Skip to Content

07.சுனாமி - பறவைகளின் நுண்ணறிவு

சுனாமி - பறவைகளின் நுண்ணறிவு

V. இராமதாசு

இயற்கைச் சீற்றங்களிலிருந்து மனிதர்களும் விலங்குகளும் எப்படிப் பாதுகாக்கப்படுகின்றனர் என்பதை விளக்க எழுதப்பட்டுள்ள கட்டுரை இது. கண்மூடியாக உள்ள மனிதர்கள் கண்ணைத் திறக்க ஆண்டவன் பஞ்சம்,நோய், தீ விபத்து, பூகம்பம், புயல்வெள்ளம் ஆகியவற்றை எழுப்புகிறான் என்று அன்னை கூறுகிறார். மனிதன் கண்மூடியாக இல்லாமல் விழிப்பாக இருந்து இந்தப் பேரிடர்களை எதிர்கொண்டால் அவன் ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கப்படுகிறான். விழிப்பாக இருப்பது என்றால் உலகெங்கும், பிரபஞ்சமெங்கும் பரவியுள்ள சூட்சும ஸ்தாபனமான சித்-சக்தி அன்னையை அழைத்துச் செயல்பட அனுமதிக்க வேண்டும். இதுபோன்ற பேரிடர்களிலிருந்து விலங்குகள் இயல்பாகத் தம் செயலினுள் மறைந்துள்ள ஞானத்தின் மூலம் பாதுகாத்துக் கொள்கின்றன. அவைகளில் அந்த ஞானம் programme செய்யப்பட்டுள்ளது. அதை மாற்றும் விருப்பம் அதற்கு கொடுக்கப்படவில்லை. விலங்குகளுக்குப் பாதுகாப்பு இயல்பாகக் கிடைக்கும்போது மனிதன் ஏன் அன்னையின் பாதுகாப்பை நாடவேண்டும்? கண்மூடியாக இருந்து பாதுகாப்பைவிட்டு விலகியும் இருக்கலாம். விழிப்பாக இருந்து பாதுகாப்புக் கவசத்தை அணிந்து கொள்ளலாம். தனக்கு எது வேண்டும் என்ற முடிவை - விருப்பத்தை - அவன் தான் தீர்மானிக்க வேண்டும். விழிப்பாக இருந்து சித்-சக்தி, அன்னை-சக்தி என்ன என்றும், விலங்குகளின் செயலினுள் ஞானத்தை மறைத்து வைத்துச் செயல்படும் சக்தி எது என்றும் அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு பகவான் ஸ்ரீ அரவிந்தர் லைப் டிவைன் புத்தகம் சத்புருஷன், சித்சக்தி போன்ற அத்தியாயங்களைப் படிக்கவேண்டும். படித்துப் புரிந்துகொண்டால் கருத்துகள் நன்கு விளங்கும்.

சித்-சக்தி என்றால் என்ன?

சத்-சித்-ஆனந்தம் என்ற சச்சிதானந்தத்தில் சத் என்பது சித் ஆகவும் சக்தியாவும் சித்சக்தி எனப் பிரியுமிடத்தில் அன்னை அவதரிக்கிறார். உலகமே அந்த சக்தியால் உற்பத்தியாவதால், அன்னை சக்திக்கு அனைத்து சக்திகளின் திறனுண்டு. ஏன் அன்னைக்கு அந்த சக்தியிருக்கிறது எனத் தெரியவேண்டும் - அதை நம்பவேண்டும்; நம்பினால் அதற்கு சக்தியுண்டு. பகவான் ஸ்ரீ அரவிந்தர் (The Life Divine – First Book, Chapter 9,10) லைப் டிவைன், முதல் புத்தகம், அத்தியாயம் 9 மற்றும் 10இல் முறையே சத்புருஷன், சித்-சக்தியை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அதன் கருத்துகள் இம்மி அளவு மாறாமல் தமிழில் "மலர்ந்த ஜீவியம்" மாத இதழ்களில் ஸ்ரீ கர்மயோகி அவர்கள் அன்பர்களுக்கு வழங்கியுள்ளார்கள். அதிலுள்ள நமக்குத் தேவையான பகுதிகளை மட்டும் கருதுவோம்:

