Skip to Content

03.எங்கள் குடும்பம் II

எங்கள் குடும்பம் I

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

நாலு, ஐந்து பூனைகளிடையே எலிக்குஞ்சுகளைக் காப்பாற்றுவது போன்றது தாயார் நிலை. கம்பனியில் கார் தரப்போகிறார்கள். கோயம்புத்தூருக்குக் காரில் போகவேண்டும்என்கிறான் பெரியவன். இந்த ஆபத்தைத் தாண்டியவரில்லை. பார்ட்னர் மகன் அரக்கோணம் பஸ்ஸில் போய்வந்தார். அது பெரிய இடம்; பக்குவமுள்ளது:

. 5-ஆம் மாடியிலிருந்து குதித்தால் உயிர்போகும்என எடுத்துக்கூற வேண்டியதில்லை.

. ஜன்னி வந்துவிட்டால், plugஇல் கை வைக்கத் தோன்றும். அது நோயின் குணம்.

. Infatuation என்பதை மயக்கம் என்று சொல்லலாம். பையனோ, பெண்ணோ மையல், மயக்கம் என்றிருக்கும் பொழுது அவர்களுடன் பேசுவதில் பயனில்லை.

. சுபாஷ் சந்திரபோஸ் ஜப்பான் நமக்குச் சுதந்திரம் தரும் என நினைத்தார்.

. மகாத்மா ஜின்னாவை ஜனாதிபதியாக்க வேண்டும் என்றார்.

. ஆடு கசாப்புக்கடைக்காரனை நம்புகிறது.

. 5 மடங்கு வருமானம் வந்து, அயல்நாட்டுக் கம்பனியுடன் பார்ட்னராக வந்தபின், "நான் யார் எனக் காட்டுகிறேன், பார்"என ஒவ்வொரு பார்ட்னரும் சவால்விட்டு எல்லாவற்றையும் அழித்தது விலக்கானதன்று, விதி.

. வருமானமேயில்லாதவர் வீடு கட்ட முயல்வதும், மெடிக்கல் காலேஜ் அப்ளிகேஷன் பெறுவதும் ஏதோ ஒருவர் செய்வதில்லை; எல்லோரும் செய்வது.

. மகன், அமெரிக்காவில் மாதம் 3 இலட்சம் சம்பாதிப்பவனை, இந்தியாவுக்கு வந்துவிடு எனக் கூறும் பெற்றோர் உண்டு என்றால், காதால் கேட்டவர் தவிர மற்றவர் நம்பமுடியாது.

. வருமானமில்லாவிட்டாலும், நடப்பதற்கு வழியேயில்லாவிட்டாலும், நினைக்கலாம், பேசலாம், செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டால் இதுபோல் நடக்காதவரில்லை.

. வேலைக்காரனுக்கு ஜமீன்தார் மகளைக் கல்யாணம் செய்ய முழு ஆசையிருப்பதையே பழமொழி, "நான் ராஜகுமாரியைத் திருமணம் செய்வது பாதி முடிந்துவிட்டது"என்று கூறுகிறது. இவன் நினைப்பது பாதி என்ற கணக்குப் போடாதவரில்லை.

. இவற்றையெல்லாம் பார்த்து, இப்படியும் நடக்குமா என ஆச்சரியப்பட்டால், தம் வாழ்வில் இதுபோன்ற சந்தர்ப்பத்தில் தாம் நினைத்ததை ஞாபகப்படுத்தினால், "நாமும் இந்த விதிக்கு விலக்கன்று"எனத் தெரியும்.

. அன்னையிடம் வந்து, "உங்கள் பதவியை - ஆசிரமத் தலைமையை - எனக்குக் கொடுங்கள்"என எட்டு பேர் கேட்டனர். ஒருவர் ஆசிரமவாயிலில் சத்தியாக்கிரஹம் செய்தார்.

. இவை அர்த்தமற்றவை, அபத்தம் எனக் கூறுவதைவிட இது நம்முள் முழுவதும் இருப்பதைக் கண்டு, உண்மையாக அதை ஏற்க முன் வரவேண்டும். அதற்கு sincerity உண்மை எனப் பெயர்.

. பெரிய இடங்களில் வேலை செய்பவர் தங்களை முதலாளிக்குச் சமமாக நினைப்பது மனிதசுபாவம்.

எனக்குப் பையன் காரில் போகவேண்டும் என்ற நினைப்புள்ளது;

பார்ட்னர் பெரியவனைக் காரில் போகச்சொல்கிறார்; எனக்குப் பெரியவன் பஸ்ஸில் போகச் சம்மதிக்கவில்லை - தாயார்;

கார் வந்தபிறகு ஆட்டோவில் போகப் பிடிக்கவில்லை;

நண்பன் பெரியவனை பஸ்ஸில் போகச்சொல்கிறான்:

. கார் என்பது அந்தஸ்து, status symbol

. பணத்திற்காகப் பிணமும் வாயைத் திறக்கும் என்றாலும் மனிதன் பணத்தை விட மரியாதையை முக்கியமாகக் கருதுவான்.

. நடைமுறையில் அடக்கமானவர்க்கும் மனம் சிறுவிஷயத்தில் அடங்காது.

. மனம் அடங்கவேண்டும் என்றால் மனம் தன் பெருமையை உணரக் கூடாது.

. பெருமையை உணர்ந்து, காட்டிக்கொள்ளாதது அடங்குவதில்லை.

. பெருமை என்பது பணத்திலில்லை, வீட்டிலில்லை என்று

மனம் அறிவது, மனம் அடங்குவது.

. மனம் அடங்கினாலும், உணர்வோ, உடலோ அடங்காது.

. ஹோட்டலில் சர்வருக்கு ஆபீஸ் பியூனுக்குள்ள அந்தஸ்துமில்லை.

. அவனுக்கு 3 sentence ஆங்கிலம் தெரியும் என்றால், அப்பெருமையை அவனால் கொண்டாடாமலிருக்க முடியாது.

. ஆங்கிலம், சமஸ்கிருதம், தமிழ் இலக்கியம் ஆகியவற்றுள் 10 வாக்கியம் தெரிந்தவன், அதை சொல்லக் கூடியவன் எவ்வளவு மட்டமான வேலை செய்தாலும், தம்மை உயர்ந்தவனாக நினைப்பான்.

. ரிஸர்வ் பேங்க்கில் பியூனாக வேலை செய்பவனுக்கு பியூன் என்பது குறைவு என்பதை மீறி, "நான் RBI இல் இருக்கிறேன்"எனச் சொல்லாமலிருக்க முடியாது.

. நேருவிடம் வேலை செய்த IAS அதிகாரிகள் எவரைப் பார்த்தாலும் முதலில் அதைச் சொல்லாமலிருக்கமாட்டார்கள்.

. இதன் தத்துவம் என்ன? Rationale of self-assertion.

. சிருஷ்டியில் எதுவும் - செடி, கொடி, பணம், அறிவு, மனிதன் - வளர முயல்கின்றது. வளர்வது என்றால் பெருகுவது. உண்மையில் பெருக முடியவில்லை எனில், பெருகுவதாக மனம் நினைப்பது ஜென்மம் சாந்தியடைகிறது. மனம் என்று ஏற்பட்டபின் அது சிந்திக்கும். தன் வளர்ச்சியை அறிவிக்கும். வளர்ச்சியில்லை எனில், வளருவதாகத் தோன்றுவதைக் கருதும். ஆங்கிலம், இலக்கியம், ஸ்லோகம், பெரிய மனிதர்கள், பணம், பதவி ஆகியவை உயர்ந்த ஜாதியைப்போல் உயர்வாகக் கருதப்படுபவை.

. கார் வந்தபின் காரில் போகாமல் இரயிலில் போகின்றவனைப் பார்த்து சிக்கனம், அறியாமை எனப் பிறர் நினைப்பார்கள். உள்ளதை அனுபவிக்கத் தெரியவில்லை என்பார்கள்.

. இதற்கு மாற்று என்ன?

. கார் அந்தஸ்து எனப் புரிவதற்குப் பதிலாக மனிதனுக்கு அந்தஸ்து; காருக்கோ, பணத்திற்கோயில்லை எனப் புரிவது அடக்கம் தரும்.

. பெரியதற்கு அந்தஸ்து என்பது மனிதமனம் - அறிவு.

. பெரியது, சிறியது இல்லை என்பது ஆன்மீகஞானம் - பண்பு.

. அனைத்தும் பிரம்மமானால், பெரியதில்லை என்பது பிரம்மஞானம் - ஆன்மீகம்.

. பண்பு அல்லது ஆன்மா முன்வந்தால் இத்தவறு வாராது.

இனிமே அவன்தான் கொண்டு வரவேண்டும்;

அவன் நம் அந்தஸ்தை ஏற்கவேண்டாமா?

இதில் என்ன தவறு? - பெண்;

நான் சொல்லமுடியாது; எடுபடாது. முடிந்தாலும் நான் சொல்லக் கூடாது;

தாலுக்காஆபீஸ் பியூன்மகன் சிறியவனை வீட்டிற்கு வரச்சொன்னான்; என்ன இது அநியாயமாக இருக்கிறதே - பெண்:

. ஆர்ப்பாட்டம் செய்யாதவரில்லை என ஏற்கனவே கண்டோம்.

. ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடுள்ளவருக்கும் சிறு விஷயங்களில் - சேட் கடையில் - தான் பெரியவன், மரியாதைக்கு உரியவன் என்பதைக் காட்டாமலிருக்க முடியாது.

. விவரமானவர்கள் ஆடமாட்டார்கள். ஆனால், அதிகாரம் தலைதூக்காமலிருக்காது.

. விஷயம் சிறியதானால், கட்டுப்படுவது கஷ்டம்.

. சிறுவிஷயங்களில் நம்மை அறிவது ஆன்மவிழிப்பு.

. கணவருக்கும், மனைவிக்கும் வித்தியாசம common sense புத்திசாலித்தனம்.

. அவன் அனுமதிக்காத மரியாதையை நாம் கேட்டால் கிடைக்காது என கணவர் அறிவார்.

. அவன் ஏற்றபின் அதிகாரம் செல்லும்; அவமரியாதை வாராது.

. அவமரியாதை வாராவிட்டாலும், அதிகாரம் தன் வேலையைச் செய்யும்.

. பெண்ணுக்கு இதில் தவறு தெரியவில்லை.

. தாயார் சொல்லக்கூடாது. முடிந்தாலும் சொல்லக்கூடாது என்ற கட்டுப்பாட்டிற்குச் சிறியவனைக் கேப்டனாக்கினார்கள்.

. நகைக்கடையில் தகப்பனார் செய்தது சரி; பியூன் வீட்டில் கூப்பிடுவது தவறு.

