Skip to Content

11.புது வரவு

"அன்னை இலக்கியம்"

புது வரவு

டி.எஸ். ஜெயந்தி

கையில் சாப்பாட்டுக்கூடையுடன் கஸ்தூரி மருத்துவமனை படிக்கட்டுகளில் மெதுவாக ஏறிக்கொண்டிருந்த ஜெயா குரல் கேட்டு நிமிர்ந்தாள்.

"ஹலோ மேடம், எப்படி இருக்கீங்க?''

"நீங்க டிரைவர் முருகனோட ப்ரெண்டு ரமேஷ் இல்ல. நீங்க எப்படி இங்க.....?'' என்றாள் ஜெயா.

"அட, என் பேரைக்கூட நல்லா ஞாபகம் வெச்சிருக்கீங்களே! ஆமாம் நீங்க இங்க.....?'' என்று இழுத்தான் ரமேஷ்.

"என் வீட்டுக்காரருக்கு ஒரு வாரமா டெம்ப்ரேச்சர் குறையவே இல்லை. அதான் இங்க அட்மிட் செய்திருக்கோம்'' என்றாள் ஜெயா.

"மேடம், என் மனைவி சித்ராவை இங்க டெலிவரிக்காக அட்மிட் செய்திருக்கேன்''.

"அது சரி ரமேஷ், உங்க வீடு திருவள்ளூர்ல இருக்கறதா சொன்ன ஞாபகம். அங்க இருந்து இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க'' என்று கேட்டாள் ஜெயா.

"டாக்டர் வள்ளி எங்களுக்கு ரொம்ப வருஷமா பழக்கம். நல்ல கைராசிக்காரர். அதனாலதான் இவ்வளவு தூரம் வந்திருக்கோம்'' என்று கூறினான் ரமேஷ்.

பேசிக்கொண்டே இருவரும் நடக்க, "மேடம், இதுதான் என் மனைவி சித்ரா இருக்கற வார்டு. வாங்க மேடம், அறிமுகம் செய்துவைக்கிறேன்'' என்று ஜெயாவை அழைத்துச் சென்றான் ரமேஷ்.

"சித்ரா, இவங்க என் ப்ரெண்டு முருகனோட ஆபீஸ்ல வேலை பாக்கறாங்க. ரொம்ப நல்லவங்க. முருகனுக்கு உடம்பு சரியில்லாம இருந்தபோது மெடிக்கல் கார்டு வாங்கிக்கொடுத்து ரொம்ப உதவி செய்தாங்க. ஆஸ்பத்திரிக்கு வந்து பாத்தாங்கன்னு சொல்லி இருந்தேனே. அவங்கதான் இவங்க'' என்று ஜெயாவைத் தன் மனைவி சித்ராவிற்கு அறிமுகப்படுத்தி வைத்தான் ரமேஷ். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு மறுநாள் காலை வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றாள் ஜெயா.

மறுநாள் ரமேஷைத் தன் கணவன் ரமணி இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்திவைத்தாள் ஜெயா. ரமணியின் கையில் இருந்த அன்னையின் புத்தகத்தைப் பார்த்த ரமேஷ் "என்ன சார் புத்தகம்? இவங்க யாரு?'' என்று கேட்டுவிட்டு பதில் வருவதற்கு முன்பே ஜெயாவிடம், "மேடம், நீங்க எனக்கு ஓர் உதவி செய்யணும். சித்ராவுக்கு டெலிவரியாக இன்னும் 10-15 நாட்கள் ஆகும்னு டாக்டர் காலையில சொன்னாங்க. மறுபடியும் திருவள்ளூர் போய் திரும்பி வரது சிரமம். அதனால இங்க ஒரு ரூம் பாத்துக் கொடுத்தீங்கன்னா 15 நாள் இருந்து டெலிவரி ஆனப்பறம் திருவள்ளூர் போகலாம்னு நினைக்கிறேன்'' என்றான் ரமேஷ்.

"அதுக்கென்ன, பக்கத்துல தந்தி ஆபீஸ்ல என் ப்ரெண்ட்ஸ் இருக்காங்க. ஏதாவது ரூம் கிடைக்குமான்னு விசாரிக்கச் சொல்லிட்டு வரேன்'' என்ற ஜெயா தன் கணவனிடம், "நான் வரதுக்குள்ள ரமேஷுக்கு அன்னையைப் பற்றி சொல்லுங்க. அவங்க நினைச்சா ரூம் பாக்கற வேலையே இல்லாம செஞ்சுடுவாங்க'' என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டுச் சென்றாள் ஜெயா.

தந்தி ஆபீஸ்வரை சென்றுவிட்டு, திரும்ப கணவன் இருந்த ரூமுக்குள் நுழைந்த ஜெயா ரமேஷின் கையில் இருந்த அன்னையின் புத்தகத்தைப் பார்த்தவுடன் 'ஆஹா, விஷயம் முடிந்துவிடும்' என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டாள்.

மாலை மூன்று மணி இருக்கும். சித்ரா எப்படி இருக்கிறாள் என்று பார்க்க அவள் அறைக்குச் சென்றாள் ஜெயா. இப்பொழுது சித்ராவின் கையில் அன்னை புத்தகம். பின் அட்டையில் இருந்த அன்னையின் பாதங்களைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டிருந்தாள் சித்ரா. சிறிது நேரம் அவளுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டுக் கணவன் இருந்த அறைக்குத் திரும்பினாள் ஜெயா.

