Skip to Content

5. ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்

 

ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)


 N. அசோகன்

222. சிறு உடல் குறைபாடுகளை நாம் அதிகமாக கவனித்தால், அவையே பெரிய குறைபாடுகளாக மாறிவிடும். அதே சமயத்தில் ஆபத்தான அறிகுறிகளைக் கவனிக்காமல் போனால், உயிருக்கே ஆபத்து வரும். ஆகவே எதை கவனிப்பது, எதை உதாசீனம் செய்வதுஎன்பது பற்றி நமக்கு ஒரு நல்ல விவேகம் வேண்டும்.

223. ஆன்மீக ஒளி மற்றும் அமைதி நம் உடம்பில் இறங்கினால் உடல்நலக் குறைபாடுகள் நன்றாகக் குணமாகும். மருந்து வேலை செய்யாத மயத்தில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் பிரார்த்தனை மூலம் மேற்கண்ட அமைதி மற்றும் ஒளியை நாடுவார்கள்.

224. அக்குபஞ்சர் என்ற சிகிச்சை முறை பலனளிக்கிறது என்பதை வைத்துப் பார்க்கும்பொழுது நம் உடம்பிற்குள் சூட்சுமமாக எனர்ஜி ஓட்டங்கள் இருக்கின்றன என்பதும், அந்த ஓட்டங்கள் தடைப்படும்பொழுது உடல்நலக் குறைபாடுகள் வருகின்றன என்பதும் புலனாகிறது.

225. மந்திரங்கள் நோயைக் குணப்படுத்துகின்றன என்பதை வைத்துப் பார்க்கும் பொழுது, ஆன்மீகசக்தி உடம்பில் நல்ல மாற்றங்களை  ஏற்படுத்துகின்றது என்பது புலனாகிறது.

226. வலி என்ற உணர்விலிருந்து நாம் நிரந்தரமாக விடுதலைபெற விரும்புகிறோம். ஆனால் நம் உடம்பிற்குக் காயம் ஏற்படுவதை வலிதான் நமக்கு அறிவிக்கிறது. அதன்படி பார்க்கும்பொழுது வலி என்ற உணர்வு நமக்குத் தேவையாகிறது.

227. நம்முடைய உடம்பினுடைய இயற்கையான செயல்பாடுகளை நாம் மதித்து நடப்பது நம் ஆயுளை அதிகரிக்கும். இரவில் கண் விழித்து வேலை செய்வது, பல நாள்கள் பட்டினிகிடந்து விரதம் இருப்பது, அளவுக்கு மீறி சாப்பிடுவது போன்றவையெல்லாம் நம் ஆயுளைப் பாதிக்கும்.

228. விழிப்புணர்வு குறைவாக இருப்பவர்கள், கார உணவு அவர்களுக்கு ஒரு தீவிர சுவையைத் தருவதால் அதையே விரும்பிச் சாப்பிடுகிறார்கள். காரம் ஆயுளைக் குறைக்கும் என்றாலும், இந்தச் சுவையை அவர்கள் நாடுவதால் ஆயுள் குறைவதும் பெரிதாகத் தெரிவதில்லை.

229. சாப்பாடு நம்முடைய ஜீவிய நிலையை எந்தளவிற்குப் பாதிக்கிறதுஎன்பது இன்னமும் முடிவு செய்யப்படாத ஒரு விஷயமாகும். இருந்தாலும், ஆன்மீக நாட்டம் உள்ளவர்கள் சைவ உணவு சாத்வீகமான உணவு என்று முடிவு செய்து, அதையே விரும்பிச் சாப்பிடுகின்றனர்.

230. மதுபானங்கள் நம்முடைய மூளையை மந்தமாக்குகின்றன. மூளை மந்தம் ஆகும்பொழுது நம்முடைய கட்டுப்பாடுகள் தளர்ந்துபோகின்றன. அதன் விளைவாக வழக்கமாக அமைதியாக இருப்பவர்கள்கூட மது அருந்திய பின்னர் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

 

231. போதை மருந்துகள் சூட்சும உலகங்களில் உள்ள சக்திகளுடன் நமக்குத் தொடர்பு ஏற்படுத்துவதால் நம் உடம்பில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சூட்சுமஉலகத் தொடர்பு ஆரம்பத்தில் இன்பகரமான அனுபவமாக இருந்தாலும், அந்த உலகத்து சக்திகள் நம்முடைய எனர்ஜியை உறிஞ்சிவிடுவதால் நாளடைவில் அந்தத் தொடர்பு நம் உடம்பை பலகீனப்படுத்துகிறது.

