Skip to Content

14. அன்னை இலக்கியம்

 "அன்னை இலக்கியம்"

மலரும் மணமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)


 

மகேஸ்வரி


 

நிகழ்காலத்தில் வாழ்வதென்பதும் ஒருவித தியானம்தான்.பரம்பொருள் காலத்தைக் கடந்தது. காலத்தில் இருப்பவர்கள் நாம்.ஒரு விதத்தில் காலத்தைக் கடந்த நிலையில் இருக்கும் பரம்பொருள் நிகழ்காலத்திலும் நின்றுகொண்டிருக்கின்றது. சொல்லப்போனால்,நிகழ்காலத்தில் வாழும் வாழ்க்கை நிச்சயமானதொன்று. கடந்த காலம் வாழ்க்கையின் மகிழ்வையும், துயரத்தையும் உள்ளடக்கியதொன்று. அது அசைபோட உதவும். காயத்தின் ரணத்தை நினைத்து நினைத்து மருகும். சந்தோஷத்தை நினைத்து நினைத்துக் கற்பனையில் மிதக்கும். இரண்டுமே நிகழ்காலத்திற்குத் துணை செய்யாது. எதிர்காலம் தெரியாத ஒன்று. அப்படி இல்லாமல் எதிர்காலத்தைத் தெரிந்து கொண்டோமென்றால்கூட, அது அவஸ்தையானது. எதிர்காலத்தை நினைத்து மயங்கியோ அல்லது எதிர்பார்த்தோ ஏங்கி வாழும் நிலையாக இருக்கும். இன்றைக்குக் கையிலிருப்பது நிகழ்காலம்.இன்றைய பொழுதில் இப்பொழுது செய்துகொண்டிருப்பதில் மட்டும் கவனமிருந்தால் சென்ற காலத்தின் கர்மம் தாக்காது. எதிர்காலத்தின் விளைவு சுடாது. புதியதாய் ஒவ்வொரு கணமும் பிறந்து கொண்டிருப்போம். இப்பொழுதுதான் பிறந்த குழந்தை கண்ணை விழித்தவுடன் பார்க்கும் இடத்திலெல்லாம் புதுமையாய், அதிசயமாய்ப் பார்க்கும். ஏனென்றால் அதற்கு எல்லாமே புதியது. பழையதின் சுவடு இல்லாமல், புதியதின் மகிழ்ச்சியில் கண்ணை உருட்டி உருட்டித் தன்னைச் சுற்றிப் பார்வையைத் திருப்பிக்கொண்டேயிருக்கும். அதற்கு எல்லாமே பழக்கம் ஆகும் வரையிலும் அது தன் பார்வையைப் புதிது புதிதாகப் பார்த்துக்கொண்டே சந்தோஷம் அடையும். நிகழ்காலத்தில் வாழக் கற்றுக்கொண்டால், நாம் பார்க்கும், கேட்கும், உணரும் எல்லாமே புதியதாக, ஆனந்தமாக, மகிழ்ச்சியாக இருக்கும். புதியது ஒன்றை எங்கு பார்த்தாலும் மனது சந்தோஷமடையும். ஏனென்றால் மனதின் குணங்களில் ஒன்று அது. அன்னையை முதன்முதலாக அறிந்த அனைவரும் அனுபவித்த அனுபவம் அது. பழகிப் போய்விட்டால் அங்கு ஜீவன் இருக்காது. ஜீவன் எங்கிருக்கிறதோ, அங்கு மலர்ச்சி இருக்கும்; சந்தோஷம் தொடரும். நிகழ்காலத்தில் தினமும் நாம் புதுப் பிறவியை எடுக்கலாம். ஒவ்வொரு கணமும் புதியதாகப் பிறக்கலாம்; புதியதைக் கற்கலாம். வருடத்திற்கு ஒரு முறை பிறந்த நாளென்று இருக்காமல், ஒவ்வொரு கணமும் நிகழ்காலத்தில் வாழக் கற்றுக் கொண்டால், பிறந்த நாளை ஒவ்வொரு கணமும் கொண்டு வரலாம். ஆயிரம் பிறவிகளின் பயனை அனுபவிக்கலாம்; நம்முடைய ஆன்மாவுடன் தொடர்புகொள்ளலாம். ஆன்ம விழிப்புடன் செய்யும் காரியங்கள் சத்தியமாக ஜெயிக்கும். அன்னையை ஒவ்வொரு கணமும், நிமிஷமும் புதியதாய் உணரலாம். என்றுமே புதுமை கலையாத புத்துணர்வுடன் வாழலாம். நிகழ்காலத்தில் வாழும் கலையை மல்லிகை கற்றுக்கொண்டதால், வருவதை அப்படியே வாங்கி உள்ளே விடாமல், அப்படியே விட்டுவிட்டு, வரப் போகின்றதைப் பற்றிச் சிந்தனையே இல்லாமல், அப்பொழுது செய்து கொண்டிருப்பதில் தன் முழுக் கவனத்தைச் செலுத்துவதன் மூலம் அன்னையுணர்வில் வாழ்ந்தாள்.

