Skip to Content

04.எங்கள் குடும்பம் II

எங்கள் குடும்பம் II

                       (சென்ற இதழின் தொடர்ச்சி.....)

புரட்சி என்பது நெடுநாள் மாறுதலைக் குறுகிய காலத்தில் செய்ய வன்முறையைக் கையாண்டு, உள்ள சமூகத்தை அழித்து, எந்த அனுபவமும், திறமையும், நேர்மையுமில்லாத புரட்சித் தலைவர்களால் அரசை ஏற்படுத்துவதாகும். மலர்ச்சி (evolution) என்பது உடலின் வன்முறைக்குப் பதிலாக அறிவின் திறனை உயிரும், உடலும் ஏற்று புரட்சிக்குத் தேவைப்படும் காலத்தையும் குறுக்குவதாகும். அது ஆனந்தமான முன்னேற்ற அனுபவம் என்கிறார் அன்னை:

. சமூகம் உடலால் ஏற்படுத்தும் மாற்றம் புரட்சி - வன்முறை, அழிவு, குறுகிய காலம், பண்பு போய் பண்பற்றது வரும்.

. பிரபஞ்சம் வளரும் ஆன்மாவால் ஏற்படுத்தும் மலர்ச்சி - சுமுகம்,ஆக்கல், குறுகிய காலத்தையும் சுருக்கும், பண்பைக் கடந்த பக்குவம் வரும், ஆனந்தமயமானது.

. மனிதக்குரங்கு மனிதனாகப் பல ஆயிரம் ஆண்டுகளாயின. சத்திய ஜீவியத் திருவுருமாற்றம் இப்பல ஆயிரம் ஆண்டுகளைச் சில நூறு ஆண்டுகளாக்கும். பல்லாயிரம் ஆண்டின் சக்தி ஒரு நூறு ஆண்டில் சுருங்குவதால் அபரிமிதமான சக்தியாகிறது. இம்மாற்றம் தருவது ஆனந்த அனுபவம். பிரம்மம் இந்த அனுபவத்தை நாடி சிருஷ்டித்தது.

. அன்பர்கள் பிரார்த்தனை பலிக்கும்பொழுது இச்சக்தி செயல்படுகிறது.நாம் இந்த ஆனந்தத்தை அனுபவிக்கிறோம். ஆனால் பலனாக அனுபவிப்பதால் பிறகு மறந்துவிடுகிறது.

. கதையில் இதுபோன்ற பலன் இக்குடும்பத்திற்கு வந்துவிட்டது.வந்ததைப் பண்புடன் ஏற்று, பக்குவமாக, பவித்திரமாக அனுபவிக்கும் பாத்திரமாகக் குடும்பமில்லை.

. கம்பனியில் மனம் வேலையிலிருக்க வேண்டும்.

பவர் பிராஜெக்டில் மனம் பொறுப்பிலிருக்க வேண்டும்.

பார்ட்னர் விஷயத்தில் நன்றி அபரிமிதமாகத் தேவை.

அன்னை அனைத்து ஜீவன்களையும் ஆட்கொள்ளவேண்டும். கருவியான தாயாரைத் தாயாராக, மனைவியாகக் கருதக்கூடாது.

மனம் கேலி, பொறாமை, சில்விஷமம், அல்பத்திலிருக்கக்கூடாது.

குடும்பம் தலைகீழேயிருக்கிறது. தாயாருக்கு மனம் அன்னையைவிடக் குடும்பத்திலிருக்கிறது.

. குடும்பம் அதிர்ஷ்டத்தை ஏற்று, அதற்கேற்ப நடந்தால்,

. அன்னை கூறும் ஆனந்த அனுபவமான சக்தி அற்புதமாக மலரும்.

. இதைச் சாதிக்கவேண்டும் என்ற நினைவும் எவருக்குமில்லை.

. சாதிப்பது மனஉறுதி mental will.

. மனிதக்குரங்கு மனிதனானது போல், மனிதன் சத்தியஜீவனாவது போல், எளிய குடும்பம் தொடர்ந்த ஏற்றம் பெற்று உச்சியை அடையும்.

. வழக்கத்திற்கு மாறாக அது ஆனந்த அனுபவமாக இருக்கும். . அப்படி முன்னேறும் குடும்பங்கள் கேil க்குரியனவாக இருக்கும்.

. இக்குடும்பம் உயர்ந்த உன்னத மரியாதை பெறும்.

. மரியாதையை நாடாத மனநிலை வந்தபின் மரியாதை மணம் பெறும்.

. குடும்பம் இதை அறியுமா?

அறிய முயலுமா?

அறிவு செயலாகும் உணர்வு எழுமா?

அவ்வுணர்வு அடக்கமாகும்.

குடும்பம் தேடுவது அடக்கமில்லை, அதிகாரம்.

தம் 40ஆம் வயதில் Sri Aurobindo or The Adventure of Consciousnessஇல் உள்ளதைத் தாம் அறியவில்லை என அன்னை சத்பிரேமிடம் கூறுகிறார்:

. அன்னை சத்தியஜீவனை ஆப்பிரிக்காவில் உள்ளபொழுது கண்டார். ராஜயோகத்தைக் கடந்த கீதை யோகத்தைப் பயின்றவர். சத்திய ஜீவியத்தினுள் நேரடியாக நுழைந்தவர். சத்பிரேம் கடைசிவரை பொறுமையின் அவசியத்தை அறியாதவர். சாங்கியங்களைப் பின்- பற்றியவர். அன்னை அவரிடம் கூறியவற்றைப் பெரும்பாலும் புரிந்து கொள்ளாதவர். சத்பிரேம் அந்நூலை எழுதியது எப்படி?

. ஸ்ரீ அரவிந்தர் உலகுக்குக் கொண்டு வந்தது புதியது, முழுமையானது, காலத்தைக் கடந்ததையும் கடந்தது. ஆன்மாவை அறிந்த நமக்கு பகவான் வளரும் ஆன்மாவைக் கூறுகிறார். நமக்கெல்லாம் ஆன்மாவுள்ளது. நாம் அதை அறியவில்லை. அன்னை சத்தியஜீவனைக் கண்டவர். காண்பது வேறு, சித்தியாகப் பெறுவது வேறு, பிறருக்குக் கொடுக்க முடிவது வேறு. ஒரு தலைமுறையில் உயர்ந்தோர் பெறாததை அடுத்த தலைமுறையில் எளியவரும் பெறுவதுபோல் சத்பிரேம் அன்னையறியாததை உலகுக்கு அளிக்கிறார். இது வாழ்வில் உள்ள அம்சம்.

. அன்னையே தம் இளவயதில் பெறாததை இன்று அன்பர்கள் பெற உதவுவது ஸ்ரீ அரவிந்தம்.

. நமது பெற்றோர் பெறாத கல்வியை, வசதியை, தொழிலை நாம் பெற அவர்கள் இன்று வழிசெய்வதுபோல்,

. ஆன்மீகத்தில் அன்னை நமக்குச் செய்வதை,

. வாழ்வில் இக்குடும்பம் அதிர்ஷ்டமாகப் பெறுவது அப்படிப்பட்டது.

. நாம், நம் வாழ்வு, நமது குடும்பம், உலகம், பிரபஞ்சம் அப்படிப்பட்ட வசதிகளை அனுபவிப்பதை, அன்னை கூறுவது காட்டுகிறது.

. இக்குடும்பம் அதுபோன்ற பெரிய வாய்ப்பைப் பெற்றுள்ளதை நாமறிய வேண்டும். அவர்கள் அறியவில்லை.

. அதை நம் வாழ்வுக்குப் பொருத்திப் புரிந்துகொள்ள வேண்டும்.

. இது பூமாதேவியின் யோகம்.

. பிரபஞ்சத்தின் யோகம் எனப் பல இடங்களில் எழுதுகிறார்.

. இது இறைவனின் யோகம் என்று ஆரம்பிக்கிறார்.

. இதைப் பெறும் வழி சரணாகதி, திருவுருமாற்றம்.

. நம் அளவில் மனமாற்றம் திருவுருமாற்றமாகும்.

. மனம் மாற சம்மதிக்காது.

. மனம் மாற நாம் சம்மதிப்பது மனமாற்றம்.

. அன்னை அன்பர்கட்குத் தருவது ரிஷிகள் அறியாதது. எதைச் செய்தாலும், எதைச் சொன்னாலும் - என்னால் முடியாது - கொஞ்ச நாழிகைக்குப் பின் அது சொல்லாக இருக்கிறது. ஜீவன் பெறுவதில்லை:

. நாம் நம் மனத்தை நாம்என நினைக்கிறோம். உழைப்பாளி தன் உடலை தான் என நினைக்கிறான். நாம் வேறு, நம் மனம் வேறுஎன நாம் நினைப்பதில்லை. அதனால் மனம் இடம் தாராது.

. கம்பனியில் முதலாளி தம் நிலையை மறந்து மானேஜரிடம் அதிகாரத்தைக் கொடுத்துவிட்டு, நாளடைவில் மானேஜரே முதலாளியென முதலாளியே நினைத்தால், அந்த மானேஜர் கட்டுப்படமாட்டார்.

. நாம் மனமில்லை. நாம் வேறு. நாம் என்பது ஆத்மாஎன அறிதல் முதல் செய்யவேண்டியது. அதைச் செய்தால் மையம் மனத்திலிருந்து நகர்ந்து நெஞ்சுக்குப் பின் வரும். அது நடந்தபின் சமர்ப்பணம். அதுவரை சமர்ப்பணமில்லை.

. நாம் என்பது ஆத்மா, மனமில்லை என்பதை நாம் ஏற்றவுடன் மனம் அசைவது தெரியும். மனத்தின் கடுமை கரைய ஆரம்பிக்கும். அதுவரை மனம் மரக்கட்டைபோலிருக்கும்.

. மனத்திலிருந்து பிரிந்த ஆத்மா நிஷ்டையால் பிரிந்தால் ஆத்மாவாகவும்,சமர்ப்பணத்தால் பிரிந்தால் வளரும் ஆன்மாவாகவுமிருக்கும்.

