Skip to Content

04.ஆன்மீகத்துடன் இணைந்த வளம்

ஆன்மீகத்துடன் இணைந்த வளம்

என். அசோகன்

ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையை எதிர்த்து மார்ட்டின் லூதர் தன்னுடைய மத நம்பிக்கைகளை வெளியிட்டபொழுது அதை ஒரு பெரிய புரட்சியாக மாற்றியது அப்பொழுது புதிதாக எழுந்திருந்த அச்சுத் தொழில்தான். புதிதாகத் தோன்றிய அச்சுக்கூடங்கள் ஆயிரக்கணக்கான பைபிள் பிரதிகளைப் பொதுமக்கள் கையில் கொண்டு சேர்த்தன. சிறிது காலத்திலேயே பல நூற்றாண்டுகளாக ஓங்கி வளர்ந்திருந்த ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை தன்னுடைய பக்தர்களில் பாதிப் பேரை லூதர் துவக்கிவைத்த சீர்திருத்த இயக்கத்திற்கு இழந்தது. பெரிய புரட்சிகளுக்குப் பின்னால் மக்களின் அபிப்பிராயங்களை மாற்றும் சக்தி படைத்த பத்திரிகைகள் இயங்கியிருக்கின்றன என்பது பரவலாகத் தெரிகின்ற உண்மையாகும்.

நாளேடுகள், வாரப்பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிச் சேனல்கள் தற்பொழுது பெருகியுள்ளன. சுதந்திரப் போராட்டத்தின்பொழுது இவை செய்த வேலையை இப்பொழுது செய்யத் தேவையில்லை. அதாவது சுதந்திர வேட்கையை இப்பொழுது தூண்டத் தேவையில்லை. மாறாக மக்களின் சுபிட்ச வேட்கையைத் தூண்ட, பத்திரிகை உலகம் பாடுபடலாம். செய்தித்தாள்கள் தற்பொழுது வெறும் செய்தியைமட்டும் தருகின்றன. சுபிட்சத்தை நாடும் மக்களின் ஆர்வத்தைப் பூர்த்திசெய்யும் வகையில் இவை செயல்படுவதில்லை. சுபிட்ச வேட்கையைத் தூண்டுவது போக இந்நாட்டின் பழம்பெரும் ஆன்மீகச் சிறப்பை மீண்டும் நிலைநாட்டும் வகையிலும் பத்திரிகைகள் செயல்படலாம். ஞானமும், விவேகமும் நிறைந்த அறிவாளிகள் இந்நாட்டில் நிறையப்பேர் உள்ளனர். வருங்காலத்தில் சடங்குகளுக்கு முக்கியத்துவமில்லை. ஆன்மீகச் சாரம்தான் கருதப்படும் என்பதை இந்த அறிவாளிகள் உணர்ந்துள்ளார்கள்.

நவீன வாழ்க்கையை பழைய ஆன்மீகச் சிறப்புகளுடன் இணைத்து வாழ்வதெப்படி என்பதை விளக்கி இவ்வறிஞர்கள் பத்திரிகைகளில் நிறைய எழுதலாம். வாழ்க்கையை வெறுத்து ஒதுக்குவது என்பது சரியில்லை. கீதோபதேசம் சிறந்தது என்றாலும் அதன் இறுதி உபதேசம், வாழ்வைத் துறந்து மோட்சத்தை நாடுவதாக அமைகிறது.

வாழ்க்கையையும் ஆன்மீகத்தையும் இணைத்து எப்படி வாழ்வை வளப்படுத்துவது? இந்தியர்களின் சுபாவத்தில் அடிப்படையில் ஆன்மீகம் இருக்கிறது. அதை வெளிக்கொண்டுவரும் நற்பணியை, பத்திரிகை உலகம் செய்யலாம்.

பத்திரிகை நிருபர் இதன்பொருட்டு எந்தச் செய்தியைத் தேடுவது என்ற கேள்வியை எழுப்பலாம். பொதுவாக, சாதித்தவர்களைப் பற்றி நிறைய செய்திகள் வருகின்றன. ஒவ்வொரு சாதனைக்குப் பின்னும் ஓர் ஆன்மீகப் பண்பு செயல்படுகிறது.

ஒரு விவசாயி அமைச்சரானார். அதற்குமுன்பு தினமும் காலையில் எழுந்து அவர் தம்முடைய நிலத்தைச் சுற்றிப் பார்ப்பது வழக்கம். அமைச்சரான பின்பும் தம் நிலத்தைக் கவனிப்பதை அவர் நிறுத்தவில்லை. சமூக அந்தஸ்தைத் தாண்டி உடமைகளுக்குக் கவனம் செலுத்தும் பொழுது அக்கவனம் ஓர் ஆன்மீகச் சிறப்பைப் பெறுகிறது. சாதித்தவர் மாணவனாகவோ, விளையாட்டு வீரராகவோ, கலைஞராகவோ, அரசியல்வாதியாகவோ எத்துறையிலிருந்தாலும் இவ்வுயர்விற்குப் பின்னால் அதற்கு ஆதரவளிக்கும் வகையில் ஓர் ஆன்மீகப் பண்பிருக்கும். அப்பண்பு கட்டுப்பாடாகவோ, பக்தியாகவோ, ஆர்வமாகவோ எந்த ரூபத்தில் இருந்தாலும் அதற்கோர் ஆன்மீக வலிமையுள்ளது.

இன்று நாட்டில் ஊழல் மலிந்திருக்கலாம். ஆனால் இது நிலைத்து நிற்க முடியாது. எல்லா மேலைநாடுகளும் சுபிட்சமடைந்த தொடக்க காலத்தில் ஊழலைச் சந்திக்கத்தான் செய்தன. படிப்பறிவு வளர்ந்து, நாட்டில் சுபிட்சம் பரவி நிலைத்துநிற்கும்பொழுது ஊழலும் படிப்படியாகக் குறைந்து ஒரு கட்டத்தில் மறைகிறது. அப்பொழுது இறுதியில் வெற்றிபெறுவது மனிதனின் ஆன்மீகப்பண்புகள்தாம். இத்தகைய பண்புகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் பத்திரிகை உலகம் செயல்படவேண்டும்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

நாம் சமூகத்தை முழுமையாக நம்பியிருக்கிறோம்என்ற பூரண சமூக அறிவைப் பெறுதல், சமூகத்தில் உயர்ந்த அடக்கம் பெறுவதாகும்.

மனிதன் சமூகத்திற்கு உட்பட்டவன் என்பது உயர்ந்த தன்னடக்கம்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

மற்றவர் வாழ்வு மலர்வதில் மகிழும் மனிதனுக்கு உறவு என்று தனியாக ஒன்றில்லை.

உறவைக் கடந்த மலர்ச்சி.

ஸ்ரீ அரவிந்த சுடர்

தன் முக்கியத்துவத்தை விட்டுக்கொடுத்து, சரணாகதியை ஏற்பது மனிதனுக்குப் பெரிய முன்னேற்றம். அதை ஒரு முறையாகக் கண்டுபிடித்தவர் பகவான். பூரணயோகத்திற்கு அது முக்கியம்.

சரணாகதியை ஏற்றால் மனிதனைவிட்டு இறைவனை ஏற்கிறோம்.

 


 


 


 


 book | by Dr. Radut