Skip to Content

06.பிரம்மம், புருஷா, ஈஸ்வரா — மாயா, பிரகிருதி, சக்தி

"அன்பர் உரை"

பிரம்மம், புருஷா, ஈஸ்வரா — மாயா, பிரகிருதி, சக்தி

                                             (சென்ற இதழின் தொடர்ச்சி....)

(இராணிப்பேட்டை தியான மையத்தில் 15.8.2003 அன்று திருமதி. வசந்தா லக்ஷ்மி நாராயணன் நிகழ்த்திய உரை)

. சச்சிதானந்தமாக பிரம்மத்தைக் கண்ட ரிஷிகள் அதை மூன்று பகுதிகளாகக் கண்டனர். ஆறு பகுதிகளாகக் கண்டவரும் உண்டு. அந்தப் பகுதிகள் பிரம்மம், புருஷன், ஈஸ்வரன், மாயை, பிரகிருதி, லீலை ஆகும். எவராலும் ஒரு பகுதியை மட்டும் காணமுடிகிறது. கண்டது உண்மை; காணாதது பொய் என்றனர். கண்டது உண்மை, என்றதோடு நிறுத்தவில்லை. தாம் காணாதது, பிறர் கண்டது பொய் என்றனர். ஸ்ரீ அரவிந்தர் பிரம்மத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்தாலும், ஆறாகப் பிரித்தாலும் பிரம்மம் முழுமை; மற்ற பகுதிகள் அனைத்தும் உண்மை; எதுவும் பொய் இல்லை. ஆனால் பகுதி பகுதியே, முழுமை இல்லை எனக் கூறுகிறார். இது விளங்குவதற்கு நாம் சர்வம் பிரம்மம் என்பதை உண்மையாகக் கொண்டு நம் ஆத்மாவே பிரம்மம் என்று கொள்ளவேண்டும்.

. ஜீவாத்மாவே பிரம்மம் என்றால் மாயை பிரம்மத்தின் சக்தியாகிறது. அது ஆத்மசக்தி; இதை முதலில் மௌனமாகவும் பிறகு சிருஷ்டியாகவும் காண்கிறோம். மௌனமும் சிருஷ்டியும் மாயையின் பகுதிகள். இதேபோல் புருஷனையும் ஈஸ்வரனையும் புரிந்துகொண்டால் மனம் எழுப்பும் முரண்பாடு இல்லை.

. பையன் திருமணம் செய்துகொண்டு தனிக்குடித்தனம் வைத்தவுடன் பெற்றோரை மறந்துவிடுகிறான். வீட்டிலிருந்து கிளப்பிற்குப் போய் சீட்டாட ஆரம்பித்தால் வீடு மறந்துவிடுகிறது. மறந்தவனுக்கு மண்டையில் அடி விழும்வரை மயக்கம் தீராது. சீட்டாட்டத்தில் மற்றவர்கள் தன்னை ஏமாற்றியவுடன் ஏன் எனக்கு இந்த நிலை என்ற கேள்வி எழுந்து வீட்டிற்கு வருகிறான். மனைவி, அவனைக் கேவலமாகப் பேசியபோதுதான் பெற்றோர் நினைவு வருகிறது.

. பெற்றோருக்குக் கடமை உண்டு. மனைவி மக்களுக்குக் கடமை உண்டு என்ற உணர்வு வந்தவுடன் சீட்டாடுவது இல்லை, ஆடினால் அளவோடு ஆடுகிறான்.

. பிரச்சினை வரும்வரை கேள்வி வருவது இல்லை.

. தெரிந்த தவற்றை வேண்டும் என்றே செய்ததால்தான் பிரச்சினை வருகிறது.

. தெரிந்த கடமைகளை விரும்பிச் செய்வது அதிர்ஷ்டம்.

. சௌகரியத்தைத் தேடாதே, கடமையைச் செய்.

. மாயை என்பது புதிர் என்பது மரபு. மாயை என்பது புதிர் அன்று; அற்புதம் என்பது ஸ்ரீ அரவிந்தம்.

. தெரிந்த சர்வம் பிரம்மம் என்பதை நடைமுறைப்படுத்தினால் மாயை புரியும்.

