Skip to Content

12. எட்டு மாற்றங்கள்

 எட்டு மாற்றங்கள்

(Eight Reversals)


 

கர்மயோகி


 

மேல்மனத்திலுள்ள மனிதன் உள்மனம் கடந்து அடிமனத்தை அடைந்து யோகம் சித்திக்கப்பெறுவான். இதையடைய மேல்மனம், உள்மனம், அடிமனம், சைத்தியப்புருஷன் என்ற 4 நிலைகளைக் கடக்க வேண்டும். ஒவ்வொரு நிலையையும் கடக்க மனம் ஒரு கட்டம் மாற வேண்டும். அதை இரண்டாகப் பிரித்து, 8 கட்டங்களாகக் கூறி சில கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளேன். Pride and Prejudice கதையில் டார்சி, எலிசபெத் வாழ்வில் ஏற்படும் மாறுதல்களை இவ்வெட்டு கட்டங்களுடன் ஒப்பிட்டுக் கூறினால் கதை நினைவு உள்ளவருக்குப் புரியும். அல்லது அக்கதையை மீண்டும் படித்துவிட்டு* இதைப் படித்தால் புரியும். இதைத் தத்துவார்த்தமாகவோ, யதார்த்தமாகவோ கூறலாம். இங்கு இரண்டாம் முறையைக் கையாள முனைகிறேன்.


 

உள்ளதை உள்ளபடி ஏற்றால் நாம் சாதாரண மனிதனாகிறோம். வரும் அருளையும், அதைத் தாங்கிவரும் வாய்ப்பையும் இழந்து விடுவோம். கண்ணுக்குத் தெரிவதை மறுத்து, அதன் பின்னுள்ள கருத்தை ஏற்க மனம் மாறவேண்டும். பார்த்தவுடன் எலிஸபெத் அழகியில்லை என்பதைக் கண்டு, அவன் மனம் அவளை ஏற்கவில்லை. அவன் தோற்றமான அழகை மட்டும் கண்டதால் மனம் அவளை விரும்பவில்லை. இது முதல் நிலை; சாதாரண மனித மனம். அழகில்லாவிட்டாலும் பரவாயில்லை, "வேறென்ன இருக்கிறது?' என ஆராயத் தோன்றும் நிலை அதுவன்று. அந்த வயதுமில்லை. அப்படி மனம் யோசிக்க அவளுடைய அந்தஸ்தோ, குடும்பமோ, குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர் நிலையோ இல்லை. எளிய மனம் முதல் நிலையில் யதார்த்தமாக வெறுக்கிறது. I.


 

இரண்டாம் நிலை II :


 

தற்செயலாய் அவளது கண்களில் உள்ள ஒளி அவனைக் கவர்கிறது. எதையும் பொருட்படுத்தாமல், எந்தச் சட்டத்திற்கும் கட்டுப்படாமல், தன் செல்வத்தையும் அலட்சியப்படுத்தி, அனைவர் போல உலகின் தோற்றத்தை ஏற்றுப் பணியாமல், சுதந்திரமாக, விளையாட்டாக, கலகலவென அவள் பழகுவது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. கண்ணுக்குத் தெரிவதை - அழகில்லை என்பதை - புறக்கணித்து, மனத்திற்குத் தோன்றும் உண்மையை - இவள் உயர்ந்த மனுஷி - ஏற்று அதை விழைவது இரண்டாம் நிலை.

