Skip to Content

11. அன்னை இலக்கியம்

"அன்னை இலக்கியம்"

மலரும் மணமும்

(நவம்பர் 2007 இதழின் தொடர்ச்சி....)

மகேஸ்வரி

"அக்கா, இன்று அரசைப் பார்த்தேன்''.

"எந்த அரசு, மல்கை?'' என்று கேட்டாள் முல்லை.

"முல்லையக்கா, ஒரு பழமொழி தெரியுமல்லவா? "தூங்குபவர்களை எழுப்பிவிடலாம். ஆனால் தூங்குபவர்களைப்போல் நடிப்பவர்களை எழுப்ப எந்தவொரு வழியும் இல்லை', தெரியுமா? எனக்கு, உனக்கு தெரிந்த ஒரே ஒரு அரசு, தென்னரசு. இப்பொழுது நினைவிற்கு வருகிறதா?'' 
 

"மறந்தால்தானே நினைவுக்கு கொண்டு வர' என்ற மனதின் குரலை மறக்கடித்த முல்லை, "ரோஜாக்கா வீட்டு அன்னை தியானத்திற்கு நேரமாகவில்லையா? வா, நானும் உன்கூட வருகிறேன்'' என்று சம்பந்தமில்லாமல் பேசினாள்

"அக்கா, இன்றைக்கு நீ தியானம் செய்ய இயலாது. உன் வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கிறது. இந்த நிலையில், வேண்டுமானால்

"Peace Mother' என calling (அழைப்பு) செய்யலாம். இல்லை, past consecration செய்ய முடிந்தால், என்னுடன் தைரியமாகப் பேசக்கூட முடியும். நீயாக முகத்தை மூடிக்கொண்டால், அதை என்னால் விலக்கிவிட முடியும். கழற்ற முடியாத கவசத்தை மாட்டிக் கொண்டால், அதைத் திறப்பதற்கு ஒரே வழி அன்னைதான். ஆனால், அதையும் நீயே விரும்பி கேட்டாலொழிய, அவர்களும் செய்ய மாட்டார்கள், தெரியுமல்லவா?'' 

"இன்றைக்கு நீயென்ன "தெரியுமா?, தெரியுமல்லவா?' என்ற இரு வார்த்தைகளை வைத்துப் பேசப்போவதாக யாரிடமாவது சொல்லி இருக்கின்றாயா? ஏதாவது போட்டியில் கலந்துகொள்வதற்கு ஒத்திகையா?'' 

"வா, வா போகலாம்''. 

