Skip to Content

“அன்பர் உரை'' அன்னையின் ஜென்ம தினம்

(21.02.2000 அன்று சென்னை-மாம்பலம் தியான மையத்தில் திருமதி.விஜயா நாராயணன் நிகழ்த்திய உரை)

அன்னை உலகில் அவதரித்தபொழுது, அன்னை ஜீவியம் உலகில் அவதரித்தது. எல்லா ஜீவராசிகளும் அடுத்த உயர்நிலையில் பிறந்தது அன்னை ஜீவியம் பிறந்ததாகும். Adult suffrage நாட்டில் ஓட்டுரிமை வந்தது எனில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு புது உரிமை வந்துள்ளது போல், அன்னையின் அவதாரம் செயல்படுகிறது.

ஒவ்வோர் ஆண்டு அன்னை ஜென்ம தினத்தன்று அனைத்து ஜீவராசிகளும் அடுத்த உயர்ந்த நிலையில் ஜனிக்கின்றனர்.

எந்தச் செயலுக்கும் இரு முனைகளுண்டு. T.V. எனில் மிகச்சிறியதிலிருந்து மிகப் பெரியதுவரை உள்ளது. நாம் இந்த நாளில் குறைந்தபட்சப் பலனையாவது, அதிகபட்சப் பலனையாவது பெறலாம். எந்த நிலைக்குரிய பலனைப் பெறுகிறோம் என்பது நாம் நிர்ணயிக்க வேண்டும். எத்தனை விதமான பலன்கள் எந்தெந்த நிலைகளில் உள்ளன எனத் தெரிவது உதவும். எல்லோரும் எல்லா நிலைகளையும் எட்ட முடியும் என்றாலும், நடைமுறையில் நாம் நமக்கு ஒரு வரையறையை ஏற்படுத்துகிறோம்.

ரூ.8000 சம்பாதிக்கும் ஊழியர், அவர் குடும்பத்தை நிர்வாகம் செய்யும் மனைவி, 1000ரூபாய் சம்பாதிக்கும் சிறு வேலை செய்பவர், 8 கோடி முதலுக்கு அதிகாரி, பூக்கடையில் ரூ.25,000 சம்பாதிப்பவர், பெருமுதலாளி என பல வகையினர் உண்டு. உச்சகட்டத்தில் சத்திய ஜீவியமும், குறைந்தபட்சம் பிரார்த்தனை பலிப்பதாகவும் கொண்டால், குறைந்தபட்ச நிலையிலுள்ளவர்க்கு "சத்திய ஜீவியம்'' பலிப்பது என்றால் என்ன? அது சாத்தியமா? வறுமையான ஆசாரமானவர் வீட்டில் வரன் என வாராதபொழுது வயது வந்த இரு பெண்களுக்கு பிரார்த்தனையால் வரன் வருகிறது. தூயமனமுடையவர், பரந்த தியாக உள்ளம் சத்திய ஜீவியத்தை எட்டுகிறது. வரன் முடிகிறது. செலவை பிள்ளை வீட்டார் ஏற்கின்றனர். இரு பெண்கட்கும் திருமணம். பையனுக்கு உபநயனம். வரன் பிரார்த்தனைக்கும், சத்திய ஜீவியம் முறைக்கும் பலித்தது. தூய்மைக்குரிய பரிசு. சட்டங்கள் எவை:-

  1. பிரார்த்தனை பலிக்கும்.
  2. மனத்தின் உயர்வுக்கேற்ப அன்னையின் உயர்வு செயல்படும்.
  3. பலன் நம் நிலைமைக்கும், முறை நம் தூய்மைக்குமாகவும் அமையும்.
  4. உச்சகட்ட பலனும், உச்சகட்ட உயர்வும் சேரலாம் எனினும், நடை முறையில் காண்பதில்லை. இருக்கக்கூடாது என்பது சட்டமில்லை.

மேற்சொன்ன எந்த வகைப் பலனும் அன்னை ஜென்ம தினத்தில் அதன் சிறப்புக்கேற்ப பலிக்கும். ரூ.8000 சம்பாதிக்கும் ஊழியருக்கு 10,000 ரூபாய் சம்பளம் பிரார்த்தனையானால் ஜென்மதினத்தில் அது 20,000 ரூபாயாகவோ, மிகப் பெரிய கம்பெனியில் ரூ.10,000 மாகவோ பலிக்கும். 20,000 ரூபாய் சம்பளம், மிகப்பெரிய கம்பனியில் கிடைப்பது பலனும், உயர்வும் உச்சகட்டத்தில் சேருவதாகும். எந்தப் பிரார்த்தனையும் பலிக்கும். ஜென்மதினத்தில் அதிகமாகப் பலிக்கும்.

