொன்றாய் ஒளிக்குச் சமர்ப்பணம் செய்தேன்.

விதவிதமான விஷயங்கள்.

இரகரகமான இரகசியங்கள்.

அனைத்தையும் சமர்ப்பணம் செய்தேன்.

விநாடி முள் கடிகாரத்தை முடிவே இன்றி சுற்றிச் சுற்றி வந்தது - ஜென்ம, ஜென்மமாக ஒரே விஷயத்தை நாம் சுற்றிச் சுற்றி வருவதுபோல்.

திடுக்கென முள் நின்றது.

ஒரு காட்சி. ஒளி புசிக்க முடியாத காட்சி. கரும் புகை படர்ந்த சிறிய, கரிய காட்சி.

எனக்கு மிகவும் வேண்டிய ராம்லால் என்ற வாடிக்கையாளர் என்னிடம் கம்ப்யூட்டர் கீபோர்டு வாங்கினார். கையோடு அறுநூறு ரூபாய் பணமும் தந்தார். ராம்லால் கொஞ்சம் மறதிகாரர். பணம் கொடுத்ததை மறந்துவிட்டு, பத்து நாட்கள் கழித்து, அதே பொருளுக்கு செக் அனுப்பினார்.

அது சிறிய தவறு என்பதால் நான் அதைப் பொருட்படுத்தவில்லை. அது சிறிய தொகை என்பதால் நான் அதை திருப்பிக் கொடுக்க நினைக்கவில்லை.

நான் அவரை ஏமாற்றவில்லை. அவர் கேட்டிருந்தால் நிச்சயம் திருப்பிக் கொடுத்திருப்பேன். எவரையும் ஏமாற்றும் எண்ணம் எப்போதும் எனக்கு இல்லை.

அது என் தவறில்லை. ராம்லாலின் தவறு.

அப்படியா? உண்மையாகவா?

திடீரென எனக்குள் சின்ன வெளிச்சம். மின்னலாய் ஒரு பெரிய ஞானோதயம்.

நான் ஓர் ஏமாற்றுக்காரன். நான் பிறரை ஏமாற்றுபவன். சந்தர்ப்பமும், சூழ்நிலையும் பொருந்திவந்தால் எவ்வளவு வேண்டியவரானாலும், எத்தனைச் சிறிய விஷயமானாலும் தயங்காமல் ஏமாற்றிவிடுவேன்.

இதுவே நான்.

எனக்கு நான்தான் முக்கியம். என் ஆதாயம் மட்டுமே எனக்கு முக்கியம்.

புரிய ஆரம்பித்தது. மங்கலான ஒளி தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது.

என் செயல் தவறானது. என் செயலுக்குப் பின்னணியில் இருந்த என் மனோபாவம் தவறானது.

எனக்குப் பணம் ஒரு பிரச்சினையே இல்லை. மனம்தான் பிரச்சினை.

ஒரு விநாடியில் என்னைப் பற்றிய சுயகணிப்பு தலைகீழாக மாறியது.

என்னையே நான் எதிர்கொண்டேன். நான் நல்லவனில்லை. கள்வன், திருடன், ஏமாற்றுக்காரன்.

வெறும் அறுநூறு ரூபாய்! நான் அயோக்கியனாகிவிட்டேன். நான் ஏமாற்றுக்காரன் என்று ஒப்புக்கொள்வதும், உயிர் போவதும் ஒன்றே.

கண்களில் முள் நெருடியது. 'கண்களை உடனே திறக்க வேண்டும். சமர்ப்பணத்தைத் துறக்க வேண்டும்' என்ற வேகம் தோன்றியது.

'இது வீண் வேலை' என்ற சிறு சந்தேகம் முளைத்தது. ஆனால் நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று ஈர்த்தது. சமர்ப்பணத்தைத் தொடர்ந்தேன். நம்பிக்கை நெருப்பு சந்தேகத்தைச் சுட்டெரித்தது.

இதயத்தின் ஆழத்திலிருந்து ராம்லாலிடம் சொன்னேன். "என்னை மன்னித்துவிடுங்கள் ராம்லால். உங்கள் பணத்தைத் திருப்பித் தந்துவிடுகிறேன்''.

எத்தனையோ பிறவிகளாக ஆடாத, அசையாத கருங்கல் பாறையில் நீண்ட விரிசல் ஒன்று விழுந்தது.

மனங்கசிந்து ஒளியிடம் சொன்னேன். "உள்ளொளியே, நான் மாற மனமார சம்மதிக்கிறேன். திரும்பவும் இத்தவற்றைச் செய்யமாட்டேன். பெரியதோ, சிறியதோ, என் மனோபாவம் இனி எப்போதும் சரியாகவே இருக்கும். இது சத்தியம்''.

பெரிய சூறாவளி ஒன்று என் நெஞ்சினுள் ஒரு கணம் வீசியது. சூறைக்காற்றில் ஆழித்துரும்புகள் பறந்தன. அளவுகள் அழிந்தன. அறுநூறும், அறுபது கோடியும் ஒன்றே என்று என் புத்திக்கு எட்டியது.

அவிழாத என் அந்தரங்க முடிச்சினை, கண்களைக் கூச வைக்கும் ஒளி வாளொன்று ஆவேசமாகத் தீண்டியது. என் ஜீவன் அதிர்ந்தது.

விடுதலை, கனவிலும் கற்பனை செய்யாத விடுதலை.

சுதந்திரக் காற்றை எத்தனையோ பிறவிகளுக்குப் பின் நான் சுவாசித்தேன்.

கரும்புள்ளியைக் கனல் விழுங்கியது.

கரும்புள்ளியைக் காணோம். வரதனையும் காணோம். உள்ளொளி மட்டும் வெள்ளொளியாக ஒளிர்ந்தது.

வெண்சுடர் மேலே, மேலே எழுந்தது.

ஆயிரம் பிறவிகளில் அடக்கிவைத்த எண்ணங்கள், உணர்வுகள், ஏமாற்றங்கள், செயல்கள், விருப்பு, வெறுப்புகள் அலை, அலையாக எழுந்தன.

