Skip to Content

08.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்


1) என் மகளுக்கு 1½வயது இருக்கும்பொழுது எங்கள் வீட்டில் நெல் மூட்டைகள் அதிகமாக அடுக்கிவைத்து இருப்பார்கள். எலிதொல்லை ஜாஸ்தியாக இருந்தது. நான் எலி மருந்தை, தக்காளி பழத்தில், அதை வெட்டி அதனுள் வைத்து, ஆங்காங்கே வைத்துவிட்டேன். என் மகள் நான் வேலையாக இருக்கும்பொழுது தக்காளி பழத்தை சாப்பிட்டுவிட்டாள் போலும். நான் வேலை முடிந்து அவளை பார்க்கும்போது வாயெல்லாம் தக்காளி சாறு. எனக்கு ஒரே கவலையாகிவிட்டது. அன்னையே என்று மனதில் நினைத்து என் மாமியாரிடம் சொன்னேன். டாக்டரிடம் காட்டியபோது அவர்கள் "ஒன்றும் வேண்டாம். தண்ணீர் கொடு, போதும்'' என்றார்கள். 2 நாட்கள் கழித்து அன்னை படத்தை நான் துடைக்கும்போது அன்னை வாய்ப்பகுதியில் அந்த எலி மருந்து வழிந்து இருந்ததை பார்த்தேன்.அன்னை, என் குழந்தை சாப்பிட்ட எலி மருந்தை வாங்கிக் கொண்டார்கள் போலும்.

2) நான் செங்கல்பட்டில் வேலை பார்க்கும்போது ஒரு முறை என் மனைவி, மகன்கள் வந்து இருந்தார்கள். இரவு 10 மணிக்கு பெட்ஷீட்டை உதறி படுக்கை விரிக்கும்போது அதில் தேள் இருந்தது போலும். என்னைக் கால் கொட்டிவிட்டது. இரவு நேரம், ஞாயிற்றுக் கிழமை, டாக்டரிடம் போகமுடியாது. நான் இரவு முழுவதும் அன்னையை நினைத்துக்கொண்டே இருந்தேன். காலையில் விஷம் இறங்கி, நான் வேலைக்கும் சென்றுவிட்டேன். "அன்னை'' என்ற மந்திரச்சொல் என் தேள்கடி விஷத்தை இறக்கிவிட்டது.

3) என் மகனுக்கு U.S.Aவில் வேலைக்கு ஆர்டர் வந்துவிட்டது. ஆனால் பாஸ்போர்ட் தேவை. அந்த ஆண்டு செங்கல்பட்டில் கனமழையால் வீடு ஒழுகி, அவன் பாஸ்போர்ட், இன்னும் சில பேப்பர்கள், என் புத்தகங்கள் கரையான் அரித்துவிட்டது. 1 வாரமாக என் மகன் திருச்சி பாஸ்போர்ட் ஆபீஸிற்கு அலைகிறான். எதுவும் நடக்கவில்லை. என் கணவரிடம், "நீங்கள் அவனுடன் சென்று, அங்கு போய் உண்மையை சொல்லுங்கள்'' என்று கூறிவிட்டு, நான் அன்னையை அவர்களுடன் அனுப்பிக்கொண்டு இருந்தேன். என் மகனும், கணவரும் அந்த பாஸ்போர்ட் ஆபீஸரிடம் அந்த கரையான் அரித்ததை எடுத்துப்போய் காட்டினார்கள். அவரும் வானிலை ஆபீஸிற்கு போன் செய்து செங்கல்பட்டில் அந்த நேரம் புயல், மழையா என்று கேட்டு, அது உண்மை என்று அறிந்து, உடனே என் மகனுக்கு ஆவன செய்தார். அன்னை உண்மைக்குக் கொடுத்த பரிசு.

