Skip to Content

10.யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V கர்மயோகி

834) உயர்ந்த சிஷ்யன் சாதாரணக் குருவுக்கு அமைந்தால், அவனுடைய நம்பிக்கை, குருவின் நம்பிக்கையைவிட உயர்ந்ததாக இருக்கும். உயர்ந்த குருவுக்குள்ள நம்பிக்கை - சிஷ்யன் மீதுள்ள நம்பிக்கை - சிஷ்யனுடய நம்பிக்கையைவிட உயர்ந்ததாக இருக்கும்.

நம்பிக்கையே குரு-சிஷ்ய நிலையை நிர்ணயிக்கும்.

மனிதன் பொருளை நம்புவான், பொன்னை நம்புவான், பண்பை நம்பமாட்டான். பண்புள்ள குருவை நம்ப மறுப்பான். ராமகிருஷ்ண பரமஹம்சர் கடவுளே என அனைவரும் கூறியதை அவருடைய இறுதிக்காலம்வரை சுவாமி விவேகானந்தர் சந்தேகித்தார். அன்னை, பகவானுடனிருந்தவர் அவர்களை ஏற்றார்களே தவிர, அவர்கள் கூறிய யோக இலட்சியத்தை நம்பவில்லை.

மனிதன் அன்னையை நம்பவில்லை என்று சொல்வதைவிட மனிதனுக்கு மனத்தில் நம்பிக்கை உதயமாகவில்லை என்று கூறலாம். ஒரு சிறுவன் ஒரு மகானை அணுகித் தம்மை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளச் சொன்னான். அவனிடம் அவர் ஒரு சிறு பெட்டியைக் கொடுத்து, அதைப் பல மைல் தூரத்திலுள்ள ஒருவரிடம் கொடுத்துவரச் சொன்னார். திறக்கக்கூடாது என உத்தரவு. சிறுவன் மனம் போராடுகிறது. பாதி வழி வந்துவிட்டான். இனி பொறுக்காது எனத் தெரிந்து பெட்டியைத் திறந்தான். அதனுள்ளிருந்து ஒரு சுண்டெலி துள்ளிக் குதித்து ஓடியது. குருவிடம் வந்து மன்னிப்புக் கேட்டான். கட்டுப்படாத மனத்தைக் கட்டுப்படுத்தக் காலத்திற்கும் முயன்று வெற்றி பெற்று குருவின் காலத்திற்குப்பின் அவர் ஸ்தானத்தை ஏற்றான். சிறுவனுக்குப் பெரியவர் மீது மரியாதை இல்லை, நம்பிக்கை இல்லை எனப் பொருளில்லை. மனம் கட்டுப்படாது. கட்டுப்படாதது அவன் மனம் இல்லை, அது மனித மனம்.

. சிஷ்யனுக்குக் குரு அமைவதும், குருவுக்கு சிஷ்யன் அமைவதும் மனைவி, பிள்ளைகள் அமைவதைப்போல் பூர்வஜென்மப் புண்ணியத்தால் அமையும்.

. பூர்வ ஜென்மத்தில் செய்யாத புண்ணியத்தை இன்று திருவுருமாற்றத்தால் செய்ய உதவும் கருவி சரணாகதி.

. மனித குரு சட்டப்படி இறைவன், தகப்பன், தாயின் அன்புள்ளவர். நடைமுறையில் விலக்கானவற்றை விலக்கினால், குரு என்பது மாமியார், முதலாளி, பிசாசு, பூர்வ ஜென்மப் பாவத்தால் வந்து மாட்டிக்கொண்ட சந்தர்ப்பம். கொடுமையை ரசிப்பவர் அதிகம்.

. ஒரு மட்டமான குரு ஒருவனுக்கு அமைந்தால், அவன் ஆழ்மனம் மட்டமானது, அதைத் திருவுருமாற்ற குரு அமைந்தார் என்று விளக்கம்.

. "நீ செய்யும் காரியங்களெல்லாம் வெற்றி பெறக் கூடாதல்லவா?''என அன்புடன் ஆசீர்வதித்தார் அதுபோன்ற குரு ஒருவர். அவர் செய்த அத்தனைக் காரியங்களும் பொசுங்கிப் போயின. அவர் சொல் அவருக்கே பலித்தது.

. குரு உயர்ந்தவரானால், சிஷ்யன் தவறானவனாகவோ, கிறுக்கனானவனாகவோ, கெட்ட செய்தியைக் கேட்டு முகம் மலரும் "புண்யாத்மா'வாகவோ அமைந்தால் சிஷ்யன் மண்ணோடு மண்ணாகப் போவான். அவனால் அவர் பட்டது அனந்தமாக இருக்கலாம். அதுவும் அவருக்கு நல்லது. அப்படிப்பட்ட சிஷ்யன் ஒருவன், "ஏன் எனக்கு இவையெல்லாம் நடந்தன'' எனக் கேட்டு நடந்தவற்றை விவரமாகக் கூறினான். அவன் தனக்குச் செய்த அத்தனையையும் வரிசையாகச் சொல்லி, "இதற்கும், உனக்கு நடந்ததற்கும் தொடர்புண்டா எனச் சிந்தனை செய்'' என்றார். "ஏன் என்னிடம் இதை முன்பே சொல்லித் தடுக்கவில்லை'' என்றான். "நீ பிரியமாகச் செய்வதைப் பிரியமாக ஏற்பது என் கடமை என ஏற்றேன்'' என்றார்.

