Skip to Content

மனித சுபாவம் III

கர்மயோகி

உனக்குப் பரிச்சியமானவர்களிடம் உன்னைப் பற்றிய அபிப்ராயத்தைக் கேட்டறிவது போன்ற விவேகமான செயலில்லை.

******

பிறர் தம்மைப் பற்றி நினைப்பதை அறிந்தால் பெரும்பாலோர் மாறுவார்கள். நம்மைப் பற்றிப் பிறர் நினைப்பதில் நாம் 5%உம் அறியோம். இதைக் கேட்டறிய முற்பட்டால் ஏராளமான உண்மைகள் வெளிவரும். வாழ்வு அளவு கடந்து மாறும்.

ஒரு சர்க்கார் அதிகாரி இவருக்குக் குடும்பப் பாசம் அதிகம். அண்ணன், அக்கா, அவர்கள் குழந்தைகளுக்கும், உறவினர்களுக்கும், பரிசு, உதவியை, இவர் ஒரு கடமையாகச் செய்து வந்தார். 124 ரூபாய் சம்பளத்தில் ஆரம்பித்து 15 வருஷம் கழித்து 450ரூபாய் சம்பளம் பெறும் பொழுது, இவருடைய மனைவியும் அதே சம்பளத்தைப் பெற்றிருந்தார். ஊரில் சிறு சொத்தும் இருந்தது. அன்று அவர் கணக்குப்படி உறவினர்களுக்கு 15வருஷத்தில் செய்தது ரூ.50,000/- என்றார். இவரைப் பொருத்தவரை இது பெரிய தியாகம். துணிமணி எடுத்துக் கொடுப்பது, புஸ்தகம் வாங்கிக்கொடுப்பது, ஸ்கூல் பீஸ் கட்டுவது என அவசியமான செலவு மட்டுமே உறவினர்களுக்குச் செய்தார். தமக்கு உபரியாக வந்த T.A., exam fees பரீக்ஷை வருமானம் போன்றவற்றைச் சேமித்துப் பிறருக்குச் செய்வார். இதனால் இவர் பிறருக்கு ஓயாமல் உபதேசம் செய்வார். புத்தியேயில்லாதவர், நாகரீகமில்லாத மக்களிடையே பிறந்த தாராள குணம் உள்ளவர். பட்டம் பெற்றிருந்தாலும், பிறருக்கு உபதேசம் செய்வது அநாகரீகம் என்று அறியாதவர். (Self opinionated person) தாழ்ந்த மக்களிடையே பிறந்து, நாகரீகம் வளராத ஊரில் வேலைக்குப் போனவர். அதனால் இவர் புதிதாகக் கற்றுக் கொண்டதை அனைவருக்கும் சொல்வார். மண்டையில் அடித்துச் சொல்வார். நாகரீகமுள்ள இடங்களில் குழந்தைக்கும் தெரியும் விஷயத்தை இவர் பெரியவர்களிடமும் வாய் ஓயாமல் சொல்வார். இவர் வேலை செய்யுமிடத்தில் இவரை எவரும் மறுத்துப் பேசுவதில்லை. ஒரு நாள் இவர் வருவதைப் பார்த்த நான்கு கெஜட் பதவி ஆபீசர்கள், "டேய், அவன் வரான். வந்தால் உபதேசம் செய்வான். நான் போகிறேன்" என்று அனைவரும் கலைந்துவிட்டனர். இவருக்கு அவர்கள் தம்மைப்பற்றி நினைப்பதை அறியமுடியுமானால் விவேகம் வரும்.

உனக்குள்ள அறிவை எந்த அளவுக்கு நீ உன் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தியிருக்கிறாய் எனக் கணக்கிடு.

*****

உடல் உறுப்புகள் அநேகம். கடந்த ஒரு மணி நேரத்தில் பயன்பட்டவை இரண்டு மட்டுமே என்றால் என்ன பொருள்? உடலில் ஏராளமான உறுப்புகள் உள்ளன. அவை தேவைப்பட்ட நேரத்தில் செயல்படும். ஏதோ ஒரு நேரம் தேவை என்பதற்காக அவை ஏற்பட்டவை. சுறுசுறுப்பான நேரத்தில் கண்ணும், காதும், காலும், கையும் பரபரப்பாக வேலை செய்கின்றன. எல்லா நேரமும் எல்லா அவயவங்களும் செயல்படுவதில்லை. அதேபோல் நமக்குள்ள அறிவு, திறமை, ஏராளம். நாமே அதை அறிவதில்லை. ஏனெனில் நாம் அவ்வப்பொழுது தேவைப்பட்டவற்றையே பயன்படுத்துகிறோம். முக்கியமான நேரங்களில் பார்த்தாலும், பதவியிலுள்ளவர் செயல்படுவதைப் பார்த்தாலும், செல்வர் வீட்டில் இரண்டு நாள் அவரைப் பார்த்தாலும், ஏராளமான திறமைகள் அடிக்கடி பயன்படுவதைப் பார்க்கிறோம்.

நம்மால் நம் அறிவையும், திறமையையும் அதிகமாகப் பயன்படுத்த முடியும். அப்படிச் செய்வதால் அதற்குரிய நிலையை எட்ட முடியும்.  ரு காலத்தில் நீ இலட்சியமாகப் போற்றியதே, உன் மன வளர்ச்சியை உச்சகட்டத்திற்குக் கொண்டு போகும்.

