Skip to Content

08.ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்

ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்

N. அசோகன்

1. ஆனந்தத்தை அனுபவிக்க விரும்புகின்றவர் ஆசையையும், அதனுடைய இரட்டைப் பலன்களான இன்பம் மற்றும் வேதனை என்று இவ்எல்லாவற்றையும் தாண்டி வரவேண்டும்.

2. நமக்குள்ளே சுதந்திரமான உணர்வாகத் தெரிவது வெளியே அனந்தமாகத் தெரிகிறது.

3. மௌனம் சிந்தனையைவிடப் பெரியது. சிந்தனையைவிட மௌனத்தின் மூலமாக உள்எழுச்சி அதிகமாக வரும்.

4. எல்லா இயக்கங்களும் ஒரு நிரந்தர மௌனத்தில் இருந்து பிறக்கின்றன. மௌனம் என்பது எனர்ஜி நிலைப்பெற்றிருப்பதை குறிக்கும். இந்த நிலையான ஸ்தானம்தான் இயக்கத்தின் ஆதாரம் ஆகும்.

5. மானிட நிலையில் சேகரம் செய்து வளர்ச்சியைப் பெறுகிறோம். ஆனால் தெய்வம் இதற்கு நேர்மாறாக தன்னைப் பிறருக்கு வழங்குகிறது. முன்னதைவிடப் பின்னது சிறந்தது.

6. ஓய்வு எனர்ஜியை சேகரம் செய்கிறது என்பது ஓர் உண்மை. இதைவிடப் பெரிய உண்மை என்னவென்றால் நாம் எனர்ஜியை செலவு செய்யும் அளவுக்கு கூடுதலாக எனர்ஜியைப் பெறுவோம்.

7. பிரச்சினைகளும் வாய்ப்புகளும் எதிர்மாறானவைகளாகத் தோன்றினாலும் உண்மையில் அவை ஒன்றுக்கு ஒன்று உதவக்கூடிய உடன்பாடுகளாக செயல்படுகின்றன.

8. மானிட அன்பு உரிமைக் கொண்டாடக் கூடியது. தெய்வீக அன்பு உரிமைக் கொண்டாடாதது. உரிமை கொண்டாடுவதையும் பிரதிபலன் எதிர்பார்ப்பதையும் தாண்டி வந்தால் தான் நாம் இறையன்பைப் பெறவோ,வெளிப்படுத்தவோ முடியும்.

9. சூட்சுமநிலை ஜடநிலையைவிட அதிக உற்பத்தித்திறன் கொண்டது. உடம்பைவிட அறிவு அதிகம் சாதிப்பதே இதற்குச் சான்று.

10. சாதனையின் நிலை உயர, உயர அதைப் பறைசாற்றும் ஆர்ப்பாட்டம் குறைந்து கொண்டே வரும்.

11. சத்தியஜீவியம் என்பது ஓர் உண்மையான ஜீவிய நிலையாகும். அந்நிலையில் அறிவும் உறுதியும் ஒன்றுபட்டு இருக்கும். மேலும் சத்தியஜீவியம் சச்சிதானந்தத்தினுடைய வெளிவடிவமாகும். சச்சிதானந்தத்தில் உள்ள சத் என்பது சத்தியஜீவியத்தில் சத்தியமாகவும், சித் அறிவாகவும், ஆனந்தம் அனந்தமாகவும் மாறுகின்றது.

12. நாம் தெய்வீக அன்னை என்று சொல்பவர் இறைவனுடைய செயல்படும் சக்தியாக உள்ளார். சித்சக்திதான் அவருடைய பிறப்பிடம்.

13. அன்னையினுடைய மகேஸ்வரி அம்சம் அவருடைய விவேகத்தைக் குறிக்கும். மகேஸ்வரி மனிதர்களை அவர்களுடைய சுபாவத்திற்கேற்பக் கையாண்டு அவர்களுக்கு ஒத்துப்போகின்ற வகைகளில் அவர்களுடைய திருவுருமாற்றத்தை விரைவுபடுத்துகின்றார்.