. இதுவே பெண்ணின் நியாயம்.

. பெரியவன் விஷயத்தில் - பார்ட்னர், நண்பர் - நியாயத்தைப் பேசிய பெண்ணுக்குச் சிறியவன் விஷயத்தில் நியாயம் தெரியவில்லை.

. சிறுபெண், அனுபவமில்லாததால் புரியவில்லைஎன்று கூறலாம்.

. சிறுகுழந்தையாக இருந்தாலும் மனம் இயல்பாக எந்தப் பக்கம் பேசுகிறது என்பது அவர் யார் எனக் காட்டும்.

. முடிந்தாலும் சொல்லக் கூடாது என்பது பிரம்மம் தன்னுள் ஒளிந்துள்ள பிரம்மத்தை நினைவுபடுத்தக் கூடாது எனப் பொறுமையாக இருப்பதுவே லீலை என்பது வாழ்வில் வரும் இடம்.

.முடிந்ததைச் செய்தால் லீலையிருக்காது.

. முடிந்ததைச் செய்யாத பொழுது லீலைக்கு இடம் உண்டு.

என் தோழியின் அக்கா என்னை அவள் வீட்டிற்கு வரச் சொல்லியிருக்கிறாள்;

போய்விட்டு வா. கார் கேட்காதே;

நான் கேட்கமாட்டேன். ஆனால், காரில்தான் போகிறேன்;

அவளைப் பார்க்க நம்மூர் வக்கீல் மகள் போகிறாள். அவளுடன் என்னை வரச்சொல்லியிருக்கிறாள்;

இதுவே உன்னை முதல்முறை ஒருவர் காரில் அழைத்துப்போவது. நீ கார் கேட்கமாட்டேன்என்றவுடன் கார் வருகிறது:

. 30,000 ஆண்டுகளில் நடப்பது, 30 ஆண்டுகளில் நடக்கும். சத்தியஜீவன் பிறப்பான்.

. மனிதனை அன்னை சோம்பேறி என்கிறார்.

. social evolution, psycological evolution, spiritual evolution.

மனிதன் சமூகத்தாலும், மனத்தாலும், ஆன்மாவாலும் வளர்கிறான்.

. சமூகத்தில் படித்தவர், செல்வமுள்ளவர், பண்புள்ளவர் உச்சியிலும், மற்றவர் வெவ்வேறு நிலைகளில் அடிமட்டம்வரையுமிருக்கின்றனர்.

ஏன்? நம் பதில்: அவரவர் ஜாதகப்படி நடக்கிறது. அன்னை பதில்: அவரவர் விருப்பப்படி நடக்கிறது.

. நம் மனநிலையிலிருந்து அன்னை மனநிலைக்குப்போக நாம் என்ன செய்யவேண்டும்? பொய் சொல்ல மறுத்தால், அன்னை பொய் சொல்லும் சந்தர்ப்பம் தருவதில்லை. நாம் பெரும்பாலும் நம் நேரத்தைக் குடும்பம் நடத்த, சம்பாதிப்பதில் செலவிடுகிறோம். நாம் உடலால் உழைக்க முடிவு செய்தால் உடலால் உழைக்கிறோம். ஆன்மாவால் உழைக்க முடிவு செய்தால், உடலுழைப்பில்லாமல் அப்பணம் வருகிறது. We are what we believe நாம் குடும்பப்பொறுப்பை ஏற்றுக்கொண்டால், ஸ்தாபனப்பொறுப்பை ஏற்றுக்கொண்டால், நாட்டுப்பொறுப்பை ஏற்றுக் கொண்டால் நாம் அதைச் செய்துகொண்டிருக்கிறோம். அவை அன்னையின் பொறுப்பு. நமக்கு அன்னையின் கருவியாக இருப்பதே பொறுப்பு எனில், தேவையான பணம், தேவையான ஸ்தாபனம், தேவையான human instruments மனிதர் வருகிறார்கள். நாம் ஆன்மாவில், வளரும் ஆன்மாவிலிருந்தால் வேலையில்லை; பொறுப்பில்லை. அறிவை நம்பாமல், சௌகரியத்தைத் தேடாமல், பிடித்த காரியத்தைச் செய்யாமல், குறை கூறாமல், எந்த நேரமும் முன்னேற முயன்று, புறத்தை கம் பிரதிபலிப்பாகக்கண்டு, உண்ணும் முன்னும், உறங்கும் முன்னும், பேசும் முன்னும், செயலின் முன்னும் சமர்ப்பணத்தை மேற்கொண்டால், 1000 மடங்கு சக்தி மிச்சமாகும்*.

. இன்று நாம் நமக்குப் பிடித்ததை, நமக்குப் பிடித்ததுபோல் செய்கிறோம்.

. * மேற்சொன்னது அன்னைக்குப் பிடித்ததுபோல் நாம் வாழ்வதாகும்.

. தோழியின் அக்காவைப் பார்க்க எப்படிப் போகவேண்டும் என்றால், அது அந்த நேரம் நமக்குள்ள மனநிலையைப் பொருத்தது. கார் கேட்கக் கூடாது எனில் போய்வரும் நேரம் மிச்சமாகி காரில் போக ஏற்பாடாகிறது.

. நமக்கு வேண்டியவை அனைத்தையும் அன்னை கொடுத்தபின் நமக்கு வேலைஎன்பது ஆன்மாவில் வளர்வது.

. நம் குடும்பச் செலவு, ஸ்தாபனச்செலவு பொறுப்பை நாம் ஏற்றால், அதை நாம் செய்து கொண்டிருக்கிறோம். அன்னையிடம் கொடுத்தால், அவர் வேறு ஏற்பாடு செய்கிறார்.

. சமர்ப்பணத்தாலும், சரணாகதியாலும் வாழும் வாழ்வு இது.

. நாம் இன்று நம் மனத்தைப்போல் வாழ்கிறோம். அர்த்தமற்ற பூஜ்யங்களாக வாழ்கிறோம். அன்னையின் குழந்தையாக வாழவில்லை.

. நம் வாழ்வில் வந்த தோல்விகள், நம்மை அன்னை வாழ்வுக்கு எடுத்துச் சென்றதைக் காண்கிறோம்.

. நம் வாழ்வின் வெற்றிகள் நம்மை அன்னையைவிட்டு அகற்றுவதைக் காண்கிறோம்.

இவற்றையெல்லாம் எப்படிப் புரிந்துகொள்வது? நமக்குமட்டும் இப்படி இருக்கிறதே;

நினைத்தமாத்திரம் நடப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது;

மனம்தான் பெரியது. மனமாற்றம் பெரியதுஎன இருக்கிறேன்;

மனமாற்றம் பெரியது. சமர்ப்பணம் மனத்தையே சரணம் செய்வதில்லையா?

. சைத்தியப்புருஷனில் வாழும் 10 சட்டங்களைக் கண்டோம். இவற்றுள் எளிமையானது சமர்ப்பணம். சட்டங்களில் எளிமையான சமர்ப்பணம், நம்மால் ஆரம்பிக்கவே முடியாததாக இருக்கின்றது.

. சமர்ப்பணம் சாதகருக்கு. எனக்கு - பாமர மனிதனுக்கு - என்ன சொல்கிறீர்கள்எனக் கேட்கலாம்.

. பதிலை இருவகைகளில் கூறலாம்.

. பாமரருக்குச் சொல்லக்கூடியது எதுவுமில்லைஎன்று கூறலாம். அல்லது;

. யாரையும், எதையும் கேட்கக்கூடாதுஎன்று சொல்லலாம்.

. "எதுவும் கேட்கவில்லைஎன்றால் ஒன்றுமே கிடைக்காது. இருப்பதும் போய்விடும்"என்பது ஒரு பதில். அவர்கள் முதல்வகையைச் சேர்ந்தவர்.அவருக்குச் சொல்லக்கூடியதில்லை.

"அப்படியிருந்தால் 10இல் ஒன்று, 100இல் ஒன்றுதான் கிடைக்கும்"என்பவர் பெறக்கூடியவர். கிடைப்பதுடன் மனம் சந்தோஷப்பட்டால்,100இல் ஒன்று வளரும்வரை பொறுமையிருந்தால் அவர் அன்னையிடம் வருவார்.

. அது கேட்பவருக்கு. சொல்பவருக்கு என்ன சட்டம்?

. சொல்பவருக்கு, தாம் எதுவும் சொல்லவேண்டும் என்று தோன்றக் கூடாது. தோன்றினால், தோன்றுவதைச் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

. தோன்றுவதும், சொல்வதும் அவர் வழி.

தோன்றாததும், தோன்றியதைச் சமர்ப்பணம் செய்வதும் அன்னை வழி.

. மனமாற்றம் பெரியதுஎன்றால் மனம் பெரியதுஎன நினைப்பதாக அர்த்தம்.

மனத்தைவிட சத்தியஜீவியம் பெரியதன்றோ!

பெரியது என்பதே மனத்தின் நினைவாயிற்றே.

மனத்தைக் கடப்பதே கடமை.

. இப்படியெல்லாம் நினைத்தால் எரிச்சல் வருகிறது. விரக்தியும், சோர்வும் எழுகிறது.

. தெம்பு வளர்ந்தால் அன்னையிருக்கிறார்கள். சோர்வு அன்னையில்லை என்கிறது.

. முடிவாகத் தெம்பில்தான் இரகஸ்யமிருக்கிறதா?

. தெம்பு வந்தால் சந்தோஷம் வரும்.

. சந்தோஷம் வரவேண்டுமானால், வசதி வரவேண்டாமா? அது இல்லாமல் சந்தோஷம் வருமா?

. இன்றுள்ளதை சந்தோஷமாக ஏற்பதே பாமரனுக்குச் சமர்ப்பணம்.

. அதற்கு முழுஞானமும், முழுஅதிகாரமும் வேண்டும்.

. அறிவில்லாமல் பயந்து அடங்கியிருப்பதற்குப் பதிலாக அறிவோடு,

முழுபலத்துடன் அடங்கி, சந்தோஷம் பொங்கி எழுவது அனைவருக்கும் உரிய சூத்திரம் FORMULA.

என் மைத்துனனுக்கு அன்னையை நெடுநாளாகத் தெரியும். அன்னை உயிரோடுள்ளபொழுது தரிசனம் செய்திருக்கிறார். ஆனால் சொற்பொழிவில் சொல்வதெல்லாம் நம்பமுடியாததாக இருக்கிறது. மைத்துனர் அன்னையைத் தரிசித்துவிட்டு வீட்டிற்கு வந்தபொழுது என் பையனுக்கு மெடிகல் அட்மிஷன் கிடைத்த செய்தி வந்தது:

. அன்னை அறிமுகமாவது, நாம் அன்னையை அறிவதும் வேறு.