4) எனக்கு ஒவ்வொரு மாதமும் 30ஆம் தேதி என் சேல்ஸ் ரிப்போர்ட் ஒப்படைக்க வேண்டும். அதில் 100% காண்பிக்க வேண்டும். ஒரு மாதம் 29ஆம் தேதி 70% சேல்ஸ் காண்பித்துவிட்டேன். இன்னும் 30%காண்பிக்க வேண்டும். 1 நாள்தான் இருக்கிறது. அந்த 30ஆம் தேதி நான் வீட்டிலிருந்து ஆபீஸிற்கு அன்னையை அனுப்பிவிட்டு, அன்று தேவையான ஆர்டர் எல்லாம் அன்னையே deal செய்வதாக நினைத்து,அன்னையை ஒவ்வொரு இடத்திலும் பிரதிஷ்டை செய்ய ஆரம்பித்தேன். ஆபீஸ் போனவுடன் ஒரு போன் call. "அன்னையே' என்று அதை எடுத்துப் பேசினால், ஒருவர் 1 இலட்சத்திற்கு மேட்ரஸிற்கு ஆர்டர் கொடுக்கிறார். எனக்குத் தேவை 30%. ஆனால் எனக்கு அன்னை கொடுத்தது அதைவிட அதிகம். அன்னையை அமைதியாக அழைத்து, பிரதிஷ்டை செய்தால், அபரிமிதமாக பலிப்பார் என்பதை நான் உணர்ந்தேன்.

5) என் திருமணம் நடந்தது அன்னையின் அருளால்தான். நான் சென்டரில் சர்வீஸ் செய்பவள். எனக்கு திருமணம் நிச்சயம் நாளை என்றால், அவர்கள் (பிள்ளைவீட்டார் வரதட்சணை, சீர் எல்லாம் ரொம்ப எதிர்பார்த்ததாலும், எங்களால் செய்ய முடியாது என்று உணர்ந்த பிள்ளைவீட்டார்) நிச்சயதாம்பூலத்தை நிறுத்திவிட்டனர். என் அம்மாவிற்கு ரொம்ப வருத்தம். ஏனெனில் எங்கள் உறவினர், தெரிந்தவர்களுக்கு எல்லாம் சொல்லி விட்டோம். நான் மட்டும் எப்போதும்போல் தியான மையம் வந்து சர்வீஸ் செய்தேன். அன்று தியான மைய பொறுப்பாளரிடம் இந்த விஷயத்தைச் சொன்னேன். அவர்கள் இதைவிட நல்ல மாப்பிள்ளை அன்னை கொடுப்பார்கள் என சொன்னதை நான் ஏற்றுக்கொண்டேன். 10 நாட்களிலேயே தியானமைய பொறுப்பாளரின் நண்பர் மூலமாக எதிர்பாராமல் மாப்பிள்ளை வந்து, திருமணம் நிச்சயம் ஆகி, 1 மாதத்தில் திருமணம் முடிந்து விட்டது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் என் மாமியார், "நீ அன்னையை எங்கு வேண்டுமானாலும் வைத்து வழிபடு'' என்று சொன்னது. மேலும் என் கணவரும் என்னிடம் பிரியமாக இருக்கிறார். அன்னை, ஒன்று தட்டிப்போனால் அதைவிடச் சிறப்பாக தருவார் என்பதை அறிந்து, இன்று சந்தோஷமாக இருக்கிறேன்.

****


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

சாதிப்பவர்கள் வேலையை நினைத்துக்கொண்டிருப்பார்கள்.

சாதிக்காதவர்கள் பலனை நினைத்துக்கொண்டிருப்பார்கள்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஆன்மாவும் சக்தியும் பிரிந்து, சக்தி ஆன்மாவை மறந்த நிலை,மனிதனுடைய நிலை. தான் மறந்த ஆன்மாவை, சக்தி நினைவுபடுத்திக்கொண்டால், சக்தி சரணாகதியை நாடுகிறது எனப் பொருள். சரணாகதியை மனிதன் விரும்பி நாடுவது மனிதன் தன் தெய்வீகத்தை உணர்வதாகும்.

சக்தி ஆன்மநினைவால் சரணாகதியை நாடுவது யோகம்.

 


 book | by Dr. Radut