Skip to Content

13. அன்னை இலக்கியம் - திட்டு = தங்கச் சங்கிலி

அன்னை இலக்கியம்

திட்டு = தங்கச் சங்கிலி

இல. சுந்தரி

"தீபா வந்துவிட்டாளா?" என்று கேட்டவண்ணம் மாடியில் தம் அறையிலிருந்து வெளியே படியில் இறங்கியவண்ணம் வாயில் முன்னிடத்திலமர்ந்திருக்கும் கூர்க்காவைப் பார்த்தார் குருமூர்த்தி.

உடனே எழுந்திருந்து, "அம்மா இப்பத்தான் உள்ளே போனாங்க" என்றான் கூர்க்கா.

தம் கைக்கெடிகாரத்தில் சரியாக மணி 10 ஆவதைப் பார்த்து தீபாவின் காலந்தவறாமையை எண்ணிப் புன்னகைத்துக் கொண்டார்.

இந்தப் பங்களாவீட்டின் சொந்தக்காரர் மேற்படி குருமூர்த்தி சார். பெரிய பதவி வகித்து சமீபத்தில்தான் பணிவோய்வு பெற்றவர். பணியில் இருந்தபோதும் சரி, இப்போதும் சரி, "சார் இருக்காங்களா?" என்று கேட்டவண்ணம் பலரும் இவரை நாடி வருவது வழக்கம். நல்ல பண்பாளர், செல்வர். உலகியல் அறிவு, தாராள மனப்பான்மை, நாணயம் இவற்றால் சிறந்தவர் என்பதால் யாரேனும் இவரை நாடி வந்தவண்ணமிருப்பர். எல்லோரும் "சார், சார்" என்றழைத்து இவர் பெயரே "சார்" ஆயிற்று. வீட்டு மனிதர்களும் இவரைக் குறிப்பிட "சார்" என்ற சொல்லையே பயன்படுத்தினர்.

ஓய்வு பெற்றபின்னும் பலதுறை அறிவுகொண்ட இவர், பல நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு சேவையாகப் பணியாற்றி வந்தார். கூட்டங்களுக்குத் தலைமை தாங்கவும், சிறப்புரை ஆற்றவும் பலரும் அழைப்பர். இவரும் தட்டாமல் ஏற்றுக்கொள்வார். நாளடைவில் வெளியே செல்லும் வாய்ப்பு அதிகரித்தது. வீட்டில் இருந்தபடியே செய்யும் வேலையும் அதிகரித்தது. எனவே, திறமையான உதவியாளர் இருந்தால் வீட்டிலிருந்து செய்யும் வேலைகளை அவர் பொறுப்பில் விட்டுவிட்டு வெளி வேலைகளைத் தாம் செய்யலாம் என்று நினைத்தார்.

தம் நெருங்கிய நண்பர் ஒருவரிடம், ஓரளவு படித்து, கம்ப்யூட்டர் பயிற்சியுள்ள நம்பகமான யாரேனும் இருந்தால் தம்மிடம் அழைத்து வரச் சொன்னார்.

நண்பருக்கு, ரெங்காவின் மகள் தீபாவின் நினைவு வந்தது.

ரெங்கா ஒரு சமையற்காரர். 40 வயதைக் கடந்தவர். ஒரே மகள் தீபாவின் 2வது வயதில் மனைவியை இழந்தவர். மறுமணம் புரிந்து கொண்டால் மகளுக்குத் தன்னன்பை முழுமையாய்த் தர முடியாதுபோகும் என்றஞ்சி தாமே தாயாய் அவளைப் பாசத்துடன் வளர்த்தார்.