. குரு-சிஷ்ய உறவைக் கடந்த உயர்ந்த உறவு கணவன் - மனைவி உறவு.

 

*******

835) கட்டுப்படாததை அடக்குவது, சக்தி, force, தன்னையறிவது, மேலிருந்து உள்ளே போவது, உள் மனம் விழிப்பது, பரமாத்மா முன்னிலையில் சமர்ப்பணம் செய்வது, பரந்த ஆழ்ந்தகன்ற விழிப்பு, பூரண ஆத்ம சமர்ப்பணம், உடலின் சைத்தியப்புருஷன் செயல்படுதல், அகந்தை அழிதல், காலத்தைக் கடந்த பொறுமை, முரண்பாட்டில் உடன்பாட்டைக் காண்பது, நம் நித்தியத்தை அறிதல், ஆன்மா ஜடத்தை ஆள்வது, சிருஷ்டியை அறிவது (process), சர்வம் பிரம்மம் என்பது ஒன்று தவிர மற்றதில்லை என்பதுடன் இணைத்துப் புரிந்துகொள்வது, "அது" தென்படுவது, அறிவு புலனிலிருந்து விடுபடுதல், ஜகத்குரு ஆகியவை யோகத்தின் முதற்படிகளாகும்.

யோகத்தின் முதற்படிகள்.

50 வயதான பின் சன்னியாசத்தில் நாட்டமுள்ளவர்கள் உண்டு. அவர்களில் சிலருக்குக் குடும்பப் பற்று மேலோங்கி இருப்பதால், மனம் போராடும். பல காரணங்கள் கற்பித்துக் கொள்வார்கள். க்ஷேத்திரச் சன்னியாசம் பெற்றதாய் நினைப்பார்கள். அவர்கட்கு, சன்னியாசத்தின் மீது நாட்டமிருப்பதால் ஆன்மாவின் வாடையால் சில சமயம் மௌனம் வருவதுண்டு, பிறர் எண்ணங்கள் தெரிவதுண்டு, நினைப்பது நடப்பதுண்டு, கனவு பலிப்பதுண்டு, கீதை படிக்கும்பொழுது ஆத்மா மலர்ந்து அற்புதமாக இருப்பதுண்டு. இவையெல்லாம் உயர்ந்த அறிகுறிகள். தவத்திலிருந்து காத தூரத்திலுள்ளவை.

சமர்ப்பணம் என்பது சரணாகதிக்கு முன்நிலை. நமக்கு ஒரு பிரச்சினை எழுந்தால் தொடர்ந்து சமர்ப்பணம் செய்தால் அது தீருகிறது. பொதுவாகப் பெரிய காரியங்கள் எளிதாக முடியும்பொழுது சமர்ப்பணம் நமக்குப்பலித்ததாக நாம் அறிகிறோம். அது உண்மையானாலும் அது உண்மையின் பகுதி, முழு உண்மையில்லை.

. பெரும் பிரச்சினைகளைத் தீர்க்கும் சமர்ப்பணமும் வாய்ப்பைப் பெற்றுத் தாராது.

. வாய்ப்பைப் பெற்றுத் தரும் சமர்ப்பணமும் வாழ்க்கைக்கு உரியதேயன்றி யோகத்திற்குரியதன்று.

. யோகச் சமர்ப்பணம் மேல் மனத்திலிருந்து உள் மனத்தைக் கடந்து அடிமனத்திற்குப்போய் அங்கு, குகையில் ஒளிந்திருக்கும் சைத்தியப்புருஷனை அடைவது.

. எந்தச் செயலுக்கும் concentration தியானம் தேவைப்படுவதைப் போல் சமர்ப்பணத்திற்கும் தியானம் தேவைப்படும்.

. அது மனத்திற்குரிய தியானமன்று. மனம், வாழ்வு, உடலுக்குரிய சமர்ப்பணத் தியானம். all inclusive concentration எனப்படும்.

. அது மௌனத்தாலானது.

. அந்த மௌனம் மனத்துடன் முடிவதில்லை.

. எல்லாக் கரணங்களையும் தழுவும் மௌனம் அது.

. அந்த மௌனம் சித்தித்தவருக்குச் சிந்தனையில்லை.

. சிந்தனையற்ற மௌனம் சித்திப்பது சமர்ப்பணத்திற்குரிய மௌனமாகும்.

. அம்மௌனம் ஒருவருடையதன்று, பிரபஞ்சத்திற்குரியது.

. அம்மௌனம் மனத்தில் எழுந்தால், நம்மைக் கடந்து பரவி உலகெங்கும் சென்று, பூமியைக் கடந்துவிடும்.

இந்தச் சமர்ப்பணம் யோகத்திற்குரிய முதற்படி என்பதை நாம் அறிவோம். வாழ்வில் எது மலைபோன்றதோ, அது யோகத்தில் ஆரம்பம். எல்லா யோகங்களும் முடியுமிடத்தில் பூரணயோகம் ஆரம்பிக்கிறது. பூரணயோக முதற்படிகள் அன்பனுக்கு எட்டாக் கனி. அவற்றுள் பலவற்றை மேலே கண்டோம். வாழ்க்கையின் பெரு நிகழ்ச்சிகளை யோகத்தின் அம்சமாகக் கருதுவது இயல்பு. அவற்றுள் உண்மையில்லை.

தொடரும்.....

*******


 



book | by Dr. Radut