. நாம் அன்னையால் பெறும் பலன்களை மட்டும் கருதுகிறோம். அன்னையைக் கருதுவதில்லை.

. உன் பணத்திற்காக நான் உன்னை விரும்புகிறேன் என எவரும் சொல்லமாட்டார்கள். சொன்னால், அதைக் கேட்பவர் விரும்ப மாட்டார். உன் அழகுக்காக நான் உன்னை விரும்புகிறேன் என்பது எவருக்கும் சந்தோஷம் தருவது. கேட்க காதிற்கு இனிமையாக இருக்கும். இரண்டும் ஒன்றே எனத் தோன்றுவதில்லை.

. அன்பு இருக்கவேண்டிய இடத்தில் அழகு வருவது அழகன்றுஎன அறிவது பண்பு.

. 'பெண் அழகாக இருப்பாள். அவள் தகப்பனார் பணக்காரர். நிறைய செய்வார்' என்று ஏற்பாடுசெய்யும் திருமணம்போல் "அன்னை கேட்பவற்றையெல்லாம் கொடுப்பார். அன்னையைக் கும்பிடுங்கள்" என நான் கூறிவந்தேன்.

. அதைக்கடந்து வரும்படி இப்பொழுது அழைக்கிறேன். பலன் தெரிவதுபோல் பண்பு தெரிவதில்லை; பக்தி தெரிவதேயில்லை.

. அன்னை அறிமுகமானபின், தரிசனம் செய்தபின், அதன் பலனாக மெடிகல் அட்மிஷன் கிடைத்தபின், அதன் காரணமும் புரியாமல் அன்னை பக்தர்கள் ஏராளம் உண்டு. போன உயிர் வரும், எதுவும் நடக்கும், நடக்காதது நடக்கும், பெரியஅதிர்ஷ்டம் வரும் என்பன வெல்லாம் அவர்கள் அறியாதன. அவர்கள் அன்னை எழுதியவற்றைப் படித்தாலும், பக்தியுடன் புரிந்துகொள்ளவில்லை. நாம் பலனைக்கடந்து பக்தியை நாட முடியவில்லைஎனில் நமக்கும், அவர்கட்கும்என்ன வித்தியாசம்?

. ஆயிரம் ஆண்டுகட்குப்பின் உலகம் எப்படியிருக்கும், ஸ்ரீ அரவிந்தரை எந்த அளவு உலகம் ஏற்றுக்கொண்டிருக்கும்என அன்னை ஒரு நாள் தியானத்தில் கண்டார். 1872இல் பகவான் பிறந்ததிலிருந்து இன்றுவரை 130 ஆண்டுகளில் உலகம் முன்னேறியது அவருடைய அவதாரத்தால்என அவருடைய பக்தர்களோ, சாதகர்களோ அறிந்ததாகத் தெரியவில்லை. லியனார்டோவாக முன்பிறப்பில் ஸ்ரீ அரவிந்தர் தம் நோட்டில் எழுதிவைத்தவைகள் 1872க்குப்பின் நடைமுறைக்கு வந்தன. பகவானும், அன்னையும் அவதரித்தபின் உலகம் ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளில் பெறும் முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுஎன அறிய நாம் ஈராக், ஈரான், ஆப்பிரிக்க மக்கள் நம்பிக்கையைக் கண்டால் புரிந்துகொள்ளலாம்.

. அறிமுகமானால், அன்னையை பக்தன் தெரிந்து கொள்ளமுடிவதில்லை.

. தெரிந்துகொள்பவர்க்கு ஆன்மீக உண்மை புரிவதில்லை.

. அதைப் புரிந்து ஏற்றவரும், மீண்டும் பழைய வாழ்க்கையை நாடுகின்றனர்.

. ஆன்மீகம் புரிந்தாலும், பரிணாமம் புரிவதில்லை.

. எது புரிந்தாலும் மாறுவதில்லை.

. மாறியபின் பெறும் பட்டம் "அர்த்தமற்ற பூஜ்யம்".

உங்களுக்குப் பிடித்த புத்தகம் எது?

THE MOTHER என்று பகவான் எழுதியது:

. மைத்துனர் சொற்பொழிவில் கேட்டவை - போன உயிர் திரும்பி வந்தது, ரூ.400 சம்பளக்காரர் 400 கோடி சம்பாதித்தது, ரூ.200 வருமானம் இலட்ச ரூபாயானது, புதிய சட்டம் வந்து புதிய சலுகை வந்தது - அப்புத்தகத்திலில்லை.

. அப்புத்தகம் ஒரே இரவில் எழுதப்பட்ட நான்கு கடிதங்கள்.

. அதன் முக்கிய அம்சங்கள்:

. மனித இதயக்குரலும், அதற்காகக் காத்திருக்கும் அருளுமே உலகுக்குரிய சக்திகள்.

. 14 வகைகளாக மனிதன் தன்னை ஏமாற்றிக்கொள்வது.

. மனிதன் விலக்கவேண்டிய 30 குறைகள்.

. அன்னை உன் சரணாகதியை ஏற்றால் வேறுஎன்ன வேண்டும்?

. அன்னையின் 4 அம்சங்கள்; வெளிப்படாத அம்சங்கள்.

. இது உனக்கு வேண்டுமானால், சத்தியஜீவன் பிறப்பது நிச்சயம் என அறிந்துகொள்.

. அன்னையை ஏற்கத் தயங்கிய சாதகர்கள் ஆசிரமத்திலிருப்பது பலனில்லை என்றார் ஸ்ரீ அரவிந்தர்.

. இந்நூலின் முதற்பிரதியை "TO HER" என எழுதி அன்னைக்குச் சமர்ப்பித்தார். கடைசிவரை அந்நூல்மீதுள்ள ரிப்பனையும் அன்னை பிரிக்காமல் வைத்திருந்தார்.

. அன்னையில்லாவிட்டால் "என் சித்திகள் என்னுடனிருந்திருக்கும்" என்றார் பகவான்.

. சரணாகதி அன்னையின் ஜீவனில் உடல் வரை ஊடுருவியுள்ளது. அப்படிப்பட்ட ஒருவரைத் தாம் கண்டதில்லை என்றார்.

. கீதையின் யோகம் ராஜயோகத்தைக்கடந்தது. தம்மைச் சந்திக்குமுன் அன்னை கீதை யோகத்தைப் பயின்றார்.

. "நான் சத்தியஜீவியத்தில் கொல்லைப்புறமாக நுழைந்தேன். அன்னை நேரடியாக வந்தவர்".

. ஆப்பிரிக்காவிலுள்ள பொழுது அன்னை தம்முள் சத்தியஜீவனைக் கண்டார்.

. சரணாகதியை மேற்கொண்டது இருவர்.

அன்னை பகவானைச் சரணடைந்தார்.

பகவான் அன்னையைச் சரணடைந்தார்.

. பூமியின் மீதிருந்து உலகத்தின் சோகத்தைத் துடைத்த அன்னை; உலகெங்கிருந்தும் எழும் அபயக்குரலைக் கேட்டுப் பதிலளித்த அன்னை; தம் தியானத்தில் கண்ட "கிருஷ்ணா"வைத் தேடி, அவரைப் பார்த்த மாத்திரத்தில் "அவரே என் கிருஷ்ணா"என உணர்ந்து, இறுதிவரை அவருடன் தங்கி, அவர் யோகத்தை மேற்கொண்ட அன்னையை,

. அறிவது பாக்கியம்.

. அவர் நம் சரணாகதியை ஏற்கவே நாம் பிறந்தோம்.

. அன்னையைச் சரணடைவது பகவானை அவர்மூலம் அடைவது.

. இது இறைவன் வரும் தருணம்.

. இத்தருணத்திற்குரியது அன்னையில் நாம் கலந்து, கரைவது,என்ற ஞானம் THE MOTHER என்ற புத்தகம் தரும்.

பிரார்த்தனை செய்தால் பலிக்கும்; மனம் மாறினால் அதிகம் பலிக்கும்; தீவிரமானால் மேலும் பலிக்கும்; ஆதாயத்தை நாடாவிட்டால் பலன் உள்ளே வரும்; அமைதியை நாடினால் பலன் உள்ளும், புறமும் வரும்:

. பிரார்த்தனை பலித்தால், இது சக்திவாய்ந்த தெய்வம் எனக் கொள்கிறோம். எப்படிப் பலித்ததுஎன்ற கேள்வியை எவரும் எழுப்புவதில்லை.

. இக்கேள்வியை எழுப்புவது சிந்திக்கும் மனம்.

. பழத்தைச் சாப்பிட்டால் ருசியாக இருக்கிறது, ஜீரணிக்கிறது என்றால் ருசி உணர்வு; பழமும், நம்முடலும் ஒரே வகையாலான பொருட்களால் செய்யப்பட்டிருப்பதால் பழம் உடலில் கலந்து, கரைகிறது என்பது விளக்கம்.

. பிரார்த்தனை என்றால் என்ன?

நாம் ஏன் பிரார்த்திக்கிறோம்?

பிரார்த்தனையைக் கேட்பவர் யார்?

பலிப்பது என்றால் என்ன?

எப்படிப் பலிக்கிறது? என்பவை கேள்விகள்.

. நம்மால் முடியாததை அடுத்தவரைச் செய்யச் சொல்வது பிரார்த்தனை.

.நம்மால் முடியாதது அடுத்தவரால் முடியும் என நம்புவதால் பிரார்த்திக்கிறோம்.

. பிரார்த்தனையைக் கேட்பவர் நம்மைப் போலொருவர் அல்லது நம்முடன் தொடர்புள்ளவர்.

. அவரால் முடியும், அவர் நமக்குச் செய்யப் பிரியப்படுகிறார் என்பதால் பலிக்கிறது.

. நாம் கேட்பதை அவர் ஏற்பதால் பலிக்கிறது.

. மேலே சொன்ன சுருக்கம் பலிக்கும் நிலைகளில் பலவற்றைக் கூறுகின்றது.

. மனம் மாறினால் அதிகம் பலிக்கும் என்றா ல் மனத்திற்குக் காரியத்தைப் பூர்த்திசெய்யும் திறனுண்டு. அது மனத்தின் நிலையைப் பொருத்தது என்று தெரிகிறது.

. தீவிரம் என்பது மனத்தின், உயிரின், ஜீவனின் ஈடுபாடு. காரியம் பூர்த்தியாக மனத்தின் சக்தி பயன்படும். தீவிரம் அதிகமானால் அதிகமாகப் பயன்படும்.

. ஆதாயம் என்பது புறச்செயல். அதை நாடினால் பலன் செயல் வரும். உள்ளே வரும் பலன் என்பது மனத்தில் ஏற்படும் மாறுதல். பலன் புறத்திற்கும், அகத்திற்கும் உரியது. அகமும், புறமும் இணைந்தவை. அகம் புறத்தைவிட உயர்ந்தது; அடிப்படையானது.