*********

இளமையில் ஏற்றுப் போற்றிய இலட்சியம், உத்தியோகம், குடும்பம் வந்தபின் மறந்து பின்னணிக்குப் போகிறது. "இதெல்லாம் பார்த்தால் இனி முடியாது" என்று "விவேகம்" ஏற்படுகிறது. 60 வயதைக் தாண்டியவர், தங்களையும், தாங்கள் அறிந்தவரையும் நினைவுபடுத்தி ஏற்ற இலட்சியத்தைக் கைவிட்டவரையும், கடைசிவரை கடைப் பிடித்தவரையும் பார்த்தால், இலட்சியத்தைக் கடைப்பிடித்தவர் தொடர்ந்து உயர்ந்ததையும். மற்றவர் பின் தங்கியதையும் காணலாம்.

பொதுவாக மனிதன் இலட்சியத்தை ஏற்பதில்லை. ஏற்றால் சீக்கிரம் கைவிட்டு விடுவான். 

முன்னேற்றத்திற்குப் பல காரணங்களுண்டு.அவற்றுள் இலட்சியமும் ஒன்று,

"நண்பர்களைப் பிரிவதில்லை என்பதே என்னைக் காப்பாற்றியது".

"ஸ்தாபனத்திற்குச் செய்த தொண்டை நிறுத்தவில்லை என்பதால் இன்று தலைவராக இருக்கிறேன்".

"எதிரி வாயாலும் நல்ல பெயர் வாங்க முயன்றதால் இன்று செல்வராக இருக்கிறேன்".

"தொழிலில் நாணயத்தைக் குறைக்கவில்லை என்பதால், வியாபாரம் 100மடங்கு பெருகியது" என்பவர்களைக் காணலாம்.

ஒவ்வொரு முறை சிந்திக்கும்பொழுது 25% அதிகம் புரியுமளவுக்கு முயல வேண்டும்.

********* 

பொதுவாக ஒரு வேலை வந்தால், அது தடையில்லாமல் நடந்தால் நாம் சிந்திப்பதில்லை. தடை ஏற்பட்டால், குறை ஏற்பட்டால் சிந்திக்கின்றோம். ரேடியோ, T.V., moped மோபெட், பட்டுச் சேலை, தங்க நகை, வைரம், காலேஜ் அட்மிஷன் ஆகியவற்றை முதன் முறையாக அணுகுபவர், பணமிருந்தால் வாங்கிக்கொண்டு போவார். அதற்கு மேல் சிந்திப்பதில்லை. இவற்றுள் எத்தனை விஷயம் பொதிந்துள்ளது என்பதை அவர் அறியார். ஒவ்வொன்றிலும் சுமார் 10 அல்லது 20 முக்கியமான விஷயங்கள் அடங்கியுள்ளன. அனுபவமுள்ளவருக்கே அது தெரியும். இவரே சுமார் 10 அல்லது 20 முறை இவற்றை வாங்கினால் அதனுள் உள்ள discount கமிஷன், பரிசு, தவணை முறை, கம்பனி பிராண்ட் ரகசியம் போன்றவற்றை அவர் அறிவார். கையில் பணமிருப்பதால் வாங்கிக் கொண்டு போகாமல், சிந்தித்தால் சற்று அதிகமாகப் புரியும். கடையில் சாமான் வாங்குவது மட்டுமன்று வாழ்க்கையில் எதையும் பற்றி யோசனை செய்வது நல்லது. முக்கியமான விஷயத்தைப் பற்றிச் சற்று அதிகமாகச் சிந்திப்பது பலன் தரும். வாழ்க்கையையே மாற்றவும் உதவும்.

விவரமில்லாமல் இலட்சியங்களை ஏற்றவனாக இருந்தால் அவற்றை விவரமாகத் தெளிவாக ஏற்றுக் கொள்ளுதல் நலம்.

*********

கீதையைப் படித்துப் பலன் கருதாமல் வேலை செய்ய வேண்டும் என்பது, எந்த ஸ்தாபனத்தில் இருக்கின்றோமோ, அதையே தாயாகக் கொள்ள வேண்டும் என்பது போன்ற இலட்சியங்களை, ஏதோ கேட்டோம், பின்பற்றுகிறோம் என்றில்லாமல், அதன் உட்கருத்தை அறிந்து ஏற்றுக் கொண்டால் பெரும்பலன் வரும்.

ஸ்தாபனம் என்பது உயிருள்ளது. அதற்கு நாம் செய்யும் வேலையை வேலையாகச் செய்யலாம். சேவையாக செய்யலாம். நாம் எதைச் செய்கிறோமோ, அதை அது ஏற்றுக் கொள்ளும். நாம் மறக்கலாம். அது மறக்காது. நமக்கு அவசியமாகத் தேவைப்பட்டபொழுது அது உதவும் வகை அற்புதமாக இருக்கும். நேரடியாக உதவ முடியாவிட்டால் மறைமுகமாக உதவும். ஆனால் உதவத் தவறாது. நாம் நினைவுபடுத்தத் தேவையில்லை. அதன் வேலையை அது தவறாது, தாமதிக்காமல் தானே செய்யும்.

