Skip to Content

07. மனமாற்றம்

"அன்னை இலக்கியம்"

மனமாற்றம்

                                                                   (சென்ற இதழின் தொடர்ச்சி....) இல. சுந்தரி

'குட்மார்னிங் பிரியா'என்று கோரஸாக எல்லோரும் ஒருமித்த குரல் கூறினர்.

'குட்மார்னிங்'என்று மகிழ்வுடன் கூறிக்கொண்டு இடத்திற்கு வந்து,புத்தகங்களை டேபிள் அறைக்குள் வைத்துவிட்டு, புதிய பேனாவொன்றைத் தயங்கித் தயங்கி எடுத்தாள்.

'ஆஷா என்ன சொல்வாளோ'என்று உள்ளூரக் கலக்கத்துடன் இருந்தாள் பிரியா.

"அடப் புதுப்பேனாவா? அழகாயிருக்கிறதே. நான் எழுதிப் பார்க்கலாமா?'' என்று ஆர்வமாய் கேட்டாள் ஆஷா.

இந்த ஆர்வத்தைப் பல முறை ஆஷாவிடம் எதிர்பார்த்து, ஆனால் அவள் குத்தல் பேச்சால் நைந்து போயிருக்கும் பிரியாவுக்கு இதமாகவும்,வியப்பாகவுமிருந்தது.

"என்ன பிரியா? அதிசயமாய் பார்க்கிறாய்? பொய் சொல்கிறேன் என்றா? இல்லை. மெய்யாகத்தான் சொல்கிறேன். இதுவரை வக்கிரமாய்ப் பேசி உன்னைப் புண்படுத்தியதற்கெல்லாம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்''என்று அவள் கையைப் பிடித்துக்கொண்டு கூறினாள் ஆஷா.

மெல்லியமனம் கொண்ட பிரியா நெகிழ்ந்துபோனாள். "ஆஷா! உன் திறமைக்கும், அறிவுக்கும் இந்த குணம்தான் பொருத்தமாயிருக்கிறது'' என்றாள் பிரியா.

எந்தப் பெருமிதவுணர்வுமில்லாது இயல்பாய் இருந்தாள் ஆஷா.

அதற்குள் பிரேயர் பெல் அடிக்கவே, அந்த வகுப்பு, பிரார்த்தனை கூடத்தை நோக்கி வரிசையாய்ச் சென்றது. ஆஷாவின் அமைதி எல்லோர் கவனத்தையும் ஈர்த்தது.

முதல் வகுப்பு ஆங்கிலப் பாடம். உஷா மிஸ் வந்ததும், வகுப்பு ஒரே அமைதியுடன் எழுந்து வணக்கம் செலுத்தியது. ஆஷாவின் குறும்பு, மாணவியர் சலசலப்பு ஏதுமில்லை. மாதவியும், பிரியாவும் மட்டுமே எப்போதும் அமைதிகாப்பர். இன்று வகுப்பே அமைதிகாத்தது. உஷா மிஸ்ஸுக்கு மிகவும் மகிழ்ச்சி. ஏனென்றால் வகுப்பில் குறும்புக்கார மாணவர்கள் ஆசிரியர்களுக்குப் பெருந்தலைவலியாய் இருப்பர். தன் அறிவு, அகம்பாவம் இவற்றால் ஆஷா செய்யும் லூட்டி சாதுவான ஆசிரியர்களுக்குப் பெருந்தொல்லை தரும். கேள்வி கேட்டால் எதிர்க் கேள்வி கேட்டு மடக்குவாள். இன்று அமைதியாய் பதில் சொல்கிறாள், பணிவாகவும் நடக்கிறாள்.

ஆஷாவின் திறமை இதுவரை வேண்டாத செயல்களில் விரயமாகிக் கொண்டிருந்தது. இப்போது அவள் திறமை கூடியது. வகுப்புத் தலைவியான அவள் அடக்கம், பணிவு இவற்றை மேற்கொண்டதால் அவள் வகுப்பு அவளைப் பின்பற்றியது. மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் தவறாது தியானத்திற்குச் சென்றுவிடுவாள். அவள் வளர்ச்சிக்கு அங்கு நிறைய செய்தி கிடைத்தது. அங்குப் பேசப்பட்ட அனுபவங்கள், சிறப்புரைகள், அன்னை முறைகள் அவளைப் பெரிதும் மாற்றியது.