ஒவ்வொன்றாய் உள்ளொளிக்கு உளமாரத் தந்தேன். அனைத்தையும்

அவ்வொளிக்குச் சமர்ப்பணம் செய்தேன்.

ஒளி வளர்ந்தது.

எண்ணற்ற முகமூடி மனித முகங்கள், அர்த்தமற்ற வெற்றி, தோல்விகள் அலை, அலையாக எழுந்தன.

ஒவ்வொன்றாய் உள்ளொளிக்கு உளமாரத் தந்தேன். அனைத்தையும் அவ்வொளிக்குச் சமர்ப்பணம் செய்தேன்.

ஒளி ஓங்கி வளர்ந்தது.

இஞ்சின் டிரைவர் நிலக்கரியை எடுத்தார். நெருப்பிற்குக் கொடுத்தார். பொறுமையாக, நிதானமாக தம் வேலையைத் தொடர்ந்து செய்தார்.

புரிந்துவிட்டது.

இப்போது எனக்குப் புரிந்துவிட்டது. உள்ளே வேலை செய்யவேண்டும் என்பதன் உண்மையான பொருள் நன்றாகப் புரிந்துவிட்டது.

கடந்தகாலப் படுகுழியிலிருந்து நிலக்கரியைத் தோண்டி எடுத்தேன். கரும்பொய்களைச் சுட்டெரிக்கும் நெருப்பிற்கு நிலக்கரியைக் கொடுத்தேன்.

குழி! கடந்தகால குழி! முடிவே இல்லாத மரணக் குழி!

என் வேலையைத் தொடர்ந்தேன்.

ஒளிச்சுடர் வளர்ந்தது.

ஓங்கி, ஓங்கி வளர்ந்தது.

மேலும், மேலும் வளர்ந்தது.

என் மௌன நிமிடங்கள், என்றோ கடந்து முடிந்துபோன மாதங்களையும், வருடங்களையும் விழுங்கின.

ஏதோ சத்தம் கேட்டது.

அதோ, அதோ எந்தக் காதுகளும் கேட்காத தேவ கானம் எனக்கு மட்டும் கேட்கிறதே!

பரவசமடைந்தேன்.

இதோ, இதோ, எந்தக் கண்களும் பார்க்காத பரந்த புல்வெளி எனக்கு மட்டும் புலனாகிறதே!

புளங்காகிதமடைந்தேன்.

எவரும் சுவைத்தறியாத இனிய பழச்சாறு என் நாவில் மட்டும் ஊறியது. இனி அமுதும், தேனும் எதற்கு?

பொய்ம்மையின் பள்ளத்தைத் தோண்டினேன். ஆழமாகத் தோண்டினேன். தோண்டிக்கொண்டே இருந்தேன்.

பாவங்களைத் தோண்டி எடுத்தேன். புண்ணியங்களைத் தோண்டி எடுத்தேன். எடுத்தவற்றை உண்மையின் உருவமான உள்ளொளிக்குக் கொடுத்தேன்.

இனி பாவமும் இல்லை, புண்ணியமும் இல்லை.

எந்த ஜென்மத்திலோ நான் மறதியால் மூடிய ஜன்னல் கதவொன்று படீரெனத் திறந்தது.

கரிய கடலில் பொம்மையாக மிதந்த தூரத்துக் கப்பலில் இருந்து துளி வெளிச்சம் கனவாகத் தெரிந்தது. தொலைதூர விண்மீன்போல் மங்கலாய்க் கண்சிமிட்டியது.

மூடியிருந்த கதவொன்று மின்னலெனத் திறந்தது. காலத்தளைகள் கணப்பொழுதில் தாமாகத் தகர்ந்தன.

வேறொரு கதவு வலப்புறம் விருட்டெனத் திறந்தது. வறண்ட என் பாலைவன இதயத்தில் வற்றாத நீரூற்று பீரிட்டுத் துள்ளி எழுந்தது.

இன்னொரு கதவு இடப்புறம் ஓசையின்றித் திறந்தது. தணலெனத் தகித்த என் தலையை பனியாய்க் குளிர்ந்த கைகள் மென்மையாக வருடின.

யார் கைகளோ? நானறியேன்.

இல்லை, இல்லை.

இந்தக் கைகளை எனக்குத் தெரியும்.

எப்போது தெரியும்? எப்படித் தெரியும்?

அது எனக்குத் தெரியாது.

கடல் போலிருட்டில் என்றோ, எதையோ தொலைத்துவிட்டு, எதைத் தொலைத்தேன் என்று தெரியாமல், யுக, யுகமாய் அதைத் தேடித் தவித்தலைந்த என் ஜீவனின் அந்தரங்க அலறலை யாரறிவார்?

மூச்சுக் காற்றுக்கு முட்டி, மோதி, ஏங்கி, சுருங்கிக்கிடந்த என்னிரு சுவாசப் பைகளில் சுத்தமான காற்று நிரம்பியது. சத்தமின்றி நிரம்பியது.

இனி நல்லதும் இல்லை. கெட்டதும் இல்லை. நானும் இல்லை. எவருமில்லை. ஒளி மட்டுமே உண்டு.

உள்ளொளியே பேரொளி.

பேரொளியே பொன்னொளி.

பொன்னொளியே என்னொளி.

குட்டையாகக் குழம்பிக்கிடந்த என் தலைமீது, குற்றால அருவியாய் குளிர்சாந்தி கொட்டியது.

நெஞ்சுக்கூட்டைக் குளிர்க்காற்று ஊடுருவ, ஜடவுடல் சிலிர்த்தது. நெஞ்சம் விம்மி பூரித்தது.

யாரது, யாரது, அணையாத தீபத்தை என்னுள் ஏற்றுவது? சாயாத சூரியன் எப்படி என் இதயத்தில் உதித்தது? எப்படி இந்த மாயம் இங்கே சாத்தியம்?

வரையற்ற வான்வெளியில், வெண்பறவை ஒன்று சத்தமின்றி சிறகடித்து, சுதந்திரமாய் சுற்றிச் சுற்றி பறந்தது.

காற்றே இல்லாத உயரமான மலைமுகட்டில் மெல்லிய புல்லொன்று லேசாக நடுங்கியது.

