Skip to Content

03. அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

 

ஓம் மதர் ஸ்ரீ அன்னை!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய!

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்தியமயி பரமே!

அன்னையின் பொற்பாதங்களுக்குச் சமர்ப்பணம்.

தவத்திரு ஸ்ரீ ஸ்ரீ கர்மயோகி அவர்களுக்கு,

எனது பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 02.08.2008 அன்று தங்களுக்கு எழுதிய கடிதத்தில் ஒப்பந்த கணினி ஆசிரியராக 1999ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18ஆம் நாள் பணியில் சேர்ந்து, தொடர்ந்து 9 வருடங்களாகப் பணியாற்றி, சுமார் 1880 கணினி ஆசிரியர்களில் ஒருவனான நான் பட்ட துயரங்கள் பற்றியும், எங்களின் பணி நிரந்தரம் தொடர்பாக நாங்கள் செய்த போராட்டங்கள் பற்றியும், "அன்னை பக்தர் ஒருவருக்குக் கிடைக்கும் பலன், அனைவருக்கும் கிடைக்கும்'' என்ற வகையில், எங்களின் பணி நிரந்தரம் தொடர்பாக, தாங்கள் எங்களுக்காக பிரார்த்தனை செய்து, அன்னையின் அருளாசியையும், அனுப்பி வைக்குமாறு தங்களுக்கு விரிவான கடிதம் எழுதியிருந்தேன்.

இதற்கு 07.08.2008 அன்று தங்களால் அனுப்பப்பட்ட பதில் கடிதம் கிடைக்கப்பெற்றேன். தாங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தவாறு, எனது பிரச்சினைகளை வரிசைப்படுத்தி தினமும் காலை மற்றும் மாலையில் அன்னையிடம் நம்பிக்கையுடன் சொல்லி வந்தேன்.

எனது நம்பிக்கை வீண்போகவில்லை. பெஞ்ச்கோர்ட்டில் விசாரணை முடிந்து, 22.08.2008 அன்று வந்த தீர்ப்பில், புதியதாக உருவாக்கப்பட்ட 1880 கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் சிறப்புத் தேர்வுக்கு அனுமதி அளித்து உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. பணி நிரந்தரம் செய்ய நடத்தப்படும் சிறப்புத் தேர்வின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

இதற்கடுத்து அரசின் துரித நடவடிக்கையால், எங்களின் பணி நிரந்தரத்திற்கான சிறப்புத் தேர்வினை 12.10.2008 அன்று சென்னையில் நடத்துவதாக அரசு அறிவித்தது. இதனால் தேர்வுக்குத் தயாராகும் வகையில், தேர்விற்காக மிகுந்த சிரத்தையுடன் படித்துக் கொண்டிருந்தோம். இந்நிலையில், ஏற்கெனவே வழக்கு தொடர்ந்து, வழக்கினை 1½ வருடங்களாக இழுத்து, எங்களின் பணி நிரந்தரத்தினை விரும்பாத B.Ed. படித்த கணினி பட்டதாரிகள் தற்பொழுது எங்களுக்கு ஆதரவாக 22.08.2008 அன்று வந்த தீர்ப்பினால் கொதித்தெழுந்தனர். இத்தீர்ப்பினை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாகக் கலக்கத்தை ஏற்படுத்தினர்.

தேர்விற்காகப் படித்து வந்த நாங்கள், 05.10.08 அன்று B.Ed. படித்த பட்டதாரிகள் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளதாக அறிந்து வேதனையுற்றோம். "அன்னையின் மந்திரங்கள்'' (Mantras of the Mother) புத்தகத்தில், அக்டோபர் 5இல்,

"இறைவனே உண்மையான உள்ளார்ந்த
மகிழ்ச்சியை வழங்கும்போது, அதைப்
பறித்துச் செல்லும் சக்தி உலகில்
எதற்கும் கிடையாது''

- என் ஆசிகள்

என்று அன்னை அவர்கள் கூறியிருந்த மந்திர வார்த்தைகள் எங்களுக்கு மிகப்பெரிய ஆறுதலைத் தந்தன. இதன் பிறகு, அன்னையின் அருள் என் வாழ்வில் செயல்பட்டதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

12.10.2008 அன்று, அரசு அறிவித்திருந்த சிறப்புத் தேர்வில் கலந்துகொள்ளும்பொருட்டு, ஒரு நாள் முன்னதாகவே புறப்பட்டு சென்னை சென்றோம். 11.10.2008 அன்று, சென்னையில் ஒரு கெஸ்ட் ஹவுசில் தங்கித் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்தோம்.