"ஆஷா! நீ இப்போதெல்லாம் வித்தியாசமாய் மாறிவிட்டாய். பழைய குறும்பு, குத்தல்பேச்சு எதுவுமில்லை. எப்படி மாறினாய் என்ற இரகசியத்தைச் சொன்னால் நாங்களும் பின்பற்றுவோமில்லையா?'' என்றாள் பானு.

"அதுவா? குமாரி மிஸ் ஒரு மந்திரம் போட்டார்கள். அதில் மாறிவிட்டேன்'' என்றாள் சிரித்துக்கொண்டே.

"அட மந்திரமா! என்ன மந்திரம் அது?''என்றாள் லீலா.

"அதை இவ்வளவு சீக்கிரம் சொல்ல முடியாது. அதைத் தெரிந்துகொள்ள மிகுந்த பக்தி, பணிவு எல்லாம் வேண்டும்''என்றாள் ஆஷா புன்னகையுடன்.

எல்லோரும் எழுந்து நின்று கையைக் கட்டி, வாயைப்பொத்தி, குனிந்து அவள் முன் நின்றார்கள்.

"போலிக்கெல்லாம் மந்திரம் பலிக்காது. உண்மைக்குத்தான் பலிக்கும்'' என்றாள் ஆஷா.

அந்த நேரம் குமாரிமிஸ் வரவே, சட்டென்று கலைந்து அவரவர் இடத்தில் போய் நின்று அமைதியாக வணக்கம் தெரிவித்தனர்.

நடந்ததைக் கவனித்துக் கொண்டே வந்த குமாரி மிஸ்ஸுக்கு அவர்கள் செயல் சிரிப்பூட்டியது.

மிஸ் 'சிட்டவுன்' சொன்னவுடன் உட்கார்ந்தார்கள்.

"என்ன, ஏதோ மந்திரம், தந்திரம் என்றீர்கள்? வாய்பொத்தி நின்றீர்கள்? ஏதாவது மந்திரோபதேசமா?''என்று சிரித்துக்கொண்டே கேட்டார் குமாரி.

எல்லோரும் தங்கள் குறும்பை எண்ணி வெட்கமாய்ச் சிரித்தனர்.

பாடத்திலேயே கவனமாகயிருக்கும் குமாரி இன்று கண்டிப்பைத் தளர்த்தி பரிவுடன் பேசினார்.

"கமான், ஆஷா! என்ன மந்திரம்?'' என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.

ஆஷா பணிவுடன் எழுந்து மெல்லக் கூறினாள். "என் மாற்றத்திற்கு என்ன காரணம் என்று கேட்டார்கள். நீங்கள் போட்ட மந்திரத்தில் மாறிவிட்டேன்என்று கூறினேன். அது என்ன மந்திரம் என்று கேட்டார்கள். அதைத் தெரிந்துகொள்ள பக்தியும், பணிவும் வேண்டும் என்றேன். அதற்காக அப்படிச் செய்தார்கள்''என்றாள்.

"எல்லோரும் பக்தியாய்ப் பணிவுடன் கேட்டதால் மந்திரத்தைச் சொல்லிவிடுவோமா?'' என்று குமாரியும் அவர்கள் மகிழ்ச்சியில் சேர்ந்து கொள்ளவே, மாணவிகள் உற்சாகமானார்கள்.

"ஆமாம் மிஸ். சொல்லுங்கள் மிஸ்'' என்றனர்.

"சரி. மந்திரத்தை மட்டும் இப்போது சொல்கிறேன். அதன் பொருளை வகுப்பு இல்லாத நேரத்தில் சொல்கிறேன். சம்மதமா?'' என்றார்.

"சம்மதம் மிஸ். சொல்லுங்கள் மிஸ்'' என்றனர்.

