Skip to Content

10.பூலோகச் சுவர்க்கம்

"அன்னை இலக்கியம்"

                                                      பூலோகச் சுவர்க்கம்

இல. சுந்தரி

திடீரென்று ஒரு நாள் சுவர்க்கத்தின் தலைவர் அதன் பிரஜைகளை ஒன்றுகூடச் செய்து சபை தொடங்குகிறார்.வழக்கமான ஆர்வமோ உற்சாகமோ இன்றி சுவர்க்கத்தின் பிரஜைகள் சபைக்கு வந்தனர்.

தலைவர் சபையை நோக்கி, "சுவர்க்கலோகப் பிரஜைகளே! ஏன் இப்படி எல்லோரும் களையிழந்து காணப்படுகிறீர்கள்? சுவர்க்கத்தின் மகிழ்ச்சியையே உங்களிடத்தில் காணமுடியவில்லையே' என்கிறார்.

"எல்லோர் கவனமும் இப்போது பூவுலகின் மீது திரும்பியதுதான் காரணம் பிரபோ'' என்கிறார் ஒருவர்.

"அப்படி என்ன அதிசயம் நிகழ்கிறது அங்கே?'' என்றார் தலைவர்.

"அதிசயம்தான் பிரபோ! இப்போதெல்லாம் மானுடர்கள் சுவர்க்கம் வர ஆர்வப்படுவதில்லையாம். எல்லோரும் வாழ்வையே விரும்பத் தொடங்கி விட்டார்களாம்'' என்றார் ஒருவர்.

"இதென்ன விபரீதம்? அதனால்தான் மானுடர் நரகம் போகத் துணிந்து, சுவர்க்கம் வருவது நின்றுவிட்டதா?''

"இல்லை பிரபோ. இப்போது நரகம் வெறிச்சோடிக்கிடக்கிறது''.

"சுவர்க்கத்திற்கும் வருவதில்லை, நரகத்திற்கும் செல்வதில்லை என்றால் எங்குதான் போகிறார்கள்?''

"பூவுலகிலேயே சுவர்க்கம் இருக்கும்போது அவர்கள் ஏன் இங்கு வரப் போகிறார்கள்?''

"நமக்கெதிராக திரிசங்குவிற்கு சுவர்க்கம் படைத்து தம் தவ வலிமையை இழந்த விசுவாமித்திரர் மீண்டும் வலிமை பெற்று பூவுலகில் ஒரு சுவர்க்கம் படைத்துவிட்டாரா?''

"இல்லை பிரபோ. இது விசுவாமித்திரர் படைத்த சுவர்க்கமன்று''.

"அப்படியென்றால் வேறு யாருடைய வேலையிது?'' என்று கர்ஜனை செய்தார் தலைவர்.

"ஸ்ரீ அரவிந்தர் என்பவர் இதைச் செய்திருக்கிறார் என்று செய்தி''.

"அப்படியென்றால் பூவுலகில் மீண்டும் நமக்கொரு எதிரி தோன்றி விட்டாரா? அவரைக் கொண்டு வாருங்கள்''.

"இல்லை பிரபோ! இப்பொழுது அவர் பூவுலகில் இல்லை பிரபோ''.

"பூவுலகில் இல்லையென்றால் வேறு எங்கு சென்றுவிட்டாராம்''.

"சூட்சும லோகத்திலிருந்து யோகம் செய்து மானுடர்களுக்கு சக்தி அளிக்கிறார்''.

"அப்படியா? அவரைக் கொண்டு வாருங்கள்''.

"இல்லை பிரபோ. அது சாத்யமில்லை'' (என்று பணிந்து கூறுகிறார்).

"ஏன் சாத்யமில்லை? அவர் என்னைவிடச் சிறந்தவரா?''

"அவர் முன் செல்லவே எல்லோரும் தயங்குவார்களாம். மேலும் அவர்,தெய்வங்கள்கூடத் தம் யோகத்திற்குத் தடையாவதை அனுமதிக்கவில்லையாம். மேலும், அவர் பூமாதேவிக்கு வரம் கேட்டு பெற்றுவிட்டார்''.

"என்ன இது? மேன்மேலும் ஏதேதோ சொல்கிறீர்கள். பூமாதேவிக்கு வரம் கேட்டாரா? அப்படி என்ன வரம் கேட்டுப் பெற்றார்?''