. ஆன்மா பிரியாமல் சமர்ப்பணமில்லை;

. சமர்ப்பணத்தால் வளரும் ஆன்மா எழும்; என்பவை முரண்பாடாகத் தெரிகின்றன. நாம் என்பது மனம் என நாம் நினைக்கும் வரை எதுவுமில்லை. நாம் என்பது ஆத்மாஎன அறியும் பொழுது நிஷ்டை எழுந்தால், நிஷ்டையில் தெரிவது ஆத்மா, வளரும் ஆத்மா இல்லை.

. சமர்ப்பணத்தை ஏற்க இசைவது வளரும் ஆன்மா.

. வளரும் ஆன்மா எழுவது சமர்ப்பணத்தை ஏற்பது.

. சமர்ப்பணம் என்பது நிகழ்ச்சிகளின் முழுமையை அறிவது.

. முழுமையை அறிவது வளரும் ஆன்மா.

. ஆத்மா நிகழ்ச்சிகளினின்று விலகி நிற்பது.

. நிகழ்ச்சிகளை முழுமையாக அறிய முயன்றால், மனத்திலிருந்து விலகி நாம் வளரும் ஆன்மாவை அடைகிறோம்.

. நிகழ்ச்சிகளைக் கண்டமாக அறியாமல், அகண்டமாய் அறிவதும்,

. கடந்த காலத்தை மறந்து நிகழ்காலத்தில் ஈடுபடுவதும், அகந்தையினின்று அகல்வதும், சிந்திக்காமல் மௌனமாக செயல்படுவதும், மனம், காலம், அகந்தையினின்று விலகி வளரும் ஆன்மாவை நாடுவதாகும்.

. "என்னால் முடியாது"எனக் கூறுவது "நான் மனத்தை, காலத்தை,அகந்தையை, ஆன்மாவை விட்டு வளரும் ஆன்மாவை நாடுகிறேன்" என்பதாகும்.

. என்னால் முடியாது எனக் கூறுவது வளரும் ஆன்மா. அப்படிக் கூறுவது சமர்ப்பணம். அது கடந்ததை மறந்து, அகந்தையினின்று விலகி, முழுமையைக் காணும். நிகழ்ச்சிகளைப் பிறர் கோணத்தில் அறிவது முழுமையை காண முயல்வதாகும்.

"உன்னால் முடியும் தம்பி' - "என்னால் முடியாது':

. "உன்னால் முடியும் தம்பி" என்பது தமிழ்நாட்டில் ஒரு இயக்கமாக இருந்தது. அதற்கும் "என்னால் முடியாது" என்பதற்கும் என்ன வித்தியாசம்?

. நம்மால் எதுவும் முடியாது என்று நம்புவதால் நமக்கு எதுவும் முடியாமலிருக்கும் பொழுது முடியும் என முனைந்து நம்பி செயல்பட்டால் காரியம் கூடிவருகிறது.

இது தெம்பில்லாதவனுக்குத் தெம்பு தருவது.

. தெம்பும், திறமையும் நிறைந்தவன் அபரிமிதமான தெம்பை அடைய "என்னால் முடியாது" என்பது உதவும்.

. நம்மால் முடியாது என்றால் குடும்பத்தால் ஏராளமாக முடியும்.

. நம்மால் முடியாது எனில் ஊர் அபரிமிதமாகச் சாதிக்கும்.

. எலக்ஷனில் நிற்பவன் ஊரைப் புறக்கணித்துச் சொந்த தெம்பில் நின்றால் கொஞ்ச ஓட்டு வரும். ஊர் சார்பாக நின்றால் ஊரார் ஓட்டு அத்தனையும் வரும்.

. ஊரார் ஓட்டு முழுவதும் வர, தான் ஊருக்குப் பணியவேண்டும்.

. வாழ்க்கை என்பது ஊரைவிடப் பெரியது. காற்று, சூரியன், தானே நடப்பவை. ஊருக்குச் சம்பந்தமில்லாமல் வரும் சட்டம், ஹர்த்தால், மழை, புயல், புதுச்சரக்கு, உரம், வியாதி, மருந்து ஆகியவை ஊரைவிடப் பெரியவை. நம்மால் முடியாது, காலராவிலிருந்து நம்மால் தப்ப முடியாது என ஊசி போட்டுக் கொள்கிறோம். புதிய முறைகளை ஏற்கும் மனிதன் தன்னால் முடியாது, புதிய முறையால் முடியும்என்ற முடிவுக்கு வருகிறான். இன்ஷுரன்ஸ் பாலிசி செய்வதை மனிதன் தனக்கே செய்துகொள்ள முடியுமா? என்னால் பாதுகாக்க முடியாத குடும்பத்தை இன்ஷுரன்ஸ் பாதுகாக்கும் என்று பாலிசி எடுக்கிறான்.

. அவனால் என்ன முடியும்?

. இதுவரை செய்ததையே சாதிக்க முடியும்.

. வீடு கட்டும் திட்டம் வந்தால் அதைப் பயன்படுத்தாமல் தானே சம்பாதித்து வீடு கட்ட முயன்றால் எப்பொழுது கட்டுவான்? பணத்தைச் சேகரிக்க முடியுமா?

. அப்படி வீடு கட்டவும் அருள் வேண்டுமன்றோ!

. தானே வீடு கட்ட அருளை நாடுவதற்குப் பதிலாக, வீடு கட்டும் திட்டத்தை ஏற்க அருளை நாடலாம்.

. வீடு கட்டும் திட்டத்தை நாடுவதற்குப் பதிலாக அன்னையை நாடலாம்.

. அதை பகவான் கூறினார். அவர் யோகம் பூர்த்தியாகக் கூறினார்.நாம் வாழ்வில் அதிர்ஷ்டத்தை ஏற்கச் செய்கிறோம்.

. நம்மால் பேர் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வர முடியாது.

. அன்னையால் அது முடியும்.

. "என்னால் முடியாது, எனக்காக நீங்கள் செய்யுங்கள்"என அன்பன் அன்னையிடம் கூறுவதின் சக்தி இரகஸ்யம் "முடியாது" என்பதில் உள்ளது. முடியாது என ஏற்பது அடக்கம்.

. முடியும் என்பது அகந்தை.

. முடியாது என்பது வளரும் ஆன்மா.

. என்னால் முடியாது என்பது நிதர்சனமாகத் தெரியவேண்டும்.

. கிளார்க் IAS ஆபீசராக முடியாது.

. ஓட்டுப் போடும் இளைஞன் சொந்தமாக MLA, MPஆக முடியாது.

. 4 இலட்சம் கம்பனி முதலாளி, கம்பனிக்கு 40 கோடி முதல் பெற முடியாது.

. சரியும் மார்க்கட்டைத் தடுத்து நிறுத்த முடியாது.

. போதைமருந்து சாப்பிடும் பையனை, புத்திமதி தடுக்காது.

. இவை அருளால் முடியும், அன்னையால் முடியும் என நம்ப முடியும்.

. நம்புவது வேறு, எதிர்பார்ப்பது வேறு.

. நம்புவது நம் உள்ளத்தில் தெம்பு ஊறுவது. எதிர்பார்ப்பது நம் தெம்பு அழிந்து ஆசை எழுவது.

. அன்னை சாதிக்கும்பொழுதும் நம்மூலமே சாதிக்கிறார்.

. அருள் அதிசயமாகச் செயல்பட்டால் நம்மிடம் உள்ள ஒரு திறமை மூலம், நம் சூழ்நிலையில் உள்ள சந்தர்ப்பம் மூலம் அன்னை செயல்படுகிறார். "என்னால் முடியாது" என்றவுடன் நம் திறமை அன்னை திறமையாகிறது. நம் சந்தர்ப்பம் அன்னை சந்தர்ப்பமாகிறது.

. நாம் என்பது தனித்து நிற்கும் அகந்தை.

. தனித்து நிற்கும் அகந்தையால் முடியாது, அருளால் முடியும் என நம்புவது நாம் மனத்தைவிட்டகன்று, வளரும் ஆன்மாவை அடைவதாகும்.

. அதுவே சமர்ப்பணத்திற்குரிய மனநிலை. அதுவே சமர்ப்பணம். அதுவே அடக்கம்.

. நம்பிக்கையுடன் சொல்வது ஆன்மா செயல்படுவதாகும். நம்பிக்கை இல்லாமல் சொன்னால், அது வெறுஞ்சொல். சொல்லுக்குச் சக்தி இல்லை.

. கடந்தகாலச் சமர்ப்பணம் சக்திவாய்ந்தது. அது சாதிக்காதது இல்லை. அதுவும் நம் சாதனை. நம் சாதனை காசிக்குப் போவது, டெக்னாலஜியின் சாதனை சந்திரனுக்குப் போவது.

. ஒரு சிறு காரியத்தில் இதைச் சோதனை செய்யலாம்.

. வயிற்றுவலி போக மருந்தை நம்புகிறோம். மருந்தை நம்புவது நாம்.நம்மையே நம்பாமல், அருளை நம்பினால் மருந்தில்லாமல் வலி போகும்.சோதனை பலித்தால் அடக்கமிருப்பதாகப் பொருள்.

. காலை 6 மணிக்கு வரவேண்டிய பேப்பர் வரவில்லை. நாம் வெளியில் போய் வாங்கி வரலாம். அப்படிப் போனால் நம் ஊருக்கே பேப்பர் வரவில்லை எனத் தெரியும். மேலும் நம்மையே நம்பினால் இன்று பேப்பரே அச்சடிக்கவில்லை என செய்தி வரும். அவ்வழி, வழியாகாது.

. பிடிவாதம் தவறு, விடாமுயற்சி நல்லது. இரண்டும் நாம் செய்வது.நம்மால் முடியாது என்பது இரண்டையும் கைவிடுவது. விடாமுயற்சிக்குப் பதிலாக நம்பிக்கை வர உதவுவது "என்னால் முடியாது" என்பது.

. இது மனம் நகர்ந்து வளரும் ஆன்மாவுக்கு வழிவிடுவதாகும்.

. சோதனை சிறுகாரியமாக இருக்கலாம். நடக்காத சிறுகாரியம் நடப்பது நம்பிக்கை.

. மனைவியை திருப்தி செய்ய முயல்வது மனைவிக்குரிய செயலன்று.

. நம் மனம் பிறரை திருப்தி செய்ய முயல்கிறது.

. நமக்கு வலிமையில்லாவிட்டால், பிறரை திருப்தி செய்ய முயல்கிறோம்.