12.10.2008 - ஞாயிற்றுக் கிழமை

அன்னையின் அருள் சென்னை முழுவதும் மழையாகப் பெய்தது. காலை முதல் மாலை வரை மழை கொட்டித் தீர்த்தது. எங்களின் தேர்வு மையங்களுக்கு வெளியே B.Ed. படித்த கணினி பட்டதாரிகள் தேர்வு நாள் அன்று போராட்டம் நடத்துவதாக இருந்தனர். ஆனால், அன்னையின் அருளால், சென்னையில் அன்று பெய்த புயல் மழையால், அப்போராட்டம் கைவிடப்பட்டது.

12.10.2008, மதியம் 1 மணி அளவில், தேர்வு முடிந்து வெளியே வந்தோம். அடுத்த நாள் எனக்கு B.Ed. – Counselling class. கோயம்புத்தூரில் இருந்ததால் அன்று இரவே நான் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு பஸ் ஏறிவிட்டேன். அடுத்த நாள் 13.10.08 அன்று B.Ed. classஇல் கலந்து கொள்ளும் பொருட்டு, கல்லூரிக்குப் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தேன்.

அப்பொழுது, 12.10.08 அன்று, தேர்வு முடிந்த 7 மணி நேரத்திற்குள் தேர்வு முடிவு, ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னையால் வெளியிடப்பட்டது என்றும், 13.10.08 அன்று காலை, எங்களின் தேர்வு முடிவுகள் ஒட்டப்பட்டிருப்பதாகவும் வந்த போன் மெசேஜில் இன்ப அதிர்ச்சியுற்றேன். அச்சமயம், வெளியே சொல்லுவதற்கு கௌரவமாக எனக்கு நல்ல மதிப்பெண்களைக் கொடுக்குமாறு அன்னையிடம் பிரார்த்தனை செய்துகொண்டேன். பிரார்த்தனை செய்துகொண்டே பேருந்தின் சன்னல் வழியாக வெளியே பார்க்கும்பொழுது, ஒரு கடையின் பெயர்ப் பலகையில் "ஸ்ரீ அன்னை'' என்று எழுதியிருப்பதை பார்த்து மிகவும் பரவசமானேன். கல்லூரி சென்று சேருவதற்கு முன்பாகவே என் மதிப்பெண்கள் 86 என்று என் நண்பரின் சகோதரர் மூலம் தெரிந்துகொண்டேன்.

என் நண்பர்களுக்கு மத்தியில் நான் தான் அதிக மதிப்பெண் பெற்றிருந்தேன். அன்னைக்கு எனது பரிபூரண நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன், கண்ணீர் மல்க.

பிறகு, 08.11.2008 மற்றும் 09.11.2008 ஆகிய இரு தினங்களில் எங்களின் பணி நியமனத்திற்கான கலந்தாய்வு சென்னையில் நடைபெற்றது. அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்ததால் என்னுடைய 310 தர வரிசை எண்படி, 08.11.2008 அன்றே எனது பணி நியமனத்திற்கான அரசு ஆணை வழங்கப்பட்டது.

10.11.2008 அன்று, முற்பகல் நான் விரும்பியவாறே எனது வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளியில் கணினி பயிற்றுநராக பணியில் சேர்ந்து கொண்டேன்.

இவ்வாறாக, எனது பணி நிரந்தரம் தொடர்பாக 02.08.08 அன்று நான் எழுதிய கடிதத்திற்குப் பிறகு, அன்னை என் வாழ்வில் நடத்திய அற்புதங்கள், வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. 1880 கணினி ஆசிரியர்களும் அன்னைக்கு கடமைப்பட்டுள்ளோம். அன்னை பக்தனாகிய எனக்குக் கிடைத்த பலன், அனைவருக்கும் கிடைத்தது. ஒரு சிலர் less qualification மற்றும் break of service. பிரச்சினையில் உள்ளனர். அவர்களுக்கும் ஒரு நல்ல தீர்வு வர வேண்டும். அன்னைக்கும், பகவான் ஸ்ரீ அரவிந்தருக்கும் கோடானு கோடி நன்றியை அவர்களின் பொற்பாதங்களில் உரிதாக்குகிறேன். எனது பணிவான நன்றியையும் வணக்கத்தையும் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

- B. பிரபாகர், தர்மபுரி

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அருளால் அணுவெல்லாம் நிறைந்த சூழலில் ஆசையை அழித்தவன் பிராணமயப் புருஷனைக் காண்பதற்குப் பதிலாக, அதைவிட உயர்ந்த புருஷர்களையும் காண முடியும். தங்கமயமான புருஷனையும் காணலாம்.
 
அருளால் அணுவெல்லாம் நிறைந்தால்
புருஷன் தங்கமயமாவான்.



book | by Dr. Radut