தீபா செல்லப் பெண்ணாய் வளர்ந்ததால் பிடிவாதம், மறுத்துப் பேசுவது, எதிர்த்துப் பேசுவது எல்லாம் உண்டு. அவள் அறிவையும் திறமையையும் கண்டு மகிழ்ந்த ரெங்கா அவள் குறைகளைப் பொருட்படுத்துவதில்லை. படிப்பிலும், பல கலைகளைக் கற்றுக் கொள்வதிலும் ஆர்வம் காட்டிய அவளுக்குச் சமையல் செய்வது மட்டும் பிடிக்காது. அப்பாவிற்குச் சிறுஉதவி செய்யக்கூட சமையலறைக்கு வரமாட்டாள். "நான் உன்னைப் போல் சமையல்காரி ஆகமாட்டேன். நன்றாகப் படித்துக் கலெக்டராவேன்" என்பாள். தன் மகள் கலெக்டராவது அவருக்குச் சந்தோஷம்தான். ஆனால் அதற்காகச் சமையல் தெரியாதிருப்பது சரியன்று. சமையற்காரனை வேலை வாங்கவும் சமையல் தெரிந்திருக்க வேண்டும். தன் குடும்பத்திற்கு, குழந்தைக்குத் தன்னன்பைக் கொடுக்க சமையல் தேவைப்படும் ஒரு நேரம் வரும். அப்போது சகல கலையும் கற்று, சமையல் தெரியாதது பெரிய குறையாய்த் தோன்றும். அவர் நயமாக எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவள் கேட்கவில்லை. அவள் உயர்ந்த ஆர்வங்கள் அவருக்குப் புரிந்தது. என்றாலும் சமையல் செய்வது பற்றிய அவள் தாழ்ந்த அபிப்பிராயம் தவறுஎன்று எடுத்துக் கூற முடியாமல் தவித்தார். அவர் ஓர் அன்னையன்பர் என்பதால் தியான மையச் சொற்பொழிவுகளில் மௌனத்தின் சக்தி (silent will power) என்பதுபற்றிக் கேட்டதை இதற்குப் பயன்படுத்துவது என்ற முடிவுக்கு வந்து, அது பற்றிப் பேசுவதில்லை என உறுதி கொண்டார்.

(நாம் எண்ணிய கருத்தை வெளியிட வேண்டிய காலத்தில் மனத்தைக் கட்டுப்படுத்தி, அதை வெளியிடாமலிருந்தால் அந்தக் கருத்திற்கு ஒரு சக்தி வந்து நாம் வெளியிட்டுப் பெறும் பலனைவிட வெளியிடாமலிருக்கும் போது கிடைக்கும் பலன் அதிகம். அந்த சக்தி மனத்தின் சக்தி.

ஒரு மனிதன் உணர்வுபூர்வமாகத் தன் மனத்தில் தோன்றிய கருத்தை வெளியிட மறுத்தால் அந்த எண்ணம் வேறொருவர் மூலம் அவருடைய நலனுக்காக அவருக்குச் சந்தோஷம் தரும்வகையில் வெளிப்படுகிறது.

ஸ்ரீ கர்மயோகி.)

தீபா செல்லப் பெண்ணானதால் தன் விருப்பம்போல் நடந்து கொள்வாள். அறிவு, திறமை, சுறுசுறுப்பு ஏராளம் என்றாலும் தானோர் அதிகாரியாய் வரவேண்டுமேதவிர, அடுப்பங்கரை பெண்ணாகக் கூடாதுஎன்ற பிடிவாதமிருந்தது. தந்தைக்கு வசதி இல்லாததால் +2 முடித்து, அஞ்சல் வழிக் கல்வியாக பி.காம். கடைசி செமஸ்டர் முடித்துவிட்டாள். ரிசல்ட் வந்து மேலும் படிக்க வேண்டும் என்று ஆவல். கணிணியின் அருமை தெரியுமாதலால் அதன் பயிற்சி வகுப்புகளுக்குப் போய்க் கொண்டிருந்தாள்.

இந்த நிலையில்தான் சார் வீட்டில் அவருக்கு உதவியாளராக வரும்படி அழைப்பு வந்தது. வந்து அழைத்தவர் சாரைப் பற்றிக் கூறியவை தீபாவுக்குப் பிடித்தது.

"தீபா, சார் ரொம்ப நல்லவர். உன்னைப் போல் திறமைசாலிகளை அவர் மதித்து நடத்துவார். மேலும், அவருக்கு 3 ஆண்மக்களைத்தவிர பெண் குழந்தை இல்லாததால் உன்னைத் தம் மகள்போல் நடத்துவார். பெரிய இடம். உனக்குத் தனி ஆபீஸ் ரூம். கம்ப்யூட்டர் நெட் கனக்ஷன் உண்டு. உனக்கே தனியாய் லாப்டாப் வாங்கித் தருவார். மேலே படிக்க ஆசைப்பட்டால் அவரே உன்னைப் படிக்க வைப்பார்" என்றெல்லாம் கூறி அழைத்துப் போனார். அவர் கூறியது யாவுமே உண்மைதான்.