. பலஹீனமான மனம் - உறுதி - வலுப்பட அறிவு உதவும், திருப்தி செய்வது உதவாது.

. மனஉறுதி என்பது அறிவின் செறிவு. Full knowledge is will.

. ஜடம் அறிவு பெறுவது உறுதி.

. ஜடத்திற்கு அகந்தையில்லை. ஜடம் பெறும் உறுதி முழுமையான உறுதி.

. பிறரைக் கலக்காமல் நாமே புரிந்துகொள்ள முயன்றால், நம் அறிவு - அறியாமை - தன்னைப் பூர்த்திசெய்துகொள்ளும். அன்பரானபின் ஸ்தோத்திரம் சொல்வது போலாகும்.

. இந்தக் குடும்பம் முடியும், முடியாது என்ற நிலைமைக்கெல்லாம் வரவில்லை.

. அந்த நிலைமைக்குவர இந்தக் குடும்பம் ஏராளமாக முன்னேற வேண்டும்.

. MLA பெரியதா, MP பெரியதா என்பது வாக்காளர்க்கில்லை. இக்குடும்பம் ஜெயிக்கப்போய் உரிமையிழந்தவன் போலுள்ளது.

. அப்படிப்பட்ட குடும்பத்திற்கு பவர்பிராஜெக்ட் எப்படி வந்தது?

. சுதந்திரம் பெற இந்தியா ஆயுதம் தாங்கிப் போராடவில்லை.

. ஆயுதம் தாங்கமாட்டேன் என்று கூறியது.

. திறமையில்லாதவன், நான் எதிர்க்கமாட்டேன் என்பது பல்லில்லாத புலி சைவமாவது போன்றது.

. அப்படியும் சுதந்திரம் எப்படி வந்தது?

. தானே வருவது அருள். நாம் செய்வது தடை. தடையை மீறி அருள் செயல்பட்டுக் காரியம் நடக்கிறது.

. அருளின் சூழல் அனைத்திலும் உள்ளபொழுது,

. ஒரு கோடி ஸ்தாபனத்தை நோக்கி 100 கோடி உதவி வரும்.

. 4 கோடி கடனுள்ளவனுக்கு 400 கோடி ஸ்தாபனம் முழுஉரிமை தரும்.

. உள்ளூரில் பிழைக்க முடியாதவனுக்கு ஊர்த்தலைமை தேடிவரும்.

. வருவது பெரியது, பிரம்மாண்டமானது, பெறுவது நம்மைப் பொருத்தது.

. சிறு காரியங்களில் நாம் செய்வது அருள் பலிக்குமா, விலகுமா என நிர்ணயிக்கும்.

. 7 கடிதங்களில் 6 கடிதங்களுக்குப் பதில் எழுதியபின் 7வது கடிதத்திற்கு நாளை எழுதலாம் என்பதும், இன்றே எழுதி முடிக்க வேண்டும் என்பதும் நம் இஷ்டம். நம் இஷ்டம் நியாயமானால் அருள் செயல்படும்;சௌகரியமானால் அருள் விலகும்.

. வெளியே போகும் மனைவி கணவனுக்கு lunch செய்து வைத்து விட்டுப் போவாள். தற்சமயம் கணவன் 6 நிமிஷம் நடந்து போய் தானே lunch செய்துக் கொள்ளும் ஏற்பாடு வந்தது. மனைவிக்கு choice உண்டு.

. தொடர்ந்து தானே lunch செய்தால் அருள் செயல்படும்.

. கணவனே செய்து கொள்வது தனக்கு சௌகரியம் என்றால் அருள் விலகும்.

. அருளின் சூழலில் இல்லாதவர்க்கு விலக அருளில்லை.

. அருளின் சூழலில் உள்ளவர்க்கு choice உண்டு. Lunch செய்தால் 100 கோடி உதவி வரும். செய்ய மறுத்தால், வந்ததே நமக்குத் தெரியாமல் 100 கோடி விலகும்.

. அன்பர்கட்கு சிறு செயல்கள் பெரிய முக்கியத்துவம் வாய்ந்தவை.

. நம் அலட்சியத்தை மீறி அருள் செயல்பட்டபின் 5 ஆயிரம், 150ஆயிரமானபின் கொஞ்சநஞ்சம் நிறைவேற்றிய கடமையும் மறந்து போனால் அருள் விலகும்.

. சிறிய இடத்தில் சிறிய கடமையைப் பெரியதாக நிறைவேற்றினால் அருள் செயல்படும்.

. சிறிய இடத்தில் சிறிய கடமையையும் பூர்த்தி செய்யாதபொழுது அருள் செயல்பட்டபின் விரைவாக அலட்சியப்படுத்திய கடமையைப் பூர்த்திசெய்ய முனைவதற்குப் பதிலாக, செய்ததையும் மனம் மறப்பது மனிதச்சுபாவம்.

. Lunch சிறு விஷயம். அதன் நோக்கத்துள் அருள் உள்ளது.

. யாரைத் திருமணம் செய்ய மனம் துடிக்கிறதோ அவர் "என்னைக் கணவனாக ஏற்பாயா?" எனக் கேட்டவுடன், வாய் "முடியாது"எனக் கூறும் கிராக்கிக்கு முழு உயிர் உண்டு.

பேரம் பேசுமிடங்களில் இதைக் காணலாம்.

கிராக்கியில்லாத பேரமில்லை.

. கதையில் கருவான இடங்களில் சில:

. அருளுக்குக் கருவான இடம் தாயாரின் பக்தி.

. மனம் செயல்படும் இடங்கள் பல:

. கணவனுக்கு மனைவியை அன்பராக ஏற்கமுடியாமல் மனைவியாக வலியுறுத்துவது.

. மனைவி அன்பராக இருப்பதைவிட நல்ல தாயாராகப் பணிவான மனைவியாக இருக்கப் பிரியப்படுவது.

. பிள்ளைகள் எதிர்பார்ப்பது பலன், பலன்மட்டும். அது ஆதாய மனப்பான்மை.

. தாயாரின் பக்தி குடும்பம் உயரவேண்டும் என்பது. அது உயர்ந்த பக்தியாகாது. குடும்பம் பக்தியால் உயர வேண்டும் என்ற எண்ணம் தாயார் மனநிலையை உயர்த்தும்.

. மனைவி தனக்கு அடங்கியிருக்கிறாள், அடங்கியிருக்க வேண்டும் என்ற இடத்தில் கணவனுக்கு முழுதிருப்தி. மனைவி தனக்கும், தான் மனைவிக்கும் அடங்குவது குடும்ப விஷயம். தனக்கு அடங்கியுள்ள மனைவி அருளுக்கு அடங்கவேண்டும் என்ற இடம் கணவனுக்குத் தோன்றியதில்லை. எவராவது சொன்னால் வெறுப்பு வரும். அப்படிப்பட்ட அருள் வேண்டாம் எனத் தோன்றும்.

. மனைவிக்கு நல்ல அடக்கமான மனைவி என்ற பெயர் ஆத்மதிருப்தி தரும். அது குடும்ப விஷயம். அதற்குக் குடும்பப் பலன் வரும். நமக்கு இல்லாத தொழில் நம்மைத் தேடி வாராது என்ற ஞானம் அவருக்கில்லை. கணவனுக்கு அடங்கியிருப்பது நல்லது. அதுபோல் ஆயிரம் பேர் உள்ளனர். அவர்கட்கெல்லாம் வாழ்வு என்ன பலன் கொடுத்தது? அடக்கமான பெண்ணை அன்பாக நடத்துவார்கள். குடும்பத்தில் மனம் அடங்குவதால், உலகில் உள்ள சௌகரியம் நம்மைத் தேடிவரும் என்பது வாழ்வில் இல்லை.

. இதைத் தாயார் அறியார்.

. இந்த அடக்கம் ஆன்மீக அடக்கமானால், காரைக்கால் அம்மையார் போல ஆன்மா மோட்சம் பெறும்.

. தாயாருடைய அடக்கம் குணவிசேஷம், ஆன்மீக உயர்வால் வந்ததில்லை.

. நல்ல குணம் அடக்கமாக வெளிப்படுகிறது.

. அன்பரல்லாதவர் அவர்போலுள்ள ஆயிரம் பேரை நாம் அறிவோம். அவர்கள் பெற்றது என்ன?

. தாயார் பெற்றது அருளால்; குணத்தாலன்று.

. அதைத் தாயாரோ, தகப்பனாரோ அறியாதபொழுது மற்றவர்களுக்கு என்ன தெரியும்?

. தாயார் அதை அறிந்து ஏற்கவேண்டும்.

. கணவன் தன் அதிகாரத்தை விட வேண்டும்.

. இது இரண்டும் இக்குடும்பத்தில் நடப்பது அதிசயம்.

. அந்த அதிசயம் வந்தால், வந்தது நிலைத்து வளரும்.

. அன்னை நம்மை நாமறியாத இடத்தில் அறிவாக உள்ளார். The Conscious in the unconscious.

. நாமே Consciousஆக வேண்டும்.

தாயார் - ஒருவர், "நமக்கு அந்தச் சட்டமில்லை. அழைத்தால் கரண்ட்

வரவேண்டும்'' என்றபொழுது, அனைவரும், "அவர் அழைப்பார், கரண்ட் வரும்' என்று எடுத்துக்கொண்டனர்:

. 5ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து ரோமாபுரியால் ஆளப்பட்டது.வாழ்க்கை வளமாகவும், வசதியாகவுமிருந்தது. அதைப் பற்றி எழுதும் சர்ச்சில், "அன்று ரோமாபுரி ஆட்சி வேண்டுமா, வேண்டாமா என ஓட்டெடுத்திருந்தால், அனைவரும் வேண்டும் என வாக்களித்திருப்- பார்கள்" என்று எழுதுகிறார். அன்னிய ஆட்சி என்றாலும் வசதியான வாழ்வு அமைந்தால், அதுவே வேண்டும் என மனம் கூறும் என்பது உண்மை.

. நம் நாட்டில் வீட்டில் பெரியவர்கட்கும், ஆபீஸில் அதிகாரிக்கும், ஊரில் முக்கியஸ்தர்கட்கும் நாம் அடங்கி வாழ்கிறோம். அதுவே நம் பண்பு.அடங்காதவரை அடங்காப்பிடாரி என்கிறோம். கீழ்ப்படிதல் அவசியம்.அது பணிவாகாது, அடக்கமாகாது, பயந்து பணிவது தவறு. அடங்க வேண்டியதற்கு அடங்குவது அடக்கம். அனாவசியமான அதிகாரத்திற்குப் பணிவது நம் சுதந்திரத்தை இழப்பதாகும்.