"தமிழில் 'ஸ்ரீ அன்னை', ஆங்கிலத்தில் 'தி மதர்', இந்தியில் "மா'. மற்றவை பிறகு. நல்ல பிள்ளைகள் அல்லவா? பாடம் பார்க்கலாம். மாதவி! இன்று என்ன படிக்கவேண்டும்'' என்று வழக்கமான தோரணைக்கு மாறினார் குமாரி.

வகுப்பு முடிந்தவுடன், மாணவிகள் "மிஸ், மறக்காமல் மந்திரத்தின் பொருளைச் சொல்ல வேண்டும்'' என்றனர்.

"நீங்கள் இவ்வளவு ஆர்வம் காட்டும்போது சொல்லாமல் இருப்பேனா? கட்டாயம் சொல்கிறேன். மாரல் பீரியடில் வந்து கூப்பிடுங்கள்'' என்று கூறிச் சென்றார் மிஸ்.

எல்லோரும் ஆஷாவைச் சூழ்ந்துகொண்டனர். "என்ன ஆஷா? குமாரி மிஸ், 'தி மதர்' என்றார்களே, அது என்ன மந்திரம் என்று சொல்லேன்'' என்றனர்.

"மிஸ் தான் மாரல் பீரியடில் சொல்வதாய்ச் சொன்னார்களே'' என்றாள் ஆஷா.

"மந்திரத்தின் விளக்கத்தை மிஸ் சொல்வதாய்ச் சொன்னார்கள். நீ மந்திரம் பெற்ற விபரத்தை, சொல்லக்கூடாதா?'' என்றனர் அனைவரும்.

ஆஷா மாதவியைப் பார்த்துப் புன்னகை செய்தாள். மாதவி மெல்லச் சிரித்து வழக்கம்போல் கணக்குப் போடுவதில் ஈடுபட்டுவிட்டாள்.

உடனே மாணவிகள், "நீ மாதவியைப் பார்த்துச் சிரிப்பதைப் பார்த்தால், இந்த மந்திர உபதேசம் மாதவிக்கும் நிகழ்ந்திருக்கும்போல் இருக்கிறதே?'' என்றனர்.

"ஆமாம், உங்கள் யூகம் சரிதான். மாதவியும் அந்த மந்திரோபதேசம் பெற்றவள்தான். ஆனால், இங்கு நம்மூருக்கு வருமுன்பே அவள் பெற்றோரிடமே இதைப் பெற்றிருக்கிறாள்''என்றாள் ஆஷா.

அடுத்த பீரியட் மிஸ்ஸூம் வந்தாயிற்று. "என்ன ஒரே மந்திரோபதேசமாயிருக்கிறது'' என்று இவரும் கேலி செய்தார். ஆனால், அதற்குமேல் எதுவும் கேட்காமல் வகுப்புத் தொடங்கவே பேச்சு நின்றது. வகுப்பு முடிந்து ஓவர்பெல் அடித்தவுடன் எல்லோரும் ஆஷாவைச் சூழ்ந்து கொண்டனர்.

"சரி, இன்றே தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் இன்று மாலை 6.45 மணிக்கு பிள்ளையார் கோயில் தெரு, 7ஆம் எண் வீட்டிற்கு வந்துவிடுங்கள். ஆனால், வீட்டில் சொல்லாமல் வரக்கூடாது. 7.30 மணிக்குத்தான் வீடு திரும்பமுடியும்''என்றாள் ஆஷா. ஆர்வத்துடன் கலைந்தனர்.

நிஜமாகவே அன்று 6.45 மணிக்கு பாதி வகுப்பு தியானமையத்தில் கூடிவிட்டது. குமாரி மிஸ்ஸூடன் ஆஷா வந்தாள். குமாரிக்கு ஒரே வியப்பு. 11A, பெரும்பாலும் அங்கிருந்தது. சரியென்று எல்லோரையும் அழைத்துப் போனார். அமைதியும், தெய்வீகமும் கமழ்ந்த அந்தச் சூழலை யாரே விரும்பாதார்? எல்லோரும் மகிழ்வுடன் சென்று நமஸ்கரித்து அமர்ந்தனர். தியானம் முடிந்து 7.30 மணிக்கு ஆளுக்கொரு மலர்ப்பிரசாதத்துடன் வெளியே வந்தனர்.