முதல் பார்வையிலேயே சாருக்குத் தீபாவைப் பிடித்துவிட்டது. எந்தத் தேர்வுமில்லாமல் எடுத்த எடுப்பிலேயே ஒரு குறிப்புக் கொடுத்துக் கடிதம் தயாரிக்கச் சொல்லிவிட்டார். அவளும் அவர் கொடுத்த குறிப்புகளைக் கொண்டு அழகான முறையில் கடிதம் தயாரித்துக் கொடுத்தாள். அவள் திறமை, சுறுசுறுப்பு, உற்சாகம் அவரை வெகுவாகக் கவர்ந்தது. "வெரிகுட் தீபா. இன்றுமுதல் நீதான் என் பி.ஏ., என் மகள் எல்லாம்" என்றதுடன், தம் தாயாரிடம் அவளை அழைத்துப் போய், "அம்மா! உனக்கொரு பெயர்த்தி வந்திருக்கிறாள், பார்" என்றார். "இவள் பெயர் தீபா. என் அலுவலக வேலைக்கு உதவியாய் வந்திருக்கிறாள். நீ அவளை அடுப்பங்கரைக்குக் கூப்பிடக் கூடாது. நான் அவளைப் படிக்க வைத்துக் கலெக்டராக்கப் போகிறேன்" என்றார். தம் பிள்ளைகளையும் அழைத்து, "இன்று முதல் இவள்தான் என் பி.ஏ. உங்களுக்குத் தங்கை" என்றார். எல்லோரும் அவளை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டனர்.

சமையற்காரர், வேலைக்காரர் யாவரையும் அழைத்து, "சின்னம்மா" என்று அறிமுகப்படுத்தினார்.

காலை 10 மணிக்கு வர வேண்டும். மாலை 4 மணிக்கு வீட்டிற்குப் போகலாம். சாருக்கும் அவர் பிள்ளைகளுக்கும் மாடியில் அறைகள் இருந்தன. கீழே சமையலறை, சாப்பாட்டுக் கூடம், பூஜையறை, தீபாவிற்கு ஆபீஸ்ரூம். காலையில் இவள் வருமுன் பிள்ளைகள் வேலைக்குப் போய்விடுவார்கள். மதிய உணவிற்கு எல்லோரும் ஒன்று கூடுவார்கள். அவள் தன் அப்பா அன்புடன் தரும் சாப்பாட்டை எடுத்து வருவாள். சார், "இங்கேயே சாப்பிடு" என்று கூறியதை நயமாக மறுத்துவிட்டாள்.

சார் வெளியே கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு, பேச்சும் அவளே தயாரித்துக் கொடுப்பாள். தவறாது கடிதங்களுக்குப் பதில்களை ஈமெயில், மற்றும் கடிதம் மூலம் உடனுக்குடன் அனுப்புவாள். சார், வேலை குறைவாகக் கொடுக்கும் நாட்களில் நிறைய புத்தகம் படிப்பாள். சார் வீட்டில் பெரிய நூல்நிலையமே இருந்தது. அதை அவள் நன்கு பயன்படுத்துவது சாருக்கு சந்தோஷம். சில நாட்கள் தம்முடன் கூட்டங்களுக்கும் அழைத்துச் செல்வார். ஒரு முறை தமக்குப் பதில் அவளையே பேசவைத்தார். குறுகிய காலத்தில் அவளை பிரபலப்படுத்திவிட்டார்.

வீட்டிலும் எல்லோர் மனதையும் கவர்ந்துவிட்டாள். சார் அவளிடம் காட்டும் அன்பைப் பார்த்து வேலைக்காரர்களும் மிகுந்த மரியாதையுடன் நடத்தினர். சாரின் மனைவி இறந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. பாட்டிதான் அந்த வீட்டின் ஒரே பெண்மணி.

திடீரென்று ஒரு நாள் சமையற்காரரின் தாய் இறந்துவிட்டதால் தான் வேலைக்கு வர பதினாறு நாட்களாகும்என்று பணிவுடன் கடிதம் அனுப்பியிருந்தார். மாற்று ஏற்பாடு எதுவும் இல்லை.

பாட்டியைத்தவிர மற்றவர்கள் ஆண்கள்என்பதால் காலைச் சிற்றுண்டிக்கு வெளியே சென்றுவிடுவார்கள். பாட்டி காலையில் கேழ்வரகு கஞ்சி குடிப்பதால் பிரச்சனையில்லை. மதிய உணவை கேரியரில் எடுத்து வந்து எல்லோரும் உண்ண ஏற்பாடு. பாட்டிக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதனால் வீட்டில் தானே சமைப்பது என்று முடிவு செய்தாள். ஆனால் தள்ளாமை காரணமாய் முடியவில்லை. 11 மணிக்கு "டீ' டைம் தீபாவுக்கு இடைவேளை. தோட்டத்தைச் சுற்றிக் கொண்டிருப்பாள். சார் பெரும்பாலும் வெளியே போய்விடுவார். பிள்ளைகளும் அலுவலகம் சென்றுவிடுவார்கள். பாட்டியைத்தவிர கீழ்வீட்டில் யாரும் இருக்கமாட்டார்கள்.

