Skip to Content

11. யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. கட்டுப்பாடான முறைகள் உள்ளுறை அர்த்தமின்றி இருந்தால் கடுமை ஏற்படும்.

    உள்ளும் புறமும் முறையாக இருந்தால் கேள்வியில்லை. புறமிருந்து உள்ளே காலியானால் தோற்றத்தைக் காப்பாற்ற கடுமை வேண்டும்.

    • எடுத்த பெரிய பட்டத்தில் வெளியில் சொல்ல வெட்கப்படும் விவரங்களிருந்தால் எவரும் அந்த விஷயத்தைத் தொடாமல் பார்த்துக்கொள்வது கடுமை.
    • பிறப்பு, வளர்ப்பு சரியில்லாவிட்டாலும் அதே கடுமை எழும்.
    • மத ஸ்தாபனங்களில் நம்பிக்கை குறைவாக இருந்து, ஸ்தாபனம் பெரியதானால் கட்டுப்பாடின்றி ஸ்தாபனத்தைக் காப்பாற்ற முடியும்.

    சாந்தி நிகேதனில் ரவிந்திரநாத் தாகூர் விஸ்வ பாரதி நிறுவினார். இந்திரா காந்தி அங்கு படித்தவர். வகுப்புக்கு வர வேண்டும், குறித்த வகுப்பிலிருக்கவேண்டும்என்பது போன்ற கட்டுப்பாடுகள் அங்கு அதிகம் அமுலி-ருக்காது. பிள்ளைகள் மரத்தின் மீது உட்கார்ந்தும் படிப்பார்கள்.

    ஸ்தாபனம் பெரியது. ஜீவனுள்ளது. கட்டுப்பாட்டால் இயங்குவதில்லை. அதனால் கட்டுப்பாடு குறைகிறது.

    சம்மர்ஹில் என்ற ஆங்கிலப் பள்ளியும் அது போல் உலகப் பிரசித்தி பெற்றது. மாணவர்கள் என்ன செய்கிறார்கள்என எவருக்கும் தெரியாது. அங்கு பயின்ற மாணவர்கட்குப் பரிட்சையும் இல்லை. பெரும்பாலான மாணவர்கள் வாழ்க்கையில் பேர் அளவுக்கு உயர்ந்தனர்.

    எதேச்சாதிகார நாடுகளில் சர்க்காரைக் குறைசொன்னால் ஜெயிலுக்குப் போகவேண்டியிருக்கும். கட்டுப்பாடு மிக அதிகம். கேள்வியில்லாமல் சுடப்படுவார்கள். அந்த நாட்டில் வாழ்க்கைத் தரம் சுதந்திரமான நாடுகளில் உள்ளதுபோல உயராது.

    அன்புள்ள இடத்தில் அதிகாரத்திற்கு வேலையில்லை. அன்பில்லாத நேரம் அதிகாரம் தேவை.

    நிலம் எரு போட்டுப் பயிரானால், பூச்சி விழாது. உரம் போட்டு பயிரிட்டால் பூச்சி விழும். பூச்சி மருந்து அடிக்க வேண்டும். அது கடுமையான முறை.

    அன்பாக வளரும் குழந்தை செல்லமாக வளர்பவனில்லை. ஒழுங்காகப் படிப்பான். அன்பில்லாத இடத்துப் பையன் படிக்க- மாட்டான். கடுமைப்படுத்த வேண்டியிருக்கும்.

    சரக்கு உயர்வானதானால் விளம்பரம் தேவையில்லை. விளம்பரம் கடுமைக்குரியது. மலிவான சரக்குக்குத் தேவை.

    கடுமையான விரதங்கள் வளராதஆத்மாவுக்கு அவசியம். வளர்ந்த ஆத்மாவுக்கு ஆசனம், பிராணாயாமம், ஜபம் தேவையில்லை.

    தண்டனை சிறியவர்க்கு.
    பெரியவர்க்குத் தண்டனை தேவைப்படுவதில்லை.
    மூலம் இருந்தால் முறை தேவையில்லை.
    முறை கடுமைக்குரியது.