. சர்வம் பிரம்மம் என்று தெரிந்தபின் அதை மறந்து வாழ்க்கை என்பது இருள், உடல் என்பது பொய் என்றால், அது மனம் செய்யும் தவறு. மனம் தெரிந்ததை விட்டுவிட்டு தெரிந்த தவற்றைச் செய்யும்பொழுது மாயை புரியாது. மாயை புரிய நாம் அறிந்தவற்றின் உண்மையை ஏற்கவேண்டும். ஜீவாத்மா பிரம்மம் என்று ஆரம்பித்தால் பிரம்மம், பிரம்மத்தின் சக்தி மாயையாகத் தெரிகிறது. மாயை உலகை சிருஷ்டித்தது என்று புரிகிறது. அது புரிய மூன்று தத்துவங்களைக் கூறுகிறார். நிர்ணயம், அளவு, மறைவு என்ற மூன்று தத்துவங்களைக் கூறுகிறார். அதன்மூலம் மாயை புதிர் அன்று; பிரகிருதி ஜடம் அன்று; லீலை விளங்காதது இல்லை என்ற நீண்ட விளக்கம் எழுதுகிறார். அடிப்படை புரிந்தபின் அனைத்தும் புரியும். சிருஷ்டிக்கு மேலும் விளக்கம் அளிக்க காலத்தின்மூலம் விளக்குகிறார். அத்துடன் அத்தியாயம் முடிகிறது.

. பரமாத்மா ஜீவாத்மா ஆனது, பிரம்மம் சிருஷ்டியாக மாறியது ஆகியன நீண்ட பகுதிகள்.

. ஜீவாத்மா பரமாத்மாவின் பகுதி. பரமாத்மாவை நம்பி வாழ்வது. அகந்தை திரையிட்டு ஜீவாத்மாவிலிருந்து பரமாத்மாவைப் பிரிக்கிறது. திரை அகன்றால் சத்தியம் புரியும்.

. கம்பெனி ஊழியன் கம்பெனியை நம்பி வாழ்கிறான். கர்வம் இதை மறந்து கம்பெனிக்கு எதிராக வேலை செய்து நடுத்தெருவில் நிற்கிறான்.

. பரமாத்மா பல பகுதிகள் ஆகி ஜீவாத்மா ஆகிறது. பரமாத்மாவின் சக்தி ஜீவாத்மாவின் குணமாயிற்று. ஜீவாத்மா பரமாத்மாவிற்குச் சரண் அடைவது முதல் பகுதி, மீதி உண்டு. அதன் குணமும் சரண் அடையவேண்டும். அவை அன்னைக்குச் சரண் செய்யப்படவேண்டும்.

. ஜீவாத்மா காலத்தில் இருப்பதால் காலத்தை அறியாமல் இந்த சூட்சுமத்தை அறியமுடியாது.

. சத்தியஜீவியம் மூன்று நிலைகளாகப் பிரிகிறது. பரமாத்மா, ஜீவாத்மா, அகந்தை என்பவை அவை.

. காலத்திற்கு அந்த மூன்று நிலைகள் உள்ளன. அகந்தையிலிருந்து விலகி, ஜீவாத்மா தன்னைப் பிரபஞ்சத்தில் பரமாத்மாவாக உணர்வது பரிணாமம் பூர்த்தியாவது.

. காலத்திலிருந்து உள்ளே போய்க் கடந்த நிலையைக் காலத்தில் அறிந்தால் ஜீவாத்மா பரமாத்மா ஆகும்.

. சீட்டாட்டத்தில் வீட்டை மறந்தவன், மனைவியில் பெற்றோரை மறந்தவன் தன் கடமைகளை உணர்ந்து வீட்டிற்கு வந்து பெற்றோரை நினைத்தால் அவனுக்குப் பிரச்சினைகள் இல்லை, அதிர்ஷ்டம் வந்துவிட்டது எனப் பொருள். மனிதன் அதைச் செய்யாமல் சீட்டாடப் பணம் வேண்டும் எனப் பிரார்த்திக்கிறான். தாயார் சாப்பாட்டிற்கு வசதி இல்லாமல் இருக்கும்பொழுது மனைவிக்கு நகை வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறான்.