. அமைதி: அமைதி அகம், புறம் இரண்டையும் உட்கொண்டது.

. புறமோ, அகமோ பகுதி. அமைதி முழுமை.

. மனம் - தீவிரம் - புறம் - அகம் - அமைதி ஆகிய நிலைகள் சொல்லால் எழும் பிரார்த்தனைக்குப்பின் வரும் உயர்ந்த நிலைகள்.

. பிரார்த்தனை, தியானம், சமர்ப்பணம், சரணாகதி, பக்தி ஆகியவை ஒரே வகையைச் சேர்ந்தது. எதற்கும் நேரம் வரவேண்டும் என்பது நம் மரபு; மனம் தயாரானால் நேரம் வரும்என்பது அன்னை. நாம் நேரத்தை வரவழைக்கலாம்; எஸ்டேட் மானேஜர் கட்டடம் தயாராக இருக்கிறது என்றதால் காலத்திற்குக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது. ஜாதகத்தைப் பார்த்தால் தெரியும். எங்கள் பாட்டி அடிக்கடிக் கூறுவார், "இவையெல்லாம் ஜாதகத்திலில்லையே'' என்று:

. பார்ட்னருக்கும், மைத்துனருக்கும் ஏற்பட்ட மாறுதல் கணவருக்கு ஏற்படவில்லை. எரிச்சல்படுகிறார்.

.சொல்வதைக் கேட்டுக்கொள்ளும் மனப்பான்மைக்குப் பலன் வரும்.

. கணவருக்கு அதில்லை. எரிச்சல் வருகிறது. அவருக்குத் தாயார் மனைவி என நினைக்கிறார்.

. நேரம் வரவேண்டும் என்பதில்லைஎன்றால் என்ன?

. மனம் காலத்தில் ஏற்பட்டதால், காலத்திற்காக நாம் - மனம் காத்திருக்கவேண்டும்.

. சத்தியஜீவியம் காலத்தையும், கடந்ததையும் கடந்த மூன்றாம் நிலையிலிருப்பதால் நேரத்தை அன்பர் வரவழைக்க முடியும் என்பதைத் தன்னையறியாமல் பார்ட்னர் ஏற்பதால் கட்டடம் அவரைத் தேடி வருகிறது.

. மைத்துனர் அன்னையை அர்த்தமில்லாமல் ஏற்றவர் என்றாலும், அவர் வாழ்வில் ஜாதகத்தில்லாதவை நடந்துள்ளன. அப்படியென்றால்,

. கர்மம் அவரைக் கட்டுப்படுத்தவில்லை.

. கர்மம் கட்டுப்படுத்தவில்லை எனில், காலமும் கட்டுப்படுத்தாது.

. நேரத்தை நாம் வரவழைக்கலாம்என்பதற்குப் பல விளக்கங்கள் உள: நாம் மனமில்லை, ஆத்மா; அதுவும் வளரும் ஆன்மா — தத்துவம்.

. காலம் என்பது சத்புருஷனுடைய (Supreme) 5 வெளிப்பாடுகளில் ஒன்று.

. காலத்தைக் கடக்கலாம் என்றால் இந்த வெளிப்பாடுகளில் ஒன்றிற்கு

- காலத்திற்கு - முன் நாம் செல்கிறோம்.

. அதை அன்னை Supreme சத் என்கிறார். சிருஷ்டிக்கு முந்தைய நிலை அது.

. நாம் அங்குப் போகிறோம் எனில் நம்மால் போகமுடியுமா? வளரும் ஆன்மா அங்குப் போகவல்லது.

. வளரும் ஆன்மா சத்தியஜீவியத்தில் ஈஸ்வரனாக உள்ளது.

. அது அக்ஷரப்பிரம்மம், புருஷன் - சாட்சிப்புருஷன் - இரண்டையும் கடந்தது.

. சாட்சிப்புருஷனைக் காண்பது physical mind ஜடமனம் என்கிறார். மனம் ஜடமாக இருப்பதால் அது புருஷனை சாட்சியாக காண்கிறது. ஈஸ்வரநிலையை நோக்கிப்போவது 5 வெளிப்பாடுகளில் மேலும் ஒன்றைக் கடப்பதாகும்.

. இந்த ஆன்மீக நிலைகளை நம் ஜீவனில் காண்பது யோகம்.

பாக்டரி மானேஜரிலிருந்து வாட்ச்மேன்வரை ஆள் எடுக்கவேண்டும்; செய்யவேண்டியவற்றைஎல்லாம் தவறாது அன்னை முறைப்படி செய்யுங்கள்;

என் மானேஜரின் மைத்துனர் நாட்டில் தொழிலில் முதன்மையானவர். அவருக்கு வேலை வேண்டும் எனக் கேட்கிறார். சம்பளம் குறைவானாலும் பரவாயில்லை என்கிறார்;

நினைவு அன்னையில் உள்ளவரை எல்லா போஸ்ட்டுக்கும் நல்ல ஆள் கிடைக்கும்:

. பாக்டரியில் இன்று முக்கியப்பிரச்சினை; தொழிலாளர் தகராறு. தொழிலாளர் தகராறு வந்துவிட்டால், அதன்பின் பாக்டரி மூடப்படும். இன்று நடக்கும் பாக்டரிகள் எல்லாம் இந்த டென்ஷனுடன் நடக்கின்றன. டென்ஷனில்லாமல் நல்லபடியாக நடக்கும் வழி அன்னை வழி.

. வசதியற்றவர் வசதி பெறும் வழி தவணைமுறை. இதன் ஜீவநாடி தவணையைத் தவறாமல் கட்டுவது.

. ஏழை வாங்கமுடியாத பொருள்களை வாங்க வழிசெய்வது தவணை முறை. அதனால் பலன்பெற அதை ஜீவனோடு பயன்படுத்த வேண்டும். தவணைமுறையைவிடப் பன்மடங்கு பலன் தருவது இன்ஷூரன்ஸ். அதன் ஜீவன் பிரீமியம் கட்டுவது. தவணைமுறையில் முழுத் தொகையையும், வட்டியுடன் கட்டுகிறோம். இன்ஷூரன்ஸில் ஒரு சிறு பகுதியைக் கட்டி முழுப்பலனையும் பெறுகிறோம். அந்தச் சிறுபகுதியைத் தவறாமல், பிரீமியமாகக் கட்டவேண்டும்.

நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் கருவி இன்ஷூரன்ஸ்.

சுபிட்சத்தை இன்ஷூர் செய்ய இருப்பதைப் பெற முயல்வது உதவும்; இல்லாததைக் கேட்பது உதவாது.

. தொழிலாளர் தகராறு, இலஞ்சம் கொடுக்கவேண்டிய அவசியம், பொய் சொல்லவேண்டிய அவசியமில்லாமல் பாக்டரி நடத்தும் வழி, அன்னை வரும் வரை உலகிலில்லை. அன்னை வந்தபிறகு அதற்குத் தவணை முறை, இன்ஷூரன்ஸ்போல் வழி ஏற்பட்டுவிட்டது. அதைப் பெறும் ஜீவநாடி தூய்மையான நம்பிக்கையை வெளிப்படுத்தும் அன்னை முறைகள்.

. அதையும் ஆதாயம்என்று செய்வதைவிட நல்லதுஎனச் செய்யவேண்டும்.

. இந்தப் புதிய சூழ்நிலையை Grace atmosphere, அருட்சூழ் நிலை என நாம் அறிகிறோம்.

. இது இறைவன் வரும் தருணமானதால், ஆயிரமாண்டில் நடப்பது அப்பொழுதே நடக்கும்என்பதால், சூழ்நிலையில் அருள் செயல்படுகிறது.

. அருளுக்குப்பாத்திரமாகக் கர்மத்தை நம்புதல் கூடாது.

. அருள் பேரருளாக நம் திறமைகளை நம்பக்கூடாது.

. பாக்டரி சிறப்பாக நடக்க நாட்டுநடப்பை நம்பக்கூடாது.

. தவற்றை நம்பாமல், உண்மையை நம்பினால் அருள் அதிர்ஷ்டமாகச் செயல்படும்.

. அன்னை நினைவு, உண்மையை நம்புவது.

. அன்னைச் செயலை நம்ப, நம் செயல் கூடாது என்று புரியவேண்டும்.

. அன்னையை அருளாக அறிந்து கர்மத்தையும், நாட்டு நடப்பையும் நம்பாமல், அருளை நம்பினால் அதிர்ஷ்டம் செயல்படும்.

. தவணை முறை அதிர்ஷ்டம்; இன்ஷூரன்ஸ் அருள்.

. பிரீமியம் கட்ட மனம் வருவது தெய்வ நம்பிக்கை.

தான் பிறர்க்கு உரிமையுடன் செய்வதை, பிறர் நமக்குச் செய்வது அநியாயம் என்பது மட்டமான மனிதரின் கயமையான எண்ணம்; தீவிரமான ஆசைகட்கு இடம் தரக்கூடாது என்கிறீர்களா? அது கட்டுப்படுவது சமர்ப்பணம்:

. எல்லோரையும், எப்பொழுதும் மனம் புண்படும்படிக் கேலிசெய்பவர், எவராவது தம்மைக் கேலிசெய்தால் அடிபட்ட பாம்புபோல் சீறுவார்.

. கேலி செய்வது என்பது இல்லாத அதிகாரத்தை அதிகபட்சம் செலுத்துவது ஆகும்.

. கேலியைக் கடந்ததும் உண்டு.

. பிறர் குறைகளை நினைவுவைத்திருந்து புண்படப் பேசுவது.

. இல்லாதகுறையைப் புண்படும் என ஆயுதமாகப் பயன்படுத்துவது, அதையும் தாண்டிய கட்டம்.

. கேலி பொய்யின் லீலை.

. பொய் மெய்யாக, தன்னை அழித்துக்கொள்ள முன்வந்தால், பிறரை அழிக்க முயலும்.

. கேலி அனந்தம். தானே கட்டுப்படாது. எதிரி திருப்பி அடிக்கும்வரை இடையறாது செயல்படும்.

. தான் கூறும் நகைச்சுவையை தானே மகிழ்ந்து கொக்கரிப்பது கேலி.

. ஆசை இயலாமையின் தீவிரம்.

. தீவிரமான ஆசை இயலாமையின் வேகம்.

. இயலாமை தன்னை அதிவேகமாக அழித்துக்கொள்ள முடிவுசெய்தால்,

அதை அடுத்தவர்க்கும் செய்யும்.