"இந்த இடம் ஏதோ தேவலோகம்போல் அத்தனை அழகாயும், அமைதியுமாய் இருக்கிறதே, மிஸ்!''என்றனர் மாணவிகள்.

"சரி, எல்லோரும் கவனமாய் வீடு திரும்பவேண்டும்''என்று சொல்லிவிட்டு ஆஷாவுடன் மிஸ் சென்றார்.

மறுநாள் வகுப்பில் எல்லோருக்கும் அதே பேச்சு. மாதவி அன்னையைப் பற்றி புத்தகம் ஒன்று எடுத்துவந்திருந்தாள். அதை வகுப்பில் ஓய்வு நேரங்களில் படிப்பதுஎன்று முடிவு செய்தனர். ஆஷா வகுப்புத் தலைவி என்பதால் மேஜை டிராயரில் முக்கியமான புத்தகம், நோட்புக்ஸ், டஸ்டர், சாக்பீஸ் எல்லாவற்றையும் வைத்துப் பூட்டி சாவியைத் தன்னிடம் வைத்திருப்பாள். இப்புத்தகத்தை மேஜைடிராயரில் வைப்பது என்றும், காலையில் வந்து எடுத்து ஓய்வுநேரங்களில் படிப்பது என்றும் முடிவாயிற்று. அதற்குள் பானு, "ஆஷா! நான் ஒரு யோசனைசொல்லவா?''என்றாள்.

"என்ன யோசனை? சொல்'' என்றாள் ஆஷா.

"லஷர்டைம்மில் பாடம் எழுத நேரம் வேண்டும். யாராவது பார்த்தால் ஏதாவது சொல்லக்கூடும். அதனால், காலை 9 மணிக்கு ஸ்பெஷல் கிளாஸ் டைம்மில் வருவோம். நமக்குத்தான் ஒரு மிஸ்ஸூம் கிளாஸ் வைக்கவில்லையே. அந்த நேரம் என்றால் யாரும் இருக்கமாட்டார்கள்''என்றாள்.

"சரி, பிரேயர் பெல் 9.50 மணிக்கு. 9 மணியிலிருந்து 9.45 மணிவரை படிக்கலாம்''என்றனர்.

மறுநாள் காலை 9 மணிக்குச் சிலரைத் தவிர எல்லோரும் கூடிவிட்டனர். மைதிலி, ராகினி போன்ற குரல்வளமுள்ள மாணவியர் மாற்றி மாற்றிப் படித்தனர். அனைவரும் மோனமாக அமர்ந்து கவனித்தனர். கேட்கக் கேட்க சுவாரஸ்யமாயிருந்தது. 9.50க்கு மணியடித்ததும் புத்தகத்தை டிராயருக்குள் வைத்துப் பூட்டிவிட்டு பிரேயர் ஹாலுக்குச் சென்றனர். 11A வகுப்பின் அமைதியும், ஒழுங்கும் தனித்துத் தெரிந்தது. தொடர்ந்து படித்து மூன்று நாட்களில் அப்புத்தகம் முடிக்கப்பட்டது. மறுநாள் முதல் அடுத்த புத்தகம் கொண்டுவந்தாள். இந்த வகுப்பில் ஆசிரியர் யாருமில்லாமல் இவர்களே வந்து படிப்பதைக் கவனித்த சுத்தம் செய்யும் பணியாளர் இதை பிரின்சிபாலிடம் தெரிவித்தார்.

வழக்கம்போல் காலை 9 மணிக்கு 11A வகுப்பில் மாணவிகள் அமைதியாய் உட்கார்ந்திருக்க, மைதிலி நிறுத்தி அழகாய்ப் படித்தாள். அறைவாயிலில் பிரின்சி வந்து நிற்பதுகூட உணராமல் எல்லோரும் கவனமாய்க் கேட்டுக்கொண்டிருந்தனர்.