சத்புருஷன்: "எறும்பு சூரிய மண்டலத்தின் முன்பு துரும்பு; மண்டலம் பெரியது, எறும்பு சிறியது. ஆனால் அவற்றின் பின்னாலுள்ள பிரம்மம் இரண்டிலும் சமமாக உள்ளது. உயிருள்ளது என்பதால் எறும்பு சூரிய மண்டலத்தை விட உயர்ந்தது. அதே கணக்குப்படி மனிதன் உலகிலுள்ள அனைத்தையும்விட உயர்ந்தவன்'' (பரம்பொருள் II, . 281).

சித்-சக்தி: இந்த அத்தியாயத்தில் விலங்குகளைப்பற்றி எழுதியதை இப்பொழுது நாம் கருதுவோம். "விலங்கின் வாழ்வை கவனிப்போம். அதன் இலட்சியம் அங்குத் தெளிவாகத் தெரிகிறது. விலங்கின் அறிவு நுணுக்கமானது. விஞ்ஞானரீதியில் தவறவே முடியாது. நாம் விலங்கில் காணும் அறிவு விலங்குக்கு அப்பாற்பட்டது. மனிதன் விலங்கின் இத்திறமையைக் கற்க முயன்றால் நெடுநாள் கற்று, நீண்டநாள் பயில வேண்டும். கற்று முடிந்தபின்னும் விலங்குபோல் துல்லியமாக அவனால் செயல்பட முடியுமா என்பது சந்தேகம்; அது அவனால் முடியாது. இது பொது உண்மை. இவ்வுண்மை ஜீவனுள்ள சக்தி என விலங்கின் திறனை நிரூபிக்கிறது. இத்திறன் விலங்கிலும் புழுபூச்சியிலும் காணப்படுகிறது. உலகில் அதிகபட்ச புத்திசாலித்தனம் மனிதனில் வெளிப்படுவதை நாம் அறிவோம். விலங்கின் திறன் அதைவிட உயர்ந்தது. விலங்கின் குறிக்கோளும் எண்ணமும் அவற்றைவிடத் தெளிவானது. அதன் உபாயங்களும் கருவிகளும் நிபந்தனைகளும் நாமறிந்த மனித அறிவைவிட உயர்ந்தவை. உயிரற்ற ஜடமான இயற்கை சக்தியில் நாம் இந்த அறிவின் சிறப்பைக் காண்கிறோம். மறைந்துள்ள உச்ச கட்ட ஞானத்திற்கு ஓர் அடையாளம் உண்டு. தம் செயலினுள் மறைந்துள்ள ஞானம் என அதைக் கூறுகின்றனர். அதை விலங்கில் காண்கிறோம் (பரம்பொருள் II, . 369).

மேற்கண்ட அத்தியாயங்களில் நாம் குறிப்பாக அறிந்துகொள்ள வேண்டியவை என்னவென்றால் எறும்புக்குப் பின்னால் பிரம்மம் உள்ளது. அந்த பிரம்மத்தின் ஞானம் விலங்குகளில் விஞ்ஞானரீதியில் தவறாத நுணுக்கமான அறிவு, அதன் செயலினுள் மறைந்துள்ள ஞானமாக உள்ளது.

விலங்குகளின் திறன் மனிதனில் வெளிப்படும் புத்திசாலிதனத்தை விட உயர்ந்தது.