    ******

  2. போட்டிக்கு நிற்கும் எதிரிகள் உதாசீனம் செய்தால் அல்லது எதிர்த்தால் வெற்றி நிச்சயம்.
    • உலகில் எதிரியென்று எவருமில்லை. அனைவரும் ஆத்மாவில் துணைவரே. எவர் எதுசெய்தாலும் அது எவருக்கும் நல்லதாகவே அமையும்.
    • அகந்தையின் பார்வைக்கு எதிரி, ஆத்மதிருஷ்டிக்கு நண்பன்.
    • இங்கிலாந்து இந்தியாவை அடிமையாக்கியது, நாடு ஒன்றுபட உதவியது.
    • உலகப்போர், உலகத்தில் போரை அழிக்க அடிகோலியது.
    • ஹிட்லர் உலகை ஆள முனைந்ததால், உலகை ஒன்றுபடுத்த ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் ஏற்பட்டது.
    • பிரெஞ்சுப் புரட்சியில் ஜமீன்தார்கள் பெருவாரியாகக் கொல்லப்பட்டது உலகில் எதேச்சாதிகாரம் அழியவும் சமத்துவம் நிலவவும் உதவியது.
    • இந்தியாவில் உணவுப் பஞ்சத்தால் 10 கோடி மக்கள் உயிரிழக்கும் நெருக்கடி 1960இல் ஏற்பட்டதால் பசுமைப்புரட்சி வந்தது.
    • அக்பர் சிறுவயதில் படிக்க மறுத்து அடம்பிடித்துத் தற்குறியானதால் அரசியல் மேதையாகி, புதிய மதம் ஸ்தாபித்து, உலகிலேயே பெரிய சாம்ராஜ்யத்தை ஆண்டார்.
    • கிராமத்தில் பாங்குக் கடனை அறிமுகப்படுத்த 1969இல் எல்லா ஏற்பாடுகளும் செய்தபொழுது கோவாப்பரேட்டிவ் சொஸைட்டித் தலைவர் எதிர்த்தார்.

      இவற்றை ஏற்பாடு செய்த அன்பர் இதை எதிர்ப்பாகக் கொள்ளாமல், இது திட்டம் வெற்றி பெறுவதை உறுதிப்படுத்துகிறதுஎன்றார்.

      • திட்டம் ரூ.25,000இல் தீட்டியது 63,000 ரூபாயாக மாறியது.
      • அந்த ஆண்டு பெருமழை பெய்ததால் வானம் பார்த்த பயிர் அபரிமிதமாகப் பயன் பெற்றது.
        அத்துடன் பூச்சி விழுவதை மழை தடுத்தது.
      • அளவு கடந்து, அபரிமிதமான மணிலா மகசூல்.
        மகசூல் அதிகமானால் விலை குறையும்.
        அந்த ஆண்டு முதலாண்டு உச்சக்கட்ட விலையில் மார்க்கட் ஆரம்பித்து, விலை இரு மடங்காகியது.
      • கடன் பெற்றவர் அனைவரும் வசூல் செய்யாமல் கடனைத் திருப்பிக் கொடுத்தனர்.
      • அடுத்த ஆண்டு கடன் 63,000த்திலிருந்து 8 இலட்சம் ஆயிற்று.
      • இந்த உதாரணம் அகில இந்தியபாங்க் சேர்மன் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, விவசாயக்கடன் ரூ.150 கோடி 2000 கிராமங்கட்கு வழங்கப்பட்டது.
      • இன்று விவசாயக்கடன் 2½ இலட்சம் கோடி.
    • எதிரி உதவமாட்டான், அழிக்க நினைப்பான். அவன் சமூகத்தில் எதிரியாக இருந்தாலும் ஆத்மாவில் உறவினன். அந்தக் கட்டத்தில் எவரும் எவர்க்கும் உபத்திரவம் தரமுடியாது.

      அது உபத்திரவமில்லாத லோகம்.
      மனிதனை ஆத்மாவாகக் கருதுவது ஆன்மீக திருஷ்டி.
      அவர்கட்கு எதிரியின் எதிர்ப்பு, ஆண்டவனின் அருள்வெளிப்பாடாகத் தெரியும்.

    *******

  3. எதுவும் அருளின் செயலே. நாமுள்ள நிலை சில சமயங்களில் அருளை ஆபத்தாகப் பெறுகிறது.

    எதுவும் அருளின்செயலே.

