Skip to Content

05.மனமாற்றம்

"அன்னை இலக்கியம்"

மனமாற்றம்

                                             (சென்ற இதழின் தொடர்ச்சி....)                 இல. சுந்தரி

ஆக, விஷயம் சுலபமாகிவிட்டது. முனியனுக்குப் பசு வாங்கிக் கொடுப்பது என்றும், அவன் பணத்தைச் சிறிது, சிறிதாகத் தரவும், நல்ல பால் தரவும் முடிவானது.

"முனியா! உனக்குப் பசு வாங்கித் தருகிறோம். நல்ல பாலாகக் கொடு''என்றேன்.

"ஆகா! இந்தக் காலத்தில் இப்படிக்கூடச் செய்வார்களா?''என்று சந்தோஷப்பட்டான் முனியன்.

அப்போது என் கணவரின் நண்பர், நீண்டநாட்களுக்குப் பிறகு வந்தார். எங்கள் பால் பிரச்சினை, அதன் தீர்வுஎல்லாம் கேட்டறிந்தார். தாமே, தம் பொறுப்பில் வங்கிக்கடன் வாங்கி, பசு வாங்க உதவுவதாய்க் கூறினார். முனியனுக்கு ஒரே மகிழ்ச்சி. விரைவில் ஒன்றுக்கு இரண்டு பசுக்கள் வாங்கிவிட்டான். கடனுதவிக்கு ஏற்பாடு செய்தோம்என்று நன்றியுடன் நல்ல பால் தினமும் தருகிறான். நகையும் விற்கப்படவில்லை. அன்னை கேட்பதைவிட அதிகமாய்த் தருவார்என்பது உண்மைதான். எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை என்று நெகிழ்ந்தார்.

அடுத்தது சிறப்புச் சொற்பொழிவு. அதன் சாரமாக, அவள் அன்று புரிந்துகொண்டவை:

அன்னை முறைகள் எல்லாம் வாழ்வு முறையிலிருந்து மாறுபட்டவை. யாரிடமேனும் குற்றம் கண்டால் நாம் அவரைக் குறைகூறுவது வழக்கம். ஆனால், பிறர் குறையைக் கூறுவது அன்னைக்குப் பிடிக்காது. அது மட்டுமன்று, நம் குறையே பிறரிடம் பிரதிபலிப்பதாகக் காணவேண்டும். தன்னைத் திருத்திக்கொண்டால், சூழலும் திருந்திவிடும். பொய் சொல்ல மறுப்பதும், பிறர் குறையைக் கூறமுடியாத நிலையும், தந்திரயுக்தியால் பலனை நாடுவதில்லை என உறுதிகொள்வதும் அருளை ஏற்கும் பாங்கு.

கோபம், படபடப்பு, அவசரம், பொறாமை, சில்லறை மனப்பான்மை,போட்டி மனப்பான்மை, நாலுபேரைப்போல நடந்துகொள்வது, கீழ்த்தரமான பொழுதுபோக்குகள், ஜாதகம், குறிகேட்பது, இராகுகாலம் பார்ப்பது, மூடநம்பிக்கை, விழாக்கொண்டாடுதல், மேளதாளம், தடபுடல்,ஆரவாரம், ஆடம்பரம், கோபம், வன்மம், பழிவாங்குதல் ஆகியவை மனிதவாழ்வை நிரப்பியுள்ளன. இவை நமக்கு வறுமை, சிறுமையை அளிக்கின்றன.

சாந்தம், நிதானம், பொறுமை, பெருந்தன்மை, உயர்ந்தகுணம்,உதவிமனப்பான்மை, நல்லதைச்செய்தல், மூடநம்பிக்கையை விலக்கல், அமைதி, அடக்கம், எளிமை, இனிமை ஆகியவை நிறைந்தது அன்னை வாழ்வு. அவை நமக்குச் செல்வத்தையும், பெருமையையும் தரும். இதுவே அன்னை வழிபாடு. இவற்றால் அன்னையை நெருங்கமுடியும். நெருங்கினால் பேரானந்தம் உண்டு.

இப்பேச்சைக் கேட்டதும், மாதவி எங்கேனும் தென்படுகிறாளா என்று தேடினாள் ஆஷா. முன்பக்கத்தில் ஆடாது, அசையாது கவனமாய்ப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தாள் மாதவி. சென்றமுறை அவள் வந்திருந்ததை மிஸ்ஸிடம் கூறியபோது அவள் எப்போதும் வருவாள் என்று மிஸ் கூறியது நினைவுக்குவந்தது. இப்படியொரு 'சத்' விஷயம் பேசுமிடத்திற்கு அவள் முன்பே வந்து கொண்டிருக்கிறாள். இன்றைய நிகழ்ச்சிகள் ஆஷாவை எவ்வளவோ மாற்றியிருந்தன. மாதவியின் குணத்திற்கும், நடத்தைக்கும் இந்த சத்சங்கம்தான் காரணமோ.கணக்கு மிஸ் செய்த தவற்றைப் பலர் முன்னிலையில் எடுத்துச்சொன்ன தன் செயலையும், தவறுஎன்று தெரிந்தும் பலர்முன் கூறாது அமைதியாக இருந்த மாதவியின் செயலையும் எண்ணி வெட்கப்பட்டுக்கொண்டாள். மாதவியைக்கண்டு தான் பொறாமைப்பட்டது தவறு என்று உணர்ந்தாள். அவளை மட்டம்தட்ட தான் கருதியது கேவலம் என்றுணர்ந்தாள்.

