Skip to Content

08.இதுவோ உம் ரௌத்திரக் கருணை

"அன்னை இலக்கியம்"

இதுவோ உம் ரௌத்திரக் கருணை!

                                                           (சென்ற இதழின் தொடர்ச்சி....) இல. சுந்தரி

அன்னை தன் அறியாமையை நோக்கி, "ஏன் வந்தாய்? போய்விடு'' என்று கூறியிருக்கிறார் என்று உணர்ந்ததும், தன்னறியாமைக்கு வெட்கினாள். "அந்தக் கூட்டிலிருந்து விடுபட்டு அன்னையின் அருளை சுவாசிக்கத் தான் ஏங்கியது என்ன? இப்போது அது கிடைத்ததும், அருமையறியாமல் வீட்டை நினைத்து ஏங்குவது என்ன?'' என்று தன்னைத் தானே திருத்திக்கொண்டாள். ப்ரீத்தியின் ஒவ்வோர் அன்னை அனுபவத்திலும் தானே அதை அனுபவித்த ஆனந்தம் எண்ணினாள். "நீங்கள் எல்லோரும் என்னை எளிதாக அடைந்துவிட்டதால் அதற்கு நீங்கள் மதிப்புத் தருவதில்லை '' என்று அன்னை ஒரு முறை கூறியதை எண்ணியவுடன் தன் பிழை புரிந்தது. அன்னையின் அளவுகடந்த கருணை புரிந்தது.

"நீங்கள் எல்லோரும் என் குழந்தைகள். உங்கள் எல்லோரையும் பகவானிடம் அழைத்துச் செல்லவே என்னுள்ளத்தில் உங்களை ஏற்றிருக்கிறேன். நீங்கள் பகவானிடமிருந்து விலகிச் சென்றால் என்னுள்ளம் புண்படும் என்பதை உணர்வீர்களானால் அது ஒன்றே போதும் '' என்று ஒரு முறை ஒரு சாதகரிடம் அவர் கூறியிருந்ததை ப்ரீத்தி மூலம் அறிந்திருந்ததை இப்போது நினைவுகூர்ந்தாள். அவளை மூடிய மேகங்கள் கலைந்தன, தெளிவேற்பட்டது. "அன்னையே! உம் குழந்தையை மன்னித்துவிடுங்கள்' என்று அந்தப் பொற்பாதங்களில் மானசீகமாய் மன்னிப்பு வேண்டினாள்.அறைக் கதவைத் தட்டும் மெல்லொலி கேட்டது. கடிகாரத்தைப் பார்க்கிறாள். மணி 12. இந்த நள்ளிரவில் யார் கதவைத் தட்டக்கூடும்? ஒருவேளை, என் பிரார்த்தனையை ஏற்று மன்னித்தருள அன்னை வந்திருப்பாரோ என்று எண்ணியவண்ணம் கதவைத் திறக்க, அன்னையேதான்! அந்தப் புன்னகை, கருணை ததும்பும் விழிகளால் அவளைத் தழுவிக் கொண்டார்.

அங்கு வீட்டில், நேரமாகியும் தோழி வீட்டிற்கு என்று சொல்லிச் சென்ற உமா திரும்பாததால் மாமி கவலை கொண்டாள். பத்து மணிக்குப் போனால் அரை மணி, ஒரு மணி நேரத்தில் வீடு திரும்பிவிடும் உமா இன்னும் வரவில்லை. என்னவென்று நினைப்பது? அவள் பேச்சைக் கேட்டு, அவளை பிரெஞ்சுக் கிளாஸில் சேர்த்தது தப்போ? இன்று அவளைத் தோழி வீட்டிற்கு அனுப்பியது தவறோ? வழியில் ஏதேனும் விபத்து நேர்ந்திருக்குமோ? எங்கு போய்த் தேடுவது? பக்கத்துத் தெரு என்று சொன்னாளே. அவள் படிக்கும் அறைக்குச் சென்று ஏதேனும் தோழியின் புத்தகம், பெயர் கிடைத்தால் பக்கத்துத் தெருவில் போய் விசாரிக்கலாமா என்று ஏகமாய்ப் பதறி, கலங்கி, அவள் படிக்கும் அறைக்குச் சென்று புத்தகங்களைத் தேட முயன்றவுடன் மேலே நீண்ட தாளில், அழகிய கையெழுத்தில் ஏதோ எழுதி, அதன்மீது "வெயிட்'வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தாள். அதைக் கையில் எடுத்தவுடன் உடல் நடுங்கியது. உமாவின் எழுத்துதான் அது.அன்புள்ள மாமி! என்று தொடங்கியிருந்தது. நடுங்கியவண்ணம் அதைப் படித்தாள்.