எவருடனும் டான்ஸ் ஆடாத டார்சி எலிசபெத்துடன் டான்ஸ் ஆட விரும்புகிறான். இரண்டு முறை மறுத்துவிடுகிறாள். மூன்றாம் முறை அவனுடன் டான்ஸ் ஆடும்பொழுது அவன் ஆத்திரப்படும்படிப் பேசுகிறாள். அவள் வருமானம் £50. அவன் வருமானம் £10,000. அவள் தாயார் கட்டுப்பாடில்லாமல் அநாகரீகமாகப் பேசுகிறார். அவள் தங்கைகள் அளவில்லாமல் கும்மாளம் போடுகிறார்கள். அவ்வூரில் அப்பெண்களைப்போல் மட்டமான பெண்களில்லை. இக்காரணங்களால் பிங்லி ஜேனை மணப்பதைத் தடுத்த டார்சி, எலிசபெத் மீது எழும் காதல் வேகம் தணியாமல், மீண்டும் அவளை லேடி காதரீன் வீட்டில் ஆர்வமாக நாடுவது அடுத்த கட்ட மாற்றம். அது மூன்றாம் நிலை மாறுதல் III.


 

அவள் எதையும் கண்டுகொள்ளவில்லை. மாறாக, அவனுக்குப் பழகத் தெரியவில்லை; தன்னையே வெட்கமின்றி பார்க்கிறான். தன் தமக்கைக்குத் துரோகம் செய்தவன்என மனம் பதறுகிறாள். மேலும் அழகன் விக்காமிற்காகப் பரிந்து பேசும் மனநிலையிலிருக்கிறாள். தன் குடும்பத்தின் மட்டமான நிலை அவளுக்குத் தெரியவில்லை. அவள் மனநிலை அவனுக்குத் தெரியவில்லை. நடைமுறையில் அலட்சியப்படுத்துகிறாள். அதையும் புறக்கணித்து, "என்னை மணக்க வேண்டும்' என்பது நான்காம் நிலை மாறுதல் IV.


 

அவன் விருப்பத்தை மறுத்ததுடன், ஆவேசமாக, அதிக காரமாக அவனைச் சுயநலமி, கர்வி, அல்பம், திமிர் பிடித்தவன்என வாய் ஓயாமல் திட்டுகிறாள். எவராலும் அதைப் பொறுக்க முடியாது. விக்காம் தறுதலை, பொய்யன். தன்னிடம் £3000 அநியாயமாகப் பெற்றவன். தன் தங்கையைக் கடத்த முயன்றவன். அவனுக்கு ஆதரவாக அவள் பரிந்து பேசுகிறாள். அவற்றையெல்லாம் நேரடியாகக் காதால் கேட்ட பின் எவரும் அப்பெண்ணைக் கனவிலும் கருதமாட்டார்கள். அத்தனையையும் பொருட்படுத்தாத மனமாற்றம் மனிதனுக்குரியதன்று. இருப்பினும் உள்ளதை அவளிடம் எடுத்துக் கூறி, அவளைப் பெற நினைப்பது அடுத்த கட்ட மனமாற்றம். கடிதம் எழுதுகிறான். அது ஐந்தாம் நிலை  V.


 

அதன் பிறகு பெம்பர்லியில் தற்செயலாக சந்திக்கிறான். அவள் நடத்தை அத்தனையையும் மறந்து, எப்படியாவது அவளைத் திருப்திப்படுத்த நினைத்து, இதமாகப் பேசி, கார்டினருடன் மரியாதையாகப் பழகுகிறான். இது ஆறாம் நிலை மனமாற்றம் VI.

தன்னை மறுத்தவள், திட்டியவள், அவமானப்படுத்தியவள் என்பது எல்லாவற்றையும் புறக்கணிக்கும் மனமாற்றம் எளிதன்று. அவற்றைக் கடந்த உண்மையை அவளிடம் கண்டிருந்ததால்தான் அது முடியும். தங்கையை அறிமுகப்படுத்துகிறான். பிங்லியை அவளிடம் அழைத்து வருகிறான். வீட்டிற்கு விருந்திற்கு அழைக்கிறான். இவை னித மனத்திற்குரிய சுபாவமன்று. மறுநாள் மீண்டும் அவளை "என்னை மணக்க வேண்டும்' எனக் கேட்கப் போவது ஏழாம் நிலை மனமாற்றம் VII. 