. "சுத்தம் சோறு போடும்" என்பதுபோல் சுதந்திரம் அபரிமிதமான பலம் தரும்.

. பயந்து அடங்கினால் மனிதன் சுதந்திரத்தை இழந்து, அதன் பெரும் பலன்களை இழக்கிறான். நம் நாடு ஏழை நாடாக இருப்பதற்கு அது ஒரு முக்கியக் காரணம்.

. ஐரோப்பா சர்ச் பாதிரிமார்கட்கு அடங்கி அடிமையாக இருந்தது. அது மாறி மார்ட்டின்லூதர், முதல் மனிதன் தன் ஆத்ம சுதந்திரம் பெற்றான்.இன்று ஐரோப்பா, அமெரிக்கா வளமாக இருப்பதற்கு அடிப்படையான முக்கியக் காரணம் அதுவே. இன்றும் பிராடெஸ்டண்ட் நாடுகள் கத்தோலிக்க நாடுகளைவிட வளமாக வாழ்கின்றன.

. மனப்பாடம் படிப்பாகாது. சிந்தனை கல்வியாகும். மேல்நாட்டின் வளம் அந்நாட்டுக் கல்வியின் சிந்தனையால் வருவது.

. மதம் ஒரு மகானை மற்றவர் பின்பற்றுவது. ஆன்மீகம் அவரவரும் மகானாவது. அன்னை வேண்டுவது ஆன்மீகம், மதவழிபாடன்று."கரண்டைக் கூப்பிட்டால் வரும்" என்றால், "சொல்பவரே கூப்பிடுவார்;கரண்ட் வரும்" என்பது நம் மனப்பான்மை. எவர் அழைத்தாலும் கரண்ட் வரும். ஒரு வீட்டில் ஒருவர் சம்பாதிப்பதால் 6 பேர் சாப்பிடுவதற்கும்,6 பேரும் சம்பாதிப்பதற்கும் உள்ள வித்தியாசம் இது.

. கதையில், "அம்மா பிரார்த்தனை செய்வார். அனைத்தும் நடக்கும்"என்பதற்கும், "ஒவ்வொருவரும் பிரார்த்திக்கவேண்டும்" என்பதற்கும் உள்ள வேறுபாடு மலைக்கும், மடுவிற்கும் உள்ள வேறுபாடு. நமது மரபு, "ஆண்டவன் உலகை சிருஷ்டித்தான், நாம் அதில் வாழ்கிறோம்"என்கிறது. ஸ்ரீ அரவிந்தர், "நாமே ஆண்டவன், நாம் நம் உலகை சிருஷ்டிக்கிறோம் என்று அறிந்தால் நாம் நினைப்பனவெல்லாம் நடக்கும்.நாம் ஆண்டவனாகிறோம். முடிவான கட்டத்தில் நாமே ஆண்டவன்.இந்த உலகம் நம்மால் சிருஷ்டிக்கப்பட்டது. இங்கு துன்பமேயில்லை,எல்லாம் இன்பம்" என்று அறியமுடியும் என்கிறார்.

. பலனைக் கருதிப் பிறரை எதிர்பார்ப்பது ஆன்மீகத்தில் அடிமை வாழ்வு.

. நம்மை அறிந்து, வாழ்வை நாம் அடிமைப்படுத்துவது ஆன்மீகச் சுதந்திரம்.

. ஸ்ரீ அரவிந்தர் ஆன்மாவுக்குச் சுதந்திரம் தருவதுடன், அதற்கு வளர்ச்சியும் உண்டு என்று தம் யோகத்தை "ஆன்மீகப் பரிணாம யோகம்" என்கிறார்.

கணவர் - கண்பார்வை பட்டாலே பொருள்கள் நொறுங்குமே அவர் என்ன ஆனார்?

. கதையில் தாயார் மேற்சொன்னவருக்கு எதிரான இராசியுடையவர்.தாயாருக்கு வீட்டு வேலை செய்தவளுக்குச் சொந்தமாகத் தோப்பு வந்தது.காவல்காரனுக்கு குத்தகைக் கிடைத்து, குத்தகை சொந்தமாயிற்று.அதை இராசி என்கிறோம்.

. இராசி என்பதை எண்ணம் என்று கூறலாம். எண்ணம் நல்லதானால், இராசி நல்ல இராசி. எண்ணம் கெட்டதானால் இராசி கெட்ட இராசி.

. கண்பார்வை பட்டாலே பொருள்கள் நொறுங்கும் என்பவர் பக்தர். ஆழ்ந்த பக்தர். கைமாற்றாகக் கொடுத்த ரூ.50 இலட்சத்தை நண்பரிடமிருந்து திருப்பிப் பெற மறுத்த பெரிய மனதுடையவர். சிறுவயதில் கொடுமைப்படுத்தப்பட்டதால் மனம் கடுமையாக இருக்கிறது. அவருக்கு அன்னை இராசியைவிட, நல்ல எண்ணத்தால் எழுந்த நல்ல இராசியைவிட கடுமை அளித்த தரித்திரம், கெட்ட எண்ணம் வலிமையாக இருக்கிறது.

. தம் இராசியை அறிந்து உண்மையாக ஏற்பவர் அன்னையை அழைத்தால் கெட்ட இராசி நல்ல இராசியாகும் என்கிறார் அன்னை.

. இராசி என்பது சுபாவம். சுபாவம் என்பது ரூபம். சிருஷ்டி ரூபத்தால் ஏற்பட்டது. ரூபம் என்பது ஜீவியத்தைக் (consciousness) கட்டுப்படுத்துவது. கட்டுப்படாத ஜீவியம், ரூபத்திற்குக் கட்டுப்படுவது சிருஷ்டி. ரூபம் நல்லதாக இருக்கும், கெட்டதாக இருக்கும். மனிதன் கெட்டதை மாற்றி நல்லதாக்க முனைகிறான். நல்லதும், கெட்டதும் ரூபங்களே, சிருஷ்டிக்கு உட்பட்டவையே. நாம் சிருஷ்டியைக்கடந்து ஜீவியத்திலிருந்து சிருஷ்டியில் செயல்பட வேண்டும் என்கிறார் அன்னை. இந்த வீட்டில்தாயார் தவிர மற்ற அனைவரும் சுயநலமிகள், நல்ல பழக்கமில்லாதவர்கள். அவர்கள் நல்ல பழக்கம் பெறுவது நாகரீகம். அன்னையை ஏற்று கெட்ட பழக்கத்திலிருந்து விடுபட்டு நல்ல பழக்கத்தைப் பெறவேண்டும் எனத் தாயார் நினைக்கிறார்.

. கெட்ட பழக்கத்திலிருந்து விடுபட்டால், பழக்கத்திலிருந்தே விடுபடலாம் என்பது அன்னை தரும் வாய்ப்பு.

. வாய்ப்பை ஏற்று நல்லதாக மாறலாம். அல்லது பழக்கத்தையே விட்டு உயரலாம்.

. தாயார் எதிர்பார்ப்பது முதற்கட்டம்.

. அன்னை தருவது முடிவான கட்டம்.

. முதற்கட்டம் தருவது அதிர்ஷ்டம்.

. முடிவான கட்டம் தருவது அருள்.

. குடும்பம் (அனைவரும்) அதைச் செய்ய முன்வருவது அன்னை வாழ்வு.

. கதை அன்னை அளித்த பெரும் வாய்ப்புகளுடன் முடிகிறது.

. பெற்றதைப் பேணி வளர்க்கலாம்.

. பெற்றது சிறியது என அறிந்து பெறவேண்டிய பேற்றை நாடலாம்.

. மனித வாழ்வு ஆற்றொழுக்காக ஓடுவது அதிசயம்; காண முடியாதது.பிரச்சினைகள், ஆபத்து, எதிர்பாராத தொல்லைகள் வாராத குடும்பம் இல்லை.

வாய்ப்புகள் வருவது வழக்கமில்லை.

அன்னை என்றால் அத்தனையும் வாய்ப்பு.

வாய்ப்பு என வந்தால் மனிதன் என்ன செய்கிறான்?

அடியோடு, வேரோடு அந்த வாய்ப்பை ருசிக்க முயல்கிறான்.வாய்ப்பிற்கு அளவுண்டு.

அளவைக்கடந்து வாய்ப்பை அனுபவிக்க முயன்றால் வாய்ப்பு பிரச்சினையாகும். பிரச்சினை முற்றி, "இனி வாழமுடியாது" என்று வரும் வரை மனிதன் ஓயமாட்டான். வந்த வாய்ப்பைப் பயன்படுத்தி என்னென்ன அட்டூழியங்கள் செய்யமுடியுமோ அவ்வளவும் செய்வான். அது உள்ளதையும் அழிக்கும். அதனால் வாய்ப்பு வந்ததே தவறு, அதைக் கொடுத்த அன்னையை நாடியதே பெருந்தவறு என்று அன்னையைத் தூற்றுவான். அன்னையை அறிமுகப்படுத்தியவரை மிரட்டுவான்.

. மனிதன் என்ன செய்ய வேண்டும்?

எப்படிச் செயல்படவேண்டும்?

வாய்ப்பை நல்ல முறையில் அளவோடு அனுபவிக்கவேண்டும். அளவோடு அனுபவிக்க நம்மால் - நம் மனத்தால், உணர்வால் - முடியாது. மனத்தின் சைத்தியப்புருஷன் அளவோடு அனுபவிக்க முடியும்.சைத்தியப்புருஷன் வெளிப்படும்வரை பண்பு அக்காரியத்தைச் செய்யும்.பண்பில்லாதவர் கட்டுப்பாட்டுடன் (சுயக்கட்டுப்பாட்டுடன்) இருக்க வேண்டும்.சுயக்கட்டுப்பாடில்லாதவர் பிறர் கட்டுப்பாட்டிலிருக்க வேண்டும்.புறக்கட்டுப்பாடு வாழ்வு; சுயக்கட்டுப்பாடு அன்னை வாழ்வு.கதையில் இக்குடும்பத்தினர் புறக்கட்டுப்பாடுமின்றி வாழ்பவர்.புறக்கட்டுப்பாடின்றி வாழ்பவர் ஊருக்கு அடங்கவேண்டும்."வீட்டில் அடங்காதது, ஊரில் அடங்கும்" என்பது பழமொழி.