மெல்லத் துடித்து நிமிர்ந்தது.

பொன்னுலகம் என்னுள்ளே பூத்தது.

அது வேறோர் உலகம். வேறொரு காலம். அங்கே முப்பதே நிமிடங்களில் முன்னூறு ஜென்மங்கள் கழிந்தன.

தூரத்திலே ஒரு விடியல்.

விடியலின் விளிம்பிலே ஒரு தேவதை.

தேவதைக்குச் சிறகுகள்.

பொன்னாலான பன்னிரெண்டு சிறகுகள்.

சிறகுகள் மெல்ல அசைந்தன.

எங்கோ தொலைவில் யாரோ ஊதிய நீண்ட ஊதல் ஒலி தேய்ந்து மங்கலாய் கேட்டது. பின் நிசப்தம்.

நிசப்தத்தின் நடுவே சின்னதாய் ஓர் உலுக்கல்.

உலுக்கலின் முடிவில் சக்கரங்கள் சுழன்றன.

வண்டி மெல்ல நகரத் தொடங்கியது.

இதயத் தாமரையை நோக்கிய

என் இனிய பயணம்

ஒளி பொருந்திய பாதையில்

அன்று ஆரம்பமானது.

****

தொலைபேசி அழைத்தது. வழக்கமான தயக்கமின்றி, 'துணிவே துணை' என்று ரிசீவரை எடுத்தேன். நான் பேசுமுன், ஒரு மென்மையான குரல் சிநேகமாகக் கேட்டது. "வரதன் எப்படி இருக்கிறீர்கள்?''

ஆனந்தியின் இனிய குரல் புன்னகைத்தது. உடலெங்கும் உற்சாகம் பரவியது.

குரல் புன்னகைக்குமா? நம்பிக்கையில்லாவிட்டால் ஆனந்திக்குப் போன் செய்து பேசிப் பாருங்களேன்.

"ஆனந்தி, எத்தனை நாளாகிவிட்டது உன் குரலைக் கேட்டு! என் மீது ஏதேனும் கோபமா?'' என்று கேட்டேன்.

"ஏன், நீங்கள் போன் செய்திருக்கலாமே?'' என்று கேட்ட ஆனந்தி சிரித்தாள். இவள் எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பாள். சிரிக்காவிட்டால் புன்னகைப்பாள்.

ஆனந்தியை எனக்கு இருபது வருடங்களாகத் தெரியும். இறுதிவகுப்புவரை ஒரே பள்ளியில் படித்தோம். அவள் குடும்பத்தினர் அனைவருடனும் எனக்கு நல்ல பழக்கம். மத்தியவர்க்க மனிதனான எனக்கு பணக்கார ஆனந்தியின் பல வருட நட்பு பெரிய பாக்கியம்.

ஆனந்தியின் அப்பா பெரிய பணக்காரர். அவருக்கு ஏராளமான நிலபுலன்கள் உண்டு. நம் வீட்டில் நாலணா, எட்டணா என்று நாம் சாதாரணமாகப் பேசுவதுபோல், ஆனந்தியின் வீட்டில் ஒரு கோடி, இரண்டு கோடி என்று பேசிக்கொள்வார்கள்.

பங்காளிகள் பங்கு கேட்டு அவர்மீது பொய்யான வழக்கு போட்டிருப்பதால் சொத்துகள் முடங்கிக் கிடந்தன. ஆனால் வழக்கு விரைவில் இவருக்குச் சாதகமாகத் தீர்ப்பாகிவிடும் என்பது ஊருக்கே தெரியும்.

ஆனந்திக்குக் கிட்டத்தட்ட முப்பது வயதாகப் போகிறது. வழக்கு முடிந்ததும் திருமணம் செய்வார்கள் போலிருந்தது. யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறதோ! எனக்குக்கூட இன்னும் கல்யாணம் ஆகவில்லை.

சிறிது நேரம் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக்கொண்டோம். திடீரென ஆனந்தி கேட்டாள். "வரதன், உங்கள் கடை எப்படி நடக்கிறது?''

"என்ன சொல்வது? ஆனந்தியிடம் பொய் சொல்ல எனக்குப் பிடிக்கவில்லை. அதேசமயம் என் பிரச்சினைகளைப் பற்றி அழகான பெண்ணிடம் பேசவும் பிரியமில்லை. எனவே, எங்கோ படித்த புதுக்கவிதையை எடுத்து விட்டேன். "விழிகள் நட்சத்திரங்களை வருடினாலும், விரல்கள் என்னவோ ஜன்னல் கம்பிகளோடுதான்''.

"அப்படியா விஷயம்?'' என்று சிரித்த ஆனந்தி, "என்னிடம் ஒரு ராக்கெட் இருக்கிறது, வேண்டுமா?'' என்று கேட்டாள்.

ஆனந்தி எது சொன்னாலும் பொருளிருக்கும். "நீ என்ன சொல்கிறாய்?'' என்று கேட்டேன்.

"காலையில் மணிவாசகம் எனக்கு மருத்துவமனையில் இருந்து போன் செய்தார். ஆண் குழந்தை பிறந்திருக்கிறதாம். அதைச் சொல்ல போன் செய்தவர் உங்கள் பிரச்சினைகளைப் பற்றியும் சொன்னார். கவலைப்படாதீர்கள், எது எப்படிப் போனாலும் ஆனந்தியின் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு'' என்று கனிவுடன் சொன்னாள் ஆனந்தி.

"அது எனக்குத் தெரியாதா?'' என்றேன்.

"எனக்காக இவளாவது பரிந்து பேசுகிறாளே! உலகம் முழுமையாகக் கெட்டுப் போகவில்லை. இன்னும்கூட சில நல்லவர்கள் இருக்கிறார்கள்.

மணிவாசகத்தின் செயல் எனக்குப் பிடிக்கவேயில்லை.மணிவாசகத்தின்மீது பொல்லாத கோபம் வந்தது.

"என் அத்தை மகன் குமரன் சிறிது நேரத்திற்குமுன் வீட்டிற்கு வந்திருந்தார்'' என்றாள் ஆனந்தி.