எளிய காரியங்கள் நேரடியாக, சுலபமாக முடியும். பெரிய காரியங்களுக்குத் தடையெழும். பெரிய மனிதனுக்கு, பெரிய நேரத்தில், பெரிய காரியங்கள் எளிதில் பூர்த்தியாகும். பிங்லி செல்வம் படைத்தவன், இளைஞன், திருமண வயது; எந்தப் பெண்ணும் அவனை மணக்க விரும்புவாள். அது சிறப்பற்ற திருமணம். அத்திருமணம் நேரடியாக நடைபெறும். டார்சி குறுக்கிடாவிட்டால், பிங்லி அவ்வூருக்கு வந்த புதிதில் அவளை மணந்திருப்பான். திருமணத்திற்கு முன்னும், திருமணமான பின்னும் அங்கு எந்தச் சிறப்புமில்லை. சார்லட் காலின்ஸ் திருமணம் அது போன்றது. அதில் காதலுமில்லை, இலட்சியமுமில்லை. அவள் தேடியது பாதுகாப்பு. அவனுடைய உத்தியோகம், எதிர்கால வாரிசு (£2000) அதைத் தரும். அவன் தேடியது பணிவான, பிரியமான பெண். அன்றாடம் நடைபெறும் நிகழ்ச்சியது. டார்சி பெருஞ்செல்வன், இலட்சியவாதி. எலிசபெத் போன்ற அறிவாளியின் கண்களில் உள்ள ஒளியை அறியும் திறமை உள்ளவன். சுயநலமான கர்வியானாலும், எந்தக் குறையுமற்ற இளைஞன். அவனை மணக்க லேடி காதரீன் மகள் பெருஞ்செல்வத்துடன் காத்திருக்கிறாள். அதைத் தியாகம் செய்யும் இலட்சியம் உள்ளவன். அதையும் தியாகம் செய்தாலும், "இது பொறும்" என்ற தெளிவுடையவன். அவனை எளிதில் பெறமுடியாது. மெரிடன் கிராமத்தில் எந்தப் பெண்ணும் டார்சியை விரும்பி மணக்கக் காத்து இருக்கிறாள். பிங்லியின் சகோதரி £20,000 பவுனுடன் அவனை ஏற்கத் தயார். அதைவிட எலிசபெத் உயர்ந்தவள்என்ற அறிவு டார்சிக்குண்டு. அதனால் அவளை எளிதில் பெறமுடியாது. அவளைப் பெற அவன் மனம் மாறியது போதாது. தனக்குப் பாதகம் விளைவித்த பரம எதிரியை சகலராக ஏற்க டார்சி தயாராக வேண்டும். அவன் செய்த கேவலமான காரியத்தை மூடி மறைக்க, அவன் ஒளிந்துள்ள ஏழைகள் வாழும் இடத்திற்கு அவனைத் தேடிப் போக வேண்டும். அதற்குரிய செலவைச் செய்ய வேண்டும். அவனுக்கு வேலை வாங்கித் தர வேண்டும். இத்தனை அவலங்களையும் அவளுக்காகச் செய்ய வேண்டும். அதுவும் அவளறியாமல் செய்ய வேண்டும். அப்படித் திருமணமானால், அநாகரீகமான மிஸஸ் பென்னட்டுக்கு மருமகனாக வேண்டும். இது மனத்தால் கற்பனை செய்தாலும் வெறுப்புதரும். அவன் தேடும் அன்பு அமிர்தமான காதல். இத்தனைக் கட்டங்களைக் கடந்து பெற வேண்டியது என்பதால் இக்கடைசி கட்டமான VIII எட்டாம் கட்ட மன மாறுதல் அவனை எதிர்கொண்டது.

 

  • டார்சிக்குத்தான் எலிசபெத்   மீது தீராக் காதல்.

          அவள் மனம் அழகன் விக்காமை நாடியது.

         அவன் மோசக்காரன்எனத் தெரிந்த பின்னரும், தங்கை வாழ்வை       

         அழித்த பின்னும், அவள் மனம் அவனைக் கடிந்துகொள்ளவில்லை.

