Skip to Content

10.வெண்கலம்போன்ற உடல்

வெண்கலம்போன்ற உடல்

ஆசனம் யோகத்திற்குரியது. ஆரோக்கியத்திற்காக அவற்றுள் ஒன்றிரண்டு ஆசனங்களைச் செய்யலாம். நேரு சிரஸாஸனம் செய்வார். எந்த ஆசனம் செய்தாலும் அதற்குரிய பலன் உண்டு. ஆசனம் செய்பவர்கள் உடலில் அபரிமிதமாகத் தெம்பு இருக்கும். மனம் நிச்சலனமாக நிம்மதியாக இருக்கும். உடல் மினுமினுப்பாகத் தெரியும். ஜீரணத்தில் கோளாறு வாராது. மலச்சிக்கல், தலைவலி போன்ற சிறு தொந்தரவுகள் எழா. உடல் மெலியாது. தொடர்ந்து எந்த ஆசனம செய்பவருக்கும் சதை விழாது. உடல் வயதானாலும் கட்டுடையாது. முகம் சுருங்காது. தோலில் சுருக்கம் விழாது. பொதுவாக, ஆசனம் ஆரோக்கியம் தரும்.

ஆசனம் ஒரு சாஸ்திரம். முறையாகப் பயிலவேண்டும். அரைகுறையாகச் செய்தாலும், அரைகுறையாக அறிந்தவரிடம் பயின்றாலும் திருத்தமுடியாத கோளாறு எழும். பெரும்பலன் தரும் மார்க்கத்தில்பெரும் நிபந்தனைகள் இருக்கும். இப்பலனை இந்த ஆபத்தின்றிப் பெறலாம். செய்தால் ஆசனம் தரும் பலன் பெறலாம். சரியாகச் செய்யாவிட்டால் பலனிருக்காது. ஆனால், ஆபத்து வாராது. அம்முறை அன்னை நாமஜெபம்.

100 மீட்டர் ஓடும் பொழுது மனத்தில் எண்ணமிருக்காது. கவனம் ஓட்டத்தில் மட்டுமிருக்கும். பார்வை ஓட்டத்தைவிட்டு அகலாது. அதை யோகபாஷையில் கூறினால், "ஓடும்பொழுது நாம் மனத்திலிருந்து உடலுக்குப் போகிறோம்''என்று கூறலாம். அல்லது "மனம் சிந்திப்பதற்குப் பதிலாக உடலே சிந்திப்பதால் சாதனை பெரியதாக இருக்கிறது''என்றும் சொல்லலாம். ஓடும்பொழுது உடல் தியான நிலைக்கு வந்து ஒரே குறியாய் - concentration - ஓடுகிறது. ஓர் எண்ணம் வந்தால், அந்த அளவு சக்தி தடம்பிறழ்ந்தால், ஓட்டம் ஜெயிக்காது.

நாம் "அன்னை", "Mother"என்று மேல்மனத்திலிருந்து மனத்தின் சொல்லாகச் சொல்கிறோம். அதற்கு ஏராளமான பலனைக் கண்டுள்ளோம். சொல்லை இழந்து Motherஎன்பது உணர்வாக எழுந்தால் நெஞ்சு நிறையும். மேலும், உள்ளே சென்று சொல்லாமல், உணர்ச்சியுமில்லாமல், உடலே தன்னுணர்வால் Mother என்று கூறினாலும், நினைத்தாலும், 100 மீட்டர் ஓடுபவன் செயல் போல உடல் நிறையும்.

உண்மையில் அந்நிலை ஜீவன் நிறைவதாகும்.

இப்பயிற்சி உடலுக்கு ஆசனம் தரும் ஆரோக்கியத்தையும், தெம்பையும் தரும். ஸ்ரீ அரவிந்தர் யோகத்தில் ஆசனம், பிராணாயாமம் போன்ற முறைகளை விலக்கி, அவற்றை மனதால் செய்து, அதிகப்பலன் - முழுப்பலன் - பெறலாம்என பகவான் கூறுவதின் ஓர் அம்சம் இது.

*******


 



book | by Dr. Radut