பகீரென்றது. இதயம் துடிக்க மறந்தது. 'இவளுக்கு அத்தை மகன் இருக்கிறான்' என்ற விஷயம் அடிவயிற்றில் அமிலத்தை உருவாக்கியது.

"அவரது மனைவியின் வளைகாப்புக்காக அழைப்பு தர வந்திருந்தார்'' என்றாள் ஆனந்தி.

மீண்டும் எனக்கு உற்சாகம் வந்தது. 'குமரன், நீங்களும் உங்கள் மனைவியும் நீடூழி, நிம்மதியாக வாழ வேண்டும்' என்று மனமார வாழ்த்தினேன்.

"குமரன் பெரிய பணக்காரர்'' என்றாள் ஆனந்தி.

"உன்னை விடவா?'' என்று கேட்டுவிட்டேன்.

கலகலவென்று சிரித்தாள் ஆனந்தி. எனக்கு கர்னாடக சங்கீதம் தெரியாததால் அது என்ன ராகமென்று கண்டுபிடிக்க முடியவில்லை.

"குமரன் போன்ற நல்ல மனிதரை பார்க்கவே முடியாது. 'நாடு முன்னேற வேண்டும். நல்லவர்கள் வாழ வேண்டும்' என்று நினைப்பவர். நல்ல தொழிலும், நாணயமும் இருந்தால் கடன் தரத் தயாராக இருக்கிறார். அவர் இதைச் சொன்னதும் உங்கள் ஞாபகம்தான் வந்தது'' என்றாள் ஆனந்தி.

மழை பலமாகப் பெய்ய ஆரம்பித்தது. சடசடவென பெரிய துளிகள் ஜன்னல் கதவுகளில் பட்டுத் தெறித்தன. இசையுடன் இரைச்சல் எழுந்தது.

"ஆனந்தி, எனக்கு ஏராளமாகப் பணம் தேவை என்பது உண்மைதான். ஆனால் குமரன் கடனுக்கு ஈடு தர என்னிடம் சொத்து எதுவுமில்லை'' என்று கவலையுடன் கூறினேன். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடப் போகிறதே என்று ஏக்கமாக இருந்தது.

"குமரன் ஈடு கேட்க மாட்டார். அவருக்கு நம்பிக்கை, நாணயம் தான்முக்கியம். நான்தான் சொன்னேனே, அவர் ஒரு வித்தியாசமான மனிதர் என்று'' உறுதியாகச் சொன்னாள் ஆனந்தி.

ஒரு கணம் நிதானித்தேன். எதற்காக குமரன் இப்படிச் செய்கிறார்? ஆனந்திக்கு ஏதேனும் இரகசியமான உள்கமிஷன் இருக்குமா?

பலவித எண்ணங்கள் மின்னலெனத் தோன்றி மறைந்தன. ஆனந்தி நல்லவள்தான். ஆனால், தேவை என்று வந்தால் மனிதர்கள் மாறிவிடுகிறார்கள். நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பெண்ணை நம்பி மோசம் போய்விடக்கூடாது. 'அழிவது பெண்ணாலே' என்ற வரி நினைவுக்கு வந்தது. அதற்கு முந்திய வரியை மறந்துவிட்டேன்.

"ஒரு வேளை வட்டி அதிகம் கேட்பாரோ?'' என்று சந்தேகமாகக் கேட்டேன்.

"இல்லவே இல்லை வரதன். இவர் எல்லாப் பணத்தையும் பாங்க் டெபாசிட்களில் வைத்திருக்கிறார். வருடத்திற்கு 5%தான் வட்டி கிடைக்கிறது. பாங்க், வியாபாரிகளுக்கு 18% வட்டிக்கு கடன் தருகிறது. இவர் 10% வட்டிக்கு தரத் தயாராக இருக்கிறார். குமரனுக்கும் இலாபம், உங்களுக்கும் 8% வட்டி குறையும்'' என்று விளக்கமாகக் கூறினாள் ஆனந்தி.

'இருவருக்குமே இலாபம்' என்ற திட்டம் மிகவும் நல்ல யோசனையாகத் தோன்றியது.

"கேட்க நன்றாகத்தான் இருக்கிறது'' என்றேன்.

"வரதன், உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் 48% வட்டி கொடுப்பதாகச் சொன்னாலும் யாராவது உங்களுக்கு ஆயிரம் ரூபாயாவது கடன் கொடுப்பார்களா?'' பளிச்சென கேட்டாள் ஆனந்தி.

ஆனந்தியின் பவள வாயால் இப்படிக் கேட்க நேர்ந்தது மிகவும் அவமானமாக இருந்தது. 'எந்தச் சமயத்தில் எதை ஆண்களிடம் சொல்வது' என்று இந்தப் பெண்களுக்குப் புரிவதேயில்லை. ஏனோ, உண்மை எப்போதும் மனிதனின் சுயமரியாதையைத்தான் சீண்டுகிறது.

"உண்மைதான் ஆனந்தி. என் நிலைமை அப்படித்தான் ஆகிவிட்டது'' என்றேன். வாய்ப்பை நழுவவிடாமல் விரைவாகச் செயல்படுவதாக நினைத்துக்கொண்டு, "குமரன் எவ்வளவு கொடுப்பார்? எப்போது திருப்பித் தர வேண்டும்?'' என்று பரபரப்புடன் கேட்டேன்.

"உங்களுக்கு எவ்வளவு தேவை என்று எனக்குத் தெரியவில்லை. இருபது இலட்சம் கிடைத்தால் தேவலை என்று சொல்லி இருக்கிறேன்'' என்றாள் ஆனந்தி.

"ஆனந்தி, உன்னிடம் உண்மையைச் சொல்விடுகிறேன். எனக்குத் தேவை பத்து இலட்சம்தான். அதிகமாகப் பணமிருந்தால் வியாபாரத்தை விரிவுபடுத்தலாம்'' என்றேன்.

"நீங்கள் சீக்கிரமாகப் பிரச்சினையிலிருந்து விடுபட வேண்டும். அதுதான் எனக்குத் தேவை'' என்றாள் ஆனந்தி.