ராணுவத்தில் சேவை செய்தவர் இறந்த பின், அவர் வாங்கிய மனையை, சர்க்கார் சொல்பத் தொகைக்கு எடுத்துக் கொண்ட பொழுது இறந்தவர் மகன் தன்னால் ஆனவற்றையெல்லாம் செய்து கைவிட்ட நிலையில், யாரோ ஒருவர் சொன்ன யோசனையின் பேரில் மாஜி ராணுவ ஊழியர் சங்கத்தின் உதவியைத் தபால் மூலம் கேட்டார். பதில் தந்தி மூலம் வந்து முழுப் பலனை அளித்தது.

எந்த ஸ்தாபனமும் தான் பெற்ற சேவையை மறப்பதில்லை என்பதை அறிந்து இன்று வேலையைச் சேவையாகச் செய்தல் கண் மூடியாகச் செய்வதைவிட நல்லது.

பலனைக் கருதி வேலை செய்தால், பலனை நாம் பெறுகிறோம். பலன் கருதாமல் வேலை செய்தால் பலனை நம்முள் உள்ள ஆன்மா பெறுகிறது. நாம் பெறும் பலனை விட அது அதிகமானது. ஆன்மப் பலன் என்பதால் உயர்வானது. இந்த விளக்கம் தெரிந்து செய்தால் தெரியாமல் செய்வதை விட நல்லது.

பிறருக்கு உழைப்பதே வாழ்வாக உனக்கு அமைந்து நீ கீழ் மட்டத்தில் தள்ளப்பட்டிருந்தால், இன்று அதை நீ நிறுத்த வேண்டும். இதுவரை நீ அதை அறியாமலிருந்தால், இன்று உனக்கு அது புரிந்தவுடன், விழிப்பின் பலன் ஏராளம்.

********

பிறருக்கு உழைப்பது சேவை, தாராள மனப்பான்மை. அது உயர்ந்தது. திறனில்லாதவரை அனைவரும் வேலையிடுவார்கள். மறுக்க முடியாமல் செய்ய வேண்டியிருக்கும். அது இயலாமை. இது இரண்டும் போக, வலிமையற்றவன் தன் இயலாமையை அறியாமல், பிறருக்கு உழைக்கும் இலட்சியத்தை ஏற்றால், பூர்த்தியாவது இலட்சியமில்லை, தன் இயலாமையே பூர்த்தியாகும். காலத்திற்கும் அதை இலட்சியமாகவே எண்ணி மகிழ்பவருண்டு. நான் அவர் போன்ற வரைக் குறிப்பிடுகிறேன். வலிமையிருந்து சேவை செய்தாலும், இலட்சியமாகச் செய்தாலும், செய்பவர் உயர்ந்தபடியிருப்பார். வாழ்வின் கீழ்மட்டத்தில் தள்ளப்பட்டிருந்தால், அது திறனற்ற நிலையையே குறிக்கும். சற்று யோசனை செய்து, இனி நமக்கு இது தேவையில்லை என்று நிறுத்தினால், வேலை மிச்சம், ரூபாய் மிச்சம், ஏமாற்றம் மிச்சம். நல்லனவெல்லாம் இனி அவர் வீட்டில் நடக்கும்.

வாழ்வின் வெற்றியில் உச்சகட்டத்தை நீ அடைய வேண்டுமானால், நீ ஆரம்பக் காலத்தில் போற்றிப் புகழ்ந்த மனிதரோ, இலட்சியமோ, கொள்கையோ உதவும்.

********

இள வயதை அறியாத பருவம் என்கிறோம். அனுபவத்தைக் கொண்டு பார்த்தால் அறியாத பருவம் இளமைப் பருவம். ஆன்மீக விழிப்புக் கோணத்தில் பார்த்தால், இளம் வயதில் இவ்விழிப்பு அதிகம். ஆன்மீக விழிப்பை நாம் நம் பாஷையில் சொல்லும்பொழுது கபடு சூது அறியாத பருவம் (innocent age) என்கிறோம். அந்த வயதில் நாம் ஒரு கொள்கையை ஏற்றுக் கொண்டால், அதில் உண்மையிருக்கும். ஒருவரைத் தலைவராக மதித்து ஏற்றால் அதில் சத்தியமிருக்கும். வயதான பின் லாப நஷ்டம் கருதி அதை இன்று விட்டுவிட்டிருந்தால் மீண்டும் அதையே கருதி ஏற்றுக் கொண்டால், வாழ்வில் அதிகபட்ச வெற்றி கிட்டும். அதைவிட அதிக வெற்றி கொடுக்கும் சந்தர்ப்பம் இனி உனக்கு வரப் போவதில்லை.  

ஆன்மா மலர்ந்த நேரம் கிடைத்த சந்தர்ப்பமே வாழ்வில் அரியது. அதைப் புறக்கணித்து, தவறு என்று உணர்ந்து, மீண்டும் அதை நாடினால் அதிகபட்சப் பலன் கிடைக்கும்.

