Skip to Content

05. யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V

                                                     (சென்ற இதழின் தொடர்ச்சி....)                   கர்மயோகி

873) லீலையின் இரகஸ்யத்தைப் புரிந்துகொண்டால் பரம்பொருள் சிருஷ்டியாக மனத்தில் சித்தித்ததுஎனப் பொருள். இதுவே உணர்வின் சித்தியாக வேண்டுமானால், அவ்வறிவின் ஞானம் லீலையை உணர்வாக அறியவேண்டும். அது உணர்வாகவோ, உடலுணர்வாகவோ இருக்கும்.

பரம்பொருள் சிருஷ்டியாக மனதில் சித்திப்பது லீலை.

. சிருஷ்டி லீலை என்பது மரபு.

. லீலை ஆண்டவனுடைய சித்தம். நாம் கேள்வி எழுப்புமிடமில்லை.

. ஸ்ரீ அரவிந்தர் லீலையின் இரகஸ்யத்தைக் கூறுகிறார்.

. எதுவும் தேவையில்லாத ஆண்டவன் ஒரு காரியத்தை நாடி, அது ஆனந்தத்தைத் தேடிச் செய்யும் காரியமாகும்.

. ஆனந்தம் என்பது கண்டுபிடிப்பதிலிருக்கிறது.

. கண்டுபிடிக்க ஒளிய வேண்டும்.

. இறைவன் ஒளிய இடமில்லை.

. தன்னுள்ளேயே இறைவன் ஒளிந்தான். அது சிருஷ்டி.

. ஒளிந்தவன் ஒளிந்ததை மறந்தான்.

. மறந்தது நினைவு வந்து மறைவிலிருந்து வெளிவருவது பரிணாமம்.

. அப்படி வெளிவரும் ஆனந்தத்தை நாடி இறைவன் சிருஷ்டித்தான்.

. இது லீலையின் இரகஸ்யம்.

. இது புரிவது ஞானம்; ஞானசித்தி.

. பிரம்மத்தை அறியும் ஞானம் என்பதால் பிரம்ம ஞானம்.

. அறிவது ஞானமானால் உணர்வது பக்தி.

. அறிவு செயலில் வெளிப்படுவது existenceவாழ்வு.

. பரம்பொருளைப் பரம்பொருளாக அறிவது பிரம்ம ஞானம்.

. பரம்பொருளை சிருஷ்டியாக அறிவது அடுத்த கட்டம்.

. பரம்பொருளை நாமாக அறிவது பரம்பொருள் நம்மில் சித்திப்பதாகும்.

. பிரம்ம ஞானம் சிருஷ்டியாகச் சித்திக்க பிரம்மார்ப்பணம் வேண்டும்.

. பிரம்ம ஜனனம் முடிவு.

. பிரம்ம ஜனனம் காலமும், கடந்ததும் சந்திக்கும் நிலையிலுள்ளது.

. மனதில் சித்திப்பது முதல் நிலை.

. உணர்வில் சித்திப்பது அடுத்த நிலை.

. உடலில் சித்திப்பது முடிவான நிலை.

. அவை பிரம்மத்தின் வாயிலாக

. பிரம்ம ஞானம்,

. பிரம்மார்ப்பணம்,

. பிரம்ம ஜனனம் எனப்படும்.

. அறிவு, ஞானம் என்பவை பெரியவை.

. எதை நாம் அறிகிறோமோ அதை நாம் அடையலாம் என்பது அறிவுக்கு உள்ள சக்தி.

. சுமார் 300, 200 ஆண்டுகட்குமுன் ஊரில் மணியம் பெரிய வேலை. அது பெரிய மிராசுதாருக்குப் பரம்பரை வாரிசாக உரியது.

. நாட்டை ஆளும் அதிகாரியாக தனவந்தர்களே தேர்ந்தெடுக்கப் படுவார்கள். செல்வமில்லாதவனுக்குப் பதவியில்லை என்பது எந்த நாட்டிலும் இருந்த நிலை.