வீட்டில் அடங்கினால் வீடு உயரும்.

மனத்தால் அடங்கினால், மனம் உயரும்.

மனம் உயர்வது, வீட்டை உயர்த்தும்.

மனம் அன்னைக்கு அடங்கினால், அன்னை மனத்தை உயர்த்துவார்.

மனம் ஆத்மாவுக்கு அடங்கினால், ஆத்மா உயரும், வளரும்.

வளரும் ஆத்மா சைத்தியப்புருஷனாகும்.

சைத்தியப்புருஷன் இயல்பாக அடக்கமுடையவன்.

இயல்பான அடக்கமுள்ளவர்க்கு அனைவரும் இதமாக அடங்குவர்.

அனைவரும் இன்று அடங்கினால், நாளை உலகம் அவருக்கு அடங்கும்.

தாழ்த்தப்பட்டவர், கொடுமைப்படுத்தப்பட்டவர் இன்று சுதந்திரம் பெற்றாலும், இன்றும் அவருக்கு "இயல்பான" அடக்கம் உண்டு. இது தாழ்ந்த இயல்பால் ஏற்பட்டது. இன்று உலகெங்கும், குறிப்பாக நம் நாட்டிலும் பெருஞ்செல்வம் சம்பாதிப்பவரும், பெருபதவிகளை அடைபவரும் அன்று அடக்கப்பட்டவர், இன்று உயருகின்றனர். அந்த அடக்கமும் அடக்கமே, அதுவும் பேர் அதிர்ஷ்டம் தருகிறது.நாமே இறைவன் முன் துரும்பு என அறிந்து அடங்குவது ஆன்மீக அடக்கம்.

ஆன்மீக அடக்கத்துள் அனைத்தும் அடக்கம்.

இறுதிச் சடங்குகளில் இக்குடும்பம் பங்குகொள்ளவில்லை:

. இறுதிச்சடங்கு இறந்தவர் ஆவி மற்றவர்க்குத் தொந்தரவு தாராமலிருக்கச் செய்யும் சடங்கு. சடங்கின் மந்திரசக்திக்கும்,அதிலுள்ள சாங்கியங்கட்கும் ஆவி கட்டுப்பட்டு அக்குடும்பத்தினரை தொந்தரவு செய்யாமல் விலகுகிறது. சடங்கில் இறந்தவர் ஆவி திருப்திப்படும் காரியங்கள் சாஸ்த்ரோக்கமாகச் செய்யப்படும்.

. அன்னையை ஏற்றவர்கள் ஆத்மவிழிப்புள்ளவர். ஆவிக்குரிய சடங்கு ஆத்மாவுக்கு ஊறு செய்யும். காட்டுமனிதர்கள் - tribes - பிரசவமாக பெண்ணின் வயிற்றின்மீது ஏறி மிதிப்பார்களாம். அச்செயல் நம் போன்றவரைக் கொல்லும். குழந்தைக்குச் சூடு போடும் குடும்பங்கள் உண்டு. நாம் அதைச் செய்ய முடியாது. ஆத்மவிழிப்புள்ளவர் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்வது ஆபத்து, உயிருக்கும் ஆபத்து.

. அன்னை தினமும் 30 அல்லது 50 பேர்களை - visitors - பார்ப்பது வழக்கம். அவர்களைத் தரிசனத்திற்காகச் சந்தித்தாலும் அவர் உடல் எரியும், வயிறு குமட்டும்; மரண வேதனையை அன்னை அனுபவிப்பார். சாதாரண மனிதருக்கும் அன்னைக்கும் அத்துணை வேறுபாடுண்டு. புயலடிக்கும் பொழுது காற்று அன்னை உடல் படுவது அனல் படுவதுபோலிருக்கும்.

. ஆப்பிரிக்காவில் அன்னை ஓர் விருந்திற்குப் போயிருந்தார். அழைத்தவர் ஒரு குரங்கு வளர்த்தார். அக்குரங்கு மனிதர்கள்போல் பழகுகிறது. மேஜையில் நம்போல் உட்கார்ந்து சாப்பிடுகிறது. Wine திராட்சைரஸம் பரிமாறினார்கள். குரங்கு குடித்துவிட்டு மயக்கம் போட்டு விழுந்து விட்டது. அடுத்த விருந்தில் குரங்குக்கு wine கொடுத்ததை வாங்கி எறிந்துவிட்டது.

. மனிதன் குடித்து இரசிக்கும் wine குரங்கிற்கு மயக்கம் தருகிறது.

. மனிதனுக்கும் குரங்குக்கும் வித்தியாசம் உண்டு.

. ஆவிக்கும் ஆத்மாவுக்கும் வித்தியாசம் உண்டு.

. சமீபகாலம்வரை மாணவர்களை நீண்ட பிரம்பால் கால்சட்டையை எடுத்துவிட்டு பின்னால் 6 முறை பலத்த அடி தருவார்கள். அதனால் மாணவன் மயக்கம் போடுவான். சில சமயம் மலஜலம் கழிப்பான். இன்று அந்த முறையை நம் பள்ளிகளில் பின்பற்றினால் பள்ளியை மூடவேண்டும்.

. பள்ளியை மூடுவது ஒரு விஷயம்.

. பையனுக்கு, அடிப்பதால் நிச்சயம் பாடம் வாராது.

. அன்று மனப்பாடம் கல்வி.

. இன்றுள்ள கல்வியை மனப்பாடத்தால் பெற முடியாது.

. குளோரபார்ம் கண்டுபிடிக்கு முன் மயக்கமருந்தில்லாமல் ஆப்பரேஷன் செய்தார்கள். குளோரபார்ம் வந்தபின்னும் பட்டேல் கால் ஆப்பரேஷன் செய்து கொள்ள மயக்கமின்றி செய்துகொண்டார். இன்று நாம் anesthesia மயக்கமருந்தில்லாமல் ஆப்பரேஷன் செய்துகொள்ள முனைவதும், இறுதிச்சடங்குகளைச் செய்வதும் ஒன்றாகும்.

. மந்திரங்கள் சக்திவாய்ந்தவை.

. அன்பர்கள் ஆத்மவிழிப்பு பெற்றபின் சடங்குகள் அவரைப் பெரிதும் பாதிக்கும், பேர் ஆபத்து.

எனக்கு வேண்டிய பிரெஞ்சுக்காரரிடம் நான் உங்களை அழைத்துப் போகிறேன்:

. மேல்லோகத்தில் முதிர்ந்த ஆத்மாக்கள் புவியில் அவதரிக்க அதற்குத் தகுந்த உடலைத் தேடுகிறார்கள். கர்ப்பவதியின் மனம் அமைதியால் நிரம்பியிருந்தால் கருத்தரித்த மூன்று மாதத்திற்குள் அவர்கள் கருவில் உதயமாவார்கள் என "சாவித்திரி"யில் ஒரு பகுதி கூறுகிறது.

. சத்தியஜீவியம் 1956இல் புவியில் வந்தது முதல், அதன் பல நிலைகள் புவிக்கு வரத் தகுதியான ஆத்மாக்களைத் தேடுகின்றன. அன்பர் மனம் அமைதியாக, அழகாக, அமிர்தமாக இருந்தால் சத்தியஜீவிய சக்தி அவருள் நுழையும். அச்சக்தி அன்பருள் வரும் நிலை அவர் மன நிலையைப் பொருத்தது.

. அறிவாக வர அறிவை நாடும் அன்பரை அது நாடும்.

. அதிர்ஷ்டமாகவர உழைப்பாளியையும், நாணயமானவரையும் தேடும்.

. வளரும் ஆன்மாவை ஆன்ம விளக்கம் நாடிவரும்.

. அன்பின் பிழம்பாக அது உதயமாக நிறைந்த நெஞ்சத்தை நாடும்.

. நம்பிக்கையுள்ளவருக்கு நல்லது நடக்கும்.

. அன்பருக்குச் சூழல் உண்டு.

. மனம் மாறியவருக்கு மகத்துவம் உண்டு.

. இடைவிடாத நினைவுள்ளவர்க்கு இறைவன் கருணையுண்டு.

. சமர்ப்பணத்தை நாடியவருக்குச் சகலமும் உண்டு.

. சரணாகதியை ஏற்றவருக்கு சக்தி சர்வேஸ்வரனாக வரும்.

. பரநலம் படைத்தவர் பரமனின் நலம் பெறுவார்.

. கடுமையை அறிந்து கனிவை நாடுபவர்க்குக் கடவுள் கிருபையுண்டு.

. பக்தியால் நிறைந்தவர்க்குப் பரமபதம் உண்டு.

. சடங்கை ஏற்பவருக்குச் சங்கடமாக அது அமையும்.

. பிரார்த்தனை செய்பவர்க்குப் பிரார்த்தனை பலிக்கும்.

. உணர்வால் நிறைந்தவர்க்கு உணர்வின் உண்மையுண்டு.

. நன்றி எழுந்தால் வாசுதேவ தரிசனம் கிட்டும்.

. உயர்ந்த ஜீவியத்தை நாடுபவர்க்கு உள்ளுறை தெய்வம் காட்சி தரும்.

. பணத்தை நாடும் நாணயஸ்தனுக்குப் பவர் பிராஜெக்ட் வரும்.

. ஒருவர் பிரார்த்தனை அனைவருக்கும் பலிக்கும்.

. அனைவர் நம்பிக்கைக்கு அத்தனையும் பலிக்கும்.

. அகத்தில் நிறைந்தவர் அனந்தனைக் காண்பார்.

. புறத்தில் அகத்தைக் கண்டவருக்கு சக்தி பிரம்மஜனனத்தைக் -Marvel- காட்டும்.

