Skip to Content

08.யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V

                                                 (சென்ற இதழின் தொடர்ச்சி....)                       கர்மயோகி

851) நாட்டில் செல்வர் சிலர் ஒரு புது ஃபாஷனை ஏற்றுக் கொண்டால், அது சீக்கிரம் நாடு முழுவதும் பரவுவது, பகவான் 12 பேர்கள் சத்தியஜீவியத்தைப் பெற்றால் பூமியே மாறிவிடும்என்பதுபோலுள்ளது.

உலகம் என்பது 12 உயர்ந்தோர்மாட்டே.

. நாட்டில் ஃபாஷன் பரவுவது அதிவேகம். அந்த வேகத்திற்கு இணையில்லை.

.அரசன் எவ்வழி, குடிமக்கள் அவ்வழிஎன அரசன் செய்ததை உலகம் செய்தது.

. அது அதிகாரம். இன்றுவரை அது ஏதோ ஓரளவில் தொடர்கிறது.

. அதிகாரம்என்ற பதவி, இடம் மாறி பணத்திற்கு அந்த மரியாதை வந்தது.

. அதிலிருந்து பணக்காரன் செய்வதை உலகம் செய்ய ஆரம்பித்தது.

. நம் நாட்டில் துறவிக்கும் அந்த உயர்வு இருந்தது.

. அதனால் துறவியைப் போல் உயர்ந்த மக்கள் - அரசன் உள்பட - சில அம்சங்களில் வாழ ஆரம்பித்தனர்.

. அரசன் உள்பட துறவியைப்போல் நீறு பூசினர். தாழ்ந்த குரலில் பேசினர்.

. மெதுவாக நடந்தனர். இருந்த இடத்தைவிட்டு வெளியே போக மறுத்தனர்.

. எளியவாழ்வை நடத்தினர்.

. சமூகம் பணக்காரனை உயர்வாகக் கருதி, அவனைப்போல் நடையுடை பாவனையை ஏற்றது.

. ஆங்கிலேய ஆட்சியில் இலண்டனுக்குப் போவது, கோட்சூட் போட்டுக் கொள்வது, இலண்டனில் பிள்ளைகளைப் படிக்கவைப்பது, காப்பி சாப்பிடுவது, கிராப் வெட்டிக்கொள்வது உயர்ந்ததாக நாடு முழுவதும் பரவியது.

. இன்று பணக்கார நாடான அமெரிக்கா உலகத்தலைவனாக விளங்குவதால், உலகெங்கும் அமெரிக்க நாகரீகம் பரவுகிறது.

. சத்தியம் உயர்ந்தது; கர்மத்தை வெல்லவேண்டும்; வாழ்வின் பிடியிலிருந்து விடுபடவேண்டும்; ஆன்மா வெளிவரவேண்டும்; ஆன்மா ஜடத்தை ஆளவேண்டும்; வாழ்வில் நோய், துன்பம் கூடாது; என்பவை உயர்ந்தவையாகக் கருதப்படவில்லை. அப்படி வாழ்பவரில்லை. அப்படி 12பேரிருந்தால் மரணத்தையும் வெல்லலாம். பொய்ம்மை அழியும். அவரை உலகம் உயர்ந்தவராகக் கருதினால் உலகம் எளிதில் அவர்களைப் பின்பற்றும்.

. உலகம் மரணத்தை வெல்ல உயர்ந்தோர் 100 பேர்கள் முன்வந்தால் அல்லது 12 பேர்களாவது முன்வந்தால், உலகம் அவர்களை ஏற்கும்.

. உலகம் அவர்களை ஏற்க, உலகம் அவர்களை ஏற்கும் தகுதிபெற்றவராக இருக்கவேண்டும்.

. உயர்ந்தோரை உலகம் ஏற்கும்.

. உயர்ந்தோர் பகவானை ஏற்றால், உலகம் ஸ்ரீ அரவிந்தரை ஏற்கும்.

*******

852. சிந்திக்காமல் புரிவது மனத்தின் உயர்வானால், உணர்வுக்கு அது போன்றது எது என அறிந்து செய்தால், உணர்வு முனிவர் மனத்தைப் பெறும். உணர்வு வெளிப்படையாகச் செயல்படாமல் சாதிப்பது அதுபோன்றது.