விலங்குகளின் முக்கியக் குறிக்கோள்: தங்களுக்கு வேண்டிய உணவை தேடிப் பெறுதல், இனப்பெருக்கத்திற்காக, பாதுகாப்பான இடம் சென்று முட்டையிட்டு, குஞ்சு பொரிப்பது அல்லது குட்டி போடுவது, குஞ்சுகளுக்கு உணவளித்து பாதுகாப்பாகச் செயல்படுவது. மேற்கண்ட இலட்சியத்தை, குறிக்கோளை அடைய எறும்பு எப்படிச் செயல்படுகிறது என்று பார்ப்போம். எறும்புகள் அவைகளுக்கு வேண்டிய உணவு இருக்குமிடத்தை தன்னுள் மறைந்துள்ள ஞானத்தின்மூலம் அறிந்து கூட்டம் கூட்டமாகச் சென்று உணவைப் பெறுகிறது. மனிதனுக்கு எல்லா இடங்களிலும் human choice உள்ளது. "எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறின் மழை பெய்யும்'' என்று ஒரு பழமொழியைக் கேள்விப்பட்டிருக்கிறோம். சில சமயங்களில் எறும்பு சாரை சாரையாக அதன் முட்டைகளை தூக்கிக்கொண்டு உயரமான இடத்திற்குச் சென்று முட்டைகளைப் பாதுகாக்கும். ஏன் அப்படிச் செய்கிறது என்று பார்த்தால் சிறிது நேரத்தில் மழைபெய்யும். மழைபெய்தால் முட்டைகள் அழிந்து விடும். மழைபெய்யப் போகிறது என்று முன்கூட்டியே எறும்பு தன்னுள் மறைந்துள்ள ஞானத்தின் மூலம் அறிந்து செயல்படுகிறது. மழை வருவதை அறிவதோடு மட்டுமல்லாமல் பாதுகாப்பைப்பெற செயல்படவும் செய்கிறது. நம்மைப்போல் அறிந்தும் சோம்பேறியாய் செயல்படாமல் இருப்பதில்லை. இந்த அறிவு நுணுக்கமானது; விஞ்ஞான ரீதியில் தவறவே முடியாது. ஆனால் மனிதன் வானிலையை விஞ்ஞானக்கருவிகளைப் பயன்படுத்தி அறிய முற்படுகிறான். சில சமயம் அவன் கணிப்பு சரியாக இருக்கும். பல சமயம் மழை முன்னறிவிப்பு தவறாகவே வெளியிடப்படும். வானிலை இலாகா தவறினாலும் எறும்பின் முன்னறிவிப்புத் திறன் அதனுடன் கூடிய செயல் தவறுவதில்லை.

26, டிசம்பர் 2004 அன்று சுனாமி பேரலைகளால் இந்தோனேஷியா, தாய்லாந்து, அந்தமான் நிக்கோபார் தீவுகள், இலங்கை, தென்னிந்தியாவின் கடற்கரையோரப் பகுதியில் சுமார் 1,50,000 மக்கள் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகள், பொருட்களை இழந்தனர் என்ற செய்தி மனித இனத்தை, கதிகலங்க வைத்துள்ளது. இதை முன்பே அறிந்து அபாய அறிவிப்பு செய்யவேண்டிய வானிலை இலாகா சரியான நேரத்தில் அறிவிப்புக் கொடுக்கவில்லை. இந்தப் பேரழிவுகளைக் கண்டபிறகு மறுபடியும் இதுபோன்ற தாக்குதல் நேரும்போது அரசாங்கம் மக்களைப் பாதுகாக்க வானிலை இலாக்காவிற்கு, சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களைக் கண்டறிய தேவையான கருவிகளை நிர்மாணிக்க உத்தேசித்து உள்ளது. விழிப்பாகச் செயல்பட மனிதன் கண்டுபிடித்த உபாயம் இது.