மாமி உங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகளை முதலில் சொல்லிக்கொள்கிறேன். பாண்டிச்சேரிக்கு வந்தபோது பிரெஞ்சு கற்கும் ஆவல் ஏதும் இருக்கவில்லை. அன்று நீங்களும், மாமாவும் ஒரு நண்பர் வீட்டில் சடங்கு என்று வெளியே சென்றிருந்தீர்கள். அப்போது தனியே இருந்த நான், பக்கத்து வீட்டுப் பெண் கிருபாவைப் (என் வயது) பார்த்தேன். அவள் நட்பு மகிழ்ச்சியாய் இருக்கும் என்று நினைத்து பக்கத்து வீட்டிற்குப் போனேன். வாசல் பக்கத்தில் நின்றிருந்த அவள், வெளியே வந்து என் கையைப் பிடித்து அன்புடன் சிரித்தாள். "உன் நட்பு எனக்கு மிகவும் பிடிக்கும் உமா. ஆனால் உன் மாமாவிற்குத் தெரிந்தால், நீ என் வீட்டிற்கு வந்ததற்கு உன்னைக் கோபித்துக்கொள்ளக்கூடும்'' என்றாள்.

"ஏன் கிருபா அப்படிச் சொல்கிறாய்?'' என்றேன். "நாங்கள் ஸ்ரீ அரவிந்தாஸ்ரமத்து சாதகர்களுடன் நட்புடையவர்கள். அது உங்கள் வீட்டார்க்குப் பிடிக்காது'' என்றாள்.

"ஆசிரமமா? அது ஏன் மாமாவுக்குப் பிடிக்காது?'' என்றேன் மேலும்.

அப்போது அங்கே ஒரு சாஸ்த்திரியார் வந்தார். "அம்மா குழந்தே! அதைப் பற்றி என்னிடம் கேள்'' என்று கூறியவண்ணம் வந்தார். ஒன்றும் புரியாமல் விழித்தேன்.

"இந்த ஊரில் ஸ்ரீ அரவிந்தாஸ்ரமம் என்று ஓர் ஆஸ்ரமம் இருக்கிறது. அங்கே பாரிசிலிருந்து வந்த பெண்மணி என்று எல்லோரும் நினைக்கும் ஒருவர் இருக்கிறார். அவர் அன்னை பராசக்தி என்பது லலிதாம்பிகையை உபாசித்த எனக்குத் தெரியும்.

ஸ்ரீ அரவிந்த மகரிஷிக்குத் தெரியும். மற்றவர்களுக்குத் தெரியாது. அதைத் தெரிந்துகொள்ள இயல்பான ஆன்மநாட்டம் வேண்டும்'' என்றார் அவர்.

எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டாயிற்று. "மாமா! சொல்லுங்கள் மாமா. நீங்கள் அவரைப் பார்த்திருக்கிறீர்களா?'' என்று ஆர்வத்துடன் கேட்டேன்.

"பார்க்கிறேனம்மா. தினமும் பார்க்கிறேன். உனக்குப் பிரெஞ்சு தெரியுமா?'' என்றார்.

"தெரியாதே'' என்றேன்.

"படி. பிரெஞ்சுப் படி. அவர் பிரெஞ்சில் எழுதியிருப்பதைப் படி. நீயே உணர்வாய்'' என்றார்.

நீங்கள் திரும்பி வருமுன் வீட்டிற்கு வந்துவிட்டேன். ஆனால் சாஸ்த்திரியார் கூறிய அன்னை பராசக்தியைத் தரிசிக்க எழுந்த ஆவலை அடக்க முடியவில்லை. உங்களிடம் சொல்ல முடியவில்லை. நீங்களோ ஆசிரமம் என்றாலே, ஏதோ பாவச் சொல்போல நடந்துகொண்டீர்கள். அதனால் என் ஆவலைச் சொல்லாமல் பிரெஞ்சு கற்க அனுமதி கேட்டேன். உங்களை அறியாமல் நீங்களே என் தெய்வத்தின் கோயிலுக்கு எனக்கு வழிகாட்டிவிட்டீர்கள். பிரெஞ்சுக் கிளாஸில்தான் ஆசிரமவாசி ப்ரீத்தி என் தோழியானாள். அவள் பேச்சில் அன்னையை அனுபவித்தேன். உள்ளத்தில் ஆர்வத்தீயை வளர்த்தேன். நேற்று என் கனவில் வந்தார். இன்று நான் அவரிடம் போகிறேன். என் வாழ்வுப்பணி அன்னையின் தொண்டுதான் என்று என் உள்ளுணர்வு உணர்த்தியதை மறுக்க முடியவில்லை. நீங்களனைவரும் ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு தேடப்போகும் இறையன்பு இன்று என்னைத் தேடி வந்துவிட்டது. எப்படியும் இதை நான் அடைய உதவிய தாங்களும், மாமாவும் என் நன்றிக்கு உரியவர்கள் என்பதை மறக்கமாட்டேன்.

"நான்' அற்றுப்போன உமா,

என்றிருந்தது. மாமா வந்து உமா எங்கே என்று கேட்டால் என்ன சொல்வது? நானல்லவோ அவள்மீது கொண்ட பாசத்தால் அவள் பிரெஞ்சு கற்க சிபாரிசு செய்தேன். அனுப்ப மறுத்திட்ட நாத்தனாரை வலுக்கட்டாயப்படுத்தி உமாவை அழைத்து வந்தேன். அவர்களுக்கு என்ன பதில் சொல்ல? "உமா! மாமியை இப்படி ஏமாற்றிவிட்டாயே'' என்று கலங்கினாள் மாமி.