வயதால் அது அற்புதமான நேரம். அன்னையை ஏற்றுக் கொண்டபின் புனர் ஜென்மம் எடுப்பதால், அதன் பிறகு நாம் அறிந்து, விரும்பி ஏற்பவை அதே போன்றவை. சற்று உயர்வானவையும் கூட. அவற்றைப் பிறகு புறக்கணிக்கக் கூடாது. அன்னையை அறிவது தீட்சை பெறுவது. இரண்டாவது திருஷ்டி ஏற்படும் நேரம். அது சமயம் நம்மை நாடி வருவதும், நாம் நாடிச் செல்வதும் ஆன்மீக மெருகுடனிருக்கும். ஆதாயக் கணக்குப் போட்டு, நம் அனுபவத்தால் சீர்தூக்கிப் பார்த்து அதை விலக்குதலோ அதனின்று விலகுதலோ தவறு.

உன் குடும்பத்தினர், நண்பர்கள் மீது உனக்கு எந்த அளவு பொறாமையிருக்கிறது எனச் சோதனை செய். விலக்குதல் பலன் தரும்.

*********

இது போன்று பொறாமையில்லாதவருண்டு. இருப்பவரும் உண்டு. அக்கா பையன் M.A. பாஸ் செய்துவிட்டான் என்றால் மனம் பொறுக்காமல் இருப்பதுண்டு. தம்பி I ராங்க் வாங்கினால் அடுத்த நாள் அவனோடு சண்டை போட்டுப் பேசாமலிருக்கும் அண்ணன் உண்டு. பெற்றோர் திறமை, நல்ல குணத்தைக் கண்டு பொறாமைப்படும் குழந்தைகளும் உண்டு. இதுபோன்ற பொறாமையை மனம் ஏற்க முன் வந்தால், அது மனமாற்றம். அம் மனமாற்றம் வாழ்வில் ஏற்றத்திற்கு வழி செய்யும். இதையறியாமலிருப்பவருண்டு. அறிந்து ஏற்றுக் கொள்ள மனமில்லாதவருண்டு. அறிவது ஞானம், ஏற்றுக் கொள்வது (sincerity) சத்தியம். மாறுவது திருவுருமாற்றம்.

குறைவா, நிறைவா என்பதைவிட்டு அறியாததை அறிவது ஞானம் என்று கொள்ளவேண்டும். ஞானம் ஏற்பட்டபின் அதை ஏற்க மனம் விழையாது. ஏற்றால் மனத்தில் உண்மையிருக்கிறது என்று பொருள். ஞானம், சத்திய ஞானமாகிறது. ஏற்று மாற உள்ளே இடம் கொடுக்காது. மாற சம்மதப்பட்டு மாறினால், ஞானம், ஜீவியமாகிறது, சத்திய ஞானம் சத்திய ஜீவியமாகிறது. அதுவே அன்னை.

அர்த்தமற்ற முறையையும் முழுமையாக ஏற்றுப் பயின்றால் உன் நிலை 5 மடங்கு உயரும். இத்தலைப்பில் உனக்கு ஒத்துவரும் மிகப் பெரிய சூத்திரத்தை (உபாயத்தை) மேற்கொள்ள வேண்டும்.

********

உண்மை, போலி என்பவை தெளிவாகப் பிரிந்து நிற்கும். விஷயமும் தோற்றமும் அப்படியே. உண்மையையும், விஷயத்தையும் போற்றுகிறோம். போலியையும், தோற்றத்தையும் தவிர்க்கிறோம். நம்மிடம் உண்மையுமில்லை, விஷயமுமில்லை என்ற இடம் உண்டு. அதுபோன்ற இடத்தில் ஒன்றுமில்லாமலிருப்பதற்குப் பதிலாக தோற்றத்தை மேற்கொண்டால் பலன் தருவதுண்டு. அதையும் முழுமையாக ஏற்றால் பலமடங்கு பலன் நிச்சயமாகத் தெரியும்.

படிப்பு விஷயம், பட்டம் தோற்றம்; அழகு உண்மை, உடை போலி -; பண்பு உயர்ந்தது, (வெளி) பழக்கம் (external behaviour) சாரமற்றது; அன்பு உண்மை, உபசாரம் வெளித்தோற்றம்; தபஸ் சக்தி வாய்ந்தது, பூஜை தோற்றத்திற்குரியது, புரிவது விஷயம், மனப்பாடம் விஷயமில்லாதது; இருந்தாலும் தோற்றத்திற்கு உரியவற்றையும் முழுமையாகப் பின்பற்றினால் சிறந்த பலன் உண்டு.

பட்டத்தால் உயர்ந்தவர் உண்டு. உடையே நிலையை நிர்ண யிப்பதைப் பார்க்கிறோம். பழக்கத்திற்குண்டான பலன் பெரியது. உபசாரத்தில் பேர் போனவருக்குப் புகழ் மாலை கிடைப்பதுண்டு. பூஜை செய்து பெறமுடியாத பலனில்லை, மனப்பாடம் செய்து வாங்காத பரிசில்லை. 

தரத்தில் குறைவானதானாலும், அதற்கும் ஒரு சக்தியிருப்பதால் அதை முழுமையாக, உண்மையாகப் பின்பற்றுவதால் (நாமிருக்கும் நிலை அடி பாதாளம் என்பதால்) நம் நிலை 5 மடங்கு உயரும். உண்மைக்கே உயர்வு என்பது ஏற்கனவே உயர்ந்த நிலையில் உச்ச கட்டத்திலிருப்பவருக்கு.பொதுவாக நாம் மிகத் தாழ்ந்த நிலையிருப்பதால், மனப்பாடமே பெரும்பலன் தருகிறது. உடையே உயர்த்த முடியும்.