    • ஹோட்டலில் உள்ள அத்தனைப் பொருள்களும் சாப்பிடக் கூடியவை.
      நீரிழிவு உள்ளவருக்கு இனிப்பு உதவாது.
      வயிற்றில் புண் உள்ளவருக்கு, காரம் வயிரெறியும்.
      உப்பில்லாத பத்தியம் உப்புப் போட்ட பண்டங்களால் பாதிக்கப்படும்.
      • கோளாறு சாப்பாட்டிலில்லை.
      • சாப்பிடும் மனிதனின் உடல்நலக் குறைவில் கோளாறு உள்ளது.
    • ஒரு நூலகத்திலுள்ள எந்த நூலும் அறிவுக் களஞ்சியம்.
      தமிழ் படிக்கத் தெரியாதவனுக்குத் தமிழ்ப்புத்தகங்கள் பயன்படா.
      இன்ஜீனியருக்கு சிலப்பதிகாரம் புரியாது.
      டாக்டருக்கு இன்ஜீனியர் புத்தகம் தேவைப்படாது.
      தமிழ்இலக்கியம் படித்த இன்ஜீனியருக்கு சிலப்பதிகாரம் பொக்கிஷம்.
    • ஊரிலும் உலகிலும் உள்ள வசதிகள் ஏராளம், அறிவு அளவு கடந்தது.
      நமக்கு அதெல்லாம் தேவையில்லை.
      நம்முடைய தேவையை நிர்ணயிப்பது நம்வாழ்வு.
      நமக்குத் தேவையில்லாத பொருள்கள் தவறானவைஎனக் கருத முடியாது.
      நம் வீட்டில் திருமணம் நடக்கும் நாளில் சுற்றுலாத் திட்டம் வந்தால் சுற்றுலாத் திட்டம் தவறாகாது. நமக்கு அந்தச் சமயம் பயன்படாது.
      பரிட்சைக்குப் படிக்கும் பையனுக்கு டெலிவிஷன் தொந்திரவானால் தொந்திரவு டெலிவிஷனிலும் இல்லை, பரிட்சையிலுமில்லை, பையனிடமுமில்லை. சந்தர்ப்பம் அப்படி.
      அதனால் டெலிவிஷன் தவறானது, பரிட்சை தவறானது, பையன் தவறானவன்என்று செய்யும் முடிவு பொருந்தாது.
      டெலிவிஷன் பார்த்து, படிக்காமல், பெயிலாவது நம் செயலில் உள்ள குறை.
      பொருள்களில், சந்தர்ப்பத்திலுள்ள குறையாகாது.
    • நம் வாழ்வு பெருகும்பொழுது நேற்று தேவைப்படாதது, இன்று தேவைப்படும்.
      சிறு குழந்தைக்கு விளையாட்டுச் சாமான் பயன்படும், புத்தகம் பயன்படாது.
      படிக்க ஆரம்பித்தபின் புத்தகம் பயன்படும்.
      தெய்வீகவாழ்வு உலகிலுள்ள அனைத்தையும் நேரம் வரும்பொழுது அனுபவிக்கக்கூடியது.
      வாழ்வு எளிமையானபொழுது எட்டாத வசதிகள் உலகுக்குத் தேவைப்படாதவை எனக் கூறமுடியாது.
      வாழ்க்கைத்தரம் உயரும்பொழுது நேற்று அறியாத பொருள்கள் இன்று அவசியமாகின்றன.
    • நிலத்திற்குப் போடும் உரம் விவசாயிக்குத் தேவை.
      அது நமக்கு நேரடியாகத் தேவையில்லாவிட்டாலும், நமக்கு உரம் உற்பத்தி செய்யும் சாப்பாடு தேவை.
    • அருள் நமக்கு ஆபத்தாக, தொந்தரவாகத்தெரியும் நேரம் உண்டு.
      வீடு எரியும்பொழுது நெருப்பு ஆபத்தாக இருக்கிறது.
      அதனால் நெருப்பு வேண்டாதது அன்று, ஆபத்தானது அன்று.
      அறியாமை வாழ்விற்கு அருள் ஆபத்து, வாழ்வுக்கன்று.
    • நாமறிந்து அத்தனைக் குறைகளும், கோளாறுகளும், ஒரு சிலருக்கு இன்றியமையாதவை.
      விஷம் உயிரை எடுக்கும்.
      சிலவியாதிகட்கு விஷம் வியாதியைப் போக்கி, உயிரைக் கொடுக்கும்.
    • வாழ்வில் அருள்தவிர வேறேதும் இல்லை. குப்புற விழுந்தாலும் அதுவும் அருளே. அருளைப் புரிந்துகொள்ளும் அறிவை நாம் பெறவேண்டும்.

******

தொடரும்....

ஜீவிய மணி
 
தன்னைமட்டும் விரும்புவது தாராள மனப்பான்மை.
பகுதி தன்னை மேன்மையாகக் காணும்.

******



book | by Dr. Radut