தியானத்திற்கு உட்கார்ந்த முல்லையின் மனது அவள் வசம் இல்லை. தாயின் மடியிலிருந்து நழுவி ஓடும் இரண்டு வயது குழந்தையைப்போல் ஓரிடத்தில் இல்லாமல், "புதியதாக நடக்கக் கிடைத்த சுதந்திரத்தை இன்றைக்கே முழுவதும் அனுபவித்துத் தீர்த்துவிட வேண்டும்' என்பதைப் போல் தாவித் தாவி சென்றுகொண்டே இருந்தது. "அன்னையின் நினைவு வேண்டும். அன்னையின் நினைவு மட்டுமே வேண்டும்' என்று பிடித்து நிறுத்தி, ஒரு பத்து தடவைகள் சொல்ல ஆரம்பித்தால், பதினொரு தடவை பசுவின் மடியைத் தேடி ஓடும் கன்றுக்குட்டியைப்போல் அவளையும் அறியாமல் எங்கே ஓடியது. அன்னையின் நினைவு எல்லாவற்றையும் விடச் சிறந்ததுஎன்று சொன்னாலும்கூட, அதற்கும் கீழே ஒரு மனது எதையெதையோ நினைத்தது. எதையும் நினைக்கக்கூடாது, Mother, Mother என்று விடாமல் சொல்ல முயன்ற முல்லை, சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் குழந்தை தெருவில் மேள சத்தத்தைக் கேட்டவுடன், வாயில் வைத்ததைக்கூட விழுங்காமல் உப்பிய முகத்துடன், என்னவென்று அறியும் ஆவலுடன் ஓடுவதைப்போன்று மனது கூப்பிட்டுக்கொண்டு இருப்பதை விடாமல், ஆனால் அதே சமயத்தில் அதனுடன் ஒட்டாமல், குடுகுடுவென்று வேறு எதையோ பிடிக்க ஓடியது. சடுகுடு ஆட்டத்தில் போராடி களைத்தவர்கள் ஓரிடத்தில் நின்று மூச்சு வாங்குவதைப் போன்று முல்லையின் மனதும் அரசில் - தென்னரசுவில் - மூச்சு விட்டுக்கொண்டிருந்தது. எத்தனை வருடங்கள்? ஆனால் மனதுக்கு மட்டும் வருடங்களை ஒரு நொடியில் கணக்கில்லாமல் முன்னேயும், பின்னேயும் போகச் செய்யும் காலச் சக்கரத் தன்மை கொண்டதல்லவா? அது நினைத்தால், காலத்தை நிறுத்தும், வேகமாக ஓடச் செய்யும். அது விளையாடும் விளையாட்டிற்கு அளவேயில்லை. எல்லோருமே அடிமைகளாக இருக்கின்றோம். மனதுடன் சேர்ந்து கொண்டாட முல்லைக்கு முடியவில்லை. மூச்சை இழுத்துவிட்டு, அதன் போக்கில் விட்டுவிட்டாள்.

களைத்துச் சலித்துகொண்டே மனது ஒரு நிலையில் நின்றது. அதே சமயத்தில் முல்லையும் Peace Mother என தொடர்ந்து அழைக்க ஆரம்பித்தாள். ஒரு மணி நேரம் பறந்து சென்றது

தியானம் முடிந்தவுடன் வயிற்றுக்கு என்றுமே அன்னை பிரசாதம் வழக்கமாக ரோஜாவின் வீட்டிலுண்டு. சாப்பிடும்பொழுது பிரசாதத்திற்கு உரிய மரியாதையுடன், பயபக்தியுடன் இருந்தாலும் முல்லையின் மனது மீண்டும் முன்னே, பின்னே ஓடியது. மல்கைக்கு எதை எப்பொழுது சொல்ல வேண்டுமென்று தெரியாது. தியானத்திற்குப் பின்னால் சொல்லியிருக்கக்கூடாதாஎன்று மல்லிகையின் மீது குற்றம்சாட்டியது. இவன் எப்படி அவள் கண்ணில் பட்டான்? இனியொரு தடவை மூடிய அத்தியாயம் திறக்கவே திறக்காதுஎன்று நம்பியது வீண்தானோ? மல்லிகையுடன் ஏதாவது பேசியிருப்பானோ?

பார்த்தேன் என்றுதானே சொன்னாள்; பேசினேன் என்று சொல்லவில்லையே. அவனைப் பார்த்திருக்கமாட்டாள். அவன் சாயல் ஒருவரைப் பார்த்து, அவன் என்று நினைத்துச் சொல்லிவிட்டாள். மதரைத் தவிர வேறெதையும் நினைக்கக்கூடாது. முடிந்து போனதைப் பற்றி நினைக்கக்கூடாது.

"என்ன முல்லை, நீயாகவே தலையை ஆட்டிக்கொள்கிறாய்? ஏதாவது சுவாரசியமான விஷயமா? பகிர்ந்துகொள்ளக்கூடியதென்றால் சொல்லலாம்'' என்று ரோஜா பேச

"அக்கா, முல்லையிடம் இன்று மட்டும் எதையும் கேட்காதீர்கள். நான்தான் கொளுத்திப்போட்டேன். எனக்குத் தூக்கமே இன்று வாராது. ஆனால் அவளுக்குத் தேவையான விஷயம். நானும் பல முறை அன்னையிடம் சொல்லி, சமர்ப்பணம் செய்துவிட்டுத்தான் சொன்னேன். என் மனது அவளிடம் சொல்லும்பொழுது அன்னையின் நினைவுடன் இருந்தது''. 