இந்த சுனாமி பேரிடரின்போது விலங்குகள் சரணாலயம் ஒன்றில் நடந்த அதிசயத்தை விவரிக்க பத்திரிகையில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்கள். இந்த சரணாலயம் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது. கடற்கரையில் உள்ள வீடுகள், மீனவர்க் குடிசைகள், மனிதர்கள் பேரலைகளால் தாக்கப்பட்டு அழிந்தன. விலங்கு சரணாலயத்தில் இருந்த விலங்குகள், பறவைகள் ஏதும் சுனாமியால் தாக்கப்படவில்லை. ஏனென்றால் அங்குள்ள விலங்குகள் தம் நுண்ணறிவால் சுனாமி வருவதை முன்கூட்டியே அறிந்து அருகிலுள்ள மலைப்பகுதிக்கு தப்பித்துப் போய்விட்டன. இதிலிருந்து நாம் அறிவது விலங்குகளில் மறைந்துள்ள ஞானம் அவைகளுக்கு எச்சரிக்கை செய்து உயரமான, பாதுகாப்பான இடத்திற்கு ஓடச் செய்து விட்டது. இதைச் செய்தது விலங்குகளில் மறைந்துள்ள பிரம்மத்தின் ஞானம் என்று கூறலாம்.

பறவைகள் இடம்பெயர்ந்து செல்லுதல்: பறவைகள் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குத் தங்களுக்குத் தேவையான உணவுக்காகவும், முட்டையிட்டு குஞ்சு பொரிக்க பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவும் இடம் பெயர்ந்து செல்வதைப்பற்றி படித்திருக்கிறோம். இது பல லட்சம் ஆண்டுகளாக நடைபெறுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அது எப்படிச் செல்கிறது என்பது மனிதனுக்குப் புரியாத புதிராக உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக மழை போதுமான அளவு பெய்யவில்லை. அதனால் ஏரி, குளங்கள் காய்ந்து போயின. செங்கல்பட்டில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் வரும் வெளிநாட்டுப் பறவைகள் எவையும் இரண்டு வருடங்களாக வரவில்லை. ஏனென்றால் வேடந்தாங்கல் ஏரி காய்ந்து போனது தான் காரணம். சென்ற ஆண்டு பெய்த மழையால் வேடந்தாங்கல் ஏரி நீரால் நிரம்பியது. ஏரியில் உள்ள மரங்கள் நன்கு செழித்து கிளைகளுடன் பசுமையாக காட்சியளிக்கின்றன. ஏரியில் நிறைய மீன்களும், புழுப்பூச்சிகளும் இருக்கின்றன. பறவைகள் வந்து தங்கி, கூடு கட்டுவதற்கு ஏற்ற மரக்கிளைகள், உண்பதற்குத் தேவையான பழங்கள், புழுப்பூச்சிகள் உள்ள இடம் வேடந்தாங்கல் என்று பறவைகள் அறிந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து அங்கு வந்துசேருகின்றன. இதைத்தான் பறவைகளின் நுண்ணறிவு என்கிறோம். ஜனவரி 2005இல் சுமார் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பலவகைப் பறவைகள் பாகிஸ்தான், சைனா, சைபீரியா, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகளில் இருந்து வந்து சேர்ந்திருக்கின்றன. Bird migration பற்றி இன்டர்நெட்டில் பார்த்தால் நம்மை பிரமிக்கவைக்கும் செய்திகள் அநேகம் உள்ளன. அவற்றுள் சில, 1. பறவைகள் ஆண்டுக்கு 24 ஆயிரம் மைல்வரை பறக்கும்; 2. சிலவகை பறவைகளை விமானிகள் 8850 மீட்டர் உயரத்தில் பார்த்திருக்கிறார்கள்; 3. ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைய பறவைகளின் தலையில் 'மேக்னடைட்' என்ற ஒரு சிறிய இரும்புத்தாது உள்ளது. அது பூமியின் காந்தப்புலனுடன் தொடர்புகொண்டு இரவில் நட்சத்திரம், பகலில் சூரியன், இவைகளின் வழிகாட்டுதல் மூலம் செல்கின்றன; 4. தேவையான உணவு, இனப்பெருக்கம் செய்ய பாதுகாப்பான இடத்தை தம்முடைய நுண்ணறிவால் அறிந்து, பிறகு பயணத்தை தொடரும். அதில் தவறே ஏற்படாது; 5.பெரும்பாலும் தரைவழி மார்க்கத்திலேயே பறந்து செல்லும். எனவே விலங்குகளின் செயலினுள்ளே மறைந்துள்ள ஞானம் அதனுள் உள்ள பிரம்மத்தால் அவைகளுக்கு அளிக்கப்பட்டது. செயல் பிரம்மமாவதால் ஞானம் முழுமையாகிறது. மேற்கண்ட உதாரணங்கள் விலங்குகளின் திறன் மனிதனில் வெளிப்படும் புத்திசாலித்தனத்தைவிட உயர்ந்தது என அறிய உதவுகிறது. எனவே இயற்கைச் சீற்றங்களில் இருந்து விலங்குகள் தங்களை முற்றிலுமாகப் பாதுகாத்துக் கொள்ள தவறுவதில்லை என அறிய முடிகின்றது.