படிப்பது, சமைப்பது, துணி துவைப்பது, (packing) பொருள்களைக் கட்டுவது, டைப்பிங் போன்ற எல்லாவற்றிலும் நம் திறமையை 25% அதிகப்படுத்துவது பயன் தரும்.

********

குடும்பங்களின் தரத்தை 1 முதல் 10 வரை பிரித்தால் 5ஆம் நிலை குடும்பத்திற்கும், 6ஆம் நிலை குடும்பத்திற்கும் இது போன்ற செயல்களில் திறமை 25% வித்தியாசமாக இருக்கும். இந்த 25% திறமையை அதிகப்படுத்தினால் குடும்பம் ஒரு நிலை உயரும். ஏதாவது ஒரு விஷயத்தில் உயர்த்தினால் இப்பலன் கிடைக்காது. அதுவே முடியாது. எல்லா விஷயங்களிலும் உயர்த்தினால் தான் குடும்பநிலை உயரும்.

சிறு விஷயமானாலும் எல்லா விஷயங்களின் தரத்தை உயர்த்த பெருமுடிவு தேவை. பெருமுடிவு சிறு விஷயத்தில் வெளிப்பட்டால் எல்லா இடங்களிலும் தெரியும். எல்லா இடங்களிலும் தெரிவதால் அது பெரியதாக இருக்கும். பெரும்பலன் தரும்.

அடுத்தவர்க்கு நல்லது செய்வதை அடிக்கடி செய்ய முனைந்தால் நீ வானளாவ உயர்வாய்.

*********

மனிதன் நல்லவன். அவன் நல்ல குணத்திற்கு அளவுண்டு. அந்த அளவைச் சற்று உயர்த்தினால் பலன் உயர்த்திய அளவுக்கு வாராது. ஏராளமான அளவுக்கு உயரும். நல்ல குணம் சிறியதானாலும், முக்கியமானதால், அதன் பலன் பெரியது. முதலாளி வீட்டுப் பெண் தோட்டத்திற்கு வந்தாள். அங்குள்ள சிறுவனுக்கு 3 சாக்கலேட் கொடுத்தாள். அடுத்த நிமிஷம் அவன் அக்கா ஓடி வந்தாள். வேறு சாக்கலேட் இல்லை. "டேய், எனக்கு ஒன்று கொடுடா" என்று கெஞ்சினாள், மூன்று சாக்கலேட் வைத்துள்ள சிறுவனுக்கு அக்காவுக்கு ஒன்று கொடுக்க மனம் வரவில்லை. மனம் மற்றவர்க்கு உதவி செய்ய எல்லோருக்கும் வாராது. தனியாகக் காரில் போகும் பொழுது, வழியில் நிற்பவரை 10 மைல் அழைத்துப் போவது தன் சொத்தெல்லாம் கொடுப்பதுபோல் நினைப்பவரும் உண்டு. பரீட்சைக்கு அவரசமாகப் போகும் மாணவன் மோட்டார் பைக்கை ஸ்டார்ட் பண்ண முடியாமல் திணறுகிறான். அவசரம் கெடுக்கிறது. அருகிலுள்ளவருக்கு அவன் செய்யும் தவறு தெரிந்தால், அதை எளிதில் ஸ்டார்ட் பண்ண முடியும் என்றால் அந்த உதவியைச் செய்பவர் பலர். கேட்டால், "என்னை ஏன் உன் வேலையைச் செய்யச் சொல்கிறாய்?" என்று எரிந்து விழுபவர் சிலர்.  9.30 மணிக்குப் படுக்கையில் படுத்துவிட்டபின் ஃபேன் போட மறந்து விட்டதால், எழுந்து போடவேண்டும். அங்கு வரும் அண்ணனை போடச் சொன்னால், அந்த ஒரு சிறு காரியத்தைத் தம்பிக்குச் செய்வது சுயநலமிக்கு மண்டை வெடித்து விடும் போலிருக்கும். கேட்டாலே ஆத்திரம் வரும்.

நல்லவருக்கும், உதவி செய்பவர்க்கும் ஓர் அளவு உண்டு. அதைச் சற்று உயர்த்தினால் கோபம் வரும். ஆபீஸ் மேஜையில் இருக்கும் 15 பேப்பரில் இரண்டு பேப்பருக்கு உரியவர் வந்திருக்கிறார்கள். பொதுவாக மாலை கையெழுத்துப் போடுவது வழக்கம். இந்த இரு பேப்பரில் கையெழுத்துப் போட்டுவிட்டால் அவர்களிருவரும் இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டாம் என்றால், அதை இதுவரை செய்யாதவருக்கு, மனம் வாராது. "பிறருக்கு நான் உதவி செய்ய நான் என்ன ஏமாளியா?" என்ற கேள்வி மனதில் எழும். இதை மாற்றி உதவி மனப்பான்மையுடன் செயல்படுவது அவரைப் பொருத்தவரையில் ஒரு மனப்புரட்சி, யுகப்புரட்சி எனவும் சொல்லலாம். காரியம் சிறியது, பலருக்கு ஒன்றுமில்லாதது, ஆனால் இவருக்கு முடியாதது. முடியாததை முடிய வைப்பது புரட்சி. புரட்சி என்பதால் ஏராளமான சக்தி எழும். அதை தினமும் ஒரு முறை செய்தால், வாழ்வில் புரட்சி ஏற்படும்.