***

"என்னக்கா, முகம் பிரகாசமாக இருக்கிறது? காரை நீயே ஓட்டுகிறாயா, இல்லை நான் ஓட்டட்டுமா?'' என்று கேட்ட மல்லிகைக்கு பதிலாக, காரின் சாவியைக் கொடுத்துவிட்டு இறங்கினாள் முல்லை. வயது வித்தியாசம் அதிகம் இல்லையென்றாலும், மல்லிகை முல்லையைப் பெயர் சொல்லி ழைப்பதைவிட "அக்கா' என்ற உறவு முறையில் அழைப்பதைப் பழக்கிக்கொண்டாள். மனது உறவுடன் ஒட்டுவதற்கு இதுவும் ஒரு நல்ல பழக்கம்தான். அன்னியர்களைப் பெயர் சொல்லி ழைப்பது ஒரு முறையாக இருந்தாலும், உறவினர்களைக் கூடப் பெயர் சொல்லி ழைக்கும் மேலைநாட்டு முறையில் உறவு, பாசம் என்ற இடமில்லாமல் போவதற்குரிய பல காரணங்களில் இதுவும் ஒன்று ஆகிறது. எல்லோரும் ஒரு குடும்பம், ஓரினம் என்று நினைக்கின்ற இடங்களில், இனங்களில்
பார்ப்பவர்களைக்கூட உறவுமுறை சொல்லி ழைத்துக்கொள்வதன் மூலமாகப் புதியதாக உறவினை ஏற்படுத்தி, பந்தத்தை, பாசத்தை வளர்த்துக்கொள்வது உண்டு. சில குடும்பங்களில் இன்றும் சிறு வயதிலேயே குழந்தைகளை இப்பழக்கத்தின் கீழ் கொண்டு வருவதுண்டு.
 

தங்கை காரோட்டிச் செல்வதை ரசித்துப் பார்த்துக்கொண்டு இருந்த முல்லை,
 

"நீ நன்றாகவே கார் ஓட்டுகிறாய். நான் தினமும் காரை ஓட்டினாலும், டிராபிக்கில் காரை ஓட்டும்பொழுது சிறிது பதட்டமாகத்தான் இருக்கும். அன்னையை அழைத்துக்கொண்டே ஓட்டினாலும், சில சமயங்களில் கவனத்தில் அன்னை நகர்ந்து விடுவதுமுண்டு. ஆனால் நீ எப்பொழுதாவது ஒரு முறை ஓட்டினாலும் என்ன அழகாக ஓட்டுகின்றாய்! எல்லாவிதத்திலும் உயர்ந்தவள்தான்'' என்று முல்லை கூறக் கேட்ட மல்லிகை
"அக்கா, செய்யும் வேலையில் முழுக்கவனம் இருந்தால் எந்தவொரு வேலையையும் நன்றாகச் செய்யலாம்''.