பாதுகாப்பு: இயற்கை சீற்றங்களான அசுரச் சூறாவளி, சுனாமி, இவைகளில் இருந்து விலங்குகளுக்கு இயற்கையாகவே பாதுகாப்பு அதனுள் மறைந்துள்ள ஞானம் கொடுக்கிறது. அவைகள் கேட்டுப் பெறுவதில்லை. ஆனால் மனிதன் பாதுகாப்பு வேண்டிப் பெறவேண்டும். அதை human choice என்று கூறுகிறார்கள். இதுபோன்ற சமயங்களில் அன்பர்களுக்கு அன்னையின் பாதுகாப்பு எவ்வாறு கிடைக்கிறது என்பதை கீழ்க்கண்ட வாழ்வின் உண்மை நிகழ்ச்சிகள் மூலம் அறியலாம்.

அசுரச் சூறாவளி: இந்தியப் பேராசிரியர் ஒருவர் அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குச் சொற்பொழிவாற்ற பல வருடங்களாகச் சென்று வருவார். அதுபோன்று ஒரு முறை சென்றபோது அமெரிக்க நண்பரான கம்ப்யூட்டர் விஞ்ஞானி ஒருவரைச் சந்திக்க அவர் இருந்த ஊருக்குப் போனார். அவருடன் இரு நாட்கள் தங்கினார். மறுநாள் திங்கள்கிழமை காலை 11.00 மணிக்கு 100 மைல்களுக்கு அப்பால் உள்ள கல்லூரியில் சொற்பொழிவு. ஞாயிறு மாலை புறப்பட்ட அவரை விஞ்ஞானி நண்பர் மறுநாள் காலையில் போகலாம் எனக் கேட்டுக்கொண்டதை மறுத்து, பேராசிரியர் புறப்பட்டுச் சென்றார். திங்கள்கிழமை காலை 8.00 மணிக்குச் செய்தியில் முதல் நாள் அவர் தங்கி இருந்த பகுதியில் சூறாவளியால் சேதம் என்று அறிவித்தார்கள். பேராசிரியர் நண்பரைப் போனில் கூப்பிட்டு விசாரிக்க நினைத்த அதே நேரத்தில் நண்பரிடம் இருந்து போன் வந்தது. விஞ்ஞானி நண்பர் போனில் பேசினார். தமக்கும் தம் குடும்பத்தாருக்கும் ஆபத்து இல்லை என்றார். பேராசிரியருக்கு நிம்மதி ஏற்பட்டது. தாம் முன்னிரு தினங்களும் நண்பர் வீட்டில் தங்கியிருந்த பொழுது அன்னை படத்தின் முன் அமர்ந்து தியானம் செய்தது நினைவுக்கு வந்தது. அன்னைக்கு நன்றி தெரிவித்து விட்டு சொற்பொழிவு ஆற்றப்போனார். அது முடிந்தவுடன் நேரே நண்பர் தங்கிய இடத்திற்குச் சென்றார். 90 வீடுகள் மட்டுமே கொண்ட செல்வர் காலனி வீடுகள் தரைமட்டமாக இருந்தன. மரங்களைக் காணவில்லை; எங்கும் காற்றின் அமர்க்களம்; உயிர்ச்சேதம் அதிகம். நண்பருடைய மாடிவீடு மட்டும் நிலைகுலையாமல், ஆடாமல், அசையாமல் இருப்பதைக் கண்ட பேராசிரியர் ஸ்தம்பித்துப் போனார். அவர்கள் வீடும் காரும் அருகில் உள்ள 150 அடி மரமும் சேதம் அடையவில்லை. மரத்தின் ஒரு கிளை உடைந்து காரின் கண்ணாடிக்குச் சிறியசேதம். பேராசிரியரை விஞ்ஞானி நண்பர் மீண்டும் மீண்டும் கேட்டார், "எப்படி நான் காப்பாற்றப்பட்டேன்?'' பேராசிரியர் அன்னையின் அற்புதங்களை 20 ஆண்டுகளாகப் பலவகைகளில் பார்த்திருக்கிறார். 'இப்பொழுது நடந்தது நம்பமுடியாத ஒன்று. நண்பரின் வீடும், அதன் உறுப்பினர்களும் முழுமையாகக் காப்பாற்றப்பட்டார்கள் எனில் அன்னையின் அருள் அவருடைய வீட்டை இரும்புக்கவசமாகச் சூழ்ந்திருக்கவேண்டும்' என்றெல்லாம் நினைத்த பேராசிரியர், "அன்னையின் படம் 2 நாள் உங்கள் வீட்டில் இருந்தது; அதனுடைய பலன்தான் இது'' என்றார்.