"4பேர் உள்ள வீட்டில் சமைத்த சாப்பாட்டை மகனுக்கு எடுத்துப் போட்டால் நான் குறைந்து விடுவேன். அவனே போட்டுக்கொண்டு சாப்பிடட்டுமே" என்ற தாயாருக்கு மகனை எதிர்பார்த்து தானே சாதம் போட முன் வருவது பெரிய மாற்றம். அந்தக் குணம் உள்ளவர்க்கு அந்த மாற்றம் பெரியது. அதை நாடினால், அடிக்கடியும் அதுபோன்ற காரியத்தைச் செய்ய முயன்றால், அவர் மனநிலையும், வாழ்வு நிலையும் உயரும்.

நம்மைவிட உயர்ந்த நிலைமையோடு தொடர்பு கொண்டால், குறையான பிரச்சினை எதிர்பாராமல் தீரும். தீரும் வகை உயர்ந்த நிலையைப் பிரதிபலிக்கும்.

********

பண்புள்ள குடும்பத்தில் படிப்பின் பெருமைக்காக கூலிக்காரக் குடும்பத்தில் சம்பந்தம் செய்து 100 வருஷப் பலனை ஒரு நிமிஷத்தில் அழித்துக் கொண்டனர். அடுத்த சம்பந்தம் செய்ய இவர்கள் முனையவில்லை. ஒரு மகானிடம் தொடர்பு இருந்ததால், அவரே இதில் ஆர்வம் காட்டினார். ஆர்வம் பலனாக முடிந்தது. பலன் சம்பந்தமாக மட்டும் இல்லாமல், உயர் பண்புள்ள சிறந்த குடும்பமாகவுமிருந்தது. முதல் சம்பந்தத்திற்கு நேர் எதிராக இருந்தது.

மகானுடைய கடமை ஆசீர்வாதம். நெருக்கம் காரணமாகப் பெரியவர் குடும்ப விஷயத்தில் அக்கறை காட்டினார். திருமணம் வாழ்க்கைக்குரியது. மகான் நிலை உயர்ந்தது. திருமண ஏற்பாட்டில் உயர் நிலையில் உள்ளவர் நேரடியாக அக்கறை கொண்டதால், நிலைமை உயர்ந்தது. பிரச்சினை தீர்ந்தபொழுது முதலில் ஏற்பட்ட குறையை ஈடுகட்டும் வகையிலிருந்தது.

நம்மைவிட உயர்ந்த நிலையோடு தொடர்பு கொண்டால், விஷயத்தின் தரம் உயரும்.

அழிவைத் தரும் முறைகளை வலியுறுத்திப் பின்பற்றினால் அழிவு நிச்சயம்.

*********

இது உலகம் அறிந்ததாயிற்றே என்று தோன்றுகிறது. ஆனால் இன்று நமக்குத் தெரிந்த 15பேர் கெட்டுப் போயிருந்தால், அதில்

 

  • தீட்டிய மரத்தில் கூர்பாய்ச்சுவது,
  • குருத் துரோகம்,
  • வாழ்விலுள்ள ஒரே ஆதரவைக் கேலி செய்து ஒதுக்குவது,
  • குரங்கு ஆப்பைக் கழற்றி உயிரை இழந்தது,
  • பொன் முட்டையிடும் வாத்தை அறுத்தது,
  • உணவூட்டும் கையைக் கடிப்பது,
  • தான் சாக மருந்து சாப்பிடுவது,
  • வாழும் பெண்ணைத் தாயார் கெடுப்பது,
  • கருடா சௌக்கியமா என விசாரிப்பது,
  • அருள் பிரசாதத்தைப் புலை நாயின் முன் வைப்பது,
  • மெய்யை இலட்சியமாகக் கொண்டு அதை அடைய பொய்யைக் கருவியாக்குவது,
  • உயிர்க் காப்பாற்ற வந்த டாக்டரை, வைத்திய செலவு செய்ய எதிர்பார்ப்பது,

ஆகியவை அறிவீனம். அவற்றைப் பின்பற்றினால், அழிவு வரும் என்பதை உலகம் ஆயிரம் ஆண்டுகட்கு முன் அறிந்துள்ளது.  

30, 40 வயதானவர்கள் தங்கள் அனுபவத்தில் இவற்றிற்கு எடுத்துக்காட்டாக உள்ள நிகழ்ச்சிகளை 5, 6ஆவது நினைவுபடுத்த முடியும். நம் சொந்த வாழ்விலே அது இருக்கவும் முடியும். மற்றவர்கள் நமக்குப் பிரச்சினையில்லை. நாமே நமக்கு முக்கியம். இது நம் வாழ்வில் இருந்தால் அதை விலக்க நாம் முன் வர முடியுமா? என்பதே கேள்வி.