விரைவாகச் சென்றுகொண்டிருக்கும் வாகன வரிசையில் முந்தாமல், ஹாரனைப் பிடித்து அழுத்தாமல், இடம் விட்டு, ஆனால் அதே சமயத்தில் ஒரே சீரான வேகத்தில் வண்டியை மல்லிகை ஓட்டிக் கொண்டிருந்தாள். இரவின் விளக்கொளியில் வரிசையாக வாகனங்கள் சென்றுகொண்டிருப்பதைப் பார்த்து சந்தோஷத்துடன் முல்லை, இரு புறமும் வானத்தைத் தொட்டுவிட முயற்சி செய்யும் உயர்ந்த கட்டிடங்களின் வரிசைகளையும் கண்டவள், "எத்தனை முறை இந்தப் பக்கம் சென்றாலும் ஒவ்வொரு முறையும் புதியதாகப் பார்ப்பதைப் போன்று, புதிது புதிதாய்க் கட்டிடங்கள் தோன்றி, பழையதைக் கொண்டு பார்க்க இடமில்லாமல் புதியதாய்த் தேட வேண்டிய இடமாக இந்த ரோடிருக்கிறது, இல்லையா மல்லிகை என்று தன் தங்கையைக் கேட்டவள், தாங்கள் செல்ல விரும்பிய ஹோட்டல் வந்ததைப் பார்த்தாள்.

இருவருக்கும் பிடித்த vegetable sizzler ஆர்டர் செய்த மல்லிகை முல்லையின் முகத்தைப் பார்த்தாள். "நீ சொல்லப் போவதை நான் கேட்கத் தயாராக இருக்கிறேன்' என்ற முகபாவனை இருந்தது.
புரிந்துகொண்ட முல்லையும், தன் கைப் பையிலிருந்த ஒரு கவரை எடுத்து,
 

"எப்படியிருக்கிறது என்று பார்த்துச் சொல்''.
 

"என்னக்கா, திடீரென்று ஒரு போட்டோவைக் கொடுத்து, "எப்படி இருக்கிறது?' என்று கேட்கிறாய். பார்ப்பதற்குக் கம்பீரமாக இருக்கிறார். முகம் களையாக இருக்கிறது. டை முடிச்சு சரியாக விழவில்லை. காலரின் மடிப்பு மடங்கியிருக்கிறது. பேனா சற்று லிவான விலையில் உள்ளது போல் தெரிகிறது. சர்ட் "ஆரோ'வினுடையது. பல் சற்று முனைப்பாக இருக்கிறது. இருந்தாலும், அதுவும் அழகாக இருக்கின்றது. பாஸ்போர்ட் சைஸ் போட்டோவில் உயரம் தெரியாது. என்றாலும், முகத்தின் அளவை வைத்துப் பார்த்தால் 5.5க்கு மேல் இருப்பார் எனத் தோன்றுகிறது. எப்படியும் MBA/BE இருக்குமென நினைக்கிறேன். டென்ஷன் பார்ட்டி என்றும் தெரிகிறது. சற்று முன்கோபி. இதைத் தவிர எதற்காக இந்தப் போட்டோவை என்னிடம் கொடுத்திருக்கிறாய் என்று தெரியவில்லைஎன்னிடம் சிபாரிசுக்காக நிச்சயம் கொடுத்திருக்கமாட்டாய். எனக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லி ஏதாவது வேலைக்குச் சொல்ல வேண்டுமா? அப்படித் தெரிந்தவர்கள் என்று யாரும் எனக்கு அதிகமாகக் கிடையாது என்று உனக்கே தெரியும். நமக்குத் தெரிந்த உறவினரா?''

"முல்லை, உனக்கு என்ன வயது?''
 

"திடீரென்று வயதைப் பற்றி கேட்கிறாய்? நான் போட்டோவைப் பற்றிக் கேட்டால், சம்பந்தமில்லாமல் வயதைப் பற்றிப் பேசுகிறாய்''.
 

