Skip to Content

01. அன்னைக்குச் செய்யும் காலைப் பிரார்த்தனை

அன்னைக்குச் செய்யும் காலைப் பிரார்த்தனை

N. அசோகன்

காலைப் பிரார்த்தனைக்கான முன்னுரை

நம்முடைய அன்றாட வாழ்க்கை தினந்தோறும் மகிழ்ச்சிகரமாகவும், உபயோககரமாகவும், பாதுகாப்பாகவும் அமைந்தது என்றால் நாம் எல்லோரும் மிகவும் சந்தோஷப்படுவோம். ஒவ்வொரு நாளும் நாம் அன்னைக்கு மகிழ்ச்சியும் பாதுகாப்பும் வேண்டி பிரார்த்தனை செய்துவிட்டு அன்றைய நாளை துவங்கினோம் என்றால் நாம் விரும்பியபடியே அன்றைய பொழுது அமையும் என்று ஸ்ரீ கர்மயோகி அவர்கள் சொல்கிறார்கள். அதன்படி பார்க்கும் பொழுது அன்னையிடம் நாம் விரும்புகின்ற மகிழ்ச்சியையும், பாதுகாப்பும் கேட்டு பிரார்த்தனை செய்துவிட்டு நாளைத் துவங்குவது மிகவும் நல்லது என்றாகிறது. இப்படி ஒரு பிரார்த்தனையை நாம் காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாகவும் செய்யலாம், அல்லது காலைக் கடன்களை முடித்துக்கொண்டு அன்றைய வேலைகளைத் துவங்குவதற்கு முன்னாலும் செய்யலாம்.

பிரார்த்தனை

அன்புள்ள அன்னையே! இன்றைய நாளை நான் இப்பொழுது துவங்குகிறேன். இன்றைய நாள் மகிழ்ச்சிகரமாகவும், பயன் உள்ளதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கட்டும். நல்ல செய்திகள் மட்டும் என் காதுக்கு வரட்டும். இன்று நான் என்ன செய்ய தீர்மானித்து இருக்கிறேனோ அவையெல்லாம் கூடி வரட்டும். என்னுடைய உடல் தெம்பு இன்று சிறப்பாக இருக்கட்டும். என்னுடைய நேரமும், என்னுடைய எனர்ஜியும் பயனுள்ள வகையில் செலவாகட்டும். இன்று நான் யார் யாருடன் எல்லாம் உறவாடுகின்றேனோ அந்தத் தொடர்பெல்லாம் சுமுகமாகவும், நட்புணர்வு மிகுந்ததாகவும் இருக்கட்டும். என்னுடைய பணம் பயனுள்ள வகையிலும், முறையான வழியிலும் செலவாகட்டும்.

இன்று நடக்கும் நிகழ்ச்சிகளெல்லாம் என்னுடைய சந்தோஷத்தை அதிகரிப்பதாக இருக்கட்டும். என்னுடைய உடல் நலத்திற்கும், என்னைச் சேர்ந்தவர்களுக்கும், என்னுடைய வேலைக்கும், என்னுடைய உடமைகளுக்கும் உங்கள் பாதுகாப்பு கிடைக்கட்டும். என்னுடைய எண்ணங்கள், உணர்ச்சிகள், செயல்பாடுகள் என்று எல்லாவற்றையும் தாங்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து நல்ல எண்ணங்கள், நல்ல உணர்ச்சிகள் மற்றும் நல்ல செயல்பாடுகள் மட்டும் இருக்குமாறு அமைத்துக் கொடுக்கவும்.

இந்த நிமிடத்திலிருந்து இரவு உறங்கப் போகும்வரை சூட்சுமமாக என்னுடனேயே இருக்கவும். இப்படி சூட்சுமச் சூழலில் என்னுடன் இருந்துகொண்டு என் வேலைகளை எல்லாம் நல்லபடியாக நடத்திக்கொண்டு போகவும், நான் தூங்கச் செல்லும் பொழுது உடல் களைப்பை அகற்றி புத்துணர்வும், புதுத் தெம்பும் கொடுக்கக்கூடிய நல்ல ஆழ்ந்த தூக்கத்தை வழங்கவும்.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
நம்மை மாற்றிக் குறைகளை நீக்கலாம். அருளால் வரும் குறைகளை அதுபோல் மாற்ற முடியாது. அடுத்த உயர்ந்த நிலையில் அவற்றைத் திருத்த வேண்டும்.
 
அருளால் குறை வரும்.
தரம் உயர்ந்தால் அது திருந்தும்.



book | by Dr. Radut