"நான் அடுத்து என்ன செய்ய வேண்டும்? குமரனை எங்கே, எப்போது பார்க்கலாம்? அவரது விலாசத்தைச் சொல், நான் வந்துவிடுகிறேன்'' என்று சொல்லிவிட்டு அவசரமாகப் பேனாவைத் தேடினேன்.

எப்போதுமே முக்கியமாகப் போன் பேசும்போதுதான் பேனா காணாமல் போய்விடுகிறது.

சிரித்தாள் ஆனந்தி. "உங்களை வரச் சொல்லவில்லை. என்னிடம் நீங்கள் கையெழுத்து போட வேண்டிய எல்லாப் பத்திரங்களையும் தருவதாகக் கூறினார். நீங்கள் கொஞ்சம் உற்சாகமானவுடன் அடுத்த வாரம் உங்களுக்கு அவரை அறிமுகப்படுத்துகிறேன்'' என்றாள் ஆனந்தி.

"வட்டி பற்றி ஏதாவது சொன்னாரா?'' என்று கேட்டேன்.

"வருடத்திற்கு 10% வட்டி. மூன்று மாதத்திற்கு ஒரு முறை வட்டி தர வேண்டும். எப்போது முடியுமோ, அப்போது அசலைத் திருப்பித் தந்தால் போதும்'' என்றாள் ஆனந்தி.

"நல்லது. அப்படியே செய்யலாம்'' என்றேன்.

"நீங்கள் இரண்டு மணிக்கு வீட்டில் இருப்பீர்களா?'' என்று கேட்டாள் ஆனந்தி.

நானெங்கே போகப் போகிறேன்? கழுதை கெட்டால் குட்டிச்சுவர்.

"ஆனந்தி, நீ எந்த நேரம் சொன்னாலும் நான் காத்துக்கொண்டு இருப்பேன்'' என்றேன்.

திடீரென, 'அடடா, ஆனந்திக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டோமே' என்ற நினைவு வந்தது.

"ஆனந்தி, நீ மிகவும் நல்லவள். உனக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை....'' என்று ஆரம்பித்தேன்.

"அடடா, போதுமே உங்கள் புகழாரம்'' என்று என் வாயை அடைத்த ஆனந்தி, "மத்தியானம் சாப்பாடு நானே சமைத்துக்கொண்டு வருகிறேன். பிரச்சினை வந்தால் நீங்கள் ஒழுங்காகச் சாப்பிடமாட்டீர்கள். இன்று நாம் இருவரும் சேர்ந்து சாப்பிடலாம்'' என்றாள் ஆனந்தி.

இது என்ன, கரும்பு தின்னக் கூலியா?

நான் பதில் சொல்லுமுன் போனை வைத்தாள் ஆனந்தி.

****

நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தேன். ஏதோ உறுத்தியது. என் கார் சாவி. சட்டென்று ஒரு திட்டம். இன்னும் ஒரு ஐந்து இலட்சம் கூட கடன் வாங்கினால், புதிய கார் வாங்கிவிடலாம்.

சிறிது நேர யோசனைக்குபின் என் அற்புதமான திட்டத்தைக் கைவிட்டேன். கார் சாவியை குட்டி டீப்பாய்மீது விட்டெறிந்தேன்.

எங்கோ ஒரு பறவை மெலிதாகக் குரல் கொடுத்தது.

ஆனந்தியிடம் நன்றியும், சந்தோஷமும் என் நெஞ்சு முழுவதும் நிரம்பி வழிந்தன. 'ஆனந்தி பற்றி ஒரு விநாடி தவறாக நினைத்தோமே' என்ற குற்ற உணர்வு ஏற்பட்டது. யோசித்துப் பார்த்தால் எனக்கு எப்போது நல்லது நடந்தாலும், அதில் ஆனந்தி சம்பந்தப்பட்டிருப்பது புரிந்தது.

யார் அந்தக் குமரன்? அவருக்கு ஏது இவ்வளவு பணம் அரசியல்வாதிகளின் பினாமியாக இருப்பாரோ? அவரோடு தொடர்பு வைத்துக்கொள்வது பாதுகாப்பானதா!

சந்தேகம், நம்பிக்கை, எதிர்பார்ப்பு, பயம் என பல வகையான உணர்வுகள் எனக்குள் புகுந்து கும்மாளம் போட்டன. ஏனோ, ஆனந்தியின் நல்லெண்ணத்தின்மீது அளவுகடந்த நம்பிக்கை சுரந்தது. அந்த நம்பிக்கையின் பலத்தின்முன் தவறான உணர்வுகள் வெகு நேரம் நிற்க முடியாமல் விலகி ஓடின.

குழம்பிக் குட்டையாக கிடந்த மனம் மெல்ல, மெல்ல மயங்கியது. தூக்கம் கண்களைத் தழுவியது. காலை நேரம் நழுவியது.

****

நான் கண் விழித்தபோது மணி இன்னும் இரண்டு ஆகவில்லை. ஆனால் எனக்கு பரபரப்பு வந்துவிட்டது.

"கடிகார முள் ஏன் இவ்வளவு மெதுவாகச் சுற்றுகிறது?' என்று பொறுமை இழந்தேன்.

சுத்தமாகக் குளித்தேன். "நன்றாக வாசனை வரட்டும்' என்று சோப்பை தாராளமாகச் செலவு செய்தேன்.

நீலநிற ஜீன்ஸும், சிவப்புநிற அரைக்கைச் சட்டையும் அணிந்துகொண்டு கண்ணாடியில் இருபதாவது தடவையாகப் பார்த்தேன். திருப்தியாக இருந்தது.

வீடு முழுவதும் ரோஸ் ஏர்-பிரஷ்னர் அதிகமாகவே தெளித்து விட்டேன். ஆனந்திக்கு ரோஜா நறுமணம் பிடிக்கும்.

சிதறிக்கிடந்த புத்தகங்களை எடுத்து தூசி தட்டி அடுக்கி வைத்தேன். ஆனந்திக்குச் சுத்தமும், ஒழுங்கும் பிடிக்கும்.

சாப்பாட்டு அறையையும், மேஜையையும் சுத்தப்படுத்தி, தட்டுகளையும், கோப்பைகளையும் மிக நேர்த்தியாக அடுக்கிவைத்தேன்.

