Skip to Content

07. அஜெண்டா

அஜெண்டா

பகவான் ஸ்ரீ அரவிந்தர் குழப்பத்தை அனுபவிக்கிறார்

(Volume IV, Page 45)

"குழலினிது யாழினிது என்ப தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்''என்பது குறள். குழலும் யாழும் இனிய இசை. மழலை குழந்தையின் மனம் சிருஷ்டிக்க முயல்வதைச் சொல்ல முடியாமல் தடுமாறும் நாக்கின் ஒலி. வேட்பாளர் 4 இலட்சம் ஓட்டு பெற்று ஜெயித்தாலும் ஒரு ஓட்டின் முக்கியத்தை அறிவார். எதிரி தன்னை விட ஒரு வோட்டு பெற்றால் பெற்ற அத்தனையும் போகும் என்ற தெளிவு ஒவ்வொரு ஓட்டையும் முக்கியமாகக் கருதுகிறது.

குழப்பம் என்றால் என்ன?

நாம் கோயிலுக்குப் போவது நல்லதுஎன அறிவோம். அது மனம் ஏற்கும் கருத்து. 10 அல்லது 20 தலைமுறையாகக் கோயிலுக்குப் போனதால் உணர்ச்சி கோயிலுக்குப் போவது நல்லது என ஏற்றுக் கொண்டது. மேலும் உடலும் அதை அனுபவிக்கிறது. கோவிலைக் கடந்து சென்றால் உடல் சுருங்கி வணங்குகிறது. அறிவு வளர்ந்து ஆத்மா தெளிவுபட்டபின் கோவிலுக்குப் போவது சடங்கு, அதில் சாரமில்லை, தெய்வம் உள்ளேயிருக்கிறது, கோயிலில் உள்ளது சிலையென அறிந்தபின் கோவிலுக்குப் போவதால் பக்தியின் தரம் குறைகிறது என உணர பல ஆண்டு தவமிருக்க வேண்டும். அதுவும் புரிந்தபின் மனம் பழைய எண்ணத்தைக் கைவிடாது. பழைய எண்ணம் உள்ளவரை புதுஎண்ணம் சிறப்படைய முடியாது. பழைய கட்டடத்தின் மீது புதுக் கட்டடம் கட்டுவது போலாகும். பழைய கட்டடத்தை அழித்த பின்னரே புதுக்கட்டடம் எழும்.

மனம் கற்றதை விடாமல் புதியதைக் கற்க முடியாது. கற்றது சிதைவது குழப்பம். குழப்பம் ஏற்பட்டால் தெளிவு வரப்போகிறது எனப் பொருள். புதிய கருத்து உருவாவது மனிதன் மனத்தில் புதியதாகப் பிறப்பது. அது சிருஷ்டி. அது நடக்க, உள்ளது அழியவேண்டும்.

அழிவு ஆக்கலின் மறுபுறம்

என்பது மனிதன் அறியக்கூடிய ஞானமில்லை. உடல் அழிவது மரணம். மரணம் தரும் அதிர்ச்சி பெரியது. மரணம் புனர்ஜென்மத்தின் ஆரம்பம்என மனிதன் அறிவான், உணரமாட்டான். மனிதனால் உணர முடியாததை ஆழ்ந்து, ஊன்றி அனுபவித்துத் திளைப்பது ஆண்டவன்.

வசதியுள்ளவர்க்கு அனைவரும் உதவ முன்வருவர். ஏழைக்கு எவரும் உதவ முன்வரமாட்டார்கள். பிறப்பைக் கொண்டாடும் மனிதன் இறப்பைக் கொண்டாடமாட்டான். அது இறைவனால் மட்டுமே முடியும். அதுபோல ஆக்கலை அனுபவிக்கும் இறைவன் அழிவை ஆக்கல் போல அனுபவிக்கிறான். அழிவு ஆக்கலாக மாறும் நிலை குழப்பம்.

  • நமக்குக் குழப்பமாகத் தெரிவது ஆண்டவனுக்குச் சிருஷ்டி.
  • குழந்தை உளறுவது பெற்றோருக்குப் பெருமகிழ்ச்சி தருகிறது. புதிய சொல்லை மனத்தில் உருவாக்கி வாயால் பேச குழந்தை முயல்வதைப் பெற்றோர் அதில் காண்கின்றனர்.
  • பயிற்சி தரும்பொழுது நமக்குப் பார்க்கப் பிடிக்காது. பாட்டானாலும், விளையாட்டானாலும், பாகவதரும், கோச்சும் பயிற்சியை சிருஷ்டியாக அனுபவிக்கிறார்கள்.
  • பெற்றோர் குழந்தையில் அனுபவிப்பதை, பாடகர் சிஷ்யனின் தடுமாற்றத்தை அனுபவிப்பதை, கோச் கற்பவன் சிரமப்படுவதை அனுபவிப்பதைப் போல,

    இறைவன் குழப்பத்தை அனுபவிக்கிறான்.
    பகவான் ஸ்ரீ அரவிந்தர் இறைவனாகும்.
    பகவான் குழப்பத்தை அனுபவிப்பதை,
    அன்னை புரிந்துகொள்ள நாளாயிற்று.
    அதை இப்பகுதியில் எழுதுகிறார்கள்.

  • குழப்பம்என்பது பழைய நிலை அழிந்து, புதிய நிலை உருவாகும் மாற்றம். இக்கண்ணோட்டத்தில் குழப்பம் சிருஷ்டியின் சிறப்பான நேரம்.
  • பந்தியில் பரிமாறும் உணவை சமைக்கும் கட்டம் அலங்கோலமாக இருக்கும். சமையலின் அருமையை அதிகமாக உணரும் சமையல்காரருக்கு அது அற்புதம்எனத் தெரியும்.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
கட்டுப்பாடாகச் சாதித்து, சோம்பலில் ஓய்வெடுத்துக் கொள்வது மனிதச் செயல். இல்லையேல் மன நிம்மதி பெற அழிச்சாட்டியத்தை நாடுவான்.
பூரணத்தில் சாதிப்பவர்
பூரணத்தில் நிம்மதியான ஓய்வுபெற முடியும்.
 
******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சிறப்பான திறன், பூரணச் சமர்ப்பணம், காலத்தைக் கணத்தில் காண்பது, ஆழத்தை நாடுதல்போன்ற யோக முறைகள் அனந்தனின் அளவு கடந்த சக்தியை, கண்டமான மனித வாழ்வில் கொணர்ந்து கண்டத்தை அகண்டமாக்க முயல்கிறது.
 
 
*****



book | by Dr. Radut