"இரண்டிற்கும் சம்பந்தமிருக்கிறது'' என்ற முல்லை, "நீ சொன்னதிலிருந்து போட்டோவை நன்றாக ஆராய்ச்சி செய்து இருக்கிறாய் என்று தெரிகிறது. நீ சொன்னது போல் I.T.யில்தான் டில்லியில் வேலை செய்துகொண்டிருக்கிறார். உனக்குக்கூடத் தெரியும், வசுதா. அவள் தம்பி. உனக்குப் பிடித்திருந்தால், மற்றதைப் பற்றிப் பேசலாம்''.
 

"எனக்கு எதற்காகப் பிடிக்க வேண்டும்? எதற்காக இக்கேள்வியை என்னிடம் கேட்கிறாய் என்று புரியவில்லை.விஷயத்திற்கு நேரடியாக வா, சுற்றி வளைத்துப் பேசாதே''.

"மல்லிகை என்று ஆரம்பித்த முல்லை, சூடாக sizzler வந்தவுடன், "சரி, சாப்பிடுவோம். சாப்பிடும் பொழுது பேசக்கூடாது'' என்று கூறிவிட்டு, இருவரும் தங்கள் கவனத்தைச் சாப்பிடுவதில் செலுத்தினார்கள்.
மல்லிகையின் மனது முழுவதும் உணவில் மட்டுமே இருந்தது. ரசித்து ருசித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். உணவும் மிக நன்றாக இருந்தது. உருளைக்கிழங்கை நன்கு மசித்து வைக்கப்பட்டிருந்ததிருந்து கொஞ்சம் எடுத்து மிகச் சூடாக இருந்த காய்கறிகளுடன் இணைத்து, மிக மெதுவாக நழுவவிட்டிருந்த சங்கீதத்துடன் சேர்த்து ரசித்தாள். ஆனால் முல்லையோ வாயும், கையும் தன் வேலையைச் செய்து கொண்டிருந்தாலும், மனதோ "எப்படி விஷயத்தை மல்லிகையிடம் சொல்வது? ஏதோ ஒரு தைரியத்தில் போட்டோவைக் காட்டிவிட்டாலும், மல்லிகை என்ன சொல்வாள் என்பதை அறிந்திருந்தாலும், இது என் கடமையல்லவா' என்று ஒரு மனது எங்கிருந்தோ சிறியதாகக் குரலை எழுப்ப, மல்லிகையின் மனதைப் பற்றி தெரிந்தபொழுதிலும், "இதைப் பற்றி எப்படிப் பேசலாம்?' என்று இன்னொரு குரல் ஒலிக்க அதை அடக்கத் தெரியாமல், "அவளுக்கு நல்லதுதானே செய்கிறேன்' என்று இன்னொரு குரல் சொல்ல முயன்றது. மனது கேட்கும், சொல்லும் கேள்விகளுக்கு இடையே முல்லை போராடிக்கொண்டு இருந்தாலும், அது தன் முகத்தில் எந்தவொரு பிரதிபப்பையும் காட்டக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தாள்Vegetable sizzler அவளுக்கு மிகவும் பிடித்த ஒன்றானாலும், இன்றைக்கு அதை அனுபவிக்கக்கூடிய நிலையில் இல்லை.
 

        அடுத்த உணவு வருவதற்குரிய இடைவேளையில் முல்லை பேச ஆரம்பிக்கலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கும்பொழுது சவுராசியாவின் "Desh' இசைக்க ஆரம்பித்தது. ப்ளூட்டின் ஒலியில் தன்னை மறக்க ஆரம்பித்தாள். நினைவு தன்னை மறந்து இசையுடன் ஒன்ற ஆரம்பித்தது.

         கடைசியாகக் காபியை இருவரும் ருசித்துக் குடித்து முடித்தார்கள். சாதாரணமாக முல்லை இதற்குள் எல்லா விஷயங்களையும் முடித்திருப்பாள். முடிவு காபி குடிப்பதற்கு முன்பேயே
தெரிந்திருக்கும். ஆனால், இன்றோ முழுச் சாப்பாடும் முடிந்துவிட்டது.ஆனால் விஷயத்தை ஆரம்பிக்கக்கூட இல்லை.