என் வேலை முடிந்தது.

சுவர்க் கடிகாரம் இரண்டு முறை பலமாக அடித்தது. அழைப்பு மணி ஒரு முறை மென்மையாக ஒலித்தது.

கண்ணாடியில் என்னைக் கடைசியாக ஒரு முறை பார்த்துக்கொண்டேன். பரவாயில்லை, நன்றாகத்தான் இருந்தேன்.

கதவைத் திறந்தேன். பொற்சிலை புன்னகைத்தது.

ஆனந்திக்குக் கிட்டத்தட்ட முப்பது வயதானாலும், பார்வைக்குப் பத்தொன்பது என்றுதான் தோன்றும்.

அடர்த்தியான கரிய கூந்தலை நடுவகிடிட்டு, வாரி இருந்தாள். மெல்லிய விற்களின் கீழே இரு பட்டாம்பூச்சிகள் படபடத்தன. செழிப்பான கன்னங்களைச் சில நீர்த்துளிகள் அலங்கரித்தன. பவளப் பாறையின் பிளவிலே முத்துகள் பிரகாசித்தன. மலர்ந்த முகத்திலே எத்தனை ஒளி!

மழைத்துளிகள் பட்டு ஆங்காங்கே ஈரமாக இருந்த மஞ்சள்நிறச் சுரிதாரும், மின்னும் கண்ணாடி பதித்த கறுப்புநிறத் துப்பட்டாவும் மனதை மயக்கின.

கடவுளே! ஏன் சில பெண்கள் மட்டும் இத்தனை அழகாக இருக்கிறார்கள்? என் இதயம் படபடவெனத் துடித்தது.

"என்ன வரதன், எப்படி இருக்கிறீர்கள்?'' என்று ஆனந்தி மெல்லிய குரலில் கேட்டாள்.

வனிதையின் வண்ண வசிய வலையிலிருந்து சிறிது விடுபட்டேன்.

"காலையிலிருந்தே உன்னை எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டேன்'' என்றேன்.

"உண்மையைச் சொல்லுங்கள். சாப்பாட்டைத்தானே எதிர்பார்த்தீர்கள்?'' என்று சிரித்தாள் ஆனந்தி.

"இல்லவே இல்லை. உன்னைத்தான் எதிர்பார்த்தேன்'' என்று சொன்னேன். 'பணத்தைத்தான் எதிர்பார்த்தேன்' என்ற உண்மையை எப்படிச் சொல்வது?

ஆனந்திக்கு முகத்தில் மகிழ்ச்சி படர்ந்தது. "உங்களைப் பற்றி எனக்குத் தெரியாதா?'' என்றாள்.

"உள்ளே வா'', கதவை அகலமாகத் திறந்து, நன்றாக வழிவிட்டேன். அவள் வீட்டிற்குள் கால் வைத்தது என் இதயத்தில் வைத்ததுபோல் இன்பமாக இருந்தது.

அப்போது சிறிது பலமாகக் காற்று வீசியதில், அலைபாய்ந்த அவள் கூந்தல் என் முகத்தை சற்றே வருடியது.

'பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணமுண்டு' என்று இறையனார் பாடல்மூலம் ஏற்கனவே முத்தமிழ்ச்சங்கம் முடிவு செய்துவிட்டபடியால், ஆனந்தியின் கூந்தல் நறுமணம் பற்றி எனக்கு எந்த சந்தேகமும் எழவில்லை.

காதல் எண்ணங்களுக்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு, ஆர்வத்துடன் அவள் கைகளைப் பார்த்தேன்.

என்ன ஏமாற்றம்!

கையில் சிறு கைப்பையும், ஒரு பெரிய டிபன் கேரியரும் இருந்தன.

பத்திரங்களுக்கான அறிகுறியைக் காணோம்.

"ஒரு வேளை மழையில் காகிதம் நனைந்துவிடும்' என்று காரிலேயே வைத்துவிட்டாளோ!

அப்படித்தான் இருக்கும்.

சிறிய மேஜைமீது தன் அழகிய கைப்பையை வைத்தாள். எதுவும் பேசாமல் டிபன் கேரியரை எடுத்துக்கொண்டு, சாப்பிடும் அறைக்குச் சென்றாள். என் வீடு அவளுக்கு மிக நன்றாகத் தெரியும். எத்தனையோ முறை வந்திருக்கிறாள். ஆனாலும், இதுதான் முதல் முறைபோல் உணர்ந்தேன்.

அவளைப் பின்தொடர்ந்தேன், "பாவாடை, தாவணியில் பார்த்த உருவமா?'' என்று மெல்ல பாடினேன்.

"ஏன், இப்போது சுரிதாரில் அழகாக இல்லையா?'' என்று பொய்க்கோபம் காட்டினாள்.

"நீ எப்போதுமே அழகுதான். நீ போட்டதால்தான் சுரிதாரே அழகாக இருக்கிறது'' என்றேன்.

அவள் முகம் நாணத்தால் மலர்ந்தது. "போதுமே, உங்கள் புகழாரம்'' என்றாள்.

அவளது அலைபாயும் கூந்தலில் ஒற்றை ரோஜாவைச் செருகி, என் காதலைக் கூற மனம் துடித்தது. 'கடன்காரா, உனக்குக் காதல் ஒரு கேடா?' என்று மனசாட்சி இடித்தது.

டிபன் கேரியரை மேஜைமீது வைத்து நிதானமாகப் பிரித்தாள். விதவிதமான உணவு வகைகள். "இவ்வளவா! விருந்தே சமைத்திருக்கிறாய்'' என்றேன்.

"இது என்ன பிரமாதம். இதுகூட இல்லாமல் எப்படி சாப்பிடுவது?'' என்றாள் ஆனந்தி.

"இவ்வளவும் நீயாகவே செய்தாயா?'' என்று கேட்டேன்.

"ஆமாம். என் கையாலே உங்களுக்கு சமைத்துபோட வேண்டும் என்று எத்தனையோ நாள் ஆசை. இன்றுதான் வாய்ப்பு கிடைத்தது'' என்றாள் ஆனந்தி.