பார்ட்னர் டெல்லியில் ஒருவரைச் சந்தித்து, அவர்மூலம் பிரெஞ்சுக்காரர் அறிமுகமாகி, ஏற்கனவே தமக்கு அறிமுகமான தொழிலதிபரை பவர் புராஜெக்ட்டில் பார்ட்னராக்குவது நாம் எழுதும் கதை, நாமே வைத்துக்கொள்வது போல் தோன்றும். அப்படிப் பார்த்தால் "எங்கள் குடும்பம்' கதை. கதை படிப்பவர் படிக்கலாம். அன்னையை ஏற்றபின் நாம் நம் நம்பிக்கைகளைக் கைவிடுவது இல்லை. அதனால் அன்னை நம் வாழ்வில் நம் நம்பிக்கைகள் மூலமே செயல்பட முடியும் என்பதால் ஏற்கனவே நம் வாழ்விலுள்ள சந்தர்ப்பங்கள்மூலம் மட்டுமே அன்னை செயல்பட வேண்டியிருப்பதால், இப்படி நடக்கிறது என நாம் புரிந்து கொள்ள வேண்டும். நமது அனுபவங்களை நினைவுபடுத்திப் பார்த்தால் இதன் உண்மை விளங்கும்.

. நமக்கு இராகு காலத்தில் நம்பிக்கையிருந்தால் அன்னை அதை விலக்கிச் செயல்படுகிறார்.

. இராகு காலத்தை நாம் கடந்து வரவேண்டு மென அன்னை முடிவு செய்தால், நமக்கு வரும் பெரிய விஷயத்தை இராகு காலத்தில் தந்து,இராகு காலம் திறனற்றது எனக் காட்டுகிறார்.

. நாம் திருவுருமாற்றத்திற்குத் தயாராகிவிட்டோம் என்றால் அன்னை இராகு காலத்தை நமக்குச் சேவை செய்யச் சொல்கிறார். அழிக்கும் இராகு காலத்தை ஆக்கல் கருவியாக்குகிறார் அன்னை. நாம் அதைக் கண்டு திகைக்கிறோம். புரிய முயல்வதில்லை.

. நட்பின் உயர்வைக் கருதினால், அன்னை நல்லதை நட்புமூலம் தருகிறார்.

. மரியாதை, பண்பு, விஸ்வாசம் ஆகியவை மனிதப்பண்புகள். நாம் அவற்றைக் கடந்து வரவேண்டும்என அன்னை முடிவு செய்தால் அவைகளெல்லாம் எப்படி நம்மைத் துரோகம் செய்ய உதவும் என அனுபவத்தால் அன்னை காட்டுகிறார்.

. அந்தஸ்து முக்கியமில்லை என நினைத்து பலன், திறமை முக்கியம் என்றால், அன்னை அந்தஸ்தே முக்கியம் என வாழ்க்கைக் கூறும்படி நடக்கிறார்.

. ஒன்றும் இல்லாதவனுக்கு "நம்பிக்கையால் எல்லாம் வரும்" என்று காண்பிக்க அன்னை அதை நம் வாழ்வில் செயல்படுத்துகிறார்.

. திறமை முக்கியம் என நினைத்தால், திறமை திறனற்றது எனக் காட்டுகிறார்.

. தேடிப்போனால் கூடிவரும் என்றால், கூடிவாராது என்கிறார்.

. தேடிப்போனால் கூடிவாராது என்றால், கூடிவரும் என்றுக் காட்டுகிறார்.

. கூடிவருவது, தேடிப்போவதால் அல்லது போகாததால் அன்று எனவும் காண்பிக்கிறார்.

. முயற்சிக்கு முக்கியத்துவமில்லை, சரணாகதி முக்கியம் எனக் காட்ட முயற்சிக்குப் பூஜ்யம் பலன் என்று நிரூபிக்கிறார்.

. நம் மனநிலைக்கேற்ப அன்னை செயல்படுகிறார்.

. "அஜெண்டா"வில் இதுபோல் தாம் பெற்ற அனுபவங்களை விவரிக்கிறார்.

. 'The Life Divine' இதே தத்துவங்களைக் கூறுகிறது.

. "சாவித்திரி" இவ்வுண்மைகளைக் காவியமாக எழுதுகிறது.

. 'Synthesis of Yoga' இவற்றை யோகத்தில் பயிலும் முறையைக் கூறுகிறது.

. குழந்தைகட்கு அன்னை இவற்றைபற்றிக் கூறியவற்றை 17 வால்யூம்களாகப் பிரசுரித்துள்ளனர்.

எனக்கு ஏராளமான தொடர்புகளுண்டு, திறமையுண்டு. ஆனால் எதுவும் கூடிவருவதில்லை:

. கடவுள்கள் கர்வம் கொண்டபொழுது இறைவன் அவர்கட்குப் பாடம் கற்பிக்க அனைவரையும் அழைத்து ஒரு துரும்பை அவர்கள்முன் வைத்து, அதனினின்று தம்மை - பிரம்மத்தை - விலக்கிவிட்டு, நகர்த்தச் சொன்ன பொழுது எக்கடவுளாலும் நகர்த்த முடியவில்லை. இறைவன் அதன்மூலம் பிரம்மமே முக்கியம் எனக் கடவுள்கட்கு உணர்த்தினார் என்பது கதை. இக்கதையை நாம் பல முறை கேட்கலாம். இதன் உண்மையை நாம் பல முறை பார்க்கலாம். ஆனால் மனத்தில் பதியாது.

. ஓர் உண்மையை அறிவது வேறு.

. அது மனத்தைத் தொடுவது வேறு.

. சமூகத்தில் பெரிய தொடர்புகள் கிடைக்கா. ஒரு தொடர்பு இருந்தால் மனிதன் முன்னுக்கு வந்துவிடுகிறான். எத்தனை தொடர்புகள் இருந்தாலும் முன்னுக்கு வரமுடியாது என்பதும் உண்மை.

. ஒரு திறமை மனிதனைப் பெரிய மனிதனாக்கும். எத்தனைத் திறமைகள் இருந்தும் மனிதன் முன்னேற முடியாத நிலையிருப்பதுண்டு. .கூடிவருவது வேறு. திறமை பெற்றிருப்பது வேறு.

. இக்கதையில் குடும்பத்தலைவர் சொத்தை. அவர் பிள்ளைகள் பொக்கை.குடும்பத்தில் பெண்ணிற்கு, சாதனையைப் பொருத்தவரை இடமில்லை.இன்று இந்தியக் குடும்பங்களில் - மாறிய நிலையிலும் - பெண் பெண்ணாக இருக்கிறாளே தவிர, குடும்பத்தலைவியாக இல்லை. எல்லாச் சொத்துகளும், சம்பாத்தியமுமிருந்தாலும் அவள், சம்பந்தம் பேச "அவரை"அழைத்துப் போகவேண்டும். கணவன் சொத்தையாக இருந்தாலும்,அவனையே முன்வைக்கும் நிலை பெண்ணுடையது. கணவன் சொத்தை என்பதால், அவனை விலக்கி பெண் சம்பந்தம் செய்யப்போனால், "அந்த வீட்டில் நாமெப்படி சம்பந்தம் செய்வது" என்ற கேள்வி எழும். இக்குடும்பத்தில் தாயார் பக்தை, அன்பர் என்றாலும், அவள் பேச்சு எடுபடாது. Silent Will மட்டுமே அவளுக்குரியது. இக்குடும்பத்திற்கு எல்லாம் கூடிவருகிறது. எப்படிக் கூடிவருகிறது?

. கூடிவருவதற்குரிய அம்சம் இறைவனுடைய அம்சம். அதை இராசி என்கிறோம்.

இராசி என்பது இறைவனின் அம்சம்.

. இறைவனின் அம்சம் இருக்கும்பொழுதும் மனிதர்கள் - குடும்பத்தினர்

- அதை நாசம் செய்யக்கூடியவர்கள்.

இருப்பதை இல்லாததாக்குவது மனித சுபாவம்.

. 3ஆம் நிலையிலிருந்து 80ஆம் நிலைக்கு வந்தபின்னும் பையன், "ஏம்பா,அம்மாவைப் போய் பிஸினஸ் விஷயமெல்லாம் கேட்கிறீர்கள். அம்மா சமையல் செய்கிறவர்தானே. அம்மா என்ன இன்ஜீனீயரா?" எனக் கேட்கிறான். ஒரு சிறு விஷயத்தில் கணவர் தம் அதிகாரம் மதிக்கப்படவில்லை என்று இன்று கண்டால், உடனே அது எவ்வளவு பெரிய காரியமானாலும் மறுத்துவிடுவார், அழித்துவிடுவார். தாயார்,இந்த நிலையிலும், அடக்கமான மனைவியாக இருப்பதால் காரியம் தொடர்ந்து நடக்கிறது. காரியம் எதனால் நடக்கிறதோ, அதற்கு அனைவரும், கணவன் உள்பட, அடங்குவது நியாயம். அந்த நியாயம் இக்குடும்பத்தில்லை. "இந்தக் குடும்பம்போல் ஏன் அன்பர்கள் குடும்பங்கள் உயரவில்லை?'' என்ற கேள்வி எழுகிறது:

. ஒருவர் அன்பரானாலும், அவரைப் பொருத்தவரை தாயார் பண்பானவர்.

. பண்பானவர் என்பதைவிட, தாயாரிடம் அல்பமான குணம் எதுவுமில்லை.

. விமரிசையாகத் திருமணம் நடக்கும் பொழுது பெண் வீட்டு மனிதர் இருவர் பிள்ளை வீட்டுச் சம்பந்தியை "அவர் இலஞ்சம் வாங்குபவர் எனக் கேள்விப்பட்டேன். உண்மை தெரியுமா" எனப் பேசுவர். பிள்ளைவீட்டார் ஒருவர் காதில் விழுந்து விட்டால், செய்தி அனைவருக்கும் பரவி,விமரிசையான விழா, விமரிசையை இழந்து பலரும் முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்வார்கள். "நான் இலஞ்சம் வாங்கினார் எனக் கூறவில்லையே. சந்தேகமாகத்தானே கேட்டேன்" என்பது பலன் தாராது. உறவு நுட்பமானது. சம்பந்தம் மிகவும் நுட்பமானது. நம்மைப்பற்றி பிறர் எப்படி நினைக்கிறார் என்பது முக்கியம். இதுபோன்ற கேள்வி எழுந்தபின் உறவில் உற்சாகமிருக்காது, உறவிருக்கும்.

. கணவர் இதுபோன்ற நுட்பமான இடங்களில் எல்லாம் எதிராக நடக்கக் கூடியவர்.

