Skip to Content

05.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

அன்னையின் மலர்பாதங்களுக்குச் சமர்ப்பணம்!

ஆன்மீக அன்னையை எங்கள் குடும்பம் உணர ஆரம்பித்து இரு வருடங்களாகின்றன. அன்றிலிருந்து இன்றுவரை எங்கள் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் அன்னையின் ஆணைப்படிதான் நடக்கிறது.

சிறு வயதிலிருந்து குடலிறக்கம் என்ற வியாதியால் என் கணவர் அவதிப்பட்டு வந்துள்ளது அன்னையை அறிய ஆரம்பித்ததும்தான் எனக்குத் தெரிய வந்தது. ஒவ்வொரு மாதமும் தவறாமல் பாண்டிச்சேரி அன்னையை தரிசிக்கும் பழக்கம் உடையவர்கள் நாங்கள். அக்டோபர் 19ஆம் தேதி வழக்கம்போல் பாண்டி சென்று வீட்டிற்கு திரும்பி, காரை ஷெட்டில் விட்டுவிட்டு உறங்கச் சென்ற நாங்கள், காலை எழுந்து பார்த்தபோது காரின் முன்பக்க டயர் ஒன்று முழுவதும் பங்க்சராகி, வெடித்த நிலையில், கார் அமுங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டோம். எந்த இடையூறும் வழியில் ஏற்படாமல் காத்து, பத்திரமாக எங்களை வீட்டில் சேர்த்த நிலையில் இவ்வாறு ஏற்பட்டதையறிந்து, அன்னைக்கு நன்றி செலுத்தினோம்.

மேலும் அக்டோபர் 29ஆம் தேதியன்று CMCமருத்துவமனைக்குச் சென்று டாக்டரைப் பார்த்தபோது என் கணவருக்கு இரு பக்கமும் குடலிறக்கம் (indirect hernia) ஏற்பட்டுள்ளது எனவும், உடனடியாக ஆபரேஷன் செய்தாகவேண்டும் எனவும் மருத்துவர் கூறிவிட்டார். காரை இவர் மீண்டும் கொஞ்ச நாட்களுக்கு எடுக்கக்கூடாது, ஓய்வு வேண்டும் என்பதால், அன்னை நடத்திய நாடகம்தான் கார் டயர் வெடித்தது என்பதைப் புரிந்து கொண்டோம். இதுமட்டுமின்றி இதற்கு மேல்தான் நாங்கள் வைத்த ஒவ்வோர் அடியிலும் அன்னையின் கருணையும், வழிநடத்துதலும் ஆரம்பித்தது.

உறவினர் யாரும் பக்கத்துணையில்லாத நேரத்தில் அன்னையின் அருள் ஆணையால் நாங்கள் சென்ற பக்கம் எல்லாம் நேசக்கரமும், துணைக்கரமும் நீட்டி நண்பர்கள் உதவி செய்ய ஆரம்பித்தனர். மிகப்பெரிய மருத்துவமனையாகிய வேலூர் சி.எம்.சி.யில் முதலில் என் கணவரைப் பரிசோதித்த மருத்துவர் பெயர் Dr. அரவிந்த தேவ். பரிசோதித்த டாக்டரின் பெயர் அரவிந்தர் என்பதே எங்களுக்கு பகவான் ஸ்ரீ அரவிந்தரையே அன்னை அனுப்பியது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. பிறகு ஆப்பரேஷன் தியேட்டரில் வேலை செய்யும் ஒரு நண்பர் வந்து தாமாகவே உதவி செய்ய ஆரம்பித்தார். அம்மருத்துவமனையில் வேலை செய்யும் மற்றொரு சிநேகிதி எங்கள் கூடவே அந்த ஒரு வாரமும் இருந்து உதவி புரிய ஆரம்பித்தார். என் கூடப்பிறந்த தங்கையின் கணவர், நண்பருக்கு நண்பராய், உறவினராய் இருந்து உதவி புரிந்தார். என் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு, அவர்களைப் பற்றிய என் மனக் கவலையை என் தங்கையும், அவள் கணவரும் அகற்றினர். இன்னும் பலப் பல நண்பர்கள் உதவிக்கரம் நீட்டினர்.