ஒரு வேளை என்னைக் காதலிக்கிறாளோ?

எங்கே பத்திரங்கள்?

ஒரு வேளை வேடிக்கையாக ஏமாற்றினாளோ? இது ஏப்ரல் மாதம்கூட இல்லையே? இருக்கட்டும், அப்படி ஏதேனும் வேடிக்கை செய்திருந்தால், இன்றோடு இவள் உறவை முறித்துக்கொள்ள வேண்டியதுதான்.

சுத்தமான மேஜைமீது பீங்கான் தட்டுகளும், கோப்பைகளும் ஒழுங்காக இருந்ததைப் பார்த்துவிட்டு, "அட, இதென்ன அதிசயம்'' என்று ஆச்சரியப்பட்டாள் ஆனந்தி.

அவளுக்காக நான் இதை இவ்வளவு கவனமாகச் செய்திருக்கிறேன் என்பதில் அம்மணிக்கு அலாதி இன்பம். கவனத்துடன் செய்யும் சின்னச் சின்ன செயல்கள் மனித வாழ்க்கைக்கு எத்தனை மகிழ்ச்சியும், மனநிறைவையும், புதிய அர்த்தத்தையும் தருகின்றன!

பரிமாற ஆரம்பித்தாள் ஆனந்தி. நான் உதவி என்ற பெயரில் உபத்திரவம் செய்ய முயன்றேன்.

"நான் பார்த்துக்கொள்கிறேன்'' என்றாள் ஆனந்தி.

இருவரும் சாப்பிட ஆரம்பித்தோம். ஆனந்தி ஏதேதோ விஷயங்களைப் பற்றிக் கலகலவெனப் பேசினாள்; சிரித்தாள். எனக்கு எதுவுமே மனதில் பதியவில்லை. பணம் மட்டுமே என் மனதில் இருந்தது.

ஆனாலும் பேசினேன், சிரித்தேன், நடித்தேன்.

என் நடிப்பைப் பார்த்திருந்தால், செவாலியே சிவாஜி கணேசன் வெட்கப்பட்டு, 'துண்டைக் காணோம், துணியைக் காணோம்' என்று ஓட்டம் பிடித்திருப்பார்.

சாப்பாடு மிகவும் அருமையாக இருந்தது. ஒரு பெண் அன்புடன் சமைக்கும் உணவின் சுவையே அலாதிதான்.

சாப்பாடு முடிந்ததும் இருவரும் பாத்திரங்களைக் கழுவி சுத்தம் செய்தோம்.

ஆனந்தி தன் கைக்குட்டையால் உதடுகளை ஒற்றி எடுத்தாள். அடடா, அடடா, கைக்குட்டையின் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம்!

ஹாலுக்கு வந்த ஆனந்தி நாற்காலியில் வசதியாக உட்கார்ந்தாள். அவள் எதிரே உட்கார்ந்தேன்.

கடிகாரத்தைப் பார்த்த ஆனந்தி, "உங்கள் அருகில் இருந்தால் நேரம் போவதே தெரியவில்லை'' என்றாள்.

"உன்னைப் பற்றி நினைத்தாலே போதும், எனக்கு நேரம் போவது தெரியாது'' என்று கூறினேன்.

மீண்டும் நாணத்தால் மலர்ந்தாள் ஆனந்தி.

எல்லாம் சரிதான், பணம் என்ன ஆயிற்று? அதைப்பற்றி மட்டும் ஏன் பேச மறுக்கிறாள்?

ஒரு வேளை குமரன் மறுத்துவிட்டாரோ?

பணத்தைப் பற்றி நானே பேச்சை ஆரம்பிக்க கஷ்டமாக இருந்தது. ஆனால், பேசித்தான் ஆகவேண்டும். எவ்வளவு நேரம்தான் பொறுப்பது? இனி பொறுப்பதில்லை. வரதா, பொறுத்தது போதும். பொங்கி எழு.

"வரதன், நான் இன்று மதியம் ஒரு மணிக்கு குமரனின் அலுவலகத்துக்குச் சென்றேன்'' என்று ஆரம்பித்தாள் ஆனந்தி.

நல்லவேளை, அவளே பேச்சை ஆரம்பித்துவிட்டாள். நன்றி, ஆண்டவா நன்றி!

"குமரன் டெல்லியில் ஒரு வெளிநாட்டு பாங்க்கில் கடன் அதிகாரியாக வேலையில் இருந்தார். கடன் கேட்பவர், "நல்லவர், நாட்டுக்கு உபயோகமான திட்டம் தருபவர்' என்று தோன்றினால் தைரியமாகக் கடன் கொடுத்துவிடுவார். இதனால் இவருக்குப் பல பிரச்சினைகள். போன வருடம் இவர் வேலையே போய்விட்டது'' என்றாள் ஆனந்தி.

"பாங்க் என்றால் பல சட்டதிட்டங்கள் இருக்கும். அதை மீறினால் எப்படி வேலையில் இருக்க முடியும்?'', நான் வங்கிக்கு ஆதரவாகப் பேசினேன்.

நுனிநாக்கால் மெல்லிய உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டாள் ஆனந்தி. என் உதடுகள் வறண்டன.

"ஆனால், குமரனுக்கு அதிர்ஷ்டம் அதிகம். எங்கள் பெரிய மாமாவுக்கு வாரிசு இல்லாததால் போன வருடம் இறந்துபோவதற்கு முன் எல்லாச் சொத்துகளையும் குமரனுக்கு எழுதிவைத்துவிட்டார்! குறைந்தது இருபது கோடி தேறும்'' என்றாள் ஆனந்தி.

"பெரிய அதிர்ஷ்டம்தான்'', என்றேன்.

"எனக்கு இப்படி ஒரு வாரிசில்லாத பணக்கார மாமா இல்லாமல் போய்விட்டாரே' என்று மிகவும் வருத்தமாக இருந்தது.

"எல்லாப் பணமும் பாங்க் டெபாசிட்டில் இருக்கிறது. எந்த வில்லங்கமும் இல்லை. அதனால் அந்த பாங்கில் செய்ய முடியாததை குமரன் தானே செய்கிறார்'' என்றாள் ஆனந்தி.