அப்போது மிகுந்த கவலையுடன் உமாவின் தாய் அங்கு வருகிறாள்.

"ஐயோ! இப்போது இவள் எங்கே வந்தாள்? உமாவைத் தேடக்கூட முடியாமல் போய்விட்டதே. இப்பொழுது இவளுக்கு என்ன பதில் சொல்வேன்'' என்று மேலும் மாமி கலங்கினாள்.

"கோமதி! உமா இங்கு இல்லையல்லவா?'' என்று உமாவுக்குத் தெரியாமல் ஏதோ பேச வந்திருப்பதை உணர்த்தினாள்.

"ஆமாம் மைதிலி!

அவள் இங்கு இல்லை'' என்று மிகவும் தயங்கிக் கூறினாள் கோமதி.

"நல்லதாயிற்று. உன்னிடம் மனம் விட்டுப் பேசவேண்டும்'' என்றாள் உமாவின் தாய்.

கலக்கம் தீராமலேயே நின்றாள் கோமதி. கொஞ்ச நாட்களாகவே உமாவின் அப்பா அவள் கல்யாணத்திற்காக வரன் தேடுவதும், ஜாதகம் பார்ப்பதுமாய் இருக்கிறார். காலையில் வெளியே போனால், மாலை கடந்துதான் வீட்டிற்கு வருகிறார். திரும்பி வரும்போது நிறைய சோகத்தைச் சுமந்துகொண்டு வருகிறார். என்னவென்று கேட்டாலும் எதுவும் சொல்வதில்லை. "உமாவின் கல்யாண விஷயமாய் ஜோதிடரைப் பார்த்தீர்களா?'' என்று கேட்டதற்கு, "எல்லாம் எனக்குத் தெரியும், பேசாமலிரு''என்று கோபமாய்க் கூறினார். என்ன நடந்திருக்கும் என்று என்னால் யூகிக்க முடியவில்லை.

நேற்று இவருக்குத் தெரியாமலே நான் ஒரு ஜோதிடரைப் போய்ப் பார்த்தேன். உமாவின் ஜாதகத்தைக் காட்டி, "கல்யாண வேளை வந்துவிட்டதா பார்த்துச் சொல்லுங்கள்'' என்றேன். கையில் வாங்கிய சில நிமிஷங்களில், "இந்த ஜாதகரின் பொறுப்பு உங்கள் கையில் இல்லை. இதைப் பார்ப்பதால் உங்களுக்கு ஒரு பயனும் இல்லை''என்றார். "என்ன சொல்கிறீர்கள்?'' என்றேன். "இது தேவாம்சம் பொருந்தியது. மனிதர்களோடு ஒட்டாது'' என்றார். மேலும் கேட்க எனக்குத் துணிவில்லை, குழப்பம். உமாவின் தந்தை தினமும் சோகமாய்த் திரும்பியதன் காரணமும் புரியவில்லை. அச்சத்துடன் வீட்டிற்கு வந்தேன். திடீரென்று உமாவின் அப்பா, "சாமியிடம் உத்தரவு கேட்டு ஒரு வரனை முடித்துவிடுவோம். அவள் ஜாதகத்தைக் காட்டினால் யாரும் அவளுக்குக் கல்யாண இராசி இல்லை என்கிறார்கள்'' என்று கூறினார். அதுதான் அவளை அழைத்துக்கொண்டு போய்விட எண்ணி வந்தேன். பிரெஞ்சு கிளாஸ் போயிருக்கிறாளா? என்றாள் உமாவின் தாய்.கோமதி சிலையாக நின்றாள். என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

"என்ன கோமதி! எங்கே உமா'' என்றாள்.
"என்ன சொல்ல மைதிலி? ஒரு தோழி வீட்டிற்குப் போய்ப் புத்தகம் கொடுத்துவிட்டு வருவதாய்ச் சொல்லிகாலை 9.30 மணிக்குப் போனாள். அவள் மாமாவிற்கும் தெரியாது. அவள் தோழியின் விலாசம் தேட புத்தகங்களைப் புரட்டப் போனேன். கடிதம் எழுதி வைத்திருக்கிறாள்'' என்று அழுதுகொண்டே கடிதத்தைக் கொடுத்தாள்.

ஜாதகம் கூறியது, உமா தான் வந்தபோது அமைதியாய் இருந்தது, யாவற்றையும் எண்ணிப் பார்த்தாள் உமாவின் தாய். யாரை என்ன சொல்ல? அன்னையின் அழைப்பு யாருக்கு உண்டோ? யாரறிவர்? அகிலம் அன்னைக்குச் சொந்தம் அல்லவா!

முற்றும்.

****** 

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஆன்மீகத்தை அறிவுக்கு விளக்கும் வகையில் பகவான் எழுதினார். மொழியின், உரைநடையின் தரத்தையே இதற்காக உயர்த்தினார்.எழுத்தின் பாணியின் தரத்தை உயர்த்தினார்.

புதிய அறிவு, புதிய மொழி, புதிய யோகம்.


 


 book | by Dr. Radut