மறுநாள் வகுப்பிற்குப் புதிய ஆஷாவாய் வந்தாள். குட்மார்னிங் பிரெண்ட்ஸ் என்று வகுப்பில் நுழைந்தாள். திரும்ப அவளுக்கு எல்லோரும் குட்மார்னிங் சொன்னார்கள்.

நேரே மாதவியிடம் போனாள் ஆஷா. "மாதவி! நேற்று தியானமையத்தில் உன்னைப் பார்த்தேன்''என்றாள்.

"அப்படியா! நீ வந்திருந்தாயா? கூட்டத்தில் நான் உன்னைப் பார்க்கவில்லை''என்றாள் மாதவி.

"நானும் மிஸ் கூட வந்ததால் உன்னைப் பார்த்துப் பேசமுடியவில்லை.மேலும் அங்கு ஒருவரும் பேசிக்கொள்ளாதது வியப்பாயிருந்தது''என்றாள் ஆஷா.

"ஆமாம். அங்கு அமைதியான சூழலைக் காப்பது முக்கியம். எனவே,யாரும் பேசிக்கொள்வதில்லை''என்றாள் மாதவி.

"அப்படியென்றால் முன்பே உனக்குத் தியானமையம் தெரியுமா?''என்றாள் மாதவி.

"ஆமாம் ஆஷா! சிறுவயதுமுதலே பழக்கம். கடவுள் என்று என் அம்மா எனக்குக் காட்டியது ஸ்ரீ அன்னையைத்தான்''என்றாள் மாதவி.

"அப்படியென்றால், நீ கோவில்களுக்கெல்லாம் போனதில்லையா?''என்றாள் ஆஷா.

"அன்னையை ஏற்றவர்கள் அவர் கோட்பாடுகளை வாழ்வில் ஏற்று வாழ்வதே சிறப்பு என்று என் அம்மா சிறுவயதுமுதலே சொல்வார்.அதனால் எனக்கு வேறு வழிபாடுகளே பழக்கமில்லை''என்றாள் மாதவி.

"அன்னையின் கோட்பாடு என்று நீ எதைச் சொல்கிறாய்?''என்றாள் ஆஷா.

"உண்மை, நேர்மை, செய்யும் செயல்களில் பூரணஈடுபாடு, குறைகூற மறுப்பது, சுத்தமாக இருப்பது, சத்தமின்றி உரையாடுவது, கர்வமில்லாமல் இருப்பது, சோம்பலைத் தவிர்ப்பது, எந்த நிலையிலும் அன்னையையே சார்ந்திருப்பது. இவையெல்லாம்தான் என் பெற்றோர் கற்றுக்கொடுத்தது'' என்றாள் மாதவி.

"நீ ஏன் அன்னையைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லை?'' என்றாள் ஆஷா.

"வாய்ப்பு வரும்போது மட்டுமே சொல்லலாம். நாமே எதுவும் வலிய சொல்லக் கூடாது என்பதால் ஒன்றும் சொல்லவில்லை'' என்றாள்.

"மாதவி! நான் உன்னிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.நான் உன்னை வகுப்புத் தோழியாய் எண்ணாமல் அன்னை அன்பராய்க் காண நினைக்கிறேன்''என்றாள் ஆஷா.

"மற்றவர்களிடையே உள்ள அன்னை அம்சத்துடன் நாம் தொடர்பு கொள்வது பக்தர்களுக்கு உயர்ந்தநிலை என்று கூறப்பட்டிருக்கிறது.ஒருவருடைய புண்ணியம் மற்றவருக்குக் கிடைப்பதுடன், ஒருவருடைய குறைகள் மற்றவரைப் பாதிக்காது'' என்றாள் மாதவி.

அன்னையில் சந்திப்பது உயர்ந்த நட்பாயிற்றே.

இவர்கள் இருவரும் மெல்லியகுரலில், தம்மைமறந்து உரையாடுவதை வகுப்பே வியப்புடன் பார்த்தது.

"என்ன ஆஷா! ஒரேயடியாய் மாதவியிடம் ஒட்டிக்கொள்கிறாய்'' என்றாள் ஒருத்தி.

"மாதவியிடம் இல்லை. அவளிடம் உள்ள அன்னையுடன் ஒட்டிக்கொள்ளப் பார்க்கிறேன்'' என்றாள் ஆஷா.