. பெறுபவன் தம் அறியாமையை அறிவாக மாற்றிக்கொள்ள, இழப்பது உரிமை, மரியாதை.

. செய்பவன் - கேலிசெய்பவன் - தன் இயலாமையை இழக்க உயிரை இழக்கின்றான்.

. உடலால் வாழ்பவன் அறிவுபெற உயிரை இழக்கிறான்.

. உயிரால் வாழ்பவன் அறிவுபெற உரிமையை இழக்கிறான்.

. அறிவால் வாழ்பவன் அறிவுபெற அறியாமையை இழந்தால்போதும்.

. ஆன்மாவால் வாழ்பவன் அறிவுடையவன். அவன் அறிவுபெறத் தேவையில்லை.

. அவன் தன் அறிவைப் பிறருக்குத் தரமுடியும்.

. அவன் பெற்ற அறிவு ஞானம்.

. அந்த ஞானம் ஆத்மாவைக் - வளரும் ஆத்மாவைக் - காணும் ஞானம்.

. தம் வளரும் ஆத்மாவைக் கண்டவன் பிறருக்கு அந்த ஞானத்தைத் தருவதைவிட உயர்ந்த சேவை உலகிலில்லை.

. அதைச் செய்யவும் நிபந்தனையுண்டு.

. பெறுபவர், பெறும் ஞானச்சிறப்பை உணர்ந்து, தானே விரும்பிக் கேட்டால் தரலாம்.

. கேட்காதவனுக்குக் கொடுக்கமுடியாது.

. கேட்காதவனுக்கு வற்புறுத்திக் கொடுத்தால், அவன் கொடுப்பவருக்குத் தீங்குசெய்வான்.

. அது தவறாது.

ஆசை அழிந்தபின் அகந்தையிருக்கும்;

எரிச்சல் என்பது ஆழத்தில் நாம் அவர்களைப் போலிருப்பதைக் காட்டும்;

USAயில் credit card payment எவரும் தவறமாட்டார்கள்;

இலாபத்திற்காக, வெட்கத்திற்காக, தெளிவுக்காக, அன்னைக்காக மாறுபவர்கள் உண்டு;

சொல்லாமலிருக்கக் கட்டுப்பாடும், நினைக்காமலிருக்கப் பக்குவமும் தேவை:

. கீதை சொல்வதென்ன?

. பலன் கருதாத செயல்.

. செயல்மீது பற்றுதலில்லாத செயல்.

. ஆசையை அழிக்கவேண்டும்.

. அகந்தையை அழிக்கவேண்டும்.

. சர்வதர்மங்களையும் சரணம் செய்யவேண்டும்.

. ஸ்ரீ அரவிந்தம் கீதையைக்கடந்தது.

. பிறர் நமக்குத் தரும் எரிச்சலும் நம்முள்ளேயுள்ள எரிச்சலைக் காட்டும் என்றால் நம் எரிச்சலைக் கடந்தபின், பிறர் எரிச்சல் மூட்டுவதையும் கடக்கவேண்டும்.

. USAயில் credit card payment தவறமாட்டார்கள்.

. தவறினால் எதுவும் செய்யமுடியாது.

. அனைவரும் credit card பெற்றபின் நாம் பெறாமலிருக்க முடியாது. நாணயமில்லாத் தவணையும் சமூகம் நாணயமாகச் செயல்படக் கட்டாயப்படுத்துகிறது.

. பிள்ளைகள் படிக்க, தடுப்புஊசி போட, கார் இன்ஷூரன்ஸ் செய்ய சர்க்கார் கட்டாயப்படுத்துகிறது.

. எல்லா வீடுகளிலும் TV வந்துவிட்டால், சமூகம் நம்மை TV வாங்கக் கட்டாயப்படுத்துகிறது.

. ஸ்ரீ அரவிந்தம் நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்ளச் சொல்கிறது.

. இலாபத்திற்காகச் செயல்படுபவன் உடலால் வாழ்பவன்; வெட்கத்திற்காக நடப்பவன் உயிரால் வாழ்பவன்; தெளிவால் செயல்படுபவன் மனத்தால் வாழ்பவன்; அன்னைக்காக வாழ்பவன் ஆத்மாவுக்காக வாழ்பவன்.

. உடலை, தண்டனை வற்புறுத்தும்.

. உயிரைச் சமூகம் வற்புறுத்தும்.

. மனத்தை அறிவுத்தாகம் வற்புறுத்தும்.

. ஆன்மாவை வற்புறுத்தக்கூடாது. ஆன்மா அன்பால் மலரவேண்டும்.

. இலாபத்திற்காக எனில் உழைக்கவேண்டும்.

வெட்கத்திற்காக எனில் மரியாதை காக்கவேண்டும்.

அறிவு வேண்டும்எனில் அறிவுத்தாகம் தேவை.

அன்னை வேண்டும் எனில் அன்பு தேவை.

. உழைப்பவன் பேசமாட்டான்.

. பக்குவமானவன் நினைக்கமாட்டான்.

. பேசாமல், நினைக்காமல், உணராமல் உள்ளது ஆன்மீகப்பக்குவம்.

நமக்கு வரும் அருளின் சாயல் பக்கத்து வீட்டிலும் தெரிகிறது;

நம் வீட்டு விஷயம் தெரியாதவருக்குப் பொறாமை எழ வழியில்லை என்பதால் அருள் செயல்படுகிறது;

எனக்குச் செய்தி கேட்டதிலிருந்து வயிற்றைக் கலக்குகிறது - கணவர்;

யூனியன் தலைவரை நாங்கள் தெரியாமல் கம்பனியில் சேர்த்து விட்டோம்;

என்னை ஆண்டவன் ஒருபொழுதும் கைவிட்டதில்லை - பார்ட்னர்:

. அருள் பிரபஞ்சசக்தி (universal vibration) என்பதால் பரவும் தன்மையுடையது. எலக்ட்ரிசிட்டி எவ்வளவு சக்தி வாய்ந்ததானாலும், கம்பி மூலம் மட்டும் செயல்படும். சாம்பிராணி வாசனை அடுத்த ரூமுக்கும் போகும். அருள் சாம்பிராணிபோல் பரவுவது.

. அருள் பரவினாலும் பெறுவது பக்கத்து வீட்டுக்காரரைப் பொருத்து உள்ளது. பொறாமையால் பீடிக்கப்பட்டால் அருள் செயல்படாது. கல்லில் எழுதியது அழியாது. அழிவே உருவான இந்த லோகத்தில், பிரகிருதி இலயத்தில், உடல் பலநூறு ஆண்டுகளிருக்கும் என்பது அழியும் உடலின் தன்மை.

. அருளும் பொறாமையால் அழியும்.

. அன்னையை அறியாதவர்க்கும் அருள் சந்தர்ப்பத்தால் செயல்படும்.

. எதிரான இக்கருத்துகட்கும் பொருளுண்டு.

. பயம் தன்னை அழித்துக்கொள்வது. கணவருக்கு யூனியன் தலைவர் செய்தி கேட்டதிலிருந்து வயிற்றைக் கலக்குகிறது.

. அகந்தையால் பிரிக்கப்பட்ட ஜீவன் பிரபஞ்ச ஸ்பர்சத்தால் நொறுங்கி விடும் என உணர்வது பயம்.

. பயத்தைப் பாராட்டினால் பயம் வளரும்.

. பார்ட்னர் பயப்படவில்லை என்பதால் அருள் அவர் மூலம் செயல் படுகிறது.

. கணவருக்கும், பார்ட்னருக்கும் செய்திகள் வந்தாலும், பார்ட்னர் செய்தி மூலமே பிரச்சினை தீர்கிறது.

. தைரியசாலிகளை ஆண்டவன் எப்பொழுதும் கைவிட்டதில்லை.

அங்கும் அன்னை செயல்படுவதில் வித்தியாசமிருக்கும்.

அன்னை வந்த சிரமத்தைச் சிரமமின்றி விலக்குவார்.

சத்தியம், சிரமம் வந்தால், விலக உதவும் - சிரமமாக விலக உதவும்.

. எவ்வளவு போக்கிரியானாலும், யூனியன் தலைவரானாலும்,

. கம்பனி நிர்வாகம் முறையானதானால், அவன் வாலை நீட்ட முடியாது.

. வேலையைச் செய்பவனால், விஷமம் செய்யமுடியாது.

. இரண்டுமுள்ள இடத்தில் எதுவும் செய்ய முடியாது.

. வேலைக்கு ஜீவனுண்டு; அது ஆன்மா.

. வேலையைச் சிறப்பாகச் செய்யுமிடத்தில் ஆன்மா வெளிப்படுவதால்,அதுவும் வேலையின் ஆன்மா வெளிப்படுவதால், அங்கு தவறு வர வழியில்லை.

. நிர்வாகம் சரியாக இருந்தால், நிர்வாகத்திற்குரிய ஆன்மா வெளிப்படும். அதன் அதிகாரம் ஏராளம். யூனியனுக்கு அங்கு வேலையில்லை.

இடி விழுந்தால், எப்படிப் பயப்படாமலிருக்க முடியும் - கணவர்;

இவனே சிறந்த தொழிலாளியாகி மற்றவரைக் கட்டுப்படுத்துவான் - மனைவி;

வேண்டாம், வேண்டாம்; கேட்கவே பிடிக்கவில்லை; விஷப்பரிட்சை - ணவர்;

முதலில் ஆர்டர் கொடுத்தபொழுது நடந்தவை பின்னால் வரப்போவதை விளக்கும் - மனைவி;

அப்படியும் ஒரு சட்டம் உண்டா - பார்ட்னர்;

அப்படியானால், போவதும் அமைதியாகப் பிரியமாக நடக்கும்:

. அன்னை வயிற்றில் இருக்கும்பொழுது, இடி விழுந்தாலும் வயிறு கலங்காது.

. யூனியன் தலைவன் தொழிலாளிகளைக் கட்டுப்படுத்துவான் என்பதைக் கணவர் கேட்கவும் பிரியப்படவில்லை.

. சர்ச்சில் இந்தியாவுக்குப் பரம எதிரி. பகவான் ஸ்ரீ அரவிந்தர் ஹிட்லரைத் தோற்கடிக்கச் சர்ச்சிலைத் தேர்ந்தெடுத்தார். தம்முடைய சக்தி சர்ச்சில்மூலம் நன்றாகச் செயல்படுகிறதுஎன்றார். "சர்ச்சில் எதிரியாயிற்றே. ஏன் பிரெஞ்சு தலைவர்களைத் தேர்ந்தெடுக்கக் கூடாது" என்று அவரைக் கேட்டனர். "அவர்கள் மனதிடமற்றவர்கள். சர்ச்சில் மன உறுதிபெற்றவர்" என பகவான் கூறினார்.