"பூமாதேவி இறைவனாக வேண்டும் என்ற வரத்தைப் பெற்று, அதற்கானவற்றைச் சூட்சும உலகில் தொடர்ந்துகொண்டிருக்கிறார்''.

"! அதன் விளைவுதான் மானுடர்கள் சுவர்க்கம் வருவது நின்று விட்டதா. அது சரி, மனிதர்கள் தவறு செய்யாமல் இருக்கமாட்டார்களே.தவறு செய்தாலும் அவர்களுக்குச் சுவர்க்கம் உண்டு என்று அறிவிக்கப் பட்டுவிட்டதா?''

"அது தானில்லை பிரபோ. இந்தப் பூவுலகச் சுவர்க்கம் உருவாவதே தவற்றிலிருந்து மனிதன் மீளவேண்டும் என்றுணர்ந்ததனால்தானாம்''.

"புரியவில்லையே. தவறு செய்யவில்லையெனில் இங்கு வர வேண்டியதுதானே''.

"இல்லை பிரபோ. நம் சுவர்க்கம் ஆன்மாவிற்கு அமரவாழ்வு மட்டும்தான் தருகிறது. பூவுலகச் சுவர்க்கம் மனிதனையே இறைவனாக்குகிறது''.

"என்ன? (வியப்புடன்) மனிதன் இறைவனாவதா? அதுவும் பூவுலகிலா?''

"ஆம் பிரபோ! அதுதான் பரமனின் லீலை என்பதை அங்குள்ளோர் அனைவரும் பேச ஆரம்பித்துவிட்டனர்''.

"அவர்களுக்கு எப்படித் தெரிந்தது அது பரமனின் லீலை என்று?''

"ஸ்ரீ அரவிந்தர் அதையும் சொல்லி இருக்கிறார்''.

"அவர் யார்? அவருக்கு எப்படித் தெரியும் பரமனின் லீலையைப் பற்றி? (யாருக்கும் தெரியாமலிருந்த உண்மை ஒருவருக்கு மட்டும் எப்படித் தெரிந்தது?)''

"அவர் யார் என்பது நமக்குத்தான் பிரபோ தெரியாமற் போய்விட்டது''.

"என்ன சொல்கிறீர்?''

"ஆம் பிரபு, அவர் இறைவனின் பகுதி என்ற உண்மையை ஸ்ரீ அன்னை என்பவர் பூவுலக மக்களுக்குச் சொல்லியிருக்கிறார்''.

"மேலும் நமக்கொரு எதிரியா? அவர் யார்?''

"எதிரியில்லை பிரபோ. அவர்தாம் பராசக்தியின் அவதாரமாய், பூமியில் இறங்கியிருப்பவர் என்று பேசிக்கொள்கிறார்கள்''.

"அந்த விபரத்தை மக்களுக்குக் கூறியவர் யார்?''

ஸ்ரீ அரவிந்தர் தாம் அந்த உண்மையை மக்களுக்குச் சொல்லிஇருக்கிறார்''.

"பரம்பொருளைத் தவிர லீலையைப் பற்றிய விபரம் யாருக்கும் தெரிய இயலாதே. அவர்களாகச் சொன்னாலன்றி மற்றவர்களுக்குத் தெரிய முடியாது. பரம்பொருளே புவியில் வெளிப்பட்டுள்ளதோ?''

"பிரபோ! நீங்கள் உத்தரவளித்தால் எங்களில் ஒருவர் பூவுலகம் சென்று ஸ்ரீ அரவிந்தரின் பக்தர் ஒருவரை நேரில் கண்டு விபரம் அறிந்து வருவோம்''.

"உங்கள் ஆர்வத்தை நான் குறைக்க விரும்பவில்லை. ஏன், எனக்கே ஆர்வமாகத்தானிருக்கிறது. நானளிக்கும் இந்த வினாக்களுக்கு விடை கொண்டு வாருங்கள். சபை கலையட்டும்''.

****

ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தரின் திருமுன்னமர்ந்து தியானித்து விழித்தேன். எத்தனை இதமாய் உணர்ந்தேன். ஐயம் தெளிவிக்கும் அன்னையின் விழிகள். பொய்யை அழிக்கும் பகவானின் பொற்பாதங்கள்.