. 800 ஆண்டுகட்குமுன் இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்கள் ஏற்பட்டன. அங்கு பட்டம் பெற்றவர்க்கு நாட்டை ஆளும் தகுதி வந்தது. அது சைனாவிலும் இருந்தது. இந்தியாவில் ஆளப் பிறந்தவன் நிலம் பேர்அளவில் உள்ள மிராசுதார்.

. 1800 முதல் ஆங்கிலேய ஆட்சி கம்பனிமூலமாக ஆரம்பித்து, 1857இல் இங்கிலாந்து சர்க்கார் நேரடியாக ஆள ஆரம்பித்தது. 1900 வாக்கில் இந்தியர்கள் ICSபடித்தனர். நேரடியாக கலெக்டரானார்கள். 1947 முதல் ICS, IAS ஆயிற்று.

படிப்பு ஆளும் தகுதி தந்தது.

. சித்தியெனில் பல ஆயிரம் பிறவிகள்மூலம் மனிதன் ஆண்டவனை அடைவது. தவம் பல ஆயிரம் பிறவிப் பயனைத் தரும். ஞானம் தவப் பயனைத் தருகிறது.

. லீலையின் இரகஸ்யத்தைப் புரிந்துகொள்வது அறிவு, ஞானம்.

. இந்த ஞானம் தவப்பயனான பல ஆயிரம் பிறவிப்பயனை நமக்கு அளிக்கிறது.

. ஞானம் மனத்திற்குரியது.

. மனித வாழ்வு உடலால், உயிரால் வாழப்படுவது.

. உடலிலிருந்து மனத்திற்கு வந்தவனுக்கு அறிவுண்டு.

. உலகை அறிவது அறிவு.

. ஆண்டவனை அறிவது ஞானம்.

. ஆண்டவனை அறிந்தால் - ஞானம் பெற்றால் - அவன் சித்திப்பான்.

. லீலையின் இரகஸ்யம் என்றால் ஆண்டவனின் செயன் சூட்சுமம்.

. விஷயத்தை அறிவது வேறு; அதன் சூட்சுமத்தை அறிவது வேறு.

. அறிவில் பெறுவது ஞானசித்தி.

. உணர்வில் பெறுவது உணர்வின் சித்தி.

. ஞானம் பக்தியைவிடச் சிறியது.

****

874) சித்தி, உடலில உள்ள ஜடத்தைத் தொட்டால், உடலுணர்வு மறைந்து

சித்தியின் நிறைவு எழுகிறது. அது ஜடத்தைவிடத் திடமானது (denser). இந்நிலையை பகவான் "பொறுக்க முடியாத ஆனந்தம்" என்று கூறுவது காணப்படும். அன்னை அதையே "இடைவிடாத ஆனந்தப் பூரிப்பு" என்கிறார்.

சித்தி ஜடத்தில் பொறுக்க முடியாத ஆனந்தம் தரும்.

. நாம் ஆனந்தம் என்று அனுபவிப்பதைச் சிற்றின்பம் எனவும், ஆண்டவன் தரும் ஆனந்தத்தைப் பேரின்பம் எனவும் கூறுவர்.

. பள்ளிக்குப் போய் படிப்பவன் பட்டம் பெற்று, உத்தியோகம் செய்வான்.படிக்காதவன் கூலிவேலை அல்லது விவசாயம் செய்வான். இவை இரண்டையும் கடந்த நிலையொன்றுண்டு. தாகூர், ஐன்ஸ்டீன், பெர்னார்ட்ஷா போன்ற மேதைகள் பள்ளிக்குப் போக மறுத்து,சொந்தமாகப் படித்து, மேதை genius ஆனார்கள்.

. சிற்றின்பமும், பேரின்பமும் பள்ளிக்குப் போகாத பையன், போய்ப் பட்டம் பெற்றவன் போலாகும். இவற்றைக் கடந்த மேதையின் நிலையைப் போல் பரிணாம இன்பம் வாழ்விலுண்டு. பகவான் ஸ்ரீ அரவிந்தர் உலகுக்கு அளிக்கும் பூலோகச் சுவர்க்கம் அது.