"பூடகமாக இருக்கிறது உன் பேச்சு. ஏதோ அக்காதங்கைக்குள் இருக்கும் போலிருக்கிறது'' என்ற முகுந்தன், ரோஜாவுக்கு சைகை செய்தான்

"அக்கா, தங்கையென்ற உறவைவிட அன்னையை அறிந்தவர்கள், ஏற்றுக்கொண்டவர்கள்என்ற உறவுமுறையில் நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்கிறோம். என்னைப் பொருத்தவரையில் வயதில் என்னைவிடச் சிறியவளாக மல்லிகை இருந்தாலும், அன்னை உறவை பொருத்தவரையில் அவளுக்கு நான் தங்கை'' என்றாள் முல்லை

"வயது, அந்தஸ்து, பணம், உறவு ஆகிய எல்லாமே அன்னை மீதுள்ள நம்பிக்கை, பக்தியை நிர்ணயம் செய்யக்கூடியவை கிடையாதே! சொல்லப்போனால், எனக்கு ரோஜாதான் குரு. மனைவி என்ற இடத்திலிருந்து அவளை அன்னையென்ற நிலையில்தான் வைத்து இருக்கின்றேன். அதனால் எப்பொழுதுமே சாதாரணப் பேச்சு என்ற இடமேயில்லாமல் அன்னையிடமிருந்து வருபவைஎன்று ஏற்றுக் கொள்வதால் எல்லாமே உடன்பாடாகத்தான் இருக்கும். முரண்பாடு என்ற பேச்சிற்கே இடமேயில்லை எங்கள் வீட்டில்'' என்ற முகுந்தன் ரோஜாவைப் பார்த்து, "அப்படித்தானே ரோஜா!''

"அவர் சொல்வது சரி. நானும் அவரை என் கணவர்என்று பார்ப்பதில்லை. என்னுடைய அன்னை அவர். எனக்குரியதை, எனக்குத் தேவையானதைத்தான் அன்னை சொல்கிறார்என்று ஏற்றுக் கொள்வேன். கணவன்-மனைவி, மகன்-தந்தை, மகள்-தாய் உறவில் முரண்பாடுகள் அதிகமாக இருக்கும். ஆனால், அன்னையை ஏற்றுக் கொண்டபிறகு பகவான் சொன்ன "முரண்பாடே உடன்பாடாகும்' என்ற தத்துவம் எங்கள் வாழ்க்கையில் நடைமுறை உண்மையாக மாறிவிட்டது''.

"ஏனக்கா, சந்தேகத்தைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்''.

"சந்தேகமென்பது ஒரு வியாதி; சற்று கடுமையானது; தீர்க்கக் கூடியதுதான். எனக்கு இவ்வளவுதான் தெரியும். அன்னையும், பகவானும் என்ன சொல்லியிருக்கின்றார்கள் என்பதெல்லாம் அவருக்குத்தான் தெரியும். நான் படித்தாலும், நினைவில் வைத்துச் சொல்லத் தெரியாது. நீங்கள் முல்லையின் சந்தேகத்தைத் தீர்த்து வையுங்கள்'' என்றாள் ரோஜா