அந்தநேரம் பார்த்து பாட்டி தீபாவை அழைத்தார். தீபாவும் வந்தாள்.

"தீபா, பாட்டி உன்னிடம் ஒன்று கேட்கப்போகிறேன்" என்றாள் பாட்டி.

"கேளுங்கள் பாட்டி, சொல்கிறேன். கடிதம் ஏதாவது எழுத வேண்டுமா? கதை படித்துச் சொல்ல வேண்டுமா?" என்று உற்சாகமாய்க் கேட்டாள்.

பாட்டிக்கு மிகவும் தயக்கமாயிருந்தது. "அதெல்லாமில்லை தீபா. சமையற்காரனில்லாமல் பேரன்கள் கடை சாப்பாடு தருவிக்கிறார்கள். எனக்குப் பிடிக்கவில்லை. நானே சமைக்கலாம் என்றால் தள்ளாமையாய் இருக்கிறது. எனக்குமட்டும் ஓசைப்படாமல் ஒரு வாய் சமைத்துத் தருகிறாயா?" என்றாள் பாட்டி.

தீபாவின் உற்சாகம் வடிந்துவிட்டது. பதிலேதும் கூறவில்லை. மௌனமாய் நின்றாள்.

"வேலைக்கு வந்த உன்னை சமைக்கச் சொல்கிறேனே என்று நினைக்கிறாயா? உன்னை என் பேத்தியாய் நினைத்துதான் கேட்கிறேன்'' என்று தணிவாகப் பேசினாள் பாட்டி.

ஒன்றும் பேசாது தலைகுனிந்து நின்றாள் தீபா. அவள் கண்கள் கலங்கிவிட்டிருந்தன.

"பரவாயில்லை தீபா. நானே பார்த்துக் கொள்கிறேன்'' என்றாள் பாட்டி.

இந்த வீட்டிற்கு வந்த நாளாய், வந்ததும், "சாப்பிட்டாயா தீபா? இல்லையென்றால் என்னுடன் சாப்பிடலாம் வா" என்பார் அன்பாக. 4 மணிக்கு வீட்டிற்குப் புறப்படும்போது அன்று ஏதேனும் இனிப்பு செய்திருந்தால் கையில் கொடுத்தனுப்புவாள். தோட்டத்து மல்லிகைப் பூவைத் தொடுத்து வைத்து, தலையில் சூட்டிவிடுவாள். அந்த அன்பான பாட்டிக்கு உதவி செய்ய முடியாத நிலை தீபாவிற்குச் சங்கடமாயிருந்தது.

"அதில்லை பாட்டி. எனக்குச் சமைக்கத் தெரியாது" என்று மிகுந்த அவமான உணர்வுடன் கூறினாள்.

இத்தனைநேரம் தணிவாய்ப் பேசிய பாட்டி திடீரென்று காரமானாள்.

"என்ன சொல்கிறாய் நீ? ஒரு வயதுப் பெண்ணிற்கு சமைக்கத் தெரியாதா? எவ்வளவுதான் செல்லம் கொடுத்தாலும் பெண் குழந்தைக்குச் சமையல் பயிற்ற வேண்டாமா? உன் அப்பா சிறந்த சமையற் கலைஞர் என்று சார் சொன்னாரே?" என்றாள்.

"அப்பாதான் வீட்டில் எல்லாம் செய்வார். இதுவரை நான் எதுவும் செய்ததில்லை" என்று குற்றவுணர்வுடன் கூறினாள்.

"அப்பா செல்லம் கொடுத்திருக்கிறார். இதே அவரிடத்தில் உன் அம்மா இருந்திருந்தால் கண்டித்து சமையல் சொல்லிக் கொடுத்திருப்பாள். பிறந்த வீட்டில் எப்படியும் இருக்கலாம். போகும் வீட்டில் என்னைப் போல ஒரு பாட்டியிருந்து சமைக்கச் சொன்னால் என்ன செய்வாய்? தீபா எனக்காகச் சொல்லவில்லை, உன் நன்மைக்குத்தான் சொல்கிறேன். எந்த ஒன்று நமக்குத் தெரியவில்லை என்றாலும் அந்தவொன்றிற்கு நாம் பிறர்க்கு அடிமையாய்த்தானிருக்க வேண்டி வரும்" என்று சொல்லிக் கொண்டேயிருக்கும்போது, விடுவிடென்று தன் அறைக்குச் சென்று கைப்பையை எடுத்துக்கொண்டு, அறையைப் பூட்டி, சாவியை அதனிடத்தில் பொருத்திவிட்டு, சொல்லாமலேயே போய்விட்டாள்.

தொடரும்.....

******



book | by Dr. Radut