Skip to Content

11.இந்தியாவின் இன்றைய தேவை தொழில் முனைவர்கள்

"அன்னையின் சுபிட்சம்"

இந்தியாவின் இன்றைய தேவை தொழில் முனைவர்கள்

N. அசோகன்

இந்தியா வளம் பெற்றுப் பொருளாதாரத்தில் அமெரிக்காவிற்கு நிகராக அடுத்த 20 ஆண்டுகளில் தலையெடுக்க வேண்டுமென்பது இந்நாட்டில் பல பேருடைய விருப்பமாகவுள்ளது. இந்த விருப்பம் இந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் நிறைவேற வேண்டுமென்றால் இந்தியாவின் இளைய சமுதாயம் சம்பளத்திற்கு வேலைக்குப் போவதை விட்டுவிட்டு, சுயதொழிலில் தைரியமாக இறங்க வேண்டும்.தொழில் வளம் நாட்டில் பெருகினால், உற்பத்தியும், வருமானமும் தானே பெருகும். தொழில் வளம் உச்சகட்டத்தை அடையும்பொழுது இப்பொழுது கனவாகத் தெரியும் அபரிமிதமான செல்வம் அடுத்த 20ஆண்டுகளில் நிஜமாகி அமெரிக்காவிற்கு நிகராக இந்தியா தலையெடுப்பதும் உண்மையாகும். இதுதான் தியரி என்றாலும் நடைமுறையில் சுயதொழில் செய்வது பற்றி அபிப்பிராயங்கள் எப்படியுள்ளன என்று பார்ப்போம்.

தொழிற்பேட்டைகளில் உள்ள பல தொழிற்சாலைகள் இலாபகரமாக இயங்க முடியாமல் மூடியிருப்பதைக் காண்கின்ற பல பேர் சுயதொழிலில் இறங்குவதே ஒரு அறிவில்லாத வீண் வேலை என்ற முடிவிற்கு வந்துவிடுகின்றனர். வெற்றிகரமாகத் தொழில் செய்கின்ற ஒரு சிலரைப் பார்க்கின்ற, சம்பளத்திற்கு வேலை செய்கின்ற உறவினர்களும் நண்பர்களும், "நாம் ஏதோ எட்டாயிரம், பத்தாயிரந்தான் சம்பாதிக்கின்றோம். இவரோ விடாமுயற்சியுடன் தொழில் செய்து இலட்சக்கணக்காகச் சம்பாதிக்கின்றார். இவரைப்போல் நம்மால் தலையெடுக்க முடியவில்லை!'' என்று வருத்தமும் படுகின்றார்கள்.

தொழில் செய்யும்பொழுது ஏன் பலர் தோற்றுப் போகின்றார்கள்,ஒரு சிலர் மட்டும் வெற்றி காண்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.

தொழிலுக்குத் தேவையானவற்றை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.முதல் வகை புறத் தேவைகள். இரண்டாம் வகை அகத் தேவைகள்.முதலீடு, சரக்கு, டெக்னாலஜி, கட்டடம், நிர்வாகம் ஆகியவை புறத் தேவைகள். திறமை, கடின உழைப்பு, தைரியம், உற்சாகம், விடாமுயற்சி, நல்லெண்ணம் ஆகியவை அகத் தேவைகள். இவை இரண்டும் குறையில்லாமல் இருந்தால் தொழில் அபரிமிதமாகப் பலிக்கும்.தொழில் நஷ்டமடைகிறதென்றால் அகத் தேவையோ, புறத் தேவையோ, ஏதேனும் குறைவாக இருக்கும். இந்தக் குறைபாட்டை உதாசீனம் செய்து, எப்படியேனும் சமாளித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து தொழிலை ஆரம்பிப்பது தொழில் விளங்காமல் போவதற்கு ஒரு முக்கியக் காரணம். தொழில் வெற்றி காண்பதற்கு முன், வெற்றி கண்டதுபோல் நடந்துகொள்வது, அதிக வட்டிக்குக் கடன் வாங்குவது, ஆடம்பரச் செலவு செய்வது ஆகியவை தொழில் பலிக்காமல் போவதற்கு முக்கியக் காரணங்கள். இத்தகைய குறைபாடுகள் உள்ளவர்கள் பேசாமல் வேலைக்குப் போவது நல்லது.

சென்னையில் I.N.D.I.A  டிரஸ்ட் என்றவொரு ஸ்தாபனம் உள்ளது. இந்த ஸ்தாபனத்தை நடத்துபவர்கள் தேசபக்தியும், சேவை மனப்பான்மையும் மிக்கவர்களாக உள்ளார்கள். தொழில் முனைவர்களாகத் தலையெடுக்க விரும்புகின்றவர்களுக்கு இந்த ஸ்தாபனம் இலவசப் பயிற்சி அளிக்கின்றது. பயிற்சி பெற்றவர்கள் சம்பாதித்து, பின்னர்  fees  கட்டும்வரை இந்நிறுவனம் பொறுமையாகக் காத்திருக்கிறது.

நாட்டில் தொழில் வளம் பெருகுவதே சுபிட்சத்திற்குச் சிறந்த வழி என்று குறிப்பிட்டேன். தொழிலில் ஒரு சிலர் வெற்றி காணும்பொழுது அதைப் பார்த்து பலரும் அதே தொழிலில் இறங்குகின்றனர். இதனால் தொழில் வளம் பெருகுகின்றது. சிவகாசியில் அச்சு வேலையும், திருப்பூரில் பனியன் தொழிலும், நாமக்கல்லில் poultry தொழிலும் பெருகியது இவ்வாறுதான்.

இன்று ஒரு பாக்டரியில் ஊழியனாக வேலையில் சேர்பவன் நாளை தானே அத்தொழில் துவங்குவது சுபிட்சத்திற்கு அறிகுறி. இன்றைய தொழிலாளி நாளைய முதலாளி என்ற மனோபாவம் நாட்டில் பரவினால் இந்தியாவும், அமெரிக்காவிற்கு நிகராகத் தொழில் மயமாகும். அப்பட்சத்தில் நாம் எதிர்பார்க்கும் அபரிமிதமான வருமானம் என்ற கனவும் நிஜமாகும்.

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்

வாழ்வு நம் நோக்கங்களால் உருவாகிறது. நோக்கங்களை நிர்ணயிப்பது அறிவு. மனிதனுடைய கவலைகளும்,சந்தோஷமும், பிரச்சினைகளும் அவனுடைய அறிவால் நிர்ணயிக்கப்படுகின்றன.

அறிவு மனிதனுடைய அளவுகோல்.


ஸ்ரீ அரவிந்த சுடர்

மேல்மனத்திலிருந்து, கட்டுப்பாட்டால் உள்ளே போகலாம் என்கிறார் பகவான்.

-அந்தக் கட்டுப்பாட்டின் பகுதிகள்:

-கடந்த காலத்தைப் பற்றி வருந்துவதில்லை.

-கடந்தது எதையும் மனம் இதமாகப் போற்றக் கூடாது.

-அபிப்பிராயம், பிரியம் போன்ற மனத்தின் சிறு பகுதிகளால்

எதையும் பூர்த்தி செய்துகொள்ள முயலக்கூடாது.

கட்டுப்பாடு அறியாமையின் கட்டுப்பாட்டை உடைக்கும்.


 


 book | by Dr. Radut