. இந்தியச் சுதந்திரத்தின் எதிரியான சர்ச்சில் இறைவனின் சக்தியைப் பெற உள்ளூறச் சம்மதித்தபொழுது, உலகச் சுதந்திரத்தைக் காப்பாற்றினார்.

. தாயார், தலைவன் திருவுருமாறினால் அது நடக்கும்என்றார்.

. அவனுக்கு ஆர்டர் சுமுகமாகக் கொடுத்ததால், அவன் விலகுவதும் சுமுகமாக இருக்கும் என்று தாயார் கூறுகிறார். அதுவும் நடந்துவிட்டது.

. ஒருவரை விரும்பி ஒரு ஸ்தாபனம் அழைத்து வேலைக்கு வைத்தால்,ஸ்தாபனம் முழுவதும் அவருக்கு எதிரியான பொழுதும், அவரை வேலை நீக்கம் செய்யமுடியவில்லைஎன்பது ஓர் அனுபவம்.

. நுழைவதும், வெளியேறுவதும் ஒன்றுபோல் அமையும்.

இந்தச் சட்டம், இதுபோன்ற சட்டங்கள் நம் நாட்டில் எழுதப்படிக்க தெரியாதவர்களும் அறிவார்கள். அது நம் நாட்டுச் சொத்து. அதை எதிராக "முதற்கோணல் முற்றும் கோணல்" என்ற சொல் கூறுகிறது.

. ஏன் நுழைவதும், வெளியேறுவதும் ஒன்றாக இருக்கும்?

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

செயல்கள் ஆரம்பம், மையம், முடிவுஎனப் பிரிந்து தோன்றினாலும் அடிப்படையில் ஒன்றே. செயல்கள் முழுமை பெற்றவை.

. முழுமைஎன்பதால் ஆரம்பமும், முடிவும் அடிப்படையான விஷயங்களில் ஒன்றுபோலிருக்கும்.

. இங்குச் சுமுகமாக இருக்கும்.

. சிறந்த டெக்னீஷியன், தலைவராகக் கம்பனிக்கு வந்ததற்கு என்ன அர்த்தம்?

. இவர்கள் கம்பனி சிறந்த டெக்னாலஜியுடையது என்பதால் அவன் ஈர்க்கப்படுகிறான்.

. இக்கம்பனியில் சொத்தை பார்ட்னர்களிருப்பதால், அவன் யூனியன் தலைவனாகிறான்.

. அவனைச் சமாளிக்கும் திறனில்லை என்பதால் போகிறான்.

. அவன் இங்கேயே இருந்து மாறினால், கம்பனி மிகப் பிரபலம் அடையும்.

எது வேண்டுமானாலும் கேட்பேன். அப்படியே பலிக்கும்; எதையும் கேட்காமலிருப்பது நல்லது என்றும் அன்னை கூறுகிறார்;

அன்னை கூறியவற்றையெல்லாம் நாம் அப்படியே பின்பற்றமுடியுமா?

அன்னை சொல்லியதை அப்படியே வேதவாக்காக ஏற்கவேண்டும் -

ஆசிரியைக்குத் (.129, "எங்கள் குடும்பம்'' ) தாயார் சொன்னது:

. எது வேண்டுமானாலும் கேட்கலாம், எதுவும் கேட்கக்கூடாதுஎன்பது மனித மனத்தையும், தெய்வநோக்கத்தையும் காட்டுகிறது.

. இறைவன் வரும் தருணத்தில் வந்த பகவானும், அன்னையும் மனிதனுடைய ஒத்துழைப்பை எதிர்பார்த்தார்கள். ஆனால் கேட்கவில்லை. ஏன்?

. "என் மேல் பிரியமாக இரு"என எவரையும் கேட்க முடியாது. கேட்டால் பிரியம் வாராது.

. மனிதனுக்குச் சேவை செய்ய வந்தவர் மனிதனுடைய ஒத்துழைப்பையும் கேட்கவில்லை; அவனும் ஒத்துழைக்கவில்லை.

. Unconscious தன்னை consciousஆக மாற்றிக்கொள்ளும் போக்கு இது.

. அவ்வொத்துழைப்பு என்ன ஆனந்தம் தரும் என்பது கற்பனைக்-கெட்டாதது. அது பிரம்ம ஜனனத்தின் ஆனந்தம்.

. அதை வாழ்வில் ஒரு துளி காண்பது அதிர்ஷ்டம், அருள், பேரருள்.

. இறைவன் தேடும் பிரம்மானந்தம் மறைந்து, மறந்த இறைவன் தன்னை நினைவுபடுத்திக்கொள்வது. அதற்குச் சமர்ப்பணம் கருவி. அதைச் செய்ய எதையும் கேட்காமலிருக்கவேண்டும்.

. எதையும், எவரையும் கேட்காவிட்டால், கேட்க முடியாவிட்டால், சமர்ப்பணம் செய்யலாம்.

. வேதவாக்காக அன்னை கூறியதை ஏற்காதவர், எதையும் ஏற்கப் போவதில்லை.

. அப்படி ஏற்க மனிதன் மனத்தைக் கடக்கவேண்டும்.

. மனத்தால் அப்படி ஏற்பது கீழ்ப்படிதல். அதில் ஜீவனிருக்காது.

. அது டிகிரி, பட்டம். பட்டம் கல்வி தாராது. ஞானம் தர அதனால் இயலாது.

. மனத்தைக்கடந்தால் எந்தச் சொல்லும் வேதவாக்காகும்.

. வேதவாக்காக அன்னைச் சொல்லை ஏற்றால், அன்னை Cherry Blossom மரத்துடன் இரண்டறக் கலந்ததுபோன்ற உணர்வு ஏற்படும்.

. பூமி சூரியனைச் சுற்றிவருவது தெரியும்.

. சிருஷ்டியின் முழுமை, நம் முழுமை தெரிந்தால், உலகம் உள்ளே தெரியும்.

. அதனுள் சத் - Supreme - தெரியும்.

. பிறர் நம்முள்ளும், நாம் பிறருள்ளும், நாம் அனைவரும் இறைவனுள்ளும், இறைவன் நம் அனைவரிலும் தெரிவதற்கு அன்னைச் சொற்களை வேதவாக்காகக் கொள்ளவேண்டும்.

. அன்னை கூறியதில் நமக்குச் சௌகரியமானதை (எதையும் கேட்கலாம்என்பதை) ஏற்பது சிறப்பன்று.

. கடன்என்ற பெயரில் பணம் வாங்கி வாழ்க்கையை நடத்த முயல்பவரும், கேட்டால் இல்லைஎனக் கூற கூச்சப்படுபவரும், கொடுத்ததைத் திருப்பிக் கேட்கக்கூடாதுஎன்ற மனப்போக்கு உள்ளவரும் ஆயுள் முழுவதும் நட்பு கொண்டாடுவதுபோன்றது அன்னை நம்முடன் கொண்டுள்ள உறவு. Unconsious relationship with consciousness..

சாதகருக்கு விலக்கேயில்லை. எந்தச் சட்டத்திலும் அவர் விலக்கை எதிர்பார்க்கக்கூடாது. நாமெல்லாம் புரிந்து ஏற்கவேண்டும் - ஆசிரியை;

புரியாமல் ஏற்பதைவிடப் புரிந்து ஏற்பதுமேல் - தாயார்;

புரிந்தபின், புரிந்ததற்காக ஏற்காமல், அன்னை கூறியிருப்பதற்காக ஏற்பது அடுத்த நிலை - ஆசிரியை:

. கதையை ஓர் இலக்காக வைத்து அன்னையைப் புரிந்துகொள்வது பெரியது.

. புரிந்து கொள்வது என நாம் கூறும்பொழுது, மேல்மனம் புரிவதைக் கூறுகிறோம்.

. உப்பாலான பொம்மை, கடல் ஆழத்தைக் காணப் பிரியப்பட்டு கரைந்து போகிறது என பரமஹம்ஸர் கூறிய உதாரணம் பொருத்தமானது. நமக்குப் புரிந்துகொள்ளும் திறமையோ, அறிவோ இல்லை.

. நினைவுள்ளவரை நமக்கு (insincerity) அன்னையில்லை என்று அன்னை கூறியிருக்கிறார். நினைவு என அவர் கூறுவது மேல்மன நினைவு .அதுபோனால் அடிமன நினைவுண்டு. அதைக் கடந்து இரண்டு நிலை ஞானம் உண்டு. நாம் இடைவிடாது அன்னையை நினைக்க வேண்டும் என நம்புகிறோம். நினைவேயழிய வேண்டும் என்பது உண்மை நிலை.

. நினைவே கூடாது என்றால் சட்டம் எப்படி? அன்பர் எளியவர். சாதகரும் கணக்கில் சேராதவர். சட்டம் அன்பருக்கு; சாதகருக்கு இல்லை.

. அன்பர் சட்டத்தைப் புரிந்துகொண்டு அதன்படி நடக்கவேண்டும்.

. நடப்பதே சட்டம் என சாதகர் காணவேண்டும்.

. சட்டம் மனத்திற்குரியது. மனத்தைக்கடந்தவன் சத்தியஜீவன்; சாதகனின் இலட்சியம்.

. அன்னை கூறியதை அவர் கூறியதற்காக ஏற்றால் சட்டத்தைக் கடப்போம். அது அடிமனநிலையைக் கடந்து (intuition) ஞானத்தை எய்துவதாகும்.

. சட்டம் காலத்திற்குரியது. சட்டத்தைக்கடந்தால் காலத்தைக் கடக்கிறோம்.

. அகந்தை சட்டத்திற்குரியது. சட்டத்தைப் பின்பற்றினால் அகந்தை கரையும். பிரபஞ்சஜீவியம் எழும்.

. அன்னை சத்தியஜீவியம் சென்று திரும்பியபொழுது, நம் வாழ்வைக் கண்டு அடக்கமுடியாத சிரிப்பை, வாயைப்பொத்தி 15 நாட்கள் வரை அடக்கினார்.

. உலகில் தவறு, கடுமை, கொடுமை, வலியிருக்கிறது என்றுணரும் வரை vital  உணர்வு அன்னையை அறியவில்லை எனப் பொருள்.

. சிருஷ்டி முழுமையானது. அதில் unity ஐக்கியம் உண்டு. மனம் ஐக்கியத்தைக் காணாது. ஐக்கியம் தெரியாதவரை நாம் மனத்தைக் கடக்கவில்லை. ஐக்கியம் தெரிந்தால் அலிப்பூரில் பகவான் பெற்ற தரிசனம் தெரியும்.

. அது தெரிய மனம் தலையிலிருந்து உயர்ந்து சகஸ்ரதளம் போக வேண்டும். அல்லது நெஞ்சுக்குப்பின் போகவேண்டும்.