பழைய கர்வம், குத்தல்பேச்சு எதுவுமில்லை. அவள் குரலில் ஆர்வமிருந்தது.

மறுநாள் வகுப்புத் தொடங்குமுன் மாதவியைப் பார்த்த ஆஷா புன்னகையுடன் அருகில் வந்தாள்.

"வா ஆஷா!'' என்றாள் மாதவி.

"நீ நேற்று தியானமையம் சென்றிருந்தாயா, மாதவி?''என்றாள் ஆஷா.

"! சென்றேனே'' என்றாள் மாதவி.

"எனக்கும் தினமும் தியானத்தில் கலந்துகொள்ள ஆவல். அங்கு வந்தபிறகு என் சுபாவம் மாறியிருப்பது எனக்கே தெரிகிறது. அந்த சக்தி அற்புதசக்தி என்றும் நம்புகிறேன். வீடு எட்ட இருப்பதால், வருவது பற்றி தயக்கமாயிருக்கிறது''என்றாள் ஆஷா.

"உண்மையான பிரார்த்தனைகளை அன்னை நிச்சயம் நிறைவேற்றுவார். நீ அன்னையிடம் பிரார்த்தித்துக்கொள். உனக்காக நானும் பிரார்த்திக்கிறேன்''என்றாள் மாதவி.

அதற்குள் தோழியர்கூட்டம் அவர்களைச் சுற்றிக்கூடியது. "என்ன ஆஷா, மாதவி! இருவரும் ஏதோ முக்கிய விஷயம் பேசுகிறீர்கள் போலிருக்கிற\து. நாங்களும் அதில் கலந்துகொள்ளலாமா? உங்கள் சொந்தவிஷயமா?''என்றாள் பானு.

"பானு! முதலில் நம் வகுப்பில் இனி இரண்டு கட்சிகள் கிடையாது. தலைவியும் கிடையாது. நாங்கள் பேசும் விஷயம் எங்கள் இருவர் சம்பந்தப்பட்ட விஷயமில்லை. மனிதகுலம் சம்பந்தப்பட்டது''என்றாள் ஆஷா.

"அப்படியென்றால், மனிதகுலத்தைச் சேர்ந்த நாங்களும் உங்களுடன் அந்த விஷயத்தில் கலந்துகொள்ளலாம் என்று சொல்''எனக் கேலி செய்தாள் லீலா.

"ஆமாம் லீலா! இதை நான் விளையாட்டிற்குச் சொல்லவில்லை. நிஜமாகத்தான் சொல்கிறேன்''என்றாள் ஆஷா.

திடீரென்று ஆஷாவின் பேச்சில், பாவனையில் ஒரு மாறுதல் நேர்ந்திருப்பது எல்லோர்க்கும் தெரிந்தது. அப்போது தான் வகுப்பிற்கு வந்த பிரியா எல்லோரும் கூடியிருப்பதைப் பார்த்தாள். எப்பொழுதும், மாதவி தனியாக ஏதேனும் எழுதிக்கொண்டும், படித்துக்கொண்டும் இருப்பாள். ஆஷாவும், தோழிகளும் ஓரிடத்தில்கூடி யாரையேனும் கிண்டலடித்துக் கொண்டு இருப்பார்கள். ஆனால் இன்று, ஆஷாவும்,மாதவியும் ஒன்றாய் இருக்கத் தோழியர் அவர்களைச் சூழ்ந்து புன்சிரிப்புடன் காணப்பட்டதுவித்தியாசமாயும், மகிழ்ச்சியாயுமிருந்தது. ஒவ்வொரு முறையும் வகுப்பிற்கு வரும்போது, "என்ன சூழல் இருக்குமோ, ஆஷா ஏதேனும் கேலிசெய்வாளோ" என்று பிரியா அஞ்சிக்கொண்டே வருவாள். இன்று மாறிய சூழ்நிலை அவளை மகிழ்வுடன் வரவேற்றது.


 

தொடரும்.......

 

*******


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டு, கம்பளிப்பூச்சியைப்போல் கூட்டிலிருக்கும் நிலையில் சட்டத்தை மீறினால், அது முழுஅழிவைத் தரும்.

சட்டம் கட்டுப்பாட்டுக்குரியது.


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனத்தை சத்தியஜீவியத்திற்கு நேரடியாக உயர்த்தும் அரிதான செயலை நிகழ்த்த, முறைகளைக் கைவிடவேண்டும். இடையேயுள்ள நிலைகளின் அமைப்பைக் கடந்துசெல்ல, முறைகள் பயன்படும். அவை மௌனத்தில் கரைந்தால் மனம் நேரடியாக சத்தியஜீவியத்தைத் தொடும்.

நேரடியாக மனம் சத்தியஜீவியத்தை அடையமுடியுமென்றாலும்,

அது அரிது.


 


 


 


 


 book | by Dr. Radut