வாழ்க்கை தனக்கு ஆதரவாக இருப்பதைவிட மல்லிகைக்குத் தான் அதிகமாக ஆதரவாக இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டாள். என்றாலும் பேச வேண்டியதைப் பேசிவிட வேண்டும் என்பதற்காக, மீண்டும் போட்டோவைக் கையிலெடுத்தாள்.


 

"மல்லிகை இந்தப் போட்டோவிலுள்ளவரை உனக்குத் திருமணம் செய்யலாம் என நினைக்கிறேன்''. முல்லையின் வழக்கமான பாணி அல்ல இது. எந்தவொரு விஷயமாக இருந்தாலும் கடைசியில்தான் கோடி காட்டுவதைப் போல் பேசுவாள். முழுதாக விஷயத்தை உடைத்து, நேரடியாகப் பேசமாட்டாள். எதிராளியின் முக உணர்ச்சிகளுக்கு ஏற்றாற்போல்தான் பேசுவாள். சில சமயங்களில் பிடிக்கவில்லை என்பது போல் தெரிந்தால், விஷயத்தை ஆரம்பித்தாலும் முழுவதுமாகச் சொல்லாமல் வேறு ஒன்றுடன் பேசிச் சமாளித்து, மனம் உடையாமல் பார்த்துகொள்வாள். ஆனால் இன்று எதுவுமில்லாமல் சட்டென்று விஷயத்தை உடைத்தாள்.
ஒரு நிமிடம் பதிலேதும் சொல்லத் தெரியாமல் மல்லிகை உறைந்தாலும்,
 

"அக்கா, எனக்கு அப்பாவும், அம்மாவுமாக இருப்பவள் நீதான்.அப்பாவையும், அம்மாவையும் உன்னிடம் பார்த்துகொண்டிருக்கிறேன். என் மனம் என்னவென்று உனக்கு நன்றாகத் தெரியும். அந்தச் சமயங்களில் எனக்குச் சகோதரியாய், தோழியாய் இருந்திருக்கிறாய். என்னைவிட அதிர்ஷ்டசாலி கிடையாது என்று ரோஜாக்காவிடம் பல முறை சொல்லியிருக்கிறேன். இன்றைக்கு இந்த விஷயத்தை என்னிடம் நீ சொல்கின்றாய் என்றால், அன்னை மட்டுமே வேண்டும் என்பதில் நான் உண்மையாக இல்லை என்பது எனக்கு நன்றாகத் தெளிவாகிறது. என்னிடம் sincerity இல்லை. அதனால்தான் வாழ்க்கை உன் மூலமாக இதை என் முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. என்னுடைய ஜீவன் அன்னையுடன் ஏதோ ஒரு சூட்சும சக்தியால் பிணைக்கப்பட்டிருப்பதாக நம்பியிருந்தேன்.என்னுடைய போக்குக்கு அன்னையை நான் ஏற்றுக்கொண்டு இருக்கிறேனே ஒழிய அன்னையின் போக்குக்கு மாறவில்லை என்பது எனக்குத் தெரிகிறது. நம்முடைய வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நமக்கு நடக்கக்கூடியவற்றின் மீதான கட்டுப்பாட்டை இழந்துவிடுகிறோம். நம்முடைய வாழ்க்கை விதியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதெல்லாம் பொய் என்று நினைத்தேன். அன்னை ஒன்றுதான் மெய் என்று பரிபூர்ணமாக நம்பினேன். ஆனால் ஏதோவொரு இடத்தில் என் மனது என் கட்டுப்பாட்டையும் மீறிச் சென்றிருக்கிறது என்பது நீ இப்பொழுது பேசியதிருந்து நன்றாகப் புரிகிறது'' என்ற மல்லிகை இன்னுமொரு காபிக்கு ஆர்டர் செய்தாள்.