அன்னை ஜென்மதினத்தன்று அன்பர்கள் அதிர்ஷ்டம், அருள், பேரருள் பெறலாம். அதிர்ஷ்டத்தை மட்டும் விவரிக்கிறேன். மனத்திண்மை, உயர்வுக்கேற்ப அருள் செயல்படும். அதிர்ஷ்டம் என்பதை எத்தனை வகைகளாக அறிவோம் என்று நாம் அறிவோம்.

ரூ.8000 சம்பாதிப்பவர் அதிர்ஷ்டம் என 8 லட்சரூபாய் அல்லது 80 லட்சத்தைக் கருதலாம். பேராசையின்றி அவர் திறமைக்கு, நிலைமைக்கு எது அதிர்ஷ்டம் என அவர் முடிவு செய்கிறாரோ அதுவே அவருக்கு அதிர்ஷ்டத்திற்குரிய தொகையாகும். அதிர்ஷ்டம் என்பது பெரிய கொள்கை. நாம் நம் வாழ்வில் அதிர்ஷ்டத்தை உற்பத்தி செய்ய முடியும் என்பது இதுவரை உலகம் கேள்விப்படாதது. எது பெரிய தொகை என நாம் மனதால் கருதுகிறோமோ அதைப் பெறுவது அதிர்ஷ்டம் எனக் கொள்வோம். பிரச்சினை தீர்வது,  முக்கியக் காரியம் கூடிவருவது, வாய்ப்பு பலிப்பதும் அதிர்ஷ்டமானாலும், தொகையையே உதாரணமாக எடுத்துக்கொள்கிறேன். இங்கு கூறும் முறையால் இத்தொகை ஒருவருக்குப் பலித்துவிட்டால், அம்முறையை அவர் தெளிவாகக் கண்டால், அதே முறை அதிர்ஷ்டத்தை நிரந்தரமாக்கவும், அருள், பேரருள் பெறவும் உதவும். முறை:-

  1. தொகையை நிர்ணயிப்பது.
  2. காலத்தைக் குறிப்பிடுவது.
  3. நம் மனநிலையை அறிவது.
  4. அன்னையின் பல நிலைகளை அறிவது.
  5. அழைப்பு, பிரார்த்தனை, சமர்ப்பணம்.
  6. பூர்த்தியாகும் நிபந்தனை.
  7. பூர்த்தியாகச் சுருக்கமான வழி.
  8. அடிப்படை நிபந்தனை.
  1. தொகை : நம் வாழ்வுநிலை, சமூகநிலைக்கும் நம் மனம் பலிக்கும் என நம்பும் தொகை நம் அதிர்ஷ்டத்திற்குரிய தொகையாகும். அதை நாமே நிர்ணயம் செய்யவேண்டும். அதிர்ஷ்டம் என்பது பெரியதன்றோ? நாம் நிர்ணயிப்பது சிறியதாயிற்றே. அது எப்படி அதிர்ஷ்டமாகும் எனக் கேள்வி எழுப்பலாம். கற்பனை, கற்பனைக் கோட்டையாக இல்லாமல், தொகை ஆசையாலன்றி அறிவால் நிர்ணயிக்கப்பட்டால், அது அதிர்ஷ்டத்திற்குரியதாயில்லை எனப் பட்டால், அதிர்ஷ்டத்திற்குரிய தொகையாக மாற்றப்பட வேண்டும். உதாரணமாக 8000ரூபாய் சம்பாதிப்பவர் 8 லட்ச ரூபாயையும், 8 கோடி முதலாளி 80 கோடி ரூபாயையும் அவ்வாறு நிர்ணயம் செய்வதாகக் கொள்வோம்.
  2. காலம் நிர்ணயிக்கப்படுவதற்கும் நிபந்தனை மேற்சொன்னதேயாகும். ஆசை அவசரமின்றி, அர்த்தமற்றதாக இல்லாமல் காலம் நிர்ணயிக்கப்பட வேண்டும். அது தொழிலின் சீசனாக இருக்கலாம். நம் நிலையையொட்டிய நேரமாகவுமிருக்கலாம்.
  3. மனநிலை - மீண்டும் முன் சொன்னவையே நிபந்தனைகள். அதிர்ஷ்டம் எவருக்கு வந்தாலும் நமக்குச் சந்தோஷம் வருவது பலிக்கும் மனநிலை.
  4. அன்னையின் பல நிலைகள் - உடல், உணர்வு, மனம், ஆன்மா, சத்தியஜீவியம் ஆகிய நிலைகளில் அன்னை இருக்கிறார். எந்த நிலையிலிருந்து அன்னை பலிக்கின்றாரோ அதற்குரிய பலன் வரும்.
  5. அழைப்பு, பிரார்த்தனை, சமர்ப்பணம் ஆகியவற்றுள் ஒரு முறையை நாம் கைக்கொள்ள முடிவு செய்ய வேண்டும்.
  6. அகச்சூழல், புறச்சூழல் கூடிவரும் அறிகுறிகளைக் காட்டவேண்டும்.
  7. சுருக்கமான வழி, நமக்கு அதிர்ஷ்டம் வருமுன் அடுத்தவர் ஒருவருக்கு வர மனம் விழைவது.
  8. மனம் தூய்மையாக இருக்கவேண்டும். குறையுள்ள மனம் விலக்கு.