திவாலான மனிதன் இழந்ததைப் பெற முயல்வதைப் பார்த்தால் மனித முயற்சியின் தீவிர உச்சகட்ட நிலைகள் விளங்கும். உன்னாலும் அதுவே முடியும். ஆனால் நீ சும்மா இருக்கிறாய். அதே முயற்சியை முன்னேற நீ எடுக்க முன் வரவேண்டும்.

*********

  • உயர்ந்தவன் சுபாவத்திலேயே உயர்ந்தவன் என்பது நம் கருத்து.
  • நேரம் வரும்பொழுது முயற்சி வெளிப்பட்டால் அது தவறு என்று தெரிகிறது.
  • ஆதாயத்திற்காக மனிதன் சிந்தித்தால் இதுவரை இல்லாத அறிவு வரும்.
  • கடுமையான நேரம், அவசரமான காரியம், ஆதாயமான வாய்ப்பு, கிடைக்காத சந்தர்ப்பம், நினைக்க முடியாத நிலை, வந்தால் மனிதன் எவனுக்கும் வரும் சுறுசுறுப்பு, யோசனை, சமயோசிதம், சாதுர்யம், சாமர்த்தியம், நினைவாற்றல், இதுவரை எவர்க்கும் இல்லாத அளவுக்கு ஏற்படும்.
  • இவ்வளவும் தானே செயல்படாது.
  • பிறருக்காகச் செயல்படாது.
  • கடமைக்காகவும், இலட்சியத்திற்காகவும் செயல்படாது.
  • நடக்கும் எனத் தெரிந்தால் வெளியே வரும்.
  • நம்பிக்கையிருந்தால் நல்லனவெல்லாம் மேலே வரும்.
  • தனக்கு மட்டும் கிடைக்கும் என்றால், அபாரசக்தி வெüப்படும்.
  • இதுவரை அது உன் வாழ்வில் நடந்திருக்கிறதா எனப்பார்.
  • நிச்சயமாக இருந்திருக்க முடியும்.
  • இல்லாவிட்டாலும் இனி முடியும்.
  • ஏன் நீ அதைச் சாதிக்கக் கூடாது?
  • திவாலான பின் எடுக்கும் முயற்சியை, இப்பொழுது எடு.
  • அது உன்னை உச்சகட்டத்திற்குக் கொண்டு போக உதவும்.
  • நீ உன்னையறியவில்லை என்பதை அறிய வேண்டும்.
  • உன்னால் எதுவும் முடியும் என்பதை அறிய வேண்டும்.
  • உன்னால் முடிந்ததை நீ பெறாமலிருப்து சரியில்லை.
  • இதை உடனே செய்ய வேண்டும்.
  • உடனே செய்தால் புரிகிறது என்று பொருள்.
  • தாமதித்தால் புரியவில்லை என்று பொருள்.

பயத்தால் நீ பணிந்தால், அல்லது வேறெந்தக் காரியம் செய்தாலும், அதைப் புரிந்து கொண்டு அறிவால் செய்யப் பழகிக்கொள்.

*********

போலீஸ்காரன் டிராபிக் சிக்னலில் உன்னை நிறுத்தினால் போலீஸுக்குப் பயந்து நிற்பது உன் பழக்கமானால், அதைச் சற்று விளங்கிக் கொள்ளவேண்டும். நாம் மட்டும் நிற்கவில்லை, அனைவரும் நிற்கிறார்கள், நிறுத்துவது அவன் கடமை, நிறுத்தாவிட்டால் குழப்பம் ஏற்பட்டுத் தொந்தரவு, விபத்து ஏற்படும். நான் போலீஸுக்குப் பயப்படுவது அவசியமில்லை, பயத்திற்குத் தேவையில்லை, நெடுநாளாக நான் போலீஸைக் கண்டு பயப்பட்டேன். இன்றும் பயப்படுகிறேன். என்னைப் போலீஸ் நிறுத்துவதற்கும், பயத்திற்கும் இங்குச் சம்பந்தமில்லை என்ற தெளிவு ஏற்பட வேண்டும். 

பயத்தால் நாம் பணிவது பல இடங்களில் பயந்து நேர்மையாக இருக்கிறோம். பயந்து கடமையைச் செய்கிறோம், பயந்து நல்லவனாக இருக்கிறோம். பிள்ளைகள் அடங்காவிட்டால், "கொஞ்சமாவது பயமிருக்கிறதா பார்" எனக் கடிந்து கொள்கிறோம். "நான் கடவுளுக்குப் பயந்து நடப்பவன்" என்பது அனைவரும் நினைப்பது. பயம் வந்தால் அங்கு பக்திக்கு இடம் இல்லை.

பாவத்தைவிடப் பயம் பொல்லாதது. பாவம் செய்து மீளலாம். பயத்தை ஏற்றபின் மீள முடியாது. பயம் நம்மைச் சூழ்நிலையிலிருந்து பிரித்து, சொந்த முயற்சியால் காப்பாற்றும் உணர்வு. வெளியில் உள்ள பயம் வீட்டிலிருக்காது. வெளியூரில் உள்ள பயம் உள்ளூரிலிருக்காது. சூழ்நிலையிலிருந்து பிரிந்தால் பயம் வருகிறது. பரமாத்மாவிடமிருந்து ஜீவாத்மாவை அகந்தை பிரித்தது. அதன் விளைவாகப் பயம் உற்பத்தியாயிற்று. பரமனை நோக்கிச் செல்லும் பாதையில் பயத்தை விட்டொழிப்பது முக்கியம்.