சுமார் நாலரை மணிக்கு ரமேஷ் ஓடிவந்து "மேடம், கொஞ்சம் சித்ராவை வந்து பாருங்க. ஏதோ சொல்ல வருகிறாள். அவள் தாயில்லாத பெண். நல்லபடியாக டெலிவரி ஆகவேண்டும்'' என்று படபடத்தான் ரமேஷ்.

ஜெயா மனதிற்குள், "தாயில்லாப் பெண்ணா? தாய்க்குத் தாயான அன்னையை அல்லவா ஏற்றுக்கொண்டிருக்கிறாள். கண்டிப்பாக சுகப்பிரவசம்தான்'' என்று கூறிக்கொண்டாள்.

"சித்ரா எப்படியிருக்க? என்னம்மா செய்கிறது'' என்று கேட்டாள் ஜெயா.

"மேடம், எனக்கு லேசாக டிஸ்சார்ஜ் ஆகிறது'' என்றாள் சித்ரா. 'ஆஹா! அன்னையின் அருள் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது' என்று சந்தோஷப்பட்டாள் ஜெயா. நர்ஸைக் கூப்பிட்டாள் ஜெயா. நர்ஸ் சித்ராவை லேபர் வார்டுக்கு அழைத்துச்சென்றார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்த நர்ஸ், "எப்படியும் மறுநாள் காலைக்குள் டெலிவரி ஆகிவிடும்'' என்று கூறிவிட்டுச் சென்றார்.

ரமேஷ், "என்ன மேடம் இது. இன்று காலையில்கூட டாக்டர் கண்டிப்பாக இன்னும் 10, 15 நாட்கள் ஆகும் என்றாரே. சித்ராவை அழைத்துக்கொண்டு போய்விடச் சொன்னாரே. நீங்க காண்பித்த தெய்வத்திற்கு இவ்வளவு சக்தியா?'' ஆச்சரியத்தால் ரமேஷ் துள்ளிக் குதிக்காத குறைதான்.

ஜெயாவுக்கு ஆச்சரியமில்லை. இதைப்போல் அன்னை எத்தனை, எத்தனை அற்புதங்களை நடத்தி இருக்கிறார்.

"ரமேஷ் நான் வீட்டிற்குக் கிளம்புகிறேன். குழந்தைகள் காத்துக் கொண்டிருப்பார்கள். சித்ராவுக்குக் குழந்தை பிறந்த உடனே எனக்கு போன் செய்யுங்கள். காலையில் வந்துவிடுகிறேன்'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள் ஜெயா.

காலையில் சமையலறையில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்த ஜெயாவின் காதில் விழுந்தது டெலிபோன் மணி ஓசை. ரமேஷேதான்.

"மேடம், என்ன ஆச்சரியம்! என்ன அற்புதம்! எனக்கு ஏழரை மணிக்கு ஆண்குழந்தை பிறந்திருக்கிறது, சுகப்பிரவசம். டாக்டரின் கணிப்பு தலைகீழாயிட்டுதே'' படபடவென்று பொரிந்து கொட்டினான் ரமேஷ்.

"இது நான் எதிர்பார்த்ததுதான். இதோ நான் கிளம்பி வந்து கொண்டே இருக்கிறேன்'' என்றாள் ஜெயா.

ஆஸ்பத்திரி வாசலிலேயே வாயெல்லாம் பல்லாக நின்று கொண்டிருந்தான் ரமேஷ். "மேடம், இப்பதான் ரூம் குடுத்திருக்காங்க. குழந்தையை நீங்களே ரூமுக்கு எடுத்துட்டு வாங்க மேடம்'' என்றான் ரமேஷ். இருவரும் பேசிக்கொண்டே லேபர் வார்டுக்கு வந்தனர்.

அப்பொழுதுதான் பூத்த ரோஜாப்பூவைப் போல் இருந்த குழந்தையை நர்ஸ் ஜெயாவின் கையில் கொடுத்தாள். அதன் ஸ்பரிசத்தில் மெய் சிலிர்த்தாள் ஜெயா. அன்னைக்கு மனதால் நன்றி கூறிவிட்டு "குழந்தைக்கு  'அரவிந்த்' என்று பெயர் வையுங்கள் ரமேஷ்'' என்றாள்.

"அதென்ன மேடம், உங்க சார்கூட இதே பெயரைத்தான் சொன்னார்'' என்று ஆச்சரியப்பட்டான் ரமேஷ். குழந்தையைத் தாயின் அருகில் விட்டுவிட்டு விடைபெற்றாள் ஜெயா.

டாக்டர் ஜெயாவின் கணவருக்கு உடம்பு சரியாகிவிட்டதால் இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்துவிடுவதாகக் கூறினார்.

மறுநாள் ரமேஷ் ஜெயாவிடம் 'அன்னை தரிசனம்' புத்தகத்தை வாங்கித் தரச்சொல்லி எடுத்துக்கொண்டு சித்ராவையும், குழந்தை அரவிந்தையும் அழைத்துக்கொண்டு வீட்டிற்குக் கிளம்பினான். அவர்களுக்கு விடை கொடுத்துவிட்டு, அவர்கள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த ஜெயா, 'அன்னையே! யாரோ ஒருவர் உங்களை அறிந்து கொள்வதற்காக எங்களைக் கருவியாகப் பயன்படுத்தினீர்களோ? அதற்காகவே என் கணவருக்கு இந்த சுரத்தைக் கொடுத்தீர்களோ? என்னே எங்கள் பாக்கியம்!' என்று மனதிற்குள் கூறிக் கொண்டாள்.

****


 


 


 book | by Dr. Radut