இதிலிருந்து நாம் அறிந்துகொள்வது:

. அன்னையின் படம், பேராசிரியர் தியானம் இவை அன்னைச் சூழலை அங்குக் கொண்டு வந்தது. அன்னைச் சூழல் அன்னையின் அருள்.

. பேராசிரியர் 20 ஆண்டுகளாக அன்னையின் அன்பர். அவருக்குச் சூறாவளியின் அசுரத்தனம் தெரியாமல் இருக்க அந்த இடத்தைவிட்டு சூறாவளி வரும் முன் அகற்றப்படுகிறார்.

. அன்னை அன்பர்களை அன்னை காப்பாற்றுவதில் எப்பொழுதும் ஓர் உயர் தனிச்சிறப்பு இருக்கும்.

சுனாமி: சுனாமி பேரிடர் வந்தபோது கடற்கரையில் அமர்ந்திருந்தார் ஒருவர். அவர் எதிர்பாராதவகையில் பேரலைகளால் தாக்கப்பட்டார். தன்னால் எதுவும் செய்யமுடியாத நேரம் - உண்மையில் எல்லா நம்பிக்கைகளையும் இழந்த நேரம் அன்னையை அழைத்தார். க்ஷண நேரத்தில் ஒரு பேரலை வந்து கடற்கரையில் அவரைச் சேர்த்தது. பிறகு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு நலமுடன் இருக்கிறார். அவர் அன்னைச் சூழலில் இருப்பவர்; அன்னையை மறந்துவிட்டார். "நீங்கள் எல்லாம் என்னை மறந்துவிட்ட போதிலும் உங்கள் வாழ்வினுள் நானிருப்பேன்'' என்று அன்னை கூறியிருக்கிறார். அன்பர் அன்னையை மறந்திருந்தாலும் கூப்பிட்ட குரலுக்கு அபயம் அளித்துக் காப்பாற்றிய அன்னைக்கு நன்றிகூற மறக்கவில்லை. எல்லாம் இனி அன்னைதான் அவருக்கு.