         கடைசிவரை அவனுக்குப் பண உதவி செய்கிறாள்.

         டார்சி மீது அவளுக்கு மரியாதை ஏற்படுகிறது.

        அவனையறிந்தபின் நன்றி எழுகிறது.

       அவன் செல்வம் பெரியது.

        பிரம்மாண்டமான பெம்பர்லி அவளைக் கவர்ந்தது.

        டார்சி மனத்தில் எழுந்தது அமரத்துவம் வாய்ந்த அமிர்தமான         

       உணர்வு.    காதலெனப்படும்.

      அவள் பெற்றது திருமணம்.

       பெரிய இடத்துச் சம்பந்தம்.

       கனவிலும் நினைக்க முடியாத சம்பந்தம்.
 

      நன்றியுடன் ஏற்று மகிழ்கிறாள்.

     அதைப்பெற அவளும் அவள் மனத்தை 8 கட்டங்களில் மாற்ற

      வேண்டியிருக்கிறது.

      அது அவளுக்கு எளிதாக இல்லை.


 

எலிசபெத்
 

முதல் நடனத்தில் டார்சி, அது நாகரீகம் குறைந்த ஊர்; எல்லாரும் வசதி குறைந்த மக்கள்; தன்னைப் போன்ற செல்வர்கள் அங்கில்லை; பிங்லியைப் போன்றவர்களுமில்லை; அதிகபட்ச செல்வம் அங்கு பென்னட்டுக்குத்தான் உண்டு; அவர் மனைவி வக்கீல் மகள்; (இங்கிலாந்தில் அன்று வக்கீல், டாக்டர் தொழில்கள் இன்று எலக்ட்ரீஷியன் போன்ற அந்தஸ்து உடையது. அக்குடும்பங்களில் அந்தஸ்து உள்ளவர் பெண் எடுக்கமாட்டார்கள். அந்த வக்கீல்கட்கு நம்மூர் வக்கீல் குமாஸ்தாவின் அந்தஸ்தேயுண்டு.) மிஸஸ் பென்னட்டின் தங்கை ஒரு வக்கீலை மணந்தவள்; மிலிட்டரி ஆபீஸர்கட்கு £300 சம்பளம், அது வருஷத்திற்கு; இப்பெண்கள் அந்த மாப்பிள்ளைகளைத் தேடுகிறார்கள். மிஸஸ் பென்னட் சிறு வயதில் அப்படிப்பட்ட Red coat சிவப்பு யூனிபார்மைப் பார்த்து நெகிழ்ந்தவர். இன்றும் அது தனக்கு ஆர்வம் தருகிறதுஎன்று வெட்கமின்றி பெண்களிடம் கூறுபவர். சார்லட், "அவனுக்குப் பணம் இருக்கிறது. அதனால் அவன் கர்வமாக நடக்கும் உரிமையுடையவன்'' என்று எலிசபெத்திடம் கூறுகிறாள். அதுவே அனைவருடைய அபிப்பிராயம். கிடைக்காதுஎன்பதால் டார்சிமீது வெறுப்பு. கிடைக்கும் எனில், பதறுவார்கள். பிங்லி வருவதைக் கண்ட பென்னட் குடும்பம் பதைத்து, துடிப்பதைப் படத்தில் கண்டோம். அந்த நிலையில் டார்சி, "பரவாயில்லை. அவள் அழகியில்லை'' என்று கூறியதைக் கேட்டவுடன், அவனை அவள் மனம் மறுக்கிறது. அவன் பெருஞ்செல்வத்தைப் புறக்கணிப்பது அவளுடைய முதல் மனமாற்றம். இது அந்த ஊரில் பிறந்த எந்தப் பெண்ணாலும் செய்ய முடியாத, நினைக்க முடியாத செயல். முதல் மாற்றம் (I).