பகவான் விலக்க வேண்டிய விஷயங்களில் உடலுக்குரியதாகச் சந்தேகத்தை வைத்துள்ளார். ஒருவர் மனதில் சந்தேகம்என்ற பேய் ஏற்பட்டுவிட்டால், அது உடலைத் தாங்கியிருக்கும் உயிர் அழியும்வரை கூட அழியாது. சொல்லப்போனால், இறந்தபின்கூட அவர்கள் பயன்படுத்திய பொருள்களின்மீது ஒரு திரையைப் போல் படர்ந்திருந்து சந்தேகத்தை வெளிப்படுத்தும். கர்வம் சந்தேகத்தைத் தனக்கேற்ற கருவியாக ஏற்றுக்கொண்டு, அது அழியவிடாமல் பார்த்துக் கொள்ளும். சந்தேகம்என்ற குணம் முன்னேற்றத்தைக் கொண்டு வர விடாமல் தடுத்துக்கொண்டே இருக்கும். அதை வளரவிடக்கூடாது. பாதரசத்தில் போட்ட தங்கத்தை அரித்தெடுப்பதுபோல் சிறிது சிறிதாக நம் ஆன்மாவை அரித்தெடுக்கக்கூடிய விஷமது. நம்பிக்கை இருக்கும் இடத்தில் சந்தேகம் இருக்க வாய்ப்பேயில்லை. நம்பிக்கையில் குறைவு ஏற்படும் சமயத்தில் சந்தேகம் தன் தலையை நுழைக்கும். சந்தேகம் கூடவே depressionஐத் துணைக்கு அழைத்துக்கொள்ளும். அதன் பின்னால் எதையும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. பயம் வரும், தன்னம்பிக்கை போகும், தீய சக்திகள் தொடரும். மொத்தத்தில் சந்தேகத்தை, மணலைத் துளைத்துக்கொண்டு செல்லும் நண்டுக்கு ஒப்பிடலாம். நண்டு ஓரிடத்தில் நுழைந்துவிட்டால், அந்த இடம் முழுவதையுமே எதையும் உபயோகத்திற்கு உதவாமல் அழித்துவிடுமே.

அப்படிப் பார்த்தால், "சந்தேகம்' என்பது எந்தக் காலத்திலும், யாருக்கும் வரவே கூடாது என்றுதான் சொல்ல வேண்டும். ஆமாம் முல்லை, எதற்காக சந்தேகத்தைப்பற்றிக் கேள்வி கேட்டாய்? ஏதாவதொரு விஷயம் இருக்க வேண்டுமே''.

"இருக்கிறது முகுந்தன் மாமா. மல்லிகை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அவளிருக்கும் சமயம் பார்த்துக் கேட்டேன்''. 

"என்னக்கா, நீ சொல்வது முரண்பாடாக இருக்கிறதே. சிறிது நேரத்திற்கு முன், நீ பேசியதைக் கேட்டபொழுது காதில் தேன் வந்து பாய்கிறதென்று நினைத்தேன். இப்பொழுது ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுகிறாயே! என் காது தாங்குமா? நான் என்றைக்காவது உன் மீது சந்தேகப்பட்டு இருக்கிறேனா? அது கறுப்பா, சிவப்பா என்றுகூடத் தெரியாதே. நான் உன் தங்கையல்லவா! உனக்கே இல்லாதது என்னிடம் மட்டும் எப்படி இருக்கும்? நம் உறவில்/ குடும்பத்தில் அப்படி ஒன்று இருந்ததாக நான் கேள்விப்பட்டது இல்லையே''. 

"இதுவரையில் இல்லை. இனிமேலும் அப்படி வரக்கூடாது என்பதற்காகத்தான்...'' என்றிழுத்தாள் முல்லை.

"அக்கா, பூடகமாகப் பேசாதே! எனக்கு விஷயத்தை முழுவதுமாக, விவரமாகச் சொன்னாலே உடனடியாகப் புரியாது. மெதுவாக, பின்னால் யோசித்துப் பார்த்துப் புரிந்துகொள்வேன். அது என் குணம்''.

"அதனால்தான் மல்லிகை, சொல்கிறேன்'' என்று கூறிவிட்டு, முல்லை ரோஜாவிடம் நாளை வருவதாகக் கூறிவிட்டு கிளம்பினாள்.