"அன்னையின் பிறந்ததினம் அனைத்து ஜீவராசிகளின் பிறந்ததினம்'' என்ற வரியைப் படிக்கும்போது பிரின்சிபால் 'கேள்ஸ்' (girls) என்றார்.சட்டென்று மாணவிகள் விழித்துக் கொண்டதுபோல் திணறி, 'குட்மார்னிங் மேடம்' என்று கூறிமுடித்தனர்.

"எந்த அன்னையின் பிறந்ததினம் பற்றிப் படிக்கிறீர்கள்? மைதிலியின் (படித்துக்கொண்டிருந்த பெண்) அன்னையா? ஆஷாவின் அன்னையா?'' என்றார். கோபமா, கேலியா, அன்பா என்று புரிந்துகொள்ளமுடியாத தோரணையில் கேட்டார்.

"வீட்டில் ஸ்பெஷல்கிளாஸ் என்று சொல்லிவிட்டு இங்குவந்து கதை புத்தகம் படிக்கிறீர்களா?'' என்றார் மேலும்.

"இல்லை மிஸ். கதை புத்தகமில்லை மிஸ்!''என்றாள் ஆஷா மிகப் பணிவாக.

"எங்கே, அந்தப் புத்தகத்தைக் கொண்டுவா''என்றார்.

மைதிலியிடம் புத்தகத்தை வாங்கி, பிரின்சிபாலிடம் ஆஷா புத்தகத்தைக் கொடுத்தாள்.

வாங்கிப் பார்த்தார். "அன்னையின் அருள்'' என்றிருந்தது. "நீங்கள் யாவரும் நாளை உங்கள் பேரண்ட்ஸூடன் வரவேண்டும்'' என்று கூறிவிட்டுப் போய்விட்டார். மாணவிகள் சிறிதுநேரம் ஒன்றும் புரியாமல் நின்றனர்.

பள்ளி தொடங்கி வகுப்புகள் நடக்க ஆரம்பித்தன. குமாரி மிஸ்ஸை

பிரின்சிபால் கூப்பிட்டனுப்பினார்.

"எஸ் மேடம்''என்று குமாரிமிஸ் வந்தார்.

"குமாரி! நீங்கள் 11A வகுப்புக்குப் பாடம் எடுக்கிறீர்கள் அல்லவா?'' என்றார்.

"ஆமாம் மேடம்''என்றார் குமாரி.

"அந்த வகுப்பில் ஆஷா என்றொரு பெண். அந்தப் பெண் எப்படி நடந்து கொள்கிறாள்?''என்றார்.

"சென்ற தேர்வுவரை அந்தப் பிரச்சினை இருந்திருக்கும். இப்போது அவள் மிகவும் மாறிவிட்டாள். எனக்கே மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. அடுத்த ஆண்டு +2வில் நம் ஸ்கூல் அவார்டு வாங்கும் மேடம். அந்தக் கிளாஸில் இரண்டு வைரங்கள் இருக்கின்றன''என்றார் குமாரி.

"அப்படியா? யார் அந்த இரண்டு பேர்?''என்றார் பிரின்சி.

"ஆஷாவும், மாதவியும்தான் மேடம்'' என்றார் மிஸ்.

"மாதவி இந்த ஆண்டு புதிதாய்ச் சேர்ந்த பெண்ணல்லவா?''என்றார் நினைவுகூர்ந்து.

"ஆமாம் மேடம். அவளை நாம் டெஸ்ட் வைத்துத்தான் சேர்த்துக் கொண்டோம். பணிவு, அறிவு, திறமை யாவும் உள்ள பெண். அவளால்தான் ஆஷாவுக்குக் காம்ப்ளெக்ஸ் வந்து வகுப்பில் தொல்லையாக இருந்தாள். எனக்குத் தெரிந்த ஒன்றைச் செய்தேன். கம்ப்ளீட்டாக மாறிவிட்டாள். இந்த மிட்டெர்ம் டெஸ்ட்டிலேயே வளர்ச்சி தெரியும் பாருங்கள்''என்றார் குமாரி.