"இவற்றில் உனக்கு எது வேண்டும்' என்றால் என்ன சொல்வேன். சிறு குழந்தையிடம் "உனக்கு அம்மா பிடிக்குமா? அப்பா பிடிக்குமா?' என்றால்,

"இருவரையும் பிடிக்கும்' என்றுதான் சொல்லும். உலகத்திலேயே எனக்குப் பிடித்தமானது இரண்டு. ஒன்றைத் தரிசிக்க முடியும். மற்றதை உணர முடியும். பகவானின் சின்னஞ்சிறு பாதங்களைத் தரிசிக்க முடியும்.அன்னையின் பிரார்த்தனையை (உன் கருணை வேண்டுமென்றுகூட இரக்கமாட்டேன். நீ எதைச் சங்கல்பிக்கிறாயோ நானும் அதையே சங்கல்பிப்பேன் - மார்ச் 7, 1915) உணர முடியும். ஆனந்த மிகுதியில் கடைக்கண் நீர் பனித்தது.

வாயிற்புறத்தே யாரோ "அம்மா' என்று அழைப்பது கேட்டது. சற்று நிதானித்தேன். அன்னை பகவானில் ஒன்றிவிட்டால் அபிராமிபட்டரைப் போல் அமாவாசையை, பௌர்ணமி என்று சொல்லிவிடுவேன். எனவே,குரல் கேட்டது மெய்யோ என்றறிய மீண்டும் கவனித்தேன். கதவைத் தட்டும் ஒலிகேட்டது.

முன்பக்கத்துத் திரைச்சீலையை விலக்கிவிட்டு கதவைத் திறந்து வெளியே பார்த்தேன். ஓர் ஆண்மகன் கம்பீரமாய் நின்றிருந்தார். மனித வடிவில் தேவர் வந்ததுபோல் தோன்றினார். முன்பின் அறியாதவராய்த் தோன்றினார். "உங்களுக்கு என்ன வேண்டும்? யாரைப் பார்க்க வேண்டும்?'' என்றேன்.

"இது அன்னை அன்பர் வீடா?'' என்றார் வந்தவர்.

"ஆம். இது அன்னையன்பர் வீடுதான்'' என்றேன்.

"நான் சுவர்க்கத்திலிருந்து வருகிறேன்'' என்றார்.

"! சுவர்க்கத்திலிருந்தா'' என்று இயல்பாய் கேட்டேன்.

அவர் என்னை வியப்புடன் பார்த்தார்.

எங்கள் ஊரில் "சொர்க்கம் கட்பீஸ்' என்று ஒரு துணிக்கடையுண்டு.அந்தக் கடையில் துணி வாங்கும் வழக்கமும் எனக்கிருந்தது. ஆனால் அது பத்து ஆண்டுகளுக்கு முன். இப்போது அங்கேயோ, வேறு எங்கேயோ போவது கிடையாது. கடை பாக்கியும் ஒன்றுமில்லை. அப்படியிருக்க இவர் எதன்பொருட்டு வந்திருக்கக்கூடும்? யூகிக்க இயலவில்லை.

"இருந்தாலும், உங்களுக்கு என்ன வேண்டும்?'' என்று கேட்டேன்.

"இந்தக் கேள்விகளுக்குப் பதில் வேண்டும்?'' என்றார்.நான் பள்ளி ஆசிரியராய் பணிபுரிந்த காரணத்தால் யாரேனும் பாட சம்பந்தமாய் ஏதாவது கேட்டு வருவதுண்டு. ஆனாலும் சுவர்க்கத்திலிருந்து கேள்வி-பதில் என்பனவெல்லாம் வியப்பாயிருந்தது. வாங்கிப் பார்த்தால் புரியும் என்று நினைத்து வாங்கிப் பார்த்தேன்.

"அம்மா, இங்கு சுவர்க்கத்தில் சலிப்பாய் இருக்கிறது. அங்கு பூமியில் எப்படி இருக்கிறது? பொழுது போகிறதா?'' என்றிருந்தது.