அங்கேயே உட்கார்ந்திருந்த மல்லிகை யோசனையில் ஆழ்ந்தாள். அவளைத் தொந்தரவு செய்யாமல் முகுந்தனும், ரோஜாவும் தங்கள் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். ஒன்றுமே சொல்லாமல் மல்லிகை அன்னை அறைக்குச் சென்று நமஸ்காரம் செய்தாள்.

"அக்கா, தங்கைக்குள் ஏதோ ஒரு விஷயம். அன்னையிடம் சொல்லி, அது சுமுகமாக வேண்டுமென்று பிரார்த்தனை செய்'' என்றான் முகுந்தன் ரோஜாவிடம்.

"அவர்கள் சொன்னால், செய்யலாம்''. 

"அது சரி ரோஜா, அதற்கு மேல் ஒன்றிருக்கிறது. அவர்களுக்குத் தேவை என்று நமக்குத் தெரிகிறது. கொடுத்தால் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வார்கள்என்று நமக்குத் தெளிவாகத் தெரியும்பட்சத்தில், சுயநலமாக ஒதுங்கிக்கொள்ளாமல், பரநலமாக நல்லெண்ணத்துடன் அன்னையிடம் சொல்வதில் தவறேயில்லை. நமக்குத் தேவையானதை நாம் கேட்கும்வரையில் பொறுமையாகப் பார்த்துக்கொண்டிருக்காமல், சட்டென்று கொடுக்கின்ற அன்னையை ஏன் நாமும் பின்பற்றக் கூடாது? நல்லெண்ணம் கொண்டவர்கள் இந்த உலகத்தில் மிகமிகக் குறைவு. உனக்கு நல்லெண்ணம் உண்டு என்பது எனக்குத் தெரியும். அவர்களின் கர்மத்தில் தலையிட நமக்கு

உரிமையில்லை. ஆனால் விஷயம் சுமுகமாக வேண்டும்என்று ஒரு வார்த்தை அன்னையிடம் நீ கேட்டால், வந்த சுவடு தெரியாமல் பிரச்சினை வழி விட்டுவிடும். நம்முடைய தாய் நம்மைக் கேட்டா எதையும் செய்கிறார்கள், குறிப்பு அறிந்து செய்வதில்லையா? அவர்களின் பிரச்சினை என்னவென்றுகூட தெரியாமல் இருக்கட்டும். ஆனால் அவர்கள் இருவரும் அன்னையின் குழந்தைகள். உன்னையும் அவர்கள் அன்னையாகத்தான் பார்க்கிறார்கள். தெரிந்து செய்வதைவிடத் தெரியாமல் இருக்கும்பொழுது செய்வதில் அதிக ஆனந்தம் உண்டு. மறைந்திருப்பதைக் கண்டுபிடிப்பதில் ஆனந்தம் உள்ளது. தெரிந்ததை, கேட்டதைச் செய்வதில் சந்தோஷம் வேண்டுமானால் வரலாம். ஆனால் ஆனந்தம் வாராது. ஏனெனில் ஆனந்தம் அன்னையின் தெய்வீகப் பண்பு. உனக்கொரு சந்தர்ப்பத்தை அன்னை இன்றைக்குக் கொடுத்திருக்கிறார்கள். அந்த ஆனந்தத்தைத் தரவேண்டுமென்பதற்காகத்தான் முல்லையையும், மல்லிகையையும் பேச வைத்திருக்கிறார்கள். இதைப் புரிந்து அனுபவிக்கப் போகிறாயா? இல்லை என்னிடம் சொல்லவில்லைஎன்று ஒதுங்கி வாய்ப்பை இழக்கப் போகிறாயா?'' என்று முகுந்தன் பேசப் பேச ரோஜாவின் முன்அன்னையின் ஆனந்த நர்த்தனக் காட்சி தெரிய ஆரம்பித்தது. ஒரு கணம் அவள் இருக்கும் உலகம் மறைந்து அன்னை இருக்கும் சூட்சும லோகத்தில் நுழைந்தாள். நந்தவனத்தில் புகுந்த தேன் வண்டு ஒவ்வொரு பூவாக நுழைந்து நுழைந்து இருக்கின்ற தேனையெல்லாம் உறிஞ்சி உறிஞ்சி, உடலெல்லாம் தேனாக மாற ரீங்காரமிட்டுப் பறக்க இயலாமல், ஆடாமல், அசையாமல் தன்னிலையிருந்து ஓர் இழை பிரிந்தால்கூட வெடித்துச் சிதறிவிடுவோமோ, தேனேல்லாம் கொட்டி விடுமோஎன்றெண்ணி தவம் இருப்பதைபோல், உள்ளே சென்ற ரோஜா தன்னை மறந்தாள்; உட்சோதியிற் கலந்தாள்