வேளாங்கண்ணி டூர்: டிசம்பர் 26ஆம் தேதி விடுமுறையில் தம் நான்கு நண்பர்களுடன் வேளாங்கண்ணிக்கு டூர் சென்றார். அவரும் நான்கு நண்பர்களும் வேளாங்கண்ணிக் கடற்கரையில் சுனாமி பேரலைகளால் பிரிந்தனர். ஒருவர் மட்டும் பேரலையால் ஒரு மேட்டிற்குத் தூக்கி எறியப்பட்டார். கண் விழித்துப் பார்க்கையில் நண்பர்களைக் காணவில்லை. அவர் மட்டும் காப்பாற்றப்பட்டதற்கு ஏதோ ஒரு விசேஷம் இருக்கவேண்டும் அல்லவா? அவர் அன்னை அன்பர் தோட்டத்தில் வேலை செய்பவர். அன்பருக்காக அன்னைக்கு வேண்டிய மலர்களை அவர் தோட்டத்திலிருந்து பறித்துக் கொடுப்பவர். அவர் அறியாமல் செய்தது அன்னைக்கு மலர்ச் சேவை. அன்பர் தோட்டத்தில் வேலை செய்வது, அன்னையின் சூழலில் தங்கியிருப்பது, அவர் அன்னையை அறியாவிட்டாலும் அன்னையின் சூழல் அருளாக வந்து காப்பாற்றியது.

இந்த சுனாமி பேரலைகளால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கண்மூடியாக இல்லாமல் விழிப்பாய் இருந்திருந்தால் இவர்களும் நிச்சயமாகப் பாதுகாக்கப்பட்டு இருப்பார்கள்.

அன்னையின் பாதுகாப்பு: "எல்லாம்வல்ல அன்னையின் சக்தி உலகெங்கும், பிரபஞ்சமெங்கும் பரவியுள்ள ஆன்மீக சூட்சும ஸ்தாபனம். அந்த ஸ்தாபனத்தின் கிளை நம்முள் உள்ள ஆன்மா என்ற உருவில் இருப்பதால் நாம் எந்த நேரமும் நம் உள்ளுறை ஆபீஸிலிருந்து அன்னையின் சக்தி என்ற ஸ்தாபனத்தோடு தொடர்புகொள்ளலாம்'' - அப்போது அன்னையின் பாதுகாப்பு தவறாமல் கிடைக்கும் என்று பாதுகாக்கப்பட்டவர்களும், பாதுகாப்பு தேவையானவர்களும் அறிய வேண்டும். நம் விருப்பம் அன்னையை நாம் அறிய விரும்பும் விருப்பமாக இருக்க வேண்டும். விரும்பியபிறகு அன்னையை அழைத்துச் செயல்பட வைக்க வேண்டும். அப்படிச் செய்தால் நமக்கு வரும் ஆபத்து, கஷ்டங்கள், நஷ்டங்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். பாதுகாப்பு என்ற காகிதப்பூக்களை பிரசாதமாக நம்முடன் வைத்திருந்தாலும் பாதுகாப்பு கிடைக்கும். அன்னையின் சூழலிலிருந்தால் பாதுகாப்போடு அதிர்ஷ்டமும் நம்மை வந்து அடையும்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

எல்லாவற்றையும் தன்பால் ஈர்த்துப்பிடிக்கும் அமைப்பும் சக்தியும் கொண்டது அகந்தை. அதன் அமைப்பு பூரணமானது. சுதந்திரத்திற்காக வேலை செய்தாலும் விலங்குகளையே உற்பத்தி செய்யும் திறனுடையது.

விலங்கை உற்பத்தி செய்யும் சுதந்திரம்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

கண் எதிரேயுள்ள வாய்ப்பைக் கண்டுகொள்ளாமலிருப்பது கண்மூடித்தனம். அதிலிருந்து மீண்டு வந்து அந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என நினைக்கும் பொழுது அது நமக்கு எட்டுவதில்லை. நம்மை அது புறக்கணிப்பதைக் காண்போம். கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் ஆர்வத்தின் ஆரம்பம். "புறக்கணிக்கப்படுகிறேன்'' என்ற உணர்வு புத்தி வந்ததின் அறிகுறி.

புறக்கணிக்கப்படுவதின் புனிதம்.


 


 


 


 


 



book | by Dr. Radut