காபியைக் கலக்கிக்கொண்டே,
 

"அக்கா, உங்களுக்கு நன்றாக நினைவிருக்கும், அம்மா காலையில் ஆண்டாளின் திருப்பாவையுடன் வாரணமாயிரத்தையும் சேர்த்தே பாடுவார்கள். அதில் ஓரிடத்தில் "மானிடவர்க்கென்று வாக்குப்படின் வாழகில்லேன் கண்டாய்......' என்று வரும். அவ்வரி என் மனதில் சற்று ஆழமாகப் படிந்துவிட்டது. உனக்கே தெரியும், எனக்குப் புத்தகம் படிப்பது மிகவும் பிடிக்கும். இராமகிருஷ்ணரின் சுயசரிதையில் சாரதா தேவி, இராமகிருஷ்ணரின் மனைவியாக இல்லாமல், தேவியாக இருந்தார் என்று படித்தேன். ஆண்டாள் ஸ்ரீ ரங்கநாதரை மணந்துகொண்டாள். இதையெல்லாம் யோசித்துப் பார்க்காமலேயே என் மனது மானிடரைத் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று 16 வயதிலேயே தீர்மானம் செய்தது. சிறுபிள்ளைத்தனமானது என்று நினைக்கலாம். சிலவற்றைக் காரண,காரியங்களுடன் வைத்துப் பார்த்தால், தர்க்கரீதியாக வேண்டு-மானால் நடக்கலாம். ஆனால் உண்மையில் எப்படி நடக்கும்? மீரா, கிருஷ்ணனை மனதால், உணர்வில் ஏற்றுக்கொண்டாலும், உடலால் மேவாரின் மனைவியாகத்தானே வாழ்ந்தாள் என்று பதில் சொல்லும்.ஆனாலும் தன் விருப்பத்தில் உண்மை இருந்தால், நடக்கும் என்பதனை அன்னையிடம் வந்தபிறகு புரிந்துகொண்டேன். என் தன்மைக்கு, personalityக்கு திருமணம் என்ற பந்தம் தேவையில்லை.காற்றுக்கு அணை போட முடியாது. உயர்ந்த இலட்சியம் என்று சொல்லவில்லை. ஆனால் ஏனோ என்னால் சாதாரணமாக எல்லோரையும் போல் வாழ முடியும் என்று தோன்றவில்லை; பிடிக்கவும் இல்லை. என்னுடைய இயல்புக்கு ஒத்து வரும் என்று தோன்றவும் இல்லை. சார்ந்திருந்து வாழ்வது என்றால் அது, தெய்வத்தைச் சார்ந்து வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். அன்னை, "குழந்தை, வீடு,ஆணைச் சார்ந்து வாழும் தன்மை ஆகியவற்றிலிருந்து பெண்கள் சுதந்திரம் பெற வேண்டும்' என்று சொல்லியிருக்கிறார் என்பதை அறிந்ததிலிருந்து இன்னும் அதிகமாக எனக்குள், "திருமணம் என்ற பந்தத்திற்குள் இணையக்கூடாது' என்று வேரூன்றிவிட்டது.