. வாழ்வு பள்ளி போன்றது. வாழ்வை விட்டு வெளியில் வந்தால் தெருவில் நிற்க வேண்டும். வாழ்வை விட்டு வெளியில் வாராமல் தெய்வத்தை ஏற்க முடியாது. வாழ்வை - இன்றுள்ள வாழ்வை - ஏற்க மறுத்து,அன்னை வாழ்வை ஏற்பவனுக்குப் பேரின்பத்தைக் கடந்த பெரிய இன்பம் உண்டு என்பது ஸ்ரீ அரவிந்தம்.

. வண்டி 5, 6 மைல் வேகத்தில் போகும். சைக்கிள் அதிகபட்சம் 20 மைல் வேகத்தில் போகும். மாட்டு வண்டியை 20 மைல் வேகத்தில் ஓட்ட முடியாது. ஓட்ட முயன்றால் வண்டி உடையும். சைக்கிளில் மோட்டாரை வைத்து 50 மைல் வேகத்தில் ஓட்டலாம். அது ஆபத்து; உடல் தாங்காது; சைக்கிளில் எல்லா மறைகளும் கழன்று விழுந்து விடும்.

. மனித உடலுக்கு பேரின்பம் ஒத்துவாராது. அதனால் பேரின்பத்தை தபஸ்வி சமாதியில் அனுபவிக்கிறார். சமாதியிலிருந்து விழித்தால் பேரின்பம் மறந்துபோகும். அதன் சாயலிருக்கும். அந்தச் சாயல் உடலுக்கு ஆரோக்கியம் தரும்; ஆயுளை நீடிக்கும்.

. பேரின்பத்தைக் கடந்த பரிணாம இன்பத்தை மனிதன் அனுபவிக்க மனமும், உடலும் திருவுருமாறியிருக்க வேண்டும். அப்படி திருவுரு மாறிய நிலையில் பெரிய இன்பம் அனுபவிக்கக்கூடியது.

. "இந்த யோகத்தைச் செய்யும் திறன் உன் உடலுக்குண்டு" என்று அன்னையிடம் பகவான் கூறினார்.

. பகவானுடைய யோகம் மனம், உணர்வைக் கடந்து உடலின் ஜீவியத்தில் பூர்த்தியானபின் உடலின் substance பொருளில் யோகம் தொடர வேண்டும். அவர் உடலை நீத்தார். அன்னை யோகத்தைத் தொடர்ந்து உடலின் ஜீவியத்திற்கு - ஸ்ரீ அரவிந்தர் இருந்த இடத்திற்கு - வந்து, அதைக் கடந்தபொழுது உடல் தழலாக எரிந்தது. ""எனக் கூவலாம் போலிருந்தது.

"பகவான் இந்த நிலையில் இருந்திருக்கிறார்"என அன்னை அறிந்தபொழுது அவர் கண்கள் கலங்கின.

. உடல் திருவுருமாறுமுன் சக்தி (force) இறங்கி வந்தால் உடல் தாங்காது; எரியும். அந்நிலையில் 1 நிமிஷம் தாங்க முடியாத பூரிப்பு ஏற்படும். அந்த ஒரு நிமிஷம், அதை அனுபவிக்க 24 மணி நேரமும் நரகத்தை அனுபவிக்க வேண்டும்.

. பகவானும், அன்னையும் வேதனைப்பட்டு புது யோக வழியை ஏற்படுத்தி விட்டதால், அவர்களைப் பின்தொடர்பவருக்கு அவ்வேதனையில்லை.

பேரின்பத்தைக் கடந்த பெரிய இன்பத்தை உலகுக்கு முதல்

கொண்டு வருபவர் அனுபவிக்க வேண்டிய வேதனை மாளாது.

நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் (happiness), நிம்மதியாக இருக்க வேண்டும் என விழைகிறோம். சந்தோஷம் காரியம் கூடிவருவதால் (success) எழுவது. இவையிரண்டும் உயிர் (vital) தேடுவது. உயிருக்கு மேல் மனமும், ஆத்மாவும், சத்தியஜீவியமுமிருப்பதால் இது பெரிய இலட்சியமாகாது. எது பெரிய இலட்சியம் என்பதை மேலேயுள்ள செய்தி விளக்குகிறது. பரிணாமம் என்பது,

. கீழிருந்து மேலே போவது; உடல், உயிர், மனம், ஆத்மா, சத்திய ஜீவியம் என்பவை அடுத்த அடுத்த கட்டங்கள்.

. மேலிருந்து கீழே வருவது சிருஷ்டி. இது சத்தியஜீவியத்திலிருந்து உடலுக்கு வருவதாகும்.

. முதற்கட்டமான உடல், பரிணாமம் மேலே போய் சத்தியஜீவியம் கீழே வரும் பொழுது கடைசி கட்டமாக இருப்பதைக் காணலாம்.

. சத்தியஜீவியம் உடலில் இறங்கி வந்து தங்குவதே யோகம் முடிவாக சித்திப்பது.

. அப்படி முடியும்பொழுது உள்ள உணர்ச்சி, இறைவன் நம் உடல் உணரும் உணர்ச்சி.

. அதை பகவான் "பொறுக்க முடியாத ஆனந்தம்" எனவும், அன்னை "இடைவிடாத ஆனந்த பூரிப்பு" எனவும் வர்ணிக்கிறார்கள்.

. ஒரு துளி அன்பு இன்று உலகுக்கு வந்தால் உலகம் பாரம் தாங்காமல் அழிந்துபோகும் என்கிறார் பகவான்.

. அன்பு ஆனந்தத்தின் மூன்று அம்சங்களில் - அழகு, சந்தோஷம், அன்பு

- ஒன்று.

. ஆனந்தத்தை ஆத்மா பெறும் பொழுது எழும் உணர்வு அன்பு.

. நம் பழக்கத்தில் மிகப்பெரிய காரியங்கள் தொடர்ந்து நடந்தால், அவை ஒரு கட்டத்தில் கெட்டுப்போவதுண்டு. அப்பொழுது நாம் "எனக்கே பொறுக்கவில்லை" என்கிறோம். அதாவது ஆத்மா விழித்துப் பெறும் பேறு உயிருக்கும், உடலுக்கும் பொறுக்க முடியாது என்ற ஆன்மீக உண்மையை இந்த வழக்குக் கூறுகிறது. அதனால் அது தொடரும் காரியத்தை நாம் செய்வதில்லை.

. அது கெட்டுப்போகும் காரியத்தைச் செய்யத் தோன்றும்; செய்வோம். அதை நன்றி கெட்ட குணம் என்கிறோம்.

. தத்துவ விளக்கப்படி நன்றிகெட்ட மனம்என நாம் அறிவதை "இனிமேலும் வரும் அருளைப் பொறுக்க முடியாதபடி தடுக்கும் செயல்" எனக் கூறலாம்.

. ரிஷிகள் செய்த யோகம் மேல்மனம் செய்தது. ஸ்ரீ அரவிந்தரது யோகம் அடிமனம் செய்வது. அது அகங்காரம் பூர்த்தியான யோகம். இது அகந்தை அழியும் யோகம். ஆத்மா பிறவியிலிருந்து விடுபட்டு மோட்சம் அடைவது பழைய யோகம். ஆத்மா உடல், உயிர், மனத்துள்ளிருந்து வெளிப்பட்டு வாழ்வில் சைத்தியப்புருஷனாகப் பூர்த்தியாகத் திருவுரு மாறுவது இந்த யோகம்.

தொடரும்....

**** .

ஜீவிய மணி

அன்னையின் ஸ்பர்சம் ஆனந்தத்தின் ஸ்பர்சம்.


 


 



book | by Dr. Radut