14. அன்னையினுடைய மகாகாளி அம்சம் அன்னையின் சக்தியைக் குறிக்கின்ற அம்சமாகும். அவர் தம்முடைய இறைபலத்தை பயன்படுத்தி இறை விரோத சக்திகளை முறியடிக்கின்றார். இப்படி இறை விரோத சக்திகளை அழிப்பதன் மூலம் பரிணாம வளர்ச்சியை விரைவுபடுத்துகிறார்.

15. மகாலட்சுமி அம்சமாவது அன்னையினுடைய அன்பு, அழகு, சுமுகம் ஆகிய அம்சங்களைக் குறிக்கும். இவைகளைப் பூவுலகத்தில் வெளிப்படுத்துவதுதான் மகாலட்சுமியின் நோக்கமாகும்.

16. மகாசரஸ்வதி அம்சம் அன்னையினுடைய வேலைத்திறனைக் குறிக்கும் அம்சமாகும். அவர் எல்லாவற்றையும் நிர்மாணித்து அவருடைய வேலையில் நேர்த்தியை வெளிப்படுத்துகிறார்.

17. அன்னையினுடைய ஆனந்த அம்சம் தற்பொழுது பின்னணியில் இருக்கிறது. அன்னையின் மற்ற நான்கு அம்சங்களும் திருவுருமாற்றத்திற்கான வேலையை முடித்தபின்னர் இந்த ஆனந்த அம்சம் வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

18. பிரம்மம் என்பது எல்லா வெளிப்பாடுகளையும் தாண்டியது. அது எதற்கும் கட்டுப்பட்டதில்லை. குணம், இடம், காலம் என்று எந்த அம்சங்களும் அதற்கு இல்லை. எந்த அம்சமும் அதற்கில்லை என்பதால் அது எல்லாமாகவும் மாறக்கூடியது.

19. படைப்பின் முதல் வெளிப்பாடு சத் ஆகும். சத் தன்னை தெரிந்துக் கொள்ள முயன்றபொழுது சித் உருவாயிற்று. சத் தன்னை அனுபவிக்க முயன்றபொழுது ஆனந்தம் உருவாயிற்று.

20. அசத் என்பது படைப்புக்குள் இன்னும் வாராத பிரம்மத்தின் அம்சத்தைக் குறிக்கிறது. இது சத்தை விடப் பெரியது. அதற்கு எதிர்மாறானதும்கூட. சத் தலைகீழாக மாறி ஜடமாக மாறும்பொழுது அதுவும் அசத்என்று அழைக்கப்படுகின்றது.

21. சத்திற்கு சத்தியம் மற்றும் ஒற்றுமைஎன்ற இரண்டு வெளிப்பாடு உண்டு. சித்திற்கு அறிவு மற்றும் சக்திஎன்ற இரண்டு வெளிப்பாடு உண்டு. ஆனந்தத்திற்கு இன்பம், அழகு, அன்பு என்ற மூன்று வெளிப்பாடுகள் உண்டு.

22. சத் ஜடமாகவும், சித் உயிராகவும், ஆனந்தம் சைத்தியப்புருஷனாகவும், சத்தியஜீவியம் மனமாகவும் மாறுகின்றது.

23. சித்திலுள்ள அறிவு அம்சம் அதனுடைய மற்றோர் அம்சமான உறுதி அம்சத்தின்மேல் செயல்படும்பொழுது உறுதி நகர்ந்து அதனால் ஒரு சக்தி பிறக்கின்றது. அப்படி வெளிப்படும் சக்தியைத்தான் நாம் உயிராகவும் வாழ்க்கையாகவும் அறிகிறோம்.

24. இப்படி அறிவு உறுதியின்மேல் செயல்படும்பொழுது உறுதிக்குள்ளேயே புதைந்துவிட்டது என்றால் அறிவு ஜடமாக மாறுகின்றது. ஆகவே ஜடம் என்பது தன்னையறியாத உறுதியாகும்.

25. சத்தியஜீவியம் பகுத்துணரும் அம்சம், முழுமையாக உணரும் அம்சம் என்று இரண்டு அம்சங்களாக உடையும்பொழுது இவ்விரண்டு அம்சங்களுக்கு உள்ள இடைவெளியில் மானிட அறிவு பிறக்கிறது.

தொடரும்.....

****


 


 



book | by Dr. Radut