. பெரியவனிடம் மன்னிக்கமுடியாத கேலி நிரம்ப இருக்கிறது.

. இதுபோன்ற ஒரு குணமிருந்தால், அருள் பேர் அளவில் செயல்படாது.

. இக்குடும்பத்தில் தாயாருக்கு பக்தி இத்தனைக் குறைகளையும் மீறி செயல் படும்படியிருக்கிறது.

. ஒரே ஒரு நல்ல குணம், திறமை, இராசி இருந்தால், அதனால் ஒரு பெரிய காரியம் நடப்பதைக் காண்கிறோம்.

. ஒரே ஒரு கெட்ட குணமிருப்பதால் உள்ளது அத்தனையையும் அது அழிப்பதைக் காண்கிறோம்.

. அன்பர்கள் இராசி, அருள், சட்டம், குணம், எதையும் அறிந்தவரில்லை.தங்களுக்குத் தோன்றியதுபோல் நடக்கிறார்கள். அதுபோன்று நடந்தால், இயல்பான கெட்டகுணங்கள் நம்மையறியாமல் வெளிவரும்.அவை அருளைச் செயல்பட அனுமதிக்காது.

. நம்மிடம் உள்ள நல்லகுணங்களையும், கெட்டகுணங்களையும் நினைவு படுத்திப்பார்த்தால், ஓரளவு அவை புலப்படும். அதுபோல் நம் கண்ணில் படும் செயல்கள், காதில் படும் சொற்கள் சில:

நல்லவை

கெட்டவை

உங்கள் ரேடியோ பேச்சு

சிறப்பாக அமைந்தது.

ரேடியோவில் பேசினீர்களே,யார் சிபாரிசு?

பையன் தங்கமெடல் பெற்றது

சந்தோஷம்.

இந்தக் காலத்தில் எல்லோரும் மெடல் பெறுகின்றனர்.

நல்ல வீடு வாடகைக்கு கிடைத்தது

சந்தோஷம்.

என்ன சந்துபொந்திலிருந்து உங்களுக்குக் பெரியவீட்டுக்கு வந்துவிட்டாற் போலிருக்கிறது.

Congratulations, enjoy your taxi ride.

என்ன, டாக்ஸியில் போகிறீர்கள்.

ஆபீசில் அதிகமாக வருமானமா?

இன்று ஏராளமான பேர் உங்கள் வீட்டில் சாப்பிட்டனர். பெரியமனம் உங்களுக்கு.

இதெற்கெல்லாம் எங்கிருந்து பணம் வருகிறது எனத் தெரியவில்லை.

. நல்லவை எத்தனை இருந்தாலும் பலன் தாராது. முழுவதும் நல்லவற்றால் நிரம்பினால் பலன் தெரியும். அது பெரியதாக இருக்கும்.

. கெட்டது ஒன்றிருந்தாலும் அப்படியே அத்தனையையும் அழிக்கும். இதன் தத்துவம், நடைமுறை, சட்டம், ஆகியவற்றை அறிய முயன்று, அறிந்து பின்பற்றுவது அன்னையை நெருங்க உதவும்.

நல்லது மரம்போன்றது; கெட்டது புல், பூண்டுகள்போன்றது:

. மரம் தானே முளைப்பதில்லை.

. நாமே செடியை நட்டு, தண்ணீர்விட்டு, காப்பாற்றினால் வளரும்.

. 10 நாட்களுக்கு மறந்துவிட்டால், செடி செத்துப்போகும்.

. ரோடில் போகும் மாடு அந்த செடியைத் தின்றுவிடும்.

. அதற்குப் பாதுகாப்புத் தேவை.

. குழந்தைகள் விளையாடும்பொழுது ஏதாவது ஒரு குழந்தை அந்தச் செடியைப் பிடுங்கி எறியும்.

. அது மரமாக வளர்ந்தபின் பாதுகாப்புத் தேவையில்லை, நீர்பாய்ச்ச வேண்டியதில்லை. "நான் என்ன பாடுபட்டேன் இந்தச் செடி மரமாக" என நாம் நினைக்கிறோம்.

. மழை பெய்தால் புல் தானே முளைக்கிறது.

. எவரும் விதை விதைக்கவில்லை.

. எந்த மாடு இந்தப் புல்லைத் தின்றாலும், புல் வளர்ந்தபடியிருக்கும்.

. எந்தக் குழந்தையும் இப்புல்லைப் பிடுங்குவதில்லை.

. எத்தனை நாட்கள் தண்ணீரில்லாவிட்டாலும் ஒரு மழை பெய்தால் புல் தானே முளைக்கிறது.

. மரம் பெரியது, நாமே வளர்க்கவேண்டும், பாதுகாப்பு வேண்டும்.

. புல் சிறியது, தானே வளரும், எளிதில் அழியாது.

. சிறியதற்கும், பெரியதற்கும் உள்ள வித்தியாசம், பழைய பழக்கங்கட்கும், புதுப்பழக்கங்கட்கும் உண்டு.

. பழைய பழக்கங்கள் எத்தனை நாட்களானாலும் எளிதில் அழியா.

. புதிய பழக்கங்களைக் கட்டிக்காக்கவேண்டும். ஒரு சிறு தவறு நடந்துவிட்டால் எளிதில் அழிந்துபோகும்.

. சர்க்கார் செய்வது நடக்கும்; எதிர்கட்சி கேட்பது எடுபடாது.

. தாய்மொழி தானே வரும்; பிறமொழி கற்பது எளிதன்று.

. ஜாதிக்குரிய பழக்கம் இயல்பாக வரும்; கற்றது நிலைக்காது.

. பேஷனானது எளிதில் பரவும்; பண்பானது எளிதில் அழியும்.

. உணர்ச்சிமயமான கோஷம் எடுபடும்; அறிவுக்குரியது எடுபடாது, எளிதில் அழியும்.

. சுபாவத்திற்குரியது ஏற்கப்படும்; எதிரானதை உலகில் நிலைநிறுத்த முடியாது.

. நாலு பேரும் சொல்வதை நாலு பேரும் ஏற்பார்; ஒருவர் கொள்கை அவரோடு.

. எளியது எளிதில் பரவும்; சிரமமானது, சிக்கலானது எளிதில் நிலைபெறாது.

. இனாம் கேட்க எவரும் முன்வருவர்; இனாம் கொடுக்க எவரும் முன்வர மாட்டார்கள்.

. பணம் பேசும்; பண்பு பேசாமடந்தை.

. நீரோட்டத்துடன் எளிதில் நீந்தலாம்; எதிர்த்து நீந்துவது சிரமம். இந்தக் குடும்பத்தில் நடந்த நல்லனவெல்லாம் இடையூறின்றி நடந்தேறின. அது அருள்; அது வழக்கத்திற்கு மாறானது:

. ஒரு சொத்து வாங்கும்பொழுது, பாங்க் லோன் தரும்பொழுது, சம்பந்தம் பேசும்பொழுது எழும் இடையூறுகள் எத்தனை என்று உலகம் அறியும்.

. இக்குடும்பம் பார்ட்னர் பெற்றது, கம்பனி 12 மடங்கு விரிவடைந்தது,பவர் பிராஜெக்ட் பெற்றது ஆகிய அனைத்தும் இடையூறின்றி நடந்தேறியது அன்னையின் பாதுகாப்பு சூட்சுமத்திருந்ததால்.

. பம்பாய்க் கம்பனி இவர்களைவிட்டு அடுத்தவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது ஒன்றுதான் தடைஎனக் கூறலாம்.

. மற்றவையெல்லாம் பொருள் சம்பந்தமற்ற தடைகள்.

. ஏன் நல்லது செய்வது சிரமம்; கெட்டது செய்வது சுலபம்?

. கெட்டது ஏற்கனவே நிலைபெறுவது. அதனால் அதற்கு முழுப் பாதுகாப்பு, ஆதரவுண்டு.

. நல்லது இனி செய்யவேண்டியது. போதிய ஆதரவில்லை.

. நல்லதற்கு ரூபம் உண்டு. ரூபத்தை ஏற்படுத்த நாளாகும்.

. கெட்டது அழிவது, ரூபத்தை இழப்பது. இழப்பது, பெறுவதைவிட சுலபம்.

. அசத் கெட்டது, சத் நல்லது.

. அசத் சிருஷ்டிக்குப் புறம்பானது.

. சத் சிருஷ்டி.

. சிருஷ்டிக்கு வருவது கடினம்.

. சிருஷ்டியைவிட்டு வெளியேறுவது சுலபம்.

. நல்லது ஜடத்திற்குரியது (material plane).

. கெட்டது சூட்சுமமானது (subtle plane).

. சூட்சுமம் வேகமாகச் செயல்படும்.

. கெட்டது ருசிக்கும்.

. நல்லது "சப்" என்றிருக்கும்.

. முழுமை என உலகம் கருதுவதில் நல்லதைச் சேர்த்துக்கொள்கின்றனர். கெட்டதைச் சேர்ப்பதில்லை. சேராத கட்சிக்கு வலிமை அதிகம்.

. சமூகம் ஏற்றது கெட்டது.

. சமூகம் ஏற்க மறுப்பது நல்லது.

. சமூகம் கெட்டதை நல்லதாக ஏற்றிருப்பதால் கெட்டதற்கு சமூகம் முழு ஆதரவு தரும்.

. நமக்குக் கெட்டதுமேல் முழுஆர்வமும் அக்கறையுமிருக்கும்.

. நமக்கு நல்லதுமேல் வெறுப்புண்டு.

பார்ட்னரைப் பார்த்தவுடன் பிரெஞ்சுக்காரர் நம்பிவிட்டார்:

. "கண்டதும் காதல்" என்ற நம் சொல் ஷேக்ஸ்பியரில் whoever loved that loved not at first sight என வருகிறது.

. இதிலுள்ள உண்மை ஆன்மாவுக்குரியது.

. ஆன்மாவுக்குப் புரிய நேரமாகாது. காரியத்தை முடிக்கவும் ஆன்மாவுக்கு நேரமாகாது.