"நிச்சயம் இது என்னிடம் கேட்கப்பட்டிருக்காது. சொர்க்கம் கடையில் இருந்து இப்படி யாரும் என்னிடம் எழுதிக் கேட்கமாட்டார்கள். அந்தக் கடைக்காரரின் மகன்களும், அங்கு வேலை பார்க்கும் பையன்களும்கூட என்னிடம் படித்தவர்கள். அப்படியிருக்க இந்தக் கடிதம் என்னைக் கருதி எழுதப்பட்டிருக்காது' என்று எண்ணி, வந்தவரிடம்,

"நீங்கள் இடம் மாறி வந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்'' என்றேன்.

"இல்லை. இந்த வீடுதான் எனக்கு அடையாளம் காட்டப்பட்டது'' என்றார்.சொர்க்கம் கடை முதலாளியின் பெயரைச் சொல்லி,

"அவரா உங்களை இங்கு அனுப்பினார்?'' என்று கேட்டேன்.

"இல்லையில்லை. எங்கள் சுவர்க்கத்தின் தலைவர் அனுப்பினார்'' என்றார்.

"நீங்கள் எந்தச் சுவர்க்கத்திருந்து வருகிறீர்கள்?'' என்று கேட்டேன்.

"என்னம்மா இது? மேலே இருப்பது ஒரு சுவர்க்கம்தானே. ! நீங்கள் திரிசங்கு சுவர்க்கம் என்று நினைத்தீர்களா?'' என்றார்.எனக்குக் குழப்பமானது. "சரி, இவருடன் பேசுவதில் பயனில்லை'என்று எண்ணி, "சரியான பதிலை எழுதினால் ஓடிவிடுவார்' என்றெண்ணி,

"இங்கு - பூவுலகில் - சலிப்பென்பதேயில்லை. பொழுது போகவில்லை என்பது தவறான சொல். நேரம் போதவில்லை என்பதே சரியான சொல்''என்று எழுதிக் கொடுத்தேன். அவர் மாயமாய் மறைந்துவிட்டார்.பிறகு வீட்டு வேலையில் ஈடுபட்டேன்.

****

சுவர்க்கத்தில் மீண்டும் அவை கூடியது.

"பிரபோ! தாங்கள் கேட்டிருந்த வினாக்களுக்கு பூவுலகில் ஓரன்னையன்பரிடம் பதில் வாங்கி வந்துள்ளேன். (தாம் வாங்கி வந்த விடையெழுதிய ஓலையைத் தலைவரிடம் தருகிறார். வாங்கிப் பார்த்த தலைவர் வியப்படைகிறார்).

"! இது என்ன வியப்பு! பூவுலக வாழ்வில் சலிப்பேயில்லையாம்.நேரம் போதவில்லையாம். பொழுதே போகவில்லை என்பதைத்தான் பூவுலகவாசிகள் கூறுவது வழக்கம். "எத்தனையோ பிறவிகள் எடுத்தெடுத்து இளைத்தேன்' என்று சலிப்படைவதுதான் அவர்கள் இயல்பு. இந்த அன்பரின் பதில் வியப்பளிக்கிறது. இதை நேரில் சென்று கேட்டறிய வேண்டும். நானே பூவுலகம் சென்று வருகிறேன்.சபை கலைகிறது.

அடுத்த இதழில் தொடரும்....

****.

ஸ்ரீ அரவிந்த சுடர்

சிந்திக்க முடியாதவன், தான் அறிந்துள்ள விவரத்தைப் புறக்கணித்துவிட்டு, முறையான சிந்தனையை மேற்கொள்வது ஒரு புரட்சி. அது பண்டிதர், சிந்தனையாளராக மாறுவதை ஒத்தது. அனுபவமில்லாத பொதுமக்கள் பெற்ற அதிகமான விவரங்களை (expert) வல்லுநருடைய அறிவுடன் ஒப்பிடுவது போன்றது அது. (கோர்ட் விஷயத்தில் நமக்குள்ள அனுபவத்திற்கும், வக்கீல் குமாஸ்தாவுக்கும் உள்ள ஒற்றுமை அது. கிராமத்து இளைஞன் கிராமத்துச் சூட்சுமத்தை எளிதில் அறிவதுபோல் நகரத்து மாணவனுக்குப் புரியாது).

எந்த நிலை உயர்வதும் புரட்சியாகும்.


 



book | by Dr. Radut