மருத்துவமனையில் அவரை அட்மிட் செய்யச் சென்றபோது முதலில் படுக்கையில் அன்னையின் அருட்பிரசாத பாக்கெட்டையும்,அலமாரியில் ஸ்ரீ அரவிந்தர், அன்னை படத்தையும் வைத்து மலர் தூவி (வாடாமல்லி, சாமந்தி மலர்கள்) வணங்கிய பிறகே அவரைப் படுக்கச் சொன்னேன். பொதுவாக அம்மருத்துவமனையில் இவ்வாறு செயல்படுவது என்பது இயலாத ஒன்று. ஜெனரல் வார்டு என எழுதிக் கொடுத்த எங்களுக்கு படுக்கை இல்லாததால் தனியார் வார்டில் அட்மிட் செய்தனர். ஆப்பரேஷன் தியேட்டரில் ஆப்பரேஷனுக்கான நேரமில்லை என மறுத்த டாக்டர்கள், திடீரென்று வெள்ளியன்று (7.11.03) முதல் பேஷண்ட்டாக இவருக்கு அறுவை சிகிச்சை செய்ய ஒப்புக்கொண்டனர். ஸ்டரெச்சரில் அவரைக் கொண்டுசென்றபோதும் அன்னையின் அருட்பிரசாதப் பாக்கெட் வைத்தே அனுப்பினேன். ஆப்பரேஷன் முடிந்ததும் படுக்கையை மாற்றிவிடுவார்கள். ஆனால் இவருக்கோ மீண்டும் அதே படுக்கையில் கொண்டுவந்து சேர்த்தனர். அன்னையின் பிள்ளையாகிய இவர் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக அதே பிரைவேட் படுக்கையில் கொண்டுவந்து சேர்த்தது, அம்மருத்துவமனையில் வேலை செய்பவர்களையே ஆச்சரியப்பட வைத்தது.

பிறகு அவர் உடல்நலம் தேறி டிஸ்சார்ஜ் ஆகி வீடு வந்து சேர்ந்ததும், நானும், என் பெண்ணும் அன்னைக்கான 12 மணி நேர பிரார்த்தனையை விடாமல் அன்னையிடம் செலுத்தினோம். ஒரு நாள் அவரை வீட்டில் தனியாக விட்டுவிட்டு அவருக்காக மருந்துகள் வாங்க நான் வெளியே செல்ல வேண்டிய கட்டாயம். குழந்தைகளும் பள்ளி சென்றுவிட்டனர். அன்னையே நான் வரும்வரை நீதான் துணை என்று கூறி பிரார்த்தனை செய்துவிட்டு சென்றுவிட்டேன். நான் சென்ற சிறிது நேரத்திற்குப் பிறகு இவர் அன்னையின் அருகாமையை உணர்ந்திருக்கிறார். சிவப்பு நிற ஜரிகைப் புடவையில் அன்னையின் அருட்பாதங்கள் இவர் கட்டிலருகே தெரிய, அவர் படுத்திருந்த அறை முழுவதும் சிவப்பு நிறமாக மாறிவிட்டிருக்கிறது. இவர், "அம்மா, அம்மா' என அழைத்தவாறு தூங்கிவிட்டிருக்கிறார். நான் மருந்து வாங்கச் சென்ற நேரம் இவர் தனியாக இருக்கிறாரே என நினைத்த அதே நேரம் இந்நிகழ்ச்சி நடந்துள்ளது.

தற்போது, இவர் உடல்நலம் தேறி, வேலைக்குச் செல்ல ஆரம்பித்துள்ளார். முற்றிலும் உடல்நலம் தேறியவுடன், பழையபடி எங்கள் காரில் பாண்டிச்சேரிக்குச் சென்று அன்னையை பிரார்த்திக்க வேண்டும். இதுவே எங்கள் தற்போதைய பிரார்த்தனை.

அன்னையை அறிந்தவர்களை அவர் கைவிடுவதில்லை என்பதற்கு என் கணவர் நோய் கொடுமையிலிருந்து விடுபட்டதே சாட்சி. அன்னையுடனான எங்கள் அனுபவங்களை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று இக்கட்டுரையை அன்னையின் அருட்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.

*******


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

பெண்ணின் இனிமையும், பெருமையும் யோகத்தை வாழ்வாகவும், வாழ்வை யோகமாகவும் மாற்றவல்லது.வாழ்வு யோகமாவது பெண்ணின் பெருமை.

யோகம் வாழ்க்கையாவது பெண்ணின் இனிமை.


 


 book | by Dr. Radut