. அப்பொழுது அன்னை படத்தில் உயிரோடிருப்பார். அது படமாக இருக்காது. சுவர் சுவராகத் தெரிவது புலன்; மனமுமில்லை. சுவர் பிரம்மஜீவியமாகத் தெரிவது சத்தியஜீவியம்.

. நாமுள்ளது மேல்மனமான ஜாக்ரதா மனம். உள்ளே போய் உலகைக் காண்பது தன்னை மறந்த மனம். உள்ளே உலகைக் காணும்வரை நாம் வெறும் மனிதர்.

. அன்னை கூறுவதை வேதவாக்காக ஏற்றால் மனிதகுரு விலகி உள்ளேயுள்ள ஜகத்குரு காட்சியளிப்பார்.

. காலம் தன் கடுமையை இழந்து அதன் முழுவேகத்துடன் - அதிவேகத்துடன் - நம் கட்டளைக்குக் காத்திருக்கும்.

. சத்தியஜீவிய சக்தி சகஸ்ரதளத்தின் வழியாக உள்ளே வந்து உடலில் கரைந்து சேரும்.

. அன்னையை வழிபடுவது தூரத்திலிருப்பது.

. அன்னையிடம் என்ன கேட்கலாம் என்பது அர்த்தமற்ற அறியாமை.

. சரணாகதி என்பது சர்வ அர்ப்பணம். அது உடலைப் புல்லரிக்கும்.

. அர்த்தமற்ற பூஜ்யம் அன்னை குழந்தையாக வேண்டும். புரிவது,

ஏற்பது, எட்ட இருப்பவரின் நிலை.

. இடைவிடாத நினைவு அழிந்து நேரடியான தொடர்புவேண்டும்.

இது படிப்பால் வாராது. யோசனை அனுபவத்தால் வரும் - ஆசிரியை;

ஆசிரியைக்குப் பிரின்சிபால் பதவி வந்துவிட்டது;

Life Response என்பதற்கு வரலாற்றில் உதாரணம் தரமுடியுமா? -

வரலாற்று ஆசிரியை;

நாம் Life Responseஐ உண்டு பண்ணலாம் - தாயார்;

360-364 பக்கங்களில் காலத்தின் மூன்றாம் நிலை The Life Divineஇல் விவரிக்கப்படுகிறது:

. யோகத்தை மேற்கொள்பவருக்குப் படிப்பு, படிப்பைக் கடக்க உதவும். படிப்புக்கு வேறு பயனில்லை.

. பிரின்சிபால் பதவிமட்டும் புரிகிறதுஎன்பவர் நிகழ்ச்சியைமட்டும் அறிபவர். Physical intelligence.

. மலருக்கு மணம் உண்டு. நுகரமுடியாதவருக்கு மலரைக் காட்டலாம். மணத்தைக் காட்டமுடியாது.

. உணரும் உறுப்பேயில்லைஎன்றால் அதற்குமேல் போகமுடியாது.

. மணத்தைக்கடந்தது அறிவு.

. Intellectuals are stupid என்கிறார் அன்னை.

. Intellect என்பதற்கு இருபுறமுண்டு. கீழ்நோக்கிமட்டும் பார்க்கும்

Intellect விஞ்ஞானியினுடையது. அது அறியாமையின் கருவி.

. Intellect மேல்நோக்கியும் பார்த்தால் insight மூலம் intuitionயை அடையும்.

. இராணுவ அதிகாரிகள், தொழிலதிபர்கள், அரசியல்தலைவர்கள், ஊரில் மத்தியஸ்தம் செய்பவர், முரட்டுக் கணவனையும் அறிவுடன் நடத்தும் அன்பை அடக்கமாகப்பெற்ற பெண் ஆகியவருக்கு insight உண்டு. *அதன் விவரம் அவர்கட்கே தெரியாது.

.Insight, intuition ஐப் பெற்று, தனக்குள்ளதை அறிந்தவர் ஷெர்லக் ஹோம்ஸ் மட்டுமே. அவரால் பிறருக்கு அதை எடுத்து விளக்க முடியவில்லை. பலனைக் காட்ட முடிந்தது.

. ஐன்ஸ்டீன் அதைப் பற்றிப் பேசினார்; விளக்க முயலவில்லை.

. Overmind ஞானமுள்ளவர் அதைப் பிறருக்கு விளக்க முடியும். அது பலன் தாராது.

. ஸ்ரீ அரவிந்தருடைய சாதகர்கள் அதைப் பெறமுடியும், விளக்க முடியும். இதுவரை எவரும் செய்ததாகத் தெரியவில்லை.

. Synthesis of Yogaவில் கடைசி 7 அத்தியாயங்கள் அவற்றை விளக்கமாகக் கூறுகின்றன. அவை யோக விளக்கம். வாழ்க்கை விளக்கமன்று. வாழ்க்கை விளக்கம் வாழ்வில் அனுபவம்பெற்றவர்க்கு* மட்டும் விளங்கும்.

. வாழ்க்கை விளக்கம் தர நமக்கு உத்தரவுண்டா? அது தவறாஎனவும் தெரியவில்லை.

. அந்த நிலையில்,

. ஒரு நிமிஷத்தில் அறையை நான்கு முறை அன்னை சுற்றிவந்தார்.

. சைனாகாரன் அவர் உத்தரவுக்குப் பணிந்து திரும்பிப் போனான்.

. கை சாப்பிட, எழுத புதியதாய்க் கற்றது.

. உடலில் உள்ள செல்ல் உள்ள மனம் செயல்பட்டது.

. கால் வீக்கம் எனக் கவனித்தால் வீக்கம் வளர்ந்தது.

. 3 நிமிஷ பூரிப்பும், 23 மணி 57 நிமிஷ வேதனையையும் உடல் அனுபவித்தது.

. புறப்பட்ட கப்பல் "ஓம்"என ஓங்காரமிட்டது.

. பட்டுப்போன மரம் தன்னை வெட்ட வேண்டாம் என முறையிட்டது.

. சிறுமுயற்சிக்குப் பெரும்பலன் வந்தது.

.சிறு தவற்றிற்குப் பெருநஷ்டம் வந்தது.

. பெருஞ்சாதனைகளை உலகுக்குத் தம்பட்டமடித்து அறிவிக்க முடியாது என்றார்.

. ஜூன் 14இல் காளி, பாரீஸ் சரணடைந்துவிட்டதுஎன அன்னையிடம் கூறியதை அன்னை ஏற்காமல் செயல்பட்டு பாரீஸைக் காப்பாற்றினார்.

. ஹிட்லரை ரஷ்யாமீது படையெடுக்கும்படி அன்னையால் கூற முடிந்தது.

. அதுவே நமக்குரிய நிலை.

என் தம்பி வரும்பொழுது பூரி டிபனிருக்கும்;

பெம்பர்லியில் எலிசபெத் மனம் மாறுவதால் மறுநாள் வரவேண்டிய டார்சி அன்றே வருகிறான்;

மாமியார் கடுமையாக இருக்கிறார் எனில் நம் மனம் அவர் மீது கடுமையாக இருக்கிறது:

. ஆட்டோமேட்டிக் பாக்டரிபோல் உலகில் எல்லா நிகழ்ச்சிகளும் மற்ற எல்லா நிகழ்ச்சிகளுடன் தொடர்பு கொண்டுள்ளன.

. எல்லா ஜீவாத்மாக்களும் மற்ற எல்லா ஜீவாத்மாக்களுள்ளிருப்பதால், எல்லா நிகழ்ச்சிகளும் மற்ற எல்லா நிகழ்ச்சிகளுடன் தொடர்புள்ளன.

. தொடர்பு தெரியாவிட்டால், அதற்குரிய சட்டங்களை நிகழ்ச்சிகளில் காணலாம். தம்பியும், பூரியும் அத்தொடர்பை விளக்கும் நிகழ்ச்சிகள்.

. நாம் அந்நிகழ்ச்சிகளைப் பூரணமாக அறியவேண்டுமானால், கவனம் அதிகம் தேவை.

. மெஷின் நுட்பமானால் சிறு அசைவுகட்கும் பலன் உண்டு; முக்கியத்துவம் உண்டு.

. "தம்பி"என்ற சொல்லை "கம்பி"என்றெழுதினால் அர்த்தம் அனர்த்தமாகும். 7 முழ வேட்டியை 7½ முழமாகவும், 8 முழமாகவும் கட்டலாம். காரியம் கெடாது. சொல் வேட்டியைவிட நுட்பமானது என்பதால் "", ""ஆக மாறினால் மனிதன் இரும்பாகிறான். Life Response புரிய பொதுப்பார்வைபோதும். நாமே Life Responseஐ ஏற்படுத்த பூரணஞானம் தேவை. சிறுவிஷயங்கட்கும் பெரிய முக்கியத்துவம் உண்டு.

. பூரி செய்யும்தோறும் தம்பி வந்தால் எளிதில் சட்டம் எவர்க்கும் புரியும்.

. காலில்பட்ட காயம் புரையோடினால் ஜூரம் வருகிறது. ஆனால், ஜூரம் வந்தால் காலில் காயம்பட்டதாகாது. ஜூரம் வர 100 காரணங்களுண்டு. இந்த ஜூரம் எந்தக் காரணத்தால் வந்தது என்பதைக் காண்பது diagnosis டாக்டருடைய திறமை.

. எந்த அறிகுறி எந்த நிகழ்ச்சியைக் காட்டுகிறது என்பதைக் கண்டுபிடிப்பது அறிவு.

. முகம் பளபள என்றிருப்பதற்குக் காரணங்கள் பல - நல்ல போஷாக்கு, படிப்பு, தெய்வபக்தி, பெரியகுடும்பத்தில் பிறந்தது, நல்லெண்ணம், அமைதியான சுபாவம் எனப் பலவுண்டு. முகம் வாடி, கன்னம் ஒட்டியிருந்தால் போஷாக்கில்லை எனத் தெரிகிறது. படபடப்பாக இருந்தால் சுபாவத்தில் அமைதியில்லை. டெய்லராக இருந்தால் படிப்பில்லை எனத் தெரிகிறது. கண்ணில் கடுமையிருந்தால் நல்லெண்ணமிருக்க முடியாது. பொய் சொல்கிறான் என்றால் தெய்வபக்திக்கு இடமில்லை. ஒருவேளை பெரியகுடும்பத்தில் பிறந்து,நொடித்துப் போனவனாக இருக்கலாம் என நினைத்தால், உடனே அவன், "என் தாத்தா ஊரையே ஆட்டிவைத்தார்"என்பான்.

. முகம் பளிச்சென இருக்கக்கூடிய அவ்வளவு காரணங்களையும் அறிந்து, எக்காரணங்கள் இவர் வாழ்விலில்லை என விலக்கினால்,மீதியைச் சொல்ல நினைத்தால் சரியாக இருக்கும்.