நடப்பதற்கு மட்டுமே வெளிச்சம், இருளில்லாத, கண்ணைக் கூசவைக்கும் வெள்ளொளியின் வெளிச்சத்தில் எப்படி, எங்குச் செல்ல வேண்டும்என்று திக்குத் தெரியாத பாதையில், இப்படித்தான் நடந்து செல்ல வேண்டுமென்பதற்காக அவள் நடக்கும் பாதையில், மின்னலெனத் தெறிக்கும் ஒளிமயமான பாதையில் படியேறி எண்ணவே இயலாத, வரம்பில்லாத உயரத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தாள். "அவள்' நடக்கவும் இல்லை, ஓடவும் இல்லை. பாதையும் நகரவில்லை. ஆனாலும் முன்னேறிக்கொண்டிருந்தாள். அவளை யாரோ பிடித்து அழைத்துச் செல்வதுபோன்ற பிரமை. ஆனால் அவள் கையை யாரும் பிடித்துக்கொண்டிருக்கவில்லை. நூல் பிடித்துக் கையாட்டும் வித்தைக்காரனின் கை அசைவிற்கு ஏற்றால் போல் மேலேறும் வண்ண ஆட்டப் பொம்மையைப்போன்று தன்னை மீறி தன்னை ஆட்டுவிக்கும் மாயப் பாதையில் முன்னே சென்று கொண்டிருந்தாள். அளவிடயியலாத தூரம். ஆனால் பாதுகாப்புக் கவசம் தன்னைச் சுற்றி இருப்பதுபோன்ற தோற்றம். ஏதோ ஓரிடத்தில் பல வண்ணத்தைக் கடந்ததில் சிவப்பும், தங்கமும் சேர்ந்திணைந்த, கண்ணுக்கு மிக இதமான, உடலுக்கு ஆனந்தத்தை அளிக்கும் இடமென உள்மனது ரீங்காரமிட்டு சொல்ல, மனத்தை மயக்கும் ஆரஞ்சு வண்ண லோகத்தை வந்தடைந்தாள். ஒருவரையொருவர் நோக்காமல் எல்லோருக்கும் மிகமிக முக்கியமான வேலையிருப்பதைப் போன்று மிதந்து சென்றுகொண்டிருக்கிறார்கள். இவர்தானென கண்டுபிடிக்க இயலாத முகமற்ற உருவங்கள்; அரூபமான நிழல்கள். ஆனால் பார்க்கின்றவர்களை சந்தோஷப்படுத்தும், நிதானப்படுத்தும், ஒழுங்கான கட்டமைப்பில், நிசப்தத்தில், "என்னவர்கள் இவர்கள்' என்ற சொந்தத்தை உணரும், வார்த்தைகளால் சொல்ல இயலாத, உணர்வில் மட்டுமே அனுபவித்து மகிழும், மலர்ச்சியான, இயற்கையான தன்மையில் உலவிக்கொண்டிருப்பவர்களின் உலகத்தை அடைந்தாள். தன்னை மறந்த நிலையில், ஆனந்தம் மட்டுமே நிரந்தரம் என்ற இடத்தில் சந்தோஷமாக சஞ்சாரம் செய்தாள். உடல் ஆனந்தத்தில் பல சுற்றுகளைச் சுற்ற வைத்தது. இலக்கே தெரியாத உலகத்தில் இயங்கிக்கொண்டிருப்பவர்களுடன் தானும் ஒருத்தியானாள்.  