 

II. பெரியது, கிடைக்காது என்றவுடன் அனைவரும் அவனைக் கவனிப்பதை நிறுத்திவிடுகிறார்கள். அவன் கவனம் எலிசபெத் மீது எழுவதை சார்லட் கவனிக்கிறாள். அவனை விரும்பும் காரலின், பிங்லியின் சகோதரி பார்க்கிறாள். அவளிடம் டார்சி, "நான் எலிசபெத் கண்ணழகில் திளைக்கிறேன்'' என்று கூறுகிறான். எவருடனும் தனக்கு டான்ஸ் ஆட விருப்பமில்லை என்றவன், எலிசபெத்தை நாடி ஆட வரவேண்டும்எனக் கேட்கிறான். இது பெரிய வாய்ப்புஎன சார்லட் எலிசபெத்திற்கு எடுத்துரைக்கிறாள். £300 பவுன் சம்பாதிக்கும் அழகனை நினைக்காதே, £10,000 பவுன் உள்ளவனை நாடுஎன புத்திமதி கூறுகிறாள். விக்காம், எலிசபெத்திற்குப் பணமில்லைஎனத் தெரிந்தவுடன், பணம் புதியதாய் பெற்ற மிஸ் கிங்என்ற பெண்ணை அதிகம் கவனிக்கிறான். அவன் மனம் எலிசபெத் மீதில்லை. அவனே வந்து இருமுறை டான்ஸ் ஆடக் கேட்டபின்னும், அவன் பணம் அவளுக்குப் பொருட்டாக இல்லை. தன்னை டார்சி விரும்புகிறான் என்ற நினைவும் அவள் மனதில் எழவில்லை. பெரும்பணத்தைப் பொருட்படுத்தாத மனமாற்றம் இரண்டாம் நிலை மாற்றம்.


 

III லேடி காதரீன் ஊரில் மீண்டும் டார்சியைச் சந்திக்கிறாள். அவன் தினமும் சார்லட் வீட்டிற்கு வந்து எலிசபெத்தைப் பார்த்துப் பேசுகிறான். அவனுக்குத் தன்மீது அபிப்பிராயம் உண்டுஎன அவளுக்குத் தோன்றவில்லை. "என்னைப் பார்க்க டார்சி இதுபோல் இதுவரை வந்தது இல்லை. உன்னைப் பார்க்கவே அவன் வருகிறான். அவனுக்கு உன்மீது ஆசை, காதல்'' என சார்லட் எடுத்துக் கூறியபின்னும், எலிசபெத் மனதில் அது படவில்லை. அதைத் தொந்தரவாகவே நினைக்கிறாள். அந்த அளவுக்கு அவள் மனம் அவனையும், அவன் பணத்தையும் விட்டு விலகி நிற்கிறது. இது மூன்றாம் கட்டம். அவன் கர்வமான நடத்தை முதல் அவளை விலக்கியது. அதை மாற்றி, அவளை நாடியபொழுதும், டான்ஸ்ஆட விரும்பியபொழுதும், மனம் மாறாத அளவு அவள் விலகியிருந்தது. மூன்றாவதாக அவளைச் சார்லட் வீட்டில் தேடி வந்து பார்த்துப் பேசியபொழுதும், அது மனதில் படாத அளவு விலகியது மூன்றாம் நிலை.


 

IV. அடுத்தது, "என்னை மணக்க வேண்டும்'' என நேரடியாகக் கேட்ட பொழுதும், அவன் மனக்குமுறலை அவள் நேரில் பார்க்கிறாள். அந்த நிலையிலும் அவனுடைய காதல், அந்தஸ்து, பணம், பெறற்கரிய பேறு அவளைத் தொடாத அளவு அவள் மனம் அவனைவிட்டு விலகி நின்றது நான்காம் கட்ட மாறுதல்.