சலனமற்ற உணர்வு முனிவருக்குரியது.

. மேடைப்பேச்சாளர் கடுமையான கேள்விக்கு யோசனை செய்ய நேரமில்லாமல் கூறிய பதில் அவரை அன்று முதல் பெரிய மனிதனாக்கியது.

. பேச்சாளர்கள் பல கேள்விகட்குப் பதில் தயாராக வைத்து இருப்பார்கள்.

. எதிர்பாராத கேள்வி பேச்சாளரை மடக்கிவிடும்.

. கேள்விக்குப் பதில் சொல்லுமுன் சிந்திக்க நேரமிருக்காது.

. பொதுவாகச் சிந்திக்காமல் சொல்லும் பதில் சிக்கலில் முடியும்.

. சிந்திக்க நேரமில்லாவிட்டாலும், நிதானமாகப் பதில் சொன்னால் பதில் சிந்தித்துச் சொல்லக் கூடியதைவிட உயர்வாக அமையும்.

. நிதானம் ஆன்மாவைச் செயல்படச் செய்கிறது.

. ஆன்மா மனம்வழி செயல்படுவதால் ஏற்படும் பெருநிகழ்ச்சியிது.

. ஆன்மா உணர்வு வழி செயல்படுவது அதனினும் பெரியது என்பதால்,

இந்நிலையை எட்டியவர் அடுத்த உணர்வு நிலையையும் எட்ட முயலலாம்.

. 15 வயது பையன் அரசியல் கூட்டத்தில் 17 வயதுப் பையனைக் கண்டான். அவனுடைய வசீகரம் கவர்ந்தது. யார் என விசாரித்தான். எங்கிருப்பதாகக் கேட்டான். ஏன் என் வீட்டுக்குப் பக்கத்தில் குடி வரக்கூடாது என்றான். அவனும் ஏற்றான். அது 30 ஆண்டு நட்பாயிற்று.

. உணர்ச்சி நிறைந்த நேரம் சிந்திக்க முடியாது.

. அப்பொழுது எடுத்த முடிவு நெடுநாள் நிலைப்பதை வாழ்வில் காணலாம்.

. வாழ்வில் நெடுநாள் நீடிக்கும் முடிவை எடுக்க உணர்வால் நிறைந்த நேரம் சரியான நேரம்.

. முனிவருக்குரியது மௌனம்.

. உணர்வுக்கும் மௌனமுண்டு.

. அது சிந்தனைக்குரிய மௌனத்தை விட உயர்ந்தது.

. அம்மௌனம் முனிவர் முதிர்ந்து ரிஷியாகும் மௌனம்.

. சத்தியஜீவிய மௌனம் உடலுணர்வுக்குரியது.

. அதுவே மௌனத்தின் சிகரம்.

. அம்மௌனத்தைப் பெற்றவரால் மற்ற ரிஷிகளைப்போல் சபிக்க முடியாது.

. மனிதநிலை தாழ்ந்ததானாலும், எந்த உயர்ந்த நிலையும் மின்னல்போல் அவனுக்குச் சித்திப்பதுண்டு.

. சிந்தனையையும், உணர்வையும் கடந்த மௌனம் வாழ்வை நெறிப்படுத்த வல்லது.

தொடரும்.....


 

*******

ஜீவிய மணி

முனையில் முழுவதும் தெரியும்.

 

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

நன்றும், தீதும் மனத்தின் தார்மீக நிலைக்குரியன.வலியும், சந்தோஷமும் உணர்வுக்கும், உடலுக்கும் உரியன. வலியை (ஆனந்தமாகவும்) சந்தோஷமாகவும், சொரணையைச் சொரணையில்லாததாகவும் அறிவது உணர்விலும், உடலிலும் இந்தப் புதிய திருவுருமாற்றத்திற்குரிய நோக்கமாகும்.

உடலறியும் சத்தியஜீவியம் வலியை ஆனந்தமாக்கும்.

 

 


 



book | by Dr. Radut