பயத்தால் ஒருவர் செய்யும் அவ்வளவு காரியங்களையும், பயத்தை விட்டொழித்துச் செய்தால் படிக்காத கூலிக்காரன் பட்டம் பெற்றவன் நிலையை அடைந்தது போலிருக்கும்.

சமூகத்திற்காகச் செய்வதை நீ மனச்சாட்சிக்காகச் செய்ய வேண்டும்.

**********

  • ஆசைக்காகச் செய்வதைக் கடமைக்காகச் செய்.
  • கடமைக்காகச் செய்வதை ஆர்வத்திற்காகச் செய்.
  • ஆர்வத்திற்காகச் செய்வதை அன்பிற்காகச் செய்.
  • அன்பு மனச்சாட்சியை நடத்தினால் மனச்சாட்சிக்காகச் செய்.
  • மனச்சாட்சிக்காகச் செய்வதை மனம் உயர்வதற்காகச் செய்.
  • மனத்திற்காகச் செய்வதை ஆன்மாவுக்காகச் செய்.
  • ஆன்மாவுக்காகச் செய்வதை அன்னைக்காகச் செய்.
  • அன்னைக்காகச் செய்வதை ஆண்டவனுக்காகச் செய்.
  • ஆண்டவனுக்காகச் செய்வதை உன்னுள் உள்ள ஆண்டவனுக்காகச் செய்.
  • அவனுக்காக நீ செய்வதைவிட நீயே அவனாக மாறி நீயே அதைச் செய்.
  • மனிதன் இறைவனாவதே பரிபூரண யோகம்.

முன்னேற்றம் வேண்டும் என்று ஆர்வமாக முடிவு செய்தவராக இருந்தால் அதை ஒரு மந்திரமாக, "நான் நிச்சயம் முன்னேற வேண்டும்" என்று எழுதி இடைவிடாமல் அதை உச்சரித்தபடி இருந்தால் அதன் மந்திரச் சக்தி மலை போல எழும். அம்முன்னேற்றத்தை அதுவே பெற்றுத் தரும்.

*******

வாயால் உச்சரிக்க ஆரம்பித்ததை, மனதில் மௌனமாக ஆனால் இடைவிடாமல் உச்சரிக்க வேண்டும். மனத்திலும் சொல் அழிந்து மௌனமாக எண்ணம் சொல்லில்லாமல் முன் போலவே இடை விடாமல் மனதை ஆட்கொள்ள வேண்டும். இக்கருத்து உன் உணர்ச்சியைக் கிளறி, எதிர்காலம் உயர்வானது என்ற உணர்வைக் கொடுக்க வேண்டும். இந்த ஆர்வம் உணர்வு மையமான நெஞ்சுக்குப் போய் நெஞ்சை நிரப்ப வேண்டும். தொடர்ந்து ஆர்வம் உடலை எட்டித் தொட்டு நின்று நிலவி உடலெல்லாம் பரவி, அணுக்களுக்குள் சென்று, அங்கிருந்து ஆர்வக்குரல் அமைதியான மௌன சக்தியாக எழவேண்டும். உடலை ஆர்வம் தொட்டவுடன் தானே அது தன்னைப் பூர்த்தி செய்து கொள்ளும். இது தவமுயற்சி. இம்முயற்சி முழுப்பலனுள்ள முன்னேற்றத்தைத் தரும். இவற்றைப் பலநிலைகளாகப் பிரித்துக் கீழ்க்கண்டவாறும் சொல்லலாம்.

  1. முடிவு,
  2. முடிவின் முழுமை,
  3. முடிவை உணர்வு ஆர்வமாக ஏற்றுக் கொள்வது,
  4. முடிவுக்கு உருவம் கொடுத்து மந்திரமாக எழுதுவது,
  5. வாயால் உச்சரிப்பது,
  6. மௌனமாக மனதால் சொல்வது,
  7. சொல்லில்லாமல் மனதால் உச்சரிப்பது,
  8. மனம் முழுவதும் மந்திரத்தால் ஆட் கொள்ளப்படுவது,
  9. உணர்வு ஏற்பது,
  10. உணர்வு மனம்போல் முடிவை உச்சரிப்பது,
  11. உடல் உணர்வும் அதனால் ஆட்கொள்ளப்படுவது,
  12. உடல் உணர்வே முன்னேற்றத்தை ஆர்வமாக எதிர்பார்ப்பது,
  13. உடலே இலட்சியத்தை விரும்பி ஏற்பது,
  14. உடல் இலட்சிய உணர்வால் நிரம்புவது,
  15. முன்னேற்றமே என் உயிர் மூச்சு என்றாகி உடல் முன்னேற்றத்திற்காக இரவு பகலாக ஏங்குவது.

முன்னேற்றத்திற்கு இதுபோல் செய்வதை, நாம் விரும்பும் எதற்காகவும் செய்யலாம். முறை ஒன்றே. பலன் முழுமையான ஈடுபாட்டைப் பொருத்தது.

தொடரும்.

ஜீவிய மணி

சாதனை என்பது மனமாற்றம்.



book | by Dr. Radut