முல்லையின் மனது காரணமில்லாமல் இங்கும், அங்கும் தாவிக் கொண்டிருந்தது. என்னவென்று தெரிந்தாலும் உதறித் தள்ளவும் இயலாத அதைரியத்துடன், போராட முடியாத இடத்தில், போராட வக்கில்லாத, ஆனால் அவ்விடத்தைவிட்டு நகரவும் பிடிக்காமல் அங்கேயே சுற்றிக்கொண்டு, ஏதாவதொரு மாய சக்தியொன்று தன்னை இழுத்துச் செல்லாதா? என்ற நிஜமில்லாத, கற்பனையும் இல்லாத, கனவென்றும் சொல்ல இயலாத குழப்பத்தின் இடையில் மனம் தத்தளித்துக்கொண்டிருந்தாலும், உள்ளிருந்து ஏதோவொன்று சிறிய குரல் "அமைதியாக இரு' என்ற இரு வார்த்தைகளை ஒரு முறை சொல்யது. சொல்லியதைப் புறக்கணிப்பவர்கள் சிலர், கேட்க மறந்தவர் பலர், சொல்லியதைக் கேட்காதவர் பல்லாயிரம். ஆனால் முல்லையினுள் இருந்த "அன்னையின் சக்தி' கேட்டதை அவள் வெளி மனதின் எல்லையைத் தொடச் செய்தது. தன்னையும் மீறிய வேகத்தில் Peace Mother என்று சொல்லவும் ஆரம்பித்தது. ரோலர்கோஸ்டில் 360 டிகிரியில் சுழலுவதைப்போன்று டங்ஹஸ்ரீங் ஙர்ற்ட்ங்ழ் அவளின் மனம், உடல், உணர்வில், நாடி, நரம்புகளில் சட்டென்று கலந்திட நிதானம் அடைந்தது. வெளிமனது நினைவாக Peace Mother, Peace Mother என ஒன்றின் மீது ஒன்றாக இடைவெளியிட்டு, ஒவ்வொரு முறையும்

அழைக்கும்பொழுதும் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரையிலும் உணர்ந்து அனுபவித்தது. போராட்டத்தின் தொடக்கத்திலேயே அதை முன்னேறவிடாமல், அன்னையின் அமைதிக்கு வெற்றியைக் கொடுத்தாள்.

"மல்லிகை, இன்று இரவு டின்னருக்கு வெளியே போகலாம். நான் வருவதற்குத் தாமதம் ஆகும். நீ தயாராக இரு'' என்ற முல்லையின் தகவலைக் கேட்டவுடன் சிரிப்பு வந்தது. நிச்சயமாக எதைப்பற்றியோ பேசப்போகிறாள். வீட்டில் இருவர் மட்டுமே இருந்தாலும் மிக முக்கியமான விஷயமென்றால் வெளியில் பேசுவதைத்தான் முல்லை தன் வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தாள். நாகரீகமான முறையில் தன் கருத்தைச் சொல்ல இதுவொரு முறை. படிப்பு, பல நல்லவைகளைக் கற்றுத் தந்திருக்கின்றது. எங்கு, எப்படிப் பேசவேண்டும்என்ற முறையைக் கவனமாகக் கையாண்டால் வாழ்க்கையில் பல பிரச்சினைகளைச் சந்திக்கவேண்டிய தேவையேயிருக்காது. வீடு சௌகர்யமானது;