"குமரன் என்ன சொன்னார்?'' என்று கேட்டேன்.

"காலையில் "உடனே பணம் தருகிறேன்' என்றுதான் சொன்னார். நடுவில் என்ன நடந்ததோ, தெரியவில்லை. உங்களைப் பற்றி பல கேள்விகள் கேட்டார். அவர் கேட்டதைப் பார்த்தால், 'பணம் தருவாரோ' என்று சந்தேகமாக இருந்தது'' என்றாள் ஆனந்தி.

மீண்டும் என் மனம் கவலைப்பட ஆரம்பித்தது. "என்ன செய்வது ஆனந்தி,விதியை யாரால் மாற்ற முடியும்?'' என்றேன்.

ஆனந்தி புன்னகைத்தாள். "உங்களுக்கு இந்தச் சமயத்தில் உதவாவிட்டால் எப்படி? அதனால் அப்பாவிடம் அங்கிருந்தே செல்போனில் பேசினேன். அப்பா உங்களுக்கு உத்தரவாதம் தருவதாகக் குமரனிடம் சொன்னார்''.

மீண்டும் நம்பிக்கை துளிர்த்தது.

"அப்புறம் என்ன ஆயிற்று?'' ஆர்வமாகக் கேட்டேன்.

"அப்பா உத்தரவாதம் தந்து, என் பெயரில் கடன் வாங்குவதானால், "ஐம்பது இலட்சம்வரை தரத் தயார்'' என்று சொன்னார் குமரன். நீங்கள் கடையை விரிவுபடுத்த உதவியாக இருக்கும் என்பதால் அப்பாவிடம் சொல்லிவிட்டு, நானே கையெழுத்து போட்டு, உடனே ஐம்பது இலட்சம் ரூபாய் வாங்கிவிட்டேன்'' என்றாள் ஆனந்தி.

இது என்ன கனவா, நனவா? இப்படியும் நடக்குமா?

"ஆனந்தி, நானே நொந்துபோயிருக்கிறேன். நீ என்னைக் கேலி செய்யவில்லையே'' என்றேன்.

புன்னகைத்தாள் ஆனந்தி. "எங்கள் இருவருக்கும் ஒரே பாங்கில்தான் கணக்கு என்பதால் அவர் பணத்தை உடனே என் கணக்கிற்கு மாற்ற முடிந்தது. நீங்கள் எந்தப் பத்திரத்திலும் கையெழுத்து போட வேண்டாம். பணத்தை மட்டும் வாங்கிக்கொள்ளுங்கள்'' என்ற ஆனந்தி, தன் கைப்பையிலிருந்து காசோலை புத்தகத்தை எடுத்தாள்.

செக் எழுத ஆரம்பித்தவள், ஒரு விநாடி தயங்கினாள். "எந்த பெயருக்கு செக் எழுதட்டும்? நீங்கள் எண் கணிதப்படி பெயரைமாற்றி விட்டீர்களாமே!'' என்று கேட்டாள் ஆனந்தி.

எனக்கு வெட்கமாக இருந்தது.

"அதெல்லாம் ஒன்றுமில்லை. இப்போது அதே பழைய பெயர். ஏதோ குழப்பத்தில் அப்படிச் செய்துவிட்டேன்'' என்றேன்.

இதையெல்லாம்கூடவா மணிவாசகம் ஆனந்தியிடம் சொல்லியிருக்கிறார்!

மல்லிகைப்பூ கையெழுத்தில் ஐம்பது இலட்சத்திற்கு என் பெயருக்குச் செக் எழுதினாள் ஆனந்தி. சத்தமில்லாமல் அந்த செக்கைக் கிழித்து என் கையில் கொடுத்தாள்.

நான் சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவன். என் அப்பா அரசாங்க வேலையிலிருந்து ஓய்வு பெற்று இறந்தவர். இவ்வளவு பெரிய தொகையை இதுவரை என் வாழ்க்கையில் நான் பார்த்ததேயில்லை.எனக்கு எதுவும் புரியவில்லை. "என்ன பேசுவது, எப்படிப் பேசுவது' என்றே விளங்கவில்லை.

"ஆனந்தி, உன் பெருந்தன்மை.....'' என்று தடுமாறினேன்.

"அடடா, போதுமே உங்கள் புகழாரம்'' என்று சிரித்தாள் ஆனந்தி. இவள் எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பாள். சிரிக்காவிட்டால் புன்னகைப்பாள்.

என் கைகளை மிக மென்மையாகப் பற்றி, ஆதரவாக வருடினாள் ஆனந்தி.

"வரதன், கவலையை விடுங்கள். இனி, உங்களுக்கு நல்லது மட்டுமேதான் நடக்கும்'' என்று அன்பு ததும்பும் வார்த்தைகளைக் கூறி விடைபெற்றாள் அருமை ஆனந்தி.

****

ழை நின்றுவிட்டது. மழைத்துளிகள் உயரமான மரங்களின் ஈரமான இலைகளிலிருந்தும் நனைந்துபோன ஜன்னல் கதவுகளிலிருந்தும் சொட்டின.

வேற்று மனிதரை அம்மாவின் பின்னாலிருந்து எட்டிப்பார்க்கும் குட்டிப்பையனைப்போல சூரியன் மேகத்திற்கு பின்னாலிருந்து அவ்வப்போது எட்டிப்பார்த்தான்.

வரையில்லா நீலவானத்தில் சிதறிக்கிடந்த வெண்பஞ்சு மேகங்கள் திட்டுதிட்டாகத் தெரிந்தன.

ஜன்னலில் இருந்த மழைத்துளிகள் சூரிய ஒளியில் சின்னச்சின்ன வைரக்கற்களாக ஜொலித்தன.

தென்றல் என்னை வருடியது.

நெஞ்சம் நெகிழ்ந்தது.

கண்களில் நீர் துளிர்த்தது.

சமர்ப்பணத்தின் சக்தி சத்தியமென சந்தேகமறப் புரிந்தது.

****

முற்றும்


 


 


 


 

 

 

 

 

 

 

 



book | by Dr. Radut