. இது படிப்பால் ஓரளவு வரலாம்; நுட்பத்தால் முழுவதும் வரும்.

. Life Responseஐப் புரிந்துகொள்ள நுட்பமான சூட்சுமம் வேண்டும்.

. அன்னையை அறிந்தபின் அச்சூட்சுமம் நம் மனதில் உருவாவதைக் காணலாம்.

. உள்ளூர் மனிதன் எனில் அவன் சந்தர்ப்பங்கள் நமக்குத் தெரியும்.நமக்குத் தெரிந்தவற்றுடன் நிலைமையை மின்னல்போல் அடிமனம் ஒப்பிட்டு விலக்க வேண்டியதை விலக்கிப் புரிந்து கொண்டால், புரிவது சரியாக இருக்கும்.

. எவரும் தங்கள் சூழலைப் பூரணமாக உணரமுடியும்.

எல்லோரும் சமர்ப்பணம் செய்தால், நாடே மாறிவிடுமே - பிரின்ஸ்பால்;

அன்பர்கட்கே சமர்ப்பணம் எப்பொழுதும் நினைவு வாராது - தாயார்;

சமர்ப்பணம் செய்யும்முன் கை டயல் செய்யும் - தாயார்;

1956இல் சத்தியஜீவியம் வந்தபின் இதுநாளிலில்லாத சமர்ப்பணம் இனி நமக்குண்டு:

. ஒரு காலத்தில் அனைவருக்கும் படிப்புண்டு என்று நினைக்கவும் முடியாமலிருந்தது. இன்று அது நடந்துவிட்டது.

. தாழ்த்தப்பட்டவர் படிப்பால் மற்றவருடன் சமமாகப் பழக ஆரம்பித்த பொழுது இதே கேள்வி, "எல்லோரும் படித்துவிட்டால் தீண்டாமை இருக்காதோ"என எழுந்தது.

. 500 ஆண்டுகட்கு முன் தேர்தலில் கிராம்வெல் இலண்டனில் ஆட்சிக்கு வந்தபொழுது இப்படியேபோனால் கூலிக்காரனெல்லாம் நாட்டை ஆள்வான்போலிருக்கிறதே என்பது இன்று நடந்துவிட்டது.

. அனைவரும் சமர்ப்பணத்தை மேற்கொண்டால், இன்று மனிதனுக்கு உள்ள பிரச்சினைகள் எதுவும் அன்றிருக்காது. அது முன்னேற்றம்.

. மனிதனுக்கு இயல்பாக அவனுடைய தேவைகளே நினைவுவரும். சுயநலமிக்கு எதிரி ஒருவனிருப்பதாக நினைவேயிருக்காது.

. சமர்ப்பணம் என்பது நம் வாழ்வுமையத்தை அகந்தையினின்று அன்னைக்கு மாற்றுவதாகும்.

. அன்பர் என்பதால், அன்னை நினைவு வாராது. அன்னை நினைவைவிட

சமர்ப்பணம் சிரமம்.

. சமர்ப்பணம் என்றால் தன்னை அழிப்பது.

. தான் வாழ பலவகைகளிலும் முயலும் மனிதன் தன்னை அழிக்க முன்வருவானா?

. 100 ஆண்டுகட்குமுன், 200 ஆண்டுகட்குமுன் படிப்பு என்பது வசதியான பெற்றோர் தம் குழந்தைக்குப் பாடம் சொல்லிக்கொடுக்க ஏற்பாடு செய்வதாகும்.

. பள்ளிக்கூடம் என வந்தபின் அனைவருக்கும் அவ்வசதி வந்தது.

. ஒருவருக்குள்ளது பலருக்கும் வருவது சமூகமுன்னேற்றம்.

. ஒருவரால் முடிவது அனைவராலும் முடிவது அன்னையின் ஆட்சி மக்களிடையே வேரூன்றுவதாகும்.

. மருந்து என்பது ஏற்படுமுன் ராஜாவானாலும் ஜூரம் வந்தால் போக வேண்டியதுதான்.

. மருந்து வந்தபின் வசதியுள்ளவர்க்குப் பயன்பட்டது.

. ஆஸ்பத்திரி வந்தபின் அனைவருக்கும் அவ்வசதி ஏற்பட்டது.

. காலரா வந்தால் கட்டாயமாக சிகிச்சையுண்டு.

. முன்னேற்றம், சமூகமுன்னேற்றம், தெய்வீக முன்னேற்றம் என்பவை ஒரே சட்டத்தைப் பின்பற்றுகின்றன.

. 1956இல் வந்த சத்தியஜீவியம் 1972வரை எப்படி முன்னேறியது என அன்னை கூறியுள்ளார். அதன்பின் என்ன முன்னேற்றம்என நாமறிய முடியவில்லை.

. 1878இல் அன்னை பிறந்தார். 1872இல் பகவான் அவதரித்தார். அவர்கள் பலவகைகளில் கூறியவை ஓரிழை, அதற்குமுன் 50, 100 ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருந்திருக்கிறது.

நம்மையே சமர்ப்பணம் செய்வது எப்படி?

சிந்திக்காமல் செயல்படும் பெரிய நேரங்களுண்டு. அந்த நேரம் "நாம்' செயல்படுகிறோம்;

க்ஷணத்தில் முடிவெடுக்கிறோம்;

பூரணச் சமர்ப்பணம் சரணாகதி. வாழ்வில் அது அதிர்ஷ்டம்.

யோகத்தில் அதுவே சித்தியாகும்:

. தன் குழந்தையை முதலாளி விற்கப்போகிறார் எனக் கேட்டு, குழந்தையை எல்லையை விட்டு அப்புறப்படுத்த ஓடிய தாயார் ஐஸ் மீது நடந்து வந்ததால் கால் இரணமாயிருந்ததைக் கண்டவர், "ஏன் இப்படி இரணப்படுத்திக்கொண்டாய்?"என்று கேட்டதற்குப் பதிலாக "நீங்கள் குழந்தையை இழந்ததுண்டா?"எனக் கேட்கிறாள். ஒருமுறை நம்மை அன்னையிடம் ஒப்படைத்தால் நிகழும் அற்புதம் எல்லாவற்றையும் தெளிவுபடுத்தும். அதுவரை கேள்விமேல் கேள்வி எழும்.

. நம்மையே சமர்ப்பணம் செய்ய நம்மை நாம் அறியவேண்டும். ஆன்மா விழித்து அகந்தையை நாம்என அறிந்து சமர்ப்பணம் செய்யவேண்டும்.

. சிந்திக்காமல் செயல்படும் நேரம், மனத்தை விட்டகன்று, உணர்வால் செயல்படும் நேரம்.

. அதுபோல் உணர்வையும், உடலையும் விட்டகன்று ஜீவனால் செயல் படுவதுண்டு. அந்த ஜீவன் தான் செயல்படுவதற்குப்பதிலாக தன்னைப் பரமாத்மாவிடம் ஒப்படைப்பது சரணாகதி.

. க்ஷணத்தில் முடிவெடுக்கும் நேரம் காலத்தைக் கடந்தது.

. அதிர்ஷ்டம் என்பது நம் வாழ்வை அன்னை நடத்துவது.

. சித்தி என்பது நம் ஜீவனை அன்னை தம் கருவியாக்குவது.பட்டினி கிடந்தவர் சோற்றுக்கு ஏங்குவது உடலே கெஞ்சுவதாகும். பாசத்தைப் பெறாதவர் அன்பிற்கு ஏங்குவது பார்க்கப் பரிதாபமாக இருக்கும். தெளிவைத் தேடி மனம் அலைவது பார்க்க நன்றாக இருக்கும். ஆத்மா விடுதலையை நாடி முயல்வது தவம். பிரம்மம் மனிதனில் பிரம்மானந்தத்தை வெளிப்படுத்தத் துடிப்பது பரிணாம முயற்சி. இறைவனை அறியாதவர் பலர். இறைவன் என்றொருவன் இருக்கிறான் என அறிந்த பிறகு அவனையடைய ஆத்மா படும் வேதனை இன்பமானது. பிரம்ம ஜனனத்தை அறிந்து, அதை நாடுவது பரிணாம வேட்கை. அது எழுவது ஆனந்தம். உலகம் இதுவரை அறியாத ஆனந்தம்.

. பாசம் பிள்ளையின் குறையை மறைக்கிறது. பக்தி குறையென உலகம் இறைவனில் காண்பதை நிறையெனக் கண்டு மலர்கிறது.

. புரிவது எளிமையானால், செய்வது கடினம்.

. தெரிய நாளாகும்; செய்ய யுகமாகும்.

. மறைந்த இறைவன் - பிரம்மம் - மறைந்ததை மறந்த நிலையிலிருந்து நினைவுபடுத்துவது ஞானம்.

அந்த ஞானம் தரும் ஆனந்தம் பரிணாம ஆனந்தம்.

சிருஷ்டி அதற்காக ஏற்பட்டது.

. நாம் நாமாக இருப்பதை வேரோடு சுவைத்து இரசிப்பது taste of ignorance அறியாமை இருக்கும்வரை வாழ்வு. அறிவு ருசிப்பது யோகம்.

. அறியாமை அறிவைக் காண்பது சமர்ப்பணம். அடைய முயல்வது சரணாகதி.

தொடரும்.....


 

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்

நாம் பரம்பொருளை எண்ணத்தால் அறிய முயல்கிறோம்.எண்ணம் பரம்பொருளை விளக்கும் கருத்தை அறியும். ஒரு சிறப்பான (unique) எண்ணம் அனந்தனை அறியலாம். மனத்தால் பரம்பொருளைப் பார்க்கலாம். அதற்கு மனம் தன்நிலையில் பரம்பொருளை எட்டவேண்டும். அதாவது, சத்தியஜீவியத்துடன் தன் முந்தையத் தொடர்பை மீண்டும் பெற்று, அங்கிருந்து தன் ஆதியான ஜீவியத்தை அடைந்து, தன்னையறிவதை நிறுத்தி, சத்தியமாகி, பின்னர் சத்திலிருந்து விலகிப் பரம்பொருளைத் தொடவேண்டும்.

மனம் வழி பிரம்மத்தை அடையும் வழி.

புதிய வெளியீடுகள்

 

கர்மயோகியின் 

 

மனித சுபாவம்


 ரூ.200/-
 

சொசைட்டியின் பிற வெளியீடுகள்


 லைப் டிவைன் விரிவுரைகள் ரூ.100.00

தமிழாக்கம்: என்.அசோகன்


 பிரம்ம ஜனனம் ரூ.100.00

வசந்தா


 


 


 book | by Dr. Radut