. பல்கலைக்கழகத்தில் அட்மிஷனுக்கு இன்டர்வியூவுக்கு வந்த பெண்ணைப் பார்த்தவர், "எனக்கு உன்னைப் பிடிக்கிறது. என் மகன் நல்ல வேலையிருக்கிறான். அவனை நீ மணக்க விரும்புகிறாயா?" எனக் கேட்டு, ஒரு மாதத்தில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

. போட்டோ பிடிக்க, ஸ்விட்ச் போட்டால் லைட் எரிய, கரண்ட் வேலை செய்ய நேரமாகாது என்பதுபோல் ஆத்மா அடுத்த ஆத்மாவையறிய க்ஷணத்திற்குமேல் தேவைப்படாது.

. பார்ட்னர் அப்படி ஆன்மாவின் அம்சமுள்ளவர்.

. அவரைப் பார்த்தவுடன் எவரும் அவர் அம்சத்தை அறிவார்.

. நாம் அதை இராசி என்கிறோம்.

. இராசி என்பது இறைவனின் அம்சம்.

. அன்னையை நெடுநாள் அறிந்து பிறகு ஏற்றுக்கொண்டவருண்டு.

. பார்த்தமாத்திரம் ஏற்றவருண்டு.

. பார்த்தமாத்திரத்தில் அன்னையைத் தெய்வமாக அறிந்தவர் ஆன்ம விழிப்பு உடையவர்.

. நமக்குப் பிரச்சினைகள், அதற்குரிய தீர்வுகள், வாய்ப்புகள் எழுகின்றன.

. பிரச்சினை எழுந்தவுடன் என்ன செய்யலாம் எனத் தோன்றுகிறது.

. அன்னை நினைவு வருவதில்லை.

. தீர்வு கண்டவுடன் நிம்மதி வருகிறது.

. நன்றி எழுவதில்லை.

. வாய்ப்பு வந்தால் சந்தோஷம் வருகிறது.

. அன்னை நினைவு வருவதில்லை.

. பிரச்சினை எழுந்தவுடன் அன்னை நினைவு வந்து, தீர்ந்தவுடன் நன்றி எழுந்து, வாய்ப்பு வந்தவுடன் அன்னை நினைவு வருபவருக்கு ஆன்மவிழிப்பு இருக்கிறது எனப் பெயர்.

. பார்த்தமாத்திரம் எழும் ஆசை, அன்பு, காதல், தன் வேகத்திற்கேற்பத் தன்னைப் பூர்த்தி செய்துகொள்ளும்.

. வளரும் ஆன்மா வளர்ந்துள்ளவரைக் கண்டால் உடல் பூரித்து, உள்ளம் துடிக்கும்; எழுந்து நடனமாடத் தோன்றும்.

. பேச்சு எழாது, நினைவு அழியும், உடல் பரவசமாகும்.

இரண்டையும் பார்ட்னர் ஏற்று வந்திருக்கிறார்:

. ஒரு நாணயமான பார்ட்னரை அறிமுகப்படுத்துவது முதல்.

. Project report எழுதி அவருடன் ஒப்பந்தம் செய்வது அடுத்தது.

. இரண்டிற்கும் தனித்தனி பீஸ் உண்டு.

. இரண்டையும் பீஸுக்காக ஏற்பது ஆதாயம்; முடியும் என ஏற்பது திறமை; அன்னை தரும் வாய்ப்பை மறுக்கக் கூடாது என ஏற்பது பக்தி.

. பெரியவன் இன்ஜீனியர் என்பதால் அவனால் ரிப்போர்ட் எழுத முடியும்.

. சேர்மன் பெரிய தொழிலதிபரை அறிமுகப்படுத்தியதால் பிரெஞ்சுக்காரருக்கு அவரை அறிமுகப்படுத்தலாம்.

. பெரியவன் திறமைக்காக இந்த வாய்ப்பு வந்தது என நினைப்பது மனம்.

. நம்மிடம் உள்ள சந்தர்ப்பம் பெரியவன். அன்னை அச்சந்தர்ப்பத்தின் மூலம் செயல்படுகிறார் என அறிவது நம்பிக்கை.

. இரண்டையும் பிரித்து ஒரு பகுதியை பெரியவனுக்குக் கொடுப்பது தொழில் முறை.

. பார்ட்னர் அப்படி நடக்கவில்லை.

. தொழில் முறையைக் கருதாது, பெருந்தன்மையைக் கருதினார்.

. தொழில் முறையைக் கருதினால், பார்ட்னருக்குப் பவர் பிராஜெக்ட் எப்படி வரும்?

. அதைக் கருதி, தான் பெருந்தன்மையாக நடப்பது அன்னைக்குகந்தது.

. பார்ட்னர் நம்பிக்கையுடனும், பெருந்தன்மையுடனும் நடப்பதால் பிரெஞ்சுக்காரர் பவர் பிராஜெக்டை விரிவுபடுத்த நினைக்கிறார்.

. நாம் என்ன செய்கிறோம் என்பதைவிட என்ன மனநிலையில் செய்கிறோம் என்பதே முக்கியம்.

. கணவருக்கும் இதற்கும் எந்தத் தொடர்புமில்லை.

. பெரியவனுக்காவது இன்ஜீனியர் என்ற தொடர்புண்டு.

. தாயாருக்கு பக்தியுண்டு.

. கணவருக்கு எதுவுமில்லை.

. எதுவுமில்லாத கணவருக்கு எல்லாம் வருகின்றன.

. பார்ட்னருக்குரிய பக்குவம் அவருக்கில்லை.

. இந்த எல்லாச் சூத்திரங்கட்கும் தாயார் மையம்.

. பார்ட்னர் அன்னையைவிடத் தாயாரைக் கருதுகிறார்.

. வீட்டில் எவரும் தாயாரைக் கருதுவதில்லை.

. கணவருக்கு இருக்கவேண்டிய நம்பிக்கையை அன்னை பார்ட்னருக்குக் கொடுத்து, பார்ட்னர்மூலம் தாயாருடைய குடும்பவாழ்வில் செயல்படுகிறார்.

. நாம் - குடும்பத்தினர் - அன்னைக்கு அந்த வேலையைக் கொடுக்கக் கூடாது.

. வாய்ப்பு வரும்படி நம்பிக்கையுள்ளவரே குடும்பத்திற்குரியவர்.

குடும்பத்தில் பெரிய தலைகள் பழைய ஜீவியத்திற்குரியவை. கணவரின்

பெரியம்மா காலமானது அந்த ஜீவியத்தின் அதிகாரம் நீங்கியதாகும்:

. இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் இராணுவ அதிகாரிகள் வெள்ளையர்கள்.

. அது மாற 2, 3 ஆண்டுகளாயின.

. சுதந்திரம் வந்தவுடன் எல்லா நிலைகளிலும் அடியோடு உடனே மாறிவிடா.

. இன்று 50 ஆண்டுகளானபின் நமது நிர்வாகம் ஆங்கிலேய நிர்வாகமாகவே இருக்கிறது.

. 1947இல் சுதந்திரம் வந்தது. இம்பீரியல் பாங்க் என்பது நாட்டின் முதன்மையான பாங்க். அது வெள்ளையருடையது. அது நம் கைக்கு வாராமல் பாங்க் நிர்வாகம் மக்களுக்குப் பயன்படாது என, சில ஆண்டுகள் கழித்து அப்பாங்கை சர்க்கார் உடமையாக்கினர்.

. நாட்டை முஸ்லீம்கள் பிடித்தபின் மக்கள் இந்து மதத்திலிருந்தால் சரி வாராது என மக்களை முஸ்லீம் மதத்தைத் தழுவும்படிக் கூறினர்.

. அன்னையைக் குடும்பம் ஏற்றபின் முந்தைய தலைமுறை அன்னையை ஏற்றிருக்காது. ஏற்றாலும் அதில் முழுமையிருக்காது.

. வரும் பெரிய வாய்ப்புகள் புதிய ஜீவியம் வேரூன்றக் காத்திருக்கும்.

. பெரியம்மா காலமானபின் இறுதிச்சடங்கில் தாயார் குடும்பம் கலந்திருந்தால் புதிய ஜீவியத்திற்கு உயிரிருக்காது.

. இக்குடும்பம் காலமானவரைக் கண்டாலும் இறுதிச்சடங்குகளினின்று விலகியது.

. பெரிய வாய்ப்புகள்வர இக்குடும்பத்தின் மனநிலை வழிவிட்டது.

. பெரிய அன்னை வாய்ப்புகளை பழைய ஜீவியம் பெறமுடியாது. பெறமுயன்றால் தமிழ் பாட்டை இங்கிலீஷ் பாட்டு மெட்டால்

பாடுவதுபோருக்கும். அது சங்கீதமாகாது.

. காற்று நம் வீட்டைச் சூழ்ந்திருப்பதுபோல் அருள் நம்மைச் சூழ்ந்துள்ளது. ஜன்னல்கள் எல்லாம் திறந்தால் காற்று உள்ளே நுழைவதைப்போல்அருள் வாழ்வினுள் நுழையும்.

.வரும் தலைமுறைகள் ஜன்னல்கள் - திறந்த ஜன்னல்கள்.

. முன் தலைமுறைகள் தடுப்பு.

. நாம் இரண்டும் கலந்தவர்.

. முன் தலைமுறைகள் அன்னையை ஏற்றாலும், நம்மைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தாலும், நம் உடல் அவர்கள் ஆதிக்கத்திருக்கும்.அந்த ஆதிக்கம் அருளுக்குத் தடை.

. நாம் அன்னையை மனத்தால் ஏற்கிறோம்.

. உணர்வாலோ, உடலாலோ நாம் அன்னையை ஏற்பதில்லை.

. அடுத்த தலைமுறை அன்னையைப் பொதுவாக ஏற்பதில்லை.

. அடுத்த தலைமுறை அன்னையை விரும்பி ஏற்றால், அது பெரிய விஷயமாகும்.

. முன் தலைமுறை நம்முள் உள்ளது.

. அது நம் ஆழ்மனத்தை ஆக்ரமித்துக்கொண்டுள்ளது.

. தலைமுறைகளுக்குத் தலைவணங்குவது அவசியம்.

. அது நாம் மீறமுடியாத தடையாகும்.

. ஏற்பது எளிதன்று. ஏற்றபின் முழுமைப்படுத்துவது கடினம்.

தொடரும்.....

****


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

வலிமை எளிமையை ஆள்வதால் -

லௌகீக வாழ்வு வெற்றி பெற்றதால் -

அதுவே சரியான யுக்தி.


 


 book | by Dr. Radut