பாதுகாப்புத் தருபவையென்று பெண் நம்பிக்கொண்டிருக்கும் இம்மூன்றைவிட அன்னை தரும் பாதுகாப்பை, அவர் அருளால் எழும் பாதுகாப்பை முழுமையாக நம்பி வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். என்னுடைய விருப்பத்தை நான் உன்னிடம் சொல்லாவிட்டாலும், எனக்கு எது தேவையென்பதை நான் சொல்லி, நிறைவேற்ற வேண்டிய சந்தர்ப்பத்தை நீ இதுவரையில் கொடுத்ததில்லை. நான் நினைப்பதற்கு முன்பாகவே என் மனமறிந்து பூர்த்தி செய்திருக்கிறாய். என் மனதில் அன்னைதான், அன்னை மட்டுமே நிறைந்திருக்கிறார் என்று நினைத்துகொண்டிருந்ததில் கள்ளம் உள்ளது என்பதை இன்று நீ புரிய வைத்திருக்கிறாய். அதற்காக உனக்கு நன்றி சொல்ல வேண்டும். உனக்குத் திருமணம் அவசியம்; என்னைப் போல் நீ இல்லை. அதற்காக என்னை உயர்வென்றோ, நீ அப்படியில்லை என்றோ சொல்லவில்லை. ஒவ்வொருவர் இயல்புக்கேற்ற வாழ்க்கை வாழ்வதுதான் நல்லது. உன் இயல்புக்கு நீ தென்னரசைத் திருமணம் செய்து, சந்தோஷமாக வாழ வேண்டும். அப்பாவும், அம்மாவும் இல்லை என்று நீ ஏன் நினைக்கிறாய்? பகவானும், அன்னையும் இருக்கிறார்கள். அவர்களை ஏற்றுக்கொண்டபிறகு, இல்லை இல்லை அவர்கள் நம்மை ஏற்றுக்கொண்டபிறகு நாம் புதிய பிறவிகள் ஆகின்றோம். நம்முடைய தாயும், தந்தையுமாக அவர்களே இருக்கிறார்கள்''.
 

"மல்லிகை நீ சொல்வது, உன் மனது எனக்குத் தெரியும் இருந்தாலும்...'' என்று இழுத்த முல்லை,
 

"கடைசியில் நீ சொன்ன விஷயம் தவிர மற்றது எனக்குச் சம்மதமே. உன் சுதந்திரத்தில் நான் தலையிடவில்லை. உன் விருப்பத்திற்கு மாறாக இதுவரையில் நடந்ததில்லை. இனியும் செய்ய மாட்டேன். வா, போகலாம்''.

***

"அக்கா, தென்னரசு விஷயத்தில் ஏதோவொன்று எனக்குத் தெரியவில்லை. உனக்கது தெரியும்; தென்னரசுக்கும் தெரியுமென நினைக்கிறேன். நீங்கள் இருவரும் காலேஜிலிருந்து ஒன்றாகப் பழகியவர்கள். அப்பா, அம்மா விபத்திற்கு முன்பே உங்கள் இருவருக்கும் திருமணம் செய்ய வேண்டும் என்ற வரையில் எனக்குத் தெரியும். விபத்தில் நடந்த விஷயங்கள் வேறு எதைப் பற்றியும் சிந்திக்க விடவில்லை. இப்பொழுது நினைத்தாலும்....'' என்ற மல்லிகைக்கு

"மல்லிகை அதைப் பற்றிப் பேசாதே. அன்னையிடம் ஆயிரம் முறைக்கு மேல் சொல்,அதன் கசப்பை, துக்கத்தை மாற்ற முயற்சி செய்திருக்கிறேன். இன்றைக்கு நான் உன்னிடம் பேசியது என்னுடைய தவறுதான். அதற்காக வேண்டுமானால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இனி இதைப் பற்றி நாம் இருவருமே மறந்துவிடலாம். தூங்கு, எதைப் பற்றியும் நினைக்காதே'' என்று பேச்சிற்கு முற்றுப்புள்ளி முல்லை வைத்தாள்.

"ரோஜாக்கா, இன்றைய தியானத்திற்கு ஒரு புதிய அன்னை அன்பரை அழைத்து வந்திருக்கிறேன். பெயர் தென்னரசு'' என்று மல்லிகை அறிமுகப்படுத்தி வைத்தாள்.

நல்ல உயரம், முகம் தெளிவாக இருந்தது. முழுக் கை சட்டையை "இன்' செய்திருந்தது உடையின் நேர்த்தியை மட்டும் அல்லாமல், தென்னரசு செய்யும் காரியங்களைக் கவனத்துடன், கலைநயத்துடன் செய்வான் என்பதையும் காட்டியது. குழப்பமில்லாமல்,அழகாக, நிதானமாக இருப்பவன் என்பதைத் தலையைச் சீர் செய்திருந்த தன்மையும், நடந்து வரும் நடையும் தெளிவாக உணர்த்தின. எல்லோரையும் ஈர்க்கும் முகமல்ல என்றாலும்,பழகுவதற்கு இனிய, நினைவில் இருத்திக் கொள்ளக்கூடிய முகம்.