"அப்படியா? என்ன செய்தீர்கள்'' என்றார் பிரின்சி.

பிரின்சிபால் கிறித்துவர். இந்துக்களின் வழிபாட்டு முறைகளில் நிறைய மூடநம்பிக்கைகள் உள்ளன என்று பேசுபவர். அவரிடம் எப்படிச் சொல்வது என்று சிறிது தயக்கம் வந்தது. உடனே 'அன்னையே நீங்களே இவருக்குச் சொல்லுங்கள்' என்று தனக்குள் உள்ள அன்னையிடம் பிரார்த்தித்தார்.

"என்ன செய்தீர்கள் குமாரி?''என்றார் மீண்டும் பிரின்சிபால்.

"சமீபகாலமாக "சத்தியஜீவிய சக்தி" என்ற ஒன்றைப் பற்றி அறிந்து அனுபவித்துவருகிறேன். மனிதன் அளவு கடந்த நல்லெண்ணத்தின் மூலம் அந்தச் சக்தியின் பயனைப் பெறமுடியும் என்று படித்தேன். அந்தச் சக்தியைக் குறித்துப் பிரார்த்திக்கும் இடத்திற்கு ஆஷாவை அழைத்துச் சென்றேன். அளவுகடந்த திறமையும், அறிவும் உள்ள ஆஷா தன் வக்கிர புத்தியால் பலரைக் கேலிசெய்து துன்புறுத்தினாள். இந்தச் சக்தியின் சூழலில் அவள் மனமாற்றம் அடைந்துவிட்டாள். அதனால் வகுப்பில், படிப்பில் மட்டுமில்லாமல் அன்பிலும், பண்பிலும் அவளே சிறந்து நிற்கிறாள்''என்றார் குமாரி.

"அந்தச் சக்தியின் பெயர் என்ன சொன்னீர்கள்?''என்றார் மேடம்.

"சத்தியஜீவிய சக்தி என்று சொன்னேன்''என்றார் குமாரி.

பிரின்சிபால் ஆஷாவிடமிருந்து வாங்கிய புத்தகத்தை எடுத்தார்.அதில் "அன்னையின் அருள்''என்றிருந்தது. "இந்தப் புத்தகம் நீங்கள் சொல்லும் சக்தியைப் பற்றியதா?''என்று அதை குமாரியிடம் கொடுத்தார்

பிரின்சிபால். புத்தகத்தைக் கையில் வாங்கிய குமாரி முகம் மலர்ந்தார். "ஆமாம். இது அந்தச் சக்தி பற்றியதுதான்'' என்றார்.

"இதை ஆஷாவிடம் கொடுத்து தினமும் வகுப்பில் படிக்கச்சொன்னீர்களா?'' என்றார் பிரின்சி.

புத்தகத்தைப் பிரித்தால், முன்பக்கத்தில் 'மாதவிக்கு அன்புடன் அம்மா' என்றிருந்தது.

"இது மாதவியின் புத்தகமல்லவா?'' என்று அந்தப் புத்தகத்தைப் பிரின்சிபாலிடம் காட்டினார் குமாரி.

மாதவியின் அம்மா, மாதவியைப் பள்ளியில் சேர்க்க வந்தபோது பார்த்ததை நினைவுகூர்ந்தார் பிரின்சி.

"அவர்கள் 'கருவூல அதிகாரி' அல்லவா''என்று குமாரியிடம் கேட்டார்.

"ஆமாம் மேடம்'' என்றார் குமாரி.


 

தொடரும்.......

*******
 

ஸ்ரீ அரவிந்த சுடர்

இந்தியா ஆன்மீக பூமி. நாடு தன் வலிமையை உணர்ந்த நேரம் அந்நியன் வெளியேறினான்.

தன்னை அறிவது சுதந்திரம்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

தனக்கும், குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், இறைவனுக்கும் கடமையுண்டு. உயர்ந்த கடமைகள் தாழ்ந்தவற்றைத் தனக்குள் அடக்கும்.


 


 


 


 


 


 


 


 


 


 



book | by Dr. Radut