. எல்லாத் தத்துவங்களும் பொய், மெய் என்பதில் முடிகின்றன. சீட்டாட்டமும் மனைவிமீது மோகமும் பொய், வீடும் கடமையும் மெய். இதை விளக்கவேண்டியது இல்லை, புரிவதற்கும் ஒன்றும் இல்லை. பொய் போய் மெய் வருவது பகவானும் அன்னையும் சித்திப்பது ஆகும்.

முடிவுரை:

பிரம்மம் முழுமை. அது ரிஷிகள் காணாத முழுமை என்ற கருத்தை இந்த அத்தியாயத்தில் ரூபம், மௌனம், அகண்டம், சிருஷ்டி, காலம், சலனம், முழுமை ஆகியவற்றால் பகவான் விளக்குகிறார். காலத்திற்கு மட்டும் மிக நீண்ட விளக்கம் தருகிறார். மாயை, பிரகிருதி, சக்தி என்பவை வெவ்வேறு, எதிரானவை என்ற மரபுக் கருத்தை மாற்றி, மாயை பிரகிருதியின் பகுதி, இரண்டும் சக்தியின் பகுதி, சக்தி ஈஸ்வரனின் பகுதி, ஈஸ்வரன் சத்புருஷனின் பகுதி என பிரம்மத்தின் முழுமைக்கு வருகிறார்.

ஜடத்தின் பின்னால் சென்றால் ஜடமான இடம் உண்டு. மனத்தின் பின்னால் சென்றால் மனத்தின் இடம் உண்டு. தொடர்ந்தால் ஆன்மாவுக்குரிய இடம் வெளிப்படும். அங்கு, காலத்தின் மூன்று நிலைகள் கண்ணுக்குத் தெரியும் என்ற மிக நீண்ட விளக்கம் அத்தியாயத்தின் இறுதியான 4, 5 பக்கங்களில் உள்ளது. காலம், கடந்தது, கடந்ததும் காலமும் இணைந்தது என்ற மூன்று நிலைகளை இல்லறம், துறவறம், இல்லறத்துள் உள்ள துறவறம் என்ற உதாரணத்தால் பல இடங்களில் காண்போம்.

1) காலத்துள் உள்ள நாம் - மனிதன் - சிருஷ்டியின் இருண்ட பகுதியை மட்டும் காண்கிறோம்.

2) காலத்தைக் கடந்த ரிஷி சிருஷ்டியின் ஒளிமயமான பகுதியை மட்டும் காண்கிறார்.

3) ஒளி இருளுள் எழும். அது காலத்தைக் கடந்த நிலை, காலத்துள் எழுவது. அதுவே பிரம்மத்தின் முழுமையைக் காண்பது. அதை பிரம்ம ஜனனம் என்கிறோம்.

மனிதன் தரையில், வண்டியில், குதிரையில் போனவன் இரயில், காரில் போனால், அவன் இன்னும் தரையிலேயே பிரயாணம் செய்கிறான். வேகம் மாறுகிறது. தரையைவிட்டு அவன் உயரவில்லை. விமானம் வந்தபின் பிரயாணம் தரையிலில்லை. ஆகாயத்திற்கு வருகிறது. விமானம், ஹெலிகாப்டர், விமானியில்லாத விமானம் போன்ற பல்வேறு விமானங்கள் அதிவேகமாகப் பறந்தாலும், அவை ஆகாயத்திற்குரியவை. அதைக் கடந்து விண்வெளிக்குச் செல்வதில்லை.

இவையிரண்டையும் கடந்தது விண்வெளியில் சஞ்சாரம் செய்யும் இராக்கட். அது 1950க்குப் பின் வந்தது. காலத்தின் மூன்றாம் நிலை உலகுக்குப் புதியது. பகவான் கண்டது. அதன் முக்கிய அம்சங்கள்,
 

. சிருஷ்டியில் வலி, துன்பம், மரணம், வேதனை, கோரம், விகாரம் ஆகியவை படைக்கப்படவில்லை என்பது அங்கு விளங்கும்.

. மனிதன் தன்னை பிரம்மமாக, சிருஷ்டியாக மலரும் பிரம்மமாகக் காண்பான்.

. செயல்களின் வேகம் ஒளியின் வேகத்தைக் கடந்ததாக இருக்கும்.

. அனைவருள்ளும் தன்னை மனிதன் கண்டு, தன்னுள் அனைவரையும் காண்பான்.

முற்றும்

*******


 



book | by Dr. Radut