 232. புகைப்பிடிப்பதும், மது அருந்துவதும் நம் உடல்நலத்திற்குக் கெடுதிஎன்று தெரிந்தும் பலர் இப்பழக்கங்களை மேற்கொண்டுள்ளார்கள்என்பது ஆயுள் மேல் உள்ள அக்கறையைவிட போதை மேல் உள்ள தீவிரம் அதிகம் என்று காட்டுகிறது.

233. ஹிப்னாடிசம்என்ற ஒரு நிகழ்ச்சி நமக்கு ஓர் ஆழ்நிலை பர்சனாலிட்டி இருக்கிறதுஎன்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

 

234. ஜீவராசிகள் எந்நேரமும் சுற்றுப்புறச் சூழலோடு உறவாடிக்கொண்டு இருக்கின்றன. இந்த உறவாடல் ஓர் எனர்ஜி பரிமாற்றம் நிகழ்கிறது. உயிரினம் ஆரோக்கியமாக இருக்கிறதென்றால், இந்த எனர்ஜி பரிமாற்றம் உயரினத்திற்குச் சாதகமாக இருக்கிறதுஎன்று அர்த்தம். உயிரினத்தின் ஆரோக்கியம் குறைகிறதென்றால், இந்தப் பரிமாற்றத்தில் உயிரினம் எனர்ஜியை இழக்கிறதுஎன்று அர்த்தம்.

235. சந்தோஷமாக இருப்பவர்களுக்கு எடை கூடுவதும், கவலையால் பீடிக்கப்பட்டவர்களுக்கு எடை குறைவதும் நம் உணர்வுகள் நம் உடல் நிலையை பாதிக்கின்றன  என்பதை தெளிவாகக் காட்டுகிறது.

236. உடம்பையும், அறிவையும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்பவர்கள் முதுமையின் விளைவுகள் அவர்கள் உடம்பில் தெரிவதைத் தடுத்து, தம்முடைய இளமையான தோற்றத்தைக் காப்பாற்றிக்கொள்ளலாம்.

237. மருத்துவர்கள் நம் உடம்பில் மாற்று உறுப்புகளைப் பொருத்தும்பொழுது நம்முடைய உடம்பு அதை நிராகரிப்பது நமக்கு வேதனை அளிக்கிறது. தன்னைப் பாதுகாத்துகொள்வதற்கு நம்முடைய உடம்பு பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் கற்றுக்கொண்டுள்ளதை இன்று நாம் இடையூறாக நினைப்பதும் சரியில்லை.

238. "பிறப்பா, வளர்ப்பா?' எது முக்கியம்என்ற சர்ச்சைக்கு விஞ்ஞானிகளே முடிவு வைத்துவிட்டார்கள். பிறப்பிலுள்ள குணவிசேஷங்களை வளர்ப்பின் மூலம் பரிமளிக்க வைக்கலாம்என்பதால் பிறப்பு, வளர்ப்புஎன்ற இரண்டுமே சரிசமமானவை என்று விஞ்ஞானிகள் இப்போது கருதுகிறார்கள்.

239. நோயாளிக்கும், மருத்துவருக்கும் இடையே ஒரு நல்ல உறவு இருக்கும் பொழுது நோய் விரைவில் குணமடைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அந்த நல்லுறவைக் கொண்டுவருவது அவ்வளவு சுலபமில்லை.

240. நம்முடைய சூழ்நிலைகள் மாறாமல் ஒன்றுபோல் இருக்கும்பொழுது நிலையான பழக்கவழக்கங்கள் நம் செயல்திறனை அதிகரிக்கும். ஆனால் சூழல் மாறிக்கொண்டே இருக்கும்பொழுது பழக்கவழக்கங்கள் மாற மறுத்தால் அவையே நமக்கு இடையூறாகிவிடும்.

 

தொடரும்.....

****

 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

அன்னை வாழ்வு சைத்தியமையத்தைக் கொண்டு

மனிதனின் சக்தியில் ஒரு துளியும் விடுவதில்லை.

ஏனெனில் சைத்தியம் எழ முழுசக்தியும் தேவை.

 

சைத்தியப் புருஷன் முழு மனிதன்.


 


 


 


 


 

 

 

 

 

 

 

 

 



book | by Dr. Radut