மேற்சொன்னவை குறைவர இருந்தால், அதிர்ஷ்டம் பெறும் முடிவை எடுக்க வேண்டும். முடிவு சலனமற்றதாக இருப்பதுடன், நாளுக்கு நாள் வளர்வதாக இருக்கவேண்டும். முடிவு முழுமையானதானால், மனம் முடிவை ஏற்கும். ஏற்றபின் முடிவு நழுவாது. மனம் முழுமையாக முடிவை ஏற்றதற்கு மற்றோர் அடையாளம் அமைதி எழுந்து வளர்வதாகும், இனி இம்முடிவு மனதில் எண்ணமாக எழும்தொறும், ஒரு முறை தவறாமல் சமர்ப்பணம் செய்ய அடுத்த முடிவு தேவை.

என்று ஒருமுறை தவறாமல் சமர்ப்பணம் பலிக்கிறதோ அன்று அத்தொகை நம்மை வந்து அடையும்.

மீண்டும் ஒரு முறை சில நிபந்தனைக்குரிய விவரங்களைக் கூறுவது உதவும்.

  • சந்தேகம் என்று எழக்கூடாது. எழுந்தால் மீண்டும் முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். 
  • தூய்மை என்பது The Mother என்ற நூலில் rejection என பகவான் சுமார் 30 குறைகளைக் கூறுகிறார். அவை அனைத்தும் விலகுவது யோகம் பலிப்பதாகும். இந்த அதிர்ஷ்ட முயற்சியைப் பொருத்தவரை அவற்றுள் எதுவும் உள்ளே தலைகாட்டக்கூடாது.
  • Mother, Mother என்று பேப்பரில் ராமஜெயம் போல் எழுதுவது உடலுக்குரிய முறை. வாயால் Mother என்பது vital உணர்வுக்குரிய முறை. மனத்தால் Mother என்பது மனத்திற்குரியது. மௌனமாகி தானே Mother என்ற சொல் உள்ளே எழுவது ஆன்மாவுக்குரிய முறை. அதிர்ஷ்டத்தை நாடும் மனம் தானே அதை மறந்து அன்னையை நாடுவது சத்திய ஜீவியத்திற்குரிய முறை. சமர்ப்பணமும் சத்திய ஜீவிய முறையாகும்.
  • நாம் எந்த முறையைக் கையாள்கிறோமோ அந்நிலைக்குரிய முறை அந்நிலைக்குரிய அன்னையைச் செயல்பட வைக்கும்.
  • எனக்கு ஒரு கண் போனாலும் அடுத்தவனுக்கு 2 கண் போக வேண்டும் என்பது மனிதமனம். எனக்கு வருமுன் அதிர்ஷ்டம் அடுத்தவர்க்கு வரவேண்டும் என்ற மனநிலை அன்னைக்குரிய மனநிலை. அது ஒருவராக இருக்கலாம், பலராக இருக்கலாம், நெருங்கியவராக இருக்கலாம், தூரத்தினுள் உள்ளவராகவும் இருக்கலாம். அது நம்மைப் பொருத்தது.
  • சூழல் - மனம், புறம் - நம் மனநிலையைப் பிரதிபலிக்கும். அது சுட்டிக் காட்டுவதை மனம் ஏற்று அதற்கேற்ப மாற முன்வருதல் அவசியம்.

அகமும் புறமும் அழகாக அமைதியாக இருப்பது தூய்மைக்குரிய லட்சணம்.

  • அருளை நாடினால், அதிர்ஷ்டம் அதற்குட்பட்டது தானே வரும்.
  • அன்பை வெளிப்படுத்தினால் அருள் நம்முள் வரும்.
  • அன்பு (divine love) என்பது அழகான பழக்கம் மட்டுமன்று, நல்ல சொல் மட்டுமன்று, நம்மைப்போல் பிறரைக் கருதுவது மட்டுமன்று. நம்மை மீறி எழுவது, அனைவரையும், அனைத்தையும் நாடு வது, பலன் எதிர்பாராதது, கொடுக்காமலிருக்க முடியாது என்பது.



book | by Dr. Radut