மனதைவிட்டுப் பேசலாம்; அதற்குரிய இடமும்கூட. ஆனால் அங்கு மனிதனின் சுயரூபத்தையும், சுபாவத்தையும் மிகச் சுலபமாக வெளிப்படுத்தலாம். வரைமுறையில்லாத சுதந்திரத்தை நல்ல முறையில் உபயோகப்படுத்திக்கொண்டால், அதன் பயன்கள் பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கும். அதற்கு மாறான விளைவுகள் ஏற்படுவதும் உண்டு. முகமூடியிட்ட வாழ்க்கையை வீட்டில் வாழ முடியாது; அல்லது இயலாதுஎன்றே சொல்லலாம். முல்லை பேசப் போகின்ற விஷயம் சற்றே சிக்கலானது. எதிர் முனையிலிருந்து எந்தப் பதில் வரும், எந்தெந்த எதிர்க் கேள்விகள் வரும்என்று தெரியாத நிலை. வீட்டில் பேசினால் உணர்ச்சி வேகம் தன்னைக் கடக்கும் நிலையை ஏற்படுத்துமென்பது தவிர்க்க முடியாது. பொதுவிடத்தில் பேசும்பொழுது சூடான வார்த்தைகளைப் பரிமாறிக்கொண்டாலும் மலர்ச்சியான முகத்தைக் காட்டவேண்டும். கண்ணின் தன்மை கண்ணீர் வெளிப்படுவதென்றாலும், வீட்டில் உள்ளவர் முன் அது சாதாரணம். ஆனால் வெளியிடத்தில் அழுவதற்கு அதிக தைரியம் வேண்டும். முல்லையின் எண்ணங்களின் போக்கை மல்லிகை புரிந்து வைத்திருப்பவள். அவளைப் பொருத்தவரையில் இயல்பான முறையில் வாழவேண்டும். எங்குப் பேசினாலும் பேச்சு பேச்சுதான். இடத்திற்காகப் பேச்சை மாற்ற இயலாது; அபிப்பிராயத்தை மாற்ற முடியாது. ஆனால் சுமுகமாக, அழகாகப் பேசவேண்டும். எதிராளியின் மனதின் போக்கைப் புரிந்து, தன்னை விட்டுக் கொடுக்காமல், அதே சமயத்தில் புண்படுத்தாமல் சிறந்த முறையில் பேசுவதுதான் பேச்சின் இலக்கணம் ஆகும். இதை நன்றாகச் செயல்படுத்தத் தெரிந்தவள் மல்லிகை. எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வுண்டு. தீர்வில்லாத பிரச்சினை என்பது இந்த உலகத்தில் எதுவுமில்லை. நம்மால் தீர்க்க முடியாததை, சுமக்க இயலாததை வாழ்வு நம் மீது நிச்சயமாகக் கொண்டு வந்து தாராது. பிரச்சினையுடன் தீர்வையும் சேர்த்தே கொடுக்கும். பூட்டு செய்யும்பொழுதே சாவியையும் சேர்த்தே செய்வார்கள். தனித் தனியாக இருக்கவியலாத பல இரட்டைகள் நம் வாழ்விலுண்டு. மல்லிகை யின் மனது முல்லை எதைப்பற்றிப் பேசப் போகிறாள் என்பதைப்பற்றி நினைக்காமல், கையில் இப்பொழுது செய்துகொண்டு இருக்கும் வேலையில் கவனத்தைச் செலுத்துவதன் மூலம் நிகழ் காலத்திலேயே வாழ்ந்தது.


 

தொடரும்...

ஸ்ரீ அரவிந்த சுடர்


 

ஆசையில்லாதவன் ஜீவனற்றவனில்லை;


 

உயர்ந்த நிலையில் உயிரோட்டமுள்ளவன்.


 


 



book | by Dr. Radut