Skip to Content

அஜெண்டா

Vol III, P.96 In the subtle physical you see in a man qualities that you miss

நம் அறிவுக்குப் புலப்படாத குணங்கள் ஒருவருடைய சூட்சும உடலில் வெளிப்படும்

Aura என்று ஆங்கிலத்தில் கூறுவதை நாம் ஒருவரைச் சுற்றியுள்ள சூழல் என்று குறிக்கலாம். ஓர் அமெரிக்கப் பெண்ணுக்குப் பிறருடைய "சூழலை''க் காணும் சூட்சுமத்திறன் உண்டு. சுமார் 20, 30 வருஷத்திற்கு முன் அவர் ஆசிரமம் வந்த பொழுது சாதகர்கள், பக்தர்களைச் சுற்றியுள்ள ஒளியைப் பார்த்து வியந்தார். ஒரு சிலரைச் சுற்றி தங்க நிறமும், பலரை வெண்மையான ஒளியும் சூழ்ந்திருப்பதைக் கண்டார். தங்கமயமான ஒளி சத்திய ஜீவிய ஒளி. வெண்மை நிறமானது அன்னைக்குரியது.

அவருக்குச் சூட்சுமப்பார்வையிருந்ததால் இவற்றைக் காண முடிந்தது. அன்பர்கள் அன்னையை ஆழ்ந்து விரும்பும் நேரம் அவர் நெஞ்சில் பொன்னொளி  எழும். முகத்தில் பிரகாசம் தெரியும். அவரே சில மணி நேரத்திற்குப்பின் எரிச்சல்பட்டால், அவ்வொளி  விலகும், பொறாமைப்பட்டால், முகம் கருவடையும். கர்வமாக நினைத்தால் அவர் அகந்தை எழுந்து அவரைச் சூழ்ந்து கொள்ளும்.

நாம் யாரிடம் தைரியமாகப் பழகலாம், யாரை விலக்க வேண்டும் என்று அடிக்கடியும் பலர் கேட்கின்றனர். சூட்சுமப்பார்வையுள்ளவர்க்கு இக்கேள்வி எழாது. யாரைச் சுற்றி ஒளியுள்ளது, எவர் முகம் பேயறைந்தது போலிருக்கிறது என்பது அவருக்கு உடனே தெரியும். அப்பார்வையில்லாதவர்க்கு கீழ்க்கண்ட கருத்துகள் உதவும்.

தைரியமாக நாம் பழகக் கூடியவர்கள்

அடியோடு விலக்கப்பட வேண்டியவர்கள்

1) முகம் பிரகாசமாக உள்ளவர்

பேயறைந்த முகத்தினர்

2) நம்மிடம் கனிவாக, இதமாகப் பழகுபவர்கள்

மனம் புண்படும்படி நடப்பவர்கள்

3) எவரை நினைத்தால் மனம் இதமாக இருக்கிறதோ அவர்கள் நமக்கு நல்லவர்கள்

யாருடன் பேசினால் உடல் சோர்ந்து விடுகிறதோ அவர்கள் சக்தியை விரயம் செய்பவர்கள்

4) யாருடைய தொடர்பு நல்லதை விளைவிக்கிறதோ அவர்கள் நமக்கு நல்லவர்கள்

யாருடைய தொடர்பு தவற்றை எழுப்புகிறதோ அவர் நமக்கு வேண்டாதவர்கள்

5) அன்னையை மட்டும் நம்புபவர்கள்

அன்னை மீது நம்பிக்கையில்லாதவர்

 

உடையால் ஒருவரை யதார்த்தமாக நம்பமுடியாது. மனித குணத்தை உடை மாற்றிக் காட்டவல்லது. குரலும், தொனியும், பாணியும் நன்றாக இருந்தால் படிப்பு, பண்பு, குறைவாக இருப்பதையும் மறைக்கும். சரளமாகப் பேசுபவர்களைப் பொதுவாகப் புத்திசாலி என நினைக்கிறோம். நல்ல அறிவாளி சரியாகப் பேச முடியாவிட்டால் அவர் அறிவைப் பேச்சு மறைக்கிறது.

வீட்டில் எளிமையாகப் பழகும்பொழுது ஒரு தலைவரின் திறமை தெரிவதில்லை. அன்னை பவித்திராவை அறிவார். பவித்ரா காலமான பின் அவர் பழைய ஜென்மத்தில் பௌத்தமத யோகியாக இருந்தார் என அன்னை அறிந்து "இதுவரை நான் இதை அறியவில்லை'' என்றார். உடனிருந்தாலும், அன்னைக்கு பவித்திராவினுள் மறைந்துள்ள யோகப்பயிற்சி தெரியவில்லை.

பஞ்சகன்னிகைகளில் ஒருவரான திரௌபதியின் மனத்தின் ஆழத்தில் உள்ள ஆசை கிருஷ்ணபரமாத்மா கேட்டபொழுதே வெளியில் வந்தது. பள்ளியில் 20, 30 rank வாங்கும் மாணவர்கள் கல்லூரிப் பேராசிரியராகவும், எழுத்தாளர்களாகவும், தலைவர்களாகவும் பிற்காலத்தில் வந்தால் "இங்கே படிக்கும் பொழுது எங்களுக்கெல்லாம் இவன் மக்கு என்று தான் தெரியும்'' என்பது வழக்கம். ஹெலன் கெல்லர், ஐன்ஸ்டீன், நேரு, ராமானுஜம் இவர்களைச் சிறுவயதில் எவரும் கண்டுகொள்ளவில்லை. ஐன்ஸ்டீனின் முதல் மனைவிக்கு அவரால் தனக்குப் பலனில்லை என்று தெரிந்தது. 1930இல் அன்னை நேரு இந்தியாவின் தலைவராவார் என்றதை எவரும் நம்பவில்லை.

ஊனக்கண்ணுக்குத் தெரியாத குணங்கள் சூட்சுமப்பார்வைக்குத் தெரியும்.



book | by Dr. Radut