தின்பதற்கு மட்டுமல்லாமல், தின்னப்படுவதற்கு உரிய ஒழுங்காக அமைந்த பற்களின் அழகு முகத்தின் புன்னகைக்கு மெருகூட்டுவதாக இருந்தது.
 

தென்னரசு முதலில் அங்கிருந்த அன்னை, பகவானுக்கு முன் தன் கையுடன் கொண்டு வந்திருந்த உணர்வில் வலிமை, உடலின் ஏற்புத் திறன்,பல்வகைச் சிறப்பு, தவறில்லாத அமைப்பு,  தவறானயோசனையை மறுத்தல், கீழ்ப்படிதல், உடல் அணுவின் தூய்மை,தர்க்கரீதியான எண்ணம், தூய்மை, ஆகிய மலர்களை அங்கிருந்த தட்டில் வைத்து, உடல் நிலத்தில் முழுவதுமாகப் படிய வணங்கினான்.பின், ரோஜாவைப் பார்த்து, "வணக்கம், உங்களைப் பற்றி மல்லிகை கூறி இருக்கிறார்கள். மிகைப்படுத்திக் கூறுகிறார்களோ என்று நினைத்தேன். உள்ளதை உள்ளபடி சொல்லியிருக்கிறார்கள் என்பது இப்பொழுது எனக்குப் புரிகிறது. உங்களைப் பார்த்ததில் எனக்கு மிக மிகச் சந்தோஷம். இதை வெறும் வார்த்தையாகச் சொல்லவில்லை.நல்ல மனிதர்களைப் பார்ப்பது அபூர்வம். அதிலும் என்னுடைய கசப்பான அனுபவங்கள் நல்லவர்களுடன் அதிகமாகப் பழகச் சந்தர்ப்பங்கள் கொடுத்ததில்லை. வாழ்க்கையின் வசந்தத்தில், என்னால், நான் செய்த தவற்றால் சந்தோஷத்தை இழந்தேன். மல்லிகையுடன் பேச ஆரம்பித்த பிறகு, அவள் அன்னையைப் பற்றி சொல்லிபிறகு, எனக்கும் நம்பிக்கை வந்தது. உங்களைப் பார்த்தவுடன் ஏதோ பல வருடங்கள் பழகியது போன்று எனக்குத் தோன்றுகிறது. மனம் விட்டுப் பேச நினைக்கிறேன். ஆனால் பழக்கம் தடுக்கிறது''.

"அதற்கென்ன தென்னரசு, என்னிடம் ஏன் சொல்ல வேண்டும். இங்கிருக்கிறார்கள் பார், அவர்களிடம் சொல். எங்கு சொன்னால் நல்லது நடக்குமோ, அங்குதான் மல்லிகை இருக்கிறாள். அன்னையை நீ ஏற்றுக்கொள்வதற்கு முன் அவர்கள் உன்னை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். நீ இன்று இங்கு வரப்போவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், எனக்கு இன்றைக்குச் "சந்தோஷம்' மலர் மிக அதிகமாகக் கிடைத்திருக்கிறது. இதற்குரியவர் ஒருவரை அன்னை அழைத்து வருவார் என்பது மட்டும் எனக்கு நிச்சயமாகத் தெரியும். நீதான் இன்றைக்கு அன்னையால் அழைத்து வரப்பட்டவர் என்பதில் எனக்கு மிக்க சந்தோஷம்'' என்று கூறிய ரோஜா, அவன் கையில் "சந்தோஷத்தைக்' கொடுக்க, தியானத்திற்கு உட்கார்ந்தார்கள்.


 

தொடரும்...


 


 


 



book | by Dr. Radut