 

V. டார்சி அவள் குடும்பம் மட்டமானதுஎன எடுத்துக் கூறும்வரை அவளுக்கு அது ஒரு பிரச்சினையாக இல்லை. அவன் சொன்ன பின்னும், அவன் மீது கோபம் வந்ததே தவிர, அவன் கூறிய உண்மையை அவள் கருதவில்லை. தன் குடும்பம் மட்டம்என எவருக்குமே தோன்றாது. தோன்றினால் ஏற்க மனம் வாராது. அவன் கடிதத்தைப் பல முறை படித்தாள். கடிதம் மனப்பாடமாயிற்று. அதன் பின் கொஞ்சமாகத் தன் குடும்ப நிலை அவல நிலையென உணர்ந்தாள். சிறிது வெட்கப்பட்டாள். "இவ்வளவும் தெரிந்து டார்சி தன்னை எப்படி விரும்புகிறான்? காதல் எழுந்த காரணம் என்ன?' என்று யோசனை செய்யும்பொழுது, மனதில் டார்சி மீது மரியாதை தோன்றியது. அவன் கர்வியல்ல, நடத்தை கர்வமானது; பழக்கம் போதாதுஎன அறிந்து ஆச்சரியப்பட்டாள். இது அவளைப் பொருத்தவரை முடியாத மனமாற்றம்.


 

VI. அதன் பின் அவன் மீது நன்றி எழுந்தது. நாளடைவில் தன் குடும்பத்தை நினைத்து வெட்கப்பட்டாள். எவரும் தன் குடும்பத்தைப் பற்றிப் பெருமைப்படுவார்கள். தன் கருத்தைத் தகப்பனாரிடமும், லிடியாவை பிரைட்டனுக்கு அனுப்பும்முன் கூறினாள். தம்மைப் பற்றிக் குறைவாக நினைப்பவரும், தம் குடும்பம் மட்டமானதுஎனக் கருதமாட்டார்கள். அதுவும் டார்சி மீது காதலை எழுப்பவில்லை. டார்சி தவறானவன் இல்லைஎன

முடிவு செய்தாள். அவனை மறுத்தபின் மீண்டும் அவனைத் திருமணம் செய்துகொள்ள முடியும்என அவளுக்குத் தோன்றவில்லை. இது ஆறாம் கட்ட மனமாறுதல்.


 

VII. பெம்பர்லியைப் பார்த்தபின் பெம்பர்லிமீது ஆசை வருகிறது. அதுவும் டார்சி மீது எழவில்லை. மீண்டும் டார்சி அவளைக் கேட்க முடியாது. ஒரு முறை மறுத்தபின் எவரால் அடுத்த முறையும் விருப்பம் தெரிவிக்க முடியும்?


 

VIII. இந்த நிலையில் திருமணம் முடியாது. திருமணம் முடியும் அளவு

அவள் மனம் மாறவில்லை. அதுவும் மாறினால்தான் திருமணம்

முடியும். லிடியா ஓடிவிட்டாள். அவளே டார்சியிடம் அதை பாவமன்னிப்பு போல் சொல்ல வேண்டியிருக்கிறது. அது பெரிய மனமாற்றம். எவராலும் எளிதில் முடியாத காரியம், அழ வேண்டிய நிலை, பகிரங்கமான அவமானம். எவனை இவள் காதலித்தாளே அவனே இந்த பாதகத்தைச் செய்தது வேறு மனத்தைப் புண்ணாக்குகிறது. தன் மனம் மாறி, எதிரியான டார்சியின்

முன் அவமானப்பட்டு, ஊரெல்லாம் கேலிசெய்த பின்னரே அவள் மனமாற்றம் ஊர்ஜிதமாகிறது. திருமணம் நடக்கிறது.

***

* மலர்ந்த ஜீவியம் - மார்ச் 2002 - இதழில் வெளிவந்துள்ளது. Pride and Prejudice,

பக்கம் 32-54 (for reference).

மலர்ந்த ஜீவியம் - ஏப்ரல் 2002 - Pride and Prejudiceல் Life Divineஇன்

தத்துவங்கள், பக்கம் 28-47 (for reference).


 


 



book | by Dr. Radut